• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
2

IMG-20241104-WA0002.jpg


“ஐஸ்வர்யா! பூ பழம் புடவை எடுத்து வச்சாச்சா? கரன் எங்க? கிளம்புற நேரத்துல எங்க போய்த் தொலைஞ்சான்?” ஆனந்தி மருமகளிடம் கத்திக் கொண்டிருந்தார்.

தங்கள் அறையை விட்டு வெளியில் வந்த ஐஸ்வர்யா, ‘இவங்க வாயில நல்ல வார்த்தையே வராது. பெத்த பிள்ளையை தொலைஞ்சான் கிலைஞ்சான்னு சொல்லிட்டு’ என மனதினுள் மறுகி, “இதோ வந்துட்டேன் அத்தை. புடவைக்கு மேட்சிங் ஜாக்கெட் எங்க ரூம்ல இருந்தது. அதை எடுக்கதான் வந்தேன். உங்க பையனை வெத்தலை பாக்கு வாங்க நீங்கதான் அத்தை அனுப்பி வச்சீங்க” என்றாள் தவறுகள் அவர் மீதே என்பதாய்.

அவசரத்தில் அதைக் கவனியாதவர், “சின்னவனை எங்க? வசீ.. வசீ கிளம்பிட்டியா?” என்று கத்தி அழைக்க,

“அம்மா! இதோ இங்கதான் இருக்கேன். ஏன் கத்துறீங்க?”

“இல்லடா நேரமாகிட்டு இருக்கு. அப்புறம் முகூர்த்த நேரம் முடிஞ்சிருச்சின்னா என்ன செய்யுறது? இன்னும் நாம வீட்டுலயிருந்தே கிளம்பலை. ஒரே பொண்ணுக்கு இவ்வளவு சிம்ப்ளா நிச்சயம் பண்ண ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம். நீ என்னடான்னா.. சீக்கிரம் வா” என்றார்.

“ஏன்மா க்ராண்டாவே செய்யலாமே? ஏன் இந்த அவசரம்?” என்றான் கேள்வியாக.

“சும்மாவே நம்ம சொந்தக்காரங்க பொறாமையில காய்ஞ்சி போயி கிடக்குறாங்க. இதுல பெரிசா எடுத்து செய்தா சொல்லவே வேண்டாம். இப்படியே பேசிட்டிருக்காம கிளம்புற வழியைப் பாரு” என்று உயர்த்திய குரலை இறக்காது பேசினார்.

“சர்ரி” என்று வார்த்தையை அழுத்தித் தன் குழப்பங்களை ஒதுக்கி வைத்தவன் ஐஸ்வர்யாவிடம் சென்று, “அண்ணி எதாவது ஹெல்ப் வேணுமா?” என கேட்க,

அவனின் முகம் பார்க்காது, “இல்ல.. முடிஞ்சிது. இனி தேவைப்படாது” என்று பட்டும்படாமல் சொல்லி கையில் எதையோ எடுத்தபடி நகர்ந்துவிட்டாள்.

வசீகரனுக்கு ஒன்றும் புரியவில்லை. பெண் பார்க்கச் சம்மதித்துச் சென்று வந்ததிலிருந்து அண்ணியவளின் நடவடிக்கை அவனுக்கே புதிர்தான். உரிமையாய் பேசும் பேச்சுகள் கிடையாது. மூன்றாம் மனிதரிடம் என்ன என்றால் என்னவென்று பேசுவது போலொரு விலகல் அவளிடம்.

அதோடு சமீபமாக இன்னொன்றையும் உணர்ந்திருந்தான். தன் தந்தை வீட்டினுள் நுழைந்ததும் அவ்விடத்தில் அண்ணியவள் இல்லாதிருப்பது. இல்லையெனில் தன் அண்ணனே மனைவி மகனுடன் அறைக்குள் அடைந்து கொள்வது. தன் வீட்டில் என்ன நடக்கிறதென்று தனக்கேப் புரியாத சூழல் வசீகரனுக்கு.

காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்த வசீகரன் அண்ணனை தன்னருகில் அமரச்சொல்ல, அவனோ தந்தையை அமரச்சொல்லி, “அப்பா, அம்மா, அண்ணி மூணுபேரும் நடு சீட்டுல உட்காரட்டும்ணா. பையன் நம்மளோட இருக்கட்டும்” என்றதும் தம்பியின் வார்த்தையை மீற முடியாது மனைவியைப் பார்க்க அவளோ காரிலிருந்து இறங்கி பையனையும் தன்னுடன் இறங்க வைத்து பின் சீட்டிற்குச் சென்று அமர்ந்துவிட்டாள்.

வசீகரனோ ஐஸ்வர்யாவின் செயலில் கேள்வியாய் அண்ணனைப் பார்க்க, அவனோ வேறெங்கோ பார்த்திருந்தான்.

பெண்ணின் வீடு சற்று வசதியானதாகவே இருக்க, நகை சீர் எல்லாம் அதிகமாகவே பேசப்பட்டிருந்தது. பெண் வீட்டார் சார்பாக கொஞ்சம் உறவினர்கள் இருக்க, பையன் வீட்டு சார்பாக ஐஸ்வர்யாவின் அப்பா, அம்மா, தங்கை வந்திருந்தனர்.

“வசீ பொண்ணைப் பார்த்துக்கோ. முதல்நாள் தூரத்துல பார்த்ததால சரியா பார்த்திருக்கமாட்ட” என்ற தாயின் கட்டளைக்கு உட்பட்டு பெண்ணைப் பார்க்க, அதேநேரம் பெண் அஞ்சுகாவும் அவனைப் பார்க்க, சட்டென தலையைக் குனிந்து கொண்டான்.

தம்பியினருகில் குனிந்த சுவீகரன், “என்னடா பொண்ணுங்க செய்யுறதை நீ செய்யுற? தலையை நிமிர்ந்து பாரு” என்றான்.

“சும்மாயிரு கரன். எனக்கு இங்க இருக்குறதே அன்ஈஸி ஃபீல் கொடுக்குது.”

“அன்ஈஸி ஃபீலா? டேய் உனக்கு இப்ப நிச்சயதார்த்தம். வசீ எதாவது பிரச்சனையா? உடம்புக்கு ஒண்ணுமில்லைதான?” என்றான் அக்கறையாய்.

“இல்லைண்ணா. ஆனா, கல்யாணம் செஞ்சுக்கப் பிடிக்கலை. இந்தப் பொண்ணை சுத்தமா பிடிக்கலைண்ணா. முடிஞ்சா இதை நிறுத்திரு.” பட்டென்று சொல்லிவிட, அண்ணனவனோ திகைத்து, “வசீ என்ன பேசுற? நீ பிடிச்சிருக்குன்னு சொன்னதாலதான் இவ்வளவு தூரம் வந்திருக்கோம். இப்ப இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்? அதுவும் நிச்சயம் பண்ணப்போற நேரத்தில்” என்றான் காதோரம் கடிந்தபடி.

“ஏதோ ஒரு நினைப்புல சொன்னேன்தான். ஆனா, ஏதோ ஒண்ணு உள்ளுக்குள்ள பண்ணதுண்ணா. மனசெல்லாம் சொல்ல முடியாதொரு அவஸ்தை. அது ஏன்னு புரியலை. இங்க இருக்குறதே முள்மேல உட்கார்ந்திருக்கிற மாதிரியிருக்கு. எதுவும் வேண்டாம்னு கிளம்பிரலாமா?”

“வசீ! புரிஞ்சிதான் பேசிட்டிருக்கியா? இங்க வர்றதுக்கு முன்ன சொல்லியிருந்தா வேற. இங்க வந்து உட்கார்ந்துட்டு, ப்ச்.. தப்புடா” என்றான் தம்பியின் கடைசி நேர மனமாற்றம் பிடிக்காது. முன்னரே என்றால் தானே தடுத்திருப்பான். அவனுக்குமே இதில் இஷ்டம் கிடையாது.

“எனக்கென்னவோ இந்த நிச்சயதார்த்தம்தான் தப்புன்னு தோணுது” எனவும் பக்கென்று மனதினுள் அதிர்வு எழ மனைவியைப் பார்க்க, அவளோ கணவனை முறைத்திருக்க, என்ன சொல்வதென்று புரியா நிலை சுவீகரனுக்கு. தம்பியின் தவிப்பு அவனின் உள்ளுணர்வால் என்பதை ஓரளவு யூகித்துவிட்டான்.

