• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
11


“ஏன் திடீர்னு டல்லாகிட்டீங்க?”

“நத்திங்மா.”

“என்னைக் கேட்டீங்களே, உங்களுக்கு கல்யாணமாகிருச்சா? இல்ல பார்க்கிறாங்களா?”

“கல்யாணம் இன்னும் இல்லை” என்றவன் அவள் முகம் பார்த்து, “இனியும் சந்தேகம்தான்” என்றான்.

“ஏ...ஏன் அப்படி?” திக்கியது அவள் குரல்! பலமாய் அதிர்ந்தது அவள் இதயம்!

“ம்... தெரியலை அன்ட் புரியலைமா. நிறைய குழப்பம். எப்படி சரி செய்றதுன்னு தெரியலை. நிறைய கேஸ் நான் சால்வ் பண்ணியிருக்கேன். ஆனா, என்னோட சொந்தப் பிரச்சனையில் சின்னதா கூட எதுவும் செய்ய முடியலை” என்றான் வருந்திய குரலில்.

ஏனோ அனைத்து துன்பத்தையும் அடக்கி அமைதியாயிருக்கும் நிலை. தன் நிலையை தானே நொந்து கொள்ளதான் முடிந்தது.

அதை உணர்ந்தாளோ, அவனையே உயிரென்று வாழ்பவள்! “உ..உங்க லவர் கூட எதாவது பிரச்சனையா?” கேட்டுவிட்டாள் அவன் பதில் என்னவென்றாலும் அதை ஜீரணிக்க முடிவெடுத்து.

சட்டென்று அவள் கண்பார்த்து, “எனக்கு லவர் இருக்கிறதா சொல்லலையே?” என்றான் அவளை ஆராய்ந்தபடி.

சட்டென்று உதடுகடித்து, “இல்ல இந்த ஏஜ்ல இவ்வளவு குழப்பம்னா, அது காதலா இருக்கலாமோன்னு ஒரு கெஸ்தான்” என்றாள்.

“ம்... அதுவும் ஒரு வகையில் சரிதான். ஒன் சைட் லவ். இதுவரை அந்த பொண்ணுகிட்ட சொல்லலை. அவள்கிட்ட சொல்லலையே தவிர அவளைத் தவிர எல்லாருக்கும் சொல்லிட்டேன். தேவைக்கு அதிகமாகவே வாங்கியும் கட்டிக்கிட்டேன்.”

“ஏன் சொல்றதுக்கென்ன?” என்று அவன் முகம் பார்க்க,

‘ப்ச்...’ என சலிப்பாக உச்சுக்கொட்டி பழையபடி கால் நீட்டி அமர்ந்து தன் வேதனையை முழுங்கி, “அவளுக்குக் கல்யாணம் பேசிட்டாங்க” என்றதும் அவளுள் அதிர்வு.

‘கடவுளே! என்னோடதுதான் தோற்றதென்றால் இவங்களுக்குமா?’ வலிதான் அவளுள்ளும். “அடுத்து என்ன செய்யுறதா இருக்கீங்க?”

“ம்... வேறென்ன நம்ம வேலையை மட்டும் பார்க்க வேண்டியதுதான்.”

“அப்பக் கல்யாணம்?”

அவளின் முகம் பார்த்து தன் ஏக்கத்தை அடக்கி, “பார்க்கலாம். இப்போதைக்கு சான்ஸ் கிடையாது. காலம் என்ன வச்சிருக்கோ அதன்படி நடக்கப்போறேன்.”

அவனின் பார்வைக்கு அர்த்தம் புரியவில்லை நட்சத்திராவிற்கு. இருவருக்குள்ளும் அமைதி. ‘ஒரே மாதிரி பெயர் இருக்கிறதாலதான் செட்டாகலையோ? ஆப்போசிட் போல் அட்ராக்ட் ஈச் அதர் சொல்ற மாதிரி, நட்சத்திரமும் சந்திரனும் குளுமையான கிரகங்கள். சந்திரனுக்குப் பதில் சூர்யான்னு இருந்திருந்தால் செட்டாகியிருக்குமோ!’

ஏதேதோ யோசனையுடன் இருந்தவள், “பேசாம உங்களுக்கு சூர்யா இல்ல கதிரவன்னு பெயர் வச்சிருக்கலாம்” என்று தன்னை மீறி சொல்லிவிட்டாள்.

