• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
10

வீட்டிற்குள் நுழைந்த கொடியின் கண்ணில் அரிச்சந்திரன் பட, கோவத்தில் ஓடிச்சென்று, ‘உன்னால்தான், உன்னால்தான் அண்ணா அவள் வாழ்க்கை பாழாகிற்று’ என்று அடிக்க ஆரம்பித்தாள் மின்னல்.

தங்கையின் திடீர் தாக்குதல் புரியாமல் தடுத்தவனை, ‘நீ மட்டும் சரி சொல்லியிருந்தா, ஒரு பெண்ணோட வாழ்க்கை இப்படி சிரழிஞ்சிருக்காது. எல்லாத்துக்கும் நீதான் காரணம். அவ எப்பேர்ப்பட்ட பொண்ணு தெரியுமா? விட்டுட்டியேண்ணா. ஐ ஹேட் யூ. ஐ ஹேட் யூ’ என்று கத்த, கதறிய கதறல்கள் அனைத்தும் அவளின் மனதினுள்ளே அடங்கியது.

அவன் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க எழுந்த எண்ணங்கள் யாவும், தோழியின் வார்த்தையில் அமைதியாக அடங்கியது. அண்ணன் அவனை முறைத்துத் தாயைத் தேடி வந்தவள், அவரின் மடியில் முகம் புதைத்து அங்கு நடந்ததைச் சொல்லி அழுதாள்.

“திடீர்க் கல்யாணமா? பையன் நல்லவனாமா?” என்றார் பதறிப்போய்.

“சஞ்சித் அண்ணா ரொம்ப நல்லவர்தான். அவர் கூட நதின்னா அது தப்பாகும்மா.” தனக்குத் தெரிந்ததைச் சொல்லி இன்னுமே அழுதாள்.

“ஏன் இந்த விபரீத முடிவு? எதுக்கு இந்த அவசரம்? படிச்சவங்கதான? பெத்த பொண்ணு வாழ்க்கையை தெரிந்தே ஏன் சிக்கலாக்குறாங்க?”

“எனக்கு என்ன செய்யுறது தெரியலம்மா. அவளும் பிடி கொடுத்துப் பேசமாட்டேன்றா” என்றவளுக்குள் கோவிலில் நடந்தது நினைவு வந்தது.

“பேசமாட்டியா கொடி?”

“நீதான் மொத்தமா பேசிட்டியே. அப்புறம் என்ன கேள்வி? வாக்கு கொடுக்குறதுக்கு முன்ன கொஞ்சம் நிதானிச்சிருக்கலாம். உன்னை சஞ்சித் அண்ணா கூட... கடவுளே! எப்படி உன்னால் முடிஞ்சது?” கோவத்தில் தன் ஆதங்கம் அனைத்தையும் கொட்டினாள்.

“சஞ்சித் அத்தானோட கல்யாணம்ன்றது, கொஞ்சம் இல்ல ரொம்பவே கஷ்டம்தான். ஏன் அவங்களுக்குமே கஷ்டம்தான். அம்மாகிட்ட எப்படி பேசினாங்க கேட்டல்ல. அவங்க குடும்பம் எங்களுக்கு செஞ்சது கொஞ்ச நஞ்சமில்லன்னு உனக்குத் தெரியுமே கொடி. அவங்களுக்குப் பயந்து ஊர் ஊரா சுத்தினப்ப, மானத்தோட வாழ வழி செய்தது அத்தை குடும்பம்தான்.”

“பிரதி உபகாரமா உன் வாழ்க்கையை கொடுக்கப் போறியா?” என்றாள் சலிப்பான குரலில்.

“அது ஒரு காரணமா வேணும்னா இருக்கலாம். அவரை நல்லா தெரிஞ்ச நான் கல்யாணம் பண்ணினா, பின்னாடி பிரச்சனைகளும் வராதே.”

