Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 46
- Thread Author
- #1
கானல் - 25
கார்த்திக் வந்து பிள்ளையை அழைக்கும் முன் தானே அழைத்துச் செல்ல வேண்டுமென்று, ஈஸ்வரியிடம் விரைவாக விடைபெற்றுக் கொண்டு, பள்ளி முடிந்ததும் கிளம்பி இருந்தாள் வித்யா.
அவள் சென்றதும், ஈஸ்வரியை சந்தித்த அந்த வகுப்பாசிரியை பிரேமலதா, "அமுதா உன்னோட ப்ரெண்டு கிளம்பி போய்ட்டாளா?" என்று வேகமாக வினவினார்.
"ஆமா டீச்சர். இப்ப தான் கிளம்பினாள். ஏன் என்னாச்சு?" என்று அவரது பதட்டம் கண்டு குழப்பமாக கேட்டாள் ஈஸ்வரி.
"அது, ஒன்னுமில்ல அமுதா. தேர்ட் ஸ்டாண்டர்ட் மணிகண்டன் இருக்கான்ல," என்று அவர் தொடங்கவும்.
"ஆமா ஆமா, அவனெல்லாம் எதுக்கு ஸ்கூலுக்கு வர்றான்னே தெரியல. பண்றது பூரா வேண்டாத வேலை தான்." என்று அலுப்புடன் ஈஸ்வரி கூறிக் கொண்டிருக்க.
"அந்த மாதிரி ஒரு வேலையை இப்பவும் செய்துட்டான். அதுக்கு உன்னோட ப்ரெண்டு ரூபிணி, இருக்கா ல அவனை அடிச்சுட்டா." என்று இடைமறித்து கூறினார்.
"என்ன சொல்றீங்க டீச்சர்? இவளுக்கு அந்த க்ளாஸ் போக வேண்டிய அவசியமே இல்லயே!" என்று குழப்பமாக சற்று பதட்டத்துடன் கேட்டாள் ஈஸ்வரி.
"அட, இன்னிக்கு நான் பர்மிஷன்ல போனதால அவளுக்கு சப்ஸ்டிடியூட் போட்டு இருப்பாங்க போல, அங்க தான் இந்த கூத்து." என்று விளக்கிட.
"அவ அவ்ளோ சீக்கிரம் பசங்கள அடிக்க மாட்டாளே டீச்சர். அப்றம் எப்படி?" தோழியை பற்றி அறிந்த ஈஸ்வரி குழப்பத்துடன் வினவினாள்.
"அவனை பற்றி உனக்கு தெரியாதா!? அவன் எப்பேர்பட்ட ஆளையும் கோபமாக்குவான். அதுவுமில்லாம அவன் இன்னைக்கு பண்ணின காரியம் வயசுக்கு மீறிய செயல் தான்." என்று நடந்த நிகழ்வை அவர் விளக்க.
வித்யா அவனை அடித்தது தவறே இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் அவனது பெற்றோரை எண்ணியும் கொஞ்சம் கலக்கம் அடைந்தாள்.
"அவளுக்கு கால் பண்ணி கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க சொல்லு. அவனோட அப்பாவை பற்றி தெரியாம பண்ணிட்டா.பாவம்!" என்று வித்யாவிற்காக பரிதாபப்பட்டார்.
"நானே என்ன சொன்னாலும் அவன் கேட்க மாட்டான்!. அதான் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன். ஆனா அந்த பையன் பண்ணுனதும் தப்பு தான்.
அந்த ஆசிரியைக்கும் அவனது செயல் தப்பாகப்பட்டது தான் இருப்பினும் அவனை திருத்த இயலாதே என்றெண்ணி விட்டு விட்டார்.
"நீ உடனே அவளுக்கு கால் பண்ணி சொல்லி வை. எதாவது ஏடாகூடமா நடக்க போகுது?" என்று வித்யாவை எச்சரிக்கச் சொன்னார்.
ஈஸ்வரியும் வித்யாவின் எண்ணிற்கு அழைக்க, அவள் வண்டி ஓட்டிக் கொண்டு இருந்ததால் அழைப்பு வந்தது தெரியாமல் போனது.
அவள் எடுக்கவில்லை என்று கூறிவிட்டு, உடனே கார்த்திக்கிற்கு ஈஸ்வரி அழைக்கப் போகும் போது,"இப்ப யாருக்கு பண்ற?" என்று வினவினார் பிரேமலதா
"கார்த்திக் சார்க்கு, ஓஓ.. உங்களுக்கு தெரியாதா? ரூபிணிக்கும், கார்த்திக்கிற்கும் இந்த லீவுல தான் மேரேஜ் நடந்தது டீச்சர்." என்று விளக்கம் கூறினாள்.
