• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
9

தோழியின் தாயிடம் பேசி முடித்துத் தன்னைத் தாண்டிச் செல்லும் தங்கையை வழிமறித்து, “என்ன பிரச்சனை? யார் அந்தப்பொண்ணு?” என கேட்டான்.

“அம்மா! நான் யாருக்கும் பதில் சொல்ற மூடுல இல்லை. அவங்கவங்க வாழ்க்கையை அவங்களே முடிவெடுத்த பிறகு, யார் எக்கேடு கெட்டா அவங்களுக்கென்ன? காலையில யசோம்மா வீட்டுக்குப் போகணும். நான் படுக்குறேன்மா” என்று தன் அறைக்குச் சென்றாள்.

சொல்ல முடியாத ஒரு எரிச்சல் அவனிடம். ‘காதல் தவறா? பெண்ணை.. பெண்ணின் குணத்தைப் பார்க்காமல் ஏன் ஜாதி மதம்னு ஒரு வட்டத்துக்குள்ளயே இருக்காங்க.’ அதைவிட தங்கையின் இந்த முகம் அவனது அதிர்ச்சிக்கு அளவில்லாமல் போனது. எப்பொழுதும் ஜாலியாக சுற்றி அரட்டையடித்து முடிந்தால் மற்றவர்களைக் கலங்கடித்து கேஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தேர்ந்த ஜர்னலிஸ்ட் லெவல்கு வேலை செய்பவள் என் தங்கை.

‘இவள் அவள் கிடையாது. இவள் யாரோ ஒருத்தியின் தோழி. தோழிக்காக உடன்பிறந்தவனையே தூக்கிப் போடுகிறாளா? அப்படியென்ன தெய்வீக நட்பு அவர்களது?’

வீட்டுப் பெரியவர்களும், அவனை ஒரு ஜந்து போல் பார்த்துச் செல்வதை உணர்ந்து, அவனுக்குள் தான் விரும்பும் பெண்ணையே இந்த வீட்டு மருமகளாகக் கொண்டு வருகிறேன் என்ற வீம்பு.

ஆண் பெண் யாராயினும் காதல் என்றொன்று வந்துவிட்டால் அதை மறுப்பவர்கள்தான் முதல் எதிரி. இதில் தாய் தந்தையும் அடக்கம்.

மறுநாளைய விடியல் பலதுளிக் கண்ணீருடன் ஆரம்பித்து சிறுதுளி சந்தோஷமுமாய் அஸ்தமிக்கக் காத்திருந்தது.

காலையில் எழுந்ததுமே அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டாள் நட்சத்திரா. இரவு மின்னல் பேசியதை வைத்து ஓரளவு இதை எதிர்பார்த்தே இருந்தவர்கள் என்பதால் மகளிடம் மேற்கொண்டு எதையும் கேட்கவில்லை. இரவு அழுதிருந்தாலும் காலையில் தன் ஏமாற்றத்தை மறைத்து இயல்பாக அவள் இருக்கையில் அதுவே போதுமென்ற எண்ணமே அவர்களுக்கு.

காலை எட்டு மணிக்கெல்லாம் நட்சத்திராவைத் தேடி வந்துவிட்டாள் மின்னல் கொடி. அவளிடம் நடந்ததைப்பற்றி விசாரிக்கவோ முகத்தில் அதற்கான முகச்சுளிப்பைக்கூட யாரும் காட்டவில்லை. தனி ஒருத்தரின் முடிவிற்கு வீட்டினர் அனைவரையும் குற்றம் சொல்வது தவறென்பதை புரிந்தவர்கள். வாழ்க்கையின் அனுபவங்கள் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடம். அந்த புரிதல் குணம்தான் நட்சத்திரப் பெண்ணவளிற்குமே!

“யசோம்மா நதி எழுந்தாச்சா?”

“எழுந்து காஃபி குடிச்சிட்டு குளிச்சிட்டு வர்றேன்னு போயிருக்கா. நீ காஃபி குடிச்சியா?”

“ம்… தெரியலையே?”

