• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் - 17

நதிமீது விழுந்த பச்சிலையைப் போல சுற்றித் திரிந்த அதே நாள் இன்னொரு ஆனந்தமான அதிர்ச்சியைக் கொடுத்தார் அவர். ஒரு ரீல்ஸ் கருத்துப்பெட்டியில் ஜோதாவின் ஐடியை ஒட்டி அருகில் கருப்பு நிற இதயத்தைப் போட்டிருந்தார். அந்த ரீல்ஸில் “உங்களுக்கு பிடித்த நண்பரை டேக் செய்து அன்பை வெளிப்படுத்தவும் “ என்று எழுதப்பட்டு அதற்கேற்ற பாடல் இசைத்தபடி இருந்தது. அதைக் கண்டதும் அவர் கருத்திற்காக இவள் ஒரு இதயத்தைக் கொடுத்தாள்.

அவளுக்காக அவர் குறிப்பிட்டிருந்த அதே கருப்பு நிற இதயம், அவர் ஐடியில் குறிப்பிட்டிருந்த “அல்ஹம்துலில்லாஹ்” என்கிற வார்த்தைக்கு அருகிலும் போட்டிருந்தார். அது அவளை தனித்துவமாக நினைக்க வைத்ததோடு அவருடைய அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.

பார்த்துப் பேசிய மறுநாளே ஒருவருக்கு ஒருவர் இதயத்தை மாறி மாறிக் கொடுத்துக் கொண்டார்கள். இதயம் பகிர்தல் இணையதளமாக இருந்தால் என்ன? இயல்பான வாழ்கையாக இருந்தால் என்ன? பிடித்தவருக்குக் கொடுப்பதில் என்றும் பேரானந்தமே!.

இணையதள வாசிகளுக்கு இதயம் கொடுப்பது என்பது ஒரு சாதாரண விஷயம்தான். பார்ப்பது எதுவாக இருந்தாலும், அதைப் பதிவேற்றியிருப்பது யாராக இருந்தாலும், தனக்குப் பிடித்திருந்தால் இயத்தைக் கொடுத்து தன் விருப்பத்தைத் தெரிவிப்பார்கள். ஆனால் , ஜோதாவும் அக்பரும் அந்த வகையைச் சேர்ந்தவர்கள் இல்லை.

அக்பருக்கு பெரும்பாலும் அதில் சுற்றித் திரிய நேரம் கிடைக்காது. கிடைத்த நேரத்திலும் ஜிம் சம்மந்தப்பட்ட பதிவுகளை மட்டுமே பார்ப்பார். அதுவும் அவருக்குத் தேவை இருந்தால் மட்டும்தான். ஜோதா எப்போதாவது இன்ஸ்டா பதிவுகளைச் சுழற்றுவது உண்டு. பார்த்து ரசிப்பாளே தவிர தன் சுய விருப்பத்தையோ கருத்தையோ தெரிவிக்க விரும்ப மாட்டாள்.

இருவருமே இணையதளத்தில் தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ளாத நபர்கள்.
இருவருக்கும் இடையில் இருக்கும் ஒரே இணைப்பு இணையதளம் மட்டும்தான்.

ஒருவருக்கு ஒருவர் தங்களின் வெறுப்பு விருப்பங்களையும் வாழ்க்கை முறையையும் அறிமுகம் செய்து கொண்டிருந்தார்கள். மூன்று நாட்களுக்கு மேலாக எந்த வித பேச்சு வார்த்தையும் இல்லாமலே ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டார்கள்.

ஜோதா அக்பருக்கு மட்டும் காட்டும்படி ஸ்டோரி வைப்பதும், அக்பர் ஜோதாவிற்கு மட்டும் காட்டும்படி ஸ்டோரி வைப்பதும் ஒருவருக்கொருவர் தெரியாது. இந்த ரகசியம் அவர்களுக்கு இடையில் உடைந்து மிளிர காலம் எடுத்துக் கொண்டது.