“பிரச்சனைக்குத்தான் காரணமே இல்லாமல் போயிருமேடி” என்று விரக்தியாய் சொல்லி, “என்னால் இதை ஜீரணிக்கவே முடியலை. இதுக்குக் காரணமானவனை...” என்று அண்ணனை நினைத்து பல்லைக்கடித்தாள்.

“ஏன்டி அவங்களைக் குறை சொல்ற? இதுல அவங்க தப்பு என்ன இருக்கு? ஒரு பொண்ணைப் பார்த்து பிடிச்சிருக்குன்னு சொன்னது குற்றமா? அவங்க மனசுக்குப் பிடிச்சவளைத்தான் மனைவியா ஏத்துக்க முடியும். என்னோடது ஒரு தலையான, ஒரு மாத காதல்தான. சிக்கிரமே ரிலீஃப் ஆகிருவேன்.”

“சீக்கிரமேன்னா?”

“ம்... தாலி கட்டுறதுக்கு முந்தின நிமிடம்வரை, என்னோட வாழ்க்கை எனக்கு மட்டுமே! ஒருத்தரை மனசுல வைக்கிறதோ, தூக்கிப் போடுறதோ என்னோட முடிவு. இன்னொருத்தர் வாழ்க்கையில இணைந்த பிறகு எனக்கு எல்லாமே அவங்களாகிருவாங்க. அதனால் உன் அண்ணனை எதுவும் சொல்லாத?”

“இப்பக்கூட அவனை விட்டுக்கொடுக்க மாட்டேன்ற நதி. உன்னை...”

“ஒரே விஷயம் இடிக்குது கொடி. உன் அண்ணன் ஒரு பொண்ணை காதலிக்கிறதா சொல்றாங்க. அப்புறம் ஏன் பீச்ல என்கிட்ட வம்பிழுத்தாங்க? எந்த பொண்ணுகிட்டயும் நின்னு பேசிப் பார்க்கலை. அப்படி இருக்கிறப்போ எப்படி என்கிட்ட மட்டும்?”

“ம்... உன்னைத்தான் காதலிக்கிறானாம்” என்றாள் குரலில் நக்கல் தொணிக்க.

“நிஜமாவே எனக்கு அப்படிதான் தோணிச்சி கொடி. உன் அண்ணன் கண்ணுல, செயல்ல ஒரு உரிமை உணர்வை உணர்ந்தேன். அது பொய்னு என்னால இப்பவும் நம்பமுடியல. ம்... மனுஷனோட மனசைக் கணிக்கிற சித்தா யுக்தி, சாதாரண மனுஷி எனக்கெங்கே தெரியப்போகுது.”

“இப்ப என்ன சொல்ல வர்ற நதி?”

“எனக்காக உன் அண்ணன்கிட்ட சண்டை போடாத சொல்றேன். அவங்களை நீங்க எல்லாரும் வெறுத்துட்டா, எங்க போவாங்க சொல்லு? வீட்டை விட்டுப் போகச்சொல்றது ரொம்ப பாவம் கொடி. அந்த கஷ்டத்தை எப்பவும் அவங்களுக்குக் கொடுக்காத. உங்கப்பா சொன்னப்ப அவங்க அலறல் இருக்கே, எனக்கு எப்படி சொல்றது தெரியல கொடி. அப்படி ஒரு எதிர்பாராத அதிர்ச்சி அவங்க குரல்ல. என்னால அதைத் தாங்கிக்க முடியலடி” என்றவள் குரலில் அத்தனை கலக்கம்.

“நதீ!” அதிர்வுதான் அவளிடம். ‘இவ்வளவு தூரம் அவனுக்காக யோசிப்பவள் எப்படி மறப்பாள்? இந்தத் திருமணம் அவளுக்கு சாபம்தானே!’ கலங்கிய கண்களை மறைத்து அவளைப் பார்த்தாள்.

