• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
May 1, 2025
Messages
23
🩶 தூரம் வேண்டாம் தங்கமே!

தூரம் 02


இன்று மதியம் விமான நிலையம் செல்ல வேண்டும் என்ற நிலையில் காலை முதல் தன் மனையாளின் சோகம் கவ்விய வதனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான், கதிர்.

காலை எழுந்தது முதல் மௌனக்கொடி பறக்க விட்டவளுக்கு உள்ளத்தில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் வந்து குவிந்தன.

அவளுக்கு சிறு வயதில் வெளிநாடு என்றால் மிகவும் பிடிக்கும். தன் சக நண்பர்களின் தந்தைமார் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் இனிப்புப் பண்டங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் மீது அலாதிப் பிரியம் அவளுக்கு.

ஆனால் குடும்பத்தினர் எவரும் தன்னை விட்டு அங்கு செல்வதை அவள் விரும்பவில்லை. ஒருமுறை குடும்ப கஷ்டம் தாங்க முடியாமல் அவள் தந்தை வெளிநாடு செல்ல முடிவெடுத்த போது அவள் துடித்துப் போனாள்.

"அப்பா போகாதீங்கப்பா. நீங்க போனா என்னை யாரு ஸ்கூல் கூட்டிட்டு போவாங்க? யார் என்னை சைக்கிள்ல வெச்சு கடைக்கு அழைச்சிட்டு போவாங்க? எனக்கு அப்பா வேணும். என் கூடவே இருங்கப்பா" என்று அழுது தீர்த்தாள், அனுபமா.

அந்த வேலை விடயம் விடுபட்டுப் போக, அவரும் குடும்பத்தோடே இருக்கத் துவங்கினார். அதன் பிறகு வெளிநாடு செல்வதை நினைத்தாலே கசந்து வழிந்தது, அவளுக்கு.

தன் தோழிகளுடன் கதைக்கும் போது "வெளிநாடு போற மாப்பிள்ளை எனக்கு வேண்டாம். அப்பறம் கஷ்டப்பட வேண்டி வரும். அப்படியே போறதா இருந்தாலும் என்னை கூட்டிட்டு போனா பரவாயில்லை. இல்லன்னா போக விட மாட்டேன்" என்று சொல்வாள்.

ஆனால் இன்று அவளது அன்புக் கணவன் அவளை விட்டும் தொலை தூரம் செல்லப் போகிறான். செல்வதற்கு அனுமதியளித்தாலும் கூட அவளால் அதனை இன்னும் முழு மனதோடு ஏற்க முடியாது போயிற்று.

"வெளிய போயிட்டு வரலாமா?" என்று அவன் கேட்க, "வேல இருக்குல்ல? சொந்தக்காரங்க கிட்ட சொல்லிட்டீங்களா? யாராவது இருந்தா சொல்லிட்டு வாங்க. இல்லன்னா அதுக்கு வேற ஒரு வார்த்த சொல்லல. நம்ம வீட்டுப் படியேறினா கொறஞ்சிடுமானு என் கிட்ட கேள்வி கேப்பாங்க" என்று அவள் சொல்ல, "ஆமா. அத்த வீட்டுக்கு மட்டும் போயிட்டு வந்துடறேன்" என்றவாறு அவன் கிளம்பிச் சென்றான்.

கதிர் வீட்டிற்கு வந்த மங்களம் சோகமே உருவாக அமர்ந்திருந்த மகளைக் கண்டு, "என்னாச்சு அனு? சுகமில்லயா?" என்று வினவ, "இல்லம்மா. ஒன்னும் இல்ல" என மறுப்பாகத் தலையசைத்தாள்.

"வேற ஒன்னும் இல்ல. கதிர் போறது அவளுக்கு கஷ்டமா இருக்கு. கொஞ்ச நாளாவே இப்படித் தான் இருக்கா" என்றார், சீதா.

"என்னடி இப்படி இருக்க? நீ இந்த மாதிரி மூஞ்ச வச்சுட்டு இருந்தா மாப்பிள்ளை என்ன நெனப்பாரு? எத்தனை பேர் வெளிநாட்டுக்கெல்லாம் போறாங்க. உனக்கு மட்டும் நடக்கிற மாதிரி ஒடஞ்சி போய் உக்காந்திருக்க" என்று மங்களம் அவளைத் திட்ட,

"மத்தவங்கள பத்தி எல்லாம் எனக்கு தெரியாதும்மா. சிலருக்கு அது பழகி இருக்கும். இல்லனா அவங்க எதிர்பார்த்திருப்பாங்க. நீங்க இல்லன்னு சொன்னாலும் உள்ளுக்குள்ள அவங்களுக்கும் கஷ்டமா தான் இருக்கும். அத வெளியில் காட்டிக்காம இருப்பாங்க அவ்ளோ தான். ஆனா என்னால அப்படி இருக்க முடியல.

வேணும்னே அவர் பண்ணல தான். சூழ்நிலை இப்படி அமஞ்சிருச்சு. அது எனக்கும் புரியுது. ஆனா என்னால சிரிச்சு சந்தோஷமா இருக்க முடியலயே. என்ன பண்ண சொல்றீங்க?" கண்கள் கலங்கிப் போனாள், பாவை.