விடுமுறை முடிந்து மீண்டும் விடுதிக்குச் சென்றாள் ஜோதா. அவளுக்கு அவர் நினைவைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமலே கார் ஜன்னல் வழியே காணும் இடங்களில் எல்லாம் அவரோடு பேசி, சிரித்து, கைகோர்த்துச் சுற்றி திரிந்தாள். கொடைக்கானலில் சுற்றுப்பயணம் வந்த வெளியூர் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், சுங்கச் சாவடியை விட்டு ஒவ்வொரு வண்டியாய் வெளியேற அதிக நேரம் ஆனது.

போக்குவரத்து நெரிசலில் ஜோதாவின் காரும் சிக்கியது. சுங்கச் சாவடிக்கு முன்னிருக்கும் வெள்ளிநீர் வீழ்ச்சியில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கொடைக்கானல் என்றால் காதல் ஜோடிகளும் புதிதாய் திருமணமான ஜோடிகளும் புகை சூழ்ந்த சாலையில் கைகளைப் பிடித்துக்கொண்டு பழைய இளையராஜா பாடலில் வரும் காதல் நாயகனும் நாயகியுமாய் உலாவுவார்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம்அந்த அழகான காட்சி காதல் மீது ஒரு நம்பிக்கையை நம் மேல் சிந்திவிட்டுச் செல்லும்.

வெள்ளி நீர் வீழ்ச்சிக்கு அருகில் இருந்த ஒரு தள்ளு வண்டி டீக்கடையில் ஒரு இளம் ஜோடி நின்றிருப்பதை ஜோதா கவனிக்கிறாள். அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த பயணக் களைப்பு ஜோதாவின் பார்வையை அவர்கள் மீது நிலைநிறுத்தியது. மலைப் பகுதிகள் பெரும்பாலான நபர்களுக்கு ஒப்பாது. பாதை வளைந்து நெளிந்து இருப்பதால் குமட்டலை ஏற்படுத்திவிடும். அதே நிலையில்தான் அந்தப் பெண்ணும் தானாக நிற்க முடியாமல் தன் கனவனின் இடுப்பைத் தன் கையால் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

இருவரும் ஏற்ற ஜோடியாக இருந்தார்கள். கனவன் தன் மனைவிக்கு அந்த தள்ளுவண்டிக் கடையில் டீ வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு அவளைக் குடிக்கச் சொல்லி அன்புத் தொல்லை செய்கிறான். அவள் அதைக் குடிக்கும் நிலையில் இல்லாததால் மறுக்கிறாள்.

உடனே தன் கையில் இருந்த கோப்பையை அவள் உதட்டில் வைத்து, தலையைத் தன் மார்போடு அனைத்துக் கொண்டான் கணவன். டீ அவள் அனுமதி இன்றி தொண்டையில் இறங்கி இதயம் வரை பயணிப்பதை, ஜோதா ஓரக்கண்ணாலே பார்த்து வெட்கப்பட்டுக் கொண்டாள்.

முகம் தெரியாத யாரோ ஒருவர் காதலிப்பதைப் பார்த்தாலும் தன் ஆசைக்குரிய ஆணைக் கண் முன்னே நிறுத்தி ஏக்கத்தை மூட்டுவதே இந்த கொலைகாரக் காதலுக்கு வேலை.

கனவுலகில் அக்பரும் அவளும் டீக்கு பதிலாக காஃபி குடித்துவிட்டு சுண்டல் வாங்க நகர்ந்தார்கள். காரும் நெரிசல் விலகி நகர்ந்தது. நீண்ட பயணம்தான் அவர் நினைவோடு கொஞ்சிக் கொண்டிருந்ததால், சீக்கிரம் முடிந்துவிட்டது அவளுக்கு.

