- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
12
கண்கலங்கியது அரிச்சந்திரனுக்கு. தங்கையை அழாதே என்றவன் கண்கள் அதை தானே செய்தன. முக்காடிட்டே பார்த்த அவளின் முகம் தலை முடியைப் பின்னலிட்டு, மல்லிகைப் பூக்கள் அவள் கூந்தலை அலங்கரிக்க, முன்புறமாக எடுத்துப் போட்டு காட்டன் புடவையில் கனக்கச்சிதமாக, இதழ் விரிந்த வசீகரப் புன்னகையுடன், கண்களும் சேர்ந்து சிரிக்க நின்றிருந்தாள் நட்சத்திரா. அப்பொழுதுதான் கண்டான் அவள் நெற்றிப் பொட்டை. ‘சே... சரி பண்ண முடியாத தப்புப் பண்ணிட்டியேடா’ என தலையிலடித்தான்.
தோழியுடன் பேசிக் கொண்டிருந்தாலும் தோழியின் புகைப்படத்தைப் பார்க்கும் அண்ணனின் முகபாவனைகளைத் தெரிந்துகொள்ள அவனையும் ஒரு பார்வை பார்த்திருந்தவள், அவனின் அடுத்தடுத்த செயலில் குழம்பி, “நதி நான் அப்புறம் பேசுறேன்” என்று வேகமாக சொன்னதில் என்னவென்று நட்சத்திரா கேட்க, “தெரியலை. அண்ணன் டென்ஷனா இருக்கிற மாதிரியிருக்கு. பேசிட்டு அப்புறமா உன்னைக் கூப்பிடறேன்.”
கைபேசி அழைப்பைத் துண்டித்து அண்ணனருகில் வந்தமர்ந்து அவன் முகம் பார்த்து, “என்னாச்சி அண்ணா?” எனக் கேட்க,
“நட்சத்திராவா! நான் நதீரா நினைச்சேன்.” குரலே எழும்பாமல் சொன்னான். வார்த்தைகள் வராமல் அவன் குரல் உள்ளே சென்றது.
“அண்ணா!” மொத்த அதிர்வும் அவளிடம்.
“ஏன் இவள் எப்பவும் முகத்தை மறைச்சிட்டிருக்கா? நான் அதில்தான்...” ‘ஏமாந்து அவளை இழந்துவிட்டேன்’ என்பதைச் சொல்லாமல் விட்டான்.
“அப்ப நீ முஸ்லீம் பொண்ணுன்னு சொன்னது நதியவா?” அவனின் மௌன தலையசைவில், சட்டென்று கோவம் எழ, “அறிவிருக்கா உனக்கு? எத்தனை முறை, எத்தனை முறை போட்டோ பார்த்து சொல்லு கெஞ்சினேன். கடைசியில்... ஐயோ... கைக்குக் கிடைச்ச நல்ல வாழ்க்கையை யாராவது தூக்கி வீசுவாங்களா? இதுல ஒன் சைடு லவ்வாம்! உனக்குத் தெரியுமா, அவள் உன்னை எந்தளவு லவ் பண்றாள்னு?” என்றாள் ஆத்திரம் தாளாது.
“கொடி!” தங்கையின் அதிர்வு இப்பொழுது அண்ணனிடம்.
“அவ்வளவு போராடினேனே உன்கிட்ட. எதுக்குன்ற? அவளோட காதலுக்காக! எல்லாத்தையும் கெடுத்துட்டு அவளான்னு கேட்கிற. அன்னைக்கு நமக்கு ஹெல்ப் பண்ண வந்தப்பவாவது, இந்தப் பெயரைச் சொல்லிக் கேட்டிருக்கலாமே!” என்றவளுக்கு கோவத்தோடு இயலாமையும் சேர்ந்துகொண்டது.
‘அன்னைக்குதான் அவளை முதல்முறை பார்த்தேன்’ என்பதை தங்கையிடம் சொல்ல மனம் தடுத்தது.
“இப்ப உன் காதலையும் விட்டு, அவள் காதலையும் விட்டு, பைத்தியங்கள்தான் நீங்க ரெண்டு பேரும். காதல்! இந்த வார்த்தையைக் கேட்டாலே கடுப்பா வருது. காதலிச்சா மூளை வேலை செய்யாதா? அவசரக்காதல்! அவசரக் கல்யாணம்! எல்லாம் முடிஞ்சது. எக்கேடோ கெட்டு ஒழிங்க” என்று முகம் மூடி அழுதாள்.
