- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
2
‘நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்றதும் அதிர்ந்தவனின் கண் நோக்கி, ‘எதுக்கு இவ்வளவு எக்ஸ்ப்ரஷன் தர்றான்?’ என நினைத்தவள் திரும்பவும், “நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். இப்ப புரியுதா? இதுக்கு ஏன் இவ்வளவு எக்ஸ்ப்ரஷன் கொடுக்குறீங்க?” என்றாள் அவள் சொன்னதில் உள்ள வாக்கியப்பிழை புரியாது.
‘அடிப்பாவி! என்னை நீ கல்யாணம் பண்ணிக்கப் போறியா? அப்ப நான் பண்ணப் போறதில்லையா? ரொம்பப் பெரிய மனசுதான் அவந்திகா உனக்கு’ என மறுபடியும் மனதில் நினைக்க,
அவன் நினைவை கவனிக்காமல் தொடர்ந்து, “நான் இதுவரை யாரையும் காதலிச்சதும் இல்லை. காதலிக்கிறேன்னு சொன்ன யாரையும் பின்னாடி சுத்தவிட்டதும் இல்லை. யாரையும் காதலிக்கிற ஐடியா எனக்கு இருந்ததும் இல்லை. கல்யாணம் பண்ணிக்கணும்ன்ற நினைப்பில் யார் பின்னாடியும் சுத்தினதும் இல்லை. என்னை நீங்க தாராளமா நம்பலாம்” என கௌஷிக்கைப் பார்த்துக் கொண்டே சொன்னவள், “ஹண்ட்ரர்ட் பெர்சன்ட் உங்களுக்கு நல்ல மனைவியா இருப்பேன்” என்று தன் மனம் தெளிவாக இருப்பதைக் கூறினாள்.
“அவந்தி வேண்டாம். என்னை வெறுப்பேத்துறதா நினைச்சி முன்னப்பின்ன தெரியாதவனை கட்டிக்கப் போறேன்ற. நீ வீட்டுக்குப் போ. நாம நிதானமா பேசிக்கலாம்” என்றான் கௌஷிக் தணிவாகவே.
“இங்க பார் கௌஷிக். சரியோ? தவறோ? எப்ப கல்யாணத்துக்குன்னு ஒருத்தர்கிட்ட கேட்டுட்டேனோ, அப்பவே முடிவு பண்ணிட்டு தான் கேட்டேன். உன்னை மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்ணுறதுக்கு, இவர் எவ்வளவோ பரவாயில்லைன்னு தான் தோணுது. ஸோ, இதுல நீ தலையிடாத.”
“நான் தலையிடாம, வேற யாரு தலையிடுவாங்கன்னு நினைக்கிற? உரிமைப்பட்டவன் நான்” என கோபமாக கேட்டான்.
“உரிமைப்பட்டவனா? நீயா? நீ என்னோட மாமா பையன். அது மட்டும் தான் உனக்கும் எனக்கும் உள்ள உறவு. தேவையில்லாமல் சீன் க்ரியேட் பண்ணி என்னோட பெயரைக் கெடுக்க முயற்சிக்காத? எதுவாயிருந்தாலும் என்னோட மாமா கேட்கட்டும் நான் பதில் சொல்றேன். உனக்கெல்லாம் பதில் சொல்ல என்னால் முடியாது. அதுக்கு அவசியமும் இல்ல. நீ அவ்வளவு பெரிய ஆளும் கிடையாது. முதல்ல உன் வேலையைப் பார்த்துட்டுப் போ” என்றவள் காவலாளியின் புறம் திரும்பி, “நான் ஒண்ணு கேட்டேன். நீங்க இன்னும் பதில் சொல்லல?” என்றாள்.
‘இதென்னடா வம்பா போச்சி. இவங்க சண்டையில நம்மளை கேலிக்கையாக்குறாங்களா? இல்ல நிஜமாகவே இந்தப் பொண்ணு நம்மளை கல்யாணம் பண்ணிக்கக் கேட்கிறாளா?’ என யோசித்தவன் மெல்ல தொண்டைக் குழிக்குள் எச்சை முழுங்கி, “மேடம் நீங்க சார் பேசினதுக்கு பதில் சொல்றதுக்காக, ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன். உங்க பிரச்சனையில என்னை இழுக்காதீங்க?” என்றான் நிதானமாக.
