- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
ஓம் சரவண பவ
சொர்ணா சந்தனகுமார்
மொழியெல்லாம் ஊமையானால்
1
சொர்ணா சந்தனகுமார்
மொழியெல்லாம் ஊமையானால்
1
பத்து வருடங்களுக்கு முன்:
“மாமா ப்ளீஸ் எனக்காக! உங்க அக்கா பொண்ணுக்காக! மாட்டேன்னு மட்டும் சொல்லிராதீங்க மாமா. நீங்க மறுக்கிறதை என்னால தாங்கிக்க முடியாது. ஒரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்தை, உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுங்க மாமா ப்ளீஸ்” என்று கண்ணீர் வழிய தன்னிடம் கையேந்தி நிற்கும், பதினேழே வயதான தன் அக்கா மகளை பரிதாபமாகப் பார்த்தான் இருபத்தியொரு வயதான ‘ஹரி.’
“பாப்பா ஏன் இப்படியெல்லாம் பேசுற? நீ இப்படி பேசுறது எனக்கு சங்கடமாயிருக்கு. சொன்னா புரிஞ்சிக்கோ. கண்ட கண்ட சினிமா பார்த்து, ஃப்ரண்ட்ஸ் தூண்டுதல்ல இப்படில்லாம் பேசிட்டிருக்க. இந்த மாதிரி யோசிக்கிறது கூட தப்புமா. வயசு கம்மினாலும் நான் உனக்கு ‘தாய்மாமா.’ பாரு அதுலயே ‘தாய்’ இருக்கு. தாய்க்கு சமமா இருக்கிறவன்கிட்ட எப்படிமா? எப்படி என்கிட்ட இப்படி கேட்க மனசு வந்தது? என்னால உன்னோட ஆசையை என்னைக்கும் நிறைவேற்ற முடியாது. மனசைப் போட்டு குழப்பிக்காம மேல என்ன படிக்கலாம்னு டிசைட் பண்ணு போ” என விறுவிறுவென்று வெளியே சென்றான்.
ஹரியால் பாப்பா என்றழைக்கப்பட்ட ‘ஹரிப்ரியா,’ மாமனின் மறுக்கப்பட்ட வலி மனதைப் பிழிய கண்ணீரோ அதற்கு ஆதரவளித்தது. தங்களின் பழைய காலத்து வீட்டிற்குப் பின்னுள்ள துணி துவைக்கும் கல்லில் அமர்ந்தவள், “எப்படி மாமா நான் உங்களை மறக்கிறது? என்னால முடியாது மாமா.”
யாரோ ஒருவர்... “உன் மாமனுக்கேத்த மகராசிதான் நீ!”
“ஹேய், உன்னோட மாமா சூப்பராயிருக்காங்க. பேசாம நீயே கல்யாணம் பண்ணிக்க.” தோழிகளின் கேலி!
“ஏன்மா சாந்தி உன் தம்பிக்கே உன் பொண்ணைக் குடுத்தா என்ன? கண்ணுக்கு லட்சணமான ஜோடியா இருக்காங்க.”
“டேய் பாஸ்கர்! உனக்கென்னடா உன் மச்சினனே மருமகனா வந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல.”
இப்படி யாரோ ஒருவர், அவள் விவரம் தெரிந்த நாள் தொட்டு தங்கள் இருவரையும் சேர்த்து வைத்து பேசுவது காதில் விழுந்து கொண்டேயிருந்தது அந்த பதின்வயது பெண்ணிற்கு.
வருடங்கள் ஆக ஆக, ‘தன் மாமனுக்காகவே பிறந்தவள் தான்’ என்ற எண்ணம் வலுப்பெற, அதற்கு நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஒரு காரணமாக இருந்தான் அவளின் மாமன்.