“அந்த நேரம் தோன்றிய என்னோட உணர்வைச் சொன்னேன் கொடி. அதான் உன்னைக் கூப்பிட்டேன். இல்லன்னா கட் பண்ணிருப்பேன். யார் அந்தப் பொண்ணுன்னு கேட்டு, வீட்ல கன்வின்ஸ் பண்ணி அவங்க கல்யாணத்தை முடி. சந்துரு ஹேப்பிதான் நமக்கு முக்கியம்.” சாதாரணமாக சொல்வது போலிருந்தாலும் அவள் குரலில் இருந்த பேதமை அவளின் வலிகளைச் சொல்ல, “எனக்காக செய் கொடி” என்றாள் கோரிக்கையாக.

“உனக்காக! உனக்காக மட்டும் செய்றேன். ஆனா, இப்ப இல்ல. கொஞ்ச நாள் போகட்டும்.”

“ஏன்? இப்பவே செய்யுறதுக்கென்ன?”

“நீ நல்லா வாழ்றன்றதை நான் உணர்றப்ப, கண்டிப்பா என் அண்ணனுக்காகப் பேசி, அவனுக்குப் பிடிச்சவளை கட்டி வைக்கிறேன்.”

‘உனக்காகவே சீக்கிரம் என் மனம் மாறணும் கொடி’ என்றெண்ணியவள் “உன் அண்ணன்கிட்ட என் சம்பந்தமா எந்த வாக்குவாதமும் வச்சிக்காத” என்றாள்.

“என்ன சத்தியம் பண்ணனுமா?”

“பண்ணினாலும் தப்பில்லைதான்” என்றாள் வரவழைத்த புன்னகையுடன்.

“சரி உனக்காக! இப்ப நான் கிளம்புறேன்.”

“சரி” என விடை கொடுத்தவளுக்கோ அவ்வளவு நேரமாக அடக்கி வைத்த அழுகை வெடிக்க, அமர்ந்தபடியே வாய்மூடி அழுகையை அடக்க, சத்தம் அடங்கியதே தவிர, கண்ணீர்.?

அதை அவளின் அவஸ்தையை அமைதியாகக் கவனித்திருந்தான் அவன்.

தோழியின் நினைவில் இருந்தவளை, “நான் வேணும்னா அவங்ககிட்ட பேசிப்பார்க்கவா? நம்ம சொந்தத்துலயே ஒரு நல்ல பையனா பார்த்து...”

“வேண்டாம்மா. நம்மளை விட்டு விலகியிருந்தால்தான் அவளோட லைஃப் நல்லாயிருக்கும்.”

“நீ சொல்றதைப் பார்த்தா எங்கடி நல்லாயிருக்கும்? வாழ வேண்டிய பொண்ணு அவள். எதுக்கோ பயந்து ஏன் கெடுக்குறாங்க. அழகு, படிப்புன்னு என்ன இல்லை அந்தப் பொண்ணுகிட்ட?” அவரினுள்ளும் ஆதங்கமே அதிகமாயிருந்தது.

‘அதான் உங்க பையன் எதுவும் இல்லன்ற மாதிரி செஞ்சிட்டானே.’ மனதில் எழுந்த கோவத்தை அடக்கி “எல்லாமே இருக்குமா. அதனாலதான் அவளோட எண்ணம் தெரிஞ்சப்ப நம்ம வீட்ல நிரந்தரமா வரவைக்க நினைச்சேன். அவள் தலைவிதியைத்தான் உங்க பையன் மாத்திட்டானே!”

“என்ன பேச்சிது? இதையெல்லாம் விட்டுட்டு நீ வேலைக்குக் கிளம்பு” என்றார். கவனம் மாறினால் மகளின் அவஸ்தை குறையுமென்ற எண்ணமோ!

“இல்லம்மா. இனி நான் அங்க போறதாயில்ல.”