"அப்படியா? எனக்கு தெரியாதே! என்கூட தான் யாரும் எதுவும் பெருசா பேசிக்க மாட்டாங்களே. அட, தெரிஞ்சு இருந்தா காலையிலேயே அவளுக்கு விஷ் பண்ணி இருப்பேனே!" என்று வருத்தப்பட்டார்.
"இப்போ அதனால என்ன டீச்சர், நாளைக்கு வந்த அப்றம் விஷ் பண்ணிக்கோங்க. இப்ப அது இல்ல பிரச்சனை, அநேகமா அவ வண்டி ஓட்டிட்டு இருப்பானு நினைக்கிறேன்." என்று விட்டு கார்த்திக்கிற்கு அழைத்தாள்.
"ஆனா கார்த்திக் மதியமே பர்மிஷன் வாங்கிட்டு வெளியே போயிட்டாரே அமுதா. " என்று அவர் கூறிய செய்தி ஈஸ்வரிக்கு புதிது.
இருப்பினும் ஈஸ்வரி அவனது எண்ணிற்கும் முயற்சித்து பார்க்கயெண்ணி அழைக்க, அவன் அழைப்பை ஏற்றான்.
"சொல்லு அமுதா. நான் ஒரு வேலையா வெளியே வந்து இருக்கேன்." என்றான் கார்த்திக்.
"கார்த்திக் நீங்க எப்ப வீட்டுக்கு போவீங்க?" பதட்டமாக ஈஸ்வரி கேட்க, "ஏன்?என்ன ஆச்சு அமுதா?" என்று குழப்பமாக கார்த்திக் கேட்டான்.
ஈஸ்வரி நடந்த விசயங்களை சொல்லியதும், "அவ செய்ததும் தப்பில்லையே. சரி நான் பார்த்துக்கிறேன்." என்று விட்டு வைத்தான் அவன்.
பள்ளி விட்டு கிளம்பிய வித்யா, நேராக பவிஷ்யாவின் பள்ளிக்கு செல்ல, கார்த்திக் வராதது கண்டு, சற்று அமைதியானான். சரியாக அந்த ஆயாம்மாவும் குழந்தையை அவளிடம் விட்டு சென்றார்.
"அம்மா!" என்று தாவிய பிள்ளை, அவளை அணைத்து முத்தமிட்டதும் காலையில் அவள் கொண்ட மன வருத்தம் சற்று சமனப்பட்டது.
"செல்லக்குட்டி! என்ன பண்ணுனீங்க இன்னிக்கு? ஒழுங்கா சாப்பிட்டீங்களா?" என்று அன்றாட விசாரணை செய்ய.
"ஓஓ.. சாப்தேனே. காத்திப்பா வந்து ஊத்தி வித்தாங்கே." என்று உற்சாகமாக மகள் கூறிய பதிலில் வித்யா யோசனையானாள்.
அவன் மீதான கோபம் ஓய்வெடுத்து கொள்ள கேள்விகளின் படையெடுப்பு தொடங்கியது.
'அவனுக்கு தான் காலையிலேயே மதிய சாப்பாட்டையும் கொடுத்து விட்டேனே! பின் எதற்காக மதிய உணவிற்காக வெளியே வந்தான்?
'அப்படி என்றால் நான் கொடுத்த உணவை என்ன செய்தான்?! இவனுக்கு போய் சமைச்சு கொடுத்தேன் பாரு என்னை சொல்லனும்!' தன்னை தானே திட்டிக் கொண்டு
'வரட்டும் இன்னிக்கு அவனை என்ன பண்றேன் னு பாரு.' என்று அவனை கருவிக் கொண்டிருக்க."அம்மா!! போவம்." மகளின் அழைப்பு கலைத்தது
"போலாம்டா செல்லம். " என்று விட்டு வண்டியை உசுப்பி கிளம்பிய அவள் மனதில் அவனைப் பற்றிய கேள்விகளின் வரிசை மட்டும் முடியவில்லை.
அவனது கலகலப்பான பேச்சிலும், கண்ணியமான நடத்தையிலும் அவளது ஆழ்மனது ஈர்க்கப்பட்டு, அவனை ஏற்றுக் கொண்டதை அவளே இன்னும் உணரவில்லை.