‘அவள் என்னைக் காதலித்தாளா? அதனால்தான் உரிமையாய் கைபிடித்து இழுத்துச் சென்றாளா? என் கேலிகளையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டாளா? கொடி வேண்டாம் விட்ரு! அக்குரல் அவளை நான் மறுத்ததாலா! பார்க்கில் தானாகவே வந்து தன் வேதனையை மறைத்து, என் வேதனையைக் குறைத்ததும், என் மேலுள்ள காதலாலா!’ இரு துளி நீர் அவன் கண்களிலிருந்து விழ, அதைத் துடைக்கும் எண்ணமில்லாமல் அமர்ந்திருந்தான்.
“இப்ப என்ன செய்யப்போறண்ணா?”
“என்ன செய்ய முடியும்? எதுவும் செய்ய முடியாதளவு வழியை நானே அடைச்சிட்டேன். ஹ்ம்...” சின்ன பெருமூச்சு அவனிடம் எழ, “கல்யாணத்தை நிறுத்தி அவங்க குடும்பத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்த வேண்டாம். நான் அவளை மறுத்தவனாகவே இருந்திடுறேன். என் காதல் கடைசிவரை அவளுக்குத் தெரிய வேண்டாம்” என்றான்.
“அண்ணா அவள் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷமாயிருப்பா. இன்னும் நாலு நாள்தான் இருக்கு. அவங்க வீட்ல பேசலாம்ணா.”
“இப்ப நீதான் லூசு மாதிரி பேசிட்டிருக்க. நாலு நாள்ல கல்யாணத்தை வச்சிட்டு, அந்தக் கல்யாணத்தை நிறுத்துறது பாவம். இப்ப கஷ்டமாதான் இருக்கும். மேரேஜாகிட்டா அந்த லைஃப்கு பழகிருவா.”
நட்சத்திராவின் பிரச்சனையை அண்ணனிடம் சொல்வோமா என நினைத்தவள் வேண்டாமென்று விட்டுவிட்டாள்.
மடியில் படுத்திருந்த மகளின் முதுகை லேசாகத் தட்டிக் கொடுத்தபடி “நதிமா! அம்மா தப்பு பண்ணிட்டேன் நினைக்குறியா?” என்றார் யசோதா.
“அச்சோ! ஏன்மா?” என்றாள் பதற்றமாய்.
“உனக்கு அந்தப் பையனைப் பிடிக்கும்னு தெரியும். அது நடக்காதுன்றப்ப எங்க அப்படியே இருந்திருவியோன்ற பயம். சஞ்சித்கிட்ட உள்ள பிரச்சனை இனியும் வராது சொன்னதால, என் பொண்ணு வாழ்க்கைன்னு தெரிஞ்சுமே ரிஸ்க் எடுத்திருக்கேன். எனக்கு வேற வழி தெரியலைடா” என்றார் கவலையாக.
“நீங்க எது செய்தாலும் என் நல்லதுக்காதான்மா இருக்கும். அப்புறம் எப்படி மறுக்கிறது? கல்யாணத்துக்கு முன்னாடி வர்ற காதல் எல்லாம் நிரந்தரம் இல்லம்மா. கல்யாணத்துக்குப் பிறகான காதல்தான் சரின்னு தோணுது.”
“இந்த பாசிட்டிவ் மைண்ட் தான் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். உன் கல்யாண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும்டா.”
மனதின் வலியை மறைத்து தாய்க்காகப் புன்னகைத்தாள் நட்சத்திரா.
திருமணத்திற்கு இரண்டு நாள்களே இருக்கும் வேளையில், நட்சத்திராவுக்கு வந்த தகவல் (எஸ்எம்எஸ்) செய்தியில், “ஹேப்பி மேரீட் லைஃப். உன் சந்தோஷமே என் நிம்மதி” என்ற வாக்கியம் புதிய எண்ணிலிருந்து வந்திருக்க யாரென்று புரியாமல் திணறித்தான் போனாள்.
அதன்பின் அந்த எண்ணை கைபேசியில் பதிவு செய்து முகப்புப் படம் பார்க்க, கருப்பு நிற வக்கீல் மேலாடையை இடது கையில் வைத்து, கருப்பு நிற பேண்ட், வெள்ளை சட்டையில், வெள்ளை நிற டை அணிந்து, அவனின் நீல நிறக் காரில் வலது கையை ஊன்றி, ஒற்றைக் காலில் நின்றிருந்தான் அரிச்சந்திரன்.
