• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
5



அந்தக்குரல் வந்த திசையை பார்த்தவள், சந்தோஷின் முக அமைப்பைக் கொண்டிருந்தவர் நின்று கொண்டிருக்க, அவந்திகா, கார்த்திக்கைப் பார்க்க அவன் “அப்பா” என்று சத்தமில்லாமல் உச்சரித்தான்.

‘ஓஹ்...’ என்றவள் அவர் கால் தொட்டு ஆசிவாங்கி, உள்ளே நுழைந்த ஈஸ்வரியிடமும் ஆசிவாங்கி பெரியவர்களின் மெச்சுதலையும், சிறியவர்களின் கிண்டலையும் பெற்றுக் கொண்டாள்.

“அண்ணி! சூப்பரா ஐஸ் வைக்கிறீங்க போல?”

“ப்ச்... சந்தோஷ் இதுல ஐஸ் வைக்கிறதுக்கு என்ன இருக்கு. அப்படியே ஐஸ் வைக்கணும்னா, இதோ வைக்கப்போறேன்னு சொல்லிட்டே வைப்பேன். எனக்கு எந்த குறுக்கு புத்தியும் வராது.”

“உனக்கு வராது அவந்தி. ஆனா, உன்னைச் சொன்னவனுக்கு வரும்.”

“அண்ணா! யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டாய். ஐயகோ! என் பிஞ்சி மனம் பஞ்சரானதே” என கதறினான்.

“அது பஞ்சரானா ஆகிட்டுப் போகட்டும்டா. நான் டிஞ்சர் வச்சி பஞ்சர் போட்டு விடுறேன். நீ கவலைப்படாத” என மகனின் கால்வாரினார்.

“அப்பா” என்று சந்தோஷ் பல்லைக்கடிக்க,

“அந்தப் பல்லை விடுடா. உனக்கு பிறந்ததைத் தவிர அதென்ன தப்பு பண்ணிச்சி. நீ அதை அடிக்கடி கடிச்சே கொல்றடா.”

அவரின் வார்த்தைகளில் சிரித்த அவந்திகா, “ஏன் அங்கிள் இந்த வார்த்தை வித்தியாசமாயிருக்கே? நீங்களே கண்டுபிடிச்சீங்களா?”

“எந்த வார்த்தைமா?”

“அதான் அங்கிள். சந்தோஷோட பல்லைப் பற்றிச் சொன்னீங்களே அது.”

“ஓ... அதுவா! உண்மைதானம்மா. மனித உயிர்களோட வளர்ச்சி, அம்மாவின் கருவிலிருக்கும் போதே தெரிஞ்சிரும். கை, கால், கண், மூக்குன்னு பிறக்கும்போதே அனைத்து உறுப்புகளோடவும்தான் பிறப்போம். பல் மட்டும்தான் அம்மாவின் வயிற்றிலிருந்து வெளில வந்ததும் முளைக்கும். இதுல கூட அத்தி பூத்தமாதிரி ஒருசில குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே பல் இருக்கும்ன்றது வேற. ஆனா, அனேகம் குழந்தைகளுக்குப் பிறந்த பிறகுதான் பல் முளைக்கும். அப்ப முளைக்கிற பல்லுக்கு நாமதான பெத்தவங்க. எப்படி என் கண்டுபிடிப்பு?”

“வாவ்! எக்ஸலண்ட் அங்கிள். சான்ஸே இல்ல போங்க.”

“நீ என்னை கலாய்க்கலையேமா?”

“நோ... நோ அங்கிள். நீங்க சொன்னது முற்றிலும் ஒத்துக்க வேண்டிய உண்மைதான்.”

மகன்களின் புறம் திரும்பியவர், “பார்த்துக்கோங்கடா. இப்பதான் முதல் முறை பார்க்கிற பொண்ணு, என் கருத்துக்களை ஒத்துக்கிறா. நீங்களும் இருக்கீங்களே. இதுக்குத்தான்டா புத்திசாலியை பொண்டாட்டியா அடைஞ்சிருக்கணும்ன்றது. எனக்கு அந்த சான்ஸ் இல்ல. ஆனா, கார்த்திக் நீ ட்யூப்லைட்டா இருந்தாலும் என் மருமகள் ப்ரைட். அதனால உன்னோட ஃபியூச்சர் ப்ரைட்டாயிருக்கும்.”

