• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
7



“காமாட்சி! நீ எப்படி இங்க? எப்படியிருக்க? மாமா எங்க? பார்த்து ரொம்ப வருஷமாகிருச்சி. இவங்க நமக்குச் சொந்தமா?” என்றார் கல்யாணத்தை மனதில் வைத்து.

“மச்சான் ஒண்ணொண்ணா கேளுங்க. நான் நல்லாயிருக்கேன். அப்பா நம்மளோட இல்ல மச்சான்.”

“எப்ப?”

“அது ஆகிருச்சி ரொம்ப வருஷம். சரி நீங்க எப்படியிருக்கீங்க?” என்றதும் நன்றாகயிருப்பதாகச் சொல்ல... “இவங்க நமக்கு சொந்தம் கிடையாது மச்சான் பழக்கம்தான். நீங்க எப்படி இந்தக் கல்யாணத்துல?”

“எங்க கம்பெனியிலதான் மாப்பிள்ளைப் பையன் வேலை செய்றான்.”

“அப்படியா? சரி அக்கா வரலையா? பையன் எப்படியிருக்கான் மச்சான்?” என்றதும் “சிவா இங்கதான் இருந்தா.” சுற்றிலும் பார்வையிட்டவர் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த மனைவியை காமாட்சிக்கு அறிமுகப்படுத்தினார்.

“இவங்களையும், இவங்க பையனையும் நான் நேத்திலிருந்து பார்க்கிறேன் மச்சான்” என்றார் காமாட்சி.

“காமாட்சி உங்க ரிலேடிவா? நீங்க சொன்ன கல்யாணமாகாத முறைப்பெண் இவங்கதானா?” என்றார் கணவனுக்கு மட்டும் கேட்கும்விதமாக.

“ஆமா அவள்தான். என்னோட அத்தை மகள்” என்றார் சாதாரணமாக.

“கதிர் உங்க பையன்னு கண்டுபிடிக்க முடியல மச்சான்? அக்கா ஜாடையில இருக்கவும் எனக்குத் தெரியல.”

“என்னைத் தெரியாது. என் பையன் கதிரைத் தெரியுமா? நான் இதுக்கு முன்னாடி உங்களைப் பார்த்திருக்கேனா?” என்று சிவகாமி கேட்க...

“இல்லக்கா நான் கல்யாணத்துக்கு வரல. ஒரு பதினஞ்சி வருஷம் இருக்கும் மச்சானோட வந்திருந்தப்ப பார்த்தேன். நேத்திலிருந்து பார்க்கிறேன்தான. அப்படியிருந்தும் அவனை அடையாளம் தெரியலை.”

“பசங்க வளர்ச்சி அப்படி.”

“திருகிட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவா. நீங்க எங்க வீட்டுக்கு கண்டிப்பா வரணும்” எனும்போது, “உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணுமே” என்று சிவகாமி கேட்க, சரியென்று காமாட்சி தலையாட்டும் போதே... “இல்லமா. நாங்க கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பிடுவோம்” என்றார் குரு.

“இந்த சாக்குபோக்கெல்லாம் ஆகாது மச்சான். அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வரும். அக்கா எங்க ஊரு ஆஞ்சநேயர் ரொம்ப பிரசித்தமானவர். அவர்கிட்ட வேண்டியது எல்லாம் அப்படியே நடக்கும். நம்ம தோட்டம்லாம் இருக்கு. வந்து ஒருநாள் தங்கிட்டுப் போங்க.” அவரின் மறுப்பை உணர்ந்து “நீங்க வர்றீங்க. இருங்க திருவ கூட்டிட்டு வர்றேன்” என்று குரு பேச இடம்கொடுக்காமல் அங்கிருந்து நகர்ந்தார்.

சிவகாமிக்குள் ஒரு சந்தோஷம் வந்தபோதும் “என்னங்க இப்படிச் சொல்லிட்டுப் போறாங்க. தாலிகட்டு முடிஞ்சதும் சாப்பிட்டுக் கிளம்பிடலாம்னு நினைச்சோமே” என்று முகத்தை அப்பாவியாக வைத்தார்.

“சிவா யாருக்காகவும் ஊருக்குப் போறதைத் தள்ளிப்போட முடியாது. இன்னைக்கே கிளம்புறோம்” என அழுத்தமாகச் சொல்லவும் சிவகாமியின் முகம் சுருங்கிப்போனது.