அவளின் பதிலே அவளின் குழப்ப நிலையைச் சொல்ல அவளிற்காக மனம் இளகித்தான் போனது. ‘நட்பென்ற உறவில் இவ்வளவு அன்பிருக்குமா? தங்களுக்கும் நட்புகள் இருக்கிறார்கள்தான். இவர்கள் போல்... ம்கூம்..’ அவளின் தலைவருடி “நீ உட்காரு காஃபி எடுத்துட்டு வர்றேன். குடிச்சிட்டிரு அதுக்குள்ள வந்திருவா.”

“ம்... எ...எதாவது சொன்னாளா யசோம்மா?”

“இரு வர்றேன்” என்று காஃபி எடுத்து வந்து அவள் கையில் கொடுத்து அருகில் அமர்ந்தவர், அவள் கலங்கிய கண்களைக் கண்டு, “குடி” என்றதும் அவள் குடித்து முடிக்கவும், “ஏன் எதோ தப்பு செய்த மாதிரி கண் கலங்குற?” என்றார் வாஞ்சையாய்.

“அ...அது யசோம்மா...”

அவளின் கைபிடித்து கண் துடைத்து, “இன்னாருக்கு இன்னார்னு கடவுள் எழுதி வச்சதை அழிக்க முடியாதுடா. என் பொண்ணுக்கு உன் அண்ணன்தான்னு எழுதி வைக்கலை போல. அதுக்கு ஏன் வருந்தணும்? உன் எதிர்பார்ப்புக்கு உன் அண்ணன் அடிபணியனும்ன்ற அவசியமில்லையே. எதையும் மறைக்காம உங்ககிட்ட உண்மையை சொல்லி இருக்கிறப்ப ஏன் கோவம் வரணும்? வீட்டுல உள்ளவங்களுக்காக சம்மதம்னு தலையாட்டி, தாலி கட்டுற டைம்ல காதலிச்ச பொண்ணுதான் முக்கியம்னு விட்டுட்டுப் போன பசங்களைப் பார்த்திருக்கேன். அதுக்கு இது எவ்வளவோ பெட்டர். உன் அண்ணன் மனசுக்கு சரின்னு பட்டதைச் சொன்னதுல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. என்ன ஒரே வருத்தம்னா, உன்கூட, உன் அரவணைப்புல பாதுகாப்பா இருப்பாள்னு நினைச்சோம். விடு அவளுக்குன்னு ஒருத்தன் இனிமேலா பிறக்கப்போறான்.”

“இதோ வந்துட்டேன்” என்ற குரல் தெய்வகானமாய் கேட்டதோ! வெளியில் காலணியைக் கழட்டி உள்ளே வந்த சஞ்சித்தை, யோசனையுடன் பார்த்தார் யசோதா. மனதில் தோன்றியது சரியா? தவறா? என்று அலசிப் பார்க்கக் கூட இல்லாமல் முடிவெடுத்துவிட்டார்.

“வா சஞ்சித். என்ன வேலைக்குப் போகலையா?”

“எங்க அத்தை. வேலைக்குப் போறதுக்கு முன்ன நல்ல நியூஸைக் கேட்க ஓடோடி வந்துட்டேன். ஹேய்! மின்னல் நீ இங்கயா இருக்க? சத்தம் கொடுத்திருக்கலாம்ல. நீ உட்கார்ந்திருக்கிறதே தெரியலை” என்று அவளைக் கலாய்க்க, மத்த நேரமெனில் அவனை ஒருவழி பண்ணியிருப்பாள். இன்றோ!

“நீ ஆபீஸ் போகலையா மின்னல்? காலையிலயே தோழியை சந்திக்க வந்திருக்கன்னா, ஏய்! சென்னைத் தமிழுக்குப் பதிலா, நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ்னு எதாவது முயற்சிக்கப் போறீங்களா?” என்றான் கிண்டலாக.

“அந்த கேஸ் அன்னைக்கே முடிஞ்சிருச்சி அண்ணா. இனிமேல் அப்படி ஒண்ணு வந்தா பார்க்கலாம்.”

“என்ன கேஸ் சஞ்சித்?”

“அன்னைக்கு நடந்ததைச் சொல்றேன் மாமா. இவங்க க்ரூப் ஒரு கேஸ் எடுத்தா முடிக்காம கீழ வைக்குறதே இல்லை. அவங்க எடுக்கிற கேஸ்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்கறாங்க. உங்க மேம் சூப்பர்னா, அவங்க நினைக்கிறதை நடத்தி முடிக்கிற உங்க அண்ணன் சூப்பரோ சூப்பர். உங்க வக்கீல் ஏரியாவுல பிரபலமான ஃபிகர் அவர். ஐ இன்ஸ்பைர்ட் ஆப் ஹிம்” என்றான் சஞ்சித்.

‘ஆமா நீங்கதான் அவனை மெச்சிக்கணும்.’ மனதினுள் நினைத்து, “அது ஜீன் ப்ராப்ளம்ணா. தாத்தாவும் வக்கீலா இருந்தவர். அப்பாவும் வக்கீல். பிள்ளைங்க நாங்க ரெண்டு பேருமே வக்கீலா. அதான் எல்லாத்தையும் நேரடியா பேசிடுறான்.”

“இப்பதான் ஞாபகம் வருது. உன் வீட்டுல என்ன சொன்னாங்க? நட்சத்திராவை வேண்டாம்னு சொல்ல யாருக்கும் மனசு வராது. சோ, பதில் பாசிட்டிவ்தான?” என்றான் ஆர்வமாய்.

“இல்லண்ணா. பாசிட்டிவான பதில் என்கிட்ட கிடையாது” என்றதும் புன்னகைத்த அவன் முகம் மாற, “அண்ணனுக்கு வேற ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்காம். நதி போட்டோ கூட பார்க்கல. பேசிப் பார்த்தும் பிரயோஜனமில்லை. வீட்டுல யாரும் அவனோட பேசிக்கவும் இல்ல. நைட் நாங்க பேசினதை நதி கேட்டுட்டா. லேட் நைட்ல வர முடியலை. அதான் காலையிலயே வந்துட்டேன்” என்றாள் வருத்தமாக.

முகம் செத்துப்போனது சஞ்சித்திற்கு. ஏனெனில் நட்சத்திராவின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்ற உணர்வு. அது அந்த மார்கழி ஒன்று!

கோவிலில் அவள் கண்கள் அரிச்சந்திரனை பார்க்காததுபோல் பார்த்ததைக் கண்டிருந்தான். பூஜை முடித்துத் திரும்பும்போது தங்களைக் கடந்த வாகனத்தில் அவளின் கண்கள் அடிக்கடி சென்று திரும்ப, ஏதோ ஒரு படபடப்பு அவளுள் எழுந்ததை யோசனையுடன் பார்த்திருந்தவன், காரின் எண்ணைக் குறித்துக்கொண்டான். அடுத்தடுத்த தினங்கள் அந்தக்காரின் வருகையிருக்க, காரைப் பின்தொடர்ந்து இருப்பிடம் அறிந்தவனுக்கு, அதை மேலே கொண்டு செல்ல ஆவல்.

மாமன் மகளின் கண்களில் தெரிந்த ஆர்வம் மட்டுமே அவனுள். அவளின் பழைய வாழ்க்கை அவளை சந்திக்கும் முன், ஒரு நல்லவனிடம் அவளை ஒப்படைக்க எண்ணியது மனம். அதன் பின்னே அரிச்சந்திரனைப் பற்றி விசாரிக்க, வீட்டின் வசதியை விட, வீட்டிலுள்ளவர்களின் வேலை அவனை பிரமிக்க வைத்தது.

உச்ச நீதிமன்ற அரசாங்க மூத்த வக்கீல் ரவிச்சந்திரன். அவரிடம் உதவியாளராக நிறைய பேர் இருக்கிறார்கள். அதை மிஞ்சிய வழக்குகள் அவருக்கு. அவர் எடுக்கும் வழக்குகள் யாவும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் சம்பந்தப்பட்டதுடனான, நாட்டையே உலுக்கும் சர்ச்சைக்குரிய வழக்குகளே! தொலைக்காட்சியில் அவரின் பெயர் அடிபடாத செய்தி ஊடகங்களே கிடையாது. வீட்டைப் பொருத்தவரை மிகவும் எளிமையானவர்.