“அப்ப உங்க லைஃப் என்னால போச்சிதுன்னு சொல்ல வர்றீங்க. அப்படித்தான?” என்று முறைத்தபடி, காஃபி, ஸ்நாக்ஸுடன் ஈஸ்வரி வர, காஃபியை வாங்கியபடியே, “அப்படிக் கேளுங்கம்மா” என்று கார்த்திக்கும், சந்தோஷும் ஆதரவுக் குரல் கொடுத்தனர்.

“நான் அப்படியா சொன்னேன். இல்லையே?” என்று குமார் அந்தர் பல்டியடிக்க...

“அங்கிள் இது டூ மச்” என்று சிரித்தாள் அவந்திகா.

“வீட்டு அரசியல்ல இதெல்லாம் சகஜம்மா” என்றவரைத் தொடர்ந்து, “நல்லா யோசிச்சிட்டியாமா?” என்று ஈஸ்வரி அவந்திகாவைப் பார்த்து கேட்டார்.

‘என்ன யோசிச்சிட்டியா கேட்கிறாங்க? எதை யோசிக்கணும்?’ புரியாததொரு பார்வையை வீச,

அதற்குள் கார்த்திக், “அம்மா! கேட்கிறதை அவளுக்குப் புரியுற மாதிரி கேளுங்க. நீங்க என்ன கேட்டீங்கன்னு புரியாம முழிச்சிட்டிருக்கா பாருங்க.”

“ஓ... இல்லமா. எங்க கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதுல எந்த மாற்றமும் இல்லையே? ஏன் கேட்கிறேன்னா, என் பையன்தான். இருந்தாலும் அவனுக்குன்னு நிரந்தர வேலை எதுவும் கிடையாது. அப்படியே கிடைச்சாலும், எங்க எந்த இடத்துல இருக்கான்னும் தெரியமாட்டேன்னுது. அது புழலா, வேலூரான்னு தெரியுறதுக்குள்ள ஒரு வழியாகிருறோம். ஒருசில டைம் மதுரைகூட போயிட்டு வர்றான்” என்று சொல்ல,

அவரின் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தவளுக்கு “என்ன ஆன்ட்டி புழல், வேலூர்னு ஜெயில் இருக்கிற ஏரியாவா சொல்றீங்க? அங்க இவங்களுக்கென்ன வேலை?”

சட்டென்று அனைவரின் முகத்திலும் ஒரு அதிர்வு வந்து மறைந்ததை அவந்திகா கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் சிலபல கேள்விகளை அப்பொழுதே கேட்டு தெளிவாகி இருப்பாளோ என்னவோ!

“அதையேன்மா கேட்கிற? செக்யூரிட்டி வேலைக்குத்தான் போவான். அப்புறம் பிடிக்கலன்னு திரும்ப வந்திருவான்.”

அவர் சொல்வதில் நிறைய முரண்பாடுகள் தெரிந்தது. குழப்பத்துடன் ஏதோ கேட்க வாய் திறக்க,

“அவந்தி அம்மா ஏற்கனவே நான் வேலை பார்த்ததைச் சொல்றாங்க. அங்க பிடிக்கலன்னுதான் பிரைவேட் செக்யூரிட்டி மூலமா கௌஷிக் கம்பெனிக்கு வந்தேன்.”

“ஓ...ஓகே” என்று ஒருவழியாக சமாதானமானவளுக்கு, ஈஸ்வரி முதலில் கேட்ட கேள்வி நினைவு வர, “உங்க பையன் மேல் முழு நம்பிக்கையிருக்கு ஆன்ட்டி. நான் எடுத்த முடிவை எப்பவும் மாத்திக்க மாட்டேன். இந்த ஜென்மத்தில் உங்க பையன்தான் என் ஹஸ்பண்ட்” என்றாள்.