“ப்ச்.. நாளையிலிருந்து அதே ஜெயில் வாழ்க்கையா. ரொம்ப மோசம் கடவுளே நீ!” என கடவுளைத் திட்ட...

“என்ன சிவா சைலண்டாகிட்ட?”

“ஒண்ணுமில்லங்க. எப்படா வீட்டுக்குப் போவோம்னு இருக்கு. சரி நான் பொண்ணைப் பார்த்துட்டு வர்றேன்” என்று சென்றார்.

மனைவியின் இறங்கிய குரலிலேயே மனம் புரிந்தவர், ‘செய்யுறதுக்கு எதுவும் இல்ல சிவா. எனக்கு நீங்க ரெண்டு பேரும் முக்கியம். இங்க இருக்கிற ஒவ்வொரு செகண்ட்டும் நெருப்புல காயுறேன். சொன்னா புரிஞ்சிப்பியா நீ?’ மனம் எதையெதையோ நினைத்தது.

மணமகள் அறையிலிருந்து திருமொழி வருவதைப் பார்த்த கதிர் அவளிடம் பேசவென்று அருகில் செல்கையில் அவள் பார்வையில் கனலுடன் யாரையோ வெறிப்பதைக் கண்டான். யாரென்பதாய் அவர்களைக் காண, ஏனென்று தெரியாமலேயே கதிரின் கண்களும் அவர்களை துவம்சம் செய்தது. பிரஷாந்திற்கும் அதே நிலையே!

கதிர் தன்னைச் சமாளித்து திருவை அங்கிருந்து அழைத்துப்போக எண்ணி அவள்புறம் செல்லும்போதுதான் பிரஷாந்தையும் பார்த்தான். ‘இவன் ஏன் இப்படி நிற்கிறான்?’ புரியவில்லை அவனுக்கு. தனக்கே தன்னைப் புரியவில்லை எனும்போது அவர்களை எப்படிப் புரியும் என்று திருவிடம் செல்ல, அவளோ ஒருவித வெறியுடன் அவர்களை நோக்கி இரண்டெட்டு எடுத்து வைத்தாள்.

அவளின் பார்வையும் முகபாவங்களும் சம்ஹாரம் செய்யும் காளியாய் தோன்ற, அவள் முன் மறித்தபடி நின்று, “இங்க என்ன பண்ற ஏர்போர்ட்? உன்னை நிஷா அம்மா கூப்பிட்டாங்க. வா போகலாம்” என்றான்.

அவன் மறித்ததுமே தன் மாயையிலிருந்த வெளிவந்தவள், தனக்கும் அங்கிருந்து செல்வது சரியென்று தோன்ற அவனுடன் செல்ல, அப்படியே பிரஷாந்தையும் இழுத்துச் சென்றான் கதிர்.

“அட கார்மேகம்தானப்பா நீ? எப்படியிருக்க?” என்றபடி அங்கு அமர்ந்திருந்த கார்மேகம் குடும்பத்தினரிடம் வந்தார் குருமூர்த்தி.

ஆம்! யார் இளநாதன் மங்கையர்கரசி குடும்பத்தை அழித்துச் சிதைத்தார்களோ அதே கார்மேகம் குடும்பத்தினர்தான் அங்கிருந்தது. மங்கையர்கரசியின் கோபமும் ஆத்திரமும் சரிதான். ஆனால், கதிரும், பிரஷாந்தும் ஏன் அவர்களை வெறித்தார்கள்? விடையறியா கேள்விகள்! விடைகள் தேடி!”

“அன்னைக்குக் கோவில்ல பார்த்ததோட சரி. அப்பவும் நின்னு பேச நேரமில்ல. அப்புறம் இப்பதான் பார்க்கிறோம்.”

யாரென்று தெரிந்ததும் கார்மேகம் சின்ன தயக்கத்துடன், “ஆமா மச்சான். நீங்க எப்படியிருக்கீங்க? இது என் மனைவி செல்வரசி. என் பையன் ஜெயராம். அவனோட மனைவி ப்ரியா. அவனோட ரெண்டு பொண்ணுங்க” என்று அறிமுகப்படுத்தினார்.

“வணக்கம்மா ஒரு முறைதான் உன்னைப் பார்த்திருக்கேன். என் முகம் உனக்கு மறந்திருக்கும்” என்றதும், செல்வரசியும் சின்னப்புன்னகையுடன் ஆமென்று சொல்ல... “அப்புறம் மத்த பையன்கள் எங்க?” என்றார் கார்மேகத்திடம்.

