• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
15


ஞாயிறு மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி காலை ஒன்பது மணிக்கெல்லாம் ராசியின் வீடு வந்தவன் கதவு தட்ட சில வினாடிகளில் திறக்கப்பட்ட கதவினருகிலிருந்து, “ஹையா! மாமா வந்தாச்சி” என்று ப்ரீடா குட்டி கத்த, அப்பொழுது தான் குழந்தையை விரட்டி வந்த ராசி சரத்தையும், குழந்தையின் வார்த்தையையும் கண்டு விக்கித்து நின்றாள்.

சற்று நேரத்திற்கு முன் காலை உணவை தயார் செய்து சாப்பிட போகுமுன் ப்ரீடா குட்டி வர, ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். “அத்தை எனக்கு இப்ப வரைக்கும் அணில் கொய்யாபழம் சாப்பிடுறதைக் காண்பிக்கவே இல்லையே. ஏன் நான் பார்க்கக்கூடாதா?” என்றாள் கேள்வியாய்.

“அது டார்லிங் நீ வீட்டுக்குப் போயிட்ட பிறகுதான் என் கண்ணுல மாட்டுது. நான் என்ன பண்றது நீயே சொல்லு?”

“அப்ப நான் இங்கேயே இருக்கட்டுமா.”

“சே..சே அப்பா அம்மா உன்னை விட்டுட்டு இருப்பாங்களா? அம்மா அழுவாங்கள்ல?”

“அழுவாங்களா?” என்று வருத்தமாய் கேட்டு “அன்னைக்கு மாதிரியா?” என குழந்தை இழுக்க...

“இல்லடா. இனி அந்த மாதிரி அழ மாட்டாங்க. நீயும் அழ வைக்கக்கூடாது. சமத்தா இருக்கணும் சரியா.”

“சரி அத்தை. ஆனா, அ..ணில் கொ..ய்..யா” என ஏமாற்றமாய் இழுத்தாள்.

“அது உங்க மாமா வந்ததும் பார்க்கலாம்” என்ற லோஜியிடம்... “மாமாவா எங்கேயிருக்காங்க? நான் பார்த்ததே இல்லையே?” குழந்தை ஆவலாய் கேட்டது.

குழந்தையின் ஆவலை தனக்கு சாதகமாக்கி, பேத்தியின் முகச்சுருக்கத்தை அலட்சியப்படுத்தி, “உங்க அத்தைக்கு கல்யாணம் பண்ணிட்டோம்னா, மாமா வருவாங்கள்ல” என்றதும் குழந்தை ‘ம்’ என்று தலையாட்ட...

“ஆச்சீ” என்று கோபத்தில் அதட்டியவளை கண்டுகொள்ளாமல், “அந்த மாமாவைத்தான் சொன்னேன்.”

“ஓ... எப்ப வருவாங்க?” என்று குழந்தை கேட்கும் போது கதவு தட்டப்பட, ஏற்கனவே எரிச்சலில் இருந்த ராசி, “இதோ உங்க மாமாதான் வந்துட்டாங்க. போய்ப்பாரு” என்று கோபத்தை குழந்தையிடம் காட்டினாள்.

“மாமாவா” என்று குழந்தை அவள் மடியிலிருந்து இறங்கி ஓட, அதைப்பார்த்த ராசி தன் தவறு உணர்ந்து லோஜியை முறைத்து, “ஏய் பாப்பா நில்லுடா” என்று குழந்தையை தடுக்கப் பின்னால் ஓட... அதற்குள் கதவைத் திறந்து “ஹையா! மாமா வந்தாச்சி” என கத்துகையில், சரத்தை அங்கு எதிர்பார்த்திராத ராசி அதிர்ந்து நின்றாள்.

அவனுக்குமே அதிர்ச்சி தான். ஒரு இனிய அதிர்ச்சி. குனிந்து குழந்தையைத் தூக்கியவன், “ஹாய் செல்லம்! என்னை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டான்.

“அத்தை இப்பத்தான் சொன்னாங்க. உங்க மாமாதான் வந்துட்டாங்க போய் பாருன்னு” என்று போட்டு உடைக்க...