அதற்குள் பெரியவர்கள் பேச்சுவார்த்தை முடித்து, வெற்றிலை பாக்கு மாற்றி, சில சம்பிரதாயங்களுடன் நிச்சயம் முடிந்திருந்தது.

“பொண்ணு பையன் தனியா பேசிக்கட்டும்” என்று பெண் வீட்டினர் எடுத்துக் கொடுக்க,

‘ரொம்ப முக்கியம். நிச்சயத்துக்கு முன்ன பேசினாலாவது சரி தப்புன்னு கருத்துப் பகிரலாம். எல்லாத்தையும் முடிச்சிட்டு பேசச் சொல்றாங்க. என்ன ப்ளான்டா சாமி’ என்றவனுக்குள் ஏதோ தோன்ற, ‘ப்ளானாதான் இருக்குமோ?’ என்ற சந்தேகம் எழுந்தது. ‘ப்ளான்னா.. யாரோடது?’ என்ற கேள்வி மனதினுள்.

வேறு வழியில்லாமல் பேசச் சென்று பத்து நிமிடங்களுக்கெல்லாம் திரும்பிய தம்பியிடம், “இப்ப உன் எண்ணம் மாறிருச்சிதான? சம்மதமா?” என்றான் சுவீகரன்.

சகோதரனின் ஆர்வத்தைக் கண்டு மெல்ல புன்னகைத்து, “நல்ல மாதிரிதான் தெரியுறாங்க. பொய் சொல்றது, ஏமாத்துறது பிடிக்காதாம். இருந்தாலும் ஏதோ...” என்றவன் பார்வை வாசல் தாண்டிச் செல்ல, அங்கு சைக்கிளை உருட்டிச் சென்ற பூரணியோ அவனை எரித்தாற்போல் பார்த்துச் சென்றாள். அப்பார்வையில்தான் எவ்வளவு உஷ்ணம்.

‘ஏன் இந்தப் பொண்ணு இப்படி முறைச்சிட்டுப் போறா. எனக்கும் அவளுக்கும் எதாவது பிரச்சனை இருந்ததா என்ன? யார்னே தெரியலை. அப்புறம் எப்படி?’ மனதிற்குள் அவளின் முறைப்பே வந்து நின்றது வசீகரனுக்கு.

“வசீ சாப்பிடக் கூப்பிடுறாங்க” என்றதும் அண்ணனுடன் எழுந்து நடந்தவனுக்கு யோசனை முழுவதும் வெளியில் பார்த்த பெண்ணே!

“டேய் அண்ணா! முன்னப்பின்ன பார்த்திராத ஒரு பொண்ணு நம்மளைப் பார்த்து முறைச்சா என்ன அர்த்தம்?”

“ம்.. முறைச்ச பொண்ணுன்னு அர்த்தம்” என்றான் நக்கலாக.

“உன்கிட்டப் போயி கேட்டேன் பாரு” என்று முனக,

“உடனே கோபப்படாதடா. சரி திடீர்னு எதுக்கு அப்படிக் கேட்ட?”

“கேட்டதுக்குப் பதில் சொல்லு கரன்” என்றான் அடமாக.

“ஒண்ணு உரிமைப்பட்டவங்களா இருக்கணும். இல்லன்னா எதிரியா இருக்கணும். அதுவும் இல்லைன்னா நம்மளால அவங்களோ, இல்லை அவங்களைச் சார்ந்தவங்களோ பாதிக்கப்பட்டிருக்கணும். அதனால வந்த கோபத்தை முறைப்பா கொடுக்கலாம்”

“அப்படின்னா?”

“நம்பிக்கைத் துரோகம்டா.”

“ஓ...” என்றவனுக்குள், ‘அந்தப் பெண் ஏன் அப்படிப் பார்த்தாள்? எங்களுக்குள் என்ன சம்பந்தம்? பார்வைக்கான அர்த்தம் உரிமையாகவா? இல்லை எதிரியாக பாவித்தா? இல்லை துரோகமா? துரோகம்னா, யார்.. யாருக்கு? டேய் வசீ! வேண்டாத நினைவு எதுக்கு. சும்மா தற்செயலா நடந்ததை வச்சி ஏதேதோ கற்பனை பண்ணுறன்னு தோணுது’ என தனக்குத்தானே பேசிச் சென்றான்.

இரவு வீடு வந்து வேலை அனைத்தும் முடித்துப் படுத்த பொழுது பூரணியின் நினைவுகள் யாவும் மாலை நடந்ததே ஓடியது.

தற்செயலாகதான் பார்த்தாள் அவர்களை. என்றும் அந்நேரம் வீடு வராதவள் மெடிக்கலுக்குத் தேவையான சில மருந்துகள் ஆர்டர் கொடுத்திருக்க, அதைக் கொண்டு வருவதாக முன்னரே அறிவிக்கவும், கையிருப்பு கம்மியாக இருந்ததால் பணம் எடுக்க வீடு வந்திருந்தாள்.

வசீகரனுக்குப் பார்த்திருந்த பெண் அஞ்சுகா பூரணியின் பக்கத்து வீடு. சில மாதங்கள் முன்தான் இங்கு வீடு கட்டி குடி வந்திருந்தார்கள். ஆதலால் அவர்கள் அதிகம் பழக்கமில்லை. நேருக்கு நேர் பார்த்தால் சின்னதான புன்னகை மட்டுமே!

இன்றும் வரும்பொழுது அவ்வீட்டின் முன் கார் நிற்க, தற்செயலாகத்தான் அவ்வீட்டு ஜன்னலைப் பார்த்தாள். அப்பெண் வசீகரனுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிய, அவளின் அலங்காரமும் அவள் ஏதோ பேச அமைதியாக நின்றிருந்த அவனின் தோற்றமும் அங்க நடப்பதைச் சொல்லியது. அளவிற்கதிகமான கோபம் அவளுள் எழ, பக்கத்து வீடு நுழைந்து அனைவரையும் அடித்துத் துவைக்கும் கோபம் வரத்தான் செய்தது.

பணம் படைத்தவனிடம் மோதுவதும், நம் கண்ணை நாமே குத்திக்கொள்வதும் ஒன்றாயிற்றே! எளியவன் சொல் அம்பலம் ஏறாதல்லவா!

‘அவனுக்கு எப்படி கல்யாணம் சாத்தியம்? ஒரு பெண்ணின் வாழ்க்கை அவ்வளவு ஈஸியாகப் போய்விட்டதாமா? அதுவும் அக்குடும்பத்தில் இன்னொரு பெண்ணா? இல்லை கண்முன் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைச் சீரழிய விடமாட்டேன். ரொம்பத் தப்பு செய்றீங்க வசீகரன்? ரொம்பவே தப்பு இது’ என மனதிற்குள் புலம்பினாலும், அடுத்து என்ன செய்யலாமென்ற யோசனை மட்டுமே அவளிடம்.

பணம் எடுத்துவிட்டு கடைக்குச் செல்ல மெல்ல சைக்கிளை உருட்டும் பொழுது அவர்கள் வீட்டைப்பார்க்க அவனும் தற்செயலாக வெளியே பார்க்க, ‘உனக்குப் பொண்ணு கேட்குதா?’ என தன்னால் முடிந்தமட்டும் பார்வையால் எரித்துவிட்டே சென்றிருந்தாள்.

“ஐஸ் என்ன பண்ணுற? ஏய்! சொன்னா கேளு. வேண்டாம்டா.” பேக்கில் துணியை அடுக்கிக் கொண்டிருந்தவளை கெஞ்சிக் கொண்டிருந்தான் சுவீகரன்.

“என்னை விடுங்க. இங்க நடக்கிறதைப் பார்த்துட்டு என்னால சும்மாயிருக்க முடியாது. என்ன நினைச்சிட்டிருக்காங்க உங்க அப்பாவும் அம்மாவும்? என்னால இதைச் சகிச்சுக்கவே முடியலை” என்று கத்தினாள்.

“ஏய்! ஏன்டி கத்துற? பையன் முழிச்சிரப்போறான்.”

“முழிக்கட்டுமே கூடக்கூட்டிட்டுப் போறேன். இங்கயிருந்தா அவன் எப்படி வளருவானோன்னு பயப்படாம இருக்கலாம்ல.”

“ஏன்மா நான் நல்லவன் இல்லையா?” என்றான் வருத்தமான குரலில்.

“அந்த ஒரே காரணத்துக்காகதான் நடக்குற எல்லாத்தையும் பொறுத்துப் போயிட்டு இருக்கேன். ஆனா, உங்க குடும்பம்னு வர்றப்ப அவங்க பண்ற தப்புக்கு நீங்களும் துணை நிற்கிறீங்க பார்த்தீங்களா? அதோட எங்க வீட்டுல உள்ளவங்களையும் உள்ள இழுக்குறீங்க. அவங்களும் வேற வழியில்லாம வந்து நிற்கிறாங்க. இதெல்லாம் எனக்கு சுத்தமாப் பிடிக்கலை” என்றாள் கோபம் குறையாது.

“ஐஸ்... அம்மாவுக்காக”

“ப்ச்.. பேசாதீங்க. உங்களோட சேர்ந்து உங்களுக்காகன்னு நானும் எத்தனைத் தப்...” அழுகை வர வார்த்தைகள் தடைபட்டது.


“எல்லாம் சரியாகும்டா” என்று சமாதானப்படுத்தும் பொருட்டு அவளைக் கட்டியணைத்தான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
அடுத்த வினாடி அவனை உதறியவள், “என்ன சரியாகும்? இல்ல எப்படி சரியாகும்றேன்? தனக்கு என்ன நடந்தது, நடக்குதுன்னே தெரியாத ஒருத்தன். அதைப் பயன்படுத்தி பாவத்துக்கு மேல் பாவம் செய்யும் அப்பா அம்மா. எனக்கு இங்க இருக்க இருக்க உடலெல்லாம் பதறுதுங்க. இவங்க செய்யுறது என் பிள்ளைக்கு வந்திரக்கூடாதுன்ற பயம் வருது. உங்களுக்குக் கட்டுப்பட்டுதான் இங்க இருந்தேன். இனிமேல் என்னால முடியாதுங்க” என்றாள்.

“தம்பி கல்யாணம் வரை இருந்துட்டு தனியா போய்க்கலாம் ஐஸ். நான் சொல்றதைக் கேளுமா” என்றான் கெஞ்சலாக.

“அவருக்கு இப்ப கல்யாணம் ஒரு கேடா” என்றாள் கோபத்தில்.

“ஐஸ்வர்யா” என்று அதட்டலிட,

“நான் சொன்னதில் என்ன தப்பிருக்கு? அவருக்கு இந்தக் கல்யாணம் தேவையா?” என்றாள் கோவம் குறையாது.

“ஏய்!” என்று கோவத்தில் கை ஓங்கி, பின் கையை இறக்கி மனைவியை முறைத்தான்.

“அண்ணா! டேய் கரன் கதவைத் திற” என்றதில் கோவம் அடக்கி கதவைத் திறந்து ஓங்கிய குரலில், “என்னடா?” என்றான்.

அண்ணனின் முகத்தில் இருந்த ரௌத்திரம் கண்டு, “எதாவது பிரச்சனையா? சத்தம் வெளியில கேட்குது” என கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்லடா. நீ போ” என, தயங்கி நின்ற தம்பியிடம் “நான் பார்த்துக்குறேன் போடா” என்றான்.

சம்மதமாய்த் தலையசைத்துத் திரும்பியவன் கண்களில், கண்ணீரைத் துடைக்கக்கூட மறந்து அழுதபடி நின்றிருந்த ஐஸ்வர்யா பட்டாள். அந்நிலையிலும் அவள் தன்னை முறைப்பதை உணர முடிந்தது வசீகரனுக்கு. ‘ஏன்?’ என்று மூளையைக் குடையும் கேள்விக்கு நடுவில், 'அவர்களின் சண்டைக்குத் தான்தான் காரணமோ' என்ற எண்ணமும் எழாமலில்லை. 'ஆனால் ஏன்? இந்த வீட்டில் என்ன நடக்கிறது?’ மீண்டும் மீண்டுமான குழப்பத்தில் தலை பாரமாகியது மட்டுமே மிச்சம்.

இரண்டு வாரம் கழித்துத் திருமணம் என்றிருக்க, பூரணியோ பக்கத்து வீட்டுப் பெண்ணைத் தனியாகப் பார்த்து, வசீகரனையும் அவன் குடும்பத்தினரையும் பற்றிச் சொல்லப் பார்க்க, ஏனோ அப்பெண் கண்ணில் படவேயில்லை.

