• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் - 31

எந்தவித கவனச் சிதறலும் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் அவன் அடைய வேண்டிய இலக்கு மட்டுமே மனதில் வைத்து ஆதி தயாராகிக் கொண்டிருந்தான். தீவிரமான பயிற்சிக்குப் பிறகு வாய்ப்பிற்காக காத்திருந்த ஆதிக்கு ஒரு நல்ல செய்தி தேடி வந்தது.

மாநில அளவிலான பாக்ஸிங் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி இருப்பதை தன் நண்பர் ஒருவரின் மூலம் அறிந்துகொண்ட ஆதியின் அப்பா அவனுடைய பெயரை முதல் ஆளாகப் பதிந்தார். அறிவிப்பு வெளியாகிய நாளில் இருந்து போட்டி நாள் வரை இடையில் இரண்டு மாதங்கள் கால அவகாசம் இருந்தது. அந்த இரண்டு மாத காலமும் அந்தப் போட்டிக்காக தவம் இருப்பது போல அவனுடைய மனதையும் உடலையும் தீயாகத் தயார்படுத்திக் கொண்டிருந்தான்.

இரண்டு மாதத்திற்கு பிறகு ஆதியின் அப்பா ஆசைப்பட்டது போல மாநில பாக்ஸிங் சாம்பியன்சிப் டைட்டிலை வெற்றி பெற்று ஆனந்தக் கண்ணீரை அவருக்குப் பரிசாக்கினான். அதன் பிறகு அடுத்த ஒரு வருடத்திலே இந்திய பாக்ஸிங் சாம்பியன்சிப் டைட்டிலைப் பெற்று அவனுடைய அப்பாவிற்கும் மற்ற பயிற்சியாளர்களுக்கும் பெருமையைத் தேடித் தந்தான்.

இதைவிட இன்னும் பெரிய பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று முனைப்போடு இருந்த போது கூடவே கல்யாணக் கலையும் வந்தது. ஆதிக்கும் யாமினிக்கும் வயது இருபத்தைந்தைக் கடந்ததால், அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் ஆதியின் அப்பா. இந்த யோசனையை அவர் ஜோதியிடம் கலந்து பேசி முடிவு செய்தார்.

இதைக் கேட்டதும் மலர்ந்த ஜோதியின் முகம் கூடவே கண்ணில் இருந்து கண்ணீரையும் சிந்தியது. “நம்ம புள்ளைங்க கல்யாணம் பண்ற அளவுக்கு வளந்துட்டாங்களா? “ என்று முகத்தைச் சுழித்தபடியே கேட்டாள் ஜோதி.

“நம்ப புள்ளைங்க எல்லாம் நல்லாவே வளந்துட்டாங்க. நீதான் இன்னும் குழந்தையாவே இருக்க “

“ம்ம்ம். இப்பவே கல்யாணம் பண்ணி வைக்கனுமா? “

“கல்யாணம் ஆதிக்கு. உனக்கு இல்ல. ஏதோ உனக்குப் பண்ணி வைக்குற மாதிரி இவ்வளோ சடைப்பா கேக்குற? “

“ஏன் எனக்குக் கூட கல்யாணம் பண்ணி வைங்க “

“இந்த காலத்துப் பசங்க ரொம்ப ரொம்ப ஷார்ப். விவரம் இல்லாம நான் உன்கிட்ட மாட்டுன மாதிரி பைத்தியக்காரனா இருப்பாங்களா? “

தன் கணவன் விளையாட்டுத்தனமாகப் பேச அவளும் சிறுபிள்ளையைப் போல முனங்கிக் கொண்டாள்.

நம்முடைய வாழ்க்கை எப்படி காதல் குறையாமல் சிறப்பாக இருக்கிறதோ அதே மாதிரி ஆதி யாமினியின் திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமைய வேண்டும் என்று வேண்டி இருவரும் திருமணம் வேலைக்குள் காலடி வைத்தார்கள்.

பல வருடமாக காதலித்த இருவருக்கும் திருமணம் நடக்கப் போகிறது என்கிற உற்சாகத்தில் எதுவும் புரியவில்லை.

அவர்கள் இருவரும் எதிர்பாராத நேரத்தில் திடீர் முடிவாக திருமண பேச்சு தொடங்கியதால், அவர்களுடைய இருக்கமான வேலையில் இருந்து விடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால், யாமினியின் வேலையைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டு வீடு வந்து சேர்ந்தாள்.

ஆதியும் அவனுடைய பயிற்சி நேரங்களைக் குறைத்துக் கொண்டு வீட்டில் அதிக நேரத்தை செலவிட ஆரம்பித்தான்.
திருமண ஏற்பாடு தடபுடலாகத் தொடங்கியது. ஜோதி தனக்கு எப்படியெல்லாம் திருமணம் நடக்க வேண்டும் என்று கனவு கண்டாளோ, அந்த குறிப்புகளோடு தன் பிள்ளைகளின் ஆசைகளையும் சேர்த்துக் கொண்டு நவீன முறையில் அனைவரும் பார்த்து ஆச்சர்யப்படும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினாள்.

