• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
ஓம் சரவண பவ

சொர்ணா சந்தனகுமார்

ஜில்லென ஒரு மழைத்துளி

1



பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த


நன்மை பயக்கு மெனின்.


“கறை படுறதால நல்லது நடந்தா கறை நல்லதுதான! இந்த விளம்பரம் போல் ஒரு நல்லது நடக்க நாம பொய் சொல்றதுல தப்பே இல்லன்னுதான் சொல்வேன். என்னடா பொய்யில ஆரம்பிக்கிற எதுவும் நிலைக்காதுன்னு பார்க்கறீங்களா? நடக்கும்ங்க. நான் நடத்திக் காண்பிக்கிறேன்.”

“நான் அரிச்சந்திரன். நிக் நேம் அர்ஸ்! பேரைக் கேட்டதும் நான் உண்மை மட்டுமே பேசுவேன்னு தப்பர்த்தம் பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை. விவரம் தெரிய ஆரம்பிச்ச வயசுல நண்பனுக்காக சொன்ன பொய் நன்மையில் முடிஞ்சது. அப்படி ஆரம்பிச்சதுதான் என் வள்ளுவர் பயணம். அதான்ங்க மேல இருக்கிற குறள். என்னுடைய பொய்யினால் இதுவரை யாருக்கும் எந்தக் கெடுதலும் நடந்ததில்லை. இனிமேலும் நடக்காது. என்னைப் பொருத்தவரை நான் அரிச்சந்திரன்தான். அதற்காக நான் தேர்ந்தெடுத்த தொழில், வார்த்தைகளில் விளையாடும், சாரி வழக்காடும் வக்கீல்.”

திருக்குறள் அரிச்சந்திரனைக் காக்குமா! அழிக்குமா!

மார்கழி மாதத்துக் குளிர் போர்வையைத் தாண்டி உடலில் ஊடுருவ, அதை இன்னும் அதிகமாக்கியது ஏசி. ஏசியை ஆஃப் செய்து படுக்கச் சொல்லி மனம் முடுக்க, உடலின் சோம்பேறித்தனம் அதைத்தடுத்து இன்னும் இறுக மூடவைத்தது.

அதே நேரம் கைபேசி அழைக்க அதை ஏற்று காதில் வைத்து “குட் மார்னிங் மேம். என்ன விஷயம்னு சொல்லுங்க மேம்?” என்றான் பவ்யமாய்.

“குட் மார்னிங் சந்துரு. மிஸ்டர்.பெருமாள் கேஸ் நீதான பார்க்கிற? அந்த பேப்பர்ஸ் கொண்டு வந்திரு. ஆப்போசிட் பார்ட்டியை வரச்சொல்லியாச்சி. முடிஞ்சா பேசி சால்வ் பண்ணலாம். இல்ல கேஸ் பைல் பண்ணிரலாம்.”

“மேம்! பெருமாள் சார் கேஸ் போட்டே ஆகணும்னு நிற்கிறார். சமாதானத்துக்கு வருவாரா தெரியல.”

“அதெல்லாம் நீ வரவச்சிருவ. டான்னு ஒன்பது மணிக்கெல்லாம் வந்திரு. நான் வெய்ட் பண்றேன்.”

“எஸ் மேம்!” என்று போனை வைத்ததும் “ஷப்பா இவங்க தூங்குவாங்களா மாட்டாங்களா? இவ்வளவு காலையில் எழுந்து கடமையை நியாபகப்படுத்தி... அர்ஸ் கஷ்டம்டா. ஒன்பது மணிக்கு இன்னும் நாலு மணிநேரம் இருக்கு. குளிக்க கிளம்ப ஒரு மணி நேரம்னா, மீதி மூணு மணிநேரம் இருக்கு. சோ என்ஜாய்” என்று இழுத்துப் போர்த்திப்படுத்தான்.

“ஆஹா! இப்பவும் ஏசி அஃப் பண்ண மறந்துட்டேனே! ஹ்ம்... படுத்த பிறகு எங்க எழுந்திருக்க. உன்னை நீயே இறுக்கியணைச்சி தூங்கிக்கடா அர்ஸ் பையா” என்று நிமிடத்தில் தூங்கினான்.

“அரி கொஞ்சம் எழுந்திருச்சி வா!” தாயின் குரல் கனவில் கேட்பதுபோல் தோன்ற, அவனோ சின்ன முனகலுடன் தன் தூக்கத்தைத் தொடர, “அரி எழுந்திரு!” என்று மீண்டும் கேட்ட அழைப்பில் தூக்கம் கலைந்தான்.

