• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் - 15

ஆதி வழக்கத்தைப் போலவே கனத்த இதயத்தோடு வீட்டை விட்டுப் பரிந்து மீண்டும் விடுதிக்கு செல்ல அப்பாவின் பின்னால் பைக்கில் அமர்ந்து பேருந்து நிலையம் சென்றான். அப்பாவும் ஜிம்மிற்கு சென்று வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.

அப்பாவும் ஆதியும் வீட்டை விட்டு வெளியேறியதும் வீடு மீண்டும் அமைதியை உடுத்திக் கொண்டது. அதைக் களைய ஜோதி ஒரு திட்டம் தீட்டினாள்.

யாமினிக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்பதை தன் கனவரிடம் கூறி முன்னெச்சரிக்கையாக பணம் வாங்கி வைத்திருந்தாள் ஜோதி.

அதை எடுத்துக் கொண்டு மூன்று பேரும் கடை வீதிக்குச் சென்றார்கள்.
இருளை மூடி மறைக்கும் விதமாக வண்ண வண்ண விளக்குகளோடு அமைந்திருந்த கடைகளின் வாயில்கள் வரவேற்க, வேண்டாம் என்று சொல்லாமல் ஒவ்வொரு கடையாக சென்று பொருட்களை வாங்கினார்கள்.

என்னதான் ஜோதி முழு தாராளத்தையும் கொடுத்தாலும் யாமினியின் கூச்சம் மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகளின் வெளிச்சத்தை மீறியது.

அதைப் புரிந்து கொண்டு ஜோதியும் அவளை தன்னுடன் இயல்பாக அவளை இருக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு ஆடை வாங்கும்போதும் அவளைக் காண்ணாடி முன்னே நிறுத்தி நிறமும், வடிவும் அவளுக்கு எடுக்கிறதா என்பதை ஆராய்ந்து அழகு பார்த்து வாங்கிக் கொடுத்தாள்.

காதுக்கு ஜிமிக்கி கம்மல், கைக்கு கண்ணாடி வளையல், வட்டமுக யாமினிக்கு எடுப்பான குங்கும நிற கோபுரப் பொட்டு, காலுக்கு கொலுசுன்னு ஒன்னு விடாம அத்தனையும் ஜோதி வாங்கிக் கொடுக்க, இதுவரை தன் கண்கள் காணாத தன் தாயின் முகம் யாமிக்குத் தோன்றியது.

சாலையோர வியாபரிகளிடம் பேரம் பேசி வாங்கும் மல்லிகைப் பூவிற்கு மவுசு அதிகம். ஷாப்பிங் முடித்த கையோடு அதையும் வாங்கி யாமினியின் தலையில் வைத்து விட்டாள் ஜோதி.

பெண்களோடு கடைக்குச் செல்லும் எந்த வயது ஆணாக இருந்தாலும் சற்று கடுப்பு இருக்கும். சிபிக்கும் அப்படித்தான் இருந்தது. பத்து இருபது கவரைப் பிரித்து அளந்து பார்த்து விட்டு பின் திரும்ப முதலில் எடுத்ததையே பில் போட எடுத்து வந்ததும், வாங்காத துணியைப் பற்றி பல மணி நேரம் விசாரித்ததும் அவனுக்கு கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. அது ஷாப்பிங் செல்லும் பெண்களின் சாதாரண குணம் என்று அவனுக்குப் புரியவில்லை. புரியாமலேயே அந்த அனுபவம் அவனுக்குக் கிடைத்து விட்டது.

“ம்மா நானும் உங்கூட கடைக்கு வாரா வாரம் வரேன். என்னைக்குமே இவ்வளோ நேரம் செலவழிச்சதே இல்லமா. போவ, தேவையானத எடுப்ப, திரும்ப வந்துருவ அவ்வளோதான். ஆனா இன்னைக்கு என்னடானா நாலு மணி நேரம் ஆச்சு”

“பொம்பள புள்ளைக்கு பொருள் வாங்குறதும் ஆம்பள புள்ளைக்கு பொருள் வாங்குறதும் ஒன்னாடா? “

“இல்ல ஒன்னு இல்ல ஒன்னு இல்ல. தெரிஞ்சுகிட்டேன். புரிஞ்சுகிட்டேன். ஒரு பக்கம் கடுப்பா இருந்தாலும், நீ ஆசையாசையா கேட்டுக் கேட்டு வாங்குறத பாக்கும்போது பொம்பள புள்ளையாவே பொறந்து இருக்கலாம்னு தோனுச்சு “

“சிபி வர வர பெரிய மனுசன் மாதிரி பேசுறான். எம்புள்ள எல்லாத்தையும் புரிஞ்சுக்குது. என் செல்லம் “ என்று சொல்லி தன் கடைக்குட்டியின் கண்ணத்தைக் கிள்ளி வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

ஷாப்பிங் சென்று வந்த களைப்பில் சிபி சோபாவில் சாய்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தான். யாமினியும் ஜோதியும் சேர்ந்து சமைத்துக் கொண்டிருந்தார்கள்.