“அப்படியெல்லாம் கிடையாதுன்னு சொல்ல மாட்டேன். ஆரம்பிச்சது வேணும்னா ஒரு வேகத்துல இருக்கலாம். ஆனா, கல்யாணத்துக்காக அவசரப்பட்டு ஒருத்தர்கிட்ட ப்ரொபோஸ் பண்ற ஆள் நானில்லை. அதுக்காக அவனுக்கு பயந்துதான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நீங்க நினைச்சா அது தப்பு. இப்ப சொல்லுங்க என் கேள்விக்கென்ன பதில்?”
“மேடம்! ரொம்பப் பெரிய உங்களோட வாழ்நாள் முடிவை இவ்வளவு ஈஸியா எடுத்துட்டீங்க. ஆனா, உங்கள் ராயல் லைஃப் ஸ்டைலுக்கும், என்னோட மிடில் கிளாஸ் லைஃப்கும் என்னைக்குமே செட்டாகாது. என்னதான் கூழோ, கஞ்சியோ குடிச்சி உங்க குடிசையில வாழ்ந்துருவேன்னு, ஒரு ஆவேசத்துல சாரி அவசரத்துல சொன்னாலும், ப்ராக்டிகலா அதை நடைமுறைப்படுத்தும் போது நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என நிறுத்தியவன்,
“அடுத்து கல்யாணம்ன்றது காலம் காலமா நிலைக்க வேண்டிய பந்தம். அதை இப்படி எடுத்தோம், கவிழ்த்தோம்னு பேசுறதும் சரி கிடையாது. அதுவுமில்லாமல் நீங்க கேட்ட கேள்வியே முதல்ல தப்புன்னு தான் சொல்வேன். உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டீங்க இல்லையா? ஒரு வேளை என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு கேட்டிருந்தா யோசிச்சிருப்பேனோ என்னவோ. சாரி மிஸ்.அவந்திகா அழகப்பன்” என்று தெளிவாக தன் கருத்துக்களைச் சொல்லி அவளின் கல்யாணக் கோரிக்கையை மறுத்தான் காவலாளி.
ஒரு நிமிடம் வாயடைத்துப் போனாள் அவந்திகா. வெறும் செக்யூரிட்டி தானே என்ற நினைவிலிருந்தவள், என்ன பேசுகிறோம் என அறியும் முன்னே அவசரமாக கொட்டிய வார்த்தைகள் தான் அவனிடம் கல்யாணத்திற்குக் கேட்டது. கொட்டிய வார்த்தைகளை அள்ளவா முடியும். அவன் பேசப் பேச கொஞ்சம் கொஞ்சமாக அவனை ஆராய்ந்தாள்.
கம்பீரமான தோற்றம்! பேச்சில் தெளிவு! பார்வையில் கண்ணியம்! மாநிறத்தில் களையான முகம். பார்க்க வளர்த்தியாக, வளர்த்திக்கு ஏற்ற உடல் எடையுடன் அம்சமாக இருந்தான். தாடியில்லா முகம். அடர்த்தியான மீசை(அவனில் அதிகம் பிடித்தது). புகைபிடித்திராத ரோஜா நிற உதடுகள். இக்கால இளைஞர்களிடம் இதெல்லாம் பார்ப்பது கடினம். பார்க்க வசதியான வீட்டுப் பையன்போல இருந்தான். அவனது செக்யூரிட்டி உடை மட்டுமே மிடில் கிளாஸ் என்று காட்டியது. அவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும், அவளை அவன்புறம் அடியோடு சாய்த்தது என்பது தான் நிஜம்.
என்னதான் தொழில் ரீதியாக ஆண்களைச் சந்தித்தாலும், முதன் முறையாக ஒரு ஆணை தலைநிமிர்ந்து, அதுவும் வைத்தகண் வாங்காமல் ரசனையுடன் பார்க்கிறாள். பார்க்கிறாள் என்பதைவிட மயங்குகிறாள் என்று சொல்லலாம். அவள்மனம் அவளைக் கேளாமல் அவன் வசம் சாய்வதை உணர்ந்தும் தடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தாள்.
பேச்சின் நடுவே அவந்திகாவைப் பார்த்தவன், அவளின் பார்வையிலிருந்த ரசனையில், முகம் காட்டிய ஜாலங்களில் பேச்சை நிறுத்தி அவளை ரசித்துக் கொண்டிருக்க, அவனின் ரசனையின் நடுவே,
“ஐம் சாரி நான் ஏதோ உளறிட்டேன்” என்றாள்.