“அப்ப அடுத்த ஜென்மத்துல இந்த மூஞ்சி வேண்டாமா அண்ணி?” சந்தோஷ் சற்றே கிண்டலாகக் கேட்டான்.

அவனின் கிண்டலை உணர்ந்தவள், “அது உங்க அண்ணனோட கேரக்டரைப் பொறுத்து” என்று கார்த்திக்கின் புறம் திரும்பி கண்சிமிட்டி சிரித்தவள், “உங்க ஹஸ்பண்ட் போஸ்டிங்கை கரெக்டா பண்ணிருவீங்கதான?” என்றாள்.

அவள் கண்சிமிட்டிய அழகில் மயங்கி புன்னகையுடனே பார்த்தபடி, “அந்த போஸ்டிங் கிடைச்சதும் எப்படி உன்னை அசத்தி, அசரடிக்கிறேன் பாரு” என்றான் பதிலுக்கு கண்ணடித்தபடி.

பேச்சிக்களுடனும் சிலபல கால்வாரல்களுடனும் நேரம் வேகமாக ஓட, வெளியே இருட்ட ஆரம்பித்ததும், “டைமாகிருச்சி நான் கிளம்பறேன். வர்றேன் அங்கிள், வர்றேன் ஆன்ட்டி” என்றாள்.

“அங்கிள் ஆன்ட்டி வேண்டாம். அத்தை மாமா சொல்லுமா” என்றதும், “சரி வர்றேன் மாமா. வர்றேன் அத்தை. வர்றேன் சந்தோஷ்” என்றபடி வெளியேற, அவளுடனேயே வெளியில் வந்த கார்த்திக், “வீட்ல இன்னைக்கு எதாவது பிரச்சனை வந்ததா அவந்தி” என கேட்டான்.

இல்லங்க எனக்கும் காலையிலிருந்து மனம் திக் திக்னுதான் அடிச்சது. ஆனா, அவங்க எப்பவும்போல கேசுவலா இருக்கிறாங்க.

எதுக்கும் உங்க அத்தையிடமும், அந்த கௌஷிக்கிடமும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு அவந்தி. நான் எப்பவும் உன்னோடவே இருக்க முடியாது. நேத்து நைட் நீ சொன்னதிலிருந்து உள்ளுக்குள்ள ஒருபயம் இருந்துகிட்டே இருக்கு. நேற்றைய பேச்சை இன்னைக்கு தொடரலைன்னு வேற சொல்ற. சம்திங் ராங். எங்க வெளியில போனாலும் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பிடு சரியா.

சம்மதமாக தலையாட்டியவளிடம், “என்னோட ஃபேமிலி உனக்குப் பிடிச்சிருக்கா அவந்தி?”

“ஹலோ பாஸ்! உங்க ஃபேமிலி இல்ல. நம்ம ஃபேமிலி ஓகே. எனக்கு உங்க எல்லாரையும் ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்கு அப்படியே அத்தையோட முகச்சாயல். ஆனாலும், எனக்கு மாமாவைத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு கார்த்திக். பட், ஒரு சின்ன வித்தியாசம் தெரிஞ்சது உங்க ஃபேமிலிக்கும் இருக்கிற இடத்திற்கும் சம்பந்தமில்லாத மாதிரி.”

“ஏன்?”

“இல்ல அத்தைக்கு ஐம்பது வயசிருக்குமா?”

“இல்லமா. ஐம்பத்திரெண்டு” என்றான்.

“ஆனா, பாருங்க. அவங்களுக்கு வயசே தெரியல. ஒரு ஃபார்ட்டி இயர்ஸ் மதிக்கலாம். நகையெதுவும் போடாமலேயே, பார்க்க ரிச் லுக்ல, போல்டான லேடியா இருக்காங்க. மிடில் க்ளாஸ் பேமிலிங்களோட நான் பழகியிருக்கேன். அவங்களை மட்டமா சொல்லலை. ஆனாலும், ஏதோ ஒரு வித்தியாசம் உங்க எல்லார்கிட்டேயும்” என்று மனதிலுள்ளதை மறைக்காது சொன்னாள்.

