• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் - 4

“இதுக்கு மேல இவன் இந்த காலேஜ்ல படிக்க வேணாம்.அவன் நான் ஹாஸ்டல்ல சேர்த்து விடுறேன் எந்த தகராறும் செய்யாம அமைதியா போய் படிக்குற வேலைய. மட்டும் பாக்கச் சொல்லு இல்லைனா நான் மனுசனாவே இருக்க மாட்டேன் அப்படினு சொன்னாருடா “
“எப்போ? “
“இப்போதான் கொஞ்ச நேரம் முன்னாடி”
“அதுக்கு நீயும் சரினு சொல்லிட்டியாமா”
“டேய் நான் என்னடா சொல்ல முடியும்?.அவரு ஒன்னும் என்கிட்ட ஆலோசன கேக்கல.அவரு முடிவுல தெளிவா இருக்காரு. போய் ஹாஸ்டல்ல விட்டுட்டு வரேன். இதப் போய் அவன் கிட்ட சொல்லு அப்படினு சொன்னாரு”
“ம்ம்ம்ம்மா இந்த ஒரு தடவ மட்டும் நீ எனக்காக பேசுமா”
“ஆதி அப்பாவ பத்தி தெரிஞ்சுகிட்டேவா நீ இப்படி சொல்ற?”
“உன்னையும் சிபியையும் விட்டுட்டுலாம் என்னால எப்படி இருக்க முடியும்?”
“எங்களாலையும் அப்பாவாலையுமே உன்னைய விட்டுட்டு இருக்க முடியாதுனு உனக்கே நல்லாத் தெரியும் அதையும் மீறி இந்த முடிவு எடுத்திருக்காருனா இதுக்குப் பிறகு பிறகு பின்னால ஏதோ ஒன்னு இருக்குடா. அப்பா எது பண்ணாலும் நம்ம நல்லதுக்குதான் பண்ணுவாரு”
“சரிமா.இதுக்கு மேல உங்க விருப்பம்”
“ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மனச போட்டுக் கொழப்பிக்காம ரெண்டு பேரும் அமைதியா படுத்துத் தூங்குங்க”
“சரி “
அம்மா அறையின் கதவை அடைத்த பிறகு அந்த அறைக்குள் அண்ணனின் முனங்கள் சத்தம் கேட்கவில்லை அதற்கு பதிலாக ஏங்கி ஏங்கி அழுகும் அழுகுரல்தான் கேட்டது. சிபிக்கு என்றும் இல்லாத சமாதானம் எல்லாம் எட்டிப் பார்த்தது.
அவனிடம் இருந்து சண்டை போட்டு வாங்கிய ரிமோட் காரை அவனிடமே தந்துவிடலாம். டிவி ரிமோட் அவனிடமே வைத்துக் கொள்ளட்டும். அம்மா பிரியாணி செய்தால் அவன் தட்டில் இனிமேல் கைவைக்க வேண்டாம். எனக்கு பிடித்த புசு புசு கம்பளியையும் அவனே போர்த்திக் கொள்ளட்டும் என்று தான் மேல் இருந்த கம்பளியை விலக்கி அவன் மேல் போட்டு விரித்துக் கொண்டிருந்தான். அப்போது அப்படியே கம்பளியோடு சேர்த்து அவனை இறுக்கமாகக் கட்டி அணைத்துக் கொண்டான் ஆதி.

சிபியும் ஆதியும் வழக்கமான அண்ணன் தம்பி போலத்தான் எலியும் பூனையுமாக இருப்பார்கள். எல்லா விளையாட்டும் சேட்டையும் நாம் செய்வதைப் பொறுத்துக் கொள்ள ஒருவர் இருக்கிறார் என்று நம்பும்வரைதான். இன்று சிபிக்கு அந்த நம்பிக்கை உடைந்து சுக்கு நூறாய்ப் போனது.

“டேய் ஆதி அப்போ நீ என்ன விட்டு தூரமா போய்ருவியா?
“ம்ம்ம்ம்ம்ம் ஆமா ரொம்ப தூரம். ஆனா ரொம்ப நாள் இல்ல மூனு வருஷம்தான, என் தொல்ல இல்லாம நிம்மதியா இருங்க எல்லாரும்”
“அப்படி சொல்லாதடா. அடிக்கடி என்னைய பாக்க வாடா”
“சரி எல்லா வாரமும் ஞாயித்துக்கிழம வரேன்.நீ அழாம, பக்கத்து வீட்டு ரோசி பாப்பா கூட சண்ட போடாம, நகம் கடிக்காம, ஃபோன் பாக்காம, சமத்தா சாப்பிட்டுட்டு, அம்மாவ. நல்லா பாத்துக்கோ”
“சரிடா “
“ம்ம்ம்ம்ம்ம் இப்போ தூங்கு”
சிபி பிறந்த முதல்நாள் ஆசையில் அடம்பிடித்து அவன் பக்கத்தில் படுத்தபோது அவன் உடல் முழுவதும் அடித்த வெப்பத்தின் ஸ்பரிசம் இன்றும் பால்வாசனை மாறாமல் அப்படியே இருக்கிறது. இவனை நீங்கிப் பிரியப் போகிறோம் என்கிற எண்ணம் வரும்போதெல்லாம் அவன் நெற்றியில் முத்தமிட்டு அவ்வெப்பத்தின் ஸ்பரிசத்தை உணர்ந்து நொந்தான் ஆதி.

மறுநாள் டிசி வாங்க கல்லூரிக்குச் சென்றார்கள் ஆதியும் அப்பாவும். மாமாவிற்குத் தேவைப்படுவதாகச் சொல்லிய அதே பைக்கில்தான் சென்றார்கள். கல்லூரியில் சென்ற வேலை மிக விரைவாகவே முடிந்தது, வருவார்கள் எனத் தெரிந்தே தயாராக எடுத்து வைத்திருப்பார்கள் போல.

இவ்வாறான மனக்கசப்புகள் ஒருபுறம் இருந்தாலும் யாமினி என்ன ஆனாள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஒற்றை ஆர்வம் பட்டாம்பூச்சி காலில் கட்டிவிடப்பட்ட பூவிதலைப் போல படபடவென அடித்துக் கொண்டு அங்கும் இங்குமாய் அவளைத் தேடியது. ஆனால், அவன் கண்கள் சுற்றித் திரிந்த எந்த இடத்திலுமே அவள் இல்லை. பெரும் ஏமாற்றத்துடனே வீடு வந்து சேர்ந்தான்.

அவளுக்கான செல்ஃபோன் அழைப்பு எண்ணிக்கை எல்லாம் ஆயிரத்தைத் தாண்டியிருக்கும். பதிலுக்கு அவளிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி கூட வரவில்லை. ஹாஸ்டலுக்கு சொல்வதற்கு இடையில் இருந்த ஒரு வாரம் அவளுக்காக காத்திருந்தான். அவளை நினைப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் ஆதி இருந்ததால் கனத்த இதயத்துடன் விடுதிக்குள் நுழைந்தான்.

அவனை விட்டுச் செல்ல மனமில்லாமல், இருந்த மூவரும் அவன் தங்களை விட்டு நடந்து விடுதி வாயிலைக் கடந்து அறைக்குள் செல்லும் வரை அசையாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களை ஆதித் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இதில் தவறு யார் மேல்? இதற்கு இதுதான் முடிவா? என்று நால்வரும் மனதிற்குள்ளே முனங்கிக் கொண்டார்கள்.
மூத்த மகனை இப்படித் தனியாகத் தவிக்க விட்டுச் செல்கிறோமே என்கிற வேதனையிலேயே மூவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.

ஆரம்பத்தில் கல்லைக் கடிப்பது போல இருந்தாலும் பிறகு மெல்ல மெல்ல அதுவே பழகிவிட்டது. தினமும் சரியாக ஏழு மணிக்கு அம்மாவின் செல்ஃபோனில் ஆதியின் குரல் ஒலிக்க ஆரம்பித்துவிடும் அது எட்டு மணி வரை தொடரும். எட்டு மணிக்கு மேல் அப்பா ஜிம்மில் இருந்து வீட்டிற்கு வருவார் அவர் இருந்தால் அவரிடம் பேச நேரிடும் என்ற பயத்திலேயே அழைப்பைத் துண்டித்துவிடுவான்.
பணத்தேவை இருந்தால் மட்டும் அப்பாவிற்கு எவ்வளவு பணம் வேண்டும்? , எப்போது வேண்டும்? என்பதற்கு மட்டும் பதில் சொல்லுவான். ஆதி தன் கோபத்தையும், பாசத்தையும், வெறுப்பையும் வெளிப்படையாக அம்மாவிடம் சொல்லித் தீர்த்துவிட்டு அதிலிருந்து வெளியே வந்து அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவான். ஆனால் ஆதியின் அப்பா அப்படி இல்லை. அவருக்கு எந்த உணர்வையுமே வெளிக்காட்டிக்கத் தெரியாது. அவரிடம் இருக்கும் ஆகச் சிறந்த பலமே ஜோதிதான். அவர் சொல்லாட்டியும் செய்யாட்டியும் அவர் மனதைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல நடந்துகொள்வாள்.

“என்னங்க தூங்கலையா ?
“இல்லமா நீ தூங்கு”
“இங்க வாங்க உடம்பு எதும் சரியில்லையா? (அவரை அருகே அழைத்து நெற்றியையும் கழுத்தையும் தொட்டுப் பார்த்தாள் ஜோதி) “
“அதெல்லாம் ஒன்னும் இல்லமா”
“அப்புறம் என்ன யோசி?”
“ விருப்பமே இல்லாட்டியும் பசங்களோட ஒரு குறிப்பிட்ட வயசு வந்தவுடனே அதுவரைக்கும் அவனுக்கு ஹீரோவா இருந்த அப்பனுங்க எல்லாம் வில்லனா மாறும்படி செஞ்சு வேடிக்க பாக்குது கால நேரம்”
“ஆதிய சொல்றீங்களா?”
“ஆமா என் ஆசைப் புதல்வன். பெரிய ராஜா”
சிரித்துக் கொண்டே கிண்டலாகப் பேசினாலும் அவர் கண்களில் தேங்கி நிற்கும் கண்ணீருக்கான உண்மையான அர்த்தம் என்னவென்று ஜோதிக்கு மட்டும்தான் புரியும். “சரி விடுங்க எல்லாம் ஒரு நாள் சரியா போய்டும்”என்று ஆறுதல் சொல்லி உறங்க வைத்தாலும் நினைவு என்னவோ அவனையும் அவனைப் பற்றி கவலைகளையும் சுற்றிதானே வருகிறது ஆதியின் அப்பாவிற்கு. ஒரு மாதத்திற்கு மேல் அந்த வலி அப்படியேதான் இருந்தது. அதற்குப் வலி குறையவில்லை அவர் அதை ஏற்றுக்கொண்டு பழகிவிட்டார்.

அப்பாவிடம் அதிகம் பேசவில்லை என்றாலும் அதற்கெல்லாம் சேர்த்து அம்மாவிடம் பேசிவிடுவான் ஆதி. விடுதியில் சேர்ந்த புதிதில் யாரிடமும் அதீத பகிர்தல் இல்லாமல் மௌனமாகவேதான் இருப்பான். பத்து கேள்விக்கு ஒற்றை பதில் சில நேரங்களில் அது கூட இருக்காது. ஏனெனில் அவன் மனநிலையும் சூழ்நிலையும் அவனுக்கு இதுவரை பழக்கமில்லாத ஒன்று.
எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு எதார்த்தமான ஆதியாக நடந்துகொள்ள இரண்டு மாதம் இறையாகிவிட்டது. பின் அவன் அணிந்திருந்த தேவையில்லாத குழப்பங்களைக் களைந்து சிரிக்க ஆரம்பித்தான்.
எப்போதும் ஏழு மணிக்கு அழைப்பவன் அன்று ஏனோ ஆறு மணிக்கே அழைத்திருந்தான். வழக்கத்திற்கு மாறாக எது நடந்தாலும் பயம் எங்கிருந்தோ வந்து தொற்றிக் கொள்ளும் அல்லவா? ஜோதிக்கும் அப்போது அப்படித்தான் இருந்தது.
“என்ன சாமி என்னாச்சு?”
"என்னது என்னாச்சு? என்ன புதுசா சாமி கீமினு?"
“அது ஒன்னு இல்ல விஷயத்த சொல்லு”
“இல்ல காரியமாதா கால் பண்ணிருக்கேனு எப்படி கண்டுபுடிச்ச?”
“இல்ல எப்பையும் ஏழு மணிக்குதான் கூப்பிடுவ இன்னைக்கு அதுக்கு முன்னாடியே கூப்பிட்டுருக்க அப்படினா ஏதாவது உடம்பு சரியில்லாம இருக்கும் இல்லனா எதாவது தேவையா இருக்கும்னு நெனச்சேன். நீ பேசுறத வச்சு உன் உடம்பெல்லாம் நல்லாதான் இருக்குனு உறுதி பண்ணிட்டேன்.
அப்போ ஏதாவது தேவையாதான இருக்கும்? சொல்லு என்ன வேணும்? "
“ம்மாஆஆஆ”
"என்னப்பா?"
“எனக்கு தேங்கா தண்ணி வேணும்”
“ஏ லூசு பயலே இடப்பட்ட நேரத்துல கால் பண்ணி பேச பாரு பேச்சு”
“இல்லமா இங்க கிச்சன்ல நைட்டுக்கான சமையல் வேலை நடந்துட்டு இருக்கு. பாத்தப்போ எனக்கு நம்ம வீட்டு நியாபகம் வந்துருச்சு”
“ம்ம்ம்ம் ஆமா இங்க நான் தேங்காய் உடைக்குற மாதிரினா நீயும் சிபியும் போட்டி போட்டுட்டு டம்ளர் எடுத்துட்டு வந்து நிற்பீங்க”
“என்னதான் ஃபிரிட்ஜ் நெறையா டப்பா டப்பாவா ஜூஸ் இருந்தாலும் சிபி கூட சண்ட போட்டு அதுல ஜெயிச்சு அவன் அழுகுறத பாத்துட்டே அந்த தேங்கா தண்ணிய குடிக்குறதுல ஒரு அளவில்லாத சுகம் இருக்குமா”
“என் பெரிய ராஜா இப்படி எல்லாம் பேசுவாருனு இன்னைக்குதான் எனக்கு தெரியுது. இதுக்கு முன்னாடி இப்படி எல்லாம் பேசுவாருனு தெரியாது. கவலைனு ஒன்னு இருந்தாதான சந்தோஷம் சுகம் அது இதுனு வித்தியாசம் தெரியல. என் புள்ள படாத கஷ்டம் பட்டு நொந்து கெடக்குறான். அதான் சின்ன சின்ன விஷயத்துக்கு கூட பெரிய பெரிய அர்த்தம் தேடுறான் “
“இதுக்குதாமா உங்கிட்ட எதுவுமே சொல்லக் கூடாது”
“எங்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்ல போற ஒரு?”
“அது என்னமோ உண்மைதான்”
“ம்ம்ம்ம்ம்ம்ம் அப்படியா? அப்போ யாமினி யாருனு சொல்லு”

தொடரும்...♡
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top