இல்லையேல் அன்று அவன் தாலி கட்டியதுமே தன் எதிர்ப்பை காட்டி இருப்பாள், அவளது ஆழ்மனம் அவனை ஏற்கவே, அமைதியாக அனைத்தையும் ஏற்றாள்
இருவரும் வீட்டிற்கு வந்து வழக்கம் போல அனைத்தையும் செய்து முடிக்க, வித்யா பிள்ளைக்கு பாலை கலந்து கொண்டு இருந்த போது அழைப்பு மணி அடித்தது.
அவள் கதவை நெருங்குவதற்குள், கதவை தட்டவும், "அதான் வருவேன்ல, அதுக்குள்ள என்ன அவசரம் இவனுக்கு?" என்று அதற்கும் கார்த்திக்கை திட்டிக் கொண்டே கதவை திறந்தாள் வித்யா.
"நீ தான் அந்த டீச்சரா?" என்று அதிகாரமாக கேட்டுக் கொண்டு முரட்டுத்தனமாக நின்ற அவர்களை பார்த்து பயந்த வித்யா, சிறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு
"யார் நீங்க?என்ன வேணும் உங்களுக்கு?" என்று வினவினாள்.
"என்ன தைரியம் இருந்தா எங்க வீட்டு பையன் மேல கைய வைச்சு இருப்ப?" என்று கேட்டுக் கொண்டே அவளை நெருங்கிட, அவள் பயந்து பின்னால் நகர்ந்தாள்.
"எந்த பையன்? யாருங்க நீங்க? எதுக்கு இங்க வந்து கத்திட்டு இருக்கீங்க? வெளியே போங்க." என்று ஒருவாறு தைரியத்துடன் அவர்களை அப்புறப்படுத்த முயன்றாள்.
"எந்த பையனா? எங்க மணி தம்பி ஏதோ சொன்னதுக்கு அடிச்சியாமே நீ?" ரௌடி போல் தோற்றமளித்த ஒருவன் அவளை நெருங்கினான்.
அவளுக்கு முதலில் எதுவும் விளங்கவில்லை. பின் மணி என்ற பெயரை கேட்டததும் நினைவிற்கு வந்தது ஆனால் 'அவன் பேசியதற்காக தான் அடிக்கவில்லையே!' என்று தோன்ற.
"அவன் என்ன பண்ணுனான் னு தெரியாம பேசாதீங்க சார். அதுவுமில்லாம ஸ்டூடண்ட் தப்பு பண்ணினா கண்டிக்கிறது டீச்சரோட கடமை.
அது தனது பணி என்று அவள் விளக்கிக் கொண்டிருக்கும் போதே, குழந்தை வெளியே நிற்கும் ஆட்களை கண்டு அச்சமுற்று "அம்மா!!" என்று அழைத்து அவளை தூக்குமாறு செய்கை செய்தாள்.
"இதோ பார். கண்டிக்க தானே செய்யனும். உன்னை யாரு மேல கையை வைக்க சொன்னா?பிள்ளையை கொடுமைப்படுத்தின னுட்டு போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுனா அவங்க வந்து உன்னை நல்லா கவனிப்பாங்க." என்று மிரட்டும் தொனியில் கூறிவிட்டு.
"வா, இப்பவே போலீஸ் ஸ்டேஷன் போய் மீதியை அங்க பேசிக்கலாம்." என்று கூறிக் கொண்டே ஒருவன் அவளது கையை பற்ற வந்தான்.
ஆடவன் ஒருவன் தன்னை தொட முனையவும், அனிச்சையாய் பின்னோக்கி அவள் நகர
"பொளேர்!!" என்று அவன் கன்னத்தில் விழுந்த அடியில், வித்யாவின் கையில் இருந்த குழந்தை சத்தமாக அழத் தொடங்கினாள்.
பிள்ளையின் அழுகையில் தன் அதிர்ச்சியில் இருந்து கவனம் திரும்பிய வித்யா, அவளை சமாதானம் செய்வதற்கு முன், வேகமாக முன்னே வந்த கார்த்திக், "குட்டிமா!!"என்றழைக்க
அழுதுக் கொண்டிருந்த பவிஷ்யா, "காத்திப்பா!!" என தேம்பலோடு அழைத்துக் கொண்டு அவனிடம் தாவினாள்.
அவனிடம் கிடைத்த அரவணைப்பில் குழந்தையின் அழுகை குறைய, பெரிய குழந்தை அதை ஏக்கமாக பார்த்து இருந்தது.
குழந்தை சமனப்பட்டதும் திரும்பி வித்யாவை பார்த்தப் போது, அவளது கண்களில் அந்த ஏக்கத்தை உணர்ந்த கார்த்திக்,
அவளருகே நெருங்கி வந்து அவளது கையை அழுத்திப் பிடித்து தைரியம் கொடுக்க, அவனது கையை இறுகப் பற்றி அவனருகில் ஒட்டி நின்று கொண்டு அவர்களை மிரண்டு போய்ப் பார்த்தாள் வித்யா.