அவள் சொன்னதன் அர்த்தத்தைத் தப்பாகக் கணித்தவன், அவளின் ‘உளறிவிட்டேன்’ என்ற வார்த்தைகளைக் கேட்டதும் அவனின் முகம் களையிழந்தது. ‘கல்யாணம் பண்ணிக்க கேட்டதை உளறல்னு சொல்லிவிட்டாளே என்று.’
இருப்பினும் மனதை சமாதானப்படுத்தி, “அதான் சொன்னேனேங்க அவருக்கு ஏதோ பதில் சொல்லணும்னு உளறாதீங்கன்னு” என்றான்.
முதலில் அவன் என்ன சொல்ல வருகிறான் என புரியாதவள், புரிந்த பின் வாய்விட்டுச் சிரித்தாள். அவள் சிரிப்பில் ஒருவன் சிதறுவதை அறியாமல். பின்னர் சிரிப்பை நிறுத்தி இல்லை குறைத்து, “ஹையோ... நான் உளறல்னு சொன்னது, உங்ககிட்ட ப்ரபோஸ் பண்ணியதற்கு இல்ல. ப்ரபோஸலுக்கு தப்பான வார்த்தைகளை யூஸ் பண்ணிட்டதுக்கு. இப்ப இந்த நிமிஷம் முழுமனசோட கேட்கிறேன். என்னை கல்யாணம் பண்ணி உங்க ஒய்ஃபா ஏத்துக்கிறீங்களா? உங்க வீடு எவ்வளவு சின்னதா இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். எந்த காலத்துலயும் உங்க ஏழ்மையை சுட்டிக்காட்ட மாட்டேன். இதுதான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணின பிறகு அதுல ஜெயிக்கணும்னு நினைப்பேனே தவிர, ஒரு நாளும் தோற்றுப் போகமாட்டேன். என்னைச் சேர்ந்தவங்களையும் தோற்றுப்போக விடமாட்டேன்” என்று கொஞ்சம் நிமிர்வாகவே சொன்னாள்.
“அப்புறம் மாமனார், மாமியாரை வீட்டை விட்டு விரட்டும் மருமகள் கேரக்டர் நான் கிடையாது. அந்த மாதிரி பொண்ணுங்களைக் கண்டால் எனக்கேப் பிடிக்காது. எனக்கும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை வாழணும்னு ஆசைதான். இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கல. ஐ மீன் எனக்கு அப்பா, அம்மா, கூடப்பிறந்தவங்கன்னு யாரும் கிடையாது” எனும் போது அவள் கண்கள் கலங்கியதோ! அதை வெளிக்காட்டாமல் கண்ணீரை விழிகளுக்குள் இழுத்தது போல், தன் சோகத்தையும் அந்த விழிகளுக்குள்ளே மூடிவிட்டாள் என்றே தோன்றியது எதிரில் நின்றிருந்தவனுக்கு. அதுதான் நிஜமும் கூட.
வெளியில் காட்டாவிட்டாலும், அவளுள் இருக்கும் சோகம் யாருக்கும் தெரியாமல் தனக்குள்ளேயே வைத்து வெளியே சிரிப்பதைக் கண்டவன் மனம் இளக, “உங்களுக்கு ஒரு நல்ல குடும்பம் மற்றும் பாதுகாப்புக்கு நான் உத்திரவாதம் தர்றேன். எதுக்காகவும், யாருக்காகவும் உங்க கண்ணுலயிருந்து கண்ணீர் வரக்கூடாது. வராததுக்கும் நானே உத்திரவாதம் தர்றேன்” என்றான்.
அவன் தன் சம்மதத்தை நம்பிக்கையாய் சொன்னதும், அவந்திகாவின் முகம் பூவாய் மலர்ந்தது. “தேங்க்யூ. தேங்க்யூ சோ மச்” என்றவள், “உங்க ஃபேமிலியையும் நான் கண்கலங்காம பார்த்துக்குவேங்க. இது சத்தியம்” என தன் தலையில் கை வைத்தாள்.
அவளருகில் வந்தவன் தலையிலிருந்த கையை எடுத்து, “இதுக்கு அவசியமில்லை. என் கண்ணுல தண்ணி வரவைக்க மாட்டேன்னு நானும் நம்புறேன் அவந்திகா” என்றான் ஒருமையில் அழைத்து.
“அச்சோ! நான் நம்ம குடும்பத்துல உள்ள மத்தவங்களுக்குத்தான் சொன்னேன், கண்ணீர் வராம பார்த்துக்குவேன்னு. உங்க கண்ணுல கண்டிப்பா தண்ணி வரும். எப்படின்னு பார்க்குறீங்களா? உங்க ஒய்ஃப் சமையல் செய்யும் போது வெங்காயம் உரிச்சிக் கொடுப்பீங்கள்ல? அப்ப உங்க கண்ணுல தண்ணீர் வரும்தான?” என கிண்டலடித்து கலகலவென்று சிரித்தாள்.
அவளுடன் சிரிப்பில் தானும் கலந்தாலும், பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் ‘நம்ம குடும்பம்’ என்று உரிமையாகச் சொன்னது மனதினுள் ஒரு நிறைவைத் தந்தது. ‘இவளைத் தவிர தனக்கு மனைவியாக, தன் குடும்பத்திற்கு மருமகளாக இருக்க வேறு யாராலும் முடியாது’ என்ற முடிவிற்கே வந்தான்.
அதுவரை எரிச்சலுடனும், கோபத்துடனும் அவர்கள் இருவரின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த கௌஷிக், அவர்களை முறைத்து கைபேசியில் யாரையோ அழைத்தபடி அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
‘இவன் இதுவரை இங்குதான் இருந்தானா?’ என மனதில் கேள்வியெழ அதை ஒதுக்கி, “எதுக்கும் ஒரு டைம் யோசிச்சிக்கோங்க?”என்றவனை முறைத்து, “ஏன் உங்க சம்பாத்தியத்துல மூணு வேளை சாப்பாடு தர மாட்டீங்களா? இரண்டு வேளைன்னா கூட போதும் பாஸ். நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என்று வீம்பாக சொல்லி நின்றவளை, கட்டிக் கொள்ளலாம் போல் தோன்றியது அவனுக்கு. முயன்று தன் கைகளைக் கட்டுப்படுத்த பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்தான்.
அவனின் வித்தியாசமான செய்கையில் புருவம் உயர்த்தி, என்ன என்பது போல் கேட்க, “நத்திங்” என்றான்.
“உங்க வீடு எங்கயிருக்கு? போன் நம்பர் தாங்க? ஓஹ்... சாரி சாரி.. உங்க பெயர் என்ன?”
சட்டென்று சிரித்தவன், “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட? பெயர், ஊர் தெரியாம கல்யாணம் பேசி முடிச்ச ஒரே பொண்ணு நீதான்னு நினைக்கிறேன்? நீ என்ன நினைக்கிற?”
“நான் என்ன நினைக்கிறேன்னா?” கைவிரல்களால் தாடையை பிடித்து ஒரு விரலால் உதடைத் தட்டியபடி யோசிப்பதுபோல் பாவனை செய்து, “நீங்க இப்படி என்னை வா போன்னு பேசுறது சூப்பராயிருக்குன்னு நினைக்கிறேன்” என்றாள் குறும்பை குரலில் அடக்கி.
“உனக்கு சேட்டையோட, வாயும் கொஞ்சம் ஜாஸ்திதான் அவந்திகா” என்றான்.
திடீரென முகம் இருக்கியவள், “இல்லங்க மாமாவுக்கு அப்புறமா, ஃபர்ஸ்ட் டைம் உங்ககிட்டத்தான் இப்படிப் பேசுறேன். ஏன்னு சொல்லத் தெரியல. உங்களுக்குப் பிடிக்கலையா? பிடிக்கலன்னா நான் என்னை மாத்திக்கிறேன்.”
சட்டென்று கலங்கிய குரலில் கேட்டவளை, பொது இடம் என்பதையும் மறந்து, கட்டியணைக்கப் போனவன் பின் அவளின் முகம் நிமிர்த்தி, “இல்லமா. எனக்கு இந்த குணம் ரொம்ப பிடிச்சிருக்கு. இதை அப்படியே மெய்ண்டெய்ன் பண்ணு. வீட்ல மத்தவங்களும் ஜாலி டைப் தான். உன்னை தப்பா எடுத்துக்கவும் மாட்டாங்க” என்றான்.
“ஒரு நிமிஷம் இன்னும் உங்க பெயர் சொல்லலையே? வருங்காலக் கணவரோட பெயர் தெரியாம இருக்கிறது உலகமகா தப்பில்லையா?” கேள்வியாக கேட்டு புருவம் தூக்கினாள்.
“கார்த்திகேயன் என்னோட நேம். இதான் உன்னோட புருஷனோட பெயர் இனி உலகம் உன்னைத் தப்பா பேசாது? இப்ப சொல்லு பிடிச்சிருக்கா?” என்றான் இரட்டை அர்த்தத்தில்.