- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
2
தாயின் அழைப்பில் திரும்பி நடந்தாலும், கண்கள் அவளையேச் சுற்றியது. திரும்பவும் அவளைக் காட்டிய முருகருக்கு நன்றிகள் சொன்னான். யாருமறியாமல் அவளைக் காண, நிலவும் நானும் வேறல்ல என்பதுபோல் தோழிகளைக் கிண்டலடித்து வாய்விட்டுச் சிரிக்கையில், கைக் கேமரா இல்லாததால் தன் கண் கேமராவில் அவளைப் பதிந்து, மனப்பெட்டகத்தில் பத்திரப்படுத்த, மனம் மொத்தமாய் அவள் வசம் வீழ்ந்ததோ! அவனுக்கும் அந்த முருகருக்கும் மட்டுமே தெரியும்.
‘பெண்ணே! உன் பெயர் சந்திராவா! சந்தியாவா! நிலாவா! மதியா! இந்துவா! இல்லை வானில் மின்னும் நட்சத்திரமா! இவற்றில் ஒன்றுதான் உனக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டுமென்கிறது மனது.’
நினைவின் நடுவே, “அரி என்னடா இவ்வளவு ஸ்லோவா நடக்கிற? வா போகலாம்” என்று அவனை அங்கிருந்து நகர்த்திக் கூட்டிச்சென்றார்.
“நதி வா டைமாகுது. கோவிலுக்கு வந்தால் போதுமே கிளம்ப மனசு வராதே. உன் ஆள் வெளியில காத்திருக்கானாம் வா” என்றாள்.
“அடிச்சேன்னா பாரு ஆர்த்தி. எப்பப்பாரு அதைச் சொல்லாத சொல்லியிருக்கேன்ல. உன் ஆளு, என் ஆளுன்னு பேசுறது எனக்குப் பிடிக்காது. இதான் லாஸ்ட் இந்த மாதிரி பேசாத சொல்லிட்டேன்” என்று கொஞ்சம் கடுமையாகவே உரைத்தாள்.
“ஓகே ஓகே. நம்மளைக் கூட்டிப்போக உன் அத்தான் வெளியில வெய்ட் பண்றாங்க.”
“யாரு சஞ்சய் அத்தானா?” என வேகமாகக் கேட்க,
“ஏய்! என்ன நக்கலா? பிச்சி பிச்சி. உன் ஆளுன்னு சொன்னதுக்காக, ஏன் என் ஆளை இழுக்கிற?”
“அப்படி வா வழிக்கு. சஞ்சய் அத்தானை இழுத்ததும் பொறாமையில பொங்குற. ஒழுங்கா அப்பவே சஞ்சித் வந்திருக்கிறதைச் சொல்லலாம்ல.”
“இல்ல. உன்னைக் கிண்டல் செய்ய...” என அசடு வழிந்தாள்.
“ரொம்ப இழுக்காத. நீ கிண்டலடிக்கிற அளவுக்கெல்லாம் எங்களுக்குள்ள எதுவும் இல்லை. அவர் நல்ல கார்டியன் மட்டும்தான்.”
“அப்ப என் மச்சினனை உன்னோட காவல்காரன்னு சொல்றியா?”
“ஓ... கார்டியன்னா காவல்காரன்ல. அப்ப சரிதான்.” பேசியபடி வெளியே வருகையில் அந்த ஊதா நிற கார் அவர்களைத் தாண்டி செல்ல, அவள் பார்வை காரின் பக்கக் கண்ணாடியில் பட்டுத் திரும்பியது.
“என்ன பார்க்கிற?”
“அ..அது கார் கலர் நல்லாயிருந்தது. நானும் வேலைக்குப் போய் இப்படி ஒரு கார் வாங்கணும்” என வார்த்தை தடுமாறி சொல்லும்போது சஞ்சித் வந்திருந்தான்.
“இப்படி ஒரு காரா? இதே காரா?” ஆர்த்தி கேட்கையில் சஞ்சித் அவளின் முகம் பார்க்க,
“அ..அது...” தடுமாறி பின் சுதாரித்தவள், “ஏய்! ச்சீ லூசு இதே காரை யார் வாங்குவாங்க. ஏன் அவங்க விற்கப்போறேன்னு உன்கிட்ட சொன்னாங்களா?” என்று பேச்சை மாற்றினாள்.