மனதில் எதையும் வைத்துக் கொள்ளத் தெரியாத ஜோதா விடுதிக்குள் நுழைந்து, அவள் அறைத் தோழிகளைக் கண்ட அடுத்த நொடியே “அன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா? “ என்று மொத்தக் கதையையும் அவிழ்த்துவிட ஆரம்பித்தாள்.

“ஆம்பளைங்கன்னா அது, இது, அப்படி இப்படினு என்னென்னவோ சொன்னீங்க. நான் எந்த பிரச்சனையும் இல்லாம ரொம்ப பாதுக்காப்பா வீட்டுக்கு போனே. ஏன் தெரியுமா? நான் ஒரு ஆம்பள பக்கத்துல உக்காந்து போனே “ என்று சொல்லிக் காலரைத் தூக்கிவிட்டாள்.

தோழிகள் இவள் பேசியதைப் பார்த்து திருட்டு முழி முழித்ததோடு மட்டுமல்லாமல் திட்டவும் செய்தார்கள். யாரென்று தெரியாத ஆள் அருகே அமர்ந்து செல்வதே ஆபத்து. அவரிடம் பேசினேன் என்று வேறு பீத்திக் கொள்கிறாய். சொல்லி தானே அனுப்பினோம். சொல்லியதற்கு எதிர்மறையாகத்தான் செய்வேன் என்று அடம்பிடித்து ஆடினால், யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று ஆளுக்கொரு கருத்து பேசினார்கள்.

காதல் கண் மறைத்த கதாநாயகிக்கு அவர்கள் பேசியதெல்லாம் காதில் கூட விழவில்லை.

உலகில் உள்ள எல்லா ஆண்களும் ஒரே குணம் படைத்தவர்கள் என்று தீர்மானிக்கும் உரிமை நமக்கு இல்லை.

ஒவ்வொரு கருத்துமே ஏதோ ஒரு அனுபவத்தினால்தான் வெளிவருகிறது. அனுபவமும் குணத்தைப் போன்றே ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உங்களுக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். எனக்கு நடந்ததும் நான் அனுபவித்ததும் நீங்கள் பேசுவதற்கெல்லாம் அப்பாற்பட்ட உயர்ந்த ஒன்று என்று பொலிவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவள் முகத்தில் தெரியும் தெளிவு தோழிகளை ஆச்சர்யப்படுத்தியது. இவ்வளவு உறுதியாகப் பேசுகிறாள் என்றால், எதாவது சுவாரஸ்யமான நிகழ்வு நடந்திருக்கும் என்று தோழிகள் கதை கேட்கும் கட்டத்திற்குள் புகுந்தார்கள்.

பேசித் தீர்க்க ஆள் தோடிக் கொண்டிருந்த நாயகிக்கு நல்ல வேட்டை. அறையில் இருந்த நான்கு தோழிகளில் மலர் மட்டும் அவள் மனதைப் புரிந்துகொண்டு இடையில் கேள்வி கேட்டும், உண்மையா? , அப்படியா? என்று பேசி ஒத்துழைத்தாள். மற்ற மூவரும் கன்னத்தில் கைகொடுத்துத் தாங்கி தலைசாய்த்துப் பூத்த சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“ஹேய் உன் கிட்ட ரிசர்வ் டிக்கெட் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டாரே அவர் பக்கத்துலயா உக்காந்த?. பண்ணிருந்தீனா, பாத்த எல்லாருமே வேற மாதிரிதான் நெனச்சிருப்பாங்க”

“பக்குறவங்க ஆயிரம் நினைக்கட்டும் பழகுறவங்களுக்குதாண்டி உண்ம தெரியும்”

“என்ன வசனமெல்லாம் பயங்கரமா இருக்கு. அப்போ அவரேதான்”

“ஆமாடி அவருதான்”

இருவருமாகப் பேசிக் கொண்டிருக்க மற்ற தோழிகள் “யார பத்திடி பேசுறீங்க?” என்று சச்சரிக்க, “இதோ இவரப் பத்திதான்” என்று ஜோதா தன் செல்ஃபோனில் அக்பருடையாள். இன்ஸ்டா பக்கத்தை எடுத்துக் காட்டினாள்.

“ஹே யாருடி இந்தப் பயன் செம்மையா இருக்கான்” என்று அனைவரும் வாயைப் பிளக்க, “அவன் இவன் பேசாதீங்கடி, இனிமே இவரு உங்களுக்கெல்லாம் அண்ணா” என்று ஜோதா சொல்ல, “ஓஹோ” என்று இழுத்து அவளைச் சூழ்ந்து கொண்டார்கள்.

“எண்ணம் போல வாழ்க்கை” சும்மாவா சொன்னாங் பெரியவங்க?. மனுஷங்கள நம்பனும்டி என்று ஆரம்பித்து பேருந்து நிலையத்தில் அவளை முதன் முறை பார்த்ததிலிருந்து ஆரம்பித்து, இன்ஸ்டா ஐடி வாங்கியதைத் தொட்டு, கடைசியாக பாய் சொல்லி விடைபெற்றது வரை சொல்லி முடித்தாள். அவளது தோழிகள் கண் கொட்டாமல் அவள் பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

ஜோதா மிகவும் ரசனையானவள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் பேச மாட்டாள். அவளது பேச்சில் எப்போதும் ஒரு கவித்துவம் இருக்கும்.

ஒரே விஷயத்தை பல முறை சொன்னாலும் வேறு வார்த்தைகளில் புதுவித புரிதலோடு பேசுவாள். கேட்பவருக்கு இதை இப்படிக் கூட எடுத்துக் கொள்ளலாமா? என்று வியப்பாக இருக்கும்.

அன்று இரவு முழுக்க அவரைப் பேசித் தீர்த்தாள். “போதும்டி மணி பத்து ஆச்சு. படுங்க எல்லாரும் நாளைக்கு காலேஜ் போகனும்” என்று மலர் சொல்ல அறையின் விளக்கு அணைந்து அரங்கம் அமைதியானது.

இருள் சூழ்ந்த அந்த அறையின் அடர் கருப்பில் ஒளிரும் மின்மினிப் பூச்சியாய் வெட்கத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தாள் ஜோதா. செல்ஃபோன் திரை வெளிச்சம் முகத்தில் பட, நாணமுற்று நகத்தை கடித்தபடியே விழித்துக் கிடந்ததற்குக் காரணம் அக்பர் அனுப்பிய குறிஞ்செய்திதான். அவள் எப்படி அவளது தோழிகளோடு அவரைப் பற்றி பாடிக் கொண்டிருந்தாளோ, அதே போலத்தான் அவரும். “இன்று மதியம் என் நண்பனைச் சந்தித்தேன். அவனிடம் உன்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்” என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதைப் பார்த்து ரசித்தபடியே “அப்படியா? சரி இரவு உணவு முடிந்ததா? ஜிம்மில் இருந்து வீடு திரும்பியாச்சா?” என்று கேட்டாள். அதற்கு அவர் பதிலளித்ததும் அடுத்து என்ன பேசுவது என்றும் தெரியாமல், தூங்கவும் முடியாமல் அப்படியே இறந்து போனார்கள்.

எப்படித் தூங்கினாளோ தெரியவில்லை மறுநாள் ரொம்ப நேரம் கழித்துதான் எழுந்தாள். வகுப்பிற்குச் சென்ற பிறகும் கூட தூங்கி வழிந்தாள். காதலில் விழுந்த பெண்கள் வகுப்பில் உறங்கி வழிவதைக் கேளி செய்த அவளே அதைச் செய்யும் போது அனைவரும் அவளை நோக்கி வார்த்தைப் போர் தொடுத்தார்கள்.

இப்படித்தான் அவள் காதலை அக்பரைத் தவிர மற்ற அனைவரிடமும் சொல்லி சிலாகித்தாள் ஜோதா.


தொடரும்...♡
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top