“சின்னவன் ஸ்ரீராம் வெளிநாட்டுல படிப்பை முடிச்சி அங்கேயே வேலை பார்க்கிறான். ஊருக்கு வந்து ஒரு வாரமாகுது. வர்ற வழியில ப்ரண்டைப் பார்க்கப்போறேன்னு கிளம்பிட்டான்.”

“இன்னொருத்தன் என்ன பண்றான். அவன் அப்படியே உன் ஜாடைபா. நல்ல துடிப்பானவன்” என்றார்.

“ஹ்ம்.. ஆமா. ஆனா, அவன் இல்ல. ஒரு ஆக்சிடெண்ட்ல செத்துட்டான்” என்றதில் செல்வரசியின் முகம் கடுங்கோபத்திற்குச் செல்ல பின் கண்மூடித் தன்னை இயல்பாக்கினார்.

“ஓ... சாரிப்பா” என்றார் குருமூர்த்தி.

“விடுங்க மச்சான். அது நடந்து பதினைந்து வருஷமாச்சிது.”

“அடுத்த பையனுக்கு கல்யாணம் முடிஞ்சதா? முடியலன்னா எப்ப கல்யாணம்?

“முப்பது வயசாகுது மச்சான். சீக்கிரமே முடிக்கணும்.”

“வீட்டுக் கடைசிக் கல்யாணத்துக்காவது என்னைக் கூப்பிடணும் சரியா. இந்தா என்னோட கார்ட்” என நீட்ட, அப்பொழுதுதான் கவனித்தார் கார்மேகத்தின் கையை. “கைக்கு என்னாச்சி?” சக மனிதனாய் பதறினார்.

“ஒண்ணுமில்ல மச்சான். பையன் ஆக்சிடண்டானப்ப...”

“அச்சோ இதைக் கவனிக்கல. தங்கச்சி இந்தக் கார்டைப் பிடிமா. எப்ப வேணும்னாலும் என்னைக் கூப்பிடுங்க.”

“உங்க பையன் வந்திருக்கானா?”

“குடும்பத்தோடதான் வந்தோம்பா. இதோ பார்த்து கூட்டிட்டு வர்றேன்” என்று நகர...

“யார்ப்பா அது?” என்ற ஜெயராமிடம், “எங்கம்மாவுக்கு இவரோட அப்பா அண்ணன் முறை. அதிகம் பழக்கமில்லன்னாலும் இதோ இப்ப மாதிரி பார்த்தா பேசிக்கிற உறவுதான்.”

“என்ன மொழி ஏன் அங்கிருந்தவங்களை அப்படி முறைச்ச? உனக்கு அவங்களைத் தெரியுமா? விட்டா அவங்களைக் கொலை பண்ணிருப்ப போல. ஏன் அவ்வளவு கோபம்? அன்ட் யூ பிரஷாந்த் ஏன் அப்படிப் பார்த்த?” அவர்களிடம் கேள்வி கேட்டாலும் பதிலில்லாமல் அதே நிலையிலிருக்க ‘தானும்தான் ஏன் அப்படிப் பார்த்தோம். அவர்களைக் கொல்ல நான் யார்? அந்த வெறி என்னுள் ஏன்?’ என்று தோன்றியது. இன்னுமே அந்த உணர்வு மாறவில்லைதான். ஏனென்ற கேள்விக்கு சிறிதளவும் விடையில்லை அவனிடம். ஏனெனில் அவர்களை இன்றுதான் முதன்முறையாகப் பார்க்கிறான்.

“விட்ருந்தா அவனுங்களைக் கொன்றிருப்பேன் சார்” என்ற திடீரென்ற திருமொழியின் ஆக்ரோஷப் பதிலில் தன்னுள்ளே மூழ்கியிருந்தவன் சடனாக அதிர்ந்து “ஏன் மொழி?” என்றான்.

“ஏன்னு பதில் சொல்ல இப்ப நேரமுமில்லை காலமுமில்லை. இவங்களைப் பழிவாங்க என் இளா அத்தான் வருவாங்க” என்றாள் ஆக்ரோஷம் குறையாது.

