- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
10
சிவகாமி, இளங்கதிர் பாசத்தைப் பார்த்த பிரஷாந்த், இந்த அன்பானவர்களின் அன்பே தன் அக்காவிற்குச் சிறந்ததென்று நினைத்தான்.
திருவிற்கு ஏதோ ஒரு எண்ணம் ‘அவர்களைப்போல் தங்கள் வாழ்க்கையில்லையோ! அன்பான ஜாலியான அம்மா பையன். ரொம்ப காலத்துக்கு இவங்க நல்லாயிருக்கணும். வரப்போற பொண்ணும் இவங்க அன்பைப் புரிஞ்சவளா நல்லவளாயிருக்கணும்.’ எங்கே தன் கண்ணே பட்டுவிடுமோ என்றவளுக்குக் கண்களில் சிறுதுளி நீர்.
“சரி டைமாகுது தூங்குணும் வாங்க” என்றார் சிவா.
“அம்மா நாங்க திண்ணையில படுத்துக்கறோம். நீங்க உள்ள தூங்குங்க. டிரைவரை சாப்பிட்டதும் கார்லயே படுக்கச் சொல்லிட்டோம்.”
“ராஜா தரையில எப்படி படுப்ப?”
“அம்மா எனக்கெந்த பிரச்சனையுமில்ல. நீ உள்ள போமா. கூட்டிட்டுப் போ மொழி.”
“வாங்க அத்தை” என உள்ளே அழைத்துச் சென்று பெட்ரூமை குருமூர்த்தி சிவகாமிக்குக் கொடுத்து ஹாலில் வீட்டுப் பெண்கள் இருவரும் படுத்துக்கொண்டார்கள்.
தலையணையில் தலையில் கை வைத்து கால்மேல் கால்போட்டு விட்டத்தைப் பார்த்தபடி, “ஏன்டா மாப்ள... அது ஏன் அப்படிப் பண்ணின?” என்றது திருவின் காதிலும் விழுந்தது.
“எத எப்படிப் பண்ணிட்டாங்க மச்சான்?”
“அதான்பா.. நாங்க கிளம்புறோம் சொன்னப்ப?”
“ஓ... அதுவா. ஒரு நிமிஷம் உங்க போனைக் குடுங்க” என்று வாங்கி யூட்யூப்பிலுள்ள வேலாயுதம் பட சந்தானம் காமெடியைப் ப்ளே செய்து கொடுக்க, ‘போப்பா போ என் பொணத்த தாண்டிப் போ’ வசனத்தைக் கேட்டுக் கதிர் சத்தமாக சிரிக்க... அச்சிரிப்பு அவளுள் சிறு அதிர்வலையை உருவாக்கியதோ!
“டேய் இதைப் பார்த்துதான் அவ்வளவு அட்டகாசம் பண்ணுனியா?” அசடுவழிய சிரித்த பிரஷாந்தின் தலையில் தட்டி, “காமெடியா இருந்தால் கூட இனிமேல் அந்த மாதிரி வார்த்தையை யூஸ் பண்ணாத. எனக்கு சங்கடமாயிருந்திச்சி” என்றதும் சம்மதமாக தலையசைக்க... தூங்கச் சொல்லி தானும் அப்படியே கண்ணயர்ந்தான்.
திடீரென்று மின்விசிறிலிருந்து காற்று அவனை நோக்கி வர மெல்ல தலைநிமிர்ந்து பார்த்தவனின் தலையருகே நின்றிருந்தாள் திருமொழி. அவன் பார்வை உணர்ந்து “எங்களுக்கு சீலிங் பேன் இருக்கு. இது உங்களுக்காக” என்றாள்.
“எனக்கா? உன் தம்பிப்பையனுக்கா?”
“யாருக்கா இருந்தா என்ன. நீங்க எங்க வீட்டுக்கு வந்த கெஸ்ட். அவன் என் தம்பி மட்டும்தான் கெஸ்ட் கிடையாது. அதனால உங்களுக்குதான் இது.”
“ஹ்ம்.. டேய் மாப்ள மழையில் ஓவரா குளிருது அந்தப் பெட்ஷீட்டை எடுத்துப்போடு” என்றதில்... ‘மழையா? மழை பெய்யலையே’ என்பதாய் அவள் பார்த்தாள்.
“போய் தூங்கு மொழி. காலையிலயே கோவிலுக்குப் போகணும்ல.” கதிர் புன்னகையுடன் கண்மூடினான்.
