New member
- Joined
- Dec 1, 2024
- Messages
- 9
- Thread Author
- #1
சுந்தரி - 3
அன்று அந்த ஆந்திரா கொலை கேஸை முடிவுக்கு கொண்டு வந்த ஈஸ்வர் நான்கு மணியளவில் நிம்மதியாக உட்கார, ஹரிஹரனிடம் இருந்து தொடர் அழைப்பு.
‘அடுத்து இவன் ஆரம்பிச்சிட்டானா?’ என மனதினுள் திட்டி, “சொல்லுடா?” என்றான் சலிப்பாக.
“என்ன சார், எதோ வேண்டா வெறுப்பா கேட்கிற மாதிரி தெரியுது.”
“அப்படியா தெரியுது?” என்று அலட்சியமாக கேட்டான்.
“நீங்க பேசுறத வச்சிப் பார்த்தா, எனக்கு அப்படித்தான் தெரியுது.” என்றான் ஹரிஹரன்.
“ஆமாடா. கேஸ் முடிச்சி இப்பதான் அக்கடானு உட்கார்ந்திருக்கேன், உடனே மூக்கு வேர்த்த மாதிரி நீ வந்தா அப்படிதான் சொல்லுவேன். எதுக்குக் கூப்பிட்டன்னு சொல்லு?”
“அது வந்து சார்...”
“நீ வர்றதுக்குள்ள எல்லாம் வாய்தா வாங்கிட்டுப் போயிடும். ஓ... இந்த கேஸை சீக்கிரம் முடிச்சா, நீ நல்ல லாயர்னு ஒத்துக்கறேனு சொன்னதை, நியாபகப்படுத்த கூப்பிட்டியா? நான் ஒத்துக்கறேன்டா. நீ பெரிய அப்பாடக்கர் லாயர் தான். ஸ்மார்ட் பாய். டேலன்ட் லாயர்” என்றான் பாராட்டாக.
ஈஸ்வரின் வஞ்சப்புகழ்ச்சியில், “க்கும்.. அது எனக்கே தெரியும் சார்” என்று வீராப்புடன் சொன்னான் ஹரிஹரன்.
மனதினுள் சிரித்து, “சரி சொல்லு ஹரி?” என்றான் அவன்.
“சார் நான் சொல்ல வரதை கேட்பீங்களா? மாட்டீங்களா? அந்த விஷயத்தை உங்களிடம் சொல்லாம தலையே வெடிக்குது. ஒரு முறை கேட்டால் தான் என்னவாம்” என்றான் ஹரிஹரன்.
“சரி தான். இப்ப சொல்லு கேட்போம்” என்க,
“போன்லயா? நேர்ல சொல்லுற விஷயம் இது. நான் சொல்லப்போற விஷயத்தோட முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியலை சார். அதான் ரொம்ப அலட்சியப்படுத்துறீங்க. இதனால் லாஸ் எனக்கு இல்ல உங்களுக்கு தான். இனி நீங்களா கேட்காம நான் சொல்லுறதா இல்ல” என்றான் இத்தனை நாள் முயன்று தோற்றுவிட்ட குரலில்.
ஹரிஹரனும் இரண்டு வாரமாக முயற்சிக்கிறான் இந்த எஸ்பியிடம் சொல்ல. எங்கே இடம் கொடுக்கிறான் இவன். கழுவும் நீரில் நழுவும் மீனாக நிற்கிறான்.
“சாரிடா. எதோ விளையாட்டா பேசுறதா நினைச்சி பெருசா எடுத்துக்கல. இப்ப எங்க இருக்க சொல்லு? அங்க நான் வரேன்.”
“கேஸ் விசயமா கோர்ட் வந்திருக்கேன் சார். கோர்ட் முடியுற நேரம் தான். நீங்க எங்க இருக்கீங்க?”
“ஆபீஸ்ல தான் இருக்கேன்.”
“இன்னும் பதினைந்து நிமிடத்தில் அங்க இருப்பேன். எங்கேயும் போயிராதீங்க சார்” என்று வேகமாக பைக்கை எடுத்தான்.
“நீ வாடா முதல்ல. வாய் பேசியே நேரத்தை ஒட்டாத. அப்புறம் நான் எதுவும் கேட்கலன்னு என்மேல பழிய போடுறது” என்று போனை வைத்தான் ஈஸ்வர். வைத்த அடுத்த நிமிடம் கமிஷனரிடம் இருந்து அழைப்பு வர அதை ஏற்றவன், வேறு வழியில்லாது தன் கடமையை செய்ய கிளம்பி விட, அவசரத்தில் ஹரியை மறந்து விட்டான்.