ஒரு சின்ன அதிர்வு அவனுள் தோன்றியதை மறைத்து, “இல்லடா. நான்தான் படிப்பு கம்மி. மத்தபடி தம்பி இன்ஜியரிங். அப்பா, அம்மாவும் படிச்சிருக்காங்க. பார்க்க டீசண்டா இருக்கிறதால உனக்கு அப்படி தோணுதோ என்னவோ” என்று ஒருவாறு சமாளித்தவன், ‘சே... ஒழுங்கா நடிக்கச் சொன்னா, ஓவரா நடிச்சிட்டாங்க போலருக்கே’ என மனதினுள் வீட்டிலுள்ளவர்களைத் திட்டினான்.

“ஓ... அப்படியா” என்றவளுக்கு, கார்த்திக் சற்று அதிர்ந்தாற்போல் தெரிந்தானோ என, நினைக்காமலிருக்க முடியவில்லை. வண்டியில் செல்லும்போதே, ‘நல்ல குடும்பம்’ என்று தோன்றினாலும், அதையும் மீறி ஒருவித செயற்கைத்தனம் இருந்ததோ என்று தோன்றியது. ‘ப்ச்... அப்படியெல்லாம் இருக்காது’ என்று, தனக்குத் தோன்றியதை மனமென்னும் குழியைத் தோண்டிப் புதைத்தாள்.

வீட்டிற்கு சென்றதும், மாமாவும் கார்த்திக் சொன்னதையே சொன்னாலும், அவன் போன் செய்ததை சொல்லாமல் மறைத்தார்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் மாமா” என்றாள் அசட்டையாக. ‘தன்னை மீறி கௌஷிக் என்ன செய்துவிடுவான்’ என்ற எண்ணம்தான் அவளுக்கு.

நம் எண்ணங்கள் சரியாக இருப்பினும், எதிரிலிருப்பவரின் எண்ணங்களும், நம்மையே பிரதிபலிக்க வேண்டுமென்று எதுவுமில்லையே.

கௌஷிக்கை கொஞ்சம் கம்மியாகவே மதிப்பிட்டாள் அவந்திகா. அவனால் வரப்போகும் பின் விளைவை அறியாமல்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
மறுநாள் காலை, வழக்கம்போல் வந்த லெட்டரில் முதலாவதைப் பிரித்தாள்.

“என்ன அவந்திகா? கொலை மிரட்டலுக்கு பயப்படாத பெண் புலியா நீ? புலியைப் புல்லைத் தின்னவச்சி, சாகடிக்கப் போற நாள் வெகுதூரத்தில் இல்லை வர்றேன்டி. உன்னோட எமன்” என்றிருந்தது.

அதை தூக்கியெறிந்து இரண்டாவதை பிரித்தாள்.

எ எ என நிதமும்

ஜபிக்கிறேனடி

உன் நாமத்தை!

எனக்கான ஒரு வாய்ப்பாய்,

உன் தினமீனில்

உன் மனமீனைக்

கடிதமாக அனுப்புவாயா?

சி.என்னாக இருந்த எனை

எ எ தாசனாக மாற்றிவிட்டாயடி!

“ஹா...ஹா பயபுள்ள, நல்லாத்தான் கவிதை எழுதுது. இருந்தாலும் டைம் வேஸ்ட் பண்றியேடா பாவி. எனக்கு எழுதுற இந்த குட்டிக் கவிதைகளைத் தொகுத்து, ஒரு புத்தகமா வெளியிட்டா, நல்லா பிரபலமாகிடுவ நீ. ஹ்ம்... உன் தலையெழுத்து சரியில்லையே. என்ன பண்றது” என்று அதையும் விட்டுக்கடாசினாள்.

மூன்றாவதாக அந்தப்பெண் வைஷ்ணவியின் கடிதத்தைப் பிரித்தாள்.

“சாரி மேடம். உங்களை தொந்தரவு பண்றேனா? முன்னாடி போட்ட லெட்டர் உங்க கைக்கு கிடைச்சிதா தெரியல. அதனாலதான் இன்னைக்கும் போட்டேன்” என்று முன்தினம் எழுதியதை இன்றும் எழுதியிருந்தாள்.

அந்த லெட்டரைப் படித்தவாறு யோசைனையிலிருந்தவள், விஷ்ணுவை அழைக்க எண்ணும்போதே, “மே ஐ கம் இன்” என்று உள்ளே வந்த விஷ்ணு, அவளின் எதிரிலுள்ள சேரில் அமர்ந்து, “அவந்தி கம் ஃபாஸ்ட்” என்றான் எதுவும் சொல்லாமல் மொட்டையாக.

“எங்க கிளம்பணும் விஷ்ணு? நான் நேத்து சொன்ன வேலையை முடிச்சியா? என்னாச்சி ஏதாச்சின்னு எதுவுமே சொல்லாம, இப்ப வந்து கிளம்புன்னு நிற்கிற. நீ என்னதான் நினைச்சிட்டிருக்க? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா. இதான் நீ வேலையை முடிக்கிற லட்சணமா? இது ஒரு பெண்ணோட லைஃப் நியாபகமிருக்கட்டும்” என சரமாறியாகப் பொரிந்தாள்.

“ஹேய்! கூல்மா. ரிலாக்ஸ். ஷப்பா! போகும்போது சொல்லிக்கலாம்னு பார்த்தா, நீ என்னை பேசியே கொன்னுருவ போல” என்றதும் அவனை முறைத்தவளிடம், “அம்மா தாயே! உன்னோட விஸ்வரூபத்தைக் கம்மி பண்ணு. நேத்தே போயி எல்லாத்தையும் விசாரிச்சிட்டேன். அந்த பெண்ணிலிருந்து, போன் நம்பர் வரை எல்லாமே கரெக்ட்தான். இன்க்ளுடிங் அவங்க மாமியார் கேரக்டர். அங்க போகத்தான் உன்னையும் கூப்பிட்டது. இப்ப வர்றியா? எங்க சோடா? எங்க சோடா?” என்றான்.

“போடா! பெரிய போஸ்பாண்டின்னு நினைப்பு. நீ வெளியில வெய்ட் பண்ணு. நான் மாமாகிட்ட சொல்லிட்டு வர்றேன்” என்றாள்.

சுந்தரேசனிடம் ஏற்கனவே இதைப்பற்றி சொல்லியிருந்ததால், அவளிடம் “ஜாக்கிரதை” என்ற வார்த்தையைச் சொல்லி அனுப்பிவைத்தார்.

ட்ராபிக் எல்லாம் தாண்டி, சென்னை, ஆந்திரா நெடுஞ்சாலை வரவே அரைமணி நேரம் பிடித்தது.

“இன்னும் எவ்வளவு நேரமாகும் விஷ்ணு?”

“இங்கிருந்து செங்குன்றம்(ரெட்ஹில்ஸ்) ஒரு கால்மணி நேரம். அப்புறம் புதுவாயல் போறதுக்கு, அங்கேயிருந்து உள்ளே போறதுக்குன்னு, எப்படியும் அதிகபட்சம் அரைமணி நேரமாகும் அவந்தி.”

“சரி சரி பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டிருக்காத. சீக்கிரம் வண்டியை எடு” என அவனை விரட்டினாள்.

“ஹ்ம்... எல்லாம் நேரம்” என புலம்பியபடியே புதுவாயல் நெடுஞ்சாலை வந்து நின்று, அந்த பெண்ணின் கைபேசிக்கு அழைக்க, எடுத்து பேசிய வைஷ்ணவி, “மேடம்! நிஜமாகவே என்னைக் காப்பாத்த வந்துட்டீங்களா? ரொம்ப நன்றி மேடம். இதுக்குமேல சொல்ல வார்த்தையே இல்லை. நீங்க வர்றது தெரியாததால, நான் பக்கத்துல இருக்கிற சிறுவாபுரி முருகன் கோவில் வந்திருக்கேன். நான் வந்திருக்கேன்னா கண்டிப்பா அந்த பொறுக்கியும் இங்கதான் இருப்பான். இங்க வர்றீங்களா?””

“ஓ... சரிமா. ரூட் சொல்லுங்க?”

