• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் - 22

முடிந்தவரைத் தன்னை ஏதோ ஒரு வேலைக்குள் முழ்கடித்துக் கொள்வாள். அவளுக்குப் பிடித்த தூக்கமும் கூட எதிராளியானது. என்னதான் ஈடுபாடோடு ஒரு செயலில் இறங்கினாலும் இடையிலேயே அவன் நியாபகம் வந்து வழி மறித்து வதைத்து எடுக்கும்.

அவனைச் சேரும் போராட்டத்தில் சோர்வுற்ற ஜோதா பழியை விதியின் மேல் தள்ளிவிட்டு மனநிம்மதியைத் தேடி, தனக்கு ஒப்பாத தனிமையை விரும்பி ஏற்றுக்கொண்டாள்.

பாடல் கேட்பது, பார்க்கும் காட்சிகளை வரைபடமாக்குவது, எதையாவத கிறுக்கி வைப்பது என்று அவளுக்கென ஒரு கனவு உலகத்தை அவளுக்குப் பிடித்தவாறு ஏற்பாடு செய்தாள். அதில் கட்டளையிட்டவும் காயப்படுத்தவும் யாரும் இருக்க மாட்டார்கள் (அன்பு காட்டவும் அரவணைக்கவும்தான்).

சராசரி உலகில் இருந்து விடுபட்ட ஜோதாவிற்கு எழுத்தின் மீதும் புத்தகத்தின் மீது காதல் வந்தது. அது அனைத்து வகையிலும் அவளை அவளாக இருக்க விட்டதாக அவள் உணர்ந்தாள்.

அவளுடைய பல மணி நேரங்கள் புத்தகங்கள் வாசிப்பதிலும் , சுவையான தேநீர் கடைகளின் தேடுதலிலும், இளையராஜா பாடல்களின் மெட்டுக்களை கேட்டு ரசிப்பதிலும், நா. முத்துக்குமாரின் கவிதைகளுக்கு பலியாவதிலுமே கழிந்து கொண்டிருந்தது.

உச்சியில் இருந்து உடல் நீரை உறிஞ்சிக் கொண்டிருந்த சூரியன், தாகம் தணிந்ததும் மேற்கை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. இதுதான் சரியான நேரம் என்று புத்தங்களும் பேனாக்களும் அடங்கிய பையைத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டு பூங்காவை நோக்கிப் புறப்பட்டார் ஜோதா.

பொதுவாகவே அவள் ஊர் ஒரு சுற்றுலா தளம் என்பதால் வெளியூர் வாசிகளின் வரத்து சற்று அதிகமாகவே இருக்கும். சூரியன் மறையாலாமா ? வேண்டாமா? என்கிற சந்தேகத்தில் மலைகளின் இடையே சென்று, சற்று மறைந்தும் சற்று தெரிந்தும் சந்தன வெயிலால் பூங்காவை ஒளிர வைத்திருந்தது.

பனிக் கூட்டமும் மலைகளின் பின்னிருந்து படையெடுத்து பூங்காவை நோக்கி வந்து கொண்டிருந்தது. மஞ்சள் வெயிலும் மாலைப் பனியும் சந்தித்த பொன்னான பொழுது அது.

வண்ணப் பூக்களின் இதழ்களும், காய்ந்த இலைகளும், பறவையின் உதிர்ந்த சிறகுகளும் அங்கிருந்த நாற்காலியின் மீது விரிந்து கிடந்தது. அதைத் தன் கைகளால் தட்டிக் கீழே தள்ளிவிட்டு அமர்ந்து கொண்டாள் ஜோதா.

பையிலிருந்து புத்தகத்தை வெளியே எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள். வார்த்தைகளை மேய மேய சுவாரஸ்யப் புல் முளைத்துக் கொண்டே இருந்தது. அந்தக் காகிதத்தில் இருந்த கருப்பு நிற மை அவள் கண்களைக் கட்டி வைத்திருந்தது. அதன் பிடியில் இருந்து அவளது பார்வை விலகவே இல்லை.

ஜோதாவின் கவனைத்தை உடைக்கும் விதமாக “க்ளிக் க்ளிக்” என்று ஒரு சத்தம் கேட்டது. அதனுடனே ஒரு அதிர்தலையும் உணர்ந்தாள். அந்த சத்தம் தன் செல்ஃபோன் நோட்டிஃபிகேஷன் சத்தம்தான் என்று திறந்தாள்.

ஒரு புதிய எண்ணில் இருந்து “ஹாய் நான் உன்னத் தேடி வந்துட்டேன் “ என்று வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி வந்திருப்பதைக் கவனித்தாள்.

பதியாத புதிய எண்ணிலிருந்து எது வந்தாலும் அனுமதிக்கமாட்டாள் ஜோதா. அதனால், குறுஞ்செய்தியை அந்த எண்ணுக்கான அரட்டைப் பெட்டிக்குள் நுழையாமைல் வெளியிருந்தே படித்துவிட்டு அதைக் கண்டுகொள்ளாமல் வாசிக்கத் திரும்பினாள்.

