- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
3
ஆராரிராரோ நானிங்கு பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடிசாய்ந்து!
வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே!
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே!
அம்மா எனும் மந்திரமே
அகிலம் யாவும் ஆண்டிட வேண்டும்!
செய்வதறியாமல் அழுதபடி அமர்ந்திருந்தவளைக் கலைக்கவென வந்தது, அந்தக் கைபேசி அழைப்புச் சத்தம். இருமுறை அடித்து ஓய்ந்து, மூன்றாம் முறை அடிக்கும் போதுதான், போன் வந்ததையே உணர்ந்து எடுத்துப் பார்த்தவள் முகம் பளிச்சென்றாகி, கண்களில் ஆனந்தக் கண்ணீர் வர ஆரம்பித்தது.
‘ஹஸ்பண்ட் காலிங்’ அதையே பார்த்துக் கொண்டிருந்தவள் அடித்து நிற்கப்போகும் சமயம், எடுத்து காதில் வைத்தாள்.
“அவந்தி! என்னாச்சிமா? ஏன் போனை எடுக்கல? நீ எடுக்கலன்னதும் பயந்துட்டேன். எதாவது பிரச்சனையாமா?” என்று பதற்றத்துடன் கார்த்திக் கேள்விகளை அடுக்கினான்.
அவனின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல், “ஹலோ” என்ற வார்த்தை தொண்டையை விட்டு வர மறுத்தது. என்ன செய்தும் அவளால் அழுகையினூடே பேச முடியாமல் போனது.
எதிரில் கார்த்திக் தன் கேள்விகளுக்கு பதிலில்லாமல் போகவும், “அழுறியாமா?” என்றான் கேள்வியாய். “அவந்தி எதாவது பேசுமா? நீ பேசினால் தான என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியும். நம்ம கல்யாணத்துக்கு உங்க மாமா ஒத்துக்கலையா? ஒத்துக்கலன்னா நான் பேசி சம்மதிக்க வைக்கிறேன்மா. இல்ல அந்த கௌஷிக் எதாவது வம்பு பண்றானா?” எதற்கும் பதிலில்லாமல் அழுகையே மிஞ்ச... கெஞ்சல் வேலைக்காகாது என நினைத்தவன், “அவந்திகா! இப்பப் பேசப்போறியா? இல்லன்னா போனை வச்சிரவா?” குரலை உயர்த்தி சத்தமாகக் கேட்டான்.
கார்த்திக் ‘வச்சிரவா?’ என்றதும் உணர்வு வந்தவள், தன்னைக் கோவித்துக் கொண்டானோ என்றெண்ணி வேகமாக, “வேண்டாங்க. நான்... நீங்க...” என உளறியவள், “ஓ...ஒரு நிமிஷம் வெய்ட் ப..ண்ணுங்க. நா...நான் வர்றேன்” என்று திக்கித்திணறி சொல்லி குளியலறை சென்று முகம் கழுவி வந்து, தண்ணீர் குடித்துத் தன்னை நிதானப்படுத்தினாள்.
அதன்பின் போனை எடுத்து “சாரிங்க. உங்க குரல் கேட்டதும் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்” என்று சற்று முன் நடந்ததை கணவனாகப் போகிறவனிடம் விளக்க, கோபத்தில் கார்த்திக் பல்லைக் கடிப்பது அவளுக்கே கேட்டது.
பின் தணிந்து, “அதான் அவன்கிட்ட தைரியமா பேசினதான? அப்புறம் என்ன அழுகை?” என்றான் அதட்டலாக.
“எனக்கு பயமாயிருக்குதுங்க. அவனை நான் இப்படி பார்த்ததேயில்லை. அப்படி ஒரு வெறி அவன் முகத்துல. என்னதான் தைரியமா பேசினாலும், ஒரு வேளை அவன் சொன்னது நடந்தா, நா...நான் உயிரோடவே இருக்க மாட்டேன். நான் வாழ்ந்தாலும், செத்தாலும் உங்க மனைவியாகத்தான் இருக்கணும்” என மறுபடியும் அழுதாள்.