“ம்மா... தூங்குற பிள்ளைய எழுப்பக்கூடாதுன்னு உங்கம்மா உங்களுக்குச் சொல்லித் தரலையா? நான் கிளம்ப டைம் இருக்கும்மா” என்றான் சிணுங்கலாய்.

“டேய் கோவிலுக்குப் போகணும். என்னைக் கொஞ்சம் அங்க கூட்டிட்டுப் போ. தூங்கினா ஆளே மாறிடுற நீ.”

‘ஹ்ம்’ என சிணுங்கினாலும், “இதோ வர்றேன்மா” என தன் தூக்கம் முழுமையும் கலைந்து வேகமாக எழுந்தவன், முகம் கழுவத் தண்ணீரில் கைவைக்க வைத்த நிமிடம், “அம்மா” என்ற அலறல் கேட்டு பதற்றத்தில் வந்தவர் “என்னாச்சி?” என்றார் பதற்றம் குறையாது.

“தண்ணி குளிருதும்மா. இதுல முகம் கழுவவே முடியாது. எப்படி குளிக்கிறது?”

“உன்னை... பிச்சிருவேன் எரும. அங்கயிங்க போய்ப்பாருடா காலையில நாலு மணிக்கே பச்சைத் தண்ணீரில் குளிச்சிட்டு கோவில் சுத்திட்டிருக்காங்க. நீ என்னடான்னா...”

“ம்மா... யாரோடவும் என்னை கம்பேர் பண்ணக்கூடாது சொல்லியிருக்கேன்ல?” என்று முகம் சுருக்க,

“சரி ஹீட்டர் போட்டாச்சி. சீக்கிரம் குளிச்சிட்டு வா டைமாகுது.”

தாயின் அவசரம் உணர்ந்து “இதோம்மா பத்து நிமிஷத்துல வர்றேன். சரி எதாவது விசேஷமா?” என கேட்டான்.

“என்னடா உனக்கே தெரியாம உனக்கு பொண்ணு பார்க்கப் போறதா நினைச்சிட்டியா?”

‘அப்படித்தான் நினைத்தேன்’ என்பதான மகனின் அசட்டுச் சிரிப்பில் “அப்படிலாம் நினைச்சிருந்தா, அது என் தப்பு கிடையாது. இன்னைக்கு மார்கழி ஒண்ணு. எல்லா கோவில்லயும் விசேஷமா இருக்கும். பனி அதிகமாயிருக்கு. அதோட லைட்டா சாரலடிக்குது. இல்லன்னா நடந்தே போயிருவேன். நீயா இருந்தா கார்ல விட்டுருவ.”

“சரிம்மா. எதுக்கு இத்தனை விளக்கம்? இதோ வர்றேன்” என்று பத்து நிமிடத்திற்கெல்லாம் தயாராகி வந்து “கிளம்பலாம்மா” என நிற்க,

“இப்படித்தான் அரைகுறையா வருவன்னு தெரியும்” என்று அங்கிருந்த துண்டை எடுத்து வந்து துவட்டினார்.

“எல்லாம் நீங்க இருக்கும் தைரியம்தான்மா.”

மகனுக்கு இரண்டு அடிகளிட்டு “உன் வக்கீல் புத்தியை என்கிட்ட காட்டுறியா? நான் உன் அம்மாடா.”

“ஓகே ஓகே அப்பா எப்ப வர்றாங்க?”

“இன்னும் இரண்டு நாளாகும்.”

ஜில்லென சிறு சிறு மழைத்துளியுடன், மார்கழி மாதத்துக் குளிரும் சேர, ஐந்து முப்பதுக்கெல்லாம் கோவில் வர, மார்கழி மாத பஜனை நடந்து கொண்டிருந்தது. தாயை இறக்கிவிட்டு, காரை ஓரம் விட்டு வந்தவனை மெல்லிய மழைச்சாரல் வருடிச்செல்ல, தலையில் பட்ட சிறு துளி நீரை விரல்களால் தட்டிவிட்டு கோவில் கோபுரத்தைப் பார்த்தான்.

“நீ கிளம்புடா அரி. நான் வர்றப்ப நல்லா விடிஞ்சிரும். நடந்தே வந்திடுறேன்.”

“நடந்து வர்றீங்களா? மழை பெய்யுதும்மா. நான் வெய்ட் பண்றேன். நீங்க முடிச்சிட்டு வாங்க” என்றவன் என்ன நினைத்தானோ, “ம்மா.. நான் காத்திருக்கேன்னு அரை குறையா சாமி கும்பிட்டு வந்திராதீங்க. உங்க மனசு சாந்தமாகுற வரை முடிச்சிட்டு வாங்க.”