மீண்டும் அதே எண்ணிலிருந்து “நான் யாருனு செல்ஃபோன்ல தேடாத நீ இருக்க அதே பார்க்லதான் நானும் இருக்கேன். உன்னையும் நீ போட்டிருக்க மஞ்சள் நிற சுடிதாரையும் ரசிச்சுகிட்டு “ என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. இந்த முறை அவளது முழு கவனமும் அந்த குறுஞ்செய்திக்கு சொந்தக்காரர் பக்கம் வளைந்தது.

யார் அது? என்று புருவம் சுழித்த ஆர்வத்தோடு நாற்காலியில் இருந்து எழுந்து நின்று, எட்டு திசையிலும் தலையைத் திருப்பித் தேடினாள். அவளுக்கு யாரும் எதுவும் வசமாகவில்லை.

பூங்காவில் மக்கள் அங்கிருந்த சொக்கும் அழகை ரசிக்க கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள். ஆங்காங்கே நின்றும், நடந்தும், அமர்ந்தும் , படுத்தும் இயற்கை எழிலை ரசித்தபடியே இளைபாரிக் கொண்டிருந்தார்கள். எங்கு தேடியும் அவளுக்குத் தெரிந்த முகம் என்று ஒன்றுகூட இல்லை.

நேரம் வீணாவதாக நினைத்து அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு நடந்தபடியே படித்துக் கொண்டிருந்தாள்.

அவளைக் கவனிக்காமல் எதிரில் வந்த யாரோ ஒருவர் அவளது இடது தோளில் இடித்துச் செல்ல, கையிலிருந்து புத்தகம் கீழே விழுந்தது. “ச்சே” என்று திரும்பி பார்க்கையில் முகத்தைத் திருப்பாமலே கைகூப்பி “சாரி” சொல்லி ஓடியவரை மனதிற்குள்ளே திட்டிவிட்டுப் புத்தகத்தை எடுக்க கீழே குனிந்தாள். அப்போது, அவளுக்கு முன்பாகவே ஒரு அழகான பெண் குழந்தை அந்தப் புத்தகத்தை எடுத்தது. குழந்தையின் குழி விழும் கண்ணத்தைக் கிள்ளி முத்தமிட்டுப் புத்தகத்தை வாங்கினாள். அவள் கொடுத்த முத்தத்திற்கு பதிலாக அந்தக் குழந்தை இரண்டு இலைகளோடு அடர் சிவப்பு நிறத்தில் இருந்த ஒற்றை ரோஜாவைக் கொடுத்தது. அதை வாங்கிக் கொண்டு ஊஞ்சலில் அமர்ந்து படிக்கத் தொடங்கினாள்.

அவள் வாசித்த கதை கூர்மையான வார்த்தைகளால் வாழ்க்கையின் வெவ்வேறு பக்கங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தது. அந்த கரடுமுரடான உண்மைகள் எல்லாம் அவளை யோசிக்க வைத்தது. தன் இரு கைகளால் புத்தகத்தை ஏந்தி இருந்தவள், கதையில் எதிர்பாராத திருப்பங்கள் வந்ததும் ஒரு கையை ஊன்றினாள்.

ஊன்றிய கை சமநிலை இன்றித் தடுமாறி இன்னும் கீழே சென்று நிலைப்பட, படபடப்பில் தலை திருப்பினாள் ஜோதா. அவளைத் தடுமாறச் செய்தது பின் அவளை ஆச்சர்யமடையவும் செய்தது. அது ரோஸ் நிற ரிப்பனால் கட்டப்பட்ட செவ்வக வடிவிலான பரிசுப் பெட்டி. அந்த பெட்டியில் நான்கைந்து இதைய பலூன்களும் கட்டப்பட்டு இருந்தது. கூடவே “ஃபார் யூ டார்லிங் “ என்று எழுதப்பட்ட ஒட்டுப்படம் (ஸ்டிக்கர்) இருந்தது.

அவளை டார்லிங் என்று அழைக்கும் உரிமையை ஒரே ஒருவருக்குத்தான் கொடுத்து வைத்திருந்தாள். அவருடன் வாழ்வைத் தொடரத்தான் அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இது எனக்கானதாக இருக்காது. சுற்றிப் பார்க்க வந்தவர் யாரோ மறந்து விட்டுச் சென்றிருக்கலாம் என்று அதைக் கடந்து சென்றாள்.

டார்லிங் என்கிற சொல் அங்கு இல்லாமல் இருந்திருந்தால், அவள் அங்கேயே இருந்திருப்பாள். அந்த ஒற்றை வார்த்தை அவளை அந்த அழகிய சூழலில் இருந்து துறத்தியடிக்க, கால்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. நடக்கும் போதும் அவளை யாரே அழைப்பது போல காதருகே கேட்டாலும், அதைற்கு வசப்படாமல் கடந்தாள்.