“அண்ணன் அங்க இருக்கிறதாலதான் அப்பா உன்னை அனுப்பியிருக்காங்க. வேற இடம்னா அதுக்கு அப்பாகிட்டவே இரு.”

“ப்ச்... அப்பா டெல்லிமா. இப்போதைக்கு நான் அங்க போகல. நதி நல்லாயிருக்காள்னு என மனசு சொன்னா, அதுக்குமேல ஒரு நிமிஷம் கூட யோசிக்காம அப்பாகிட்ட கிளம்பிருவேன்.”

“அப்ப வீட்ல இருக்கப் போறியா?”

“வெய்ட்மா” என்று தன்யாவை போனில் அழைத்து காரணம் சொல்லாமல், அவளுக்கு நம்பிக்கையான இடத்தில் தனக்கு ப்ராக்டீஸ்கு ஏற்பாடு செய்யச் சொன்னாள்.

ஏதோ பிரச்சனையென்று எண்ணிய தன்யா, பத்து நிமிடம் கழித்து சொல்வதாக அழைப்பை வைத்து, அரிச்சந்திரனிடம் அலோசனை கேட்டு, இன்னொருவருக்கும் அழைத்துப் பேசி, பின் மின்னலை அழைத்து, “சுஜய் அண்ணா தெரியும்தான மின்னல்? அவங்ககிட்ட உன்னோட ப்ராக்டீஸைத் தொடர்றியா? வேற வேணும்னாலும் பார்க்கலாம்” என்றாள் தன்யா நிதின்.

“சுஜய் சார்னா ஓகே மேம்.”

“அப்ப சரிமா. நான் அண்ணாகிட்ட பேசிட்டேன். நீ நாளைக்கே போய் ஜாய்ன் பண்ணிரு. எதாவது ப்ராப்ளம்னா தயங்காம என்னை கான்டாக்ட் பண்ணு. டேக் கேர்.”

நன்றியுரைத்து கைபேசியை வைக்கையில் ரவிச்சந்திரன் வர, சுஜயிடம் சேரப்போவதைச் சொன்னதும், “ஏன்?” என்று அவர் கேட்க, “அங்கேயே போகட்டும்ங்க” என்றார் சகுந்தலா.

“என்கிட்ட எதையோ மறைக்கிறீங்க தெரியுது. என்னன்னு சொல்ல மனசு வரலைல” என்று அவர்களை ஆராய்ந்தார்.

“மறைக்க எதுவுமில்ல. ஒரு டூ மன்த்ப்பா. அப்புறம் உங்ககிட்ட வந்திருவேன்” என்றாள் கெஞ்சலாக.

“உன் அண்ணனை விட்டு விலகியிருக்க முடிவு பண்ணிட்ட. ஓகே பட் கேர்புல்லா இரு. எங்க போனாலும் நம்ம கார்ல டிரைவரோட போ” என்றார் தகப்பனுக்கே உண்டான அக்கறையுடன்.

“அப்பா நான் லா ப்ராக்டீஸ்தான் பண்ணப்போறேன். லாயரா கோர்ட்ல வாதாடப்போகல. கார்ல போனா அன்ஈஸி ஃபீல் வரும்பா.”

“அப்ப என்னோட டெல்லி வந்திரு. நைட் ப்ளைட்கு என்னோட சேர்த்து உனக்கும் புக் பண்ணிடுறேன்” என்றான்.

“நோ டேட். நான் கார்லயே போறேன்” என்றாள் பட்டென்று.

“ம்... குட் கேர்ள். உன் நல்லதுக்குத்தான்டா சொல்றேன். சரியோ தப்போ அப்பா சென்ட்ரல் கவர்ன்மெண்ட் லாயர். தெரிந்து தெரியாமல்னு எதிரிகள் இருக்கலாம். அவங்க பார்வை முதல்ல குடும்பத்தினர் மேலதான் விழும். அதனாலதான் நீங்க சென்னையில இருக்கேன்னு சொன்னதும், மறுவார்த்தை பேசாம அனுப்பி வச்சேன்.”

