• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
ஓம் சரவண பவ


சொர்ணா சந்தனகுமார்


எனை அடியோடு சாய்த்தவளே


1


அது ஒரு பெரிய பழங்கள் பழுக்க வைத்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம். “டேஸ்டி ப்ரூட்ஸ்” என்ற பெயரில் சிலபல சில்லறை வேலைகளும், மனிதர்களின் உடல் கெடுக்கும், நாம் அன்றாடம் உண்ணும் பழங்கள் பழுக்க வைக்கும் நிறுவனம்.

காலை பத்துமணியளவில் காய்கள் ஏற்றி வந்த மூன்று கண்டெய்னர் லாரிகளுக்கு அனுமதி கொடுத்து அனுப்பி, வெளியே சென்ற ஐந்து சின்ன(மினி) லாரிகளுக்கு அவுட்பாஸ் கொடுத்து அனுப்பினான் காவலாளி. அதன்பின் வேலையில்லை என்றதும் சுற்றிலும் பார்வையைச் சுழற்றியவனின் பார்வை வட்டத்திற்குள் விழுந்தது அந்த இருசக்கர வாகனம்.

ஆக்டிவாவிலிருந்து ஒரு பெண் இறங்கி அதிலேயே சாய்ந்தபடி சுற்றும் முற்றும் பார்த்தவாறு அழகாக நின்றிருந்தாள்.

காவலாளி அவளையும், அவளின் நடவடிக்கையையே கவனித்திருந்தான். முகம் முழுக்க மறைத்து, கைகளுக்கு உறை அணிந்து, கண்களுக்கு கூலர் கண்ணாடி அணிந்திருந்தாள். ‘கண்டிப்பா அழகியாகத் தான் இருக்க வேண்டும்’ என்று நினைத்த காவலாளி தன்னுடைய கூர்மையான கண்களால் அந்த வண்டியின் நம்பரையும் குறித்துக் கொள்ளத் தவறவில்லை.

வந்தவள் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்களாகியும் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். ‘இந்தக் கொளுத்தும் வெயிலில், இவள் ஏன் இங்கே நிற்கிறாள்?’ என்ற எண்ணம் தோன்றியது காவலாளிக்கு. ‘ஆளில்லாத தனிக்காட்டில் இருக்கும் ஃபேக்டரி முன் இப்பெண்ணுக்கு என்ன வேலை? தன்னிடமோ, அல்லது கம்பெனியிலிருந்து போவோர் வருவோரிடமோ அவள் எந்த விசாரணையும் செய்தது போலவும் தெரியவில்லை. ஆனால், பார்வை ப்ரூட்ஸ் யூனிட்டைத் தவிர வேறெங்கும் பதியவுமில்லையே!’

அவளோ, சுற்றிலும் பார்வையிடவும் கால் வலித்தால் அங்கேயே நடமாடவும், பின் போனில் பேசுவதுமாக இருந்தாள்.

‘என்ன செய்கிறாள் இந்தப்பெண்?’ என்ற யோசனையிலிருந்த காவலாளி, ‘அவளிடம் சென்று விசாரிக்கலாமே’ என்று ஒரு கணம் நினைத்தான். ஒரே கணம்தான், ‘சே... யாரோ என்னவோ பண்ணட்டும் நமக்கென்ன வந்தது. நம்ம வேலையை மட்டும் நாம கவனிக்கலாம். மீறி பிரச்சனை மாதிரி வந்தால் பார்த்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தவனுக்குள், ‘ஒருவேளை திருடியோ?’ என தோன்ற, ‘சே...சே இருக்காது’ என்ற மனதிடம், ‘அதெப்படி இருக்காது? இப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு சமமா செய்யிறோம்னு சொல்லி, பொண்ணுங்க கூட எல்லாத்துலயும் ரிஸ்க் எடுக்கிறாங்களே. பேசாம அவளிடமே விசாரணை செய்யலாம்’ என்று அவளை நெருங்கும் சமயம் ஆக்டிவா பறந்திருந்தது.

‘ஹ்ம்... கரெக்டா பக்கத்துல போற சமயம் பார்த்து எஸ்ஸாகிட்டாளா. இன்னொரு டைம் வந்தா கண்டிப்பா என்கிட்ட மாட்டுவ பாரு’ என தன் வேலையைத் தொடர்ந்தான்.

