- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
4
அதிகாலையிலேயே எழுந்து வந்த மகனை ஆச்சர்யமாய் பார்த்த சகுந்தலா, “அரி அதுக்குள்ள குளிச்சிட்டியா? எதாவது கேஸ் விஷயமா வெளியூர் எதுவும் போறியா?” என கேட்டார்.
“இல்லம்மா. எங்கம்மா விஷயமா போறேன்.”
“புரியலைடா?”
“உங்களை கோவிலுக்குக் கூட்டிப்போகதான் சீக்கிரமே கிளம்பி வந்தேன்மா.”
“நேத்தே தூங்கவிடாமல் செய்திட்டேன்னு வருத்தமாகிருச்சிடா. இன்னைக்கு நானும் அத்தையும் போறோம். நீ கொஞ்ச நேரம் படு” என்றார்.
“பரவாயில்லமா. வாங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டுப் போறேன்.” தாயின் கேள்விப் பார்வையில் “காலையில கோவிலுக்குப் போனா அன்றைய தினம் முழுவதும் ரொம்ப சுறுசுறுப்பாயிருக்கும்மா. பத்து நாளா தலையைப் பிச்சிக்க வச்ச கேஸ் ஒண்ணு நேத்து மதியத்துக்கெல்லாம் சால்வாகிருச்சி. அதான் உங்க முருகரை நானும் தினமும் தரிசிக்க முடிவு பண்ணிட்டேன்.”
‘என்னையா பார்க்க வர்ற? வா என்னை மட்டும்தான பார்க்க வர்ற அது மட்டும்தான் நடக்கும்.’ முகம் புன்னகைத்ததோ அந்த ஆறுமுகனுக்கு.
தன்னையறியாமல் சந்தோஷம் எழ காரில் சாமி பாடல்களை ஒலிக்கவிட்டு கோவில் வந்ததும் பாட்டியையும் தாயையும் இறக்கி காரை லாக் செய்து உள்ளே நுழைய கண்கள் நாலாபுறமும் ஓடியும் தான் தேடியது கிடைக்காமல் போக ஆறுமுகனைப் பார்த்தவனுக்கு அவரின் சிரிப்பிற்கு அர்த்தம் தெரியவில்லை.
ஆனாலும் ஆறுமுகனின் புன்னகை முகம் அவனுக்கு தைரியமளித்ததோ! சாமி கும்பிட்டு வெளியே வருகையில் தன்னைத் தாண்டிச் சென்றவளை கவனிக்கவில்லை அவன்.
தினமும் அதே தொடர ‘முஸ்லீம் பொண்ணுன்றதால எதாவது ஆராய்ச்சி பண்ண.. இல்லன்னா கட்டுரை எழுதுறதுக்கு வந்திருப்பாளோ? ஆனா பஜனை எப்படி பாட முடியும்? பஜனை பாடினவங்களோட இருந்ததைப் பார்த்தியே தவிர... பாடினதைப் பார்த்தியா? பாட்டுன்னு வந்துட்டா ரசனைதான்டா முக்கியம்.. பஜனையில்லை’ என்றது அவன் மனம்.
மார்கழிப் பெண்ணை மாதம் முழுவதும் காணவில்லை அவன். மார்கழி மாதத்து டிசம்பர் பூவாய் வாசமில்லாமல் வாடி வதங்கியது அவனின் நாட்கள் யாவும்.
தை ஒன்று பொங்கல் வைத்துப் படையலிட்டு மதிய உணவும் முடித்து ரிலாக்ஸாக அமர்ந்திருக்க முந்தைய தினம் வந்திருந்த தந்தை ரவிச்சந்திரனின் ஒருபுறம் கொடியாகிய மின்னல்கொடி. இன்னொரு புறம் அரிச்சந்திரன்.
‘மின்னல் கொடி!’ அரிச்சந்திரனின் தங்கை. வேலையில் சுறுசுறுப்பின் மறுவுரு. வெளியே யாரிடமும் தன் தங்கை என்று சொல்லமாட்டான். காரணம் அவர்களின் தொழில். மிக நெருங்கியவர்களுக்கு மட்டுமே அவர்களைத் தெரியும். ஏன் உயிர்த்தோழி நதிக்குக்கூட மின்னலின் குடும்பத்திலுள்ள யாரையும் தெரியாது. வெளியில் ஏடாகூடமாக நடந்தாலும் அவளின் பாதுகாப்புக் கவசம் மின்னலின் அண்ணன். அதற்காகவே தந்தையுடன் டெல்லிக்கு செல்லாமல் அண்ணனுடனே இருந்துவிட்டாள்.
ரவிச்சந்திரன் வருவதற்கு இடைப்பட்ட நாட்களில் நடந்த அனைத்தையும் சொல்ல அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் மகனின் அதிகாலைப் பள்ளி எழுச்சியைப் பாராட்ட, அரிச்சந்திரனை கேலிச் சிரிப்புடன் தங்கையும் வெட்கச் சிரிப்புடன் அவனும் கேட்டுக் கொண்டிருக்கையில் ஹாலிங்பெல் அடித்தது.
வாசலில் நின்றவரைப் பார்த்து “வாங்க தரகரே” என்ற பாட்டியை அண்ணன் தங்கை இருவரும் பார்த்தனர்.
“நல்லதுங்கம்மா” என வணங்கியபடி உள்ளே வந்தவரை அமர வைத்து மருமகளை காஃபி எடுத்து வரச்சொல்ல, சகுந்தலா கொண்டு வந்ததும் தரகருக்குக் கொடுத்த அவர் குடித்து முடித்ததும் “சொல்லுங்க தரகரே?” என்றார் பாக்கியவதி.
“பொண்ணு பெயர் நட்சத்திரா. எம்.சி.ஏ கடைசி வருஷம். பொண்ணுக்குக் கல்யாண நேரம் கூடியிருச்சி. நம்ம பையனையும் தெரியுமே. அதான் அவங்ககிட்ட சொல்லி போட்டோ வாங்கிட்டு வந்துட்டேன். பார்த்து பிடிச்சிருந்தா விசாரிச்சிக்கோங்க” என்று கொடுத்தார்.
அதை வாங்கிப் பார்த்த பாட்டியின் கையிலுள்ள போட்டோவில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் அரிச்சந்திரன் ‘நதீரா’ என்று நினைத்த.. மின்னலின் தோழி நதியான... “நட்சத்திரா!”
விதியின் விளையாட்டு ஆரம்பம்.
“பொண்ணு மூக்கு முழியுமா லட்சணமா இருக்கா. நம்ம அரிக்கு ஏத்தவள்தான். இந்தப் பொண்ணையே பார்த்திடலாம்” என்று மருமகளிடம் நீட்டினார்.
சகுந்தலா அதை வாங்கி “ஆமாங்க அத்தை. இந்தப் பொண்ணையே பார்த்திடலாம்” என்று கணவரிடம் கொடுக்க அவரின் முகத்திலும் திருப்தி தெரிந்தது.
“நீ பார்க்கலையா?” தங்கையிடம் கடுப்புடன் கேட்டான் அரிச்சந்திரன்.
“பொண்ணு யார்னு தெரியும்ணா. எங்க காலேஜ்ல எங்க செட்தான் படிச்சா. வேற வேற டிபார்ட்மெண்ட்னாலும் எப்படியோ ரெண்டு பேருக்குள்ளேயும் ஒரு ஆழ்ந்த நட்பு உண்டு. நீ கூட பா...”
“போதும் போதும் உன் தோழி புராணம்” என்றதில் ‘நீ கூட பார்த்திருக்க. அன்னைக்கு நமக்கு ஹெல்ப் செய்தவள்தான்’ என்று சொல்ல வந்தவள் அண்ணனின் எரிச்சலில் அமைதியாகி “ஏன்ணா கோவப்படுற? அவள் ரொம்ப நல்ல பொண்ணு? அவளுக்கு உன்...”
“நானும் கெட்ட பொண்ணுன்னு சொல்லலையே” என்று அவள் சொல்ல வருவதைக் காதில் வாங்காது அழைப்பை துண்டித்தான்.
‘கடவுள் நமக்கு சில சந்தர்ப்பங்கள் கொடுப்பார். அதைப் பகுத்தறிந்து பக்குவமாகப் பயன்படுத்திக் கொண்டால் அவர்கள் வாழ்வில் இன்பம் மட்டுமே! சந்தர்ப்பத்தைக் காலால் எட்டி உதைத்துத் தள்ளினால், அது நமக்கு எந்த ஒரு நல்ல சந்தர்ப்பத்தையும் கொடுக்காமல் விட்டு விலகிச் சென்றுவிடும். நிறைய பேர் இதை உணர்வதில்லை.’
அரிச்சந்திரன் நல்லவன்தான். ஆனால் காதல் அவன் கண்ணை மறைக்க, அவனின் தேடலைக் கண்டு, கடவுள் கொடுத்த சந்தர்ப்பத்தை எட்டி உதைத்துவிட்டான். இனி விதி வழியே அவனும்!