வியப்பில் கண்கள் விரிய சரத் ராசியை பார்க்க... அவளோ குழந்தை சொன்ன வார்த்தையில் இன்னும் அதிர்ந்து அவன் கையிலிருக்கும் குழந்தை பேசுவதைத் தடுக்க முடியாமல் நின்றாள்.

“செல்லம் உங்க பேரென்ன?” என்றான் ராசியை பார்த்துக்கொண்டே.

“ப்ரீடா. அப்பா, அம்மா பாப்பா சொல்வாங்க. அத்தை டார்லிங் சொல்வாங்க” என்று புதிதாய் பார்த்த மாமாவிடம் விவரங்கள் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அதற்குள் தன்னை சமாளித்த ராசி, “விட்டா இவ இரண்டு வீட்டு ஹிஸ்டரியையும் ஒப்பிச்சிருவா” என்று, “வாங்க” என வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள். ஒரு புன்னகையுடன் அவளையே பார்த்தபடி உள்ளே வந்தவன் லோஜியைப் பார்த்ததும், “வணக்கம்மா! எப்படியிருக்கீங்க?” என்றான்.

“நான் நல்லாயிருக்கேன்பா. நீ எப்படியிருக்க?”

“நல்லாயிருக்கேன்மா” என்றவனிடம் லோஜி நன்றி சொல்ல, ஏனென்று கேட்டவனுக்கு... “என் பேத்தியை காப்பாத்தி கூட்டிட்டு வந்திருக்க. எனக்கிருக்கிற ஒரே உறவு என் பேத்திதான். அவளை திரும்ப என்கிட்ட கொடுத்த நீ ரொம்ப காலத்துக்கு பொண்டாட்டி, பிள்ளைங்களோட அமோகமா வாழணும்பா” என்றார் உணர்ச்சிவசப்பட்டு.

“இது சாதாரணமா எல்லாரும் செய்யற உதவிதான்மா இதுக்கெல்லாமா நன்றி சொல்வாங்க.”

“சாதாரணமா செய்யுற உதவின்னா, அந்த டிரைவர் ஏன் இவளை விட்டுட்டு ஓடினான். அந்த இடத்துலயிருக்கிற ஆபத்தை நினைத்து தானே” என்றவர் ,“ஆனா, உன்னை எங்கேயோ பார்த்திருக்கேன்பா. எங்கன்னு தெரியல” என்றார்.

“எனக்கும் தான்ம்மா பார்த்து பழகின ஒரு ஃபீல். புதுசா ஒருத்தரை மீட் பண்றோம்ன்ற ஃபீல் வரவேயில்லை” என்றான் உணர்ந்து.

“ஏதோ ஜென்ம பந்தமாயிருக்கும்” எனும்போது ராசியும், சரத்தும் ஒருவரையொருவர் பார்க்க... “ராசிமா நீ பேசிட்டிரு. நான் காஃபி எடுத்துட்டு வர்றேன்” என்று எழுந்தவரை தடுத்தாள் ராசி.

“வேண்டாம் அம்மாஆச்சி. டிபன் இருக்குதான.. நம்மளோட சேர்ந்து சரத் சார் சாப்பிடுவாங்க.”

“இல்ல ராசி. நான் டிபன் சாப்பிட்டுட்டேன்” என்று மறுத்தான்.

“பொய் சொல்றதுக்கு ரொம்பல்லாம் மெனக்கெட வேண்டாம். முகம் பார்த்தாலே தெரியுது சாப்பிடலன்னு. அம்மாஆச்சி நான் சொல்றேன்ல டிபன் எடுத்து வையுங்க” என்றதும் மற்ற இருவரும் ஆச்சர்யப்பட்டனர்.

“ராசி ப்ளீஸ் வேண்டாமே” என்று கண்களால் மறுக்க...

“ம்கூம்.. அதெல்லாம் செல்லாது. நீங்க சாப்பிடுறீங்க” என்று வாயால் பதிலளித்தாள்.

இருவரையும் பார்த்திருந்த லோஜி இவர்கள் இருவரையும் கண்ணுக்குத் தெரியாத ஒரு அன்பு கட்டிப் போட்டிருப்பதை உணர்ந்தார். சரத்திடம், “என்னப்பா நீ ஒருவேளை சாப்பிடுறதுல என்ன வந்திரப்போகுது. என்னை அம்மான்னு கூப்பிடுறது நிஜம்னா பேசாம வந்து சாப்பிடு” என்று உள்ளே சென்றார்.