கண்மூடிப் படுத்த திருமொழிக்கு என்னவென்று புரியாத சில நுண்ணுணர்வுகள். ஏனோ கதிரைப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது. அவனின் சிரிப்பும், தாயிடம் கொஞ்சிய விதமும், எதையோ மறுபடியும் நினைவுப்படுத்த பட்டென கண்திறந்து சட்டென கண்மூடிக் கொண்டாள்.
கதிர் மேல் ஈர்ப்பு வரத்தான் செய்ததோ! ஈர்ப்பு... காதலாகுமா? கானலாகுமா?
‘இல்லை இது தப்பு’ என்ற தவிப்பு அவளுள் எழ அன்றைய கனவுகள் யாவும் அவளை ஆட்டிப்படைக்க, காலையில் எழும்போதே சிறு பயத்துடன் எழுந்தவள் கதிரின் “அம்மாஆஆ” என்ற அலறலில் அடித்துப்பிடித்து வெளியே வர கண்கள் நிலைகுத்த அப்படியே நின்றாள்.
கதிரின் அலறலில் காமாட்சியும் திருவும் வெளியே வந்தார்களென்றால் அருகில் படுத்திருந்தவனுக்குச் சொல்லவும் வேண்டுமா என்ன?
“என்ன மச்சான்? ஏன் அலறுனீங்க?”
“அ.. அங்க பாருடா. பா..பா.. பம்புடா” என்றவன் குரல் தந்தியடிக்க,
“பம்புடாவா... ஓ... பாம்பா? எங்கயிருக்கு மச்சான்?” என வேகமாக எழுந்தவனைத் தடுத்து “எங்கடா எழுந்திருக்க? அது என் பக்கத்துலதான் படுத்திருக்கு” என்றான்.
அதே நேரம் வெளியே விளக்கு எரிய இளங்கதிரிடம் பாம்பு எங்கேயென்று கேட்டதற்கு, கண்மூடி அவன் காட்டிய இடத்தைப் பார்த்த திரு விழுந்து விழுந்து சிரித்தாள். சிரிப்பென்றால் அப்படியொரு சிரிப்பு.
அந்நேரம் வெளியே வந்த குருமூர்த்தியும் சிவகாமியுமே அவளை ஆச்சர்யமாய் பார்க்க... பிரஷாந்த் தன் சகோதரியை அன்பாய் பார்த்தான்.
அதுவரை பயத்திலிருந்த கதிர் அவளின் அள்ளிக்கொள்ளும் சிரிப்பில் கொள்ளை போனான். தன் பயத்திலிருந்து விலகிய கண்கள் காதலாய் அவளைக்காண அது எதையும் உணரவில்லை அவள்!
“அக்கா பாம்பைப் பார்த்து ஏன் இந்தச் சிரிப்பு?”
“இதோ சொல்றேன்” என்றவள் சிரிப்பை நிறுத்தப் போராடி முடியாமல் மீண்டும் சிரித்து திரும்பவும் வாயைப்பொத்தி வந்த சிரிப்பை அடக்க வழியில்லாது கதிரினருகில் கிடந்ததை எடுக்கப்போக...
“ஏய் என்ன பண்ற? அதென்ன கயிறுன்னு நினைச்சியா? பாம்பு” என்றான் அதட்டலாக.
“ஹா..ஹா பாம்பா? இதையா சொன்னீங்க?” என்று எடுத்துக் காண்பிக்க, அசடு வழிய மட்டுமே முடிந்தது இளங்கதிருக்கு. உண்மையில் அது கயிறுதான். சற்று வளுவளுப்பான கயிறு.
“இல்ல மேலயிருந்து என்மேல விழுந்ததா தொட்டுப் பார்த்தேன் வளுவளுப்பாயிருந்தது. அதான் பயத்துல அலறிட்டேன்.”
சிரிப்பை நிறுத்தாமலே ‘அப்புறம்?’ என்பதாய் அவள் பார்க்க...
“இங்க பாரு மொழி நான் முன்னப்பின்ன பாம்பைத் தொட்டுப் பார்த்ததில்ல. அதான் கொஞ்சம்...”
“ஆமா திரு. அவன் டிவியில பாம்பு பார்த்தா கூட ஆஃப் பண்ணிட்டு கண்ணை மூடி என்னை இறுக்கப் பிடிச்சிப்பான். குறைஞ்சது ஐந்து நிமிஷமாவது அதனோட பாதிப்பு இருக்கும்.”
“ஓ... பார்த்தா அப்படித் தெரியலை அத்தை. ஆனா, நேர்ல பார்த்தாச்சே நம்பித்தான் ஆகணும். எங்க இளா அத்தான் சின்ன வயசுலயே பாம்பைக் கையில தூக்குவாங்க. எங்க அப்பாவோட ட்ரைனிங்” என்று சிரித்தபடி இளங்கதிரைக் கண்டவள் கண்கள் சிரிப்படங்கி அப்படியே கட்டுண்டது.
‘என்ன பார்வை இது? ஏன் இப்படித் தன்னைப் பார்க்கிறான்?’ மனம் கேட்டாலும் தன் பார்வையை மாற்றவில்லை அவள். சில வினாடிகளில் ‘என்ன செய்யுற மங்கை? ஒரு ஆண்பிள்ளையை இப்படி... உன்னோட இளா அத்தானை மறந்துட்டியா?’ என மூளை அறிவுறுத்தியதில் வேகமாகப் பார்வையை விலக்கி “கிளம்புங்க டைமாகுது” என்று உள்ளே சென்றாள்.
கண்களில் கண்ணீருடன் நின்றிருந்த காமாட்சியைக் கண்ட அன்புவும் இளங்கதிரும் ஏன் என்பதாய் கேட்டனர்.
“இத்தனை வருஷத்துல இவள் இப்படிச் சிரிச்சதில்லபா. மிஞ்சிப்போனா உதட்டை இழுத்துப் பிடிச்சிப்பாளே தவிர, மனம் விட்டுச் சிரிச்சதில்ல. முதல்முறையா என் மருமகள் சிரிச்சிப் பார்க்கிறேன்பா” என்றார் நெகிழ்ந்த குரலில்.
“இனிமேல் அவள் எப்பவும் இப்படியே இருக்கிற மாதிரி செய்திடலாம் காமாட்சி. நீ கவலையை விடு” என்றார் சிவகாமி.
“ரொம்ப நல்ல பொண்ணுக்கா. அவளுக்கு அப்படி நடந்திருக்க வேண்டாம். அவளைத் தனிமரமா நிற்க வச்ச படுபாவிங்க அழிஞ்சிதான் போவானுங்க” என்று முகம் தெரியாத அந்நபர்களைச் சபித்தார்.
உள்ளே நின்று கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் கண்ணீர். ‘உண்மைதானே. நான் சிரித்து எத்தனை வருடங்களாகிற்று. இவன் என்னை ஏதோ செய்கிறான். இவன் சிரிப்பில் கண்களில் ஏதோ இருக்கிறது. அதில் என்னையறியாமல் நானும் மயங்குகிறேன். இரண்டே நாட்களில் ஒருவனால் என் மனம் சலனமடைகிறதா? பலவீனமாகிறேனா நான்? அப்ப இளா அத்தான்?’
‘இல்ல இது சரி கிடையாது மங்கை. இப்படியிருந்தா உன்னோட லட்சியம் என்னாகிறது. எல்லாத்தையும் மறக்க வைக்கிறான் இவன். இனிமேல் இவனை விட்டு விலகியே இருக்கணும்’ என நினைத்து கோவிலுக்குச் செல்வதற்கு குளிக்க ஆடைகளை எடுத்து வெளியிலிருக்கும் குளியலறை நோக்கி வந்தவள் காமாட்சியின் கலங்கிய கண்களைக் கண்டு, “அத்தை போதும். நான் குளிச்சிட்டு வர்றேன். அப்படியே ஒவ்வொருத்தரா குளிச்சி முடிச்சி சீக்கிரம் கிளம்பிரலாம்” என்று வெளியிலிருக்கும் குளியலறை நோக்கிச் செல்கையில் இளங்கதிரைப் பார்க்காதே என மூளை சொன்னதையும் மீறி, அவனைக் கண்கள் காண லேசான புன்னகையுடன் அவனைக் கடந்தாள்.
ஓரப் பார்வை தனை வீசி
ஒற்றைப் புன்னகை சிந்தி
ஓராயிரம் கவியெழுத - எனைத் தூண்டி
உடல் சிலிர்க்க வைக்கிறாள்!
மொத்தக் கவிதையும்
அவளாகிப் போகையில்,
ஹைக்கூ கவிதைக்கே
வழியில்லையாம் இங்கே!
ஓராயிரத்துக்கு நானெங்கே போவது?
என்னுள் வெட்கக் கவிதை மட்டுமே!
“அக்கா சீக்கிரம் டைமாகுது. இன்னும் என்ன பண்ற?”