அவன், “வாட்?” என்றதும்தான் வெளியே உளறியிருப்பது தெரிய, “சாரி உங்க பெயர் என்னவாயிருக்கும்னு கேட்க யோசிச்சேன்” என்றாள் உளறலாகவே.

“ஓ... அரிச்சந்திரன். வீட்டுல அரி. வெளிய அர்ஸ். தன்யா மேம் மட்டும் சந்துரு.”

‘எனக்கும் சந்துரு’ என நினைத்து, “சந்துரு நல்லாயிருக்கு” என்றாள்.

“தேங்க்ஸ். வந்து ரொம்ப நேரமாகிருச்சி. உன்கிட்ட பேசினதுல மைண்ட் கொஞ்சம் ஃப்ரீ. அதுக்கும் ஒரு தேங்க்ஸ். நான் கிளம்புறேன். நீ எங்க போகணும்? வண்டி ஏதும் இல்லன்னா ட்ராப் பண்ணவா?”

‘அதான் ஏற்கனவே ட்ராப் பண்ணிட்டீங்களே சந்துரு!’ மனம் கசக்க, “இல்ல சந்... சார். நீங்க போங்க. என்கிட்ட ஸ்கூட்டி இருக்கு. வீடு இங்க பக்கத்துலதான்” என்றாள்.

“ஓகேமா கேர்புல் அன்ட் டேக் கேர்” என்று சென்றவன் வெளியே செல்லுமுன் அவளைப் பார்த்து புன்னகைத்து கையசைத்து விடைபெற, செல்பவனையே கண்ணுக்குள் நிறைத்து மூச்சை இழுத்து, ‘கல்யாணத்துக்கு முன்னாடிவரை உன்னை நினைக்க எந்த கட்டுப்பாடுகளும் எனக்கில்லை. ஐ லவ் யூ சந்துரு!’ மனதோடு அவனிடம் சொன்னாள்.

அவ்வார்த்தை அவனுக்குக் கேட்டுவிட்டதோ! அவள் பார்வையிலிருந்து மறைந்தவன் திரும்ப வந்து, அவளின் கண்மூடிய நிலை பார்த்து, ‘ஐ லவ் யூ சொல்ல ஆசைதான் நதீரா. இனி சொன்னா அதுதான் இருக்கிறதுலயே பெரிய தப்பு. பாரேன் நீ கல்யாணம்னு சொல்ற. என்னால விஷ் பண்ணக்கூட முடியல. ரொம்ப செல்பிஷாகிட்டேன். வெல் குட் பை நதீரா.’

சட்டென்று அவள் கண்திறக்க அவனின் வெள்ளைச் சட்டை மட்டுமே தெரிந்தது. இதை என்னவென்று எடுத்துக் கொள்வதோ! ‘யார் அந்தப் பெண்? என்று கேட்டிருக்கலாமோ! கேட்டு சேர்த்து வைக்கப் போறியா என்ன?’ மனம் அவளை திட்டியது.

சொல்லாத காதல் செல்லாமல் போயின இருவருக்கும்.

ஏனோ தோழியிடம் பேசியாக வேண்டுமென்று அவளுக்கு அழைக்க, “நான் என்ன சொன்னா நீ என்ன செய்திருக்க?” என்றாள் கோவமாய்.

“நீ சொல்லி எதைக் கேட்கலன்னு கோவப்படுற நதி?”

“உன் அண்ணனைப் பார்த்தேன். எப்படி இருந்த மனுஷன் இன்னைக்கு கலங்கிப்போய், என்னால பார்க்கவே முடியலடி. உயிரே ஆடிப்போச்சிடி எனக்கு. அப்படி என்னடி வீம்பு உங்களுக்கு? பிடிச்ச பொண்ணை முடிச்சி வைக்கலன்னாலும், ஆதரவா இருக்கலாம்ல. இப்படி... ஹ்ம்... பெரியவங்களை விடு. நீ என்ன செஞ்சிட்டிருக்க கொடி? எனக்காகத்தான்னா நீ செய்யுறது சுத்தமா பிடிக்கலை” என்று கோவமாகக் கத்தினாள் நட்சத்திரா.

‘உன்னோட இந்த அன்பை மறுத்ததாலதான்டி பிடிக்கலை’ என நினைத்தாலும் சொல்லாது, “நதி நான் அப்படியே விட்ரமாட்டேன்னு உனக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன். மனசு சமாதானமாக கொஞ்சம் டைம் வேணும். இப்ப என்னாச்சி? எங்க பார்த்த அவனை?”