சில வினாடிகளேனும் தாயின் நினைவு வர, கலங்கிய கண்களை மறைத்து, “இதோ வர்றேன்மா” என்றான்.

“என்ன சார் அம்மா நினைப்பு வந்திருச்சா?”

இல்லையென மறுத்து ஆமாமென தலையாட்டினான்.

கலங்கிய அவன் கண்களைப் பார்த்திருந்தவள் ஆதரவாய் கைபிடித்து ஆறுதலிளிக்கத் தோன்றிய மனதை கடிந்து, “விடுங்க சார். அதான் சாந்திம்மா இருக்காங்கள்ல உங்களை தாயாய் பார்த்துக்கிறதுக்கு.”

அதையே அவள் அப்பாவை விசாரிக்க காரணமாக எடுத்தவன், “என்னயிருந்தாலும் அப்பா, அம்மா யாராவது ஒருத்தர் இருந்திருக்கலாம் ராசி. உனக்குப் பரவாயில்லை. கூட இல்லைன்னாலும் அப்பான்னு ஒருத்தர் இருக்கார்” என்றான் வருத்தமாக முகத்தை வைத்து.

அவனின் வருத்த முகம் பார்த்து வந்த கோபத்தை அடக்கி, “தப்பு சார். எனக்கு அப்பா, அம்மா ரெண்டு பேருமே செத்துட்டாங்க” என பட்டென்று பதில் சொல்லி, “ஆமா. நான் என் குடும்பத்தைப் பற்றி யார்கிட்டேயும் சொன்னதில்லையே. அப்புறம் எப்படி?” என அவனை ஆராய்ச்சியாய் பார்த்தாள்.

அதில் சற்று தடுமாறியவன், ‘அச்சோ! இவ அப்பா என்னை வந்து பார்த்து இவளை நான் விசாரிச்சது தெரிஞ்சிது இந்த டாம் என்னை ஜாம் ஆக்கிடுவாளே! யோசிடா யோசி’ என தனக்குள்ளேயே புலம்பி, “அ..அது நீதான் சொன்ன” என்றான் வேகமாக.

“யாரு நானா? நான் யார்கிட்ட சொன்னேன்” என நேர்பார்வை பார்த்தாள்.

அந்த பார்வையில் இன்னுமே பதற்றம் எழ, “அது அக்காகிட்ட. எனக்கு அக்காதான் சொன்னாங்க” என்று உளறினான்.

“யாரு சாந்திம்மாவா? நான் சொல்லலையே!” என சந்தேகமாக பார்க்க...

‘சரியான சந்தேகத்துக்குப் பிறந்தவ’ என்று அவளை மனதிற்குள் திட்டினான்.

“அதான் சந்தேகம்னு தெரியுதுல்ல கிளியர் பண்ணுங்க” என்று அவனை க்ளீன்போல்ட் ஆக்கினாள்.

‘ஆத்தாடி! மனசுக்குள்ள நினைச்சதை கேட்ச் பண்ணிட்டாளே’ என நினைத்து, “அம்மா சொல்லிருப்பாங்களா இருக்கும்” என்றான்.

“ஓ... ஆனா, அம்மாஆச்சி யார்கிட்டேயும் பெர்சனல் லைஃப் பற்றி பேசினதில்லையே” என்றவள், அப்பொழுது தங்களை நோக்கி வந்த லோஜியிடம், தாங்கள் பேசியது அவர் கேட்டிருப்பார் என்றெண்ணி... “இவங்க சொல்றது நிஜமா?” என கேட்டாள்.

‘அச்சோ.. மாட்டினேன்டா’ என நினைக்க...

லோஜியோ ‘என்னது நிஜமா கேட்கிறாள்?’ என சரத்தைப் பார்க்க... அவனோ ராசிக்குத் தெரியாமல் சாப்பிடக் கூப்பிட்டதற்கு வருகிறேனென்று சொன்னதை கேட்கிறாள் என சைகை செய்ய புரிந்தவர்,

“ஆமா. நான்தான். இப்ப அதுக்கென்ன. அமைதியா சாப்பிடக் கூப்பிட்டு வா” என உள்ளே செல்ல, “ஆச்சீஈஈ” என பல்லைக் கடித்தவளைக் கண்டு உள்ளூர எழுந்த நிம்மதிப் பெருமூச்சை அடக்கி, “அதான் சொல்லிட்டாங்களே ராசி. உன் சந்தேகம் தீர்ந்திருச்சில்ல அப்புறமென்ன” என்றான்.

“எல்லாத்தையும் சொல்லிட்டாங்களா?” என வருத்தமாக குரல் இறுக கேட்டாள்.

அவளின் வருத்தத்தை உணர்ந்தாலும் வெளிக்காட்டாமல், “ம்.. கம்ப்ளீட்டா. உன் மேரேஜ் வரைக்கும். அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியாது. நீ சொன்னா தெரிஞ்சிக்கறேன்” என்றான். தன் கேஸிற்கு இதுவரை கிடைத்த தகவல் போதுமென்று எண்ணியிருந்தவனுக்கு, ஹரிப்ரியா தான் ராசி என்று தெரிந்ததால் திருமண விஷயத்தை அவளிடமே விசாரிக்க ஆரம்பித்தான்.

“உங்களுக்குத் தெரியாத விஷயம், தெரியாததாகவே இருக்கட்டும். மேலமேல அதை நோண்டாதீங்க. இத்தோட இந்த பேச்சை விட்டிருங்க. அன்ட் மறந்திருங்க. அதான் பெஸ்ட்” என்றாள் கறாராக.

“ஹ்ம்.. ஓகே” என்று எழுந்து மூச்சை இழுத்து விட்டபடி “சாப்பிடப் போகலாம்” என்றவன், கையிலுள்ள குழந்தையிடம், “ஏன்டா செல்லம் உங்க அத்தை எப்பப்பாரு சிடுசிடுன்னே இருப்பாங்களா? சிரிச்சா அழகா தேவதை மாதிரி இருப்பாங்கள்ல? நீ சொல்ல மாட்டியா” என குழந்தையிடம் புகார் செய்தான்..

“அத்தை எப்பவும் சிரிச்சிட்டுத்தான் மாமா இருப்பாங்க. பாட்டி நீங்க வர்றதுக்கு முன்னாடி மாமா வருவாங்க சொன்னாங்களா. அதுக்கப்புறம் தான் இப்படி இருக்காங்க” என்றதும், தான் வருவதற்கு முன்னர் ராசியின் திருமணப்பேச்சை மறைமுகமாக லோஜி எடுத்திருப்பாரோ என்று தோன்றியது.

“ஏன்டா பாப்பு! நான் என்ன அவ்வ்வளவு டெரர் பீஸாவா இருக்கேன். இல்லையே காலையில கண்ணாடி பார்த்தப்ப கூட பார்க்க ஓகேன்ற மாதிரிதான இருந்தேன்” என்று முகத்தை அங்குமிங்கும் திருப்ப...

அவனின் செய்கையில் சட்டென்று வாய்விட்டு சிரித்தவள், “கண்ணாடி பார்க்காம முகத்தை அங்கயிங்க திருப்பிப் பார்த்தா, உங்க முகம் உங்களுக்கு எப்படி சார் தெரியும்?” என்றாள் பழையபடி கிண்டலாக.

“தெரியும்” என்றவன் அவளை நெருங்கி அவள் கேள்வியாய் பார்க்க.. அந்த கண்களை ஆழ்ந்து பார்த்து, “நான் உனக்குள்ளே இருந்து என்னைப் பார்க்கிறேன் பார்” என்று அவளின் கண்ணை காட்டினான்.

அவனின் அருகாமையும், தன் கண்களில் அவனைக் கண்டேன் எனவும், அவன் கண்களில் தன்னைக் கண்டு விழியகல பார்த்து தடுமாறி கண்மூடி திறந்தவள் இடமறிந்து, “விட்டா பேசிட்டேயிருப்பீங்க. வாங்க சாப்பிடலாம்” என்று குழந்தையை வாங்கியபடி முன்னே நடந்தாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
காலை உணவு முடித்து ஹாலில் அமர்ந்திருந்தவனிடம், “என்ன விஷயமா வந்தீங்க? காரணமில்லாமல் லேடீஸ் இருக்கிற வீட்டுக்கு வரமாட்டீங்களே? எதாவது முக்கியமான விஷயமா?” என கேள்வியாய் கேட்க,

‘மகனே மாட்டுனியா. உன்னை எப்படி புரிஞ்சி வச்சிருக்கா பாரு’ என்று மெச்சுதலாக நினைத்து, என்ன சொல்லி சமாளிப்பது யோசித்தவன், “அது உன்னை இன்வைட் பண்றதுக்கு” என்றான் பட்டென்று.

“எதுக்கு இந்த திடீர் இன்வைட்? எங்க?”

என்ன சொல்வதென்று யோசித்தவன், “ஹான்! பாப்பா சென்னை வர்றா. அப்படியே உன்னையும் பார்க்கணும்னு ஆசைப்பட்டா. அப்புறம் இங்கிருந்தே சிங்கப்பூர் கிளம்புறாங்க” என்று ஒருவழியாக காரணம் கண்டு சொல்லியும் விட்டான்.

“ஓ.. உங்க வீடு எங்க?”

“எனக்கேது வீடு. எல்லாமே ஆஃபீஸ்தான்.”

“ஆமா சொல்லியிருக்கீங்கள்ல. என்னைக்கு வர்றாங்க? எத்தனை நாள் தங்கியிருப்பாங்க?”

“அடுத்த வாரம் போல வருவாங்க. எப்படியும் இரண்டு நாள் இருப்பாங்கன்னு நினைக்கிறேன். லாட்ஜிலதான் ரூம் புக் பண்ணனும். மணி வீடு இருக்கு அதுவும் ஒரு ரூம் வீடுதான். அதனால அங்க தங்க வைக்க முடியாது.” இதுவரை வீடுபற்றி நினைக்காமல் விட்டோமென்று வருத்தப்பட்டு ‘ இனிமேல் ஒரு வீடு வாங்கணும்’ என்பதை மனதில் நினைத்துக் கொண்டு அடுத்தகட்ட வேளையில் அதையும் சேர்த்துக்கொண்டான்.

“ஏன்பா பேசாம அவங்களை இங்க கூட்டிட்டு வந்திறேன். எதுக்கு லாட்ஜில தங்க வச்சிட்டு” என்ற லோஜியை ஆமோதித்து... “ஆமா சார் அம்மாஆச்சி சொல்றதுதான் சரி. எதுக்கு கண்ட இடத்துல தங்கணும். தீபா என்ன யாரோவா, நான் பார்த்துக்கறேன்.”

“அது எப்படி” சரத் தடுமாற...

“நீங்க இப்படித்தான் பேசுவீங்க” என்று தன் மொபைலை எடுத்து தீபாவை அழைத்துப் பேசி முடித்து, “தீபா வர்றேன்னுட்டாங்க. இனி உங்க சம்மதம் தேவையில்லை” என்றாள்.

“போச்சுடா. எல்லாம் கூட்டணி சேர்ந்துட்டீங்களா. நான் பேசாம அம்மாவை சேர்த்துக்கறேன்” என்று எழுந்து லோஜியின் அருகில் சென்றமர்ந்தான்.

லோஜி எதுவும் சொல்லாமல் அவனை தலை கோதுவதைப் பார்த்து பொறாமையில் பொங்கியவள், “சார் எழுந்திருங்க. அம்மாஆச்சி எப்பவும் எனக்குத்தான்” என்றாள் உரிமையாய்.

“நான் ஒண்ணும் உங்க அம்மாஆச்சியை கடத்திட்டுப் போகல. நானும் தான் கொஞ்சம் அம்மா பாசம் அனுபவிச்சிக்கிறேனே!” என்றான் ஏக்கமாய்.

அவனின் ஏக்கம் மனதில் பதிந்தாலும், “ம்கூம்.. முடியாது. லோஜி எனக்குத்தான்” என்று மறுபக்கம் அமர்ந்து கட்டிக்கொண்டாள்.

“அத்தை! மாமா லோஜி பாட்டி உங்க ரெண்டுபேருக்கும் இல்ல. எனக்குத்தான்” என்று இடுப்பில் கைவைத்து முறைத்தபடி ப்ரீடா சொல்ல, மூவரும் சத்தமாக சிரிக்க, அதற்குள் மீனலோஜினியின் மடியில் இடம் பிடித்திருந்தாள் ப்ரீகுட்டி.

மீனலோஜினிக்கு இருவரையும் சேர்க்கும் எண்ணம் வலுப்பெற, சரத்தும் ராசியும் லோஜினியின் தோள் சாய்ந்து, ஒருவரையொருவர் கண்களில் காதலுடன் விழுங்குவது போல் மயக்கும் பார்வை பார்க்க.. லோஜினி குழந்தையைப் பிடித்தபடி மகனுக்கு மகனான சரத்துக்கும், சொந்தத்திற்கும் மேலான பேத்தி ராசிக்கும் ப்ரீகுட்டி போல் ஒரு குழந்தை. அதை கற்பனையில் கண்டு முகம் ஜொலிக்க, சட்டென்று போட்டோ ஒன்று க்ளிக் ஆனதை யாரும் கவனிக்கவில்லை. அந்த புகைப்படம் பிற்காலத்தில் உரியவரிடம் போய் சேர்ந்ததும் யாருக்கும் தெரியாது.

“ஹாய் பாப்பு!” என்றபடி சேவியர் வந்தான்.

“ஹை அப்பா” என்று மடியிலிருந்து இறங்கி தன் அப்பாவிடம் ஓட... அந்த குரலில் சரத்தும், ராசியும் தங்களின் மௌனமொழியைக் கலைத்து.. “வாங்கண்ணா” என்று ராசி அழைக்க “வாங்க சார்” என்று தானும் அழைத்தான் சரத்.

“எங்க விட்ல எனக்கே வரவேற்பா” என்றதும் சரத் அசடுவழிய... “சரி நான் பாப்பாவைத் தூக்கிட்டுப் போறேன்மா. கொஞ்சம் வெளியில வேலையிருக்கு” என்றான் அவர்கள் எங்கேயென்று கேட்குமுன்.

“சரிப்பா. சாப்பிட்டுட்டா ட்ரஸ் மட்டும் வேணும்னா மாத்திட்டு கூட்டிட்டுப் போ” என்றனுப்பினார்.

சேவியர் கிளம்பியதும் சரத்தும் “நான் கிளம்பறேன்” என்று இரண்டெட்டுகள் எடுத்து வைத்தவன் தன் எதிரிலிருந்த போட்டோ பார்த்து, “யார் இவர்?” என்று விசாரித்தான்.

“என் பையன்பா. இப்ப உயிரோட இல்லை” என்றார்.

‘உயிரோட இல்லை’ என்ற வார்த்தையில் சட்டென்று ராசியைப் பார்க்க, அவள் முகத்தில் எந்தவித சலனங்களும் இல்லாமலிருந்தாள். ஆனால், உள்ளுக்குள் தன்னைப்பற்றி என்ன நினைப்பான் என்று கணிக்க முடியவில்லை அவளால்.

“நான் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன்மா” என்று யோசிக்க நினைவு வரவில்லை.

“அம்மாஆச்சி நான் மாத்திரை எடுத்துட்டு வர்றேன்” என்று கிளம்பியவளை தடுத்து, “நீ பேசிட்டிரு நான் மாத்திரை போட்டுக்கறேன்” என்று உள்ளே சென்றார்.

“அம்மாஆச்சிக்கு மாமா பற்றி பேசினதும் படபடப்பா இருக்கும் அதான் அனுப்பிச்சிட்டேன்” என்றாள் அவனுக்கான விளக்கமாய்.

“அம்மா ரொம்ப நல்லவங்கள்ல ராசி.”

“ஆமாங்க! ரொம்ப ரொம்ப நல்லவங்க” என்றாள் உள்ளார்ந்த குரலில்.

“உன் ஹஸ்பண்ட் கூட அழகு தான்ல” என்றான்.

அந்த வார்த்தையில் அடிபட்டவள், “ஹஸ்பண்ட் இல்லை சார். மாமா. மாமா மட்டும்தான்! வேறெதுவும் இல்லை” என்று ‘மட்டும்’ என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து உள்ளே சென்றாள்.

உள்ளே சென்றவளையே புதிதாய் புதிராய் பார்த்தான் சரத். மனம் முழுவதும் நிம்மதி பரவி லேசானது. என்னைப்போல் ஒருத்தி. இவனோ அக்கா பொண்ணு மட்டும்தான் என, இவளோ மாமா மட்டும்தான் என்கிறாள். அவள் திருமணம் தன்னைப் போலவேதான் என்பது புரிந்தது. ‘ராசி எனக்கானவள்! எனக்கே எனக்கு மட்டுமானவள்!’ என்று எண்ணும்போதே விசிலடிக்கத் தோன்றியது மனதை கட்டுப்படுத்தி இருவரிடமும் விடைபெற்றான்.

‘ஹஸ்பண்டா! உங்க வாயிலிருந்து இதை கேட்பேன்னு எதிர்பார்க்கலை சரத். எப்படி நீங்க என்னைப் பார்த்து இந்த வார்த்தையைக் கேட்கலாம்?’ என்றாள், அவனைப் பார்த்து தான் கேட்டு தனக்கும் அந்த பதில்தான் வந்தது என்பதை மறந்து. எப்படி தன்னிடம் அப்படிக் கேட்கலாம் என்றதிலேயே மனம் சுற்றிச்சுழல தான் என்ன நினைக்கிறோம், அவனிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்றே தெரியாமல் அவனை வசைபாடிக் கொண்டிருந்தாள் ராசி.

அன்றே வீடு வாங்க மணியிடம் சொல்லி வைத்து, மாலையே சிவராமனுக்கும் போன் செய்து தன்னை சந்திக்க வரச்சொல்லி அவர் கேள்வி கேட்குமுன் போனை வைத்தான்.

அரைமணி நேரத்தில் அவன் முன் அமர்ந்தவர், “நல்ல விஷயங்களா தம்பி. பொண்ணு கிடைச்சிட்டாளா? எப்படியிருக்கா? எங்கேயிருக்கா? இப்ப பார்க்கலாமா?” என்று கேள்வியாய் அடுக்கியவரை கேள்வியாய் பார்த்தான் சரத்.

ஒரு பெற்றவரின் பரிதவிப்பை அவருள் கண்டவனுள் கோபம் வந்தாலும், ‘ஏன் விடணும்? ஏன் வாடணும்?’ என்று நினைத்தான்.

“என்ன தம்பி.. இத்தனை வருஷம் வராத பாசம் இப்ப என்னன்னு பார்க்குறீங்களா? எல்லாம் ரெத்தபாசம் தான் தம்பி. வேற என்ன சொல்றது தெரியல. சொல்லுங்க தம்பி” என்றார் ஆவலாய்.

“உங்க பொண்ணு கிடைச்சிட்டா சார். சாரி எந்த கேஸ்கும் இவ்ளோ லேட் பண்ணியதில்லை. உங்களுக்கு முன்னாடி வந்ததை முடிச்சிட்டு, அக்கா வீட்டு கல்யாணத்துக்கு போனதால கொஞ்சம் பிஸி” என்றான் அதிக நாளானதற்காக.

“பரவாயில்லபா. என் பொண்ணைப் பார்க்கலாமா?”

‘கெட்டது குடி’ என மனதில் நினைத்து, “முடியாது சார்” என மறுக்கவும், புரியாமல் பார்த்தவரிடம்... “ராசி அப்பான்ற வார்த்தையையே வெறுக்கிறா. தன்னோட அப்பா செத்துட்டதா சொல்றா. நீங்க போனா அவளோட பிஹேவியர்ஸ் எப்படியிருக்கும்னு சொல்ல முடியாது. அவளுக்கு டென்சன் தர்ற மாதிரி எதையும் நான் செய்யவும் மாட்டேன். செய்யவிடவும் மாட்டேன்” என்றான் அழுத்தமாய்.

அவன் பதிலில் குழம்பியவர், “எனக்கு புரியலைபா. நீங்க யாரைப்பற்றி பேசுறீங்க? நான் என் பொண்ணைக் கேட்டா, ராசின்னு சொல்றீங்க?”

“ஓ... சாரி சார். உங்க பொண்ணுதான் ராசி. அதாவது ராசாத்தி.”