அவளின் வார்த்தைகளில் அதிர்ந்தவன், ‘ஒரே நாளில், அதுவும் ஐந்து நிமிடமே பேசிய ஒருவனிடம் ஒரு பெண்ணால் இவ்வளவு நம்பிக்கை வைக்க முடியுமா? முடியும் என்று நிரூபிக்கிறாளே ஒருத்தி. என்னைப்பற்றி என்ன தெரியும் இவளுக்கு. சாதாரண செக்யூரிட்டி வேலை பார்த்த ஒருத்தனை, எப்படி அவளால் உடனே நம்ப முடிந்தது? அவளுக்கேற்ற படிப்போ, வசதியோ கூட என்னிடமில்லை எனும் போது, என்னை எப்படி பிடித்தது அவளுக்கு? எனக்காக இந்த கார்த்திக்கிற்காக தன் உயிரையும் விடுவேன் என்பவளிடம், தான் உண்மையாக இல்லையே’ என்ற எண்ணம் தன்னையே அரித்தது.
ஒரு நிமிடம் ‘உண்மையைச் சொல்லிவிடலாமா’ என நினைத்தவன், ‘உண்மை தெரிந்த பின், அவளுக்கு என்னையும் என் தொழிலையும் பிடிக்கவில்லை என்றால்?’ கேள்விகள் மனதினுள் ஆட்டம் போட்டாலும், அவந்திகாவையும் அதிக நாட்கள் அந்த வீட்டில் விட்டு வைக்கக்கூடாது என்ற முடிவிற்கு வந்தான்.
அதுவரை கௌஷிக் பொறுத்திருப்பானா என்ன?
அவளின் அழுகை ஓயவில்லை என்றதும், “அவந்தி.. அவந்தி என்னமா அழுகை? என் ஒய்ஃப் ரொம்ப தைரியசாலின்னு நினைச்சிட்டிருக்கேன். இவ்வளவு கோழையாகவா இருக்கிறது. அதிலேயும், நீ ஒரு பத்திரிக்கை ஆஃபீஸ் சொந்தமா வச்சி நடத்துறவ. ஜர்னலிஸ்ட் வேற. நீயே இப்படிப் பயந்தா எப்படி? நான் இருக்கேன்ல எல்லாம் பார்த்துக்கறேன். என்னை நம்புற தான?” என கேட்டும் மறுமுனையில் அமைதி தொடர, “என்ன பதிலைக் காணோம்? கேள்வி கேட்டா பதில் சொல்லணும்னு தெரியாதா உனக்கு? ம்ம்... பதில் சொல்லு. என்னை நம்புற தான?” திரும்பவும் அதட்டல் போட்டான்.
“ஆமா. உங்களை நம்பாம வேற யாரை நம்புறது? உங்களை நம்பினதால தான என் லைஃபையே உங்களோட ஷேர் பண்ணிக்கப் போறேன். அதுக்காக ஓவரா அதட்டுவீங்களா?” என வீம்பாக வந்த பதிலில்...
மெல்ல புன்னகைத்தவன், “இந்த நம்பிக்கையை எப்பவும் கைவிட்டுவிடாதே. எந்த ஒரு தருணத்துலயும், யாருக்காகவும், எதுக்காகவும் நான் உன்னை விட்டுவிட மாட்டேன். இது எங்கம்மா மேல சத்தியம்” என்றான்.
“அச்சோ! என்னங்க நீங்க? நான் தான் உங்களை முழுசா நம்புறேனே அப்புறம் ஏன் சத்தியம்லாம். அதுவும் அத்தை மேல...”
“சரி இனி பண்ணல? டென்சன் குறைஞ்சிருச்சா?”
“ம்... கம்ப்ளீட்டா, உங்ககிட்ட பேசினபிறகு தான் போன தைரியமே திரும்ப வந்திருக்கு.”
“எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா?”
“என்ன சந்தேகம்? தாராளமா கேளுங்க. தெரிஞ்சா தீர்த்து வைக்கிறேன்.”
“என்மேல இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கிறியே. ஒருவேளை நான் பொறுக்கியாவோ, இல்ல கொலைகாரன், கொள்ளைக்காரன்னு யாராகவாவது இருந்தா, என்ன பண்ணுவ?”
‘கெட்டவன் யாரும் தன்னைத்தானே தாழ்த்துவதில்லை’ என்ற அடிப்படையில், அவனின் கேள்வியில் மனம் மகிழ்ந்து புன்னகையுடன், “எந்த பொறுக்கியும் தனியா நிற்கிற பொண்ணுகிட்ட வந்து, நேரம் கெட்ட நேரத்துல தனியா இங்க நிற்கிறது ஷேஃப் இல்லமான்னு சொல்ல மாட்டான். முடிஞ்சா தப்பா நடக்கத்தான் ட்ரை பண்ணியிருப்பான். கொலைகாரன்னா மொசப்புடிக்கிற ஆளை மூஞ்சியப் பார்த்தா தெரியாதா?” என கேலியாகச் சிரித்தாள். “ஆனா, கண்டிப்பா நீங்க கொள்ளைக்காரன் தாங்க” என நிறுத்தினாள்.
கார்த்திக்கிற்கு இதயம் ஒருமுறை நின்று துடிக்க, “என்ன சொல்ற அவந்தி? நா...நானா? எதை வச்சி சொல்ற?” என திணற,
“ஆமா. நீங்க கொள்ளைக்காரன் தான்” என்று மீண்டும் அவனின் இதயத்துடிப்பை எகிறவைத்து, “எதுவுமே செய்யாம அமைதியா நாலு வரி பேசியே என் மனசைக் கொள்ளையடிச்சிட்டீங்களே” என்றதும் நிம்மதியாக மூச்சிவிட்டு, “ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன். தேங்க்ஸ் அவந்தி. நான் திரும்பவும் சொல்றேன் கௌஷிக்கிட்ட ஜாக்கிரதையா இரு. எந்த காரணத்தைக் கொண்டும் அவன் கூப்பிட்டான்னு வெளில போயிராத. அப்படிப் போறதாயிருந்தாலும், ஒரு போன் இல்லன்னா மெசேஜ் அனுப்பிட்டு போ ஓகேவா.”
“ஓகே... ஓகே டன்.”
“ம்... குட். சாப்பிட்டியா? சாப்பிடலன்னா போயி சாப்பிடு. நம்ம கல்யாணத்தோட நீ தெம்பாயிருக்க வேண்டாமா?”
“என்னமோ கல்யாணத்துக்கு ஒரு வாரம்தான் இருக்கு. நல்லா சாப்பிடுன்ற மாதிரி பேசுறீங்க?”
“எதாவது அதிசயம் நடந்தா அப்படியே கூட கல்யாணம் நடக்கலாம் யார் கண்டா. சாப்பிடாம மணமேடையில நீ மயக்கம் போட, மறுநாள் மணமேடையில் மணமகள் மயக்கம்! இந்த தலைப்புல உன்னோட ‘தினமீன்’ நியூஸ் பேப்பர்லயே கட்டுரையா வந்திரும். அது உனக்குத் தேவையா?” என்றதும் வாய்விட்டுச் சிரித்தவளின் குரலை ரசித்திருந்தவன், “வச்சிரட்டுமா அவந்தி?” என்றான்.
“அடுத்து எப்ப பேசலாம்ங்க?”
“எப்ப வேணும்னா பேசலாம் அப்படின்ற உத்திரவாதம் என்னால கொடுக்க முடியாது. நான் வேலை தேடுறதுல பிஸியா இருப்பேன். வேலை கிடைச்சாலும், நடுவுல போன் பேச முடியுமா தெரியாது. ரொம்ப அர்ஜெண்ட்னா மட்டும் கால் பண்ணு சரியா?”
“ம்... சரிங்க பாஸ். நான் சும்மா சும்மா உங்களை டிஸ்டர்ப் பண்ணல. எனக்கும் ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கு. இப்ப நான் சாப்பிடப் போறேன். நீங்களும் சாப்பிட்டு வேலையைப் பாருங்க” என்றாள்.