நடந்த அனைத்தையும் சொன்னவள், மறந்தும் அவன் காதல் தோல்வியைச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் தனக்கு நல்லது செய்வதாக எண்ணி அவள் அண்ணனை மறுபடியும் திருமணத்திற்கு வற்புறுத்துவாள் என்பது தெரியும்.

‘பூக்கும் பூக்களெல்லாம் பூஜைக்குப் போதில்லையே! அது போல்தான் அவர்களின் காதலும். தோன்றிய குறுகிய நாட்களிலே கருகியும் விட்டது.’

“சொல்லுங்கப்பா? இப்ப வரலப்பா. இன்னும் கொஞ்சநாள்தான். உங்க செல்ல பொண்ணு எனக்காக. ப்ளீஸ்பா! வேலையா? குட்பா. என்ன அங்க ஒரு இம்சை கிடந்து உயிரை வாங்குது” என்பதை மனதினுள் நினைத்து “நீங்க எப்ப வர்றீங்க? அடுத்த வாரமா? உங்களைப் பார்க்கணும் போலிருக்கு. சீக்கிரம் வாங்கப்பா. அம்மாவா? இதோ அம்மா. ம்மா... மா... மீ...”

“இதுக்கு மேல சுருக்க எதுவுமில்ல. எதுக்கு கத்திட்டிருக்க?”

“அப்பா அவங்க ஒய்ஃப்கிட்ட பேசணும் சொன்னாங்க” என்று போனை தாயிடம் கொடுத்து நகர...

“அத்தனையும் கொழுப்பு” என்றார் பல்லைக்கடித்தபடி.

“ஆல் க்ரெடிட் உங்களுக்குதான்மா.”

“உன்னை... இரு பேசிட்டு வந்து கவனிச்சிக்கிறேன்” என்று கணவரிடம் பேச ஆரம்பித்தார்.

சற்றுத் தள்ளியிருந்து நடப்பவற்றைப் பார்த்திருந்தான் அரிச்சந்திரன். அப்பாவிடம் பேச ஆசையிருந்தும் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அவரிடம் பேசி நிறைய நாட்களாகிவிட்டது. போன் செய்தாலும் அவர் எடுப்பதில்லை. தாயுமே வயிற்றை நிரப்பும் வேலை மட்டும் செய்கிறாரே தவிர தேவைக்கு மட்டுமே பேச்சு. பாட்டி சொல்லவே வேண்டாம். தங்கையானவளோ எப்பொழுதும் ஒரு முறைப்பு கூடுதலாய் விரைப்பு. அவளின் செய்கைகள் யாவும் குழந்தையைப் போல் தோன்ற முதலில் இருந்த வலிகளெல்லாம் புன்னகையாக மாறிவிட்டது.

முதல் நாள் சண்டையிட்டதோடு சரி. அதன்பின் முறைப்பு மட்டுமே. ஏனோ அவளைக்கண்டு சிரிப்புதான் வந்தது. அவனுமே தங்கையிடம் தன் காதல் தோல்வியைச் சொல்லவில்லை. முன்னர் போலிருந்தால் சொல்லியிருப்பான். இன்றோ, அவன் மனம் திறந்து நட்சத்திராவிற்குப் பின் சொன்னது அப்பன் முருகனிடமே!

‘லஞ்சம் தரமாட்டேன்னு சொன்னதால பழிவாங்கிட்டியா முருகா. ப்ச்... விடு நீ என்ன பண்ணுவ? இந்துப் பொண்ணா இருந்தாலாவது எனக்கு கருணை காட்டியிருப்ப. அவள்தான் வேறயாச்சே. அதனால் உன்மேல் கோவப்படலை.’ தன் பாரத்தை முருகரிடம் கொட்டிவிட்ட பிறகே சற்று நிம்மதியாக இருக்கிறான்.

‘அடேய் மடையா. மனிதனுக்குத்தானடா மதம்! கடவுளுக்கு ஏது மதம்!’ என்றாரோ அழகன் முருகன்! கடவுளின் சங்கேத பாஷை யாருக்குத் தெரியும்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
“சொல்லுடி நட்டு? கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு. எல்லா வேலையும் முடிஞ்சிதா?”

“ஆமாம்னா என்ன செய்யப்போற?”

