- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
7
பத்து ஆண்டுகளுக்கு முன்:
தன் சுறுசுறுப்பால் வீட்டையே ரணகளப்படுத்தி மற்றவர்களை ரசிக்கவும் வைத்தாள் ஹரிப்ரியா. வீட்டின் முன்புறமுள்ள மரத்தில் ஏற கால் வைக்கையில், “பாப்பா என்ன பண்ற?” என்ற கேள்வியோடு வந்த மீனா அக்கம் பக்கம் சுற்றிப் பார்க்க யாருமில்லை என்றதும் வீட்டிற்குள் அழைத்துச் சென்று, “இப்படில்லாம் செய்யக்கூடாதுமா. பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்கள்ல?” என்றார் பொறுமையாக.
“ஏன் தப்பா நினைக்கணும்? இது நம்ம வீடு உன்னிஷ்டம் போல இருன்னு சொன்னீங்க. என் வீட்டுல விளையாடுறதுக்கு யார் என்னை தப்பா நினைப்பாங்க?”
“பாப்பா புரிஞ்சிக்கோ. நீ ஒண்ணும் குழந்தையில்ல. வயசுக்கு வந்த பொண்ணு இந்த மாதிரி மரம் ஏறக்கூடாது. பொம்பளைப் பிள்ளை வேற எதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சிதுன்னா யார் உன்னை கட்டிப்பாங்க?”
இருவரின் வாக்குவாதங்களையும் சிரித்தபடியே கேட்டு வந்தவன், “என்ன காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா? ம்.. சூப்பர் நீங்க சண்டை போடுங்க. நான் என்ஜாய் பண்றேன்” என அங்கேயுள்ள சேரில் அமர்ந்தான்.
“நீங்க இப்படி சொல்றீங்க. சித்தி நினைச்சாப்ல உட்கார்ந்திருற நேரத்துல அங்கயிங்க குதிக்காத சொல்வாங்க. வயசுக்கு வந்த பிள்ளைங்க தான பாட்டி பயப்படணும். நான் எதுக்கு பயப்படணும்?” என்றாள் பதில் கேள்வியாய்.
மூளை மரத்துப் போனாற்போல் புரியாமல் “என்ன சொல்ற பாப்பா?” என்ற மீனாவிற்கு பெரிதாக எதோ வரப்போகிறது என்ற எண்ணம் தோன்றியது.
“புரியலையா? மண்டு மண்டு! நான் தான் இன்னும் வயசுக்கு வரலையே. அப்ப நான் மரம் ஏறலாம் தானே!” என்று அசராமல் இடியை இறக்கினாள்.
“பாப்பா!” என இருவரம் ஒருசேர அதிர்ந்து, “நீ சொல்றது நிஜமா?” என்றனர்.
“ஆமா பாட்டி. என் க்ளாஸ்லயே நானும் ஃபாத்திமாவும் தான் ஏஜ் அட்டெண்ட் பண்ணாதவங்க” எனும்போதே அவர்கள் ஏமாந்த விதத்தின் அளவு ரொம்ப அதிகமாகப் பட்டது.
‘இப்படியும் ஒரு குடும்பம் இருக்குமா? சின்னப் பெண்ணை... அதுவும் வயதுக்கே வராத பெண்ணை முப்பத்திநாலு வயதுள்ளவனுக்கு மணமுடிக்க எப்படி மனம் வந்தது?’ நெஞ்சம் கொதித்தது தாய்க்கும் மகனுக்கும். ‘ஹ்ம்.. நல்ல சாப்பாடு துணியில்லாமல் வளர்ந்த பொண்ணு சீக்கிரம் வந்தால்தான் ஆச்சர்யப்படணும்’ என மீனா நினைக்க... அனைத்தையும் வேறு வழியில்லாமல் தங்களுக்குள் ஜீரணித்து அவள் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தார்கள்.
“எங்க க்ளாஸ்ல நாலஞ்சி பிரிவு இருக்கும் பாட்டி. அதுல ரெண்டு க்ரூப் எப்பப்பாரு அசிங்கமா பேசுவாங்க. இன்னும் ரெண்டு க்ரூப் வேடிக்கை பார்ப்பாங்க. இல்ல சினிமா பத்தி பேசுவாங்க. இன்னொரு க்ரூப் பாய்ஸ் பத்தியே பேசுவாங்க. ஆனா ராசாத்தி மட்டும்தான் படிச்சிட்டிருப்பா. ராசாத்தி யாரு பார்க்கறீங்களா? அது நான் தான்” என்றாள் வெட்கத்துடன்.
அவர்களுக்கு புரிந்தது அவள் அனைத்தையும் கவனிக்கிறாள் என்று. அவளுக்கு பதில் சொல்ல எண்ணி, “ராசாத்தின்றது நீயா? ஏன் இதுவரை எங்ககிட்ட சொல்லலை” என பொய்யான கோபத்துடன் கிரி கேட்க..
“நீங்க என்கிட்ட கேட்கலையே மாமா. அப்புறம் எப்படி சொல்றது. இப்பக்கூட நீங்க கேட்கலை தான். ஆனா, சொல்லணும்னு தோணிச்சி சொல்லிட்டேன்.”
“சரிமா. ஏன் உன்னை இப்பவே இங்க (கல்யாணம் என்பதை சொல்லாமல்) அனுப்பி வச்சாங்க?”
“அது ஒரு பெரிய்யயய கதை மாமா.”
“பரவாயில்ல பாப்பா சொல்லு. நாங்களும் முழுசா கேட்டுக்கறோம்.”
“அப்ப சரி” என்று மீனாவின் அருகில் அமர்ந்தவள், “எங்க ஸ்கூல் மாப்பாளையம்ல (மஹபூப்பாளையம். மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து முதல் ஸ்டாப்! கம்பம் தேனி போகும் வழி) இருக்கு பாட்டி. நாங்க வர்ற பஸ்லதான் பாத்திமா காலேஜ் ஸ்டாப்பிலிருந்து லெவன்த் படிக்கிற அக்கா ஏறுவாங்க. அவங்க எங்க ஸ்கூல்தான். அவங்களுக்கு எங்க ஊர் அண்ணா ஒருத்தர் லெட்டர் குடுத்து விடுவாங்க. இது டெய்லி நடக்கும். ஒரு நாள் அந்தண்ணா வீட்லயிருந்து சித்தியைப் பார்க்க அவங்கம்மா வந்திருக்காங்க.”
அன்று ஹரிப்ரியாவின் சித்தி சரிதாவிடம் வந்த பெண், “உன் பெண்ணை கண்டிச்சி வளர்க்கத் தெரியாதா? பிள்ளையா இது! வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே காதல் கல்யாணம்னு அலையுது. விவரம் தெரிஞ்சிட்டா ஒரு பயலை விடமாட்டா போல. அவங்கப்பன் மாதிரி எவனையாவது இழுத்துட்டுப் போகப்போறா. ஜாக்கிரதையா இரு. இனிமேல் என் பையன் இருக்கிற பக்கம் அவளைப் பார்த்தேன், கொன்னு புதைச்சிருவேன்” என கத்திவிட்டுச் சென்றாள்.
சிறு குழந்தை முதல் பார்த்துப் பார்த்து வளர்த்த ஹரிப்ரியாவின் சித்தி சரிதாவிற்கு இது பெரிய அவமானமாகப்பட்டது. மாலை வீடு வந்த அக்கா மகளை அடி பின்னியெடுத்து விட்டாள்.
“வயசுக்கு வர்றதுக்கு முன்னாடி உனக்கு ஆண் துணை கேட்குதாடி. உன்னை யாரும் எதுவும் சொல்லிரக்கூடாதுன்னு பார்த்துப் பார்த்து வளர்த்தேனே. எல்லாத்தையும் கெடுத்துட்டு வந்து நிற்குறியே. இந்தப் பெயரெடுத்துக் குடுக்கவா, உன் பொறுப்பை நான் எடுத்து வளர்த்து படிக்க வச்சிட்டிருக்கேன். உங்கம்மா போயி உங்கப்பனால நீ சீரழிஞ்சிறக் கூடாதுன்னு நினைச்ச எனக்கு நல்ல பெயர்தான் வாங்கி குடுத்திருக்க. உன்னை இப்படியே விட்டா சரிவராது. இந்த பரீட்சை முடியுறதுக்குள்ள எதாவது பண்றேன்” என்றவளுக்கு அக்கா மகளிடம் என்ன நடந்ததென்று கேட்கும் நிதானம் தவறிப் போனதுதான் கொடுமை. வரக்கூடாத பழி வந்ததும் கோபம் தன் வளர்ப்பு தவறாகிவிட்டதென்று.
அதே சமயம் தூரத்து உறவினர் ஒருவர் கிரிதரனுக்கு பெண்ணே அமையவில்லை நல்ல குடும்பம். தங்கமான பையன் என்று சரிதாவிடம் புலம்ப... “தெரிந்த பெண் இருக்கிறாள். ரெண்டு நாள் டைம் குடுங்க” என்று முகவரி வாங்கி, தன் அக்கா மகளை ஸ்டூடியோ அழைத்துச் சென்று சேலைகட்டி கொஞ்சம் முதிர்ந்த பெண்ணாக காண்பிக்கச் சொல்லி ஃபோட்டோகிராபரிடம் சொன்னாள்.