அறை வாங்கிய அந்த ஆள் தன்னை அடித்தது யாரென கோபமுடன் திரும்பிப் பார்க்க, அங்கே கண்களில் தெறிக்கும் கோபக்கனலுடன் நின்று இருந்தார் மணிகண்டனின் தந்தை, பரசுராமன்.
"பொம்பள புள்ள மேல கை வைக்க போறியாடா நீ? என்ன தைரியம் இருந்தா இந்த மாதிரி காரியம் செய்ய துணிவாய்."என்று கோபமாக கூறிய அவர்
"உங்கிட்ட இருந்து இப்படி செயலை எதிர்பார்க்கல குமாரு. உண்மை என்னனு ஒழுங்கா விசாரிக்காம எதுவும் தெரியாம இங்க சண்டித்தனம் பண்ண வந்துட்டியே?" என்று சிறு வருத்தத்துடன் கேட்டார் பரசுராமன்.
"அண்ணே! இந்த டீச்சரு நம்ம மணி தம்பியை கை நீட்டி அடிச்சு இருக்குண்ணே. தப்பே பண்ணி இருந்தாலும் சொல்லி திருந்தறது தானே இவங்க வேலை.
"அதை விட்டுட்டு புள்ள மேல கையை வைக்கலாமா?." என்று கேள்வி எழுப்பினான் அந்த குமார் என்று அழைக்கப்பட்டவன்.
"முதல்ல என்ன நடந்தது முழுசா தெரியுமாடா உனக்கு? அவன் சொன்னான் னு இவனும் கிளம்பி வந்துட்டான் பஞ்சாயத்து பண்ண." என்று விட்டு,
"ஊருக்கே பஞ்சாயத்து பண்றவன் நான். நடந்ததை ஒழுங்கா விசாரிக்காம இவரு பெரிய சொவரு பஞ்சாயத்து பண்ண கிளம்பிட்டாரு.
"அப்படியே விட்டேன்னா பாரு. பொண்ணு மேல கைய வைக்கிற உரிமையை யாருடா கொடுத்தா உனக்கு?." பரசுராமனின் பேச்சில் விழி விரித்து அவரை பார்த்து இருந்தாள் வித்யா.
இப்படிப்பட்ட தந்தையின் மகன் எப்படி அந்த மாதிரி ஒரு காரியத்தை செய்தான் என்று ஆச்சர்யமுற்றாள்.
குமாரை மிரட்டி விட்டு, "மன்னிச்சிருங்கமா! அந்த பைய அரைகுறையா சொன்ன விசயத்தை வைச்சு இவனுக இங்க வந்து சலம்பல் பண்ணிட்டானுக." என்று வித்யாவிடம் மன்னிப்பை வேண்டிய அவர்
"தம்பி வந்து நடந்ததை சொல்லுச்சு. நானும் அவனை இழுத்து வைச்சு மிரட்டி கேட்கவும் நடந்ததை எல்லாம் ஒன்னு விடாம சொல்லிட்டான்.
"அதுக்குள்ள இந்த பயலுக கிட்ட அவன் மாத்தி சொன்னதை வைச்சு இங்க வந்துட்டானுங்க." என்று கார்த்திக் வந்து அவரிடம் உரைத்ததையும், இவர் வருவதற்குள் நடந்ததையும் விளக்கினார்.
"பையன் படிக்கலனு போன தடவை ஒரு டீச்சர் ரொம்ப அடிச்சுட்டாங்க. அதனால அவங்க கிட்ட இவனுக போய் கேட்டும் ரொம்ப தெனாவெட்டா பேசுனாங்க.
"அப்றம் அவங்க மேல கம்ப்ளைன்ட் பண்ணி அவங்கள வேலையை விட்டே தூக்கியாச்சு.அதே மாதிரி நினைச்சு இப்பவும் வந்துட்டானுங்க.
"ஆனா இப்ப என் மகனோட செயலுக்கு நான் ரொம்ப வருத்தப்படுறேன்மா. நீ செய்தது ரொம்ப சரி.இனிமே அவன் அப்படி நடக்க மாட்டான்.
"இது நான் உங்களுக்கு கொடுக்கற உறுதி!.." என்று, முதல் நடந்த நிகழ்வையும், மகனது செயலுக்கான வருத்தத்தையும் கூறி இனிமேல் இதுபோல நடக்காது என்ற உறுதியும் அளித்தார்.
Last edited by a moderator: