• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
28

இதோ நீதிமன்றத்திலும் வாயாடும் வெண்மதியைப் பார்த்திருக்க. சித்தார்த்தும் அவளையே கவனித்திருந்தான். அவளின் அலட்டல் இல்லாத வாயாடித்தனம் பிடித்திருந்தது. முகம் கடுத்துப் பேசாத கோவம் பிடித்திருந்தது. பிடிவாதமென்றால் கிலோ என்ன விலையென்று கேட்பவளின், வெட்டிப் பிடிவாதம் இன்னுமே பிடித்திருந்தது.

“மின்னல் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்று பீடிகையுடன் சித்தார்த் ஆரம்பிக்க,

“சொல்லுங்கண்ணா. கேஸோட சம்பந்தப்பட்டதா?” என கேட்டாள் மின்னல்.

“இல்ல எங்க சம்பந்தப்பட்டது” என்றதும் வெண்மதி அவனை முறைக்க, அதில் புன்னகை வந்து, “மண்டபத்தில் இருந்து ரெஜிஸ்டர் ஆபீஸ் போற வழியில் அமைதியா வரலைன்னா, உன்னைச் சேர்ந்த எல்லாரையும் ஆள்வச்சி தூக்கிருவேன்னு மிரட்டினேன். அதுக்கு இந்த மேடம், போ... போய்த்தூக்கி எல்லாரையும் கல்யாணம் பண்ணிக்கோ. என்னை மட்டும் விட்டுருன்னு ஒரே கத்தல். எனக்குன்னா பயங்கரச் சிரிப்பு மனசுக்குள்ளதான். அப்புறம் ஒண்ணு சொன்னாளே! ம்... ஹான்! காலையில் இருந்து தண்ணி கூடக் குடிக்காம வெறும் வயித்துல இருக்கேன்டா. நான் சாபம் விட்டா பலிக்கும்னு...” அதை நினைத்து இப்பொழுதும் சிரித்தான்.

“ஹா...ஹா செம பஞ்ச். எல்லாரையும் எப்படிப் பண்ண முடியும் வெண்மதி?” என்று மின்னல் அவளிடம் கேட்க,

“இவன் செய்வான். ஏற்கனவே இரண்டு. இன்னும் எத்தனையோ?” என்றதும் சித்தார்த் சிரிப்பு அடங்கி, ‘என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது?’ என்று அடிபட்டப் பார்வை பார்க்க, ‘ஆம்’ என்பதாய் பார்த்திருந்தாள் வெண்மதி.

“மருமகளே!” செல்லம்மா ஏதோ சொல்ல வர அதற்குள் அவர்களை உள்ளே அழைத்தார்கள்.

உள்ளே செல்ல நடந்து கொண்டிருக்கையில், “வெண்மதி உள்ள போறதுக்கு முன்னாடி ஒரு டூ மினிட்ஸ் பேசலாமா?” என்றான் சித்தார்த்.

“தேவையில்லை எதுவாயிருந்தாலும் உள்ள பேசிக்கோங்க.”

“டூ மினிட்ஸ் வேண்டாம். அட்லீஸ்ட் ஒன் மினிட்?”

“ஒன் மினிட்ல என்ன பேசிட முடியும்? போயி வேலையைப் பாருங்க” என்று நகர, அவள் கைபிடித்து நிறுத்தி “ஒன் மினிட்ல ஓராயிரம் இல்லன்னாலும் ஓரளவு பேசலாம். ஓராயிரம் வார்த்தைகள் பேசாததை ஒருசில வார்த்தை பேசும்.”

அவளின் மௌனத்தை சம்மதமாக எடுத்து, “என் கண்ணை நேருக்கு நேர் பார் வெண்மதி” என்றதும் நிமிர்ந்து அவன் கண்பார்க்க, பிடித்திருந்த அவளின் கையைத் தூக்க, சட்டென்று உதறியவளை உணர்ந்து திடமாகப் பிடித்து, “ஜஸ்ட் ஒன் மினிட் வெண்மதி” எனவும் அவள் அமைதி காக்க, அவள் கண்பார்த்து, “ஐ லவ் யூ” என்றுரைத்து கையில் முத்தமொன்றை மென்மையாக வைத்தான் சித்தார்த்.