ஆண்களுக்கான மேல்நிலைப்பள்ளி மேலூர் தாண்டி ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சந்தபேட்டையில் இருக்க, பெண்களுக்கான பள்ளி மேலூர் பேருந்து நிலையம் அருகிலேயே இருக்கிறது. ஹரிப்ரியா ஏழு படிக்கும் பொழுது, ஹரி பனிரெண்டாவது படிக்க, ஹரிப்ரியாவின் தங்கை லட்சுமி அதே பள்ளியில் ஆறாவது படித்துக் கொண்டிருந்தாள்.
ஹரி அங்கு படிக்கும் வரை அக்கா பெண்கள் இருவரையும் பாதுகாப்பாகக் கூட்டிச்சென்று பள்ளியில் விட்டு, வரும் பொழுது அழைத்து வருவது அவனது கடமைகளுள் ஒன்றாக இருந்தது.
பள்ளிபடிப்பை முடித்து, திருச்சியில் பி.காம் உடன் சேர்த்து சி.எ படித்துக் கொண்டிருப்பவன் வாரம் ஒரு முறையோ, அல்லது மாதம் ஒரு முறையோ வீட்டிற்கு வந்து செல்வான். அவனுக்கும் தன் அக்காவை விட்டால் நாதியேது. விடுமுறைக்கு ஊருக்கு வரும்பொழுது தனக்கேயான ஒரே நண்பனுடன் ஊர் சுற்றவது பொழுதுபோக்கு. அவனிடமே தன் அக்கா மகள்களுக்கு யார் மூலமாவது, அதாவது பையன்களால் பிரச்சனை இருக்கிறதா என்பதை விசாரித்து, எதாவது பிரச்சனையென்றால் அதை தீர்த்து வைத்துவிட்டே செல்வான்.
இவற்றை யார் மூலமாவது கேள்விப்படும் ஹரிப்ரியாவிற்கு, ‘அந்த பாதுகாவலன் தான் தன் கணவன்’ என்பது மனதினுள் வேரூன்றிப் போன ஒன்றாயிற்று. ஹரி செய்த ஒவ்வொன்றிற்கும் தனக்கேற்ப அர்த்தம் கண்டுபிடித்தே அனர்த்தமாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல் ஆசையை வளர்த்துக் கொண்டிருந்தாள் அச்சிறு பெண்.
தற்பொழுது மனதினுள் சிறு உறுத்தல் வந்தது ப்ரியாவிற்கு. காரணம் அப்பா பாஸ்கரும் அம்மா சாந்தியும் சொந்தத்தில் யாரோ சொன்னார்கள் என்றதற்காக, மகளிற்கு மாப்பிள்ளை பார்க்கலாமா என்று பேசிக் கொண்டதுதான்.
அதில் இடிந்து போனவளுக்கு யாரிடம் இதைப்பற்றி பேசுவதென்று தெரியவில்லை. யாரிடமும் தன் மாமன் மேல் தனக்குள்ள மானசீகமான காதலை வெளிப்படுத்தியதும் இல்லை. வெளிப்படுவது போல் நடந்ததுமில்லை. ஆதலால், அவளின் காதல் அவளினுள் மட்டுமே.
இப்போதைக்கு பிரச்சனையை எப்படி தீர்ப்பதென்று யோசித்தவள் கடைசியில் மாமனிடமே கேட்டுவிடுவதென்று முடிவெடுத்து நேரடியாக கேட்டும் விட்டாள்.
அவனின் பதிலில் சர்வாங்கமும் அடங்க தலைசுற்றியது ப்ரியாவிற்கு. அங்கேயே அமர்ந்தவள், ‘இப்படி ஒரு பதில் உங்ககிட்டயிருந்து வரும்னு எதிர்பார்க்கலையே மாமா. எப்படி மாமா மனசு வந்தது உங்களுக்கு. இதென்னவோ சின்னப்பிள்ளைங்க விளையாட்டு மாதிரி பத்தே வார்த்தையில பட்டுன்னு சொல்லிட்டுப் போய்ட்டீங்க. இது சின்ன வயசுலயிருந்து மனசுல செதுக்கி வச்ச சிற்பம் மாமா. காலத்திற்கும் அழியாது. என் உயிரில்லாமல் போனாலும் உன்னைச் சுற்றியே நானிருப்பேன். நீங்க இல்லாம இன்னொருத்தன் தோள் சாய்ந்தால் நான் அந்த மாதிரி பொண்ணா இருக்கிறதுக்கு சமம் மாமா. அதுக்கு நான் உயிரோடிருக்க வேண்டாமா? நீங்க அதைத்தான் விரும்புறீங்களா? என் வீட்லயிருக்கிறவங்களுக்கே என் நினைவெல்லாம் நீங்கன்னு தெரியாம போனது என்னோட துரதிர்ஷ்டம் மாமா. நீங்க இல்லாம... இல்ல முடியாது மாமா நீங்கதான் வேணும்.’