“நீங்க வந்த வழியில் திரும்பிப் போனா, சிறுவாபுரி போர்டு போட்டிருக்கும். அந்த வழியா உள்ள வாங்க. இல்லன்னா இப்ப நீங்க நிற்கிறது பெரியபாளையம் போற ரோடு. அந்த வழியிலயும் ஒரு வழியிருக்கு. இருந்தாலும், நான் பர்ஸ்ட் சொன்னதுதான் மேடம் ஈஸி. நீங்க வாங்க. நான் வெய்ட் பண்றேன்.”

அந்தப் பெண் சொன்னதுபோல், முதலில் சொன்ன வழியே சின்னம்பேடு தாண்டி சிறுவாபுரி செல்ல, கண்முன்னே வரவேற்றது அழகன் முருகனின் ஆலயம். பைக்கிலிருந்து இறங்கி கோவில் கோபுரத்தைப் பார்த்து “சண்முகா சரணம்” சொல்லி வைஷ்ணவியை அழைத்து, தன் ஆடை அடையாளங்கள் சொல்லி, “நீங்க எங்கேயிருக்கிறீங்க? அவன் எங்கே நிற்கிறான்?” என்று கேட்டாள்..

“நான் உங்களுக்கு சைடுலதான் நிற்கிறேன்” என்று யாருமறியாமல் கையசைத்து, “உங்க எதிரிலுள்ள கடையில், மஞ்சள் கலர் சேலை கட்டி, ஒரு பாட்டி இருக்காங்களே. அங்க நிற்கிறவன்தான் மேடம்” என்றதும் அவனை நேரே பார்த்தவளுக்கு அதிர்ச்சிதான்.

‘இவனா? இவன் இன்ஸ்பெக்டர் பரத். மைகாட்! இவன் இங்கேயா சுத்துறான். போலீஸ் இவனை சல்லடைபோட்டு தேடுறாங்க. ஓஹோ... குக்கிராமத்தில் வந்து ஒழிஞ்சிட்டு இருக்கிறதாலதான், இவ்வளவு ஷேஃபா இருக்கானா. என்ன இருந்து என்ன புண்ணியம். ஒரு பெண்ணால ஓடி ஒழிஞ்சவன், இன்னொரு பெண்ணால மாட்டிருக்கான்.

உடனே விஷ்ணுவிடம் விஷயம் சொல்லி, அங்கிருந்த பாதுகாப்பு காவலருக்குத் தகவல் தெரிவித்து, “என்னை அப்படியே ஃபாலோ பண்ணு விஷ்ணு. நான் உள்ள போயி, அந்தப் பெண்ணோட சேலையில, பட்டன் டேப் செட்பண்ணி விடுறேன். நீயும் அப்பப்ப நியூஸ் சொல்லிட்டேயிரு” என்று அந்தப் பெண்ணிற்கு சைகை காண்பித்து, முன்னே செல்லும்படி சொல்லி பின்னே சென்றாள்.

காலணியை உரிய இடத்தில் வைத்து, கையில் குட்டி கைப்பையுடன் வாசலுக்கு செல்லும் பொழுது, முகத்திலுள்ள சாலைக் கழற்றி, தோளில் போட்டு சரிசெய்யும் பொழுது, அவந்தியைப் பார்த்துவிட்டான் பரத். ‘இவளா! இவள் எப்படி இங்கே? இவளை முடிக்கத்தான் நேரம் பார்த்திட்டிருந்தேன். எதிர்பாராத நேரத்துல புலி, புல்லைத்தின்ன வந்திருச்சி போல’ என்று கேலிச்சிரிப்புடன் தன் பைக்கின் அருகில் சென்று, ஏதோ ஒன்றை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்தவன், உள்ளே செல்ல யத்தனிக்கையில், அந்தப்பெண் வைஷ்ணவி வெளியே வந்தாள்.

