- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
4
கௌஷிக்கின் தாயின் குரல் கேட்டதும் உடல் ஒருமுறை அதிர, கால்கள் தன்னிச்சையாக திரும்ப, கண்கள் பயத்தில் மிரண்டது. கௌஷிக்குடன் வந்திருந்ததால் அனைத்தையும் சொல்லியே அழைத்து வந்திருப்பானென்று தெரிந்தது.
‘மை காட்! இவங்களை எப்படி மறந்தோம்?’ என்று நினைத்தவள் தைரியத்தை வரவழைத்து, “வாங்கத்தை. சாரி நீங்க வந்ததை கவனிக்கல. ஊர்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா?” என்று பொதுவாக விசாரித்தாள்.
“ரொம்பத்தான் அக்கறை” என நொடித்தவர், “நீ இருக்கிற மயக்கத்துல நான் வந்ததை எப்படிமா கவனிச்சிருப்ப? நான் கேள்விப்பட்டது நிஜமா அவந்திகா? கௌஷிக்கை விட்டுட்டு யாரோ ஒரு செக்யூரிட்டியை கல்யாணம் பண்ணிக்கப் போறியாமே?” என பல்லைக்கடித்தபடி குரலை உயர்த்தி கேட்டார்.
“ஆமாம் அத்தை. நிஜம்தான்” என்று முடிப்பதற்குள் கன்னத்தில் கை வைத்திருந்தாள் அவந்திகா. கண்கள் மட்டும் கண்ணீரை வெளியேற்ற ஆங்காரத்துடன் நின்ற தன் அத்தையையே வெறித்திருந்தாள்.
அதற்குள் அருகில் வந்த சுந்தரேசனை கையமர்த்திய வனஜா, அவந்திகாவிடம் திரும்பி “அடிச்சிக் கொன்னுருவேன். என்ன புதுசா எதிர்த்தெல்லாம் பேசுற? என்ன தைரியமிருந்தா எவனையோ கல்யாணம் பண்ணிக்கப் போறதா என்கிட்டயே சொல்லுவ? இத்தனை வருஷம் வளர்த்து, சொத்தோட சேர்த்து, எவனோ ஒரு பொறம்போக்குக்கு உன்னை தாரை வார்க்கவா இருக்கேன்.”
“அத்தை அவங்களைப்பற்றி தப்பா சொல்லாதீங்க.” சட்டென்று சொல்லி பயத்தில் மாடிப்படியை இறுக்கிப் பிடித்தாள். சின்ன வயதிலிருந்தே வனஜாவின் அரட்டல், உருட்டல், மிரட்டலில் பயத்துடன் வளர்ந்தவளால் தொழிலில் என்ன வளர்ந்தும் வனஜாவிடமுள்ள பயம் மட்டும் போகவில்லை.
“என்ன தப்பா சொல்லிட்டேன்னு இப்படி என் முன்னாடி குரலை உயர்த்திப் பேசுற? என்ன பயம் விட்டுறிச்சா? இதெல்லாம் சரிப்படாது. அடுத்த முகூர்த்தத்துல உனக்கும், கௌஷிக்குக்கும் கல்யாணம்” என்று அசராமல் குண்டைப் போட்டார்.
‘இதை இதைத்தானே எதிர்பார்த்தேன். தேங்க்ஸ்மா’ என்றான் கௌஷிக் மனதினுள்.
“அத்தை!” என அதிர,
“வனஜா என்ன உளர்ற?” என்றபடி சுந்தரேசன் வந்தார்.
“நான் உளறல. உண்மையைத்தான் சொல்றேன்.”
“நடக்கிறதைப்பற்றிப் பேசு வனி. அவளுக்கு கௌஷிக் கரெக்ட் சாய்ஸ் கிடையாது. நான் அந்தப் பையன் கார்த்திக்கைப் பார்த்து பேசி முடிச்சிட்டேன்.”