குப்பென்று ஒரு பரவசம் எழுந்ததென்னவோ உண்மை. ‘இவங்க ஏன் திடீர்னு? என் நம்பர் கொடி கொடுத்திருக்கலாம். சே... இருக்காது. அவள் கொடுத்தா என்கிட்ட சொல்லியிருப்பாளே. அவள்கிட்ட இருந்து இவங்களா எடுத்திருக்கலாம்.’ நினைக்கையிலேயே உடல் வியர்க்க ஆரம்பித்ததோ! அதற்குப் பதில் தரலாமா? நினைக்கையிலேயே வேண்டாமென்று மூளை சொல்ல, அதற்குள் கைவிரல்கள் பட்டனைத் தட்டி, “நன்றி. நீங்க யார்?” எனக் கேட்டிருந்தது.
ஹ்ம்! அவள் விரல்களுக்கும் அவசரம்தானோ!
“அரிச்சந்திரன்! ப்ரதர் ஆஃப் மின்னல் கொடி” என்று சிரிக்கும் ஸ்மைலியுடன் பதில் வந்திருந்தது.
“ஓ... நான் உங்க தங்கை ஃப்ரண்ட்னு தெரிஞ்சிருச்சா?”
“ம்... அன்னைக்கு கேட்டதுக்கு ஏன் சொல்லல? நான் வக்கீல்னு சொன்னேனே. பாரு நானே கண்டுபிடிச்சிட்டேன். ஹவ் ஆர் யூ?” என்றான்.
“ம்... பைன். ஹவ் ஆர் யூ சந்துரு?” ‘சந்துரு’ என்று அனுப்பிய பின்னே தவறு புரிய, ரப்பர் வைத்து அழிக்க அதென்ன எழுத்தாணியால் எழுதிய எழுத்தா. சுத்தம்! தலையில் கைவைத்து நொந்தபடி அமர்ந்துவிட்டாள்.
அதைப் படித்தவன் என்ன மாதிரி உணர்ந்தானென்று அவனே அறியான். தெரிந்து செய்திருக்க மாட்டாளென்று நினைக்கும் போதே, ‘சந்துரு பெயர் நல்லாயிருக்கு.’ அன்று பார்க்கில் வைத்து சொன்னது நினைவில் வந்தது. ‘என்னை இப்படித்தான் கூப்பிடுவாளா?’ மனம் தன் இழப்பை எண்ணி வருந்தியது.
“ஃபைன்மா. சாரி” என்றனுப்பினான்.
“சாரி எதுக்கு?”
என்னவென்று சொல்வான். ஒட்டுமொத்தத் தவறும் தன்னுடையதல்லவா! “இல்லமா. அன்னைக்கு மேரேஜ்னு சொன்னப்ப விஷ் பண்ண மறந்துட்டேன். சோ, கேட்கணும் தோணிச்சி.”
“இதுக்கெல்லாமா சாரி. இப்ப உங்க டென்சனெல்லாம் குறைஞ்சிதா?”
“இல்ல கூடியிருக்கு.”
“ஏன்ங்க?”
“இன்னும் இரண்டு நாள்ல என்னை விரும்பிய பெண்ணுக்குக் கல்யாணமாம். எப்படி ஃப்ரீயா இருக்க முடியும்?”
“ஓ... உங்களை அந்தப் பொண்ணு லவ் பண்ணல சொன்னீங்க?” ஒருவித தவிப்புடன் டைப் செய்து அனுப்பினாள்.
“பண்ணியிருப்பாள் போலமா. ரொம்ப லேட்டாதான் தெரிஞ்சது. எதையும் மாத்த முடியாதளவு காலமும் கடந்திருச்சி.”
“நீங்க பேசிப் பார்த்திருக்கலாமே?” என்றாள் தவிப்புடன்.
“இப்ப உனக்கு ஒரு காதல் இருந்து, அது தோற்றுப்போய் வேற ஒருத்தரோட மேரேஜ் பிக்ஸான பிறகு, நீ காதலிச்ச பையன் வந்து, சாரி தப்பு நடந்திருச்சி. வா கல்யாணம் பண்ணிக்கலாம் கேட்டா உன் பதில் என்னவாயிருக்கும்?”