மகனும் அப்பாவைத் தொடர்ந்து வந்தாலும், சில வருடங்களில் அவனின் புகழும் உச்சியை எட்டும் என்பதில், சஞ்சித்திற்கு ஐயமில்லை.

அரிச்சந்திரன் நினைத்தால் வழக்குகள் வரிசை கட்டி நிற்கும். அவனுக்கு தற்பொழுது அதில் விருப்பமில்லை. புகழ் இல்லாத சாதாரண வக்கீலாக சிறிது காலம் வலம் வரவே விரும்பினான். தன்யா பற்றி சில வருடங்களாகக் கேள்விப்பட்டவனுக்கு, அவளுக்கு ஜுனியராக சேரும் ஆவல் எழுந்தது. பெயர் பெற்ற வக்கீலின் மகன் பெண்ணிடம் வேலை செய்வதா, என்ற ஈகோ இல்லாமல் தன்யாவிடம் இருந்தால் தனக்கு நிறைய அனுபவம் கிடைக்குமென்றே உதவியாளனாக சேர்ந்தான் அரிச்சந்திரன்.

நீ பெரிய வக்கீலின் மகன் என்ற சலுகைகள் அவளிடம் கிடையாது. பிடித்த மனிதர்களிடம் மரியாதை என்ன விலையென்று கேட்கும் ஆள் அவள். இருவருக்கும் ஒரே வயதுதான். அவன் அனைவரையும் அர்ஸ் என்று அழைக்கச் சொன்னாலும் அவளைப் பொருத்தவரை சந்துரு மட்டும்தான். சில சமயம் ‘டா’ கூட வரும். அதை.. அந்த பாரபட்சமில்லாத செயல்களைத்தான் அவனும் விரும்பினான்.

அரிச்சந்திரனைப் பொருத்தவரை தன்யா மரியாதைக்குரியவள்! ஆதலால் ‘மேம்’ மட்டுமே அவனின் அழைப்பு. இதுவரை யாரிடமும் பயிற்சிக்குப் போகவில்லை. தனியாக போகச் சொல்லியும் தேவைப்படும் பொழுது தானே சென்று விடுவதாகச் சொல்லிவிட்டான். அவனைத் தொடர்ந்து பாசக்கொடி மின்னலும்.

அனைத்தையும் விசாரித்து அறிந்திருந்தான் சஞ்சித். அவர்கள் வீடு மட்டுமே நட்சத்திராவிற்கு பாதுகாப்பு என்ற குருட்டு நம்பிக்கை அவனுக்குள். மின்னல், நதியின் தோழி என்பது இன்னும் மிகுதியாக அவளிடமும் நேரடியாகப் பேசி பெண் பார்க்கத் தரகரை புகைப்படத்துடன் அனுப்பிவிட்டான்.

இதோ தன் முயற்சியெல்லாம் நீர்த்துப்போக, அடுத்து என்னவென்று புரியா நிலையில் அமர்ந்திருந்தான் சஞ்சித்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
அவர்களின் அத்தனை புலம்பல்களும், தவிப்புகளும் தேவையேயில்லை என்பதாய் புன்னகையுடன் வந்தாள் நட்சத்திரா.

“ஹாய் சஞ்சித் அத்தான்.” அத்தை மகனை வரவேற்று தோழியிடம் திரும்ப, “ஹேய் மயிலு என்ன காலையிலேயே தேவி தரிசனம்? யாரையாவது ரௌண்ட் கட்டணுமா? என்னடி பேன்னு நிற்கிற? என்ன சஞ்சித் சார் ஃபீலிங்ஸா? இதுவும் கடந்து போகும். வாழ்க்கை தத்துவம் மக்களே” என்று சிரித்தாள்.

அனைவரும் அவளை ஆராய்ச்சியாய் பார்க்க,

“ம்மா... ஃபீலிங்ஸை ஓரங்கட்டி, பிராக்டிகலுக்கு வந்துட்டேன். ஜஸ்ட் பொண்ணு பார்க்கிறதுதான? இதுக்கு ஏன்?“

‘பொண்ணு பார்க்கிறது மட்டும்தானா?’ கேட்டது அவர்கள் மனம். அப்பா அம்மாவிற்கு தான் விரும்புவது தெரியாதென்றே பேசினாள். அவர்கள் அவளின் மனதைப் படித்தது அவளுக்குத் தெரியாதே.

“என்ன லுக்கு? போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க. அப்பா நீங்க வேலைக்குக் கிளம்பலையா? நீ என்னடி காலையிலயே இங்க நிற்கிற?”

“ம்... நான் யசோம்மாவைப் பார்க்க வந்தேன்.”

உதட்டை சுளித்து தோள் குலுக்கி, “உன் யசோம்மாவைச் சந்திக்க தடையேதும் இல்லை பெண்ணே! சரி நான் கோவிலுக்குப் போறேன். நீ வர்றியா மயிலு?”

தன் மகளையே பார்த்திருந்த யசோதா கிடைத்த சந்தர்ப்பத்தை விட மனமில்லாது, “நதிமா நீ பிராக்டிகலா யோசிக்கிறவள் தான?” என கேட்டார்.

மற்றவர்கள் புரியாது அவரைக்காண, “எஸ்மா” என்றாள் மகள்.

“அப்ப சஞ்சித்தைக் கல்யாணம் பண்ணிக்கோ” என்று அசராமல் குண்டைப்போட, அனைவருக்கும் அத்தனை அதிர்ச்சி. “சீரியஸாதான் நதிமா சொல்றேன்” என்றார் விடாமல்.

“யசோ எதுக்கு இப்படிலாம் பேசுற? இவ்வளவு அவசரம் எப்பவும் நல்லதுக்கில்ல. கொஞ்சம் நிதானமா இரு” என்றார் நந்தகுமார்.

“இல்லங்க. நன்றே செய். அதுவும் இன்றே செய். அப்படிதான் எல்லா விஷயத்திலும் இருக்கணும்” என்றவர் மருமகனிடம் திரும்பி, “நீ சொல்லு சஞ்சித்? நீ என் பொண்ணை பத்திரமா பார்த்துக்கமாட்டியா?”

அதிர்வில் இருந்து மீண்டவன், “பத்திரமா யார் வேணும்னாலும் பார்த்துக்கலாம் அத்தை. அதுக்குக் கல்யாணம் தேவையில்லையே. என்னால எப்படி அவளை... ப்ச்... பாதுகாக்குறேன்ற பெயர்ல வேலியில்லாத இடத்துல பயிரைப் பிடுங்கி வைக்கப் பார்க்குறீங்க அத்தை” என்றான் அனைத்தும் யோசித்து.

“உன் குடும்பம்தான்டா என் பொண்ணுக்கு வேலி. அதைவிட பாதுகாப்பு யார் கொடுக்க முடியும்?”

“ஒரு பொண்ணுக்கு குடும்பம் முக்கியம்தான் அத்தை. அதைவிட கடைசிவரை வரப்போற கணவன்ற உறவு, எல்லாத்தையும் விட முக்கியமில்லையா? அந்த பாதுகாப்புக்கு என்னால கேரண்டி கொடுக்க முடியாது. அதுவும் இல்லாம என்னால எப்படி நதியை... சான்ஸேயில்லை அத்தை” என்றான்.

மின்னல் தோழியின் முகத்தையேதான் பார்த்திருந்தாள். முதலில் அதிர்வு தோன்றினாலும் அதன்பின் அவளிடமிருந்து எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது.

“யசோ” என இடையிட்ட கணவரிடம்,

“என் உள் மனசு ஏதோ தப்பா நடக்கப்போகுதுன்னு சொல்லுதுங்க. ஒருவேளை உரிமை கொண்டாடி அவன் வந்துட்டா? இவளை தூக்கிக் கொடுக்கச் சொல்றீங்களா? அப்ப நம்ம பொண்ணு வாழ்க்கை நரகமாகிராதா? அவனைத் தடுக்கிற அளவுக்கு நம்மகிட்ட என்ன பவர் இருக்கு? கல்யாணம்னு ஒண்ணு நடந்துட்டா, அவன் இவளைச் சீண்ட மாட்டான்ல.”

அவருக்கெங்கே தெரியப்போகிறது, அவனுக்குத் தேவை நட்சத்திரா என்பவள் மட்டுமே! அவள் வயதுப் பெண்ணாய் இருந்தால் என்ன? திருமணமாகி அடுத்தவன் மனைவியாய் இருந்தால் என்ன. அனைத்தும் அவனுக்கு ஒன்றே! அவனின் தேடல் நட்சத்திரா மட்டுமே! இதை யாரும் அறியார்!

“யசோம்மா அவசரப்படுறீங்க தோணுது.”

“இல்லடா கொடி. அவசரத்துல எடுத்தாலும் ஆழமா யோசிச்சிதான் எடுத்திருக்கேன். சஞ்சித்துக்கு என்ன குறை சொல்லு?”

“நானே குறைதான அத்தை. நதிக்கு நானா? கேட்கிற எனக்கே சகிக்கலை. உங்களுக்கு எப்படி இப்படிலாம் பேச முடியுது” என்றான்.

“ஏன் அத்தான் உங்களுக்கென்ன குறை?” என்ற நட்சத்திராவின் வார்த்தையில் அனைவரும் அதிர, யசோதாவிற்கு தன் மகள் முடிவெடுத்துவிட்டது புரிந்தது.

“சொல்லுங்க சஞ்சித் அத்தான்? அதுதான் பிரச்சனைன்னா இப்பவே மறந்திருங்க. எனக்கு எந்த குறையும் தெரியலை” என்றாள் தெளிவாக.

“நதி கொஞ்சம் யோசிச்சி...”

“இல்ல கொடி முடிவு பண்ணிட்டேன். அப்பா அத்தைகிட்ட பேசிருங்க. இந்தக் கல்யாணத்துல எனக்கு முழுச் சம்மதம்” என்றாள் அழுத்தமாக.

“எனக்கு சம்மதமில்லை” என பட்டென்று சொன்னான் சஞ்சித்.

“இட்ஸ் ஓகே. நான் அத்தைகிட்ட சம்மதம் வாங்கிக்குறேன். அத்தை சொல் மீறிருவீங்களா என்ன?”

“நட்சத்திரா நீ ஏதோ குழப்பத்துல இருக்க. இப்ப எடுக்கிற எந்த முடிவும் வாழ்க்கைக்கு உகந்ததல்ல” என்றான் திரும்பவும்.

“அதை வாழ்ந்து பார்த்து தெரிஞ்சிக்கலாம் அத்தான். நான் யதார்த்தவாதி. ஒண்ணு கிடைக்கலன்னா அதையே பிடிச்சி தொங்குற ஆள் கிடையாது. யாரைக் கல்யாணம் செய்தாலும், தாலின்னு ஒண்ணு ஏறிட்டா, அவங்களுக்கு நூறு சதவீதம் உண்மையானவளா இருப்பேன். அப்புறம் உங்க இஷ்டம்” என்றாள் நட்சத்திரா.

“அப்பா, அம்மா, முதல்ல நீங்க ரெண்டு பேரும் பேசி அப்புறம் அத்தை மாமாகிட்ட டிஸ்கஸ் பண்ணி சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க. இப்ப நான் கோவிலுக்குப் போறேன்” என்று தோழியையும் இழுத்துச் செல்ல, நட்சத்திராவின் முகத்தை மட்டுமே பார்த்திருந்தாள் மின்னல் கொடி.

“என்னடி முகத்தையே பார்க்கிற? திடீர்னு ஜொலிக்கிறேனா என்ன?” கிண்டலாகக் கேட்டாள்.

“இல்லடி. நல்லா பெர்ஃபெக்டா நடிக்கிறன்னு பார்க்கிறேன். எனக்குத் தெரியாம இந்த வித்தையை எங்க கத்துக்கிட்டன்னு பார்க்கிறேன்.”

“ஹா...ஹா வா கோவில்ல போயி உட்கார்ந்து பார்க்கலாம்” என்று மின்னலை இழுத்துச் சென்றாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top