‘இவளா? அவளா?’ என குழம்பியவன், ‘இருக்கும் கூட்டத்தில், அந்த அவந்திகா கோவில் சுற்றி வரவே அரைமணி நேரமாகும். அதுக்குள்ள நம்ம கிராமத்துக்கிளியை கொஞ்சம் கரெக்ட் செய்யலாம்’ என்று வெளியே வந்தவளைக் கூட்டம் தாண்டிய இடத்தில் மறித்து நின்று, “என்ன வைஷு நானும் எத்தனை மாசம்தான் உன்பின்னாடி சுத்துறது? எனக்கு ஒரு பதில் சொல்லு?” என்றான்.

“என்ன பதில் சொல்லணும்னு எதிர்பார்க்கிற?”

“நீ... வா போ சொன்னாகூட அழகாதான் இருக்கிற. ஏன்டி இப்படி அழகாயிருந்து என்னைக் கொல்ற? எனக்கும் கொஞ்சம் கருணை காட்டமாட்டியா? அப்படியே உன்னை அணைச்சி ம்ம்ம்... என்னென்னவோ செய்யணும்போல தோணுது?” என்று விரசமாக பேசி பல்லைக்காட்டினான்.

அவனின் விரசமான வார்த்தைகளில், வந்த கோபத்தை அடக்கிய வைஷ்ணவி, “பேசாம போறியா நீ. என்னை அளவுக்கதிகமா சோதிக்கிற. இப்படியேப் பண்ணின, அப்புறம் என் ஹஸ்பண்ட்கிட்ட சொல்லி, உன்னை உண்டுயில்லைன்னு பண்ணிருவேன்” என்று மிரட்டினாள்.

“ஓ... அவ்வளவு தைரியசாலியாகிட்டியா நீ? போமா போய்ச் சொல்லு. நான் வேணும்னா கூட வரட்டுமா?” என்றான் கேலியாய்.

“நீயா? நீ வந்து என்ன செய்யப்போற?”

“நான் வந்தாதானடா, உன் புருஷன்கிட்டப் பேசி சம்மதிக்கலன்னா,,” மேலே கையைத் தூக்கிக் காண்பித்தவன், “அனுப்பி வச்சிட்டு உன்னை தூக்கி... சாரி அணைக்க முடியும்.”

அவனின் அந்த பதிலில் வைஷ்ணவி பயத்தில் உரைந்தவள், “ஏய் அவரை ஒண்ணும் செஞ்சிராத. ப்ளீஸ்” என்று கெஞ்சியபடி அழ ஆரம்பித்தாள்.

“ஏய்! சீ...சீ ஏன்டி பப்ளிக்ல வச்சி அழுற? ஒழுங்கா கண்ணைத் துடைச்சிட்டு இங்கேயே காத்திரு. நம்ம விஷயத்தைப் பேசி முடிச்சி, இன்னைக்குள்ள ஃபைனல் பண்ணிக்கலாம். எஸ்கேப் ஆகலாம்னு நினைச்ச உன் புருஷனுக்கு சங்குதான். என்னோட பழைய பாக்கி ஒண்ணு, உள்ளே போயிருக்கு. அதை முடிச்சிட்டு வந்து, நேரமும், இடமும் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்” என்று அவள் கன்னம் தொட வர...

“ச்சீய்...” என்று அருவருப்புடன் அவன் கையைத் தட்டிவிட்டாள்.

“இந்தக் கையை சீக்கிரத்திலேயே அணைக்க வைக்கிறேன் வைஷு” என்று நகர்ந்தவன் திரும்பி, “தப்பிச்சிப் போகலாம்னு நினைச்சிராத. நான் வரும்போது நீ இங்க இல்ல, விளைவு விபரீதமாயிருக்கும்” என மிரட்டிச் சென்றான்.

என்னதான் ஊடகத்தைச் சேர்ந்தவர்கள், தனக்குத் துணையாக இருக்கிறார்கள் என்றபோதும், அதையும் மீறி பயம் பிடித்தது.

அவளருகில் வந்த விஷ்ணு, “நீங்க கவலைப்படாதீங்க சிஸ்டர்” என்று அந்த டேப்பை வாங்கியவன், பரத்தை பின்தொடர்ந்தபடி, அவந்திகாவிற்கு தகவல் சொல்லிக் கொண்டிருந்தான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top