அந்த நிமிடம் அவள் கண்களில் அப்படி ஒரு ரௌத்திரம். தன் தாய் சொன்னதை வைத்து, “அவர் வரவேயில்லை... சாரி ஒரு பேச்சுக்குச் சொல்றேன். அவர் இல்லவேயில்லன்னா என்ன பண்ணுவ?” என்றான் அவள் மனதில் உள்ளதைத் தெரிந்துகொள்ள.

அவன் சொல்லி முடித்த அடுத்த வினாடி, “ஏய்!” என்று கத்தியவள் அவனது சட்டைக்காலரைப் பிடித்து, “என் இளா அத்தான் வருவாங்க. வந்தே தீருவாங்க. அப்படி வரல சாமின்னு ஒண்ணு இல்லவேயில்ல. நீ சொன்ன மாதிரி இல்லவே இல்லன்னா, இந்த மங்கையர்கரசியும் இல்ல. மறுபிறப்பெடுத்துனாலும் அவங்களைப் பழிவாங்க வருவேன் சொல்லியிருக்காங்க. கண்டிப்பா என் இளா அத்தான் வருவாங்க. எப்ப அவனுங்களை நேர்ல பார்த்தேனோ அப்பவே அத்தான் வருவாங்கன்ற நம்பிக்கை வந்திருச்சி.”

“மூணு தலைமுறையிலும் எஞ்சியது கடைசித் தலைமுறையான இந்த மங்கையும் என் இளநாதனும்தான். எங்களோட இந்தத் தலைமுறையை அழிய விடமாட்டோம். இன்னொரு முறை என் அத்தானை இல்ல சொன்ன உன்னை சம்ஹாரம் பண்ணிருவேன்” என்றாள்.

“அக்காஆஆ...” என்ற அதட்டலில் திருவின் ஆக்ரோஷம் குறைய, தன்னிலை உணர்ந்தவள் கதிரின் சட்டையிலிருந்த கையை வேகமாக எடுத்து தலையைப் பிடித்தபடி அமர்ந்தாள்.

“நீங்க அப்படிப் பேசியிருக்கக்கூடாது சார். தப்பாப் பேசினா எனக்குப் பிடிக்காது. நீங்க உங்க லிமிட் தாண்டிப் பேசிட்டீங்க” என்றாள் தலைநிமிராமலே.

அவளையேப் பார்த்தபடி நின்றிருந்தான் கதிர். திருமொழியின் இந்த ஆவேசத்தில் சற்று பயந்துவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். ‘ஒரு பெண்ணின் உடல் வலிமை இந்தளவிற்கு உள்ளதென்றால் இவள் மனதின் வலி அதைவிட ஆயிரம் மடங்கு இருக்க வேண்டுமே! இவளின் இளா அத்தான் வருகிறானோ.. இல்லையோ... இவளிடம் உண்மையறிந்து அதைத் தானே முடித்துக் கொடுக்கும் வேகம் வந்தது.’ அத்தோடு இனி திருமொழி தனக்கு எப்பவுமே சொந்தமாகப் போவதில்லை என்ற உண்மையையும் உணர்ந்தபோது அது தன்னுள் பெருவலியை ஏற்படுத்தினாலும் அதைத் தனக்குள்ளே புதைத்து அவளிடம் வந்தான்.

“உன் உண்மையான பெயர் மங்கையர்கரசி. அப்படித்தான?”

“இல்ல. நா..நான் திருமொழிதான்.”

“அப்ப இவ்வளவு நேரம் என்கிட்டப் பேசினது உனக்குள்ளிருந்த ஆவியா? ஓ... அன்னைக்கு உனக்குள்ள உள்ளவ அமைதியானவள் கிடையாது சொன்னியே. அவள்தான் மங்கையர்கரசியா?”

“நா..நான் எப்ப?” திணறியவளைக் கைநீட்டித் தடுத்து “கனவுலதான் சொன்னன்றது உனக்கும் தெரியும்” என்றான்.

இருவருக்கும் கனவுகளில் ஏன் ஒற்றுமை என்ற கேள்வி இருவருக்குள்ளும் இருந்தபோதும், அதை வெளியில் சொல்லி இன்னொரு குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.

“க..கனவுதான. இப்ப நடந்ததையும் கனவா நினைச்சி மறந்திருங்க.”

“நீ மறந்திருவியா? அப்புறம் இப்பப் பார்த்தவங்களையும்?”

‘அவங்களை மறக்கிறதா? அவங்களை ஏன் மறக்கணும்? அவங்க சாவு என் கையில்’ என்பதாய் அமர்ந்திருந்தான் பிரஷாந்த் என்று ஏழு வயதில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட, மங்கையர்கரசியின் உடன்பிறந்த தம்பி அன்பழகன்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
அன்று மழையில் கார்மேகத்தின் கையில்லாத உருவம் பார்த்து பாதி அரண்டிருந்த தன்னைக் கொல்ல அருவாள் நெருங்கும் சமயம், “அண்ணே நிறுத்துங்க” என்று தடுத்து அவனை இறக்கி தன்னருகில் நிற்கவைத்து அவய்ங்க வீட்ல மிஞ்சினது இவன் மட்டுந்தேன். இவனையும் கொன்னுட்ட பெறவு நீங்க நினைச்ச மாதிரி சொத்து வந்தா பரவாயில்ல. வாரிசில்லா சொத்துனு எல்லாத்தையும் அரசாங்கம் எடுத்துக்கிட்டா, இவய்ங்களையெல்லாம் கொன்னதுக்கு அர்த்தமே இல்லாம போயிருமேண்ணே” என்றான் விசுவாசமாக.

“அட ஆமா. நீ சொல்றது ரொம்ப சரி. நானும் யோசிக்காம விட்டுட்டேனே. இவன் குடும்பத்துலயே இவன் ஒருத்தனுக்கு மட்டும்தான் இன்னும் பதினைந்து வருஷம் உயிரோட வாழணும்னு விதியிருக்கு. சொத்துக்கு வாரிசு இருக்கிறதால அரசாங்கத்தை எப்படி ஏமாத்தணும்னு எனக்குத் தெரியும். சரிடா இப்ப இவனை என்ன பண்ணலாம் சொல்லு?”

“சின்னப்பயதான அண்ணே சீக்கிரமே எல்லாத்தையும் மறந்திருவான். என் பெரியப்பா பையன் ஒருத்தனுக்குக் குழந்தை கிடையாது. இவன் பிறப்பை மறைச்சி வளர்க்கச் சொல்வோம்.”

“சரிடா. தேவைனா இவனைக் காண்பிச்சி பவரை என் பேர்ல எழுதி வாங்கிக்கறேன். பெருசானதும் முழுசையும் எழுதி வாங்கிட்டு போட்டுரலாம்.”

“சரிங்கண்ணே. நீங்க பையங்களைக் கூட்டிட்டுக் கிளம்புங்க. தேவைப்பட்டா என்னைக் கூப்பிடுங்க” என்று அன்பழகனை குழந்தையில்லாத உறவினரிடம் ஒப்படைத்துச் சென்றான்.

அன்பழகனின் பயந்த நிலையைப் பார்த்து, அவனுக்கு எதாவது ஆகிவிடுமோ என அவர்கள் பயந்த வேளையில் ஒருமுறை அருவாளுடன் ‘வெட்டப் போகிறேன்’ என்று சிறுவன் கிளம்ப தனக்குக் குழந்தையே வேண்டாமென்று தந்தவனிடமே அவர்கள் திருப்பிக் கொடுத்தார்கள்.

அப்பொழுது அருகிலிருந்த ரத்தினம், பத்மினி தம்பதியினர் அவனைத் தாங்கள் வளர்ப்பதாகச் சொல்லி, தன் பெரிய பையனின் பெயருடன் தொடர்புப்படுத்தி அன்பழகனை பிரஷாந்த் என்று மாற்றினார்கள்.

அவன் வந்த புதிதில் ஏழுவயதுப் பையனுக்குரிய குணங்கள் எதுவுமில்லாமல் பதினேழு வயதுப் பையனின் உடல் வீரியமிருக்க, இடியும் மழையும் வரும் சமயங்களில் ஒருவித வெறியுடன் அவன் நடந்து கொண்டான். அதிலிருந்து அவனை மீட்டெடுக்கவே கிட்டத்தட்ட ஆறுமாதங்களானது அவர்களுக்கு. ஹாஸ்பிடல் கவுன்சிலிங் என்று அலைந்து அதிலிருந்து அவனை மீட்டதும்தான் ஏழு வயதுப் பையனுக்குறிய குண இயல்புகள் திரும்பியது. இருப்பினும் இடி மின்னலென்றால் ஒரு நிமிடம்கூட வெளியிலிருக்க மாட்டான்.