“ஏய்! உண்மையைச் சொல்லுடா? பொங்கலுக்கும் புளியோதரைக்கும்தான வெய்ட் பண்ற?” ஆணின் தாய் விரல் நீட்டி மிரட்டிட,

“ஹையோ! மை ஸ்வீட் மாம்! சூப்பரா கண்டுபிடிச்சிட்டீங்களே” என்று சிரித்தான்.

“ஏன்டா கோவிலுக்குக் கூப்பிட்டா, அதெல்லாம் முடியாது. நீங்க போயிட்டு வாங்கன்னு சொல்லாம, கூப்பிட்டதும் உடனே வந்திருவியா? மத்த பசங்களைப் பாரு யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை தன்னோட தூக்கம்தான் முக்கியம்னு இருப்பாங்க.”

“அம்மா உங்களுக்கேத் தெரியும். எனக்கு என்ன தோணுதோ அதை மட்டும்தான் செய்வேன். எங்கம்மா கேட்டு நான் மறுப்பேனா! அடிக்கடி மத்தவங்களோட கம்பேர் பண்ணாதீங்க. எனக்குப் பிடிக்கலை” என்றான் முகம் சுருக்கி.

“சரி இனிமேல் கம்பேர் பண்ணல. ஆனாலும், நீ ஏன்டா திட்ட சான்ஸ் கொடுக்கமாட்டேன்ற?”

“நீங்க எழுப்பினப்ப கூட நான் கோவப்பட்டேனேம்மா?”

“எது! தூங்குறவனை எழுப்பக்கூடாதுன்னு உங்கம்மா சொல்லித் தரலையான்னு கேட்டியே அதுவா? ஹா...ஹா அது உளறல்டா பையா” என்றார் மகனின் முடி கலைத்து.

“ம்மா...” என சிணுங்கி முடியை கைகளால் சரிபடுத்தி, “விடுங்கம்மா எனக்கு இன்னைக்குக் கோவிலுக்கு வரணும்னு ஏதோ ஒரு உந்துதல். யார் கண்டது சாமி என்னை சம்சாரியாக்க பொண்ணு ரெடி பண்ணியிருக்காரோ என்னவோ!” என்று தாயைப் பார்த்து புன்சிரிப்பை வெளியிட்டான்.

தன்னை இரு கண்கள் ரசனையோடு ஆராய்வதை அறியவில்லை அரிச்சந்திரன்.

“டேய்! விட்டா அவரே வந்து முன்ன நின்னு கல்யாணம் பண்ணி வைப்பாருன்னு சொல்லுவ.”

“அப்படி நடந்தாலும் நல்லாத்தான் இருக்கும்லம்மா” என்றான் கண்ணடித்து.

“படவா” என அடிக்கக் கை ஓங்கி, “நீயும் உள்ள வா” என்றழைத்தார்.

“நான் வர்றது இருக்கட்டும். உங்க செல்ல பொண்ணுக்கும் இதையெல்லாம் கத்துக் கொடுக்கலாம்ல?”

“நினைக்கத்தான்டா செய்றேன். எழுப்பப் பக்கத்துல போனதும் எல்லாத்தையும் மறந்திடுறேன். விடு கல்யாணம்னு பேசின பிறகு அவளே எல்லாம் கத்துப்பா.”

“நம்ம வீட்டுலேயே இப்படி ஒரு ஆளை வச்சிக்கிட்டு வெளில உள்ளவங்களைச் சொல்றீங்க? இதெல்லாம் எந்த ஊர் நியாயம்மா?”

“புரியுதுடா? ஆனாலும் மனசு கேட்கல.”

“என்ன புரிஞ்சி என்ன கேட்கலையோ போங்க” என்றபடி கோவில் வாசல் தாண்டி உள்ளே வந்திருக்க கோவிலினுள் இளைஞர்கள் கூட்டமே அதிகம் இருக்கவும் ஆச்சர்யமாய் பார்த்தான் அரிச்சந்திரன்.

“ம்மா.. இவ்வளவு காலையில இத்தனை யங்க்ஸ்டர்ஸ் வர்றாங்களா?”

“ஏன்டா! நீ வரலைன்னா யாரும் வராமல் இருப்பாங்களா? பாரு குளிரைப் பொருட்படுத்தாம எவ்வளவு ஜாலியா பாடுறாங்க.”

சில நிமிடங்களில் பஜனை பாடியவர்களின் குரலுடன் சேர்ந்து ஒலித்ததோ அவளின் குரலும்! முதலில் பஜனையில் கவனம் செலுத்தியவன், பின் போரடிக்க ஆரம்பிக்கவும், சுற்றிலும் நோட்டம் விட்டான்.