“ஆமாமா அப்படியே பார்த்துப் பார்த்து செய்யுற பாரு. எல்லாத்துக்கும் யசோம்மாவும், நந்தப்பாவும்தான் அலையுறாங்க. அப்பா என்ன சொல்றாங்க?” நந்தகுமாரின் விருப்பமின்மையை எண்ணிக் கேட்டாள்.

“அப்பா, அம்மா சொல்லுக்காகச் செய்றாங்க.”

“ஓ... இன்னும் அரை மனசோடதான் இருக்காங்களா? சரி விடு. மேரேஜ் முடிஞ்சிட்டா எல்லாம் சரியாகிரும்.” எதிரில் என்ன சொன்னாளோ அண்ணனவனை முறைத்து, “நல்லாதான் இருக்கான். வீட்ல யாரும் அவனை எதுவும் சொல்லலை தாயே. என் முன்னாடிதான் இஞ்சி தின்ன மங்கியாட்டம் இருக்கான்” என்று முகத்தைச் சுளித்தாள்.

“ஏய்...”

“சரி நீ ஆரம்பிக்காத ஆத்தா. நான் அவனைக் குறை சொல்லல.”

அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டவன், ‘என்னை விசாரிக்கிறாளா அப்பெண்? அவள் சொல்லிதான் என்னிடம் எதையும் கேட்டு சண்டையிடவில்லையா? நமக்கும் இப்படி ஒரு நட்பு இருந்திருக்கலாம். யார் அந்த நட்பு? இதுவரை அவளைப்பற்றி கேட்கவில்லை. போட்டோ பார்க்கச் சொன்ன பொழுதே பார்த்திருக்கலாம். பார்க்காமலே வேண்டாம் என்றதால்தான் மின்னலுக்கு கோவம் அதிகமாகியிருக்குமோ? போட்டோ எங்கயிருக்குன்னு பார்த்திடலாமா’ என்று எழுந்தவன் கைபேசி இசைத்தது.

“ஹலோ மேம். சொல்லுங்க? ரொம்ப அவசரமா? இதோ ட்வென்டி மினிட்ஸ்ல அங்க இருப்பேன் மேம். மின்னலா? சரி கூட்டிட்டு வர்றேன்” என்று அழைப்பை வைத்து, “மேம் உன்னை கூப்பிடுறாங்க” என்றான்.

அவன் பேசியதைக் கேட்டிருந்ததால் தாயிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப, பைக்கைத் தவிர்த்து காரை எடுத்தான். வீட்டுத் தெரு தாண்டி சாலையில் வாகனங்களுடன் கலந்ததும், “அன்னைக்கு பெருமாள் கேஸ்கு ஹெல்ப் பண்ணினது உன் ஃப்ரண்டா” எனக் கேட்டான்.

அவனின் திடீர்க் கேள்வியில் மனசே இல்லாவிட்டாலும், “ம்...” என்றாள்.

ஒரு நொடி அதிர்வுதான் அவனுக்கு. ‘இருவரும் தோழிகள் என்று என்னிடம் ஏன் மறைத்து பொய் சொன்னார்கள்?’ ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.

“ஓ... அந்த பொண்ணு ஏன் லா பராக்டீஸ் பண்ணலை?” என்று தூண்டில் போட,

“அவள் லா காலேஜ் கிடையாது. எம்.சி.ஏ” என்றவளுக்கு தோழியைப் பற்றிய பேச்செடுத்ததும் உற்சாகம் தன்னாலே வந்தது. அதை அவனும் கவனிக்கவே செய்தான். நீண்ட நாள்கள் கழித்துத் தங்கை தன்னிடம் பேசுவதை எண்ணி சந்தோஷத்துடன், அப்படியே நதீராவைப் பற்றித் தெரிந்துகொள்ள அவனும், நட்சத்திராவைப் பற்றி அண்ணனுக்குப் புரியவைக்க அவளும் பேச்சைத் தொடர்ந்தார்கள்.

“உங்க காலேஜ்ல கேம்பஸ் இண்டர்வியூ உண்டுதான?”

“ம்... அவளுக்கு ப்ளேஸ்மெண்ட் கிடைச்சிருச்சி. அவங்க வீட்ல வேண்டாம் சொல்லிட்டாங்க. வெளில போகக்கூடாது அது இதுன்னு ஏகப்பட்ட கண்டிஷன். அவ்வளவு ஈஸியா அவளை வெளியில பார்க்க முடியாது. அன்னைக்கு நான் கேட்டதுக்காக அவங்க வீட்டுக்குத் தெரியாமல்தான் வந்தா.”

“ஓ...”

“சரி. மேம் என்ன விஷயமா கூப்பிட்டாங்க?”

“தெரியலை. ரொம்ப அவசரம் இல்லைன்னா கூப்பிட மாட்டாங்க.”

அலுவலகம் வந்த சில நிமிடத்தில் அரிச்சந்திரனுக்கு வேலை கொடுத்து வெளியே அனுப்பிய தன்யா, “ரூம்கு போய் பேசலாம் மின்னல்” என்றதும் “என்கிட்டயா? கேஸ் விஷயம்னா சுஜய் சார்கிட்ட பேசலாமே மேம்.”

“இது பெர்சனல் மின்னல். உட்கார்” என்று எதிரே உள்ள நாற்காலியில் அமரவைத்துத் தானும் அமர்ந்து, “வீட்ல என்ன பிரச்சனை மின்னல்?” என்றாள்.

“அ...அது ஒண்ணுமில்லை மேம்.”

“பரவாயில்ல மின்னல், அந்த ஒண்ணுமில்லாததையே ஒண்ணொண்ணா சொல்லு. அதுக்குள்ள வேற எதாவது இருக்கான்னு நான் பார்த்துச் சொல்றேன்.”

‘ஷப்பா! கிரிமினல் லாயர்னா சும்மாவா. என்னமா போட்டு வாங்குறாங்க.’

அவளின் எண்ணத்தைத் தன்யா படித்தாளோ! சின்னப் புன்னகையுடன், “சும்மா லாயர் இல்லடா. கொஞ்சம் டெரர்தானாம் எல்லாரும் பேசிக்கிறாங்க” என்றதும் அசடு வழிய சிரித்தாள் மின்னல் கொடி. “சரி சொல்லு என்ன பிரச்சனை? சந்துரு ஆக்டிவாவே இல்ல. எதையோ இழந்தவன் மாதிரி இருக்கான். நானும் கேட்டுப் பார்த்துட்டேன். பிடிகொடுத்துப் பேச மாட்டேன்றான். அதான் உன்கிட்ட கேட்டா தெரியும்னு வரவச்சேன்.”

“அது மேம்” என்று வீட்டில் நடந்தது, தன் தோழியின் காதல் அனைத்தையும் சொன்னாள்.

அவளை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்து, “உன் ஃப்ரண்ட் லவ் பண்ணினா நல்லது. அதையே உன் அண்ணன் செய்தா தேசக் குற்றமா? இதென்ன லாயர் மேடம் வித்தியாசமான தீர்ப்பாயிருக்கு?”

தலை குனிந்தபடி, “அவள் ரொம்ப நல்ல பொண்ணு மேம். அதைவிட அவளுக்கு ஒரு பிரச்சனையிருக்கு. அதுக்கான பாதுகாப்பா எங்க வீடு இருக்கும் நினைச்சேன். ஆனா, அண்ணன் அதைக் கெடுத்துட்டான்” என்றாள்.

“மின்னல் என்ன பிரச்சனைன்னு என்கிட்ட சொல்லு? உன்னைத் தவிர நீ சொல்றதை யார்கிட்டேயும் டிஸ்கஸ் பண்ணமாட்டேன். ஏன்னா இதுல என்னால ஹெல்ப் பண்ண முடிஞ்சா, அது உனக்கும், உன் தோழிக்கும் நல்லதுதான?”

“ஆனா மேம்...”

அவளின் கைபிடித்து, “ப்ராமிஸா என்னைத் தாண்டி விஷயம் வெளியில் போகாது. நம்பிச் சொல்லு” என்றதும் நட்சத்திராவின் வாழ்க்கையில் நடந்ததைச் சொல்லச் சொல்ல, தன்யாவிற்கு தன்னைப்போல் வேறு வகையில் அவள் பாதிக்கப்பட்டிருப்பது புரிந்தது.

“இப்ப சொல்லுங்க மேம். அவளுக்காகப் பேசுறது எந்த வகையில் தப்பு?”

“எப்படி சொல்றது தெரியல மின்னல் பெண்ணே! உன்னோட நோக்கத்தையும், அவளோட காதலையும் குறை சொல்றதுக்கில்லை. அவளுக்கான பாதுகாப்பு நாம சேர்ந்தே கொடுக்கலாம். அதுக்காக உன் அண்ணனை விட்டுக் கொடுக்கிறது தப்பில்லையா? அவன் ரோட் சைட் பொறுக்கி கிடையாது. அள் பார்த்து, ஜாதி, ஜாதகம் பார்த்தா காதல் வரும். பிடிச்சிருக்கு சொல்லிட்டான். ஒத்துவராதுன்னா பக்குவமா எடுத்துச் சொல்றதில்லையா?” என்று மென்மையாகக் கடிய,

“சாரி மேம். அவள் லைஃப் ஸ்பாய்ல் ஆகுதுன்ற கோவம். சஞ்சித் அண்ணா நல்லவர்தான், அவளை நல்லா பார்த்துப்பார்தான். ஆனா, அதற்கான ஆயுள்காலம் எவ்வளவுன்றதுதான் பயமே!”

“நல்லதே நினைக்கலாம்மா.”

“அவளால இவனை மறக்க முடியாது மேம். அவளோட சுவாசம் மாதிரி இவன். ரொம்ப டீப் லவ். அவளை இவன் மறுத்த பிறகும், பார்க்ல அவன் சோகமா இருந்ததைப் பார்த்து, உயிரோ போயிருச்சி சொல்றா. அப்படிப்பட்டவ எப்படி இன்னொருத்தரை...” சட்டென்னு அழுகை வெடிக்க தன்யாவின் ஆறுதலான அணைப்பில் தன்னைச் சமாளித்து, “நான் கூட ஒருமாத காதல்தான, அந்தளவு பாதிப்பிருக்காது நினைச்சேன். மறக்கவும் முடியாம, கல்யாணத்தை ஏத்துக்கவும் முடியாம அவள் படுற அவஸ்தையைப் பார்க்கிறப்ப, என் அண்ணன் காதல் பெயிலியராகி நதியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லமாட்டானா தோணுது” என்றாள்.

“மின்னல்!” என்றாள் தன்யா அதிர்வுடன்.

“தெரியும் மேம். பக்கா சுயநலம்தான். அவள் வாழ்க்கையா? அண்ணனோட காதலான்னு வரும்போது அவளோட வாழ்க்கைதான் முக்கியமாபடுது.”

சுற்றியுள்ள அனைவரையும் நட்பாய் பார்ப்பவள்தான் தன்யா. இப்படியொரு நட்பு, வாய்ப்பே இல்லையென்று மனம் சொன்னது.

“சந்துருகிட்ட எல்லாத்தையும் சொல்லி பேசிப்பார்க்கலாமா?”

“அதையும் நினைச்சேன் மேம். அந்த லூசுதான் நான் இப்படிதான் எதையாவது செய்வேன்னு அவளோட காதலை சொல்லக்கூடாது சொல்லிட்டா. அவனுக்குப் பிடிச்ச பெண்ணை எப்பாடுபட்டாவது நான் கட்டிவைக்கணுமாம். அவளோட மேரேஜ் அப்புறம் பேசுறேன்னு சொல்லியிருக்கேன்.”

தன்யாவுமே என்ன செய்வதென்று புரியாமல் குழம்பித்தான் போனாளோ!

“எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வுன்னு ஒண்ணு இருக்கும். அதைத் தேடலாம் மின்னல். இதுக்காகதான் இங்கயிருந்து போனியா?”

‘ம்...’ என தலையசைக்க,

“பரவாயில்லை விடு பார்த்துக்கலாம். மேரேஜ் முடிஞ்சதும் நான் வந்து உன் ஃப்ரண்டைப் பார்க்கிறேன். இனியாவது உன் அண்ணன்கிட்ட பேசு. வீட்ல உள்ளவங்களை கன்வின்ஸ் பண்ணி, அவனை ஃபேமிலி மேனாக்கிரு” என்றாள் புன்னகையுடன்.

“கண்டிப்பா மேம். தேங்க்யூ சோ மச். எனக்குமே கொஞ்சம் ரிலாக்ஸாயிருக்கு.”

“இப்படி உன் அண்ணன்கிட்டயும் உட்கார்ந்து பேசு. எல்லாம் சரியாகிரும்.”

“சரிங்க மேம். நான் வர்றேன்” என்று சென்றவளை. “ஹேய் கேர்ள்! பர்ஸ்ட் டைம் உங்க ரெண்டு பேர் மேலயும் பொறாமை வருது” என்று சிரித்தாள்.

“மேம்” என சிணுங்க,

“நிஜம்தான் மின்னல் பெண்ணே! உங்க நட்பைக் கண்டு வியக்கிறேன். எனிவே உங்க நட்பு காலத்துக்கும் தொடர வாழ்த்துகள்.”