மறுநாளே அந்த பையன் பற்றிய உண்மை தெரிய, தன் அக்கா மகளை அசிங்கப்படுத்திய பெண்ணிடம் நேரே சென்று, “என் அக்கா பெண்ணை நீங்கள்லாம் பேசுற அளவுக்கு தரக்குறைவா வளர்க்கல. உங்க பையன் எங்க வீட்டுப் பொண்ணோட வெகுளித்தனத்தை உபயோகிச்சிகிட்டான். உங்க பையன் காலேஜ் போகும் போது பின்னாடியே போயி ஃபாத்திமா காலேஜ் ஸ்டாப்ல, பதினொன்னாவது படிக்கிற பாண்டியம்மான்ற பொண்ணு ஏறுவா அவளைப் பிடிங்க. எல்லாம் தெரியும். முழுசா எதுவும் தெரியாம அடுத்த வீட்டுப் பொண்ணுங்க மேல சேற்றை அள்ளிக் கொட்டாதீங்க” என விருவிருவென்று வீடு வந்தவளுக்கு மனது கேட்கவில்லை.
‘சே... அவசரப்பட்டு போட்டோ வேற எடுத்து சின்னப் பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடிவு பண்ணிட்டேனே” என வருந்தினாலும், ஒரு மனம் ‘இப்ப சின்னப் பொண்ணு. இனிமேல்தான் அவளின் வளர்ச்சியே இருக்கு. எதாவது தப்பாச்சின்னா எல்லாரும் என்னைக் காரித் துப்புவாங்களே’ என்ற எண்ணம் தோன்றியது.
பையன் வீட்டைப் பற்றி விசாரிக்கையில் அம்மா மகன் இருவருக்கும் யாரையும் அதிர்ந்து பேசியோ, இல்லை வம்பு வழக்கென்றோ இதுவரை இருந்ததில்லை. நல்ல குணம். நல்ல குடும்பம் என்றறிந்ததும், இரண்டாம் நாளே அந்த உறவினரிடம் போட்டோவைக் கொடுத்து பெண் பார்க்க வரச்சொல்ல... அவரோ கையிலிருந்த பையனின் ஜாதகத்தை கொடுத்துச் சென்றார்.
அப்பொழுதே ஜாதகத்தைப் பார்த்திருந்தால் உண்மை தெரிந்திருக்குமோ என்னவோ! வாங்கிய ஜாதகம் அப்படியே பெட்டியில் உறங்கியது. “ஆம். முடிவே பண்ணிவிட்டாள் தன் அக்கா மகளை பொறுப்பான இடத்தில் ஒப்படைக்க வேண்டுமென்று. திருமணத்திற்குப் பின் வரும் பிரச்சனைகளை தங்களின் குடும்ப கௌரவத்திற்காகவாவது மறைத்து எதாவது செய்வார்கள் என்ற நம்பிக்கை அவர்களை நேரில் பார்த்த போது வந்தது.”
கணவன் அவள் சின்னப் பெண்ணென்று தடுத்தபோதும், “இல்லங்க அவ நல்லாயிருக்கணும். இதைவிட்டா எனக்கு வேற வழி தெரியல. இது பாவம்தான் இல்லன்னு சொல்லல. நல்லதுக்காக செய்ற எதுவும் பாவத்துல சேராது. அப்படியே சேர்ந்தாலும் அதை எனக்கு மட்டும் குடுக்க அந்த மீனாட்சி தாயை வேண்டிக்கிறேன்” எனும்போது தூங்கிக் கொண்டிருந்த ஹரிப்ரியாவின் காதில் அந்த வார்த்தைகள் அரைகுறையாக விழுந்தது.
திருமணத்தன்று யார் என்ன சொன்னாலும் குனிந்;த தலை நிமிரக்கூடாது. நிமிர்ந்தா அன்னைக்கு மாதிரி அடி நிமிர்த்தி எடுத்திடுவேன் என ஹரிப்ரியா மௌனியானாள். மகளின் திருமணம் பற்றி தன் சொந்தங்கள் யாருக்கும் சரிதா தெரிவிக்கவில்லை. தன்னிடம் நெருக்கமாகப் பழகும் நெருக்கமான நம்பகமான ஒரு சிலரை மட்டுமே அழைத்துக் கொள்ள... கேள்வியாய் பார்த்த மீனாவிடம் ஏதேதோ காரணம் சொல்லி சமாளிக்க... நமக்குத் தேவை பொண்ணுதானே என்று அவரும் அதை கைவிட திருமணமும் நடந்தது.