“ஹா...ஹா... டேய் கௌஷிக் உங்கப்பாவைப் பாருடா. பேசி முடிச்சிட்டாராம்” என்று சத்தமாக சிரித்து, பின் குரலை கடினமாக்கி “நீங்க பேசிட்டா ஆச்சா? நான்.. இந்த வனஜா சம்மதிக்கணும். என்னோட சம்மதம் இல்லாம ஒரு துரும்பைக்கூட உங்களால அசைக்க முடியாது. அப்படி எதாவது செஞ்சா நான் என்ன செய்வேன்னு தெரியுமில்ல?” என்று மறைமுகமாக மிரட்டல் விடுக்க, அதில் சுந்தரேசன் கொஞ்சம் பயப்படத்தான் செய்தார்.
‘கொலை செய்வேன் என்றால் கூட இந்த பயம் இருக்காது. வயதுப் பெண்ணிற்கு எது பலவீனமோ, அதில் அடித்ததுதான் பயம். அவந்தியை தப்பான தொழிலில் இறக்கி விடுவேன் என்றதுதான் அது. அது மிரட்டல்தான்! அந்த மிரட்டலுக்கு பயப்படவில்லையென்றால் சொன்னதை செய்வாள்’ என்பதை அறிந்தவராயிற்றே.
“பெத்த பிள்ளைக்கு அகெய்ன்ஸ்டா வேலை பார்க்கிற ஒரே அப்பா நீங்கதான். இவளைத் தூண்டிவிட்டு ஃபேக்டரிக்கு சீல் வச்சிருக்கீங்க? இந்த மாதிரி கௌஷிக் மட்டும்தான் வச்சிருக்கானா என்ன? ஊர் உலகத்துல போய் பாருங்க. இன்னும் எத்தனை இடங்கள்ல இந்த மாதிரி தெரியாம வச்சிருக்காங்களோ? அதைப்போயி பிடிக்க வேண்டியதுதான... உங்க பையனோட எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிருக்கீங்க. அதுக்கு இவள் உடந்தை. என் பையனுக்கு இனி யார் பொண்ணு கொடுப்பாங்க? அதுக்காகவேனும் இவள் தான் என் பையனுக்கு பொண்டாட்டி. நான் சொன்னது சொன்னதுதான். அடுத்த முகூர்த்தத்துல இவங்க கல்யாணம் கண்டிப்பா நடக்கும்” என்றார் அழுத்தமாக.
அத்தையின் பேச்சை அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவள், அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் என்றதும், “அத்தை! அதுக்கு ஒண்ணு உங்க பையன் உயிரோட இருக்கமாட்டான். இல்லை நான் உயிரோட இருக்கமாட்டேன். பிணத்தை வச்சி கல்யாணம் யாரும் பண்ணமாட்டாங்கன்னு நினைக்கிறேன்” என்றாள் ஆவேசமாகவும், தெளிவாகவும்.
“என்னடி சொன்ன?” என்று கௌஷிக் கை ஓங்க,
அவனைத் தடுத்த வனஜா, “புதுசா வந்த தைரியத்துல பேசுறியா? இந்த தைரியம் உனக்கு எத்தனை நாளைக்குன்னு பார்த்திடுறேனே. என் பையனையும் சாகடிக்க விடாம, உன்னையும் சாகவிடாம இந்த கல்யாணத்தை நடத்திக் காட்டுறேன் பார்” என்று அவந்திகாவின் மிரட்டலுக்கு பதிலுக்கு மிரட்டி உள்ளே சென்றார்.
கண்களில் கண்ணீருடன் தன் மாமாவைப் பார்த்து வேகமாக மாடியேறி படுக்கையறை சென்றவள், கார்த்திக்கிற்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல... ‘நான் இருக்கிறேன்’ என்று அவன் தைரியம் சொன்ன பிறகே கொஞ்சம் நிம்மதியாகி போனை வைத்தாள்.
இதுவரை எதற்காகவும் அத்தையை எதிர்த்துப் பேசியதில்லை. முதல்முறையாக தன் எதிர்கால வாழ்விற்காக வாதம் செய்தாள். தன் அத்தை ஒரு முடிவு செய்தால், அதை முடிக்கும்வரை ஓய்வதில்லை என்பது தெரிந்தவள் தான். இருந்தாலும், புதியதாக கார்த்திக்கினால் வந்த தைரியத்தில் எல்லாம் சரியாக நடக்குமென்றே நம்பினாள்.
