• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
3


“என்ன ரதி இப்படிப் பண்ணிட்ட?” என்ற குரலில் தூக்கி வாரிப்போட திரும்பி சுற்றிலும் பார்த்தவளுக்கு, ‘இவன் தன்னிடம்தான் பேசினானா?’ என்ற சந்தேகமே வந்தது. அதன்பின் அவன் முகம் பார்க்க முயற்சிக்க, தனக்கு கீழுள்ள படியில் தன்னைப்போல் சாமியைப் பார்த்தபடி அமர்ந்திருந்ததால் பாதி முகம் மட்டுமே தெரிய, அதிலும் பாதியை அந்த கூலிங்கிளாஸும், ட்ரிம் செய்திருந்த தாடியும் மறைத்திருந்தது. குரலை மட்டுமே கேட்டவள், அவன் பேசப்பேச தன்னிடம்தான் சொல்கிறான் என்று புரியவே நிமிடங்களானது.

‘ரதி! எப்பொழுதாவது அன்பு மிகுதியில் அப்பா அழைக்கும் பெயர். தற்பொழுது அந்தப் பெயரில் கூட சின்னதாக வெறுப்பு இருந்தது. இந்தப் பெயர் இவனுக்கெப்படி?’ என்ற யோசனையில் அவனைப் பார்த்திருந்தாள்.

அவளைப் புரிந்தவனோ, “ரொம்ப யோசிக்காத ரதிமா. இனிமேல் இப்படிப் பண்ணாம படிப்புல கான்சன்ட்ரேட் பண்ணு. உனக்கு எப்பவும் நான் இருக்கிறேன். எப்ப உன் முன்னாடி வரணும்னு ஒரு கணக்கு வச்சிருக்கேன். அதற்கு முன்னே என் முடிவை மாத்த வச்சிராத. அதேமாதிரி, உனக்கு ஒரு கஷ்டம்னு தெரிஞ்சா கண்டிப்பா வருவேன். இப்பவும் உன்னை நம்புறேன் உன் வாழ்க்கையை நீ கெடுத்துக்க மாட்டேன்னு” என்றவன் குரலில் உறுதியிருந்தது. அவள் பதிலுக்கு கேள்வி கேட்க இடம் கொடுக்காமல் எழுந்து சென்றுவிட்டான்.

சென்றவன் முதுகையே வெறித்தவளுக்கு முகத்தைக் காண முடியவில்லை. ‘உனக்கு எப்பவும் நான் இருக்கிறேன்! உன்னை நம்புறேன்! ஏன் அப்படிச் சொன்னான்?’ என்ற குழப்பத்தில் நிற்க, தாரிணி வந்து அழைத்த பின்பே நினைவிலிருந்து மீண்டவள், “வழி தெரிஞ்சிருச்சா?” என்றாள்.

“ஆமா பாக்கி. சீக்கிரம் வா. டூ ஹவர்ஸ்ல வந்துரலாம். மற்ற நாளோட இன்னைக்கு கூட்டம் கம்மிதானாம்” என்றதும் சரியென்று சம்மதித்து அவள் பின்னால் சென்றவள், தனக்கு அறிவுரை சொன்னவனைப் பற்றி தோழியிடம் சொல்ல மறந்திருந்தாள். ‘ஆனால், அந்தக்குரல் மறக்குமா!’

கைபேசியை அணைத்து கைப்பையில் வைத்து டோக்கன் பெற்று அங்கிருந்த கடையில் கொடுத்துவிட்டு, உள்ளே வரிசையில் சென்று சாமியை நெருங்கி, வேங்கடவனைப் பார்த்த அந்த நொடி எதுவும் வேண்டத் தோன்றவில்லை. யாரும் நினைவிலும் இல்லை. ஒருவித பரவசத்துடனும், தெளிந்த மனதுடனும் கண்களால் பார்த்து தன்னுள் நிறைத்துக் கொண்டிருந்தாள் அந்த ஸ்ரீனிவாசனை. இடிபாடுகளுடன் வெளியே வர மனம் வெற்றுக் காகிதமாய் தெளிவுடன் இருந்தது. வெளியே வந்து கைப்பையை வாங்கி கைபேசியை உயிர்ப்பிக்க செய்ய அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. எடுத்ததும் “எங்கமா இருக்க?” என்றான் படபடப்பாக.

அண்ணன் ப்ரவீணின் குரலில், “பஸ் எங்க நிற்கும்னு கேட்டுட்டு வர்றோம்ண்ணா” என்று அருகிலிருந்த சாமி புகைப்படங்கள் விற்கும் கடையை அடையாளம் சொன்னாள்.

“அங்கேயே நில்லு. இதோ இரண்டு நிமிஷத்துல வந்திருறேன்” என்று சொன்னாற்போல் வந்தவன், அவளின் அலங்காரத்தையும், அவளின் தோழியின் சாதா ஆடையையும் பார்த்ததுமே விஷயம் புரிய, “வா போகலாம்” என்றான் இறுகிய முகத்துடன்.

அவன் முகத்தில் அப்படி ஒரு வேதனை. இவளுக்காக எத்தனை உறவுகள், எத்தனை தியாகங்கள் செய்திருக்கிறார்கள். எதையும் உணராமல் தன் வாழ்க்கையை சிக்கலாக்க முடிவெடுத்தில் அதிக கோபம் வந்தது. பின், இத்திருமணத்திலிருந்து தப்பித்து விட்டதாக தோன்றினாலும், மனம் ஆறவில்லை அவனுக்கு. ஆனால், அதை நேரடியாக தங்கையிடம் காட்டவோ, வெறுக்கவோ அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. பார்த்துப் பார்த்து வளர்த்தவனாயிற்றே! அவளே அவனின் உயிர் என்றால் அது மிகையாகாது!”

“அ..அண்ணா அது..” என தயங்கிய தங்கை குற்றவுணர்வில் தலை கவிழந்தாள்.

“அம்மு எதுவும் பேச வேண்டாம். எதுக்கு தப்பு செய்யணும்? எதுக்கு தலை கவிழணும். என் தங்கை எப்பவும் நிமிர்ந்து நிற்கிறதுதான் எனக்கு பிடிக்கும்” என்று தோளணைத்து தன் கோபம் குறைத்து, “வா போகலாம்” என்றான் மென்மையான குரலில்.

இதையெல்லாம் பார்த்திருந்த தாரிணிக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏற்கனவே தன் அண்ணனைப் பற்றி சொல்லியிருக்கிறாள்தான். இருந்தாலும், தங்கையை இந்த கோலத்தில் பார்த்து அவள் மேல் கோபம் வந்த போதும் அதை மறைத்து, கோபத்தை முகத்தில் மட்டும் காட்டியவன் மறந்தும் குரலில் காட்டவில்லை. தங்கையின் தலைகுனிவு முகத்திலிருந்த கோபத்தையும் மறக்கடிக்க பொறுப்பான அண்ணனாய் மாறி தங்கையை தோள் தாங்கியவனை ஆச்சர்யமாகவும், கொஞ்சம் பொறாமையாகவும் பார்த்தாள். ‘பாசக்கார பயபுள்ள’ என்று மனம் ஆசையாய் சடைத்துக் கொண்டது.

அவனோ தங்கையை விட்டு தோழியை முறைத்தான். முறைத்தான் என்பதை விட வெறுப்புடன் நோக்கினான் என்றே சொல்லலாம். அவனுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது தாரிணி மேல். நட்பு என்ற பெயரில் நல்லது சொல்லிக் கொடுக்காமல் தப்புத்தப்பாக அறிவுரை சொல்லி, அவர்களின் வாழ்க்கையைக் கெடுக்கிறார்களே என்பதுதான்.

“அண்ணா இவ என் ஃப்ரண்ட். இவளும் என்னோடதான் வந்தா...” மேலே என்ன பேசியிருப்பாளோ, அதற்குள் வேகமாக பேண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்து, அதிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்துத் தங்கையிடம் கொடுத்து, “அவங்களை பஸ்ல வரச்சொல்லிட்டு நீ வா” என்றபடி நடந்தான்.

“என்னது? தனியாவா?” என்றதில் ப்ரவீண் நிற்க, “அதெல்லாம் முடியாது நானும் அவளோடவே பஸ்ல வர்றேன்” என்றாள்.

கோபத்தில் தாரிணியை இன்னும் முறைத்தவன், “உன் ஃப்ரண்டையும் கூட்டிட்டு வா” என்றான் தங்கைக்குத் தெரியாமல் கடுகடுத்தபடி.

அவ்வளவு நேரம் அவனின் அண்ணன் பாசத்தை ரசித்திருந்தவள், தன்னை அலட்சியம் செய்தவன் மேல் கோபம் வர, “நான் உன்னோட கார்ல வரல பாக்கி. எனக்கு பஸ்சுக்கு மட்டும் பணம் கொடு. ஹாஸ்டல்ல போய் திருப்பித் தந்திருறேன். என்றாள் வீராப்பாக. ‘உன்னிடம் பணம் இருந்தால் அது உன்னோடு’ என்ற எண்ணத்தில்.

“நீ வேற ஏன்டி படுத்துற. வா” என்று காரில் ஏறச் சொல்லி ஓஎம்ஆர் ரோடு அருகிலிருக்கும் விடுதியில் இறக்கிவிட, “பாக்கி டேக் கேர்” என்றபடி உள்ளே சென்றாள்.

‘ஆமா. பண்றதெல்லாம் பண்ணிட்டு டேக் கேராம். யாருக்கு வேணும் உன்னோட டேக் கேர்’ என்று அவளை மனதிற்குள் திட்டிவிட்டு வீட்டிற்கு வந்ததும், “அம்மா இந்தாங்க உங்க பொண்ணு.” அவரிடம் ஒப்படைத்து அங்கிருந்த ஷோபாவில் அமைதியாக அமர்ந்தான்.

அவளின் கோலத்திலேயே புரிந்தவர் புதிராக புரியாமல், ‘ஏன்?’ என்பதுபோல் கண்களில் வலியுடன் பார்த்தார்.

தாயின் அந்த பார்வையில் மனம் அடிபட, “அம்மா நான் என்னோட படிக்கிற பையனை கல்யாணம் பண்ணிக்கத்தான் திருப்பதி போனேன். போன இடத்...” முடிக்குமுன் தாயின் அடி இடியாய் இறங்கியது.

முதல் அடிக்கு “அம்மா” என்றலறியவள் அதன்பின் மாறிமாறி வந்த அடிகளை வாயே திறக்காமல் அமைதியாக வாங்கிக் கொண்டிருந்தாள். தடுக்க நினைத்த ப்ரவீணை கண்களாலேயே தடுத்தார் சந்திரா.

“என்ன பண்ண இருந்திருக்க? உனக்காகன்னு ஒண்ணொன்னா பார்த்துப் பார்த்து செஞ்சதுக்கு நல்ல கூலி கொடுத்துட்டடி. சே.. இதுக்கு நீ என்னைக் கொன்னுருக்கலாம். உன்னை எப்படில்லாம் வளர்க்கணும்னு நினைச்ச உங்கப்பா ஆசையை, இப்படிக் கொன்னு புதைச்சிட்டு வந்துட்டியேடி. ஏன்? ஏன் இப்படிப் பண்ணின சொல்லு?” ஆத்திரத்தில் கத்த,

‘அப்பா’ என்ற வார்த்தையைக் கேட்டதும் தன் மனதில் உள்ளதை சொல்ல எண்ணியவள், அதன்பின் தன் தாயின் நிலை என்னாவதென்று அப்படியே விட்டு, தன் அமைதியைத் தொடர்ந்தாள்.

“சொல்லு ஏன் இப்படிப் பண்ணின? எப்படி இருந்த நீ.. ப்ச்... இப்படில்லாம் பண்ணுவேன்னு நான் கனவுல கூட நினைக்கல. வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்தி, “இது உனக்கு நல்லதுக்கில்லன்னு மட்டும் என்னால சொல்ல முடியும் பாகீ. உன்னை வளர்த்ததுல எங்க தப்பு பண்ணினேன்னு தெரியல. ஒரே பொண்ணுன்னு செல்லமா வளர்த்தாலும் நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்துதான வளர்த்தேன். என் வளர்ப்பு தப்பா போயிருச்சின்னு இப்ப ஃபீல் பண்றேன். இந்த முகத்தை வச்சிக்கிட்டு எப்படிடி தப்புப்பண்ணத் தோணிச்சி?” கணவரின் குண இயல்பிலும் முகஜாடையிலும் பெண் இருப்பதாலேயே அப்படிக் கேட்டார்.

கண்டிக்கும் தாயை வலியுடன் ஒரு பார்வை பார்த்தவள், ‘உங்க வளர்ப்பு தப்புன்னு ஃபீல் பண்ற நீங்க, உங்க வாழ்க்கையே தப்பாகிப்போன கதை தெரிஞ்சா உடைஞ்சிருவீங்கம்மா. அதை மனசுக்குள்ள வச்சிக்கவும் முடியாம, உங்ககிட்ட சொல்லவும் முடியாம, நான் தவிக்கிறது எனக்குத்தான்ம்மா தெரியும். நீங்க இவ்வளவு கஷ்டப்படுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா, என்னோட சோகத்தை என்னுள்ளே மறைச்சி இயல்பா இருக்க முயற்சித்திருப்பேன். என்னால நீங்க கஷ்பப்படுறதைப் பார்க்க முடியலம்மா. மனம் ஊமையாய் அழுதது.

“பேசுடி! உனக்கு என்ன பிரச்சனைன்னு என்கிட்ட சொன்னால்தான தெரியும். எதுக்காக இந்த திடீர் க...” கல்யாணம் என்ற வார்த்தையே தொண்டைக்குள் அடைக்க, “ஏன் இப்படி ஒரு முடிவெடுத்த? சொல்லு ஏன்?” மகளை பிடித்து உலுக்கி, ஆத்திரம் அழுகையில் முடிந்தது.

இதுவரை அழுதே பார்த்திராத தாயின் கண்ணீர் அவளைக் கொல்லாமல் கொன்றது. ‘இப்ப என்னால அழற உங்களை, இனி என்னைக்கும் யாருக்காகவும் அழவிட மாட்டேனம்மா. தாயின் கண்ணீரைக் கண்டவள் மனதில் சபதமே செய்தாள். தாயிடம் சென்றவள் அவரின் கைபிடிக்க, அதை உணர்ந்த சந்திரா கையைத் தட்டிவிட்டார்.

“சாரிம்மா. நான் ஏன் இப்படிப் பண்ணினேன்னு காரணம் சொல்ல முடியாத சூழ்நிலையில இருக்கேன்” என்று தாயின் கையை வலுக்கட்டாயமாகப் பிடித்துத் தன் கையை மேலே வைத்து, “சத்தியம் பண்றேன்ம்மா. என் லைஃப்ல இனிமேல் இந்த மாதிரி ஒரு தப்பைப் பண்ணமாட்டேன். பண்ணமாட்டேன்றதை விட அதை நினைக்கவே மாட்டேன்ம்மா. என்னை நம்புங்க. உங்க பொண்ணு இனிமேல் படிப்புக்கு மட்டும்தான் இம்பார்டண்ட் கொடுப்பா. எனக்கான வாழ்க்கை முடிவு உங்க கையிலதான் இருக்கு” என்று தாயின் கைக்கு சிறு அழுத்தம் கொடுத்து மண்டியிட்டபடியே பேசினாள்.

மகளின் கண்களில் கண்ட உண்மையிலும், உடலிலுள்ள நிமிர்விலும் தன்னுடன் சேர்த்தணைத்து, “உன்னை நம்புறேன்டா. உன்னை நம்பாம வேற யாரை நம்பப்போறேன்” என்றார் கோபம் நீங்கியவராய். “சரி சாப்பிட்டியா?”

“இல்லம்மா. மேடம் சாப்பிடச் சொன்னா மாட்டேன்னுட்டாங்க. ஏன்னா இவங்க ஃப்ரண்ட் வேண்டாம் சொன்னாங்களாம்” என்ற ப்ரவீணின் குரலில் தாரிணி மேலுள்ள கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.

“அண்ணா ப்ளீஸ். அவமேல எந்த தப்பும் இல்ல. அவ நல்லவ” என்றாள் தோழிக்காக.

“ஓ... அந்த நல்லவள் தான் திருட்டுக் கல்யாணம் பண்ணி வைக்க திருப்பதி வந்திருந்தாளா? நட்புன்னா என்னன்னு தெரியுமா அவளுக்கு?” என்றான் பற்களைக் கடித்தபடி.

“அண்ணா அவளோட பேச்சை விடுங்க. இப்ப நான் என்ன சொன்னாலும் கேட்கிற நிலைமையில நீங்க இல்ல. இதைப்பற்றி இன்னொரு டைம் பேசிக்கலாம்.”

“இன்னொரு டைமா தேவையில்லை. அவளோட ஃப்ரண்ட்ஷிப்பைக் கட் பண்ணிரு.”

“அதான் சொல்றேன்ல. தப்பு முழுக்க என் பேர்லன்னு. என்னோட ஃப்ரண்ட்ஸ் எந்த தப்பும் பண்ணல.”

“என்ன அவனையும் சேர்த்து காப்பாத்த நினைக்கிறியா? கண்டிப்பா என் கையில மாட்டும்போது பார்த்துக்கறேன்” என்றான் குரலில் கோபத்தைக் காட்டியபடி.

“உங்ககிட்ட சொல்லி பிரயோஜனம் இல்லை. “ம்மா நீங்களாவது நம்புங்கம்மா. அவ என்னைத் தடுக்கத்தான் செய்தா நான்தான்...” என்றாள் தாயிடம் தோழியைப் புரியவைக்கும் நோக்குடன்.


“கண்டிப்பா நான் நம்புறேன். இப்ப சாப்பிடவா. நீயும் தான்டா. வா ரொம்ப விரைச்சிக்கிட்டு நிற்கிற பாரு” என்றதும் மூவரும் உணவருந்தச் சென்றார்கள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
ARS Fashion Wear பலகை இருந்த அறையில் அவன் பலவித யோசனைகளுடன், அளவுக்கதிகமான பதற்றத்துடன் நடந்து கொண்டிருந்தான். ஆடைகள் உலகில் தனக்கென ஒரு தனியிடம் பிடிப்பதுதான் அவனின் லட்சியமே. அதனாலேயே படாதபாடுபட்டு இந்த எ.எஸ்.ஆர் ஷோரூம் சென்னையில் ஆரம்பிக்க அனைத்து வேலைகளும் முடிந்து இன்டீரியர் வேலை மட்டுமே மிச்சமிருக்கிறது. அடுத்த மாதம் அதன் திறப்பு விழாவை நடத்தும் முடிவில் இருக்கிறான். AS Garments & Fashion Wear திருப்பூரில் அவன் முதன்முறையாக ஆரம்பித்தது.

‘எப்படி முடிந்தது அவளால்?’ கடைசியில் சாரி நான் காதலிக்கலை. என்றதில் மனம் மகிழ்ந்தாலும், கடைசி நிமிட மனமாற்றம் இல்லாமல் போயிருந்தால்? நினைவே கசந்தது. அவளையே பார்த்திருந்ததால் எதாவது செய்து அந்த திருமணத்தை நிறுத்தியிருப்பான்தான். ஆனாலும், தான் வராமல் போயிருந்தால் மனம் அடங்க மறுத்தது.

ஏற்றுமதி விஷயமாக விசாகபட்டினம் வரை சென்றவன், அப்படியே ஹைதராபாத் சென்று, தன் வேலைகளை முடித்துச் சென்னை திரும்பிக் கொண்டிருந்தான். தனியாக கார் ஓட்டுவதால் வந்த தூக்கத்தைக் கலைக்க தடாவிலுள்ள ஒரு கடையில் நிறுத்தியவன், அப்பொழுதுதான் கவனித்தான் மதனை. மதன் தன் நண்பன் சுதர்ஷனின் தம்பி. அவனிடம் இங்கே என்ன செய்கிறான் என கேட்க நினைத்தவன், அவனருகில் ஒரு பெண்ணைப் பார்த்ததும் சந்தேகத்தில் தன் நண்பனை அழைத்து விஷயம் சொல்லும் பொழுதே எதிரிலிருந்த நண்பனின் அதிர்வை உணர முடிந்தது.

“ஸ்ரீ அவன் எங்க போறான்னு கொஞ்சம் பார்த்து சொல்லுடா. எதாவது தப்பா முடிவெடுத்துராம. பொண்ணு கூட இருக்கான்னு சொல்ற. சின்னப் பையன்டா கல்யாண வயசில்ல அவனுக்கு. எனக்குத் தெரியுது நீயும் ரெண்டு நாளா ரெஸ்ட் இல்லாம அலைஞ்சிட்டு வந்திருக்க. உனக்கு எவ்வளவு டயர்ட் இருக்கும்னு தெரியும் ப்ளீஸ்டா” என கெஞ்சிய நண்பனுக்காகச் சம்மதித்தான்.

நண்பர்கள் அனைவரும் தடாவில் வாடகைக் காரை நிறுத்தி டீ அருந்த அழைக்க, யோசனையிலிருந்த பாகீரதி எதுவும் வேண்டாமென்று மறுத்து கீழே இறங்காததால் தாரிணி மட்டும் இறங்கி அவர்களுடன் நடந்தாள்.

ஸ்ரீனிவாசன் அப்பொழுதுதான் கவனித்தான். அவர்கள் ஐவராக நடந்தபோதும் மதனும், தாரிணியும் சேர்ந்தாற்போல் ஒரு தோற்றம் அவனுக்குள். அங்கிருந்து கிளம்பி திருப்பதி நோக்கிச் செல்ல, ஸ்ரீனிவாசனும் பின் தொடர்ந்தான். மலையேறும் பொழுது அவர்கள் வந்த காரை தவறவிட்டவன், சற்று நேரம் அவர்களைத் தேடியலைந்து மதனைப் பார்த்துவிட்டான். அவர்கள் கருடசேவை செல்வது அவர்களின் பேச்சில் புரிய அவர்களுக்கு முன் தான் சென்று நின்றிருந்தான். அவர்கள் வந்து திரும்பவும் சென்று இரு பெண்களை அழைத்து வந்தனர்.

அவளை பார்த்ததும் ஆச்சர்யத்தில் முகத்தில் சந்தோஷம் பூக்க நின்றிருந்தவன் வாய் தன்னாலேயே, “ரதி” என்றழைத்தது. ‘உலகம் உருண்டைதான்டா பையா’ என எண்ணியவனுக்கு அவள் திருமணம் செய்ய வந்திருக்கிறாள் என்பது தெரியாமல் அவளையே ரசித்திருக்க, அப்பொழுது அவளிடம் ஒரு மாலையையும், அருகிலிருந்த பையன் கையில் ஒரு மாலையையும் கொடுத்து மாற்றச் சொன்னதும் அதிர்ச்சியில் நிலை தடுமாறியவன், சட்டென்று சுதாரித்து தடுக்கச் சென்றான்.

அதற்குள் அவளே தடுத்ததுமில்லாமல் மேலே பேசியவற்றைக் கேட்டதும், மனம் முழுக்க நிம்மதி பரவியது. இருந்தாலும் ‘ஏன் இந்த திடீர் திருமணம்?’ என்ற கேள்வி மனதைக் குடைந்தது. பின் அவளுக்கு தன் மனதிலுள்ளதை அறிவுரையாகச் சொன்னவன், நண்பனுக்கு அழைத்து பிரச்சனை ஒன்றுமில்லையென்று சென்னை கிளம்பியிருந்தான்.

அது முடிந்து இரண்டு நாட்களாகியும் அதிலிருந்து வெளிவர முடியவில்லை அவனால். ‘எப்படிப் பேசியவள்?’ அவள் பேச்சில் கவரப்பட்டுத்தானே அவளைப்பற்றிய கவலையின்றிருந்தான். முதல் முதலாக அவளைச் சந்தித்த கணங்களையும், சென்ற வருடம் அவளைச் சந்தித்த நிமிடங்களை மனம் எண்ணியது.

“திருப்பூர் Rathi Garments & Fashion Wear காலை ஆறுமணிக்கெல்லாம் அங்கிருந்த காவலாளியை நேரம் மாற்றி அனுப்பி அமர்ந்திருந்த காவலாளிக்கு, யாரோ முனகும் சப்தம் வந்தது. எழுந்து சப்தம் வந்த திசையை நோக்கிச் சென்று ஒரு கோணியை இழுக்க, அங்கு ஒரு இளைஞன் குளிரில் நடுங்கியபடி தன் முழு உயரத்தை மூன்றடியாகச் சுருக்கிச் சுருண்டு படுத்திருந்தான்.

கோடைமழை பெய்து முடித்த காலைக் குளிரில் படுத்திருந்தவனை, “தம்பி எழுந்திருங்க” என்று எழுப்ப, அந்த சப்தம் அவன் காதில் கேட்கவில்லையோ! திரும்பவும் எழுப்ப அவன் எழவில்லை என்றதும் தான் மூடியிருந்த சால்வையை எடுத்து அவனுக்கு மூடி தன்னிருப்பிடம் சென்றார். திரும்பவும் ஒரு மணிநேரம் கழித்து அவனை எழுப்ப சில நிமிடங்கள் கழித்தே எழுந்தவனிடம் தண்ணீர் கொடுத்து, “முகம் கழுவி வாங்க தம்பி. காஃபி குடிக்கலாம்” என்றார்.

மெல்ல தடுமாறி எழுந்தவன் அவருக்கு ஒரு நன்றிப்பார்வை செலுத்தி, அருகிலிருந்த வேப்பங்குச்சியை எடுத்து பல் தேய்த்து முகம் கழுவி காஃபியை வாங்கி, நன்றி சொன்னான்.

“உங்க நன்றி இருக்கட்டும். இங்க என்ன பண்றீங்க தம்பி? வீடு எங்கேயிருக்கு?” என்றவர் அவனை நன்றாக பார்த்து, “வீட்டை விட்டு ஓடி வந்துட்டீங்களா?” என்றதும் அவன் விழிக்க தன் எண்ணம் சரியென்றே தோன்றியது. “சரி.. சொல்லுங்க. பார்த்தா ஓரளவு வசதியான வீட்டுப் பையன் மாதிரியிருக்கீங்க? அப்புறம் ஏன் இப்படி?” என்றார் அவன் படுத்திருந்த இடத்தைக் காண்பித்து.

“காப்பிக்கு நன்றிண்ணே” எனும்போது அந்த தமிழை உணர்ந்து திருநெல்வேலி சைடா தம்பி என்றார்.

“ஆமாண்ணே தென்காசி. நான் வரேன்” என்று வேறெதுவும் சொல்லாமல் எழப்போன அந்த அரும்பு மீசை இளைஞனை ஏனோ அவருக்குப் பிடித்திருந்தது. அவனைத் தடுத்து நிறுத்தியவர், “எங்க போறீங்க தம்பி? இப்படியே ஓடிட்டேயிருந்தா என்னைக்கு ஒரே இடத்தில் நிரந்தரமா நிற்கப்போறீங்க? வாழ்க்கையை வாழக் கத்துக்கணுமுங்க தம்பி. இப்படி அதைக்கண்டு பயந்து ஓடக்கூடாது. உங்களுக்குன்னு ஒரு இடம் வேண்டாமா? குறிக்கோள் எதுவும் இல்லையா?” எனும்பொழுது தன் தந்தையை அவர் உருவில் கண்டான்.

“எனக்கு ஒரு வேலை வாங்கித்தர முடியுமா?” என்றான் அந்தக் காவலாளியை உரிமையாளராக எண்ணி.

சட்டென்று சிரித்தவர், “என்ன படிச்சிருக்கீங்க? என்ன வேலை தெரியும் உங்களுக்கு?”

“நான் ப்ளஸ் டூ முடிச்சிருக்கேன். எந்த வேலையா இருந்தாலும் நான் மேனேஜ் பண்ணிக்கறேன்.”

“சரிங்க தம்பி. மேனேஜர் வரவும் கேட்கலாமுங்க. அதுக்கு முன்னாடி கார்மெண்ட்ஸ்ல என்ன மாதிரி வேலை இருக்கும்னு சொல்றேன்” என்று சின்ன விளக்கம் சொல்ல அதை மனதினுள் பதித்துக்கொண்டே வந்தவன், அவரின் “புரியுதா?” என்ற கேள்விக்கு, அவர் சொன்னதை அப்படியே திரும்பப்படித்து அவரைத் திணறடித்து, “புரிஞ்சிருச்சிண்ணே” என்றான் பணிவாய்.

“என்னது அண்ணனா? ஏனுங்க தம்பி என்ர பொண்ணு பத்தாவது முடிச்சிருக்கா. உங்களோட ரெண்டு வயசுதான் கம்மி. என்னைப் போய் அண்ணன்னுட்டு.”

“அது எங்க ஊர் பழக்கம். அங்கனக்குள்ள தெரியாத வயசுல மூத்தவியள அண்ணன் அக்கான்னு சொல்றது வழக்கம்தான். பக்கத்துல இருக்குறவியன்னா அத்தை மாமாதான்” என்றான்.

“அப்புறமென்னங்க தம்பி மாமான்னே கூப்பிட வேண்டியதுதானுங்களே?”

“இல்ல வேணாம். நீங்க பேசுறதைக் கேக்கும்போது சித்தப்பான்னு சொல்லணும்னு இருக்கு.”

“ஏன்” என்பதுபோல் பார்த்தவரிடம், “அப்பாவும் உங்களை மாதிரிதான் பேசுவாக” என்றான்.

‘அதுமட்டும் தானா’ என்பதுபோல் அவர் பார்த்திருக்க, “இல்ல நீங்க வீட்ல பொம்பளப்புள்ள இருக்கிறதா சொன்னியள்ல. அதான்..” என இழுத்தான்.

அவனின் பேச்சிலேயே அவனின் குணமும், வளர்ப்பும் தெரிய, அவனை மெச்சுதல் பார்வை பார்த்து, “நீங்க வாழ்க்கையில பெரிய ஆளா வருவீங்க தம்பி” என்றார் மனதார.

“நீங்க மட்டும் என்னை வாங்க போங்க சொல்றீங்க? பெயர் சொல்லி கூப்பிடுங்க? ஓ... பெயர் தெரியாதுல்ல என் பேரு ஸ்ரீனிவாசன்.”

“நல்ல பேருங்க தம்பி” என்றவரை முறைக்க, “உடம்புல ஊறிப்போனதுங்க தம்பி. விடுங்க எங்கூரு ஸ்பெஷலா ஒரு ஓரத்துல இருந்துட்டுப் போகட்டுமுங்க” என்றார்.

சற்று நேரத்தில் மேனேஜர் வந்ததும் அண்ணன் பையனென்று அறிமுகம் செய்து வேலை வாங்கிக் கொடுத்து, தன் வீட்டிலேயே தங்கவும் இடமளித்தார் அந்த காவலாளி மகேந்திரன்.

சிங்கர் மெஷின், பவர் மெஷின் என கைமடிக்க ஆரம்பித்தவன், அப்படியே செக்கிங், கட்டிங், அயனிங், பேக்கிங், அட்டெண்டன்ஸ் எடுப்பது என ஒரே மாதத்தில் அனைத்தையும் கற்றுத் தெளிய... அந்த சூழ்நிலையிலும், துணிகளின் வாசனையிலும், ஏற்கனவே துணிகளின் பரிச்சயம் இருந்ததாலும், தன்னுடைய இடம் இதுதான் என்றுணர்ந்தான். அதை அப்படியே இரவில் மகேந்திரனிடமும் சொன்னான்.

“ஏனுங்க தம்பி? பேசாம நீங்க இது சம்பந்தப்பட்ட படிப்பு படிங்களேன்.”

“ஆமாங்கண்ணா. உங்களுக்கு இதான் பிடிச்சிருக்குன்னா அப்பா சொன்ன கோர்ஸ் ஃபேஷன் டிசைனரிங் படிங்கண்ணா. இது சம்பந்தப்பட்ட கோர்ஸ் இங்க இருக்கான்னு பார்க்கலாம். இல்லன்னா கோயமுத்தூருக்குத் தான் போகணும்” என்றாள் மகேந்திரனின் பெண்.

சற்று நேரம் யோசித்தவனுக்கு அவர்கள் சொல்வது சரியென்று தோன்ற தானும் சம்மதித்தான்.

ஸ்ரீனிவாசன் மாற்று உடை கூட இல்லாதிருந்ததால், மகேந்திரன் ஆடை வாங்கிக் கொடுக்க, அதன் மதிப்பு தெரிந்தவனோ அதற்கான பணத்தை அவரிடம் கொடுத்தான். மகேந்திரன் மறுப்பு தெரிவிக்க, அவனோ அவரை மிரட்டி உருட்டி வாங்க வைத்தான்.

படிப்புக்கு விசாரிக்கையில் திருப்பூரிலேயே B.Sc.(Apparel Manufactured & Merchanting) மூன்று வருட படிப்பை தேர்ந்தெடுத்து அதற்கான பணம் லட்சக்கணக்கிலிருக்க, பணம் கட்ட, நம்பகமான நபருக்கு அழைத்து மகேந்திரனின் வங்கி எண் கொடுத்து, தனக்கு கடனாக தருமாறும், படித்து முடித்து வேலைபார்த்து திருப்பித் தருவதாக சொல்லி, ‘இந்த விஷயம் வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது. தெரிஞ்சி இங்க வந்தா நான் இடம் மாத்த வேண்டியிருக்கும்’ என்றான் கொஞ்சம் மிரட்டலாகவே.

எதிரில் இருப்பவர் பணம் திரும்ப வேண்டாமென்று மறுத்தபொழுது, “அப்ப உங்க உதவி வேண்டாம்” என்றவனிடம் மறுபேச்சி பேசாமல் வங்கி எண் வாங்கிக்கொண்டு அன்றே பணம் போட, கல்லூரி சேர்வதிலிருந்து அனைத்தையும் அவனே பார்க்க, தன்னால் முடிந்த உதவியை மகேந்திரன் செய்தார்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top