மனதினுள் போராட எதையோ இழந்துவிட்ட உணர்வு மேலோங்க கண்களிலிருந்த கண்ணீரை துடைக்கக்கூட வழியில்லாது வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
ஹரியால் ஒரு நிலையிலிருக்க முடியவில்லை. கால்கள் தள்ளாடியது மனமோ, ‘கேட்டது அவள் தானா! அவளே தானா! என் அக்கா மகளா கேட்டது? என்ன ஆகிற்று அவளுக்கு?’ மனது ஓலமிட வீட்டை விட்டு வந்தவன் அருகிலிருந்த விநாயகர் சன்னதியில் சரணடைந்தான்.
“எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது அவளுக்கு? அந்தளவுக்கா என் நடவடிக்கை இருந்தது?” பார்த்துப் பார்த்து வளர்த்தது பாசத்திற்குப் பதிலாக காதலை வளர்த்ததை அறியவில்லை ஹரி.
கோவிந்தன், தங்கமாரி தம்பதியருக்கு முதலாவதாக சாந்தி பிறக்க. பின் குழந்தையே இல்லை. எத்தனையோ பேர் ஒன்று கூட இல்லாமலிருக்க நமக்குதான் கடவுள் கொடுத்த செல்வம் இருக்கிறதே என்று சந்தோஷப்பட, யாருமே எதிர்பார்த்திராத சமயம் மகளின் பனிரெண்டாவது வயதில் உதித்து உலகத்தில் அடியெடுத்து வைத்தான் ஹரி.
தனக்கு நான்கு வயதிருக்கும் போது அக்காவிற்கு திருமணம். எட்டோடு படிப்பை நிறுத்தியிருந்த சாந்தியின் பதினாறாவது வயதில் பாஸ்கர் வீட்டிலிருந்து பெண் கேட்டனர். யோசித்த அவளின் பெற்றோரிடம், “ஏன் கோவிந்து நீ இப்படிப் பேசுற? ஏம்மா தங்கமாரி நீயாவது சொல்லக்கூடாதா?” என உறவினர் ஒருவர் கேட்க,
“இல்ல சித்தப்பா சின்ன பொண்ணா இருக்காளேன்னு பார்த்தேன்” என்றார் தயக்கத்துடன்.
“அட நீ வேறம்மா. பையன் நல்ல குணம், வசதின்னு குறைவில்லாதவன். படிப்பு கம்மினாலும் நாட்டு நடப்பு தெரிஞ்ச பய. புள்ளைய தங்கமா பார்த்துக்குவான்” என பேசி சம்மதிக்க வைத்து அதன்பின் திருமணம் நடந்தது.
அடுத்த மூன்று மாதத்திற்குள் கர்ப்பமாக வந்த மகளை பிறந்த வீட்டினர் தாங்க, புரியாமல் பல கேள்விகள் கேட்ட சிறுவனிடம், “அக்கா வயித்துல பாப்பா இருக்குதுடா தம்பி. அதுக்கு நீ தாய்மாமா” என்று விளக்கம் சொல்ல, புரியாவிட்டாலும், ‘ஓ...’ என தலையசைத்துச் சென்றான்.
குழந்தை பிறந்ததும் அவனின் அதே கேள்விகள் திரும்ப, “அம்மா தாய்மாமான்னா என்ன?” என்றான் ஐந்து வயதான ஹரி.