“புரியுதுப்பா” என்றாள் அமைதியாக.

“ஆமா அம்மாவை எங்க காணோம்?” என்று தாயைக் கேட்க,

“மனசு சரியில்லன்னு கோவிலுக்குப் போயிருக்காங்க. வர்ற நேரம்தான்” என்றாள் மின்னல்கொடி.

மறுநாள் தன் அத்தை வீட்டுக்குச் சென்று திரும்பும் வழியில், வீட்டின் அருகிலிருந்த பூங்காவில் சற்று நேரம் மன அமைதிக்காகச் சென்று அமர்ந்தாள் நட்சத்திரா. ஏனோ எப்பொழுதும் குழந்தைகள் இருக்குமிடம் அமர்ந்து அவர்களை ரசிப்பவளுக்கு, இன்று அவ்விடம் செல்ல மனமில்லை. அதோடு இது பள்ளி நேரமாகையால் குழந்தைகள் ஒரு சிலரே இருப்பார்கள். பூங்கா நுழைவாயிலில் இருந்து நூறுமீட்டர் தொலைவிலேயே அமர்ந்திருந்தாள்.

மின்னல் கொடி வீட்டிற்கும், நட்சத்திராவின் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரம் மூன்று தெருக்கள் மட்டுமே! வீட்டிற்கு வரும் வழி என்பதால், மின்னலுக்கு நதி வீட்டினரைப் பழக்கம். நட்சத்திராவிற்கு மின்னல் குடும்பத்தினர் யாரையும் தெரியாது. வேறு வேறு டிபார்ட்மெண்ட் என்பதால் மின்னலின் வீட்டினர் காலேஜ் வந்திருந்தாலும் சந்திக்க சந்தர்ப்பம் இல்லாமல் போனது.

நட்சத்திரா கல்லூரி விட்டு வீடு வந்தால் எங்கும் செல்வதில்லை. செல்ல விடுவதில்லை வீட்டினர். மீறிச் சென்றால் ஆர்த்தி அல்லது அத்தை மகன்களுடன்தான். அதனால்தான் கோவிலில் அரிச்சந்திரனை சந்தித்தாள். அதையும் தாண்டி தனியாகச் செல்வதென்றால் இந்தப் பூங்கா மட்டுமே!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
அமைதியாக அமர்ந்தவள் தன் அத்தை வீட்டினரைப் பற்றி சிந்திக்கலானாள். சஞ்சயில் ஆரம்பித்து அனைவரும் மறுப்பை மட்டுமே கொடுக்க, மகனின் திருமணத்தில் அவ்வளவு ஆசை இருந்தபோதும், மருமகளை எண்ணி மறுக்கவே செய்தார்கள். அவர்களிடம் யசோதா பேசி ஒரு வழியாக சம்மதிக்க வைத்தார். வெறும் பெயர் ராசி மட்டுமே பார்த்து மறுநாள் திருமணத்திற்கு தேதி குறிப்பதாக ஏற்பாடு.

எல்லாம் தனக்கு முன்பாக தன் சம்மதத்துடன நடந்தாலும், மனம் மட்டும் ஊமையாய் அழுவதை என்னவென்று சொல்வாள். ஒருமாத பந்தம்தானே என நினைத்தாலும் அவனை, அவன் நினைப்பை மனதிலிருந்து வெளியேற்ற முடியவில்லை. திருமணத்திற்கு முன் அதை அழிக்கவில்லை எனில் தன் அழிவு நிச்சயம் என்று புரிந்தது.