அந்தத் திட்டத்தில் பல விதமான புதுமைகளைப் புகுத்த ஈவன்ட் மேனேஜ்மென்ட் நண்பர்களும் களமிறங்கினார்கள்.

எங்கோ தொடங்கி எப்படியோ முடிய வேண்டிய என்னுடைய வாழ்க்கை ஒரு நாள் ஆதியின் அப்பாவைப் பார்த்த பிறகு தலைகீழாக மாறியது. அந்த நாள் தொட்டே நான் இந்த வீட்டில் ஒரு அங்கமாக மாறிவிட்டேன். அது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இப்போது என் வாழ்க்கையில் குறை என்கிற வார்த்தை காய்ந்து காற்றில் பறந்து காணாமல் போய்விட்டது. முன்பிருந்தே இந்த வீட்டில் வாழ்ந்ததால், இவர்களுடைய அன்பில் திகைத்ததால், திருமணம் என்பது பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. திருமணத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பும் இல்லை. அம்மா அப்பாவின் ஆசைக்காகத்தான் இந்த திருமண ஏற்பாடு இவ்வளவு விமர்சியாக நடக்கிறது. ஆதிக்கும் கூட எங்களுடைய திருமணம் அப்படி நடக்க வேண்டும் இப்படி நடக்க வேண்டு என்று எந்த ஆசையும் இல்லை. அம்மா அப்பா என்ன முடிவு செய்தாலும் சரி என்று ஒற்றை வாக்கியத்தில் முடித்துவிட்டான் என்று திருமண விழாவிற்கு மூன்று நாளைக்கு முன்னாடி நடந்த சடங்கில் யாமினி அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.

எல்லா விதத்திலும் சிறந்த ஏற்பாடுகள் நிறைந்த ஒரு உயர் தர திருமண மண்டபத்தில் ஜோடி சேர்ந்த காதலர்கள் மங்கள குங்குமத்தால் தங்களது தீராக் காதலை அழியா சுவடுகளில் பொறித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்பார்பை மிஞ்சிய திருமணமாக ஆதி மற்றும் யாமினியின் திருமணம் அற்புதமாய் அரங்கேறி முடிந்தது.

திருமணம் முடிந்த கையோடு அவர்களை வெளியூர் பயணத்திற்கு ஒரு வாரம் அனுப்பி வைக்க முடிவு செய்து, எந்த ஊருக்கு போக ஆசை என்று கேட்டதும் எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் யோசனையும் இல்லாமல் ஆதி கொடைக்கானல் என்றான்.

“ஏன்டா கல்யாணத்தப்போ அது பண்ணலாமா ? இது பண்ணலாமானு கேக்கும்போது நல்ல புள்ளையாட்டம் உங்க இஷ்டம்னு தலைய குனிஞ்சிட்டே சொன்ன, இப்போ எங்கடா போச்சு அந்த வெட்கம்? “ என்று ஜோதி கேட்டாள்.

“ம்மா இத்தன வருஷ காதல் வாழ்க்கையில ஒரு டீக்கடைக்காச்சும் நாங்க ரெண்டு பேரும் ஒன்னா போயிருக்கமா? “

“அதெல்லாம் சும்மா சொல்லக் கூடாது என் புள்ளைங்க ரெண்டும் தங்கம் “

“ம்ம் ஆமா. அந்த ஊர்ல ஹார்ட் சாக்லேட் சூப்பரா இருக்குமாம் அத டேஸ்ட் பண்ணதான் அங்க போகனும்னு சொன்னேன். நீங்க தப்பா நெனச்சா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது “ என்று ஆதி நக்கலடிக்க, யாமினி அவன் தலையில் அடித்தாள். ஆதியின் விருப்பப்படியே ஹனி மூன் ட்ரிப்பிற்கு கொடைக்கானல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஜோதா அக்பர் கதை படிக்கும்போதே கொடைக்கானலின் மீது ஒரு வித ஈர்ப்பு ஆதிக்கு வந்துவிட்டது. அவன் கனவில் மட்டுமே கண்ட அந்த காதல் காட்சியில் நினைவில் யாமினியுடன் வாழ்ந்து கொண்டிருந்தான். பனி மூட்டம் இருவரின் எதிர்பார்பையும் சூடேற்றித் தீமூட்ட காதல் தீயில் வெந்து பின் தணிந்தார்கள்.

உண்மையிலேயே அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் மற்ற அனைத்தையும் மறந்து காதலை மட்டுமே கொண்டாடி முழுமாயான காதலர்களாக மட்டுமே வாழ்ந்தார்கள்.

யாமினி ஆதி என்கின்ற அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு துளி கூட அதில் கலக்கவில்லை. ஒரு வாரம் அங்கேயே தஞ்சம் கொண்டிருந்த இருவரும் இறுதி நாளில் இனிமேல் இருவரும் எப்போதும் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது என்று சத்தியம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.

அங்கிருந்து கிளம்ப ஒரு சொட்டளவு கூட விருப்பமில்லாத இருவரும் மறுநாள் ஆதியின் அப்பாவுடைய பிறந்தநாள் இருந்ததால் அவசரமாகக் கிளம்பினார்கள்.

கார் பயணத்தின் போது மௌனத்தைக் களைவதற்காக பேச ஆரம்பித்த இருவரின் காதலும் சத்தியத்தை மீறி சண்டை என்கிற இனிப்பான கசப்பிற்குள் நுழைந்தது.

“இப்போ இங்க இருந்த ஒன் வீக் லைஃப் மாதிரியே நம்ம எப்பவுமே சந்தோஷமா, நிம்மதியா, இப்போ விட இன்னும் அதிகமா லவ் பண்ணிட்டே இருக்கனும் “

“ம்ம்ம் ஆமா எந்த யோசனையும் இல்லாம ஜாலியா லவ் பண்ணிட்டு, பாக்குறவங்க என்ன நினைப்பாங்கன்ற சிந்தனையே இல்லமா முழுக்க முழுக்க காதல்… காதல்… காதல்னு… வாழ்ந்தே செத்துப் போய்றனும் “

“வாய்லயே ஒரு அடி குடுக்கனும் உனக்கு. நல்ல நேரத்துல பைத்தியம் மாதிரி பேசுற நீ. எதாவது நல்ல விஷயம் பேசுறதா இருந்தா பேசு இல்லைனா கம்முனு வா “

“சரி நல்ல விஷயம் ஒன்னு சொல்லவா? “

“சரி சொல்லு “

“நம்ம ரெண்டு பேரும் நெக்ஸ்ட் மந்த் மலேசியா போறோம் “

“என்ன கப்பில்ஸ் டூரா?... ஜாலி ஜாலி “

“லூசு டூர் இல்ல. அங்கையே போய் தங்கி வாழப் போறோம். அங்க எனக்கு ஒரு நல்ல பாக்ஸிங் ஸ்கூல்ல ட்ரைனாரா வேல கெடச்சிருக்கு. நல்ல சம்பளம். நம்ம வாழ்க்கையே அடுத்த கட்டத்துக்கு தாவிரும் “

“ஆனா அப்பாவுக்கு நீ நம்ம ஊர்லயே பாக்ஸிங் ஸ்கூல் நடத்தனும்னுதான ஆசை “

“ஆமா. அதெல்லாம் வேஸ்ட். நம்ம அங்க போயற்லாம். அப்பா கிட்ட கூட இதப்பத்தி பேசுனே “

“என்ன சொன்னாரு? “

“ரெண்டு நாள் யோசிச்சிட்டு அப்புறம் சரினு சொல்லிட்டாரு”

ஆதியின் முடிவைக் கேட்டு கடும் கோபத்திற்கு ஆளான யாமினி அவனுடைய சுயநலத்தையும், பெற்றோரின் மீது அக்கறை இல்லாமல் பேசும் விதத்தையும் பார்த்து அவனுக்கு சூடு போட நினைத்தாள். இவனுக்கு இந்த வாழ்க்கையைப் பிச்சையாகப் போட்ட அப்பாவின் ஆசையை நிறைவேற்றாமல் தன் சுய விருப்பத்தைப் பிடித்துத் தொங்குகிறானே என்று அவனுக்குப் பாடம் புகுட்டத் தன் சத்தியத்தில் இருந்து மீறி “ஒரு கத சொல்லவா ஆதி? “ என்று ஆரம்பித்தாள்.

“என்ன கத? “ என்று அவன் கேட்டபோது, “நீ பாதிலயே கைவிட்டியே ஜோதா அக்பர் கதை அத நான் இப்போ கன்டின்யூ பண்ணவா?” என்று ஏளனாமாகச் சிரித்தாள். அவள் சொன்னதைக் கேட்டுத் தலை சுற்றிப் போன ஆதி வாயடைத்துப் போனான். அவனுடைய கைகள் நடுங்கின, “அந்த கதை உனக்கெப்படி? “ என்று திக்கித் திணறிக் கேட்டான். “அத எடுத்து பத்திரமா ஒழிச்சு வச்சது நான்தான். உனக்குத் தெரியக்கூடாதுனுதான் ஒழியவச்சேன். ஆனா இப்போ அந்தக் கதையோட மீதி உனக்குத் தெரிய வேண்டிய நேரம் வந்துருச்சு “ என்று யாமினி சொன்னாள்.

அவள் பேசுவது புரியாமல் புருவத்தைச் சுழித்துக் கொண்டு அந்தக் கதைக்கும் நமக்கும் என்ன சம்மந்தம் என்கிற குழப்பத்தில் தவித்தான் ஆதி. “வீடு கிட்ட நெருங்கிட்டோம் அதுனால வல வலனு இழுக்காம ரொம்ப ஷார்ட்டா சொல்றேன் “ என்று யாமினி தொடங்கினாள்.

தொடரும்...♡
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top