“நீ போய் உக்காருமா. நான் பாத்துக்குறேன்”

“இல்ல பரவாயில்லை “

யாமினியின் முகம் எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருந்தது. தன்னையே அறியாமல் பாத்திரங்களைத் தன் கையாள் தொட்டுக் கீழே விழுந்து உருளச் செய்தாள்.

அதைத் திகைத்துப் போய் திரும்பிப் பார்த்த ஜோதிக்கு யாமினியின் கண்கள் கலங்கி இருப்பது புரிய வந்தது. சமையல் மீது இருந்த கவனம் அவள் பக்கம் திரும்ப அவள் கையைப் பற்றிக் கொண்டு “என்ன யோசன? “ என்று கேட்டாள்.

அதுவரை அணையில் இருந்து கசிந்து கொண்டிருந்த கண்ணீர் திடீரென அணையை உடைத்துக் கொண்டு வெளியேறியது. ஜோதியைக் கட்டியணைத்துக் கொண்டு சொல்லத் தெரியாத வார்த்தைகளால் விம்மிக் கொண்டிருந்தாள் யாமினி. அவள் மனதில் இருப்பதை எந்த வார்த்தைகளைக் கொண்டும் வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள். என்ன சொல்வது என்று புரியாமல் “இனிமே நான் உங்கள அம்மானு கூப்பிடட்டுமா? “ என்று தன் அழு குரலில் கேட்டாள்.

அப்படிக் கேட்டதும் ஏற்கனவே பூவிதழ் தன்மை கொண்ட ஜோதியின் மனம் நெகிழ்ந்துபோனதை கண்களிடம் சொல்ல, கண்கள் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டது.

“ஏய் லூசு நான் உனக்கு அம்மாதாண்டி “ என்றாள் ஜோதி.

“சரிம்மா” என்று சொல்லியிருந்தால் கூட கண்ணைத் துடைத்துச் சிரித்திருப்பாளோ என்னவோ… உரிமையாயோடு “டி”, “லூசு” என்ற வார்த்தைகள் பதிலாகக் கிடைத்ததும் இதுவரை அவளுக்கு அறிமுகமாகத தாயுணர்வு ஒன்றுகூடி உறையச் செய்தது யாமினியை.

“சிபியும் ஆதியும் உங்க கிட்ட பழகுற விதம் மாதிரி இதுவரைக்கும் நான் எங்கையுமே பாத்தது இல்ல. இங்க இருந்த ஒரே நாள்ல பல முறை பொறாமை பட்டேன். அம்மான்னா உங்கள மாதிரிதா இருக்கனும்”

“அதுசரி. நீ இனிமே அழவே கூடாது. அழுதா அம்மாக்கு புடிக்காது. நீயும் நானும் சேர்ந்துதா சிபியையும் ஆதியையும் அழ வைக்கனும் இந்த வீட்ல “

அழுத முகம் சிரிக்கும் போதும், நினைத்ததை விட ஒரு உறுதியான, அன்பான இணைப்பு கிடைக்கும் போதும் தோன்றும் உற்சாகம் கண்ணீர் தேங்கி நின்ற அவர்கள் இருவருடைய நான்கு கண்களிலும் தெரிந்தது.

தாயின் வாசனை மட்டும் கிடைத்தால் போதும் என்று ஏங்கிக் கொண்டிருந்த யாமினிக்கு தாயின் மொத்த பாசமும் கிடைத்தது. அதைவிடப் பெரிதாக உயிருக்கும் மேலானதாக அந்தக் குடும்பத்தை நினைக்கும் பெண்ணாக யாமினி மாறினாள். அவர்களின் அன்பே அவளை அப்படி மாற்றியது என்பதே உண்மை.

ஆதி விடுதிக்குத் திரும்பியதும் உறங்கிவிட்டான். அதனால் அன்று வீடியோ போட முடியவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, தான் ஒரு யூடியூப் சேனல் நடத்துவதை யாமினியிடம் சொல்லாதது நியாபகத்திற்கு வந்தது.

உடனே கைப் பேசியில் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்து விட்டு வகுப்பறைக்குள் நுழைந்தான்.
வகுப்பு முடிந்து விடுதி வந்ததும் முதல் வேலையாக அவன் அனுப்பிய செய்திக்கு அவள் என்ன பதில் அனுப்பி இருக்கிறாள் என்று பார்ப்பதற்காக கைபேசியை எடுத்தான். யாமினியின் குறுஞ்செய்தியைப் பார்த்தவன் சிரித்தான், அழுதான், உற்சாகத்தில் குதித்தான், இன்னும் ஏதேதோ செய்துகொண்டிருந்தான்.