“இருடா. கோவிலுக்குச் சும்மாவா போறது?” என்று கதவைப் பூட்டி வந்து காரில் ஏறியதும், அவளின் தலைப்பின்னலை அவிழ்த்த காமாட்சியைத் தடுத்தாள்.
“சும்மா இரு திரு. சளி பிடிச்சிக்கப் போகுது. அப்புறம் காய்ச்சல் தலைவலின்னு அல்லாடணும். இப்ப காத்துல கொஞ்சம் உலரட்டும். பிரஷாந்த் வீட்டுக்குப் போயி லூஸா பின்னல் போட்டுக்கலாம்.”
“ம்க்கும்... ரெண்டு ஊருக்கும் இடையில ஐம்பது கி.மீ வித்தியாசம் பாருங்க” என முனகினாலும் சரியென்று முடியை விரித்துப்போட... அது பின்னால் அமர்ந்திருந்த கதிரின் முகத்தில் பட்டதில் அவனுக்கு தும்மல் வந்தது.
என்னவென்பதாய் அவள் திரும்ப கூந்தலின் மீதி பாகங்கள் அவனை விட்டு விலக... தும்மல் நின்றதும், “என்ன ஷேம்பூ போடுற?” என்றான்.
வேகமாக முடியை ஒதுக்கியவள் “ம்க்கும்” என்று திரும்பி அமர்ந்து கொண்டாள்.
“என்ன மச்சான் கவிதை கொட்டுதா?”
“எங்கடா மாப்ள கொட்டிய கவிதையெல்லாம் கொள்ளை போயிருச்சி. என் மொத்தக் கவிதையும் முன்னாடி இருக்கிறப்ப தனிக்கவிதை எப்படிடா வரும்.”
“வரலன்னு சொல்லுடா மகனே. ஏன் பூசி மொழுகுற.”
‘தன்னைத்தான் சொல்கிறானோ?’ என்ற சந்தேகத்துடன் கதிரின் புறம் திரும்பினாள்.
அவள் கண்பார்த்து சிரித்தபடி, “உள்ளம் கொள்ளை போகுதே! உன்னைக்கண்ட நாள் முதல்! உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே” என்று பாடினான்.
கண்களால் கத்தியை வீசிவிட்டு உதடு சுழித்துத் திரும்பிக் கொண்டாள் மங்கையவள்!
“மாப்ள ஒரு சந்தேகம் கேட்கலாமா?”
“சொல்லுங்க மச்சான். முடிஞ்சா தீர்த்து வைக்கிறேன். இல்லன்னா என் அக்கா தீர்த்து வைப்பா.”
“டேய்! உங்களுக்குள்ள பேசும்போது என்னை ஏன் இழுக்கிற?”
“மச்சான் உங்களைப் பார்த்து டேய் சொல்றா சும்மாயிருக்கீங்க. என்னன்னு கேளுங்க?” பிரஷாந்த் கதிரை இழுத்துவிட...
“தம்பிப்பையா வேண்டாம். வந்தேன்னா தொலைச்சிருவேன் உன்னை.” பதிலுக்கு அவள் மிரட்டல்விட்டாள்.
“விட்ரா மாப்ள. நான் என்னோட சந்தேகத்தைக் கேட்கிறேன். பெண்கள் கூந்தலுக்கு இயற்கை மணமா? செயற்கை மணமா?”
“அட மச்சான். உங்க சந்தேகம் இப்படியா வரணும். இதற்கு அந்த ஆண்டவனாலேயே பதில் கண்டுபிடிக்க முடியலையே. அடியேன் எம்மாத்திரம்.”
“கேள்வி கேட்டா பதில் சொல்லணும். சும்மா பேச்சை மாத்தாத.”
“அ..அது ம்... அது...”
“தாயே நீங்க சொல்லுங்க?”
“அதுடா ராஜா. வந்து வந்து...”
“ஆக மொத்தம் யார் வாயிலிருந்தும் பதில் வராது. நானே சொல்றேன். பெண்கள் கூந்தல் மணத்திற்கு சிக்-கே காரணம்.”
“நக்கீரா! நன்றாக என்னைப் பார். சிக் கூந்தலைச் சிக்கலில் விட்டுவிடும்.”
“ஐயனே நெற்றிக்கண் திறப்பினும் சிக் சிக்கே. உண்மையை மறைக்க எவராலும் முடியாது.”
“நக்கீரா..!”
“ஆண்டவா..!”
ஹா..ஹா என்ற சிரிப்புச் சத்தம் மட்டுமே காருக்குள்.