பெயருக்கேற்றார்போல் நட்சத்திரமாய் மின்னுபவள். இன்று கருமேகங்கள் சூழ, களையிழந்த வானமாய் அமர்ந்திருந்தாள். அவள் அருகில் நிழலுக்காய் இருந்த மரத்திலிருந்து, இரண்டு காகங்கள் சண்டையிட்டுக் கத்தியதில், நிமிர்ந்து மேலே பார்த்துத் திரும்புகையில், இரண்டு இருக்கைகள் தள்ளி இருந்தவனைப் பார்த்து அதிர்ந்து எழுந்துவிட்டாள்.

அரிச்சந்திரன் இவளைக் கவனிக்கவில்லை. இவளை என்றில்லை யாரையும் கவனிக்கும் நிலையில் அவனில்லை. கால்களை நீட்டி கைகளைக் கட்டி, கண்களை மூடி எதையோ ஜீரணித்துக் கொண்டிருந்தான். மற்றவர்கள் விலகலை விட, தங்கையின் விலகலைத் தாங்க முடியவில்லை அவனால்.

‘வேலை செய்யும் இடத்தைக்கூட மாற்றிச் செல்லுமளவு தோழியின் மேல் அன்பா? யாரோ ஒருத்தி முக்கியமென்பவள் தன்னை ஏன் புரிந்து கொள்ளவில்லை? அந்தப்பெண் நதீராவைப் பார்க்காமலே இருந்திருக்கலாம். நான் நானாக இருந்திருப்பேன். வீட்டில் அனைவரையும் எதிர்த்து, பொறுக்கி போல் பேசி, அவர்களின் வளர்ப்பையும் கேள்விக்குறியாக்கி, வேண்டாம் இந்தக் காதல்’ என்று மூளை வலியுறுத்தியது.

‘அவளைத் தவிர வேறு யாரும் வேண்டாம்’ என்றது மனது.

‘குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துப் போ’ என்றது மூளை.

‘உனக்கான ஒரு குடும்பம் உருவாகப்போவதே அவளால்தான்’ என்றது மனது.

வக்கீலாய் மாறி மூளையும், இதயமும் மாறி மாறி வாதிட்டதில் மூச்சடைப்பது போல் தோன்ற, ‘கொடி ப்ளீஸ் விட்ரு!’ அப்பெண்ணின் வேதனைக் குரல் கேட்டது. அக்குரலின் வலியில் மனம் சஞ்சலமடைய ‘ஏன் அந்த வேதனை? எனக்காகவா?’ சட்டென்று உடல் உதற நீட்டிய காலைச் சுருக்கி தலையைப் பிடித்தபடி குனிந்து அமர்ந்தான்.

அவனையே பார்த்திருந்தவளுக்கு அச்செயல் நெஞ்சை அடைத்தது. ஆறுதல் சொல்ல ஆளில்லாத குழந்தையாய் தெரிய, அவன்மேல் பரிதாபம் எழுந்தது. ‘ஏன் இப்படி இருக்காங்க? என்னாலா? என்னோடான திருமணப் பேச்சினாலா? அதற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லையே. பின் ஏன் இந்த கலக்கம்?’ அருகிலமர்ந்து சமாதானப்படுத்த மனம் துடித்தது.

‘நான் உன் வாழ்வில் வராமல் விலகிப்போனால் நீ நன்றாக இருப்பாயானால், நான் இந்தத் திருமணத்தை முழு மனதாக ஏற்றுக்கொள்கிறேன்.’ மனம் முடிவு செய்ய தன் ஸ்கூட்டியை நோக்கிச் சென்றவள், சீட்டின் அடியில் இருந்த வாட்டர் கேனை எடுத்துத் திரும்பவும் பார்க்கினுள் அவனிடம் வந்து, தயக்கம் இருப்பினும் தயங்காமல் அவன் அருகில் அமர்ந்தாள்.

தன்னருகில் அவனின் மனதிற்கு நெருக்கமானவள் வந்து அமர்ந்தும், அதை உணர முடியாத நிலையில் இருந்தான் அரிச்சந்திரன்.