மாலை சரியாக ஆறுமணிக்கு, அதே ஆக்டிவா வந்து பேக்டரியையே நோட்டம் விட, ‘கண்டிப்பா திருடிதான்’ என்று முடிவே செய்தான் செக்யூரிட்டி. அவள் இருக்குமிடம் சென்று அப்படி என்ன பார்க்கிறாள் என்று அவளைப் போலவே எட்டிப் பார்த்து தன் கண்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை என்றதும், “அப்படி என்ன பார்க்கிறீங்க? எப்படி உள்ளே போறது? எப்படி எடுக்கிறது? எப்படித் திரும்ப வர்றதுன்னா?”

தனக்கு மிக அருகில் கேட்ட குரலில் சட்டென்று பதறியபடி திரும்பியவள், ‘ஃப்பூ...’ என்று வாயினால் காற்றை வெளியிட்டு, சில வினாடிகளில் தன் பதற்றத்தை உதறி, “ஹூ ஆர் யூ மேன்? ஐம் நாட் எ தெஃப்ட். மைண்ட் யுவர் வேர்ட்ஸ் ஓகே!” என்றாள் அவளுக்கேயான இனிய குரலில்.

‘ஆஹா! என்ன ஒரு வாய்ஸ். சூப்பராயிருக்குதே.” மனதினில் அவளின் குரலை ரசித்தவன் அவளுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்று, “நான் யாரா? என் யூனிபார்ம் பார்த்...” பேசியபடியே அவன் ட்ரெஸ்ஸைப் பார்க்க, ‘அச்சோ! ட்யூட்டி முடிஞ்சி ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டேனே’ என மனதில் நினைத்தவன் இருந்தாலும் தன்னுடைய கெத்தை விட்டுக்கொடுக்காமல், நான் இந்த கம்பெனி செக்யூரிட்டி” என்றான்.

“பார்த்தா அப்படித் தெரியலையே? என்னவோ ஓனர் ரேஞ்சிக்குப் பேசிட்டிருக்கீங்க” என கேலியாய் அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

அதில் ரோஷம் வந்து, “ஓஹ்... இதுக்கு நாங்க பார்க்கப் பார்க்கத்தான் தெரியும்னு சொல்லணுமோ! ஓனரா இருந்தால்தான் கேள்வி கேட்கணும்னு இல்லங்க. செக்யூரிட்டி கூட கேட்கலாம் தப்பில்லை.”

“நல்லாத்தான் பேசுறீங்க. இப்ப உங்களுக்கு என்ன வேணும்? நான் எங்க நின்னா உங்களுக்கென்ன பிரச்சனை வந்திச்சி? பேசாம உங்க வேலையைப் பார்த்துட்டு கிளம்புங்க சார்” என்றாள் கொஞ்சம் எரிச்சலாக.

“ஹேய்! ஹலோ! என்ன? என்னை அனுப்புறதுல குறியா இருக்கீங்க? திருட வரலன்னா அவுட்டோர் ஏரியாவுல வயசுப் பொண்ணுக்கு என்ன வேலை? இப்படி தனியா நிற்கிறது பொண்ணுங்களுக்கு சேஃப் இல்ல. அதுவுமில்லாம காலையிலிருந்து செகண்ட் டைம் வர்றீங்க” என்றவனுக்கு ஒரு சந்தேகம் வந்து, “ஹலோ நீங்க ஜர்னலிஸ்டா?” என்றான்.

“ஸ்ஸ்ஸ்... ஷப்பா கொஞ்சம் நிறுத்துறீங்களா. நான் ஸ்டாப்பா பேசிட்டேயிருந்தா நான் யாருன்னு சொல்லிரணுமா? உன்னை மாதிரி தெளிவா பேசுறவனை, எப்படி வேலைக்கு வைச்சான்னு தெரியலையே அந்த இடியட். அந்த அளவு நல்லவன் கிடையாதே உன்னோட முதலாளி” என்று மரியாதையைக் கைவிட்டு கோபத்தில் கத்தி, ‘இம்சை நகருறானா பாரு’ என்று மனதினுள் செக்யூரிட்டியை திட்டினாள்.

“ம்... புரியுது மனசுக்குள்ள இம்சைன்னு திட்டுறது? ஹ்ம்... ஒரு பொண்ணுக்கு தனியா வர்றதுல உள்ள ஆபத்தைச் சொன்னா கோபம் வருது. கலிகாலம்ன்றது சரியாகத்தானிருக்கு. ஓகே உங்க இஷ்டம்” தோள்குலுக்கி நகர்ந்தவனிடம்,

“அட போங்க சார். முதல்ல இடத்தைக் காலி பண்ணுங்க. என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்” என எரிச்சலில் மொழிந்தாள்.

அப்பொழுதுதான் யாரையோ எதிர்பார்த்து காத்திருக்கிறாளோ என்ற சந்தேகம் வந்தது அவனுக்கு. அதனால் மாற்று செக்யூரிட்டி வந்தும் போகாமல், வந்தவனிடம் பேச்சிக் கொடுத்தபடி, அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்திருந்தான்.

அவனின் சந்தேகத்தை உண்மையாக்குவது போல், சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு இளைஞன் வந்தான். அந்த இளைஞனைப் பார்த்த காவலாளிக்கு அவன் முகம் தெரியாவிட்டாலும், அவனின் உடையைப் பார்த்தவனுக்கு எங்கேயோ பார்த்த நினைவு. எங்கே என்று தன் நினைவடுக்குகளில் தேடினான். அவள் ஆக்டிவா இருந்த இடத்தை மற்றவனின் இருசக்கர வாகனம் பிடித்திருந்ததை உணர்ந்தவன், மேலும் அவர்களை இன்னும் உற்றுக் கவனிக்கலானான்.

அவர்கள் சுற்றிலும் பார்வை விடும் போது, கொஞ்சம் மறைந்தாற்போல் நின்று கொண்டான். சில நிமிடங்களில் கையிலுள்ள பேப்பர்களைக் கைமாற்றி, சிறிது நேரம் நிறுவனத்தைக் காண்பித்து இருவரும் விவாதம் செய்து பின் அவனை அனுப்பிவிட்டு, ஏதோ யோசனையில் இருந்தவள் தலை குலுக்கி தன் ஆக்டிவாவை எடுத்துக் கிளம்பினாள்.

காவலாளிக்கு ஒன்றும் புரியவில்லை. ‘யார் இவள்? இங்கே என்ன செய்கிறாள்? திருட இது ஏற்ற இடமும் இல்லையே. வெறும் பழங்களைத் திருடி ஒண்ணும் சாதிக்கப் போறதில்லை. ஜர்னலிஸ்ட் இல்லன்னா போலீஸா இருக்குமோ?’ என்ற சந்தேகம் வந்தது அவனுக்கு. ‘ம்... பார்க்கலாம்’ என அவன் வழியில் சென்றான்.

இரண்டு நாள்கள் அதே போல் அவளும், அந்த இளைஞனும் மாற்றி மாற்றி வேலை பார்த்தார்கள். மூன்றாம் நாளிலிருந்து இருவருமே வரவில்லை.

‘ப்ரூட்ஸ் யூனிட்ல, ப்ரூட்ஸைத் திருடி என்ன பண்றதுன்னு போயிட்டாளோ? சே.. ஏன் அவளைப் பற்றியே நினைக்கணும்?’ என்ற எண்ணத்தை வலுக்கட்டாயமாக உதறி தன் வேலையை மட்டும் பார்த்தான்.

அடுத்த ஒரு வாரத்தில் ஒரு பெரிய கட்டுரை “தினமீன்” பத்திரிக்கையில் வெளிவந்தது.

“பழங்களால் பழிவாங்கும் டேஸ்டி ப்ரூட்ஸ் பேக்டரி” என்ற தலைப்பிலிருந்தது. அப்பொழுதே அவளாகத்தான் இருக்கும் என்று புரிந்து கொண்ட காவலாளி அதை உன்னிப்பாகப் படிக்க ஆரம்பித்தான்.

“பழங்களால் பழிவாங்கும் டேஸ்டி ப்ரூட்ஸ் பேக்டரி! பழங்கள் அதிக கலோரிகளையும், உடலிலுள்ள ரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் உண்ணும் அத்தியாவசியமான உணவுப் பொருள். ஆனால், தற்பொழுது பழங்கள் என்றாலே பயமே மிஞ்சுகிறது. உடலிற்கு நல்லது என்று ஒருபுறம் மருத்துவர்கள் சிபாரிசு செய்ய, இன்னொரு புறம் அதே பழங்களால் மருத்துவர்களிடம் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பது மிகவும் வேதனையான விஷயம். நாம் சாப்பிடும் உணவுப் பொருள் விஷமாகிப் போனதேனோ? நாம் தினமும் பழங்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷத்தையும் சேர்த்தே சாப்பிடுகிறோம் என்பதே நிஜம். இது என்னுடைய நேரடிப் பார்வையில் நடந்த விசாரணையின் ஆவணம்.”

“ஒரு நாளைக்கு வாழைக்காய்கள் மட்டும், நான்கைந்து கண்டெய்னர் லாரிகள் மூலம் வெளியிடங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு, அன்றே முழுக்க முழுக்க குளிர்சாதனம் உள்ள அறையில் உறைநிலை மூலமும், ஊசி மருந்தின் மூலமும், அந்தக் காய்கள் பழுக்க வைக்கப்பட்டு மறுநாளே அவை வெவ்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாம் உண்ணும் பழங்களில் அதிக கலோரிகள் உள்ளது வாழைப்பழம். தினமும் இரவு ஒரு பழமாவது உண்டு உறங்கினால், ஜீரணசக்தி கிடைக்கும் உடலுக்கும் நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். தற்சமயம் ஒவ்வொரு நாளும் நாம் சாப்பிடும் பழங்கள் மூலம் நாம் விஷத்தையும் உட்கொள்கிறோம்.”

“என்னடா இதுவரை படங்களிலும், டிவியிலும் சொல்லாததையா சொல்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். அதை ஒரு பொழுதுபோக்காக பார்த்ததும் விட்டுவிடுவோம். அடுத்து அந்த படம் பார்க்கும் பொழுதுதான் நமக்கு திரும்பவும் நியாபகம் வரும். செய்தித்தாள் என்பது ஒவ்வொரு வார்த்தைகளாக நாம் வாசிக்கும் பொழுது, மனம் வாயிலாக மூளை சென்றடைந்து, நம்மை சிந்திக்க வைக்கும். சினிமா மூலம் பத்தில் ஓரிருவர் யோசித்தால், எழுத்து மூலமாக பத்தில் எட்டுபேர் யோசிப்பர். இது எல்லோரையும் போய்ச் சேரவேண்டும்.”

“அந்தக் காலத்தில் எந்த குளிர்சாதனம் இருந்தது? அனைத்தும் இயற்கையாகவே பழுக்க வைக்கவில்லையா? காலம் மாறினால் அனைத்தையும் மாற்ற வேண்டுமென்ற கட்டாயமா என்ன? இப்பொழுதும் ஆணும், பெண்ணும் தான் திருமணம் செய்கிறார்கள். கால மாற்றத்தால் ஆணும் ஆணுமோ, பெண்ணும் பெண்ணுமோ சேர்ந்தா குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இயற்கையை சீரழிக்காமல், செயற்கையை ஆராதிக்காமல் இருந்தாலே போதுமானது. இது இயற்கையான பழமா? இல்லை மருந்தின் மூலம் பழுத்ததா? என்று ஆராய்ச்சி செய்தா மக்கள் கடைகளில் வாங்கி உண்ண முடியும். இதையே தன் மனைவி, மக்களுக்கு இந்த முதலாளிகள் கொடுப்பார்களா என்றால் கிடையாது என்றுதான் சொல்ல முடியும். தன் குடும்பம் என்றால் தங்கமா? மக்கள் என்ன ஏமாளிகள் என்று நினைத்தார்களா? மக்களே! இதே போல் உங்கள் வீடுகளல் அருகிலும் எதாவது இடங்கள் இருந்தால், நேரடியாக காவல் துறையை அணுகவும். அங்கு செல்ல பயமிருந்தால், எங்கள் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். பயந்து எதையும் சாதிக்கப் போவதில்லை. எழுங்கள் விடியலை நோக்கி. நேரடியாக சொல்ல தயங்குபவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு தெரிவிக்கலாம்.”

எண் : ……

இராமகிருஷ்ணா தெரு,

வடக்கு உஸ்மான் ரோடு,

தியாகராயநகர், சென்னை – 600017.

உங்கள் தோழி

அவந்திகா அழகப்பன்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
அவளின் காரசாரமான கட்டுரையை படித்த காவலாளிக்கு கைதட்டி விசிலடிக்கலாம் போல் தோன்றியது. “வாவ்! சூப்பர்! இதுக்குத்தான் இந்த ஏரியாவுல சுத்தினாளா? ம்... க்ரேட் ஓபன் ஸ்டேட்மெண்ட். இந்த ஓனர் கௌஷிக் இன்னையோட இந்த கம்பெனியை மூடணும். ஆஹா! நமக்கும் அடுத்த வேலை தேடணும் போலிருக்கே. ஹ்ம்... தேடினாலும் தப்பில்லையே?” என்றவன், “அவந்திகா!” மனதிற்குள் ஒருமுறை சொல்லிப் பார்க்க, மனதின் அடி ஆழம்வரை இனித்தது. “நைஸ் நேம். போல்ட் அன்ட் ஸ்மார்ட் கேர்ள்” என தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருக்க, அதே நேரம் முதலாளி கௌஷிக்கின் கார் உள்ளே நுழைந்தது.

அதைத் தொடர்ந்து அந்த ஆக்டிவாவும் வந்தது.

‘இவ்வளவு தைரியமாக பேக்டரிக்குள்ளேயே வருகிறாளே. ஆனால், ஏன் வருகிறாள்?’ என்று ஆச்சர்யப்பட்டாலும், வண்டியை ஓரம்கட்டி உள்ளே செல்ல யத்தனித்தவளுக்கு பெரிய சல்யூட் ஒன்று வைத்தான் காவலாளி.

அவன் கையிலிருந்த பேப்பரைப் பார்த்து, தன்னை சரியாக கணித்து விட்டான் என நினைத்தவள், அவனை பாராட்டுதலாக ஒரு பார்வை பார்த்தாள்.

அன்று கருப்பு கண்ணாடி அணிந்திருந்ததால் குரல் மட்டுமே வந்தது. இன்று அவளின் கண்களைக் கண்டவனுக்கு அதற்கும் தனக்கும் நெருங்கிய உறவிருப்பதுபோல் தோன்ற புன்னகையுடன் வழிவிட்டான்.

அவந்திகா இரண்டு எட்டு எடுத்து வைக்கையில், அவள் கைபிடித்து முதுகுக்குப் பின்னால் முறுக்கியிருந்தான் கௌஷிக். “டேய்! விடுடா. விடு சொல்றேன்ல?” என்று கத்தினாள்

“இங்க எதுக்குடி வந்த? அதான் எல்லாத்தையும் ஊத்தி மூடிட்டியே அப்புறம் என்ன? ஓ... அரஸ்ட் பண்றதை நேர்ல பார்க்க வந்தியா? எவ்வளவு தைரியம் உனக்கு. ஏன்டி நான் பார்த்துப் பார்த்து என்னோட வளர்ச்சியை நோக்கிப் போய்க்கிட்டிருக்கேன். நீ என்னடான்னா ஒரு பக்க கட்டுரையை எழுதி என்னோட ஒட்டு மொத்த சாம்ராஜ்யத்தையே அழிச்சிட்டியே. அதுமட்டுமில்லாமல், போலீஸ், உணவுத்துறை இலாகா அதிகாரின்னு எல்லாருக்கும் கம்ப்ளெய்ண்ட் பண்ணியிருக்க. கொஞ்சமாவது கட்டிக்கப் போறவனேன்னு பயம் இல்லைல்ல? உன்னை அப்படியே கொன்னு போடணும்னு தோணுது” என ஒரு கையால் அவளின் கைபிடித்து, மறுகையால் கழுத்தைப் பிடிப்பது போல் செய்து, “சே... எங்கப்பா உனக்கு சப்போர்ட் பண்றதால நீ பிழைச்ச. நம்ம கல்யாணம் மட்டும் முடியட்டும் அப்பக் காட்டுறேன்டி நான் யாருன்னு?” என்று உறுமினான்.

“ஏன்டா? இதோ பொண்ணோட கையை பின்னாடி கட்டிட்டு வெட்டித்தனமா டயலாக் பேசுறியே அது மாதிரியா? தைரியமிருந்தா கையை விட்டுட்டு பேசுடா இடியட். அதை விட்டுட்டு பேசுறான் பாரு பேச்சு” என அசராமல் அவனை கடுப்படித்தாள் அவந்திகா.