“அவங்களா? அவங்கன்னா?”
“அதான் அந்த...” வேகமாக சொன்னவள் நிறுத்தி மேலே எப்படி அவனைச் சொல்வது என்று அறியாது, “எப்படி சொல்றது தெரியலை. ஹேண்ட்சம் பாய்னு வச்சிக்கோயேன்” என்று சிரித்தாள்.
“ஹேய்! அதெப்படி பாய்னு உனக்குத் தெரியும்? அது அவளா கூட இருக்கலாம்ல?”
“ப்ச்... சும்மா சும்மா என்னைக் கேள்வி கேட்காத ஆர்த்தி. என்ன அத்தான் கூட்டிட்டுப் போக வந்து அப்படியே நின்னுட்டிருந்தா என்ன அர்த்தம்?“ என்று அவனிடம் பாய,
“ஒண்ணுமில்ல நதிமா. பெண்கள் பேசுறப்ப இடையில் ஆண்கள் வரக்கூடாதுன்னு அர்த்தம்” என்றதும் இருவரும் அவனை முறைக்க, “சரி கார்ல ஏறுங்க” என்று அவ்விடத்தை விட்டு நகர, அவளின் பார்வைபோன இடம் பார்த்த சஞ்சித் யோசனையில் ஆழ்ந்தான்.
அவளுக்குமே தான் செய்வது தவறென்று தெரிந்தும் அத்தவறை தவறாமல் செய்தாள்.
“அத்தை எப்ப எழுந்தீங்க? இருங்க டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்றார் சகுந்தலா.
“இருமா. நானே போட்டுக் குடிச்சிட்டேன். என் பேத்திக்கும் கொடுத்தாச்சி. இப்பதான் போட்டதால சூடுபண்ணத் தேவையில்லை. உனக்கும் பேரனுக்கும் ஊத்திக்க. நீ ஏன்டா பேயறைஞ்ச மாதிரியிருக்க?” அவனையும் விடாது கேட்டார்.
“என்னது பேயா? ஏன் க்ரேன்மா கோவிலுக்குப் போயிட்டு வந்திருக்கோம். தேவதை கூட வேண்டாம்... சாமி அடிச்சிருச்சா அப்படின்னாவது கேட்கலாம்ல?”
“கேட்கலாமே!” என்றவர் பார்வை பேரனின் மேல் ஆராய்ச்சியாய் படிந்து “அப்ப நிஜமாவே ஏதோ அறைஞ்சிருக்குன்னு ஒத்துக்கிற?”
பாட்டியின் கேள்வியில் உஷாரானவன், “க்ரேன்மா மறந்தே போயிட்டேன். மேம் இன்னைக்கு சீக்கிரமே வரச்சொன்னாங்க. உங்க கேள்விகளை கௌண்ட் பண்ணி வச்சிக்கோங்க. நான் வந்து நிதானமா பதில் சொல்றேன்” என்று தன் அறைக்கு வேகமெடுத்தான்.
“டேய்... அரி! டேய்... ஹ்ம் போயிட்டானா... இருந்தாலும் ஏதோ இருக்கே.” பாட்டி பாக்கியவதியின் மனம் கணக்குப் போட்டது.
காலை எட்டு மணிக்கெல்லாம் காலை உணவை முடித்து, தனது பைக்கை எடுத்து நேரே தன் க்ளையண்ட் பெருமாளைப் பார்த்து, சீனியர் சொன்னதுபோல் தன் வார்த்தையாடலால் பேசிக் குழப்பி, அவரையும் தன்னுடன் அழைத்து வருகையில், சிக்னலில் தன் இருசக்கர வாகனம் நிற்க திரும்பிப் பார்த்தவனுக்கு இப்போதைக்கு இந்த டிராபிக் சரியாகும் என்று தோன்றவில்லை.
‘நல்லவேளை வெயில் அதிகமில்லை. இல்லையெனில் காலையில் அனைவருக்கும் வியர்வைக் குளியல் நிச்சயம்.’
“ஏய் ஆர்த்தி இதுக்குத்தான் சீக்கிரம் கிளம்பலாம் சொன்னேன். இப்பப்பாரு சரியான டிராபிக்ல வந்து மாட்டிக்கிட்டோம்.”