“ரொம்ப நேரமா தண்ணி நீட்டுறேன். கை வலிக்குது. சீக்கிரம் குடிச்சிட்டுத் தர்றீங்களா?”

தன்னருகே கேட்ட குரலில் நிமிர்ந்தவன் கண்கள் அவள் முகம் கண்டதும் நட்சத்திரமாய் ஜொலித்தது.

“ப்ளீஸ் தண்ணி குடிங்க” என நீட்ட, வேகமாக வாங்கிக் குடித்தவனுக்கு கைபேசியில் கேட்ட குரலும் இவள் குரலும் ஒன்றென உணர முடியவில்லை.

“எதாவது பிரச்சனையா? அப்படினாதான் உங்க ஸ்பெஷல் சிகரெட் இருக்கே. அப்புறமென்ன?” என்றாள் சமாதானமாக.

“என் தங்கச்சி மின்னல் உன் ப்ரண்ட்தான?” என்றான் தன்னுடைய சந்தேகத்தைத் தீர்க்கும் பொருட்டு. அதே நேரம் தங்கையின், ‘சும்மா ஹெல்ப்கு வந்தாங்க’ என்றது நினைவில் வந்தது.

“உங்க தங்கச்சியா? அப்படி யாரையும் தெரியாதே” என்றாள் அவன் சந்தேகமாகக் கேட்டதை தனக்கு சாதகமாக்கி.

அவள் முகத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் கண்டான். அது என்னவென்று புரியவில்லை. முக்காடிட்ட முகத்திற்குள் இருக்கும் நெற்றிப் பொட்டைப் பார்த்தவனுக்கு அது கவனத்தில் பதியவில்லை. வக்கீல் என்பவன் சிறு சிறு விஷயங்களிலும் காவல்துறை போல் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருப்பவன். அரிச்சந்திரன் மூளையும் மனதும் தங்கள் வழக்காடலை இன்னும் முடிக்கவில்லை போல!

“அன்னைக்கு ஒரு கேஸ்ல என் தங்கச்சிக்க ஹெல்ப் பண்ணுனியே?”

“அப்படியா? என்கிட்ட உதவின்னு கேட்டா, என்னால முடிஞ்ச உதவின்னா கண்டிப்பா செய்வேன். அதுல எதையாவது பார்த்திருப்பீங்க?” என்றாள் அசட்டையாக.

அவன் தங்கையின் தோழியென்றால், பெண் கேட்டது தன்னையென்று நினைத்து அவனின் புண்பட்ட மனம் மேலும் வலிக்குமே என்ற எண்ணம் அவளுக்கு. அதற்கு மேல் அவனும் கேட்கவில்லை.

“கல்யாணம் முடிஞ்சிருச்சா? இல்ல பார்க்கிறாங்களா?” நேரடியாக தன் விருப்பத்தைச் சொல்லும் நிலையிலில்லை அவன். அதைக் கேட்குமுன் அவன் குடும்பமே நினைவு வந்தது.

“ரொம்ப முக்கியமான கேள்விதான். கல்யாணத்துக்குப் பார்த்தாச்சி. அத்தை பையனைதான் பேசியிருக்காங்க. நாளைக்கு தேதி குறிக்கிறாங்க” என்றாள் முகத்தில் எதையும் காட்டாது.

அவள் பதிலில் அரண்டவன், “உ..உனக்கு அவனைப் பிடிச்சிருக்கா?” என்றான் தடுமாறிய குரலில்.

“வீட்ல பெரியவங்க பார்த்தது. சொந்தம் வேற. எப்படி மறுக்க முடியும்?”

‘கொன்னுட்டியேடி! உனக்காக வீட்டினரை பகைச்சி என் காதலுக்காக போராடிட்டு இருக்கேன்.’ ஏனோ அனைத்தையும் இழந்த உணர்வு எழ மனம் கண்ணீர் வடித்தது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top