இரவு வீடு வர பத்தே முக்கால் ஆனது. உண்டு முடித்து படுத்ததும் தான் ஹரிஹரன் நினைவு வந்தது. சட்டென எழுந்தவன் வேகமாக சார்ஜில் இருந்த போனை எடுத்து அவனுக்கு அழைக்க, அழைப்பு ஏற்கப்படவில்லை. நாலைந்து முறை முயற்சித்து திரும்பவும் சார்ஜில் போட்டுவிட்டு யோசனையுடன் படுத்தான்.
‘அப்படி என்ன சொல்ல இந்த ஹரி பிரம்ம ப்ரயத்தனம் செய்யுறான்? கண்டிப்பா தெரிஞ்சிக்கனுமே. நாளைக்கு நேரம் ஒதுக்கி அவனை பார்த்துட்டு வரணும்’ என்று எண்ணியவாறு தூங்கிவிட்டான்.
“ஹே சுந்தரா!” என்று அவன் மேல் மொத்தமாக சரிந்து, உடலோடு உடல் மோத படுத்து, கழுத்தில் முகம் புதைத்தவள், “என்ன.. என்னைப் பார்க்க வரதா எண்ணமே இல்லையா? நான் கூப்பிடுறது வெறும் கனவுன்னு நினைக்கற தான? வயசு போகுது மாமா. காலாகாலத்துல கல்யாணம் கட்டிட்டு, புள்ளகுட்டி பெத்துக்க வேணாவா. காத்திருந்த காலமெல்லாம் போதும் கண்ணா. என் உயிரோடு மெய் கலக்க வா” என்றாள் மதுரச குரலில்.
“என்னடி ரைமிங்கா பேசுற? போலீஸ்காரன கண்டு பயம் துளியும் இல்லையே உனக்கு. என்ன தைரியமா என்மேல படுத்து என்னைப் படுத்துற. நான் உன்மேல படுத்தா என்னாகும் தெரியுமா? முப்பத்தஞ்சு வருசமா காய்ஞ்சி போய் கிடக்கிறேன். கதம் பண்ணிடுவேன்டி.”
“அதுக்கு கூட நீ என்னிடம் வரனும் மாமா. வந்து என்ன வேணா பண்ணு. யார் கேட்பா? ம்ம்ம்...” என்று புருவம் உயர்த்தி சவால் விட்டாள் பெண்.
“வந்து பண்ணுரேன்டி உன்ன” என்று அவளை இறுக்கக் கட்டியவன் கைகள் தன் உடம்பில் ஒட்டியது. “மறைஞ்சிட்டியா? நெனச்சேன். இதோ வரேன்டி” என்று நான்கு மணிக்கெல்லாம் எழுந்தவன் தயாராகி வெளியே வந்தான்.
ஹாலில் ஆள் நடமாட்டம் தெரியவும் தேவகியும் எழுந்து வந்தார்.
“ஈஸ்வர்! என்னடா இப்பவே கிளம்பிட்ட. மணி நாலே முக்கால் தான் ஆகுது. அதுக்குள்ள என்ன அவசர வேலை வந்ததுன்னு கிளம்பிட்ட?” என்று திட்டினார் தேவகி.
“அ... அது சாரிம்மா. கமிஷனர் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அதான்...” என தடுமாறினான்.
“இந்த நேரத்தில் கமிஷனர், ஆபீஸ்ல இருக்காரா? நம்புற மாதிரி இல்லையேடா.” என்று புருவம் சுருக்கினார்.
“ஆங். ஏ... ஏதாவது முக்கியமான கேஸ் முடிக்கனும்னா இருப்பாரு. நான் என்னவோ பொய் சொல்லுறது போல கே... கேட்கறீங்க.” என்று அலட்டலாக சொல்ல,
“இப்பதான்டா சந்தேகமே வருது. ஏன் திக்குற தெணறுற? எதாவது தப்பு பண்ணுறியா?” எனக் கேட்டார் மகனிடம்.
“சேசே... தப்பு பண்ணுறவன தண்டிக்கிற நானே தப்பு பண்ணுவேனா அம்மா? நான் உங்களோட சுத்தமான ப்ரொடக்ட்” என்று பல்லைக் காட்டினான்.
“இப்ப தான்டா ரொம்ப ஸ்ட்ராங்கா சந்தேகம் வருது. என்ன விஷயம்?” என்றார் தேவகி.