இப்போதைய தன் குடும்பத்தவருக்கும் கார்மேகத்திற்கும் தொடர்பு இருக்கிறதென்பதை இதோ மணமேடையின் முன்வரிசையில் அமர்ந்திருப்பதைக் கண்டே உணர்கிறான்.

அன்பழகனுக்கு எதுவும் மறக்கவில்லை. அவன் மனதில் பதிந்த உயிரைப் பிழிந்தெடுத்த அந்நிகழ்வுகள் என்றும் மாறா வடுக்களாய் அவன் மனதில். அங்கு கண்ட அந்த உருவங்கள் எதுவும் மறந்தானில்லை அவன். குழந்தையிலிருந்தே பார்த்து வளர்ந்ததால் கார்மேகம் என்ற உறவு அவனுள் ஆழப்பதிந்திருந்தது. அத்துடன் சேர்த்து வன்மமும்.

“அப்படியென்றால் நான் பலிகொடுப்பதற்காகத்தான் வளர்க்கப்பட்டேனா? என்மேல் இவர்கள் வைத்த பாசம் பொய்யா? பலி... யார் யாரைக் கொடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொருத்திருந்து பார் கார்மேகம்” என்றான் மனதினுள் கொந்தளித்தபடி.

கண்களில் மின்னிய கனலுக்கு நடுவே தங்கத்தாரகையாய்த் தெரிந்தாள் அவள். இதுவரை உறவாக இல்லாமல் போனாளே என வருத்தப்பட்ட திருமொழியாகியவள். ‘என் அக்கா மங்கையர்கரசி! இரத்த உறவென்பது இதுதானா! என்னையறியாமல் என் அக்காவை அறிந்தேனா! எது இழுக்கிறது உன்னிடம் என்பதை ஆராய்ந்து தோற்றுப்போன நான் உன் உடன்பிறப்பு அக்கா. என் குடும்பத்தில் நீ மிச்சமிருக்கிறாய்! இது போதும் அக்கா எனக்கு. இளா என்ற பெயர் கேட்டபொழுது என் மனமும் சலனமடைந்ததற்குக் காரணம் இதுதானா!’

‘உன் நம்பிக்கை எப்பொழுதும் ஜெயிக்கட்டும்கா. என் உயிருக்கு எப்பொழுதும் உத்திரவாதமில்லை. உன்னைப் பொருத்தவரை பிரஷாந்த் என்ற அடையாளத்துடன் மட்டுமே உன்னுடன் இருக்கிறேன். உன்மேல் தூசுபடாமல் உன்னை அவர்களறியாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்கா.’ அக்காவைக் கண்ட கண்கள் அவ்வளவு நேரமிருந்த வெப்பத்தை அணைக்க அவன் கண்களில் சந்தோஷத்தில் ஈரம் சுரந்ததோ!

“நான் யாரைப் பார்த்தேன்னு உங்களுக்கெப்படித் தெரியும்?” திருமொழி கதிரிடம் கேட்டாள்.

“ஏன்னா நானும் நீ பார்த்தவங்களைத்தான் பார்த்துட்டிருந்தேன்.”

“ஏன்?” என்பதாய் அவள் பார்க்க...

“ஏன்னு காரணம் தெரியல. ஏதோ முன் ஜென்மப் பகை மாதிரி ஒரு ஃபீல். அவங்களை எதாவது பண்ணனும்னு மனசு சொல்லுது.”

‘இவருக்குத் தன் அக்காமேல் இருக்கும் காதல் நிறைவேறாதே!’ எண்ணியபடி கதிரைப் பார்த்தான் பிரஷாந்த். ‘இளா அத்தான் வருவது நடக்குமா? நான்தான் பார்த்தேனே மலையிலிருந்து விழுந்ததை. அங்கு காப்பாற்றக் கூட ஆள் இல்லையே. அப்புறம் எப்படிப் பிழைத்திருப்பாங்க? இதோ இந்த கதிர் என் அக்காவை நன்றாகப் பார்த்துக்கொள்வார். கடவுளே! என் அக்கா இவரைத் திருமணம் செய்யச் சம்மதிக்கணுமே.’ விவரமறிந்து கடவுளையே வேண்டியிராதவன் தன் அக்காவின் நல்வாழ்விற்காய் வேண்டினான்.

கடவுள் கண்திறப்பாரா!