சில நிமிடங்கள் அவளிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போக, ஏதோ ஒரு நம்பிக்கையில் காத்திருந்தான் அரிச்சந்திரன்.
“உண்மைதான். காலம் கடந்த பிறகு காதலாவது ஒண்ணாவது.” தவிப்புதான் அவளுள்ளும். அவனின் வலியை உணர்வதாலோ!
‘இத்துடன் தகவல் அனுப்புவதை நிறுத்திவிடலாமா’ என நினைக்க, அடுத்து அவன் அனுப்பிய, “நீ இதைத்தான் சொல்வன்னு தெரியும். அவளும் உன்னைப் போலதான். அதான் அவள் லைஃப் சந்தோஷமா தொடங்கட்டும்னு விட்டுட்டேன்” என்றதற்கு தன்னை மீறி நட்சத்திராவின் விரல்கள் டைப் செய்ய ஆரம்பித்தது.
“காதல் தோல்வியில் சந்தோஷமா இருப்பாங்கன்னு எப்படி சொல்றீங்க?”
“என்னைக் கல்யாணம் பண்ணலையே. அப்பவே தெரிய வேண்டாமா. அருமையான பொண்ணு. அதனால சந்தோஷமா இருப்பா” என்று ஸ்மைலிகளுடன் அனுப்பினான்.
கேலியாய் சொன்னபோதும் அவன் வருத்தம் புரிய, “உங்களுக்கென்ன குறை? அவங்களுக்குக் கொடுத்து வைக்கலை. ஏன் உங்களை நீங்களே தாழ்த்திக்கிறீங்க?” உன் வாதம் பிடிக்கவில்லை என்பதாய் கோவ ஸ்மைலியை அனுப்பினாள்.
“தாழ்த்திக்கன்னு இல்லமா. நிஜமாவே அவளைக் கல்யாணம் பண்ணிக்கக் கொடுத்து வைக்கலை.” கண்ணீர் வடிக்கும் ஸ்மைலிகள் அவனிடமிருந்து.
அதை வாசித்தபொழுது, ‘அவனின் இந்தக்காதல் ஏன் தனக்குக் கிடைக்காமல் போனது’ என்ற எண்ணமே. காலம் கடந்ததுதான் என்றாலும் அவளுள் ஒரு வலி.
“ஓ... அவங்க முஸ்லீம்னு கொடி சொன்னா. அவங்க பெயர் என்ன?”
“நதீரா! பெயர் அழகாயிருக்குல்ல. நட்சத்திரம் மாதிரி அவளுமே அழகு” என்று தன் மனதையும அனுப்பினான். தான் செய்வது தவறென்று தெரிந்தபோதிலும் பதில் அனுப்பிக் கொண்டேயிருந்தான்.
‘நதீரா! கடவுளே! பெயர் கூடவா ஒரே மாதிரியிருக்கணும்’ என நினைத்து “நைஸ் நேம். சரிங்க அம்மா கூப்பிடுறாங்க பை” என்று முடித்து முகப்பில் உள்ள புகைப்படத்தைத் தன் கைபேசியில் சேமித்து அதையே பார்த்திருந்தாள்.
“நதி” என்ற சஞ்சித்தின் அழைப்பில் சட்டென்று பதற்றம் எழ, தவறு செய்த குற்றவுணர்ச்சி அவளுள். “உன்னோட போன் கொஞ்சம் தா. என்னோட போன்ல பேலன்ஸ் காலி. அப்புறம்தான் போடணும். மண்டபத்துக்கு டெகரேஷன் பண்ண நியாபகப்படுத்தணும்” என்றதும் அவன் முகத்தைக் காணாது கைபேசியைக் கொடுத்து உள்ளே சென்றாள்.
வீட்டில் பெரியவர்கள் திருமண வேலையாக வெளியே சென்றிருக்க, வரவேற்பறையில் அமர்ந்துதான் வட்சப் செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள். சஞ்சித் வந்து கால்மணி நேரமாகியும் அவள் எதையும் உணராது இருக்கவும், அவள் முகபாவனையைப் பார்த்திருந்தவன், ‘நம்மிடம் சொல்ல முடியாத பிரச்சனையா? ஏன் அதைப்படித்து வாடிப்போகிறாள்?’ என்ற யோசனையுடன், அவள் முடித்ததும் பொய் சொல்லி கைபேசியைக் கேட்டான்.