மூடு பனியை விலக்கி மூச்சிரைக்க நடந்து வந்ததால், அருகில் இருந்த தேனீர் கடைக்குள் பனியோடு பனியாக உள்ளே நுழைந்தாள். “பனியின் ஈரம் தாகம் தீர்க்காது “ என்பதால் தனக்கென்று ஒரு கோப்பைத் தேநீரைத் தரச் சொல்லிக் கடைக்காரரிடம் கேட்டாள். கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

கோப்பியில் பரவியிருந்த சூடு, பனியால் நெளிந்த உள்ளங்கைத் தோலை சமப்படுத்தி இதம் கொடுத்துக் கொண்டிருக்க, தேநீரின் மேல்பகுதியில் இருந்து எழும்பிய ஆவி அவள் நெற்றியை முத்தமிட்டு நடுக்கத்தைக் குறைத்துக் கொண்டிருந்தது. தேநீரில் கலந்திருந்த சர்க்கரைக் கட்டிகள் இதயச் சுவற்றில் மேளம் தட்ட, அவள் எதிர்பார்த்ததைவிட அதிக ஆசுவாசம் கிடைத்தது. தேநீரில் மிதந்தாள் கசடைப் போல.

தேநீர் தந்த சுறுசுறுப்பில், படித்த கதை படமாக ஓடிக்கொண்டிருக்கும் அவள் மூளையின் மூலையில் சென்று அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

பூங்காவில் வில் வீசிக் கொண்டிருந்த சூரியக் கதிர்களைப் பிரித்துக் கொண்டு ஒரு கருப்பு நிழல் அவளை நோக்கி வருவதை அவள் தன் மை பூசிய கண்களால் பார்க்கிறாள். முடி அமைப்பும் நடை போடும் விதமும் ஒரு இளம் ஆணின் சாயலைச் சொல்ல, அவன் இன்னும் வேகமாக வந்தான்.

கிட்ட நெருங்க நெருங்க அவனது மங்களான சாயல் தெளிந்து உண்மையான தோற்றம் தெரிந்தது. அது அந்த கதையின் நாயகன்தான். தோள் படர்ந்த உயர்ந்த தோற்றத்தைக் கொண்ட அவன் கல்லு முள்ளான தோற்றத்தில் ஒற்றை பூ பூத்திருப்பதை அவள் பார்க்கிறாள். அந்த சிரிப்பு (பூ) வாசத்திற்குப் பதிலாக நேசத்தைப் பரப்பியது.

அந்த முகம் அவளது காதலனை அச்சடித்திருந்தது. அவன் அருகே வர வர தனக்குள் நெளிந்தாள் நாணத்தில். அவள் அருகே வந்தவன் மூக்கை உரசும் தூரத்திற்கு ஒரு மயிர் இடைவெளி விட்டு நெருக்கமாக நின்றான். அவள் கையில் இருந்த கோப்பையை வாங்கி, அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டு கோப்பையின் திறந்த பகுதி இருந்த அதே இடத்தில் தன் வாயை வைத்து மூடினான்.

தேநீர் குடித்தவள் அப்போது சாக்லேட்டின் சுவையைத் திகட்டத் திகட்ட அனுபவித்தாள். பின் தன் மேலுதட்டிலும் கீழுதட்டிலும் பட்டுப் பரவிய சாக்லேட் நாவை அடையாமல் நாசிக்கு மட்டும் வாசத்தைக் கொடுத்துவிட்டுப் பிரிந்தது.
சொக்கிக் கிடந்தவளின் காதருகே “டார்லிங் “ என்கிற வார்த்தை கேட்டு கண் திறந்தாள்.

கண்ணெதிரே அவன் அதே சாக்லேட் வாசனையோடும் நெற்றியில் வெட்டுக் காயத்தோடும் நின்றிருந்தான். கனவா நினைவா? என்று புரியாதவள் குடித்த ஒரு கோப்பைத் தேநீருக்கு பணம் கொடுத்துவிட்டு பேருந்தில் ஏறினாள்.

வீடு வந்து சேர்ந்தும் அந்த கதையும் அவள் மனதில் ஏற்பட்ட அழகான குழப்பமும் அவள் நெற்றியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டைப் போல ஒட்டிக் கொண்டது.

வழக்கத்தை விட அவன் நியாபகத்தை அதிகமாகக் கொடுத்த நாளாக அந்த நாள் இருந்தது. கேட்டது, பார்த்தது, உணர்ந்தது எல்லாமே காதலாக இருந்தது.

அக்பர் மீது இருந்த ஏக்கமும் கோபமும் கடையில் கவலையாக மாறியது. தெரியாத எண்ணில் இருந்து “டார்லிங் “ என்கிற உரிமை வெளிப்படுகிறது என்றாலே அது அவராகத்தான் இருக்க முடியும். தேநீர் கதைக் கனவில் உதட்டில் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தவன் கண் விழித்ததும் அதே சாக்லேட் மணம் பரவ வெட்டுக் காயத்தோடு எதிர் நின்றது ஏன்?. அந்த மாயைக்குள் மீண்டும் நான் நுழைந்தால், என் மனம் புன்படும் என்று புறக்கணித்தாள் ஜோதா.

தொடரும்...♡
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top