- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
7
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே!
அட நீயும் பெண்தானே!
பெட்டில் தலைக்கு இரு கைகளையும் கொடுத்து, கால்மேல் கால்போட்டு உதட்டில் புன்னகையுடன் திறந்திருந்த கண்களில் கனவுகளுடன் நம் அரிச்சந்திரன். இன்றைய அவளுடனான சந்திப்பு இல்லாமல் போயிருந்தால், ஒருவேளை வீட்டில் பார்த்திருந்த பெண்ணை திருமணம் செய்திருப்பானாயிருக்கும். இப்பொழுது? “நதீரா! ஹவ் ஸ்வீட் நேம். கண்டிப்பா நீ எனக்குதான். என் வீட்ல யாரைப் பார்த்தாலும் இனி நோதான்” என்றான் முனகலாக.
அங்கே டேபிளில் இருந்த கவரில் நட்சத்திரா புன்னகைத்துக் கொண்டிருந்தாள் என்றால் அருகில் குட்டியாக வீற்றிருந்த முருகரோ அவனின் விதியை எண்ணி புன்னகைத்தார்.
“கொடி சிக்ஸ் தேர்ட்டி ப்ளைட்கு அப்பா டெல்லி கிளம்புறாங்க. நாம அப்பாவை ஏர்போர்ட்ல விட்டுட்டு வர்ற வழியில ஜோசியரைப் பார்த்து ஜாதகம் கேட்டுட்டு வரலாம். அதுக்கப்புறம் நீ வேலைக்குக் கிளம்பு.”
“ஏன்பா அதுக்குள்ள கிளம்புறீங்க?”
“அதுக்குதான் உன்னை என்னோட வரச்சொல்றேன். நீதான் அண்ணனோட இருக்கேன்னு சொல்லிட்ட. நான் என்னடா பண்றது?”
“சேர்ந்தாப்ல ஒன் வீக் எங்களோட இருக்கிறதில்லப்பா நீங்க” என்று முகம் திருப்பி வந்த அழுகையைக் கட்டப்படுத்த,
மகளின் குரலில் வித்தியாசத்தை உணர்ந்தவர் அவளை சமாதானப்படுத்தும் விதமாக “ஒரே நாள்தான்டா. நாளைக்குக் காலையில வந்திடுறேன். வேலை முடிஞ்சிருச்சினா இன்னைக்கு நைட்டே ப்ளைட் பிடிச்சிடுறேன். அதுக்குள்ள நீங்க ஜாதகம்லாம் பார்த்து பொண்ணு பார்க்க தேதி குறிச்சி வாங்கி வைங்க” என்றார்.
“கண்டிப்பா நைட் வந்திருவீங்கள்ல?”
“முடியாதுன்னா சொல்லிருவேன்லடா மின்னல். சிரிச்ச முகத்தோட அனுப்பணும். ஓகே” என்றதும் அவள் ஈஈஈஈஈ.. என்று பற்களைக் காட்ட, “இதுதான் என் மின்னல் பொண்ணுக்கு அழகு” என்றார் பதிலுக்கு புன்னகைத்து.
ஏர்போர்ட்டிலிருந்து வீடு வரும் வழியில் ஜோசியரின் வீட்டிற்கு தாயும் மகளும் செல்ல அவர்களைப் பார்த்து அறிமுகப் புன்னகை கொடுத்த ஜோசியர், “ரெண்டு நிமிஷம் இருங்கம்மா வர்றேன்” என்று பஞ்சாங்கத்துடன் வந்து, “பொண்ணுக்குப் பார்க்கப் போறீங்களா? பையன் எந்த ஊரு உள்ளுரா? வெளிநாடா?” என்று அடுக்கிக்கொண்டே போனார்.
“ஜோசியரே போதும் உங்க கற்பனை. கல்யாணம் எனக்கில்ல என் அண்ணனுக்கு. விட்டா எனக்கு நீங்களே பார்த்து முடிச்சி வச்சிருவீங்க போலிருக்கு” என்றாள் கேலியாக.
“அதுக்கென்னமா? பார்த்துட்டா போச்சி. உனக்கென்ன மாதிரி வேணும்னு சொல்லு தாராளமா பார்த்திடலாம்” என்றார் அவளைப்போலவே.
“நான் இந்த விளையாட்டுக்கு வரலை. அம்மா ஜாதகம் குடுங்க” என்றதும் அவரிடம் கொடுத்து இருவரும் அமைதியாக இருந்தார்கள்.
ஒவ்வொரு கட்டமாகக் கணித்தபடி வந்தவர் தனக்குத் தெரிந்த சிலதைக் கேட்டுத் தெளிவுபடுத்தி ஆராய்ந்து முடிக்க... அவர்களை வித்தியாசமாய் ஒரு பார்வை பார்த்து “இரண்டு ஜாதகமும் அமோகப் பொருத்தம். வாழ்க்கையில எந்தப் பிரச்சனையும் இல்லாம ரொம்பவே சிறப்பா வாழ்வாங்க. ஆனா..” என்று நிறுத்த...
“என்னாச்சி ஜோசியரே?” சகுந்தலாவின் இதயத்துடிப்பு அதிகரிக்க மின்னலுக்கு அவர் சொல்ல வருவது புரிந்து போனது.
“அது பொண்ணுக்கு இரு தாலி யோகம்னு இருக்கு” என்றார் தயங்கியபடி.
அதிர்ச்சியில் “என்ன சொல்றீங்க? இப்பதான நல்லாயிருப்பாங்க சொன்னீங்க?” என்றார் சகுந்தலா.
“அதுவும் நிஜம்! இதுவும் நிஜம்மா!”
“புரியுற மாதிரி சொல்லுங்க ஜோசியரே?”
“இந்தப் பொண்ணுக்கு சின்ன வயசிலேயே தாலி ஏறி இறங்கியிருக்கணும். உண்டா இல்லையான்னு பொண்ணு வீட்ல கேளுங்க” என்று அடித்துப் பேசியவரிடம் தர்க்கம் பண்ணத் தோன்றவில்லை சகுந்தலாவிற்கு.
“ஜாதகம் பார்த்தது போதும் ஜோசியரே” என்ற தாயை அதிர்ச்சியாய் பார்த்து “அம்மா ஒரு நிமிஷம் நான் சொல்ல வர்றதைக் கேளுங்க” என்றாள் தயக்கத்துடன்.
“ஏன் உன் ஃப்ரண்டுன்றதால பண்ணலாம்னு சொல்றியா? சின்னப்பொண்ணு சின்னப்பொண்ணாவே இரு. உன்னை இந்த இடத்துக்குக் கூட்டிட்டு வந்தேனே என்னைச் சொல்லணும்” என்று தன் கோபத்தை மகள்மேல் காட்டினார்.
“அம்மா அவசரப்படாதீங்க கொஞ்சம் வாங்க சொல்றேன்” என்று தாயை எழுப்பி அருகிலிருந்த கோவிலுக்கு சென்றாள்.
“அப்ப உனக்கு எதோ தெரிஞ்சிருக்கு. என்ன சொல்லணும்?”
“அம்மா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. நிறைய மனுஷங்களைப் பார்த்தவங்க நீங்க. நதி இடத்திலிருந்து ஒரு நிமிஷம் நியாயத்தைச் சொல்லணும்” என்று ஆரம்பித்து அவள் வாழ்வில் நடந்தவற்றைச் சொல்லி முடித்து “இதுல அவளோட தப்புன்னு எதுவும் இல்லதானம்மா?” என்றாள்.
“நீ சொல்றது புரியுதுமா. அதுக்காக...”
“ம்மா ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லிடாதீங்க. அவளை அண்ணனுக்கு முடிக்க இன்னொரு காரணமும் இருக்கு. என்னைவிட அவள் ரொம்ப நல்ல பொண்ணுமா. இதனால எந்தப் பிரச்சனை வந்தாலும் நான் சமாளிச்சிக்கிறேன்மா. அப்பாகிட்ட கூட நானே பேசி சம்மதம் வாங்குறேன்மா” என்று கெஞ்சலில் இறங்க...
