New member
- Joined
- Dec 1, 2024
- Messages
- 9
- Thread Author
- #1
சுந்தரி - 4
“ஹரி எதாவது சொன்னானா ரஞ்சிமா?” எனக் கேட்டான்.
“உங்க முகம் பார்த்தாலே போதும் அண்ணே. ஹரி சொல்லனும்னு அவசியம் இல்ல. இருந்தாலும் அவன் உங்களை பற்றி மேலோட்டமா சொல்லி, இங்க தங்க வச்சிக்க சொன்னான். பெருசா எதுவும் சொல்லிக்கலை” என்றாள் ரஞ்சிதா.
“நான் வெளில தான் பார்க்க சொன்னேன்மா. அவன் தான் என் அக்கா வீடு இருக்கிறப்ப வெளிய தங்கினா எனக்கு அவமானம்னு டயலாக் அடிச்சான். அவன் மனசைக் கஷ்டப்படுத்த வேணாம்னு இங்க வந்தேன்.” என்றான் ஈஸ்வர்.
“சொன்னான் அண்ணே. ஹோட்டல் சாப்பாடு உங்களுக்கு ஒத்துக்காது. அங்கயே வெளி சாப்பாடு முடிந்த அளவு அவாய்ட் பண்ணிட்டு நேரத்துக்கு வீட்டுக்குப் போயிடுவீங்கன்னும் சொன்னான். அவன் சொன்ன மாதிரி நம்ம வீடு இங்க இருக்கிறப்ப, நீங்க ஏன் வெளில தங்கணும்? அதான், இங்க வரச்சொல்லி சொன்னேன்” என்றாள் அவள்.
“இல்லமா உங்களுக்கு தொந்தரவா இருக்குமேன்னு வேண்டாம் நினைச்சேன். மத்தபடி எதுவும் இல்லை” என்று தன்னால் அவளுக்கு தர்மசங்கடம் வேண்டாம் எனும் ரீதியில் சொன்னான்.
“அண்ணே இதுல தொந்தரவு எங்க வந்தது? என் தம்பியோ, அம்மாவோ வந்தா தொந்தரவா நினைச்சி வெளில போகச் சொல்லுவேனா? நீங்க எனக்கு அவங்களைப் போல தான். இனிமேல் இப்படி யோசிச்சி மனசைப் போட்டுக் குழப்பிக்காதீங்க.” என்றாள் ரஞ்சிதா.
“இல்லமா. நீ சொல்லுவது புரியுது. நீ என்றால் வீட்டில் நீ மட்டும் இல்லையே. மாப்பிள்ளையும் அவங்க வீட்டை சேர்ந்தவங்களும் இருப்பாங்களே. அவங்க என்னை எப்படி ஏத்துப்பாங்க?” என்றான் யோசனையாய்.
“அவர் வந்தா உங்களை விடவே மாட்டார் அண்ணே. வேணும்னா சாயங்காலம் அவர் வரும் போது பாருங்க. நம்ம வீட்டுல பெரியவங்க கிடையாது. அத்தை மாமா அவங்க பெரிய மகன் வீட்டுல இருக்காங்க. எப்பவாவது வந்து கொஞ்ச நாள் தங்கிட்டுப் போவாங்க. எதையும் யோசிக்காதீங்க அண்ணே. ரொம்ப நேரம் டிராவல் பண்ணி வந்திருப்பீங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறீங்களா?” என்றாள் அவள்.
“நான் தங்குவதால பக்கத்துல எதுவும்...” இன்னுமே தயங்கினான் ஈஸ்வர்.
“என் அண்ணன் என் வீட்டுக்கு வந்ததை எவ தப்பா பேசுவா. தொவச்சி தொங்க போட்டுடுவேன். அந்தளவு மோசமான ஊரு இல்லண்ணே. நம்புற வரைதான் எல்லாம். நம்பிட்டா உயிரையே குடுப்பாங்க. மீறி கேட்டா நான் பாத்துக்கறேன். நீங்க வந்து ரெஸ்ட் எடுங்க அண்ணே” என்று அவனுக்கான அறையைக் காட்டினாள்.
“நன்றி சொல்லி அந்நியப்படுத்த நினைக்கல. இருந்தாலும் நன்றிமா” என்றான் ஈஸ்வர்.
