- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
3
“இன்னா சாரு ரவுசு வுட்டுக்கினுருக்க? பேஜாரு காமிக்காம அந்தாண்ட போ” என்றாள்.
“என்னமா இப்படிப் பேசுற? பத்து வருஷமா இந்த வழியாதான் தெருவுக்குள்ள போறோம். இதை அடைச்சிட்டா அந்தப்பக்கம் உள்ள குடித்தனங்கள் நிலைமை என்ன ஆகிறது?”
“டக்கரா ட்ருத்து(நிஜம்) பேசுற சாரு. உன் வூட்டுக்கு பேக்காண்ட ஒரு வூடு இர்க்கே அங்கன இன்னா சீன காமிக்கிறானுங்களோ அத்தையே நீயும் காமி.”
“நீ அந்த நித்யன் வச்ச ஆளா? இந்த சலசலப்புக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்” என்றார்.
“ஆகாங்! இன்னாமே மயிலு. இவன் நாம எத்தையோ சொன்னா, இவன் இன்னாத்தையோ பேசிக்கினுருக்கான்.”
“பெருமாள் நான் யாரையும் வைக்கல. எனக்கு பிரச்சனைன்னா சம்பந்தப்பட்டவன்கிட்டயே பேசித் தீர்த்துப்பேன். உன்கிட்ட இன்னும் பேச்சுவார்த்தை நடந்துட்டுதான் இருக்கு” என்றார் நித்யன் என்ற மனிதர்.
“ஓ... அந்த பொற வூட்டுக்காரனா நீயு? உன்ன இப்பதான் சாரு மொத தபா கண்டுகினேன். மயிலு நீ இந்தாளைக் கண்டுகினுகிறியா?” என்றாள் அருகில் இருந்தவளிடம்.
“அட போ நட்டு. நமக்கு எவனையும் தெர்யாது” என்றதும் நட்டு என்றழைக்கப்பட்டவள் கண்கள் மயிலுக்கு கண்டனம் தெரிவிக்க, தலையைச் சொறிந்தபடி அசட்டுத்தனமாய் சிரித்தாள் மயில்.
“சாரே கேட்டுகினியா. இந்தாள பஸ்ட்டு இப்பதான் கண்டுகினோம். இந்த வூட்டுக்கு இன்னிக்குதான் குட்தனம் வந்தோம். எங்க இடத்துல ரோடு இட்டுருக்கானுங்க. அதின்னாத்துக்கு எங்க பெர்மிட்டு இல்லாம இட்டானுங்க தெர்ல. லேடீஸூ இருக்குற வூட்டுல கஸ்மாலம் எவுனாவது பூந்துட்டா பேஜாராகிரும்னுதான் மூடிகினோம்.”
“பஜாரிங்களைத் தேடி... அதுவும் பார்க்க சகிக்காத இந்தக் கேவலமான மூஞ்சிங்களைத் தேடி வர்றானுங்களாம்” என்று பெருமாள் முணுமுணுக்க,
“இன்னா சாரே உன் மவுத்து ஓவரா ரவுசு வுடுது? சவுண்டு வுட்டா உன் வொய்பு நெத்தி பொட்ட தூக்கி, உன் போட்டோக்கு இட்டுக்கணும். அகாங்” என்றாள் குரலை உயர்த்தி.
“ஏய் ச்சீய்... உங்ககிட்டப்போய் வாயைக் குடுத்தேன் பாருங்க” என்று முகம் சுளித்தார் பெருமாள்.
“உன் மவுத்த என்னான்டயா இட்ட? போயா... எங்காத்தா வர்றதுக்குள்ள போயிரு. இல்லாங்காட்டி நாறிப்பூடுவ நாறி” என்ற நட்டு வெத்தலைச் சிவப்பை அவனை நோக்கி துப்புவதாக பாவ்லா செய்து சாலையோரம் துப்பினாள்.
“ஏன்மா பொண்ணுங்களா, இதைத்தாண்டி நாற்பது, ஐம்பது குடித்தனம் இருக்குது. இப்படி நீங்க வழியை அடைச்சிட்டா எப்படிமா நாங்க போறது? எங்களுக்கு இந்த ஒரு வழி மட்டும்தான் இருக்கு. எங்களை கொஞ்சம் யோசிங்க” என்றார் ஒருவர்.
“நீ சொல்றது கரீட்டுதான் சாரே. இத்தோ ட்ருத்து கூவுதே இந்த பெருசு கூடதான் அந்தாண்ட நிக்குதே...” என்று நித்யனைக் காண்பித்து, “அந்த மனுஷன் வூட்டுக்கு ரூட்டு வுடாம மூடிக்கினுச்சு. நீயெல்லாம் அது வூட்டுக்கிட்டனதானே இருக்க? எந்த கஸ்மாலமாவது என்னனு கேட்டுக்குனியா? இப்பக்கி உன் வூட்டுக்கு ரூட்டு இல்லாங்காட்டி சவுண்டு வுடுறியே?” என்றாள் மயில்.
“ஏன்மா அது என் ஒருத்தன் பிரச்சனை மட்டும்தான். நீ இப்படி செய்யுறது எத்தனை குடும்பத்துக்கு பாதிப்பு.”
“அத்து உனக்கு நோவ்வுன்னா, இத்து எங்க நோவ்வு. உன் ஜோலிய பாத்துகினு நகரு சாரே. ஏய் மயிலு வூட்டுக்குள்ளார வா” என்று இருவரும் வீட்டிற்குள் நுழையப்போக,
“ஹலோ இப்படி விட்டுட்டுப் போனா எப்படி? பின்னாடி ட்ராபிக்காகிருச்சி. வழி விடலன்னா போலீஸ்கு போவோம்” என நான்கைந்து குரல்கள் ஒருங்கே எழுந்தது.
“இன்னா உன்க்குதேன் போலீசு தெர்யுமோ? எவன வேணும்னா இட்டுகினு வா. இல்ல இரு நானே வர சொல்றேன்” என்று கைபேசியை எடுத்து காவல்துறைக்கு அழைத்து “சாரே புள்ளையார் கோயிலாண்ட பிராபுளமு. ஜல்தியா வந்து பைசல் பண்ணு. இல்லாங்காட்டி நானே பைசலாக்கினுகிறேன்.” எதிரில் என்ன சொன்னார்களோ “ஆங் சரி சாரே” என பேசி முடித்து, பட்டன் கைபேசியை ஒரு அழுத்து அழுத்தி நிறுத்தி “பை நிமிட்டுல வந்துக்குனாராம்” என்றதும் சலசலப்புகளுடன் காத்திருந்தார்கள்.
கால்மணி நேரத்திற்கெல்லாம் காக்கி சீருடையில் வந்த இன்ஸ்பெக்டர் விஜய், “எனக்கு யார் போன் செய்தது?” என்று கேட்டதும், நட்டு முன் வந்து “நான்தான்” என்றாள்.
“என்ன பிரச்சனைமா? வீட்டு முன்ன ஏன் இவ்வளவு கூட்டம்?” என கேட்க,
“சார் நான் சொல்றேன்” என்ற பெருமாளை கைதூக்கி நிறுத்தி, “முதல்ல யார் கம்ப்ளைய்ண்ட் பண்ணினாங்களோ அவங்க சொல்றதைதான் எடுத்துப்போம். மத்ததை விசாரணையப்ப நீங்க வரலாம்” என்றான் விஜய்.
“சார் நான்தான் போலீஸ் போறேன் சொன்னேன். அதுக்குள்ள இதுங்க போன் பண்ணிருச்சி” என்று பெருமாள் தன் கடுப்பைக் காட்டிட,
“ஏய் இன்னா ஜந்து மாரி, அது இதுனு பேசினுக்கிற? வந்தேனு வையு...” விரல் நீட்டி இரு பெண்களும் மிரட்ட,
அவர்களைத் தடுத்து, “சார் இவங்க புத்திசாலி. அதான் முதல்ல வர்றவங்களுக்கு முதலிடம்னு முந்திக்கிட்டாங்க. நீங்க லேட் பண்ணிட்டீங்க.”
“இன்ஸ்பெக்டர் சார்! அப்ப கொலை பண்ணிட்டு வந்து முதல்ல சொன்னா அவனுக்கு ஆதரவா நிற்பீங்களா?” என்றார் கோபமாக.
“அப்கோர்ஸ். முதல்ல வர்றவங்களோட நியாய அநியாயத்தைக் கேட்டுட்டுதான் அடுத்த மூவ் பண்ணுவோம். இப்ப உங்களுக்கு என்ன சார் பிரச்சனை? இவங்ககிட்ட விசாரிச்சிட்டு உங்ககிட்ட வர்றேன்” என்றதும் நட்டுவும், மயிலும் நடந்தது அனைத்தையும் சொன்னார்கள்.
“நீங்க சொல்றதும் சரிதான்” என்றதும் கோபத்தில் அனைவரும் கத்த, “அமைதி ப்ளீஸ்” என்ற இன்ஸ்பெக்டர் விஜய் பெருமாளைப் பார்த்து, “சார் நீங்கதான, உங்ககிட்ட பாதைவிடச் சொல்லி உங்க வீட்டுக்குப் பின் வீட்டுக்காரன் டார்ச்சர் பண்றான்னு ஸ்டேஷன் வந்தீங்க?” என கேட்க,
“ஆ...ஆமா சார்” என்று தடுமாற,
“இப்ப விட்டுட்டீங்களா?” என்ற கேள்வியில் ‘ஏன் விடவில்லை?’ என்ற கேள்வியும் இருந்தது.
“அதெப்படி சார் என் இடத்தை யாருக்கோ கொடுக்க முடியும்.”
“ஓ... அவர் பணம் தர்றேன். கொஞ்சம் இடம் விடுங்க சொன்னாரா?”
“பணம்லாம் எதுக்குங்க சார். எனக்கு என் இடம்தான் வேணும்” என்று நிற்க, அருகில் இருந்தவர்கள் எல்லாம், “உன்னால்தான்யா” என்று பெருமாளை சத்தம் போட ஆரம்பித்தார்கள்.
“ஏன்மா இது நிஜமாகவே உங்க இடம்தானா? பத்திரம், பட்டா எல்லாத்தையும் காட்டு” என்றதும் உள்ளே சென்று பத்திரங்களை எடுத்து வந்து தர, சில நிமிடங்கள் அதைப் பார்த்து, “சரியாத்தான் இருக்குது. சார் உங்க நியாயம் சரின்னா இவங்க நியாயமும் சரிதான். என்ன நீங்க ஒரு வீட்டை லாக் பண்ணுனீங்க. இவங்க மொத்த இடத்தையும் லாக் பண்ணிட்டாங்க. எங்க எந்த கேஸ் நடத்தினாலும் செல்லாது” என்று இன்ஸ்பெக்டர் விஜய் முடிக்க,
“சார் அப்ப நாங்கள்லாம் எப்படிப் போறது?” என்று தெருக்காரர்கள் கத்த ஆரம்பித்தார்கள்.
“பெருமாள் சார் வீட்டுக்குப் பின்னாடி உள்ள வீட்டுக்காரர் எப்படிப் போனாரோ அப்படிப் போங்க” என்று அலட்சியமாகப் பதிலளிக்கவும், அனைவரும் பெருமாளை வசைபாடினார்கள்.
“அவரை ஏன் திட்டுறீங்க? அது எங்க பிரச்சனை. நாங்க பேசித் தீர்த்துக்கிறோம்” என்று நித்யன் இடையிட்டார்.
“இங்கயே பைசலாக்கு சாரே. அப்பாலிகா நாங்க உன் ரூட்டுல வருவம்” என்று இழுத்துப் பேசினர் பெண்கள்.
பெருமாள் நித்யனின் எதிரில் வந்து, “நான் ஐந்தடி இடம் விடுறேன். பைக் தாராளமா போகலாம். நீங்க பிற்காலத்துல கார் வாங்கினா எங்க வீட்டுக்கு முன்னாடியே பார்க் பண்ணிக்கலாம்” என்று விட்டுக்கொடுக்க, ஒரே சந்தோஷக் கூச்சல் மற்றவர்களிடம்.
“இப்ப நீ என்னமா செய்யப்போற?” இன்ஸ்பெக்டரின் கேள்வியில் ஒரு வெற்றுப் பத்திரத்தை எடுத்து வேகமாக எழுதி பெருமாளிடம் கொடுத்து, “இத்துல கையெழுத்து இடு சாரே. நான் நம்புறேன்” என்றாள்.
வித்தியாசமாய் பார்த்த பெருமாளிடம், “படிச்சினு சொல்லு சாரே. நானு ஜனங்களுக்குனு எங்க எடத்தைக் கொடுக்குறேனு எழுதி கையெழுத்து இட்டு இன்ஸ்பெக்டராண்ட தந்துனுகிறேன். அப்பாலிக்கா உனக்கு வரணுமே அந்த டப்பை” என்று நித்யனைக் காட்டி, “இந்த சாரு ஒன் அவருல தருவாரு” என்றாள்.
“ரொம்ப நன்றிமா. பணத்தை இன்னும் ஒருமணி நேரத்துல பெருமாள்\ சார்கிட்ட கண்டிப்பா தந்திருவேன். நீங்க யாரோ, எவரோ, காலத்துக்கும் ரொம்ப நல்லா இருப்பீங்கமா” என்றார் மனதார.
“இன்னாத்துக்கு சாரே டாங்ஸ் எல்லாம். போ சாரே போயி ஜோலியை கண்டுக்கோ. பியூச்சருக்கா வாங்குற எடத்தையாவது, ரவுசு இருக்கா இல்லையான்னு பார்த்து வாங்கு. ஏய் மயிலு உன் அண்ணாத்தையாண்ட சொல்லி இந்த சுவத்தை க்ளியர் பண்ணு” என்றாள் நட்டு.
அவள் காதோரம் குனிந்து, “என் அண்ணாத்த ஒனக்கு மச்சாந்தான நட்டு” என்றாள் நக்கலாக.
“போடி அந்தாண்ட” என்று மயிலை முறைத்தாள் நட்டு.
இன்ஸ்பெக்டரின் தலைமையில் அந்த காம்பௌண்ட் செட்டிங் நகர்த்தப்பட, பெண்கள் இருவரும் வீட்டினுள் செல்ல, அனைத்தையும் அரிச்சந்திரன் வீடியோ கவர் செய்தான்.
இதை தங்களின் கைபேசியில் வீடியோ எடுத்த சில இளவட்டங்கள், “இங்கேயும் ஒரு கூவம்” என்ற தலைப்புடன்முகநூல், வாட்சப், ட்விட்டரில் போட்டுவிட, நாடறிந்த பிரபலமானார்கள் பெண்கள் இருவரும்.
பெருமாளிடம் வந்த அரிச்சந்திரன், “உங்களைப் பார்க்கதான் சார் மேம் அனுப்பினாங்க. இன்னைக்கே கேஸ் பைல் பண்ணிடலாம் சொன்னாங்க. என்னோட ஆபீஸ் வாங்க சார். மற்றதை அங்க வச்சிப் பேசிக்கலாம்” என்றான்.
“நான் கேஸ் போடுறதாயில்ல லாயர் சார். எங்களுக்குள்ளயே பேசித் தீர்த்துக்கிட்டோம். உங்களைத் தொந்தரவு பண்ணினதுக்கு மன்னிக்கணும்” என்றார் மனதார.
“அதுக்கென்ன சார். நீங்க மனசு மாறுனீங்களே அதுவே போதும். ஒருத்தருக்கு விட்டுக்குடுக்கிறதால நாம கெட்டுப்போயிட மாட்டோம் சார். இதெல்லாம் கூட ஒருவகை புண்ணியம்தான். உங்க வாரிசுங்களுக்கு அது கிடைக்கட்டும்.”
“சரிங்க லாயர் சார். அப்படியே உங்க மேடம்கிட்டேயும் சொல்லிடுங்க” என்று பெருமாள் செல்ல, பின்னால் வந்த நித்யன் “நன்றி லாயர் சார்” என்றார்.
“எதுக்கு சார் நன்றி?” ‘நம்ம ஆடின நாடகம் தெரிஞ்சிருச்சோ’ என்ற குழப்பம் அவனுள்.
“எனக்கென்னவோ இந்த ஏற்பாடெல்லாம் உங்களோடதுன்னு தெரியுது. அதுக்கான நன்றிதான்.”
மெல்லிய புன்னகை வெளியிட்டானே தவிர, ஆம் இல்லையென்று எதுவும் சொல்லவில்லை. சில உதவிகள் சம்பந்தப்பட்டவருக்கு தெரிந்திருப்பது நல்லதென்று நினைப்பவன் அவன். அதனால்தான் அவராகவே உணர்ந்து கூறியபொழுது மறுக்கவில்லை.
“அந்த இடத்துக்கு சரியான அமௌண்ட் எவ்வளவுன்னு விசாரிச்சி கொடுத்திருங்க சார். இதோ அதற்கான பத்திரம். பெருமாள் சாரே பேக்கடிச்சாலும் சட்டப்படி செல்லாது. இனிமேல் வாங்குற இடத்தை நல்லா விசாரிச்சிக்கோங்க.”
“தேங்க்யூ லாயர் சார். உங்களுக்கான ஃபீஸ் எவ்வளவு சொன்னா தந்திடுறேன்.”
“கண்டிப்பா தந்தே ஆகணும்ன்ற எண்ணமிருந்தா, எதாவது அநாதை ஆசிரமத்துக்கு இரண்டு வேளை சாப்பாடு போட்டுருங்க சார்” என்றதும் திரும்பவும் நன்றி சொல்லி அவர் செல்ல, கைபேசியை எடுத்தவன் “தெருவின் கடைசியில் நிற்கிறேன். வந்துவிடு” என்று மின்னலுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி காத்திருக்கலானான்.