அந்தக் குளிரிலும் பற்கள் தந்தியடிக்க நின்ற பெரியவர்கள்! கடவுளைத் தாண்டியும் காரிகையே பெரிதென்றிருந்த காளையர்கள்! தாங்கள் பிறந்ததே கடவுளைத் தொழுவதற்கே என்றிருந்த பக்திப்பழங்கள்! அருகில் இருந்தவர்களிடம் பேசியபடி நாங்கள் சராசரி மக்களே என்று பஜனை பாடியவர்கள்! எங்களுக்குப் பொங்கலும் புளியோதரையும்தான் முக்கியம் என வேடிக்கை பார்த்திருந்தவர்கள்!

சுற்றிலும் பார்வையைச் சுழற்றியவன் கண்கள் ஓரிடத்தில் நிலைக்க, பின்னணி இசை கேட்டதோ! கண்களில் புதிதாக ஒளி மின்னியது.

எங்கேயோ பார்த்த மயக்கம்


எப்போதோ வாழ்ந்த நெருக்கம்

தேவதை எந்தன் சாலை ஓரம்

வருவதென்ன மாயம் மாயம்


பாடலுக்குத் தன் ஆத்மா வெளியே சென்று அவளுடன் நடனமாடியது.

“அரி கிளம்பலாம்” என்ற தாயின் உலுக்கலில் ஆத்மா ஓடி வந்து இவனுள் புக, நடப்பிற்கு வந்து அவளைத்தேட, மாயம் என்றதாலோ என்னவோ அவளும் மாயமாகிப் போயிருந்தாள்.

“யாரைத் தேடுற நீ?”

“க்ளைண்ட் ஒருத்தரைப் பார்த்தேன்ம்மா. ப்ச்... மிஸ் பண்ணிட்டேன்.” வருத்தமாகச் சொன்னான்.

“இங்கேயும் வந்து வக்கீல் வேலைதானா? கோவிலைச் சுத்திட்டு பிரசாதம் வாங்கிட்டு வீட்டுக்குப் போகலாம்” என்றார்.

“நேரம் ஆகும்னு சொன்னீங்க?”

“லேட்டாதான் வந்ததே. பஜனை முடியப்போகுது. நாம கோவில் சுத்தி முடிக்கிறதுக்குள்ள பஜனை முடிஞ்சி கூட்டம் கலைஞ்சிரும்.”

தாயுடன் நடந்தவன் ‘அப்பனே முருகா! எனக்கு காலத்துக்கும் அவள்தான்னு இருந்தா, நான் கிளம்புறதுக்குள்ள இன்னொரு முறை அவளை எனக்குக் காட்டிரு. இல்லடா... இவள் உன்னவள் கிடையாதுன்னா, என் கண்ணுலயே அந்தப்பொண்ணு படக்கூடாது. இது நமக்குள்ள இருக்கிற டீல். இதை நீயும் சொல்லக்கூடாது. நானும் சொல்லமாட்டேன். இதுக்காக நான் உனக்கு லஞ்சம் தருவேன்னு நினைக்காத. சரியா’ என்று கடவுளிடம் ஒப்பந்தம் செய்தான்.

‘மகனே! எனக்கு செய்வதற்கு வலிக்கிறதா. அந்தப் பெண்ணை வைத்தே உன்னை எனக்குச் செய்ய வைக்கிறேன்’ என்பதாய் அழகுப் புன்னகை பூத்தார் முருகர்.

மழைச்சாரல் குறைந்து பனிதுளிகளை மட்டுமே பொழியச் செய்ய, முதல் இரண்டு சுற்று முடிந்து, மூன்றாவது சுற்றில் குளத்தருகே கூரை வேய்ந்த இடத்தில் இருந்த பெண்கள் கூட்டத்தில் சிரிப்பு சத்தம் கேட்டது.

‘பெண்கள் புறம் திரும்பாதே’ என்று மனம் கடிய, ‘பார்க்காமல் அவளை எப்படிக் காண்பது’ என்று இன்னொரு மனம் தூண்டிவிட, மெல்ல அவர்கள் புறம் திரும்பினால், அந்த விடிந்தும் விடியாத அதிகாலை வேளையில், சந்திரன் தன் ஒளிக்கதிர்களை அனுப்பி இருளை வெளிச்சத்தில் வைத்திருக்க, அருகிலிருந்த மின்விளக்கு ஒளியும் சேர்ந்து மொத்தமாக அப்பெண்கள் மேல் விழுந்தது.

அவன் கண்களோ அவளை மட்டும் கண்டன. தலையை தாவணியின் முந்தானையால் மூடி முகம் மட்டும் தெரிய, அவள் பார்வையும் அவனை ஒரு நொடி தீண்டிச் சென்றதோ! அவனே அறியான்!


WhatsApp Image 2025-08-25 at 19.14.08_a06a2377.jpg
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top