“அம்மா மகமாயி உன் சந்தேகத்துக்கு நான் ஆள் இல்ல. விட்டுடு” என்று தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டான்.
“சரி சரி பாவம் பார்த்து விடுறேன். கொஞ்சம் உட்காரு காப்பி போட்டு தரேன். குடிச்சிட்டு உன் டியூட்டி பார்க்கக் கிளம்பு” என்று சமையல் அறை செல்ல, ‘ஊப்’ என ஊதி அங்கு இருந்த ஷோபாவில் அமர்ந்தான்.
ஹாலிங் பெல் சத்தம் முடிந்து, கதவு தட்டும் ஓசையில் எழுந்து, “நேரம் காலம் இல்லாம அதிகாலையில் எவன்டா கதவை தட்டுறது?” என்று கொட்டாவி விட்டபடி வந்து கதவைத் திறந்த ஹரிஹரன், ஈஸ்வரை கண்டு முதலில் அதிர்ந்து பின் முகத்தை திருப்பி உள்ளே வந்தான்.
“ஒரு ஹையர் ஆபீசர பார்த்து மூஞ்ச தூக்குற ஒரே ஆள் நீதான்டா. கொஞ்சமும் பயம் இல்ல உனக்கு” என்று உள்ளே வந்து அங்கு உள்ள இருக்கையில் அமர்ந்தான்.
“எதுக்கு பயப்படனும். இல்ல எதுக்கு பயப்படனும் கேட்கிறேன்? இப்ப எதுக்கு இங்க வந்தீங்க? உங்களை நான் தேடலையே.” என்றான் கோபத்தில்.
“ப்பா என்னமா கோபப்படுறடா? சாரி நீ போனை வைத்த செகண்ட் கமிஷனர் ஸ்ட்ரிக்டா வர சொல்லிட்டார். உன்னிடம் இன்பார்ம் பண்ண கூட நேரம் இல்ல. நீ புரிஞ்சிப்ப நினைச்சேன்டா. நீ என்னடானா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிற. ரொம்பத் தப்புடா?” என்றான் ஈஸ்வர்.
“ப்ச் போங்க சார் காரணம் சொல்லிட்டு. நான் உங்களைக் கூப்பிடலையே. இப்ப எதுக்கு வந்தீங்க?”
“நீ எதோ சொல்லனும் சொல்லனும் சொன்னல்ல. அதை கேட்டுட்டு போகலாம் வந்தேன்.“ கால் மீது கால் போட்டு பதிலுக்காய் காத்திருந்தான் ஈஸ்வர்.
“சொல்ல எனக்கு மூட் இல்ல சார். டைம் அஞ்சி தான் ஆகுது, நான் தூங்குறேன். நீங்க என்ன செய்யுறதா உத்தேசம்?” என்றான் கேலியாய்.
“ம்ம்.. உன்ன உதைக்குறதா உத்தேசம். எவ்வளவு திமிர் இருந்தா என்னை வெளில போக சொல்லுவ. ராஸ்கல்” என்று அவனை விரட்ட,
“சார்.. சார்.. நான் புள்ளக்குட்டிகாரன் சார். என்னை விட்டுடுங்க” என்று கத்தினான் ஹரிஹரன்.
“எனக்குத் தெரியாம எப்போடா புள்ளக்குட்டிகாரனா ஆன? கல்யாணம் ஆகிடுச்சா உனக்கு?”
“சார் ஓவரா கற்பனை பண்ணாதீங்க. நான் என்னைப் பெத்தவங்க, கூட பிறந்தவங்கள நினைச்சி சொன்னேன்” என்றான் கதறலாக.
சில நிமிட அமளிதுமளிக்குப் பிறகு மூச்சு வாங்கியபடி, “இவ்ளோ காலையில் உன்னை பார்க்க வந்தது ஓடிப்பிடிச்சி விளையாடவா. ஒழுங்கா சொல்லுடா வைக்கோலு.” என்றான் கிண்டலாக.
“ஹலோ காவல்துறை... வக்கீல் சொல்லுங்க?”
“சரிடா வெஹிகிள்” என்றான் அதே தொணியில்.
“ரொம்ப டேமேஜ் பண்ணுறீங்க. இருந்தாலும் சொல்லுறேன்” என்று தான் எடுத்து வைத்திருந்த டாக்குமெண்டரியை அவனிடம் காண்பிக்க. அதிர்ந்து எழுந்துவிட்டான் அவன்.
தண்ணீர் எடுத்து ஈஸ்வரிடம் குடிக்கக் கொடுத்து அமர வைத்தவன், “என்ன சார். அதிர்ச்சியா இருக்கா? நேர்ல பார்த்த எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க” என்றான் ஹரிஹரன்.