திருமணத்திற்கு பத்து நாட்களே இருக்கும் பொழுது, அஞ்சுகா வீட்டைத் தாண்டுகையில், மாலையில் அருகில் இருக்கும் கோவில் செல்வதாகச் சொன்னது பூரணியின் காதினில் விழ, கேட்டபடி மெடிக்கல் வந்தவள் யோசனையுடனே இருக்க, “என்ன யோசனை பூரணி?” என கேட்டாள் சண்முகி.

“ஒரு பொண்ணு வாழ்க்கை கண் முன்னாடி சீரழியுதுன்னு தெரியுது. அதை எப்படித் தடுக்கன்னு தெரியலை. தடுக்கவா? இல்ல வேண்டாமான்னு யோசனையா இருக்கு சண்மு.”

“ஓ.. என்ன பிரச்சனை?” என்றதும் அத்திருமணத்தில் உள்ள பிரச்சனையின் சாராம்சத்தை மேலோட்டமாக பூரணி சொன்னாள்.

“உன் ப்ரண்டைக் கூட்டிட்டு வந்து சொன்னால்தான் நம்புவாங்க பூரணி. இல்லைன்னா நாம ஏதோ விரோதத்துல பழிவாங்கச் செய்றதா நினைப்பாங்க. இதுதான் யதார்த்தம்” என்றாள்.

“சொல்லிப் பார்க்கலாமே சண்மு. கேட்டா கேட்கட்டும் இல்லைன்னா அவங்க தலையெழுத்துப்படி நடக்கட்டும்.”

“கண்டிப்பா சொல்லியே ஆகணுமா? அதனால பிரச்சனைன்னு எதாவது வந்துட்டா?”

“கண்ணுக்குத் தெரிந்தே ஒரு பொண்ணோட வாழ்க்கைப் பாழாகுறதைப் பார்க்க முடியலைடி. சாட்சியா என் ப்ரண்டைக் கூட்டிட்டு வர்றதெல்லாம் சாத்தியப்படாது. முடிந்தளவு பேசிப் பார்க்குறேன்.”

“ரொம்பத் தீவிரமா இருக்க பூரணி. பிரச்சனை இல்லாம பார்த்துப் பக்கவமா பேசு. நம்பலைன்னு சொன்னா கம்பல் பண்ணாம வந்திரு. திரும்பத்திரும்ப சொன்னா தப்பு நம்ம மேலன்னு ஆகிரும்” என்றாள் அக்கறையாக.

“ம்.. ஈவ்னிங் பார்த்து பேசிட்டு வந்திருறேன். நான் வந்ததும் நீ வீட்டுக்குக் கிளம்பு. இல்ல வினோத் வந்துட்டாலும் கிளம்பிரு” என்றாள்.

மாலை ஆறு மணிக்கெல்லாம் அம்மன் கோவில் வந்தாள் அவள். கோவிலில் பூஜை நடந்துகொண்டிருக்க, சாமி தரிசித்து பிரகாரம் சுற்றி சன்னிதானம் முன் வந்து இரண்டு நிமிடங்கள் அம்மனையே விழியெடுக்காது பார்த்து, அத்தெய்வீக முகத்தைக் கண்மூடி மனதுக்குள் நிறைத்தாள்.

எழுந்து சுற்றிலும் பார்வையிட்டு வெளியே வர, அருகில் இருந்த குளத்தின் அருகில் யாரின் துணையுமில்லாமல் தனியாக இருந்தவனைக் கண்டு சற்று பதறித்தான் போனாள்.

‘இவங்களை இப்படித் தனியா விட்டுட்டு எங்க போனாங்க?’ என்று அவன் வீட்டினர் மேல் கோவம் வந்த அதே நேரம் அவன்மேல் பாசம் எழ, படிக்கட்டில் இறங்கி அவன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு மேல் உள்ள படிக்கட்டில் அமர்ந்து அவன் தலை வருடி, “ஹேய் குட்டிக்கண்ணா! இங்க என்ன பண்றீங்க?” என்றதில் சட்டென்று திரும்பி யாரென்று பார்த்தவன் கண்கள் திகைத்து விழித்து ஆச்சர்யமாய் அவளைக் கண்டது.