அவனை முறைத்து, “போய்ப் படுங்க. மதியம் சாப்பாட்டுக்கு எழுப்புறேன்” என்று தன் வேலையைப் பார்க்கச் சென்றாள்.
அந்த அறைக்குள் வந்தவன் போனை சில நிமிடங்கள் நோண்டி கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனான்.
“பரவாயில்லையே மாமா. என்னைத் தேடி வந்துட்ட போல” என்று புன்னகைத்தாள் அவள்.
“நான் யாருன்னு தெரியாம விளையாடுற. கையில் சிக்குற வரை தான் நீ தனி ஆள். சிக்கிட்ட அவ்வளவு தான்டி. வயசு போறதுக்குள்ள கல்யாணம் செய்து, உன் உயிரோடு மெய் கலக்கனுமா? கலந்துட்டா போச்சி” என்றான் அவன்.
“ப்ச்.. நீ டபுள் மீனிங்ல பேசுற. நான் சொன்னது என்னோட லவ். நீ சொல்லுறது...”
“நெஜமா லஸ்டுடி. சும்மா இருந்தவன் கனவுல வந்து தொல்லை செய்துட்டு இப்ப லவ்வுன்னு சொல்லுற? அந்த லவ்வும் எப்படி இருக்கு பார்கிறேன். நீ எனக்கு லவ் சப்ஜெக்ட் எடு. நான் உனக்கு லஸ்ட் சுப்ஜெக்ட் எடுக்குறேன்.” என்று போலீஸ் மீசையைத் திருக,
“ஐயோடா! நீ என்ன மாமா காமகோட்டி பிடிச்சவனாட்டம் பேசுற? இப்படிலாம் பேசினா எனக்குப் பிடிக்காது” என்று முகம் சுளித்தாள்.
“அப்புறம் எப்படி குடும்பம் நடத்துறது? குழந்தை வரது? சரி விடு. இரண்டையும் சேர்த்தே தரேன்.” என்க,
‘க்கும்...’ என சிலுப்பி, “என்னை எப்ப பாக்க வர? பக்கத்துல வந்துட்டு பார்க்க வரலன்னா எப்படி?” என்று கேட்டாள் கனவுப் பெண்.
“வரும்போது வருவேன் என் அக்கா மகளே” என்று அவளை அணைக்க எப்பொழுதும் போல் ஆள் மாயமாகிவிட்டாள்.
“நீ இப்படி தான் செய்வன்னு தெரியுமே” என்று அவனும் தூங்கிவிட்டான்.
மதியம் ஈஸ்வரை எழுப்பி சோறு வைத்து மீன் குழம்பும், மீன் பொரியலும் வைக்க இரண்டு வாய் வைத்து பொறித்த மீனை பிட்டு வாயில் வைத்து சுவைத்ததும், “ம்ம் மீன் டேஸ்டியா இருக்கு. எங்க வீட்டுல மேக்சிமம் சிக்கன், மட்டன் தான். மீன் எடுக்குறது இல்லை. கேட்டா எல்லாம் ஐஸ்ல வச்சி வருது. அது உடம்புக்கு நல்லது இல்லை சொல்லுவாங்க. நான் வெளிலையும் மீன் சேர்க்கிறது கிடையாது. ரொம்ப வருஷம் கழிச்சி சாப்பிடுறது சந்தோசமா இருக்கு தங்கச்சிமா.” என்றான் உணவின் சுவையை ருசித்து.
“அங்க இன்னும் சூப்பரா சமையல் இருக்கும் அண்ணே” என்றாள் கிண்டலாக.
“அதையும் சீக்கிரமே ருசிச்சிடலாம்” என்றான்.
“சரி தான்” என்று சிரித்தவள், அவன் உண்டு முடித்ததும் தானும் உண்டு பாத்திரத்தை ஒதுக்கி வைத்து அவனுக்கு டிவி போட்டு விட்டாள்.
கொஞ்ச நேரம் டிவி பார்த்தவன், பின் எழுந்து போர்டிகோ வாசலில் நின்று வேடிக்கை பார்க்க, அவனைக் கடந்து சென்ற யாரோ, சாதாரணமாக பார்த்தவர் என்ன தோன்றியதோ அப்படியே நின்று அவனைப் பார்க்க, ‘இதேதடா வம்பா போச்சி’ என்று வேகமாக வீட்டினுள் வந்து விட்டான். அந்த நபரும் குழம்பிய முகத்துடன் சென்று விட்டார்.
மாலை ஆறு முப்பதுக்கு வீட்டினுள் நுழைந்த ரஞ்சிதாவின் கணவன் சுகுமார், ஈஸ்வரை பார்த்து சில நிமிடங்கள் அப்படியே நின்று விட்டான்.
“உன் வீட்டுக்காரரிடம் சொல்லலையா?” என்று தன் அருகில் நின்றிருந்த ரஞ்சிதாவிடம் சத்தம் இல்லாது மென்குரலில் கேட்டான் ஈஸ்வர்.
“ஆமாண்ணே. சஸ்பென்ஸா இருக்கட்டும்னு சொல்லலை. இப்ப எதுக்கும் ஸ்டெடியா நில்லுங்க, மனுஷன் பாய்வா...” பாய்வார் என்று சொல்லி முடிக்கவில்லை. “டேய் மாப்ள” என்று ஈஸ்வரை பாய்ந்து அணைத்துக் கொண்டான். “ஏன்டா எங்களை விட்டுட்டு போன? எங்கடா போயிருந்த இத்தனை வருசமா? நீ இல்லாம ரொம்ப தவிச்சிட்டோம்டா. எங்களை விட்டுட்டுப் போக எப்படிடா மனசு வந்தது” என்று கதற ஆரம்பித்தான் சுகுமார்.
“என்னங்க போதும் அண்ணன விடுங்க. நீங்க நினைக்கிறது போல இல்ல” என்று அவனை ஈஸ்வரிடம் இருந்து பிரிக்க பார்த்தாள்.
“யேய் தள்ளிப் போடி. எத்தனை வருசமாகிடுச்சி என் மாப்ளைய பாத்து” என்று ஆசை தீர அவன் முகம் பார்த்தவனுக்கு அப்பொழுது தான், ‘எப்படி சாத்தியம்?’ என்ற நிஜம் புரிய, ஈஸ்வரை வேகமாக தன்னிடம் இருந்து விலக்கியவன், “இது எப்படி? நீ.. நீ எப்படி உயிரோட. சொல்லுடா? அப்ப அது யாரு? இல்ல நீ தான் யாரு?” என்றான் குழப்பத்துடன்.
“நான் அவன் இல்லை” என்றான் ஈஸ்வர் சின்ன சிரிப்புடன்.
“இல்ல. டேய் பொய் சொல்லாதடா. எனக்கு குழப்பமா இருக்கு” என்று குழப்பமாகக் கேட்டான் சுகுமார்.
“இவர் என்னோட அண்ணன் ஈஸ்வர். போலீஸ் ஆபீசரா இருக்கார். இங்க நம்ம வீட்டுல தான் இருக்கப் போறார்” என்றாள் ரஞ்சிதா.
“என்ன உளறுற? உனக்கு ஒரு தம்பி மட்டும்னு எனக்கு தெரியும். இது... இந்த முகம்... இது என் நண்பன்” என்றான்.
“உங்க நண்பன் இல்ல மிஸ்டர் சுகுமார். நான் ஈஸ்வர். இந்த ஊருக்கு என்ன... இந்த மாவட்டத்துக்கே நான் இன்னைக்கு தான் முதல்முறையா வந்திருக்கேன். அதுவும் உங்க நண்பர் பற்றி கேள்விப்பட்டதால் வந்திருக்கேன்” என்றவனுக்கு நினைவுகள் அனைத்தும் அன்று ஹரி காண்பித்தவற்றில் இருந்தது.
“சார் இவரை பாருங்க உங்கள போலவே இருக்கார்” என்று ஒரு போட்டோ காண்பிக்க, அதை பார்த்தவன் அதிர்ந்து வியந்து பார்த்தான்.
ஆம். ஈஸ்வருக்கும் அவனுக்கும் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் உருவ ஒற்றுமை இருந்தது. அத்துடன் அவனின் காதல் கதையையும் சொல்லி இருந்தான். அந்தக் காதல் கதையில் ஈர்க்கப்பட்டு, இன்னொரு காரணமும் அவனை ஆச்சர்யப்படுத்த, அந்த ஆச்சர்யத்திலும், ஆர்வத்திலும் தான் இங்கு வந்திருந்தான்.
அதிலும் கனவில் வரும் பெண்ணவள், அவளைத் தேடி வரச் சொல்லி இருக்க, அதற்காகவும் இந்த மாவட்டத்திற்கு வர விருப்பம் தெரிவித்து எழுதிக் கொடுத்து, தற்பொழுது ஆப் டியுட்டியில் இங்கு வந்திருக்கிறான்.
“அப்ப நிஜமா நீ... நீங்க என் நண்பன் இல்லையா? பார்க்க அவன் மாதிரி இருக்கீங்க. அவன் போகும்போது சின்ன வயசு என்பதால முகத்தில் முதிர்ச்சி இருக்காது, இப்ப இருந்திருந்தா கண்டிப்பா உங்களை அப்படியே காப்பி பண்ணின மாதிரி தான் இருந்திருப்பான். அதனால தான் நானும் குழம்பிட்டேன். ஆனா, நீங்க எப்படி ரஞ்சியோட?” என்று குழப்பம் தீராது கேட்டான்.
குழம்பிய கணவனின் அருகில் வந்த ரஞ்சிதா, “கூடப் பிறந்தால் தான் அண்ணன்னு இல்லையேங்க. இவர் நம்ம ஹரியோட பிரண்ட். அவன் மூலமா இங்க வந்திருக்கார்” என்று ஈஸ்வர் வந்த விவரத்தை சொன்னாள்.
“ஓ... என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?”
“சும்மா ஒரு ஆர்வம் தான் சுகுமார். அதுக்கு எனக்கு அவங்களை பத்திய மொத்த தகவலும் வேண்டும்” என்றான் ஈஸ்வர்.
“அதைத் தெரிஞ்சி நீங்க என்ன செய்யப் போறீங்க?”
“தெரியல. ஆனா தெரிஞ்சிக்கனும் தோணுது. மனசுக்குள்ள உங்க நண்பரை பத்தி தெரிஞ்சிக்க சொல்லி எதோ அழுத்துது. விஷயம் தெரிஞ்சதில் இருந்து மைன்ட் புல்லா பிளாங்கா இருக்கு. வேலையில் கவனம் செலுத்த முடியல. சொல்லத் தெரியாத ஒரு உணர்வு என்னை ஆட்டிப் படைக்குது. இதை முடிச்சிட்டு மத்த வேலைய பாருன்னு மனம் கொடுக்கும் தொந்தரவும் அதிகரிக்குது” என்றான் ஈஸ்வர்.
நிஜமாகவே தன்னைப் போன்ற உருவத்தில் ஒருத்தனை பார்த்ததில் இருந்து மனதுக்குள் ஒரு அசரீரி, அவன் இருந்த இடம் செல் என்று விரட்டுகிறது. இந்த சில நாட்களாக கனவுப் பெண் தூரம் போய், அவ்விடத்தை தன்னைப்போல் இருப்பவன் பிடித்துக் கொண்டான். ‘என்னை காண வா. வந்தால் நிறைய உண்மைகள் அவிழ்க்கப்படும்.’ என்று ஒரே தொல்லை. அதனாலேயே டிரான்ஸ்பர் போட்டு, அது கிடைக்கும் வரை சென்னையில் இருக்க முடியாது, லீவ் போட்டு வந்து விட்டான்.
எப்படியும் இன்னும் ஒன்று இரண்டு வாரத்தில் போஸ்டிங் வந்து விடும் என்பது கமிஷனர் மேல் உள்ள நம்பிக்கை. ஏற்கனவே இருப்பவரை இடம் மாற்றி, அவ்விடத்தில் ஈஸ்வரை போட வேண்டும் அல்லவா? அதனால் கொஞ்சம் தாமதம் ஆகும் என்பது அவனுக்கும் தெரியும். அதுவரை இங்கு தான் அவன் ஜாகை.
அவனுக்குத் தேவை அவனும், அவளும். அத்துடன் இருவரின் கனவின் வரவும் எதோ இரகசியம் சொல்ல, அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள மற்றதை மறந்து வந்துவிட்டான்.
வருவார்கள்...