அவந்திகாவின் கையை கௌஷிக் பிடித்ததிலிருந்து பார்த்திருந்த காவலாளி, அதைத் தடுக்கும் வழி தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க, தொடர்ந்து அவன் பேசியதும், அதற்கு அவள் திருப்பிப் பதில் கொடுத்ததும், அவர்கள் உறவுக்காரர்கள் என்று விளங்கிற்று.

‘இவர்கள் ஏற்கனவே டாம் அன்ட் ஜெர்ரிதான் போல?’ என நினைத்தவன் முதலில் அவனிடமிருந்து, அவந்திகாவை விடுவிக்க வேண்டுமென்று தைரியத்தை வரவழைத்து, “சார் எல்லாரும் பார்க்கிறாங்க. எங்க ஓடிறப் போறாங்க. விட்டுட்டு பேசுங்க சார்” என்றான்.

சுற்றிலும் பார்த்த கௌஷிக், ‘காவலாளி சொல்லி தான் கேட்பதா’ என்று நினைத்தாலும், அவன் சொன்னதை ஒத்துக்கொண்டு கையை விட்டான்.

“ஷப்பா! எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கியே. நீ பிடிச்சா என் கை என்னத்துக்காகும்னு யோசிக்க மாட்டியா?” என்று கையை நன்றாக உதறி விரலில் சொடுக்கெடுத்து, முகத்தில் சுற்றியிருந்த துப்பட்டாவை மெல்ல கழற்றி, அதையே வைத்து முகத்தில் அரும்பியிருந்த வியர்வையை துடைத்து கழுத்தைச் சுற்றிப்போட்டு, மென்மையாக அழகாக முடி கோதிவிட, அவளையே பார்த்திருந்த காவலாளி ஒரு நிமிடம் அசந்து தான் போனான்.

அழகூரில் பூத்தவளே

எனை அடியோடு சாய்த்தவளே!

என்று பாடவேண்டும் போல் தோன்றிய உணர்வை கஷ்டப்பட்டு அடக்கி, ஏற்கனவே பார்த்த முகமாகத் தெரிந்தவளையே பார்த்திருந்தவன், அவளின் வார்த்தைகளில் நடப்புக்கு வந்தான்.

“ஏன்டா? நீ என்னைக் கல்யாணம் பண்ணப் போறியா? காமெடி பண்ணாத சொல்லிட்டேன். தென், பொறுக்கியை பொண்ணுங்களுக்கு பிடிக்கும்னு யார்டா சொன்னது? அதுவும் நான்... உன்னை... நோவே.” என்றாள் எரிச்சலின் உச்சக்கட்டமாய்.

“ஏய்! என்னடி என்னை பொறுக்கின்னு சொல்றியா? என்னைப் பார்த்தா பொறுக்கி மாதிரியா இருக்கு?” கௌஷிக் எகிற,

“ஆமாடா. நீ பொறுக்கி தான். உன் முன்னாடி தான சொல்றேன். இல்ல நான் இந்த லோகத்துலேயும், நீ மேலோகத்துலேயும் இருக்கிறியா? ஓவரா சௌண்ட் விடாத. அதென்ன நம்ம கல்யாணம் முடியட்டும். அப்பக் காட்டுறேன் நான் யாருன்னு சொல்ற? என்னத்தைடா காட்டப்போற? போ போயி உனக்கேத்த ஒரு கண்ணம்மாவோ, பொன்னம்மாவோ படிக்காத வெகுளிப் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ. நீயெல்லாம் எனக்கு செட்டாக மாட்ட. என் பக்கம் வந்திராத சொல்லிட்டேன்.”

“நல்லா திமிரா தான்டி பேசுற? ஆனா, பெரியவங்க முடிவு பண்ணினது உனக்கு நான். எனக்கு நீதான்னு!”

“அதே பெரியவங்களை இப்ப வந்து பேசச் சொல்லுடா பார்க்கலாம்?”

“வா எங்கம்மாவை பேசச் சொல்றேன்” என்றான் அவனும் பதிலுக்கு.