அவனை இந்த அளவிற்கு ஆட்டம் போட வைத்த யாமினியின் குறுஞ்செய்தி என்னவென்றால்?... “டேய் சூப்பர்டா “. “ஆதி லூசு பயலே நாநூறு சப்ஸ்கிரைபர்னு சொன்ன, உன் சேனல்ல மொத்தம் மூவாயிரம் சப்ஸ்கிரைபர்டா “.
“கதையெல்லாம் அழகா சொல்றடா கருப்பா “. “டெய்லி வீடியோ போடு “ என்று சொல்லியிருந்தாள்.

இதுவரை இரண்டு வீடியோ மட்டுமே போட்டிருக்கும் சேனலில் எப்படி ஒரே நாளில் இத்தனை சப்ஸ்கிரைபர் வந்தார்கள் என்கிற கேள்வி ஆதியை குத்திக் கொண்டிருந்தது. முதல் வீடியோவிற்கு இல்லாத வரவேற்பு இரண்டாவதாகப் போட்ட வீடியோவிற்கு அவன் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்ததை அறிந்து வியந்தான்.

முதல் வீடியோவைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் போடப்பட்ட ஜோதா அக்பரின் கதை பல பேர் மனதில் ஒட்டிக் கொண்டது, அடுத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் வீடியோ கருத்துப் பெட்டி சொன்னது.

வீடியோ பார்த்ததில் பாதி நபர்கள் தங்கள் விருப்பங்களைக் கருத்தாகத் தெரிவித்திருந்தார்கள். அவர்களின் கருத்துக்களைப் படித்து பூரித்து, இனம் புரியாத சந்தோஷத்தில் இருந்ததால் நேரம் போனதே தெரியாமல் வீடியோவைப் பற்றி போடப்பட்டிருந்த ஒவ்வொரு கருத்தையும் வாசித்தான். அவன் போட்ட இரண்டு வீடியோக்களையும் மீண்டும் பல முறை பார்த்து பரவசமானான். அப்படியே கழிந்தது அந்த நாள் இரவு.

மறுநாள் அம்மாவிடம் கைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது நேற்று நடந்ததை அவளிடம் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான்.

அவனுக்கிருந்த உற்சாகம் ஜோதிக்கு இல்லை என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவன் பேசப் பேச “ம்ம் “ என்று அலுத்துக் கொண்டே கேட்டாள்.

“ம்மா… நான் எவ்வளோ பெரிய விஷயத்த சொல்லிட்டு இருக்கேன். நீ என்னடானா எந்த ரியாக்சனும் இல்லாம “ம்ம்ம் “ “ம்ம்”ன்னு சொல்லிட்டு இருக்க. உனக்கு சந்தோஷமாவே இல்லையா? “

“இல்லடா.இதுல சந்தோஷப்பட என்ன இருக்கு? “.

“என்னமா இப்படி சொல்ற? உன் மகன எல்லாரும் பாராட்டுறது உனக்குப் பிடிக்கலையா? “

“ஆமா புடிக்கல”

“ஏன் புடிக்கல உனக்கு?” என்று மழுங்கிய குரலில் கேட்டான்.

“யூடியூப் சேனல் ஆரம்பித்தது பெரிய விஷயம் கிடையாது, கமென்ட்ல பாராட்டு வாங்குறது பெரிய விஷயம் கிடையாது, எவ்வளோ பிசியா இருந்தாலும் டெய்லி வீடியோ போடனும் அதுதான் பெருசு. ஏதோ பத்து பேர் வந்து கமென்ல ஹாய் ஓய்னு பாராட்டுனா நீ பெரிய ஆளாடா?. ஓரே நாள்ல மூவாயிரம் சப்ஸ்கிரைபர் வந்தாங்கலாம் அந்த சந்தோஷத்துல ஐயா வீடியோ போடாம விட்டுட்டாறாம். இன்னைக்கு ஒரு வீடியோ புடிச்சதால பத்து பேர் பாராட்டுறாங்க, நாளைக்கு புடிக்கலைனா பாராட்டுன பத்து பேரும் உன்னைய திட்டுவாங்க. திட்டு வாங்குனா அந்த கவலைல வீடியோ போடாம இருப்பியா?. இப்படியே வீடியோ போடாம இருந்தீனா உன் சப்ஸ்கிரைபர்ஸ்லாம் கூடிய சீக்கிரம் மாயமா மறஞ்சு காணாம போயிருவாங்க “

ஜோதி பேசுவதை ஆச்சர்யத்தோடு புருவத்தை சுருக்கிக் கேட்டுக்கொண்டிருந்தான் ஆதி. அம்மா பேசியது நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் உண்மை அதுதான் எதார்த்தமும் கூட என்பது அவனுக்கும் தெரியும்.

தொடரும்...♡
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top