சிறு வெட்கம் எழ, “தேங்க்யூ மேம்” என்று செல்ல, அவன் உள்ளே நுழைந்தான்.

"என்ன தனு மின்னல் மின்னிட்டு போகுது?”

“மின்னல்னா அப்படிதான் விஜய்.”

“அப்படின்ற” என பாவனையாகச் சொல்ல,

“உன் பெயர் மட்டும்தான்டா விஜய். நடிகர் விஜய் மாதிரி நினைச்சி சீன் போடாத.”

“அவர்லாம் போலீஸா நடிக்கத்தான் செய்வார். ஐயா நிஜ போலீஸ் ஹா..ஹா...” என்று சத்தமாக சிரித்தான்.

“ஐயோ பயந்துட்டேன்” என்று தானும் சிரித்து, தொடர்ந்து வழக்கு பற்றிப் பேசி முடித்துக் கிளம்பும்போது, “தனு அந்த குள்ளக் கத்தரிக்காய்க்கு எதாவது பிரச்சனையா?” என கேட்டான்.

“ஏன் கேட்கிற?” என்றாள் ஆழ்ந்து பார்த்தபடி.

“ஹ்ம்... தோணிச்சி. அதுவுமில்லாம உன்கிட்ட இருந்து அண்ணன்கிட்ட வந்திருக்கா” என்றதும் அவனை மெச்சுதலாக ஒரு பார்வை பார்க்க, “எதுவாயிருந்தாலும் நாம இருக்கோம் சொல்லு. எவ்வளவோ பார்த்துட்டோம் இதைப் பார்க்கமாட்டோமா.”

“அடேய்! திரும்பத் திரும்ப சினிமா டயலாக் பேசுற. இரு சுஜய் அண்ணாகிட்ட சொல்லி உனக்கு பொண்ணு பார்க்கச் சொல்றேன்.”

“நீ லாயரா இல்ல...”

“புரோக்கரான்னு சொல்றியா?”

“சேச்சே... புரோக்கர்னா அவரேதான் பெண் பார்த்துத் தருவார். நீ அண்ணன்கிட்ட சொல்லத்தான் போற” என்று அவள் கால்வார,

“விஜய் நீ மின்னலை லவ் பண்றியா?” என்றாள் பட்டென்று.

“ஹேய்! என்ன இப்படி பட்டுன்னு கேட்டுட்ட. இருந்தாலும் நீ நினைக்கிற அளவுக்கெல்லாம் இல்லை. பிடிக்கும்ன்றது வேற, காதல்ன்றது வேற. எனக்கு காதல்லாம் செட்டாகாது. யாராவது ஒருத்தி என் ரசிகையா வந்து, உன்னைத்தான் கட்டிப்பேன்னு ஒத்தைக்கால்ல நின்னா, யோசிக்காம தாலியைக் கட்டிருவேன்.”

“இதுல கூடவாடா உன் தளபதியை பாலோ பண்ணனும். அவர் விஐபிடா.”

“நான் விஜய்டா” என கெத்தாய் சொல்லி, “வர்ட்டா” என்றான்.

“என்னவோ பண்ணித்தொலை போ” என்று விரட்ட சிரித்தபடி சென்றானவன்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961

இரவு உணவு முடித்ததும் தன் அறைக்கு செல்லப் போனவனை, “அண்ணா” என்றழைத்தாள்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு தானாகவே வந்து கூப்பிடும் தங்கையின் அழைப்பில் மகிழ்வுடன் திரும்பியவன், “சொல்லுமா” என்றான்.

“சாரிண்ணா. தப்பே செய்யாத போதும் உன்னைத் தண்டிச்சிருக்கக்கூடாது. சாரி” என்றாள்.

“ஒரு பெண்ணைப் பார்த்து பிடிச்சிருக்கு சொன்னது குற்றமா கொடி?”

தோழி கேட்ட அதே கேள்வி அண்ணன் கேட்கிறான். ‘ஹ்க்கும் இதுல மட்டும் ரெண்டுக்கும் ஒற்றுமைபோல’ என்றெண்ணி, “தப்பே இல்லண்ணா. சொன்ன சூழ்நிலைதான் தப்பாகிருச்சி.. வேறொண்ணுமில்லை.”

“என்ன திடீர்னு? உன் ஃப்ரண்ட் சொன்னாங்களா என்கிட்ட பேசச்சொல்லி?”

“அவள் சொல்வா. எல்லாத்தையும் விட்டுக்கொடுன்னு சொன்னாலும் மண்டையை ஆட்டுவா. அவள் சொன்னதுக்காக இல்லண்ணா. நீ சொல்லு உன் ஆள் யாரு? எங்க இருக்காங்க? கல்யாணம் எப்ப பண்றதா முடிவு பண்ணியிருக்கீங்க?”

“பண்ணிருக்கீங்க இல்ல பண்ணிட்டாங்க. அந்தப் பொண்ணுக்கு மேரேஜ் பிக்ஸாகிருச்சி.”

“அண்ணா!” என்றாள் அதிர்வாய்.

“ஒய் ஷாக்கிங்? எனக்குதான் பிடிச்சிருக்கு சொன்னேன். அந்தப் பொண்ணுக்குன்னு சொல்லலையே. ஏன்னா என்னோடது ஒன் சைடு லவ்.”

“என்னண்ணா சொல்ற?” திரும்பத் திரும்ப அதிர்ச்சியைக் கொடுத்தான் அவளின் பாசமலர்.

“என்ன நடந்ததுன்னு முழுசா கேட்காம நீங்கெல்லாம் பாய்ஞ்சிட்டீங்க. சரி விடு. வீட்ல என்னோட இடம் எதுன்னு புரிஞ்சது. அதுவரை சந்தோஷம்” என்றான் விட்டேற்றியாய்.

“சாரிண்ணா. எல்லாம் என்னாலதான். என் ஃபிரண்ட்காக பார்த்து, ரியலி சாரிண்ணா” என்றாள் அழுகையுடன்.

“ப்ச்... விடு. எனக்கும் அனுபவம் வேணும்ல. ஆனாலும், இப்பல்லாம் அதிகமா அழுறடா. இனிமேல் நீ அழுறதை நான் பார்த்தேன்னா அவ்வளவுதான் சொல்லிட்டேன். சரி யார் அந்த உயிர் நட்பு?”

“நீ இன்னும் பார்க்கலைல்ல. உன்கிட்ட கொடுத்த போட்டோ எங்கயிருக்கு?”

“டேபிள் உள்பக்கம் உள்ள ட்ரால” என்று அங்கிருந்த ஷோபாவில் அமர, அவள் உள்ளே சென்று எடுத்து வந்தாள். தன் கைபேசியை அண்ணன் அருகில் வைத்துவிட்டு, கவரிலிருந்து புகைப்படத்தை எடுக்க, அதே நேரம் மின்னலின் கைபேசிக்கு அழைப்பு வர, சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தவன் கண்கள் பளிச்சிட்டது.

அதே நேரம் கவரிலுள்ள புகைப்படத்தை அண்ணனின் கையில் திணித்து அழைப்பை எடுக்க, அதைப் பார்த்தவன் கண்கள் அதிர்ச்சியா! ஆச்சர்யமா! உணர முடியா உணர்வில் சிக்கித் தவித்தான்.

“சொல்லு நதி?” என்ற தங்கையிடம், “நதீராவா?” என்று மெல்லிய குரலில் புகைப்படத்தைப் பார்த்து கேட்க, “இல்லன்ணா நட்சத்திரா! அவளோட பெயர்” என்று அண்ணன் சொன்ன பெயரைக் கவனிக்காமல் பேச்சைத் தொடர்ந்தாள்.

இடி விழுந்த அதிர்வென்றால் இதுதானா நிலை அவனிடம். தன் முட்டாள்தனத்தின் உச்சக்கட்டத்தை என்னவென்று சொல்வான். ‘உன் பெயர் நதீரா இல்லையா? நீ இந்துப் பெண்ணா? கையில் கிடைத்தும் எப்படி தவறவிட்டேன் உன்னை. நான் நினைத்திருந்தால் உன்னைப்பற்றி விசாரித்திருக்கலாம். இரண்டே நாளில் உன் ஜாதகமே என் கையில் இருந்திருக்கும். எது தடுத்தது என்னை? இதுதான் விதியா?’
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
Kanketta peraghu surya namaskaram,but not tooooo late. Ippa sollu un pasamalar readymade kalyanam erpadddu pannuvangha
விதி சதி செய்தது. இவர் என்ன செய்யப்போறார் தெரியலையே. தங்கச்சிக்கு தெரிந்து ஏதாவது செய்ய வாய்ப்பிருக்கு.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top