‘என் அக்காவைக் குறை சொன்னதற்கே கோபப்பட்டவர். இவளை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டார். ஒருவேளை இளா அத்தான் உயிருடன் வந்தால்? வேண்டாம். அவர் வந்தாலும் அக்கா சொன்னதுபோல் பழிவாங்குகிறேன் என கிளம்பி என் அக்காவின் வாழ்க்கை போராட்டத்துடனே முடிந்துவிடும். அக்காவின் வாழ்வு வசந்தமாகட்டும். அவள் உயிர் தேடும் பூ கதிராகவே இருக்கட்டும். முள்ளான இளா வேண்டாம்.’ தன் சாவிற்கு முன் திருமணத்தை நடத்திவிட மனம் ஏதோ உறுதியெடுத்தது. அதற்கான முதலடியையும் எடுத்து வைத்தான்.

“நீங்க எந்த ஊர்? இப்ப எங்கயிருக்கீங்க கதிர் சார்?”

“நேட்டிவ் மதுரை சொன்னாங்க அம்மா. விவரம் தெரிஞ்சி ஹைதராபாத்லதான் இருக்கிறது.”

“என்ன தொழில் செய்றீங்க?”

“சிவகுரு இன்டஸ்ட்ரீஸ்ன்ற பெயர்ல உதிரிபாகம் தயாரிக்கிற கம்பெனி வச்சிருக்கோம். இப்பவரை ஒரு கம்பெனிதான். அடுத்த வருஷம் பெங்களுர்ல ஒரு கம்பெனி ஆரம்பிக்க ரெடி பண்ணியாச்சி. அப்புறம் உன் அண்ணனுக்கு நான்தான் பாஸ் மறந்துட்டியா? இப்ப தெரியுதா என்ன செய்றேன்னு? கேட்டு மென்மையாய் சிரிக்க...

“சாரி” என சற்று அசடுவழிந்து “கல்யாணம் முடிஞ்சிருச்சா?” என்றான் விடாது.

“உனக்கே இது ஓவராத் தெரியலையா? கல்யாணமானவன் பேரண்ட்ஸைக் கூட்டிட்டா அலைவான்.”

“ஓ... அப்பக் கல்யாணத்துக்குப் பிறகு அப்பா அம்மாவை கழட்டி விட்ருவீங்களா?” மனதிற்குள் சின்னதான வருத்தம் பிரஷாந்திற்கு. கதிர் மேல் அளவுகடந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருப்பவனுக்கு அப்படியில்லையென்றால் தான் நினைத்தது தவறாகிவிடும் என்ற எண்ணமே!

“பெத்தவங்க என்ன கழுத்துல போட்டிருக்கிற செயினாடா.. நினைச்சதும் கழட்டிப்போட. என்னைத் தயாரிச்ச ப்ரொடியூஸர்ஸ்டா. மனைவின்னு ஒருத்தி இருந்திருந்தா அவளையும் இழுத்துட்டு வந்திருப்பேன்னு சொல்ல வந்தேன்” என்றான் நிதானமாக.

அவனின் அந்த நிதானமான பொறுமையான பதில் அன்புவிற்கு யாரையோ நினைவுபடுத்தியது. “உங்க வயசென்ன சார்?” என்றான் அடுத்த கேள்வியாய்.

“தர்ட்டி ஒன். என்னடா பையா இன்டர்வியூலாம் பலமாயிருக்கு. பொண்ணு எதுவும் கைவசம் இருக்கா என்ன?” என்று கண்ணடித்துச் சிரிக்க...

சற்றுத் தடுமாறினாலும் ‘இளா அத்தானை விட இரண்டு வயசு அதிகம்தான். சோ வாட்? கேரக்டர்தான் முக்கியம். அது இவர்கிட்ட அதிகமாகவேயிருக்கு.’ மனதில் நினைத்தபடி சகோதரியைக் கண்டவன் கதிரிடம் திரும்பி “அப்படித்தான்னு வச்சிக்கோங்களேன்” என்றான் பதிலுக்குக் கண்ணடித்து.

அவன் பார்வை சென்றயிடம் உணர்ந்து முகம் பளிச்சென்றாகி, பின் உண்மை நிலவரம் உணர்ந்து கதிரின் முகம் வாடியது.

“நம்பிக்கை அதானே எல்லாம்!” கதிரைப் பார்த்து பிரஷாந்த் கண்சிமிட்ட...

“டேய் மாப்ள!” என்றான் இளங்கதிரானவன்!
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top