“சாரிடா. நிஜமாவே இது அதிர்ச்சியோட சேர்ந்த ஆச்சரியமும் அதிசயமும் தான். நான் தான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். முன்னவே பார்த்திருக்கனும். கொஞ்சம் அலட்சியமா இருந்துட்டேன்.”
“என்ன பண்ண போறீங்க சார்?” என்றான் நேரடியாக. உள்ளுக்குள் ஹரிஹரனுக்கு தான் நினைத்தது நடக்கப் போகும் சந்தோசம். அந்த சந்தோசத்தை வெளியில் காட்டாது நின்றிருந்தான்.
காவல்துறைகாரனோ மர்மமாய் சிரித்துவிட்டுச் சென்றவன், அடுத்த ஒரு வாரத்திற்கெல்லாம் தென்காசியின் அருகிலுள்ள புளியங்குளம் கிராமத்தில் நின்றிருந்தான்.
ஒரு வீட்டின் கதவைத் தட்டி காத்திருந்தவன், கதவு திறக்கப்பட்டதும், “வணக்கம் தங்கச்சி. நான்...” என்று முடிக்கும் முன்...
“ஈஸ்வர் சார். வாங்க வாங்க” என்று வேகமாக அந்தப் பெண் வரவேற்றதும், அவளை முறைத்தான்.
உள்ளே அழைத்து வந்து அமர வைத்த சில நிமிடங்கள் கழித்தே அவன் முறைப்பை உணர்ந்தவள், “என்ன சார். வீடு ரொம்ப சின்னதா இருக்கு பீல் பண்ணுறீங்களா?” எனக் கேட்டாள்.
“நான் எவ்வளவு அழகா தங்கச்சினு கூப்பிடறேன். நீ ஏன்மா உன் தம்பி மாதிரி சார்னு கூப்பிடுற? அவனுக்கும் நான் சொல்லி சொல்லி போடான்னு விட்டுட்டேன். நீயுமாம்மா?” என்றான் சடைப்பாய்.
“உங்க பொசிஷன் அப்படி. அதான் உறவு சொல்ல சட்டுன்னு வாய் வரமாட்டேன்னுது.” என்றாள் தயக்கத்தோடு.
“அவன மாதிரியே பேசாத ரஞ்சிமா. அவனாவது ப்ரபெசனலா சந்திக்கிறதால சரின்னு ஒத்துக்கலாம். உனக்கு என்ன? நான் வீட்டுக்கு ஒரே பையன். உன்னை என் உடன்பிறவா தங்கச்சியா நினைச்சதால தான் இங்க வந்திருக்கேன். இல்ல அண்ணன் சொல்ல முடியாதுனா சொல்லிடுமா, நான் வெளில வீடு எடுத்து தங்கிப்பேன்” என்றான் அவன்.
“ஐயோ இல்ல அண்ணே. எங்க வீட்டுக்கு மூத்த பையனா நீங்க இருக்க எனக்கு முழு சம்மதம்” என்றாள் ரஞ்சிதா வேகமாக.
“தட்ஸ் குட் மை சிஸ்டர்” என்று புன்னகைத்தான்.
“இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க. இருங்க அண்ணே டீ எடுத்துட்டு வரேன். அதுக்கு முன்ன தண்ணி குடிங்க” என்று சமையலறை சென்று எடுத்து வந்து கொடுத்தவள், காப்பி போட போய்விட்டாள்.
இவனோ வீட்டை சுற்றி பார்த்தான். இரண்டு படுக்கை அறை, சமையல் அறை, வரவேற்பு அறையும் இருந்தது, நுழைவாயிலின் ஓரமாக குளியல் அறை, கழிவறை தனித்தனியே இருக்க, ஒரு நடுத்தர குடும்பம் இருக்க வசதியான இடம் என்றே தோன்றியது,
“அண்ணே வெளில போர்டிகோவுல பாத்ரூம் இருக்கு. கை கால் கழுவிட்டு வாங்க” என்றதும், தன் ட்ராலியில் இருந்து டவல் ஒன்றை எடுத்து சென்றவன், ரஞ்சிதா சொன்னதை செய்து முடித்து வந்து அமர்ந்திருந்தவன் முன் டீ நீட்டப்பட்டது.
டீ க்ளாஸை வாங்கியவன் யோசனையின் நடுவில், கொஞ்சம் கொஞ்சமாக டீயை பருகியபடி இருந்தான்.
வருவார்கள்...