“விதண்டாவாதம் பேசாதண்ணா. நான் சொல்றதைக் கேட்டு இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க. உன்னை நல்லா பார்த்துப்பா” என்றாள் அண்ணனுக்குப் புரியவைக்கும் விதமாக.
“என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். இன்னொருத்தர் தேவையில்லை” என்றான் பட்டென்று.
“ஐயய்யய்யய்ய... ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? பதிலுக்குப் பதில் பேசிட்டு.. இப்பதான் பேச ஆரம்பிக்கிறோம். இன்னும் ஜாதகம் இருக்கு. ஃபேமிலி பிடிக்கணும். நீங்க என்னடான்னா கத்தி களேபரம் பண்றீங்க.” பேரன் பேத்தியை அடக்கி தரகரிடம் திரும்பியவர் “தரகரே இது பையனோடது. பொண்ணு வீட்லயும் பார்க்கச் சொல்லுங்க. எல்லாம் சரியாயிருந்தா மேற்கொண்டு பேசலாம்” என்று அவரை அனுப்பினார்.
“ஏன்ணா யாரையாவது...?” கேள்வியாக நிறுத்தினாள்.
“ஆமா. நதீரான்னு ஒரு முஸ்லீம் பொண்ணை விழுந்து விழுந்து லவ் பண்றேன் போதுமா” என கிண்டலாகச் சொல்வது போல் உண்மையை உடைத்தான்.
“வாயை மூடு அரி. நீ கிண்டலுக்குச் சொல்றன்னு புரியுது. அது உண்மையாவே இருந்தாலும் நமக்கு சரிவராது. உன் உளறலை விட்டுட்டு இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிற வழியைப்பாரு” என்று தந்தை அதட்டல் போட,
‘என்னடா இதெல்லாம்?’ என்பதாய் தாயின் பார்வை இருந்தது.
அண்ணன் அருகில் அமர்ந்து, “அண்ணா எனக்குக் கொஞ்சம் சந்தேகம் வருது. அன்னைக்குக் கூட இந்தப் பெயரைச் சொன்னல்ல? நிஜமாவே அந்த நதீராவை லவ் பண்றியா? பயப்படாம தயங்காம சொல்லு? நான் அப்பாகிட்ட சொல்லமாட்டேன்.”
இருக்கும் கடுப்பையெல்லாம் கையில் கொண்டு வந்து தங்கையின் தலையில் ஓங்கி கொட்டு வைக்க, “அம்மாஆஆ..” என்ற அலறலுடன் தலையைத் தடவி, “நிஜமான்னு கேட்டதுக்கு என்னை அடிக்கிறான்மா” என்று அழுதாள்.
“இப்ப ஏன்டா அவளை அடிச்ச? தப்பு செய்யாத சொன்னது நாங்க. கோவம் வந்தா அதை எங்ககிட்ட காட்டு. அதை விட்டுட்டு குழந்தையை அடிக்குற. நீ வாடா பாப்பா” என்றதும் அப்பாவின் அருகில் அமர்ந்து தோளில் தலைசாய்த்து அழ, அவளின் தலையை மெல்ல தேய்த்துவிட்டு “வலிக்குதாடா மின்னல்? ஆளுதான் வளர்ந்திருக்கான். பொம்பளைப் பிள்ளைகிட்ட எப்படி நடத்துக்கணும்ன்றதே தெரியல. அறிவு கெட்டவன்” என்று மகளுக்காக மகனை திட்டினார்.
“ஆமாமா. புட்டிப்பால் குடிக்கிற பாப்பா. அவள் செய்றதெல்லாம் யாருக்கும் தெரியாது. தெரிஞ்சாலும் செல்லப் பொண்ணுன்னு கண்டுக்காதீங்க. நான் வாயைத் திறந்தா மட்டும் எல்லாரும் ரௌண்டு கட்டிட்டு வந்திருங்க. இப்ப திருப்தியா உனக்கு” என்று தன் அறைக்குச் சென்றான்.
“டேய் அரி! பொங்கல் அதுவுமா... ப்ச்... நீ ஏன்டி அவனை வம்பிழுத்திட்டிருக்க?” என்று மகளைத் திட்டி, “நீங்களாவது அமைதியா இருக்கக்கூடாதாங்க. பொண்ணு செஞ்சா மட்டும் எல்லாம் சரி” என்று கணவனையும் குற்றம் சாட்டினார்.