மறுநாள் திருமணம் என்று சொல்லி, அவந்திகா வயிற்றில் புளியைக் கரைத்த வனஜா, தன்னை கௌஸ் அரெஸ்ட் செய்து கட்டாயக் கல்யாணம் செய்துவிடுவார் என எதிர்பார்த்திருக்க, வனஜாவோ முந்தின தினம் எதுவுமே நடக்காததுபோல் சகஜமாக, சாதாரணமாக நடந்து கொண்டார்.
நேற்றைய சம்பவங்கள் உண்மையா என்ற அளவிற்கு குழம்பிப் போய்விட்டாள் நம் நாயகி. சந்தேகத்தில் தன் மாமாவைப் பார்க்க, அவரும் உதடு பிதுக்கி தோள் குலுக்கி, ஒன்றும் புரியவில்லை என்பதை ஜாடையால் சொன்னாலும், அவருக்குள்ளும் ஒரு உறுத்தல், ‘புலி பதுங்குவது பாய்வதற்காகவோ, அல்லது பழிவாங்குவதற்காகவோ தான் இருக்கமுடியும்” என முடிவு செய்தவர், மருமகளுக்கு இன்னும் அதிக பாதுகாப்பு தேவை என்பதை உணர்ந்து, முதல் வேளையாக தனியே வரவிடாமல் மருமகளையும் தன்னுடனேயே அலுவலகம் அழைத்துச் சென்றார்.
“தினமீன் தமிழ் நாளிதழ்” போர்டு மாட்டியிருந்த அந்த பெரிய கட்டிடத்தில் சுந்தரேசன் தன் காரை நிறுத்த, பின்னாலேயே ஆக்டிவாவில் அவந்திகா வந்து சேர, உள்ளே நுழைந்ததும் தங்களை எதிர்கொண்ட மேனேஜரிடம், அன்றைய நிலவரத்தைக் கேட்டபடி அவரவர் கேபினுக்குள் சென்றார்கள்.
அன்றையை வேலைகளை செய்வதற்கு முன், வந்திருந்த கடிதாசிகளைப் பிரித்து, தேவையானவற்றை வைத்து தேவையில்லாததை ஒதுக்கிக் கொண்டிருந்தவள் கண்களில் பட்டது, தினமும் வரும் அந்த இரண்டு கடிதங்கள். இன்று அதோடு சேர்த்து மூன்றாவதாக ஒன்றும் உறுத்த அதையும் தனியே எடுத்து வைத்தாள் அவந்திகா.
முதலில் உள்ள கடிதத்தில் ‘உனக்கு என் கையால்தான் சாவு’ என்று கொலை மிரட்டல் கடிதம் இருக்க, தினமும் வருவதுதானே என்று அதை அசட்டையாக தள்ளிவிட்டு, இரண்டாவதை பிரிக்க...
ஹாய்! டபுள் எ! மீண்டும் நானேதான்.
எ எ என நிதமும்,
எனை ஏங்க வைப்பவளே!
உந்தன் வார்த்தை
வரவிற்காகக் காத்திருக்கிறேன்.
எந்தன் உள்ளமதில் குடியிருக்க,
வருவாயா வான்மதியே!
என்ற கவிதையைத் தொடர்ந்து சி.என் என்ற எழுத்திலிருந்து எ.எ என்ற எழுத்திற்கு மன்மதபானம் ஒன்று சென்றிருந்தது. படித்து முடித்ததும் மனம் இறுக “நேர்ல வந்து பேச தைரியமில்லாத கோழை. தன்னோட பெயரைக்கூட முழுசா எழுதத் தெரியாத கழுதைக்கு பெயர் சி.என்னாம். சரியான லூசன். இவன் தொல்லை வரவர அதிகமாகுதே. ப்ரம் அட்ரஸ் இல்லாத தேர்ட்ரைட் இடியட். பேசாம மாமாகிட்ட இந்த ரெண்டு லெட்டரையும் பற்றி சொல்லிவிடலாமா? சே... சே வேண்டாம் ஏற்கனவே என் பொறுப்பை தலையில் சுமந்து பொண்டாட்டி, பிள்ளை நடுவுல திண்டாடுறாங்க. இதுல நான் வேறயா. வேண்டாம் இதை நானே சரி பண்றேன்” என்று அடுத்த கடிதத்தைப் பிரித்தாள்.