“உனக்கென்னடி பிரச்சனை? ஸ்கூட்டியை என்கிட்ட தள்ளிட்டல்ல. அப்பறம் ஏன் ஆவலாதி சொல்லிட்டிருக்க?”
“டைமாகுது ஆர்த்தி.”
“ஆமா. நாம போற வேலைக்கு டைம் ஆகும்தான்” என்றாள் நூலகம் செல்வதை நினைத்து.
“வாவ்! ஆர்த்தி அந்தப் பையன் வச்சிருக்கிற கீ செயின் நல்லாயிருக்கு. ரொம்ப நாளா தேடிட்டிருந்த மாடல் வச்சிருக்கான். ஒரு நிமிஷம் வந்திடுறேன்” என்று வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
“ஏய்! சிக்னல் போட்டுரப் போறாங்க” என்ற வார்த்தை அவள் காதுகளில் விழவில்லை. விழுந்தாலும் இப்பொழுது கேட்கும் பொறுமையில்லை அவளுக்கு.
அரிச்சந்திரனின் வண்டியைத் தாண்டிச் செல்கையில்தான் அவன் அவளைக் கண்டான். அப்படியே சில நொடிகள் நிற்க, பின்னால் அமர்ந்திருந்தவர் அவனிடம் பேசிய வார்த்தைகள் யாவும் காற்றோடு போக, அவன் மனம் மட்டும் அவள் பின்னே சென்றது.
‘முருகா! எப்படி இப்படியெல்லாம். காலையில் உன் சன்னிதானத்துல! இப்ப சிக்னல்லயா! என்னே உனது கருணை! ஆனா ஏன் இவள் முகம் மட்டும்... பொதுவா பெண்கள் வெயிலுக்காக கை முகம்லாம் மறைத்து கண் மட்டும் தெரியவதுபோல் சால் சுத்தியிருப்பாங்க. ஏன், இவள் கூட இருக்கும் பெண் அப்படித்தான் செய்திருக்கிறாள். இவள் என்னடாவென்றால், முகம் மட்டும் தெரிய இஸ்லாமியப் பெண்கள்போல் போட்டிருக்கிறாள். காலையிலும் அப்படித்தான் இருந்தாள்.”
குழம்பிய மனதுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, கீ செயின் வாங்கிக் கொண்டிருந்தவள் ஏதோ ஒரு உந்ததலில் திரும்ப, அதற்குள் அவன் திரும்பிக்கொண்டான்.
“நதி... நதீ... ரா... டிராபிக் கிளியராகிருச்சி. வா சீக்கிரம்” என்ற ஆர்த்தியின் குரல் அவள் காதில் விழாமல் போக, “நதீ...ரா வண்டியெல்லாம் நகருது பாரு” என்றதும் சட்டெனத் திரும்பி பையனிடம் பணம் கொடுத்துவிட்டு, வேகமாக வந்து வண்டியில் ஏறி அமர ஸ்கூட்டி நகர்ந்தது.
‘நதீராவா! ஐயோ! இவள் இஸ்லாமியப் பெண்ணா? முருகா ஏன் இப்படிப் பண்ணின? உன் சன்னிதானத்துல வச்சிப் பார்த்ததாலதான தைரியமா சம்மதம் சொன்னேன். இப்படி என் காலை வாரிட்டியே?’ என்று மனதுக்குள் அலறினான்.
‘அடப்பாவி! நீ எப்ப சம்மதம் கேட்ட? போ நான் பழனிக்கே போறேன்’ என்று கோவித்துத் திரும்பினாரோ முருகபெருமான்!
“தம்பி பைக்கை எடுங்க. பின்னாடி கத்துறாங்க பாருங்க” என்றதும் வேகமாக வாகனத்தை நகர்த்தியவன் நினைவுகள் யாவும் நதீராவே!
‘இத்தனை வருஷமா இதே ஏரியாவுலதான் போயிட்டு வந்துட்டு இருக்கேன். எப்பவாவது கண்ல பட்டாளா இந்தப்பொண்ணு. இன்னைக்குதான் கோவில்ல முதல்முறையா பார்த்தேன். அடுத்து இங்க. முருகா இதெல்லாம் டுபாக்கூர் ஆட்டம். இவள்தான் உனக்குன்னு காண்பிச்சிட்டு இவள் இல்லைன்னும் சொல்லிட்டியே!’ என்று ஒரே புலம்பல் அவனிடம்.
Last edited: