- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
2
நடந்து வந்த வழியில் கேட்ட தமிழ் வார்த்தையில் என்னவென்று தெரியாமலேயே இருவரும் தேங்கினர்.
“என்னமா நீ? மனசு கஷ்டப்பட்டியேன்னு தான் கூட்டிட்டு வந்தேன். நீ அழுதா என்னால பார்த்திட்டிருக்க முடியாது. தயவுசெய்து அழுகையை நிறுத்தேன்” என்றான் தவிப்புடன்.
“திரும்பவும் என்னால அந்த நரகத்துக்கு போக முடியாது. ப்ளீஸ்ங்க. என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்களா?” என்றாள் அந்தப்பெண் ஏக்கக்குரலில்.
“உன்னை விட்டு வேற யாரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்? ஆனா, அதுக்கான நேரம் இது இல்லமா” என்றான் பணிவாகவே.
“ப்ளீஸ்ங்க. என்னைப் பார்த்தா பாவமா இல்லையா? இப்படியே வீட்டுக்குப் போகச் சொல்றீங்களா? என்னால அங்க நடக்கிறதைப் பார்த்துட்டு, பார்க்காத மாதிரியிருக்க முடியாது. அவங்க எதாவது அவசர முடிவெடுத்தாங்கன்னா, அப்புறம் நீங்க என்னை உயிரோடவே பார்க்க முடியாது” என்றாள் அதை செய்வேனென்ற குரலில்.
“ராஜீஈஈ” என அதிர்ந்து அடிக்க கை ஓங்கியவன், கைமூடி நிதானித்து, ‘ஏன்மா இப்படிப் பேசுற?’ என்றான் குரல் இறக்கி.
“அப்ப என் சூழ்நிலையைப் பற்றித் தெரிந்திருந்தும், நீங்க இப்படி பேசலாமா? நான் இப்படி இருக்கிறதால அந்த நாற்பத்தைந்து வயசு மனுஷன் வந்து பொண்ணு கேட்கிறான். எங்க வீட்லயும் எப்படா தள்ளிவிடுவோம்னு இருந்தவங்க, சந்தர்ப்பம் கிடைச்சதும் சரின்னுட்டாங்க. அடுத்த வாரம் நிச்சயதார்த்தமாம். என்னால எப்படி ஜெகன்?” என்று தேம்பித் தேம்பி அழுதாள்.
அவளின் தோள் தொட்டு “நீ அழக்கூடாது சொல்லிருக்கேன்ல. இப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கணும். அவ்வளவுதான? பண்ணிக்கலாம்” என்றதும் ராஜியின் முகம் மலர, “கல்யாணம் முடிஞ்சதும் என்ன செய்யலாம்ன்றதையும் நீயே சொல்லிரு”” என்று கைகட்டியபடி அவளையே பார்த்திருந்தான்.
“அ..அது உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க.”
“சரிமா. இந்த கல்யாணத்தை ஒத்துக்க முடியாது நீங்க வெளியே போயிருங்கன்னு எங்க வீட்ல சொன்னா, நெக்ஸ்ட் நம்மளோட அடுத்த நடவடிக்கை என்னவாயிருக்கும்?” பதிலை அவளிடமே கேட்டான்.
“அ..அது தெரியலங்க” என்றாள் பாவமாய்.
“தெரிஞ்சிருக்கணும் ராஜி. வாழ்க்கையை புரிஞ்சிருக்கணும். எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்யுறதுக்கு, இது ஒண்ணும் வெறும் மணல் கிடையாது. நாம கட்டப்போற வீடு. கடைசிவரை ஸ்ட்ராங்கா இருக்கணும். இப்ப நான் எம்.எஸ்.சி செகண்ட் இயர். நீ பி.எஸ்.சி பர்ஸ்ட் இயர். ரெண்டு பேரும் மிடில்கிளாஸ் பேமிலி. பொண்ணுக்கே இருபத்தோரு வயசுதான் திருமணத்திற்கு எனும்போது, ஆண் எனக்கு குறைஞ்சது இருபத்தைந்தாவது வேண்டாமா? அப்படியே வீட்ல சேர்த்துக்கிட்டாலும், எங்கப்பா சம்பாத்தியத்துல நாம உட்கார்ந்து சாப்பிடுறதை விட, நான் சம்பாதிச்சி உங்களைக் காப்பாத்தினேன்னு வையி, அது எனக்கும் ஏன் உனக்குமே பெருமைதான? இப்ப நாம விளையாட்டுத்தனமா செய்யுற காரியம், நம்மளை நம்ம ஃப்யூச்சரை பாதிக்க கூடாது. நமக்கு குழந்தை பிறந்தா அதோட ஃப்யூச்சரை யோசிச்சியா? நீ எங்க யோசிக்கப்போற? நம்மளைப் பற்றியே யோசிக்கல” என்றான் அவளுக்கு புரியவைக்கும் நோக்குடன்.
அதில்தான் இன்னொருத்தியும் வாழ்க்கையைப் புரிந்து கொள்கிறாள் என்பது தெரியாமலேயே!
“நீங்க சொல்றது எனக்குப் புரியுதுங்க. ஆனா, வீட்ல திடீர்னு மேரேஜ்ன்றாங்களே. அதை எப்படி நிறுத்துறது?” கலக்கமாய் கேட்டாள்.
“இது. இப்ப கேட்டியே இது எப்படியிருக்கு? மேரேஜை நிறுத்துறது எப்படின்னு என்கிட்ட ஐடியா கேளு. இல்லையா, பொறுப்பை என்கிட்ட விட்ரு. நான் பார்த்துக்கறேன். நீ நிம்மதியா இரு. அதை விட்டுட்டு இதுக்கு தீர்வு கல்யாணம் தான்னு முடிவு பண்ணினா எப்படிமா?”
“இந்த பிரச்சனையை சால்வ் பண்ணிருவீங்களா?” என்றாள் எதிர்பார்ப்போடு.
“கண்டிப்பா. என் ஃப்ரண்ட்ஸ் எதுக்கு இருக்காங்க. சும்மா சுத்துறதுக்கும் தண்ணியடிக்கிறதுக்குமா? இல்லமா. இந்த விஷயத்தை சொன்னா ஒரே நாள்ல நம்ம பிரச்சனையை தீர்த்திருவாங்க. ஸோ, உன் கவலையை என்கிட்ட ஒப்படைச்சிட்டுப் போ. உனக்கு நான் இருக்கேன் எப்பவும் எல்லாமாகவும். என்னை நம்புறதான?”
‘ம்..’ என தலையசைத்ததும், அவளின் தலையை மெல்ல வருடி, “இந்த நம்பிக்கையை காலத்துக்கும் என் மேல வை. உன்னை நான் பார்த்துக்கறேன்” என்றான்.
“ஐ லவ் யூ ஜெகன். என்னை மாதிரி ஒரு பொண்ணுக்கு, கல்யாண லைஃபே கனவுன்னு நினைச்சிட்டிருந்தேன். நீங்க எனக்கு கடவுள் அனுப்பிய கிஃப்ட் ஜெகன். லவ் யூ” என்றாள் உணர்ச்சிப்பூர்வமாக.
“மீ டூ ராஜி. இனிமேல் படிப்புல கான்சன்ட்ரேட் பண்ணு. சரிமா போகலாமா” என்று அவளருகிலிருந்த ஸ்டிக்கை எடுத்துக்கொடுத்து, அவள் நின்றிருந்த இடத்திலிருந்து நகரும் பொழுதுதான் பாகீரதியும், தாரிணியும் பார்த்தார்கள் அப்பெண்ணிற்கு கால் ஊனமென்று.
அதுவரை அவர்களின் பேச்சை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்த தோழிகள் இருவரும், அதிர்ந்துதான் போனார்கள் அவளின் நிலையைப் பார்த்து. பையனுடன் சேர்த்துப் பார்க்கும் பொழுது அவனில் பாதி கூட அழகிலும் ஈடில்லை. அவளின் குணம் பார்த்து விரும்பியிருக்கிறான் என்றே தோன்றியது. இவ்வளவு நேரம் பேசியவன் முகத்தில் பேருக்குக் கூட புன்னகை மறையவில்லை. ‘லக்கி கேர்ள்’ என்ற எண்ணம் இருவருக்குள்ளும். “ஜெகன்-ராஜி” என்ற பெயர்கள் பாகீரதி மனதில் கல்வெட்டாய் பதிந்தது. பிற்காலத்தில் அவர்களும் தன் வாழ்க்கையில் இடம் பிடிப்பார்கள் என்பது தெரியாது பாகீரதிக்கு.
அவர்கள் சென்றதும் நண்பர்கள் வர, அவர்களுடன் நடந்தபடியே யோசனையிலாழ்ந்தாள். ‘நிதிஷ்! அவனுக்கு காதல் தன் அழகின் மேல். அது காதலா? இல்லை சலனம். சலனம்தான்.. இன்பாசுவேஷன்! நானும் அவனை விருப்பப்பட்டா சம்மதிச்சேன். அந்தப்பெண் சொன்னது போல், பிரச்சனையிலிருந்து தப்பிக்க எனக்கான வழி என்று தேர்ந்தெடுத்ததுதானே. இன்னும் மீசை கூட முழுவதும் வராத பையனுடன் திருமணமா? இப்பொழுது நினைக்கையில் தனக்கே தன்மேல் கோவம் வந்தது. என்ன பண்ணிட்டிருக்கேன் நான்? பிரச்சனையை எதிர்கொள்ள முடியாம கோழைத்தனமா, என்னால நிதிஷோட லைஃபும் கேள்விக்குறியாகிராதா? இப்ப அழகிற்காக வர்றவன், என்னைவிட அழகான பெண்ணைப் பார்த்ததும் வரலாறு திரும்பிருச்சின்னா, என்ன பண்ண முடியும் என்னால்?’
‘இல்ல வேண்டாம். எனக்கே எனக்குன்னு, இதோ இந்த ஜெகன் மாதிரி பக்குவப்பட்டவனா, எந்த சூழ்நிலையையும் நிதானமா கையாளுற பக்குவமுள்ளவனா, அதைவிட என் குணம் தெரிஞ்சி, என் குடும்ப நிலை புரிஞ்சி அதை கண்டுக்காம, என்னை எனக்காக விரும்புற ஒருத்தன் வேண்டும்’ என்று தெளிவாக முடிவெடுக்க கருடசேவை வந்திருந்தார்கள்.
“என்ன பாக்கி மனசு தெளிவாகிருச்சா?”
“ஆமா தர்ணி. நீ சொல்லும் போதெல்லாம் காதுல ஏறவேயில்லை. ஆனா, அந்த ஜோடியைப் பார்த்ததும் தான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணயிருந்தேன்னு தெரியுது. இனிமேல் படிப்பு மட்டும்தான் என்னோட எண்ணம். வேற எதையும் உள்ளே நுழைய விடுறதாயில்ல’ என மனதினுள் முடிவெடுத்தால்.
அவளின் நினைப்பை பொய்யாக்குவானா நம் ஹீரோ!
“வீட்டுப் பிரச்சனையையும் நானே சமாளிக்கிறேன். முடிஞ்சா படிப்பு முடியுறது வரை உன்னோட ஹாஸ்டல் வந்து, வீட்டை விட்டு விலகியிருக்கேன். என்ன அம்மாவை மிஸ் பண்ணுவேன். அப்... அப்பா ஏன் இப்படிப் பண்ணினாங்க தர்ணி? என்னால அம்மாகிட்டயும் சொல்ல முடியல. அவர்கிட்டேயும் நேரடியா கேட்க முடியல. மொத்தத்துல என்னால சகிச்சிக்க முடியலை தர்ணி. எப்படி மனசு வந்தது அம்மாவை விட்டுட்டு...” என தோழியின் தோள் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.
தோழியைத் தட்டிக் கொடுத்து, “இதுவும் கடந்து போகும் பாக்கி. உங்கப்பா விஷயத்துக்கு எதாவது காரணம் இருக்கலாம்” என்றதும், சட்டென்று நிமிர்ந்தவள், “என்ன காரணம்னு சொல்லு? நானே என் கண்ணால பார்த்து காதால கேட்டேன். அதை பொய்யின்றியா?” கண்கள் கோபத்தில் சிவக்க கேட்டாள்.
தோழியை நேரடியாக பார்த்து, “கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். இதுக்கு அர்த்தம் தெரியுமா பாக்கி?”
“தெரியும் தீர விசாரிக்கணும்னு. நானும் அங்கேயே அப்பாகிட்ட பேசினவர்கிட்ட விசாரிச்சேன். ரெண்டு பேரும் அன்னியோன்யமான புருஷன் பொண்டாட்டியாம். சென்னைக்கு ஒய்ஃபோட முதல்முறை வந்திருக்கிறாராம். அவங்களுக்கு இரண்டு பசங்க இருக்காங்களாம். இதுக்கு என்னடி சொல்ற?” என்றாள் தன் வலியை மறைக்க முடியாமல் வேதனையாய்.
“பாக்கி” என்று தோழியை தோள்தட்டி சமன்படுத்த முயற்சிக்க, “அம்மாவுக்கு என்ன குறை தர்ணி. அம்மாவை விட அந்த லேடி எந்த வகையில் உசத்தி? இதை மனசுல போட்டு புழுங்குறேன் தர்ணி. என்னால முடியல” என்றவள் கண்களில் சென்ற வாரம் தந்தையை பெரிய ஷாப்பிங் மாலில் இன்னொரு பெண்ணுடன் பார்த்தது நினைவு வந்தது.
ஷாப்பிங் போக தாரிணியை பாகீரதி அழைக்க, விடுதியில் இருப்பதால் நினைத்த நேரத்தில் வரமுடியாதென்று அவள் சொன்னதும், தன் பள்ளித்தோழி கீதாவை அழைத்துச் சென்றாள். ஸ்கூட்டியை வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைகையில், முன்னே செல்வது தன் அப்பா போல் தோன்ற, “ஹை.. அப்பா” என்றபடி அவர் பின்னே சென்றாள்.
அங்கிருந்த பரிசுப் பொருள் வாங்கும் கடைக்குள் அவர் நுழைந்ததும், ‘அப்பா’ என்றழைக்க வாய் திறக்கையில்,
“வாங்க சார். இது யாரு உங்க பையனா?” என்றார் அந்த கடைக்காரர் அதிக நாள் பழகியவர் போல். “பையனா!?” என்று அதிர்ச்சியானவள் அப்பொழுது தான் கவனித்தாள், அவரருகில் ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணியும், தன்னுடைய வயசு மதிக்கத்தக்க ஒரு பையனும் நின்று கொண்டிருந்தார்கள். ‘அப்ப அம்மாவை கல்யாணம் முடிச்சதிலிருந்தா?’ தன் அப்பாவின் பதில் இல்லையென்று வர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு செகண்டும் பாகீரதி கடவுளை வேண்டினாள்.
அவள் வேண்டுதலைப் பொய்யாக்கி, “ஆமா ஜெயந்தன். இது என் ஒய்ஃப் ரதி. இல்லை பாரதி. இவன் என்னோட சின்ன பையன் நவீன். இவனுக்குதான் எதோ வேணுமாம். முதல் டைம் சென்னைக்கு வந்ததால, ஒரே தொல்லை பண்ணியெடுத்துட்டான்” என்று முகம் முழுக்க புன்னகையுடன் கூறியவரைப் பார்த்து, அதிர்ச்சியில் பேச முடியாதிருந்தாள் பாகீரதி.
“ரதி-பாரதியா! அப்ப கலாரதி? கலா அம்மா பெயர். ரதி நானா? இல்லை இவங்களா? கார்மெண்ட்ஸ், டெக்ஸ்டைல்ஸ் பெயர் என்னுடையது இல்லையா? இவங்களோடதா? எனக்கும் அவங்க பெயர் வர்ற மாதிரி செஞ்சிருக்காங்களா? அதுவும் இத்தனை வருஷமா?” மனம் குழம்பினாள் பெண்ணவள்..
“அதான சார். இத்தனை வருஷம் கழிச்சி உங்களை இப்பத்தான் குடும்பத்தோட வெளியில பார்க்கிறேன்.”
“அட நீங்க வேற சார்” என்றபடி அவர்கள் பேச்சித் தொடர நடுவில் அந்தப் பெண்மணியின் தோள்மேல் கைபோட்டு, ஒவ்வொன்றாக காண்பித்து தேவையானதை எடுத்துக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் பையனும் அவரிடம் உரிமையாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை இவளால்.