‘தன்னைக் குறைத்து அவளைத் தூக்கிவைத்துப் பேசுகிறாளா என் பெண்!’ ஆச்சர்யம்தான் அவருக்கும். இதையெல்லாம் பிரச்சனையாக்க வேண்டுமா என்றெண்ணி “அப்பா வந்ததும் காலையில அண்ணன்கிட்ட பேசிக்கலாம். இப்ப வா ஜோசியரைப் பார்த்து தேதி குறிச்சிட்டு வரலாம்” என்றார் முழுமனதுடன்.
“ம்மா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்மா.” தாயை சந்தோஷமாகக் கட்டிக்கொண்டாள் மின்னல் பெண்ணவள்.
“ஹேய் நதிமா! என்னென்னவோ கேள்விப்பட்டேன். நிஜமாவா? ஒருவழியா நேர்ல மீட் பண்ணிட்டபோல?” வரும்பொழுதே அவளைக் கிண்டலடித்தபடி வந்தான் சஞ்சித்.
“ஐயோ! ஏன் இவ்வளவு சத்தம்? அம்மாவுக்குத் தெரிஞ்சா கேள்விமேல கேள்வி கேட்பாங்க” என பதறியவளை இன்னும் சீண்டும் எண்ணம் வர.. அவனின் பார்வையில் அதைப் புரிந்தவளோ “வேண்டாம் அத்தான். நீங்க கோர்த்து விடுற அளவுக்கு பெருசா எதுவுமில்ல.”
“ஆனா ஏதோ இருக்கு.” அவனின் ஆழ்ந்த பார்வையில் நட்சத்திராவின் அமைதியினுடனான வெட்கம் ஏதோ சொல்ல “பார்த்துப் பேசுனியா?” என்றான் சஞ்சித்.
“ம்...” அவள் சொன்னதும்... “அவருக்கு நீதான் பொண்ணுன்னு தெரிஞ்சிருச்சா?” என்று யோசனையுடன் கேட்டான்.
“இன்னும் இல்ல அத்தான். என்னைப்போல் அவங்களுக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்னு அவங்க பார்வையில் தெரிஞ்சது.”
“எப்படிச் சொல்ற? வீட்ல பெண்பார்க்க கொடுத்த போட்டோவையே இன்னும் பார்க்கலைன்றப்ப அது நீதான்னு எப்படி வந்து உன்கிட்ட பேசினார்?”
“என்னை மாதிரி அவங்களும் லவ் அட் பர்ஸ்ட் சைட்டா இருக்கலாமே அத்தான். என் போட்டோவைப் பார்த்தா மறுக்கமாட்டாங்கன்ற நம்பிக்கை எனக்கிருக்கு.”
அவளின் உறுதியில் எல்லாம் சரியாக நடக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. “மறுப்பா எதாவது சொல்லட்டும் வீடு புகுந்து தூக்கிடுறேன் அவனை” என்று சஞ்சித் தன் வீரவசனத்தை அள்ளிவிட...
“ஹலோ! மரியாதை சார்.”
“சரிங்க மேடம். உங்க அவரைத் தூக்கிடுறேன்” என்றான் பவ்யமாய்.
“அதுக்கெல்லாம் நீங்க வளரணும் அத்தான்” என்றாள் சிரித்தபடி.
“ஏன்? என் வளர்த்திக்கென்ன குறை?”
“என்னவா? அவங்க ஹேண்ட்சம் பாய். நீங்க ஒரு பால்டப்பா.”
“ஓய்...!!” என்றலற..
“என்ன சத்தம் மிஸ்டர்.சஞ்சித்? அவங்க பேச ஆரம்பிச்சா அந்த இடமே அதை ரசிக்கும். நீங்க ஆரம்பிச்சா நாங்கள்லாம் ஓடிருவோம்.”
“அது அவரோட தொழில். கோர்ட்ல பேசும்போது எழுந்துபோக முடியாததால எல்லாரும் உட்கார்ந்திருப்பாங்க. அதுக்காக உங்காள் பேசுறதை ரசிச்சி கிடையாது” என்றான் நக்கலாக.
அவனை முறைத்து “அவங்க ஆறடியைத் தொடப்போற உயரம். நீங்க...”
“அவர் தொடப்போற உயரம்தான் நான் ஐந்தரை அடியைத் தொட்டுத் தாண்டின உயரம். ஒத்துக்குறேன் உங்காளைவிட நான் பெஸ்ட் கிடையாதுதான். அதுக்காக நான் ஒர்ஸ்டும் கிடையாது.”
“நீங்களும் நல்லவர் அத்தான். அவங்க ஒரு டிசைன்னா நீங்க ஒரு டிசைன்” என்று புன்னகைக்க..
“அடப்பார்றா! பேச்செல்லாம் ஓவர் தெளிவாயிருக்கு. காதல்னு வந்துட்டா எல்லாரும் பைத்தியமாதான ஆவாங்க. நீ மட்டும் எப்படி நதிமா புத்திசாலியா மாறின?” என்றான் ஆச்சர்ய பார்வையில்.
“அதெல்லாம் அப்படித்தான்” என்று புன்னகைத்து “என்னை அவங்களுக்குப் பிடிக்கும்ல அத்தான்?” எனக்கேட்டாள்.
“உன்னைப் பிடிக்கலைன்னு யாராவது சொல்ல முடியுமா. நீங்க ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதரா ரொம்பவே பொருத்தமா இருக்கீங்க. அதுசரி இப்பதான உன்னை அவருக்குப் பிடிச்சிருக்கிறதா சொன்ன?”
“அப்படித்தான தெரிஞ்சது. இருந்தாலும் என்னன்னு சொல்லத்தெரியாத ஒரு பயம் உள்ளுக்குள்ள முரண்டுது.”
“கல்யாணம் உறுதியானா எல்லாமே சரியாகிரும் நதி.”
“வாடா சஞ்சித். என்ன காலையிலேயே வந்திருக்க?” என்று மருமகனை வரவேற்றார் யசோதா.
“வேலைக்குக் கிளம்பிட்டேன் அத்தை. நதி ஏதோ வாங்கணும்னு சொல்லியிருந்தா. அதான் என்னன்னு கேட்டுப்போக வந்தேன்.”
“நதிமா அவனை ஏன் அலையவிடுற? ஏற்கனவே உடம்பு சரியில்ல. கூட்டத்துல போனா நல்லாயிருக்காது” என்று மகளைத் திட்டி “அவளோட தேவைக்கு அவளே வாங்கிப்பா. நீ சாப்பிட்டியா? சாப்பிடலைனா டிபன் வைக்கிறேன் சாப்பிட்டுக் கிளம்பு.”
“அத்தை என்னை ஒரேயடியா நோயாளி ஆக்கிடாதீங்க. நான் ஸ்ட்ராங் பாடி.”
“ஆமாம்மா. இந்த பால்டப்பா செம பாடிதான்” என கிண்டலடித்த மாமன் மகளின் தலையில் தட்டி “நான் கிளம்புறேன் அத்தை. மாப்பிள்ளை வீட்டிலிருந்து தகவல் வந்ததும் சொல்லுங்க.”
“இன்னைக்கு இல்ல நாளைக்குள்ள தெரிஞ்சிரும்பா. தகவல் வந்ததும் சொல்றேன்” என்று அவனை அனுப்பிவைத்தார்.
மகளின் ஆசையை நிறைவேற்ற இரவே வந்துவிட்டார் ரவிச்சந்திரன்.
காலையில் வேலைக்குக் கிளம்பி வந்த மகனிடம் “இன்னைக்கு லீவ்தான அரி? இப்ப எங்க கிளம்பிட்ட?” என சகுந்தலா கேட்க..
“கேஸ் விஷயமா போக வேண்டியிருக்குமா. வர நைட்டாகிரும்.”
“நான் உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன்.”
“எதைப் பற்றிப் பேசணும்மா?”
“பொண்ணு போட்டோ தந்தோமே. அதைப்பற்றிப் பேசத்தான்ணா?” மின்னல் ஆர்வமாய் இடையிட்டாள்.
“அதான் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் சொன்னேனே. முதல்ல உனக்குப் பார்க்கலாம் மின்னல்.”
“அண்ணா! என்ன சொல்ற? விளையாடாம பொண்ணு ஓகேவான்னு பார்த்துச் சொல்லு?” என்றாள் கோவமாக.