அதில் அதிர்ந்தவர் “என் பொண்ணு நான் செத்துட்டேன்னு சொன்னாளா? அவளே சொன்னாளா?” என்றவர், “ஹ்ம்.. பெத்ததோட கடமையை முடிச்சவனாச்சே நான். வேற எப்படி சொல்வா. அப்ப என்னை ஏத்துக்க மாட்டாளா தம்பி? என் பாவத்தை இந்த பாவியை மன்னிக்கவே மாட்டாளா? அவ்வளவுதானா... நான் செத்துட்டேனா” கண்கள் கலங்க கண்ணீர் வந்தது அவருக்கு. “அவ்வளவுதானா தம்பி” என்றார் ஏக்கம், பரிதவிப்பு, பயம் அனைத்தும் சேர.

அவரின் இந்த நேரத்து அழுகையில் மனம் இளகினாலும், அவனாலுமே அவரை மன்னிக்க முடியவில்லை எனும்போது ராசியால் எப்படி முடியும். அவரிடமே “அவளுக்கு நடந்ததை வச்சிப் பார்த்தா உங்களை ஏத்துக்க சான்ஸ் கம்மிதான் சார்.”

“என்ன தம்பி சொல்றீங்க? எனக்கு புரியுற மாதிரி சொல்லுங்களேன்?”

“கண்டிப்பா சார்” என்றவன் அவள் வாழ்க்கையில் தனக்குத் தெரிந்தது அனைத்தையும் சொன்னவன், பின் நிறுத்தி “அவ ஹஸ்பண்ட் இப்ப உயிரோட இல்ல சார். எப்படி எப்ப இறந்தார் தெரியாது” என்றவனுக்குள் அதையும் சீக்கிரமே கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது.

“இவ்வளவு கஷ்டத்துக்கு நடுவுல வளர்ந்த பொண்ணோட மனநிலை எப்படியிருக்கும்னு யோசிங்க. பிறந்த வீட்டு சொந்தம் இல்லாத யாரோ ஒருத்தர் அவளை பாதுகாத்து படிக்கவச்சி, தன் சொத்துக்கு சொந்தக்காரியா இருக்கிற முழு உரிமையையும் கொடுத்திருக்காங்க. இதுல எங்கேயும் நீங்க இல்ல. பொறுப்பைத் தட்டிக் கழிச்சிட்டு இன்னொரு பொண்ணு பின்னாடி போனவர், பெத்த பொண்ணை ஒரு நிமிஷம் நினைச்சிருந்தா இவ்வளவு கஷ்டம் அவள் வாழ்க்கையில் வந்திருக்காது” என்றான். மனதினுள், ‘நடக்காமல் போயிருந்தா தனக்குக் கிடைத்திருப்பாளா தெரியாது, ஆனாலும் கஷ்டப்படாமல் இருந்திருப்பாளே’ என்றும் நினைத்தான்.

“அவளோட வாழ்க்கையில உங்களைப் பற்றிய ஒரு சின்ன நினைவுகூட இல்ல. ரெண்டாவது கல்யாணம் தப்பு சொல்லல. அவங்ககிட்ட உண்மையைச் சொல்லி ராசியை ஏத்துக்கிறவங்களா பார்த்து கல்யாணம் பண்ணியிருக்கலாம். அப்பா அம்மா ரெண்டு பேரோட அன்பும் அவளுக்கு சேர்ந்தே கிடைச்சிருக்கும்” என்றான் சற்று காரமாகவே.

“தப்பு பண்ணிட்டேன் தம்பி. பெரிய தப்பு பண்ணிட்டேன். என்னோட சுயநலத்துக்காக என் பொண்ணை கஷ்டப்பட விட்டுட்டேனே.அவள் போன குடும்பம் நல்லவங்களா இல்லாமல் போயிருந்தா என் பொண்ணோட நிலை” என்று புலம்பினார்.

அதே எண்ணம்தான் சரத்திற்கும். ‘இவர்கள் நல்லவர்களாக இல்லாமல் போயிருந்தால் என் ராசியின் நிலை?’ அவனால் கற்பனைகூட செய்ய முடியவில்லை அதை. அந்த கோபத்தை அவரிடம் காட்ட நிமிர்ந்தவன், அவரின் புலம்பலில் அமைதியானான். ஏற்கனவே பாதி செத்தவரை திரும்பவும் கொல்ல வேண்டாமென்று.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top