“உங்கம்மாவை நீ ஏன்டா லிஸ்ட்ல சேர்க்கிற. உனக்கு ஜால்றா அடிக்கிறதாலயா? ஏன் வீட்டுக்குப் பெரியவர் உங்கப்பா அவரைச் சொல்லச் சொல்லு? ஜனங்க உயிரைக் குடிக்கிற உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு, இதோ இந்த மாதிரி செக்யூரிட்டி வேலை பார்க்கிற சாதாரணமானவனைக் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றாள் அவனைக் கடுப்பேற்ற.

அவந்திகா சொல்லி முடிக்க காவலாளி முகம், தௌசண்ட் வால்ட்ஸ் பல்பாக மாறி பளிச்சென்றாகியதை மறைத்து அமைதியாக நின்றான்.

“இவனை மாதிரியா? இல்லை இவனையேவா?” என கேட்டு வாய்விட்டு சிரித்து, “வாட் எ காமெடி அவந்தி? நீ போயி ஹையோ! ஹையோ! உன்னோட விளையாட்டுத்தனத்துக்கு அளவே இல்லையா? இன்னும் சின்னப்பிள்ளையாகவே இருக்குறியே” என கிண்டலடித்து மறுபடியும் சிரித்தான்.

“ஏன்? இவங்களுக்கு கல்யாணமாகலைன்னா, இவங்களையே கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அதனால, நீ சிரிக்கிறதுல அர்த்தமும் இல்லை” என்றாள் சட்டென்று மூண்ட கோபத்தில்.

காவலாளியோ, ‘இவங்க பிரச்சனையில நம்ம தலை உருளுது. என்னை வச்சி ரெண்டு பேரும் காமெடி ஷோ நடத்துறாங்களா?’ என்ற யோசனைக்குப் போனான்.

“யாரு இவனா? ஆப்ட்ரால் என்கிட்ட சம்பளம் வாங்குறவனைக் கட்டிப்பியா? அவன் சம்பளமே ஆறாயிரம் ரூபாய்தான். நீ கோடீஸ்வரி. ஒரு பிச்சைக்காரனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறியா? இதென்ன கதையா, இல்ல காவியமா? எதாவது நடக்கிறதைப் பேசு” என்று கேலிக்குரலில் சொன்னான்.

தன்னை பிச்சைக்காரனுக்கு ஒப்பிட்டுப் பேசியதும், கௌஷிக்கை அடித்து துவம்சம் பண்ணும் அளவு ஆத்திரம் வந்ததை கைமூடி கட்டுப்படுத்தினான் காவலாளி. தன் வேலையில் நிதானம் தவறக்கூடாதென்று சொல்லி அனுப்பிய தனக்கும் மேலுள்ள அலுவலரை நினைத்து கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அதையே அவந்திகா செய்த பொழுது மனம் சந்தோஷத்தின் உச்சிக்குச் சென்றது.

“அவங்களை பிச்சைக்காரன்னு சொல்ற, நீ கூட இப்ப பிச்சைக்காரன் தான்டா. வருவாங்க உன்னை மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டுப் போக” என்று காவலாளியிடம் திரும்பியவள், “உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா?” என கேட்டாள்.

அவன் திருதிருவென விழித்து, “இல்லங்க மேடம்” என்றான் பவ்யமாக.

“ஓ... அப்ப சரி. உங்க குடும்பத்துல எத்தனை பேர்? யார் யாரெல்லாம் இருக்குறீங்க?”

“அப்பா, அம்மா, தம்பி, நான் நாலே பேர் தான்.”

“ஓகே. நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்!” பட்டென்று சொல்ல,

சட்டென்று வாயில் கைவைத்து, “என்னது? கல்யாணமா? என்னையா?” ‘அதுவும் நீ பண்ணிக்கப்போறியா?’ கடைசியை மனதிற்குள் சொல்லி வெளியில் அதிர்ந்தவனை ஆச்சர்யமாய் நோக்கினாள் அவந்திகா.

தூரத்தேயிருந்து நோக்கினேன்.

துப்பட்டாவில் மறைந்த

உன் பூமுகம் காண!

உன்னழகு முகம் கண்டதும்,

கேட்டாயே ஒரு கேள்வி.

என்னால் முடியவில்லையடி

சிரிப்பையடக்க.

ஆனாலும், கோவிக்கிறேன்

உன் வார்த்தைப் பிழைகளை

வாக்கியமாக்க!
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top