‘வணக்கம் மேடம்:
என் பெயர் வைஷ்ணவி. எனக்கு ஒருவருஷம் முன்னாடி கல்யாணமாகிருச்சி. சென்னையிலிருந்து ஆந்திரா போற வழியில் கவரப்பேட்டைக்கும், தச்சூர் கூட்டுசாலைக்கும் நடுவுல புதுவாயல்னு ஒரு ஊர் இருக்கு. அங்கிருந்து பெரியபாளையம் போற வழியிலதான் என்னோட ஊர் நானூர். நான் பக்கத்திலிருக்கிற இன்ஜினியரிங் காலேஜ்ல ஒர்க் பண்றேன். கடந்த ஆறு மாசமா எனக்கு ஒருத்தன் தொடர்ந்து டார்ச்சர் கொடுக்குறான். இதை என் கணவர்கிட்ட சொல்லவும் முடியல. அவர் நெல்காஸ்ட் கம்பெனியில மேனேஜரா வேலை பார்க்கிறார். ஏற்கனவே என் மாமியாருக்கு என்னைக்கண்டா ஆகாது. இந்தப் பிரச்சனை தெரிஞ்சா என் கணவர்கிட்டயிருந்து பிரிக்கவும் தயங்கமாட்டாங்க. இந்த பிரச்சனையில் நான் மட்டுமில்ல, இன்னும் சில பெண்கள் பாதிக்கப்படுறாங்கன்னு தெரிஞ்சது. ஆனா, வெளில சொல்றதில்லை. போலீஸ் போகலாம்னா என்னோட கல்யாண வாழ்க்கையில் பிரச்சனை வந்திருமோன்னு பயமாயிருக்கு. நான் உங்க ஆர்டிகில்ஸ் நிறைய படிச்சிருக்கேன். அதான் தைரியமா லெட்டர் எழுதிட்டேன். தயவுசெய்து என்னோட பெயர் வெளில வராம பார்த்துக்கோங்க. இதுல என்னோட போன் நம்பர் இருக்கு. உங்க கைக்கு இந்த லெட்டர் கிடைச்சதுன்னா எனக்கு போன் பண்ணுங்க. நான் அவனைப்பற்றி எனக்குத் தெரிஞ்ச தகவல் சொல்றேன்.
என் விடிவிற்காக காத்திருக்கும்,
வைஷ்ணவி.’
படித்து முடித்ததும் அந்த நம்பரைக் குறித்துக்கொண்டு, விஷ்ணுவை உள்ளே அழைத்தாள். அந்த பெண்ணின் கடிதத்தை அவனிடம் கொடுத்து படிக்கச்சொல்லி, அவன் படித்து முடித்ததும், “இன்னைக்கே நீ அந்த இடத்துக்கு போயி விசாரிச்சிட்டு வா விஷ்ணு. இந்த நியூஸ் சரிதானான்னு முதல்ல தெரிஞ்சிக்கணும். யாராவது நம்ம பேரை ரிப்பேர் பண்றதுக்காக எதாவது ப்ளான் போட்டிருக்கப் போறாங்க. நீ என்ன பண்ற முதல்ல அந்த காலேஜ் போய், வைஷ்ணவின்ற நேம்ல லெக்சரர் இருக்காங்களான்னு முதல்ல விசாரி. அப்புறம் அவங்க நம்பருக்கு வேற நம்பர் மாத்தி போன் பண்ணி செக் பண்ணிக்கோ. அந்த பொண்ணுகிட்ட வம்பு பண்றவன் யாரு என்னன்ற டீடெல்ய்ஸும் கலெக்ட் பண்ணிக்கோ. இது ஃபேக் நியூஸ்னா உன்னோட ரிப்போர்ட் பார்த்து அடுத்து என்ன செய்யலாம்னு முடிவெடுக்கலாம். ஓகே உடனே கிளம்பு. ஆமா எதுல போகப்போற பைக்லயா? இல்ல பஸ்லயா?”
“ம்... நக்கலு. நான் எப்ப என் பைக்கை விட்டு தனியா போயிருக்கேன். வரட்டா” என்று வேகமாக வெளியேறினான்.