வியப்பா! அதிர்வா! ஆச்சர்யமா! ஏதோ ஒன்று நேருக்கு நேர் இருந்த கண்களிரண்டும் இன்னும் விரிய எதுவும் பேச இயலாது வாயடைத்துச் சென்றாள். மூளைக்குள் ‘என்ன சொன்னான்? ஐ லவ் யூவா? எப்படி என்னைப் பார்த்து?’

‘நீதானே அவன் மனைவி.’ மனம் உரைத்தாலும் ‘எப்படி அப்படிச் சொன்னான்? எப்படிச் சொல்லலாம்?’ குழப்பங்கள் அவளுள்.

அப்படியே உள்ளே வர நீதிபதி கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தாலும், அந்த ‘ஐ லவ் யூ’ எழுத்துக்களாக மாறி அவளைச் சுற்றி வந்தது.

“வெண்மதி, வெண்மதி. ஆர் யூ ஆல்ரைட்” என்ற குரலில் குழப்பத்திலிருந்து வெளியில் வந்தவள், “எ...எஸ் மேம். ஐம் ஆல்ரைட்” என தடுமாற, சித்தார்த் முகத்தில் புன்னகை மட்டுமே!

“சொல்லுங்க வெண்மதி? டைவர்ஸ் நீங்கதான் கேட்டிருக்கீங்க? உங்களை பாலியல் ரீதியா எதாவது டார்ச்சர் பண்றாரா?” என்று நீதிபதி கேட்டதற்கு, புரியாமல் அவள் விழித்ததும், “இல்ல கண்ட நேரத்துல கட்டிலுக்குக் கூப்பிடுறது. ஓபனா சொல்லணும்னா செக்ஸ் டார்ச்சர் பண்றாரா?” என்றார்.

“என்னங்க சின்னப் பொண்ணுகிட்ட இப்படிப் பேசுறீங்க?” என்று செல்லம்மா கோவப்பட்டார்.

“நீங்க எதுவும் பேசக்கூடாது. நீ சொல்லுமா? அப்படி எதுவும் டார்ச்சர் பண்றாரா?”

“அ..அப்படிலாம் எதுவும் இல்ல மேம். எ...எங்களுக்கு மேரேஜ் மட்டும்தான் ஆகியிருக்கு” என்றாள் சற்று அவமான உணர்வுடன்.

“ஓ... திருட்டு சாரி கட்டாயக் கல்யாணம்ல. சோ, இவர்கிட்டயிருந்து விலகணும். அப்படித்தான?”

“எஸ் மேம்.”

“நீங்க சொல்லுங்க சித்தார்த்? நீங்களும் சம்மதிச்சா மியூச்சுவல் போட்டுரலாம்.”

“எனக்கு என் ஒய்ஃப் வேணும் மேம். கல்யாணம் வேணும்னா தப்பா நடந்திருக்கலாம். வாழ்க்கை தப்பாக விடமாட்டேன். வாழ்நாளுக்கும் வெண்மதிதான் என் ஒய்ஃப்” என்று முதல் நாள் சொன்னதையே திடமாக சொன்னான்.

“பொண்ணுக்கும் விருப்பம் இருக்கணுமே?”

“அது அவங்க இஷ்டம் மேம். பட், எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தா என்னை நிரூபிக்கத் தயார். அதுக்கு முன்னாடி வெண்மதிகிட்ட ஒன் மினிட் பேசிக்கலாமா?” என்றான் மென்மையான குரலில்.

‘ஒன் மினிட்டா? அச்சோ வேண்டாம்’ என்ற வார்த்தை அவளுள் அடங்க, அவளின் வேண்டாமென்ற தலையாட்டலை மற்றவர்கள், ‘என்னாச்சி இந்தப் பொண்ணுக்கு?’ என்பதாய் பார்த்தார்கள்.

“தேங்க்ஸ் மேம்” என்று எழுந்து அவளருகில் செல்ல, அனைவரின் பார்வையும் தீர்க்கமாய் அவர்கள் மேல் படிந்தது.

“ஐ லவ் யூ வெண்மதி. இதுவரை எந்தப் பொண்ணுகிட்டேயும் சொன்னதில்லை. ஃப்ரண்ட்ஸ் தூண்டுதல்ல நடந்த தப்புதான் நட்சத்திரா விஷயம். இப்ப அவளுக்குமே மேரேஜாகிருச்சி. அவளை நிஜத்துல லவ் பண்ணாததால எந்த பாதிப்பும் இல்லை. பட், ரெஜிஸ்டர்ல எப்ப சைன் பண்ணினேனோ அப்போதிருந்து என் மனைவியை மட்டும் நேசிக்கணும் அவளை நல்லா வச்சிக்கணும்னு ஆசை. அதற்கொரு சந்தர்ப்பம் கிடைக்குமா?” என்றான் மென்மையான குரலில்.

அத்தனை பேர் முன் அவன் சொன்ன ஐ லவ் யூவும், தொடர்ந்த பேச்சும் ஏற்கனவே இருந்த குழப்பத்தை அங்கு இருந்தவர்களிடம் அதிகமாக்கி இருந்தது.

“சித்தார்த் சொல்றதும் சரியாதான் இருக்கு. நீங்க ஏன் ஒரு சான்ஸ் கொடுக்கக்கூடாது வெண்மதி?” என்று நீதிபதி கேட்டார்.

“அ...அது...”

அவளின் தடுமாற்றம் வழக்கை விசாரிப்பவருக்குப் போதுமானதாக இருந்ததோ!

“இன்னும் ஒன் மன்த் இவங்க இரண்டு பேர் மட்டும் தனியா இருக்கணும். ஐ மீன் தனிக்குடித்தனம் போகணும்னு சொல்றேன். உங்க வக்கீல்களான அரிச்சந்திரன், மின்னல் கொடி தவிர மத்தவங்க யாரும் அவங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. அவங்களுமே டெய்லி போகக்கூடாது. உங்க தூக்கமும் ஒரே அறையில்தான் இருக்கணும். எங்களை ஏமாத்தணும்னு நினைச்சா அது உங்களை நீங்களே ஏமாத்திக்கிறதுக்குச் சமம். நெக்ஸ்ட் மன்த் இதே தேதியில் நீங்க என்னை வந்து பார்க்கணும். அப்பவும் வெண்மதி உறுதியா இருந்தா, வருஷமெல்லாம் தேவையில்லை. அன்னைக்கே கேஸை முடிச்சிரலாம்” என்றார்.

“மேம்” என ஆரம்பித்தவளைத் தடுத்து, “இது கோர்ட் ஆர்டர். நீங்க ஏத்துக்கிட்டுதான் ஆகணும். மிஸ்டர் அரிச்சந்திரன் கோர்ட் ஆர்டரை வாங்கிட்டுப் போங்க” என்றதும் மற்றவர்கள் வெளியே வந்தார்கள்.

அனைவரும் காரில் ஏற, வெண்மதியிடம் வந்த மின்னல், “ஒன் மினிட் தனியா பேசலாமா?” எனக் கேட்க,

“நீ... நீங்களுமா அண்ணி?” என்று அலறினாள்.

“அண்ணியா?”

“அக்காவோட நாத்தனார். என்னோட பெரியவங்க. அப்ப அண்ணிதான?”

“அது இப்ப முக்கியம் இல்லை. உன்கிட்ட பேசணும் சொன்னதும் நீங்களுமான்னு ஏன் அலறின?”

“அ...அது அந்த சித்தார்த்தும் ஒன் மினிட்னு சொல்லி ஐ லவ் யூ சொன்னான். அதுவும் இரண்டு முறை” என்றாள் சோகமாய்.

“ஹா...ஹா சரி விடுமா. எனக்கு டூ மினிட்ஸ் எடுத்துக்கறேன். இப்படி உட்கார்” என்று இருவரும் அங்கிருந்த பெஞ்சில் அமர, “உனக்கு சித்தார்த் அண்ணாவைப் பிடிக்காமல் போனதுக்கு நதியோட சேர்த்து, சொத்தும் ஒரு காரணம்ல?” என்று நேரடியாகவே கேட்டாள்.

“அதான் உங்களுக்கேத் தெரியுதே.”

“சொத்து பிரச்சனை உங்க அம்மாவுக்கும், அவங்க அப்பாவுக்குமானது. அதில் அண்ணா எங்கயிருந்து வந்தாங்க?”

“கேஸ் நடத்தறது சித்தார்த் தான் அண்ணி.”

“இப்ப அவர் கேஸை நடத்தக் காரணம் அப்பா, அம்மாவை விட்டுக் கொடுக்க முடியாத மனநிலைனால. அப்பா, அம்மான்னு வரும்போது சரி தப்புன்னு பார்க்காத பிள்ளைங்க ரொம்ப ரேர் தெரியுமா? நீ செஞ்சதை நீயே அனுபவின்னு விலக எவ்வளவு நேரமாகும்? நதியைக் காரணம் சொல்லாத. அவள் இப்ப என் அண்ணி. நீயே சொல்லியிருக்க என் அக்காவை கௌரவத்துக்காகத் தேடுறான்னு. ஏன் அவருமே ஆமாம்னு ஒத்துக்கிட்டிருக்கார். இதோ இப்ப அந்த கௌரவம் உன் கையில இருக்கு.”

“சரியோ தப்போ நீ அந்த வீட்டு மருமகளாகிட்ட. கௌரவம் காப்பதும் அழிப்பதும் உன்னோட முடிவு. அரி அண்ணா பார்த்து விசாரிச்ச வரை சித்தார்த் அண்ணாவுக்கு எந்தவித கெட்ட பழக்கமும் கிடையாது. அதுக்குக் காரணம் நதின்னும், கௌரவம்னும் சொல்றார். அது அப்படிக் கிடையாது வெண்மதி. திருந்த மனமில்லாத ஒருத்தனை எப்பேர்ப்பட்டவங்களாலயும் மாத்த முடியாது. தான் மனசு வைத்தால் மட்டுமே திருந்துவது சாத்தியம். சித்தார்த் அண்ணா செல்ஃப் கண்ட்ரோல் மேன். சில தவறுகளால் நல்லது நடந்தா, அந்தத் தவறுகூட நல்லதுதான்.” அண்ணன் அரிச்சந்திரனின் அடுத்த வாரிசு என்பதை நிரூபித்தாள் மின்னல் கொடி.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
“அதைவிட செல்லம்மா சித்தியை நீ எப்படி கூப்பிடுறன்னு கொஞ்சம் ஞாபகப்படுத்திச் சொல்லு?”

“நான் அவங்களை முறை வைத்துக் பேசுறதில்லையே?” குழப்பமாய் மின்னலை ஏறிட்டாள்.

“நல்லா யோசிச்சிப் பாரு. மூச்சுக்கு முன்னூறு முறை அவங்களை மாமியாரேன்னு கூப்பிடுற. அது என்ன முறைமா?” என்றாள் கேலியாக.

‘ஐயோ!’ என்றிருந்தது வெண்மதிக்கு. ‘உன் வாய்க்கொழுப்பு இப்படியா சிக்க வைக்கும்.’ தன்னையே நொந்து பாவமாய் அவளைக்காண,

அவளறியா மென்னகையுடன், “நீ அத்தைன்னு கூப்பிட்டா சொந்த முறை. மாமியாருக்கு எப்படிப் பார்த்தாலும் கணவனின் தாய் என்ற ஒரே அர்த்தம்தான். உன் ஆழ்மனசு அவங்களை உறவா நினைக்குது. அதே டைம், நிஜத்தை ஏத்துக்க முடியாமலும் மனசு அல்லாடுது. அதோட நீ சம்மதிக்காம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணமுடியாது. நிதானத்துல நான் இல்லன்னு என்கிட்ட சொல்லாத. உனக்கு தெரிஞ்சி சம்மதிச்சி; நடந்ததுதான் கல்யாணம். மிரட்டுனாங்கன்னு சொன்னா உன்னைச் சேர்ந்த யாரும் நம்பமாட்டாங்க. ஏன்னா சின்ன வயசுலயே சித்தார்த் மண்டையை உடைச்சவள்தான நீ” என்று அடித்துப் பேசினாள் மின்னல் கொடி.

“உ...உங்களுக்கு எப்படி?”

“எல்லாருக்குமே தெரியும். இன்க்ளுடிங் சித்தார்த் அண்ணா. அதோட கையெழுத்துப் போடும் போதோ, மாலை மாற்றும் போதோ, தாலி கட்டும் போதோ யாரும் உன்னைப் பிடிச்சிருக்கலை. தள்ளி விட்டுட்டு ஓடியிருந்தா யாராலயும் எதுவும் சொல்ல முடியாது. ஏன்னா அது பப்ளிக் ப்ளேஸ். கத்தினாலே எல்லாரும் ஹெல்ப்கு வந்திருப்பாங்க. ஏன் செய்யல?”

“மற்ற எல்லாத்தையும் விடு. இன்னும் உங்க கேஸ் கோர்ட்கு வந்தா, மேம் உள்ள கேட்ட மாதிரி ஆயிரம் கேள்வி உன்னை நோக்கிப் படையெடுக்கும். சமாளிச்சிருவியா?” வக்கீலின் வாதம் அவள் நாவில்.

“அண்ணி நான்... அப்ப இதெல்லாம் யோசிக்கலை. நீங்க என்னவோ நான் விருப்பப்பட்டு முடிச்ச மாதிரி பேசுறீங்க?”

“கோர்ட்னு வந்துட்டா இதே கேள்விகளை உன்கிட்ட கேட்பேன். இன்னும் பதில் சொல்ல முடியா கேள்விகள் நிறைய வரும்” என்றாள்.

“அண்ணீ!”

“உன் குழப்பம் எனக்குப் புரியுதுமா. ஒன் மன்த் டைம் இருக்கு. ஒரே வீட்டுல இருக்கப்போறீங்க. விலகாம பழகிப்பார். பிடிச்சதுன்னா எதுக்காவும் மறைக்கக்கூடாது. பிடிக்கலன்னா அதற்கான சரியான ரீசன் சொன்னா, என் முதல் சப்போர்ட் உனக்குதான். போகலாமா?” என எழுந்து வெண்மதியின் முதுகில் மெல்ல தட்டிக் கொடுத்தாள்.

“ம்...” என்று எழுந்தாள்.

மின்னல் முன்னே நடக்கப் பின்னால் குழப்பத்துடன் வந்தவளின் காதோரம் கேட்டது, ‘ஐ லவ் யூ வெண்மதி!’ சட்டென்று ஒரு விரைப்பு அவளுள் எழ, சுற்றிலும் பார்த்தவள் கண்களில் காரின் அருகில் தன் தாயிடம் நின்று பேசிக் கொண்டிருக்கும் சித்தார்த் பட்டான்.

‘பிரமையா! நிஜம் மாதிரி இருந்ததே. வெண்மதி ஏதோ ஆச்சுதுடி உனக்கு. நீ சரி கிடையாது. இதுல அவன் கூடவே இருந்தா, மஞ்சள் கயிறு மேஜிக் எதுவும் பண்ணிருமோ!’ மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டாள்.

மறுநாள் குலதெய்வம் கோவிலுக்கு ரவிச்சந்திரன், நந்தகுமார் அவரின் தங்கை குடும்பம், சித்தார்த் குடும்பமெனச் சென்று பொங்கல் வைத்து, மறுநாள் திரும்பி வந்த அன்றே சித்தார்த், வெண்மதியை தனிக்குடித்தனம் வைத்து அவரவர் வீடு செல்ல, அரிச்சந்திரன் குடும்பம் வீடு வர இரவு ஒருமணியானது.

நீண்ட தூரப் பயணம் என்பதால் ஓட்டுநரை அழைத்துச் சென்றிருந்தார்கள். ஆதலால் பயணக்களைப்பு மட்டுமே அவர்களிடம்.

வெயில் நேரமென்பதால் நேரம் பாராது குளியல் போட்டு வந்தாள் நட்சத்திரா. அறைக்குள் வந்ததில் இருந்து கண்களில் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்த கணவனைக் கண்டவள் என்ன என்பதாய் கையசைத்துக் கேட்க,

‘நீதான் வேண்டும்’ என்று அவளிடம் கைநீட்டி சைகையில் சொல்ல, ‘ம்கூம்’ என்றவளின் மறுப்பான தலையாட்டல் பாதியிலேயே நின்றது அவனின் நெருக்கத்தில்.

“ஓய்! நிமிர்ந்து என் கண்ணைப்பாரு. அட பாரு சொல்றேன்ல?” அவளின் முகம் நிமிர்த்தி தன் கண் பார்க்கவைத்து, “ஐ லவ் யூ சந்துரு சொல்லு?” என்றான்.

“ஐ லவ் யூவா!” தன் அதிர்வை பார்வையில் காட்டினாள்.

“என்ன அதிர்ச்சியாகுற? நீ என்னை லவ் பண்றது நிஜம்னு எனக்குத் தெரியும். அப்ச்ப சொல்லு?”

‘முடியாது’ என்று தலையசைக்க,

“ஏன்?”

“ஜெ...ஜென்ட்ஸ் பர்ஸ்ட்” என்றவள் குரலில் தடுமாற்றம்.

“இது டுபாக்கூர் ஆட்டம். சரி உனக்குத் தோணும்போது சொல்லு. அதுக்கும் முன்ன அந்த ஏழாவது தலைமுறை பற்றி சின்னதா டிஸ்கஸ் பண்ணலாமா?” என்றான் குறும்பாக.

“ம்...” என தலையசைத்து, “என்னது?” என்று அலற,

“அதான்மா! அந்த ஏழாவது தலைமுறை” என்றதும், “ச்சோ போங்க!” என்று அவன் வாய்மூடி வெட்கத்தில் அவன் மார்பில் அடைக்கலமாக, சட்டென்று நிலைதடுமாறி விழுந்தான்.

“ஹேய்” என கூச்சலிட்டபடி கணவனருகில் சென்று, “சாரிங்க. நா...நான் இப்படியாகும்னு எதிர்பார்க்கல” என்றாள் பதறியபடி.

“எப்படியாகும்னு எதிர்பார்த்த? ஆ... அம்மா... தூக்கிவிடமாட்டியா நீ?”

“கையைப் பிடிச்சி எழுந்துக்கோங்க” என நீட்டிய கையைப் பிடித்தவன் பிடி நழுவி திரும்பவும் விழ, “அச்சோ! பார்த்துங்க” என்று தானே அவன் கைகளுக்கு இடையில் கைகொடுத்து தூக்க முயற்சித்தாள். மனைவியின் எண்ணம் உணர்ந்து எழ முயற்சித்தாலும் அவளின் நெருக்கம் கொடுத்த தடுமாற்றம் எழவிடாமல் செய்ய, “என்னாச்சி?” என்ற மெல்லிய குரலில் அவன் எழுந்து நிற்க, அவள் தடுமாறி கணவன் மார்பில் தஞ்சமடைந்தாள்.

“ஸ்ஸ்...” என்ற சத்தத்தில் அவன் வலி உணர்ந்தாளோ! கணவனின் வலியை நெஞ்சில் வாங்கி, “ரொம்ப வலிக்குதாங்க? ஒரு நிமிஷம் உட்காருங்க” என்று கட்டிலில் அமரவைத்து வெளியே சென்று தைலம் வாங்கி வந்தவள், அடிபட்ட இடத்தைக் கேட்டு சட்டையைத் தூக்க, “வெய்ட் நதி” என சட்டையைக் கழற்றி குப்புறப்படுத்து இடுப்புப் பகுதியைக் காண்பித்தான்.

மிக மென்மையாக தைலம் தேய்க்க, அவள் எதிர்பாராத நேரம் சட்டென்று திரும்பிப் படுத்தவன் மேல் தடுமாறி விழுந்தாள்.

தன்மேல் விழுந்த சடையை அவளின் முதுகிற்குத் தள்ளி, “உன் முன்னால சட்டையில்லாம இருக்கேனே. ஒண்ணும் தோணலையா நதி?” என்றவன் குரல் கிசுகிசுப்பாக வந்தது.

“என்ன தோணனும்?” என்றாள் எழ முயற்சிக்காமலே.

‘சுத்தம்!’ மனதினுள் நொந்து “உங்கப்பா உன்னை பிராக்டிகலானவள்னு சொன்னாங்க. அதுக்காக இப்படியா? ரொமான்ஸ்னா கிலோ என்ன விலைன்னு கேட்ப போல?”

“புருஷன் சட்டையை கழட்டுறதைப் பார்த்து வெட்கப்பட்டு நாணிக்கோணினா அது சினிமாடிக். இதுல அட்ராக்டாக எதுவும் இல்லங்க. கண்பார்த்து வந்தா அது காதல்! உடல் பார்த்து வந்தா எதிர்பாலினர் மேலுள்ள சலனம். மோகம்னும் சொல்லலாம். ஆண்கள் பெண்களோட அங்கங்களை வச்சி வேணும்னா சலனப்பட்டு, அதைக் காதலுக்குக் கொண்டு போகலாம். பெண்கள் முகம் மட்டும்தான் பார்ப்பாங்க. பையனோட குணம் ஏதோ ஒரு வகையில் பிடிச்சிருந்தா போதும். அதுதான் சலனம்! அதுதான் காதல்!”

“அப்புறம்?”

“கதையா சொல்றேன்” என்று முறைக்க,

“வேறென்ன செய்றியாம்?”

“உண்மை சொல்றேன். அப்பா சித்தப்பான்னு சின்ன வயசிலிருந்து பார்க்கிறேன். சட்டை இல்லாம துண்டைத் தோள்ல போட்டுட்டு உட்கார்ந்திருப்பாங்க. எங்க ஊர்ல வயசானவங்க சட்டையே போடுறதில்லை. ஸ்கூல் ப்ளே க்ரௌண்ட்ல பசங்க ஸ்லீவ் பனியனும் ஷார்ட்ஸ்மா நிற்பாங்க.”

அவள் மேலே சொல்லுமுன், “சரி புரியுது. ஆனா, நதி அவங்களும் நானும் ஒண்ணா?” தன்மேல் இருப்பவளின் முகம் வருடி ஹஸ்கியாகக் கேட்டான்.

“இ...இல்லதான்” என்றவளுக்குள் தடுமாற்றமே.

“புருஷன் பொண்டாட்டிக்குள்ள சலனம் இருக்கலாம். என்மேலயும் கொஞ்சம் அட்ராக்டாகேன்” என்றான் மெல்லிய குரலில்.

“எ...எப்படி?”

“இவ்வளவு நேரமா மாமன் மேல படுத்திருந்தியே அப்படி. அப்படியே பச்சக்குன்னு நாலு முத்தம் கொடுத்தா, அப்படியோ அப்படி.” கண்களில் மையலுடன் அவளைப் பார்க்க,

“உங்களை...” என்று அவனைவிட்டு எழ முயற்சிக்க, ‘எழவா விழ வச்சிருக்கேன்’ என்று பார்வையால் வினவினான்.

“உங்க பார்வை, செயல் எதுவும் சரியில்லை. நான் தூங்கப்போறேன்.”

“தூங்கலாமே” என்று அவளை அருகில் படுக்க வைத்து அவள்புறம் சரிந்து முகம் வருட, “என்ன பண்றீங்க?” பெண்ணவளின் குரல் மிகவும் பலகீனமாக வந்தது.

“என்மேல அட்ராக்டாக வைக்கிறேன்” என்றவன் அவளுள் சிறிது சிறிதாக அடங்கினானோ! காமன் தன் வேலையை செவ்வனே செய்ய, சின்னச்சின்னச் சீண்டல்கள்! மெல்லிய கொலுசொலி! ஏகாந்த வேளை! ஒளி சிந்தும் சந்திரனும், நட்சத்திரப் பெண்ணவளும் தங்கள் வாழ்க்கையை இனிமையாக ஆரம்பித்தார்கள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top