“சகு நீ உட்கார். அவன் பத்து நிமிஷத்துக்குள்ள சரியாகிருவான்” என்ற மாமியாரின் வார்த்தைக்கு கட்டப்பட்டார் சகுந்தலா.
அரைமணி நேரமாகியும் அரிச்சந்திரன் கீழே வராமல் போக, மாடியேறி பேரன் அறைக்குச் சென்ற பாக்கியவதி அவனருகில் அமர்ந்து, “என்னடாப்பா பாப்பா சொல்ற மாதிரி நீ யாரையும்...?” என கேள்வியாய் நிறுத்தினார்.
“அ...அப்படிலாம் இ..இல்ல க்ரேன்மா” என்றான் தடுமாற்றத்துடன்.
“அப்படி இருந்தாலும் மறந்திரு அரி. இப்ப பார்த்திருக்கிற பொண்ணு நம்ம மதம்! நம்ம ஜாதி” என்றார் அழுத்தமாக.
“மனுஷனுக்குள்ள என்ன க்ரேன்மா ஜாதி மதம்னு? ஆண்-பெண்! ஏழை-பணக்காரன்! இது மட்டும்தான் பிரிவினை. ஜாதி மதம்னு இன்னும் எத்தனை காலத்துக்குதான் கட்டிட்டு அழுவீங்க” என்றான் கோவமாக.
“கோவம் எதுக்கு அரி. கோவம் நம் அறிவுக்குச் சத்ரு. மேலாட்டமா பார்க்காம இங்க வந்து உட்கார்ந்து நான் சொல்றதை அமைதியா கேளு.. ஏன்னு புரியும்” என்றார் அமைதியாகவே.
“எதுவும் கேட்க வேண்டாம் க்ரேன்மா. நீங்க கீழே போங்க. அப்புறமா பேசலாம்.”
“ஏன்பா இப்படிப் பேசுற? நான் என்ன நீ கெட்டுப்போகவா வழி சொல்றேன். வக்கீலா இருந்துட்டு இப்படிப் பேசாத.”
“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நியாயம் இருக்கும் க்ரேன்மா. அதை யாராலும் மாத்த முடியாது.” அவனுக்கு நதீராவை மறக்க வேண்டியிருக்கிறதே என்ற வேதனைதான். கவருக்குள் இருக்கும் அவளின் புகைப்படமோ, அவனைக்கண்டு கைகொட்டிச் சிரித்ததை அவன் அறிவானா!
“வரட்டுப் பிடிவாதம் பண்ணாம எங்க நியாயத்தை கேளுப்பா?”
மூச்சை இழுத்துவிட்டு தன்னை நிதானப்படுத்தியவன் பாட்டியின் அருகில் அமர்ந்து, “சொல்லுங்க க்ரேன்மா?” என்றான்.
(இது சில பெரியவங்க சொன்ன கருத்து.)
“ஜாதின்றது உன்னோட முடியுறது கிடையாது. அடுத்தடுத்த தலைமுறைக்கும் போய்ச் சேரும். ஒரே மதமா இருந்தாலும் ஒரே ஜாதியில கூட ஜாதிப்பிரிவு இருக்கிற இடத்துல சம்பந்தம் வைக்கமாட்டோம். ஜாதி கட்டமைப்புன்னு எதுக்கு வச்சிருக்காங்க தெரியுமா?” என்றார் பேரனிடம்.
“எனக்கென்ன தெரியும்? நீங்கதான் அந்த காலத்து ஆளு. சொல்லுங்க க்ரேன்மா நானும் தெரிஞ்சிக்கிறேன்.”
“தெரிஞ்சிக்கணும்பா. இப்ப உள்ள இளசுங்களுக்கு ஒண்ணு எதையுமே தெரிஞ்சிக்கிறதில்லை. இல்லன்னா ஜாதிப்பெயர் சொல்லி அராஜகத்துல இறங்குறாங்க. ரெண்டுமே தப்புன்னு சொல்வேன்.” பேரனின் அமைதி தொடர... “ஜாதி கட்டமைப்பு உருவாக்கி காலம் காலமா அதோடவே வாழ்றாங்க. வெளியில பார்த்தா மனுஷனுக்குள்ள என்ன வேற்றுமை? மனிதனை மனிதனா மட்டும் பாருங்கன்னு திட்டலாம். கோஷம் போடலாம். ஆனா அந்த கட்டமைப்பு இல்லைனா மனுஷனே ஒழுங்கில்லாமல் இருந்திருப்பான்.”
“புரியுற மாதிரி சொல்லுங்க க்ரேன்மா.”