அவனின் செய்கை தான் திடீரென்று தொட்டதினால் வந்த பயம் என்றெண்ணியவள், “பயந்துட்டீங்களா? என் குட்டிக்கண்ணனுக்கு என்ன பயம்? அதுவும் என்னைக் கண்டு. ம்ம்..” என புருவம் உயர்த்தி இரு கைகளால் அவன் முகம் பிடித்து நெற்றியில் முத்தமிட்டு, “எப்படியிருக்கீங்க வசீகரா? நான்தான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்” என்றாள், அவனைத் தனியாகப் பார்த்ததில் வந்த புன்னகையுடன் சேர்ந்த வருத்தத்துடன்.

அவளின் நெற்றி முத்தத்தில் அன்னையின் அன்பை உணர முடிந்தது வசீகரனால். ‘முன்பின் தெரியாத தனக்கு முத்தம் எப்படி? அதுவும் இவ்வளவு உரிமையுடன்?’ குழப்ப முடிச்சுகளின் எண்ணிக்கை அதிகரித்தது அவனுள்.

“உங்களை இங்க அதுவும் தனியா பார்ப்பேன்னு நினைக்கவேயில்ல குட்டிக்கண்ணா. இவ்வளவு தள்ளி இருக்கிற கோவில்ல என்ன வேண்டுதலுக்காக வந்தீங்க? ஓ... பொண்ணு பார்த்திருக்கீங்கள்ல. அன்னைக்கும் அதுக்குத்தான் வந்தீங்களா? இது தப்பில்லையா வசீகரா? உங்களால இன்னொரு பொண்ணு வாழ்க்கையும் கேள்விக்குறியாகலாமா? ப்ச்.. உங்ககிட்டப் போய் சொல்றேன் பாருங்க. உங்க வீட்டுல உள்ளவங்க பண்ற தப்பு உங்களுக்கு எப்படிப் புரியும்? புரியுற நிலைமையில் நீங்க இருந்திருந்தா, எதுவுமே தவறா நடந்திருக்காதே” என்று பேச்சு சுவாரசியத்தில் அவன் தலைகலைத்து விளையாடினாள்.

சில நிமிடங்கள் கழித்தே அதை உணர்ந்தவள், "அச்சோ! பழக்கதோஷத்துல தலையைக் கலைச்சுட்டேன் வசீகரா. இருங்க” என்று அவன் முகத்தை நேராகப் பிடித்து, தன் விரல் கொண்டு ஒழுங்குபடுத்தினாள் அவள்.

‘பழக்கதோஷமா?’ பேசா மடந்தையாகிப் போனான் வசீகரன். பேசவும் வார்த்தைகள் வரவில்லை. அவளின் அண்மை, அந்த ஸ்பரிசம், மென்மையான வார்த்தைகள், அப்புன்னகை முகம் அவனுள் எதோ செய்தது. ஜென்ம பந்தமாய் ஒரு உறவு அவர்களுக்குள் இருப்பதை உணர்ந்தான். பார்வை முழுக்க அவளிடம் மட்டுமே!

“என்ன பார்வையிது? உங்ககிட்ட ஏதோ ஒரு வித்தியாசம் வந்திருக்கு வசீகரா. என்னன்னு பார்க்குறீங்களா? முன்னல்லாம் உங்க கண்ணு அங்கயிங்க அலைபாயும். எப்பவும் செல்போன்ல விளையாடிட்டே இருப்பீங்க. அம்மா தவிர மத்தவங்க கண்ணுக்கேத் தெரியமாட்டோம். சரியான அம்மா பிள்ளை நீங்க. இப்ப என்னடான்னா இவ்வளவு சமத்தா, அதுவும் தனியா உட்கார்ந்திருக்கீங்க. அம்மா இல்லாமல் தனியா உட்கார்றது உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத ஒண்ணாச்சே” என்றாள் புன்னகையுடன்.

அவள் பேசப்பேச,மொழி தெரியா ஊரில் விழித்துக் கொண்டிருக்கும் குழந்தைபோல் அவளைப் பார்த்திருந்தான் வசீகரன். பெரிய அழகியல்ல அவள்! இந்நேரம் அவன் கண்களுக்கு அவள் அழகியாய்த் தெரிந்தாள். என்றுமே அவனுக்கு அவள் அழகிதானோ!

“அதைவிடுங்க உங்களைத் தனியா விடமாட்டாங்களே. இங்க எப்படி வந்தீங்க?” என்று சுற்றிலும் பார்க்க, அவனோ அவளை மட்டும்தான் பார்த்திருந்தான்.

‘யாரிவள்? எதற்காக என்னிடம் இத்தனை கரிசனம் காட்டுகிறாள்? இதே கோவிலில் முதல்முறை அன்று பெண் பார்க்க வந்தபொழுது, இவள்தான் பெண்ணென்று மாற்றிக் காண்பிக்கையில், நான் பார்த்தபொழுது பாராதிருந்தவள், இன்றோ அன்பை அள்ளி அள்ளிக் கொட்டுகிறாள். ஒருவேளை பார்த்திருப்பாளோ? இப்படி உருகுபவள் அன்று ஏன் அருகே வரவில்லை?’ என நினைத்தவன் தன் வாழ்க்கையில் தனக்கேத் தெரியாமல் ஏதோ ஒரு மர்மம் இருப்பதை, இந்நிமிடம் முழுதாக உணர்ந்தான் வசீகரன்.

“உங்க அண்ணனோட வந்தீங்களா?” என்றவள் சற்று தூரமாய் வந்து கொண்டிருந்த சுவீகரனை வெறித்தாற்போல் பார்த்து, வசீகரன் புறம் திரும்பியதும் பார்வையில் குளிர்ச்சி ஏற, “உங்கண்ணா பார்க்கிறதுக்குள்ள நான் கிளம்புறேன். என்னைப் பார்த்ததா சொல்லாதீங்க. அப்புறம் உங்களைத்தான் திட்டுவாங்க” என்றாள்.

‘திட்டுவாங்களா? என்னையா? யார்? ஏன்?’ அவனுக்குள்ளே மீண்டும் மீண்டுமான கேள்விகள்.

“நான் கிளம்புறேன் வசீகரா. உங்களுக்குப் புரியுமா தெரியலை.. இந்தக் கல்யாணத்தை நிறுத்துங்க. ஒரு பொண்ணோட வாழ்க்கை இது. ஒருத்தி ஏமாந்ததே போதும். இன்னொருத்தியையும் கல்யாணம்ன்ற பெயர்ல ஏமாத்திராதீங்க. உங்க வீட்டாளுங்க உங்களை அறியாமலே தப்புப் பண்ண வைக்குறாங்க. முடிந்தளவு கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு பிடிவாதம் பிடிங்க. அதுதான் எல்லாருக்கும் நல்லது. நான் வர்றேன்” என்று அவன் முகம் வருடியபடி அவனைப் பிரிய மனமில்லாமல் எழுந்து சென்றாள்.

அதற்குள் சுவீகரனிடமிருந்து போன் வர, எடுத்துப் பேசி தான் இருக்குமிடத்திற்கு வரச்சொல்லி அவன் வந்ததும், “இங்க எப்படிண்ணா வந்த?” என கேட்டான்.

“அப்பாதான்டா வரச்சொன்னாங்க. பக்கத்துல உள்ள ஸ்டீல் கம்பெனிக்குப் போய் கொட்டேஷன் கொடுத்துட்டு வந்திருக்கோம். நீ இங்க வரப்போறதா சொல்லிட்டிருந்தியா, அதான் அப்பாவை அனுப்பிட்டு உன்னோடவே வீட்டுக்குப் போயிரலாம்னு வந்தேன். சரி அந்தப் பொண்ணைப் பார்த்துப் பேசுனியா?”

“இல்லண்ணா. வர்றேன்னு சொன்ன பொண்ணைக் காணோம். ஒரு மணிநேரம் மேல காத்திருக்கேன். இன்னும் வரலை. திடீர் வேலை எதுவும் வந்திருச்சோ என்னவோ!”


“என்னவா இருந்தாலும் ஒரு போன் பண்ணி காத்திருக்க வேண்டாம்னு சொல்லியிருக்கலாம்டா” எனும்போது வசீகரன் கைபேசியில் மெசேஜ் வர எடுத்துப் பார்த்தவன், அஞ்சுகாவிடமிருந்து வந்தது தெரிய திறந்து படித்துப் பார்த்து, “திடீர்னு கோவிலுக்கு வரமுடியாத சூழலாம்ணா. நாம வீட்டுக்குப் போகலாம்” என்றதும் இருவரும் கிளம்பினார்கள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top