தன் வயிற்றைக் காண்பித்து, “அம்மா வயித்திலிருந்து பாப்பா மாதிரி நீ பிறந்தல்ல. அதுமாதிரி அக்கா வயித்துலயிருந்து பாப்பா பிறந்திருக்கா. அக்கா பாப்பாக்கு தாய்னா நீதான் தாய்மாமா. தாய்க்கு சமானம்டா தம்பி. அது உன்னோட பாப்பா” என்று பையனின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டுமென்று விவரமாகச் சொல்ல, அதை அந்த பிஞ்சு மனம் மூளையில் பதித்துக் கொண்டது. பெயர் வைக்கும் பொழுது, “நான் குழந்தைக்கு தாய்தான. என்னோட பெயரையும் சேர்த்து வைங்க” என்று ஆணையிட, ‘ப்ரியதர்ஷினி’ என்று வைக்கவிருந்த பெயரில் தர்ஷினியை எடுத்துவிட்டு “ஹரி” சேர்த்து “ஹரிப்ரியா” என மாற்றி வைத்தார்கள்.
இந்த பதினேழு வருடத்தில் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவர் செல்ல, தன் அக்காவே அம்மாவாகிப் போனாள் ஹரிக்கு. இதுவரை அக்கா பிள்ளைகளை பெயர் சொல்லி அழைத்ததில்லை. “பாப்பா” என்றே அழைப்பான்.
நினைவிலிருந்து மீண்டவன், “எப்படி இந்த மாதிரி எண்ணம் வந்தது பாப்பா உனக்கு? இதை எப்படி உனக்கு புரிய வைப்பேன்னு தெரியலையே. உன்னை கண்கலங்காம வளர்த்த நானே, இப்ப உன் கண்ணீருக்கும் காரணமாகிட்டேனே.” சற்று நேர யோசனைக்குப் பின், “இனி இந்த ஊருக்கு வந்தால் தானே பிரச்சனை. நான் உனக்குன்னு ஒரு நல்லது நடக்கும் போதுதான் இந்த ஊருக்கு வருவேன்” என்று உடனே வீட்டிற்கு சென்றவன் அக்கா, அத்தானிடம் விடைபெற்று கிளம்பிவிட்டான்.
சற்று நேரத்திற்கெல்லாம் வீட்டின் பின்புறம் வந்த லட்சுமி தன் அக்கா அமர்ந்திருந்த நிலை பார்த்து பதறியடித்து, “என்னாச்சி ப்ரியா? ஏன் இப்படியிருக்க?” என உலுக்கினாள்.
நினைவு வந்தவள் தங்கையின் தோள் சாய்ந்து, “எல்லாம் முடிஞ்சிருச்சி?” என தேம்பித் தேம்பி அழுதாள்.
“ப்ரியா என்ன முடிஞ்சிது? இங்க என்ன பண்ற? முதல்ல அழுறதுக்கு காரணம் சொல்லு?” என்றதும் நிமிர்ந்தவள் கண்ணீர் துடைத்து தங்களது அறைக்கு சென்று அடைத்துக் கொண்டாள்.
தேர்வு முடிவு வந்ததும் வீட்டினரின் வற்புறுத்தலால், மதுரையிலுள்ள கல்லூரியில் மாமாவின் படிப்புடன் தொடர்புடைய பி.காம் தான் படிப்பேனென்று தோழியின் அப்பா மூலம் விண்ணப்பப் படிவம் வாங்கி வந்தவள் வீட்டிற்குள் நுழைய, பாஸ்கரும், சாந்தியும் பித்து பிடித்ததுபோல் அமர்ந்திருந்தார்கள். ‘யாருக்கு என்னாச்சி? ஏன் இப்படியிருக்காங்க? ஐயோ! மாமாவுக்கு எதாவது...’ அதிர்ந்தபடி தாயிடம் வந்து நிற்க, மகளைப் பார்த்ததும் இருவரும் கண்ணீர் துடைத்து புன்னகைக்க முயன்றனர்.