அங்கு வந்த கதிருக்கு அவள் சொன்னதைக் கேட்டு மனம் பிசைந்தது. தன்னவளை இவ்வாறு கஷ்டப்படுத்தி விட்டு சென்றேயாக வேண்டுமா என்று அவன் மனம் கேள்வி கேட்டது. ஆனால் பணம் செலவழித்து அனைத்தும் செய்து விட்டான். அவனுக்கு கடனை தீர்க்கும் ஒரே ஒரு வழியாக இது தான் இருந்தது. அவ்வாறு இருக்க அவனால் இம்முடிவிலிருந்து பின்வாங்க இயலவில்லை.

"கொஞ்சம் வா அம்மு வெளியில போயிட்டு வரலாம்" பெற்றவர் முன் அவள் முடியாதென சொல்ல மாட்டாள் என்பதால் தைரிமாக அழைக்க, அவளும் அவன் சொன்னதைக் கேட்டு பின்னால் சென்றாள்.

பைக்கில் அவர்களது பயணம் தொடர்ந்தது. இருவரிடையேயும் பலத்த மௌனம் நிலவியது. வழக்கமாக பேசிக் கொண்டே வரும் அனுவின் அமைதி அவனை என்னவோ செய்தது.

கடற்கரையோரம் நிறுத்தியவன் வண்டியில் சாய்ந்து நிற்க, அவளோ வானத்தை வெறித்துப் பார்த்தாள்.

"அம்மு" மென்மையாக அழைத்தான், அவன்.

"சொல்லுங்க" அவன் மீது பார்வையை வீச, "ஏதாவது பேசு டி. நான் போகப் போறேன். என் கிட்ட எதுவும் பேசனும்னு தோணலயா?" எவ்வளவு அடக்க முயன்றும் அவன் குரல் உடைந்தது.

"போக வேணாம்னு சொல்லத் தோணுது. ஆனா சொல்ல முடியாது இல்லையா? போய் தானே ஆகனும். போயிட்டு வாங்க" நலிந்த குரலில் அவள் கூற,

"நீ இப்படி பேசினா நான் என்ன பண்ணுவேன்? உன் மனசு எனக்கு புரியாம இல்ல. உனக்கு மட்டும் தான் கஷ்டமா? எனக்கும் தான் இருக்கு. உன்ன என் கூடவே வெச்சு பாத்துக்கனும்னு ஆசப்பட்டேன். உன்ன விட்டுப் போறது எனக்கும் வலிக்குது.

ஆனா என் குடும்ப சூழ்நிலை அப்படி அமஞ்சிருச்சு. இப்படியொரு கடன் என் மேல வந்து விழும்னு நான் எதிர்பாக்கல. அத நான் தானே கொடுக்கனும்?" வேதனையோடு சொன்னான் அவன்.

"தங்கமே" அவன் கைகளைப் பற்றிக் கொண்டவளுக்கு அழுகை பெருக்கெடுத்தது.

வெகு சிரமப்பட்டு அதை அடக்கிக் கொண்டு "கல்யாணம் பண்ண இத்தனை நாள்ல ஒரு நாளும் உங்கள விட்டு இருந்தது இல்ல. இது முதல் தடவைங்கிறதால கஷ்டமா இருக்கு. போகப் போக பழகிடும். நீங்க என்ன பத்தி யோசிக்காதீங்க. பத்திரமா போயிட்டு வாங்க" மெலிதாக இதழ் பிரித்துப் புன்னகைத்தாள்.

"அம்மு நீ இப்படி எனக்காக பேசும் போது தான் இன்னுமே குற்ற உணர்ச்சியா இருக்கு"

"குற்ற உணர்ச்சி எதுக்கு? நீங்க எந்த தப்பும் பண்ணல. பெத்தவங்கள சுமையா நெனச்சு அம்போனு விட்டுப் போறவங்களும் இந்த காலத்துல இருக்க தான் செய்றாங்க. ஆனா நீங்க அந்த மாதிரி இல்லாம உங்க அப்பாவோட கடன ஒரு பையனா நெறவேத்துறீங்க. இத நெனச்சு பெருமைப்படனும். கவலைப்படாதீங்க" அவனுக்கு ஆறுதலளித்தாள், அவள்.

"உனக்கு கஷ்டமா இருந்தாலும் எல்லாம் அடக்கிட்டு என்ன புரிஞ்சுக்கிட்டு பேசுறியே. உன்ன நான் கஷ்டப்பட விட மாட்டேன் டா. கொஞ்ச நாள் தான். கடன அடச்சிட்டு வந்துடுவேன்" என்று அவள் தலை வருடி விட,

"சரிங்க. நான் உங்களுக்காக காத்திருப்பேன். சீக்கிரமே வந்துடுங்க" என்றவளுக்கு இப்போது ஒருவித தெளிவு பிறந்தது.

"வந்துடுவேன்மா. லவ் யூ" என்றவனுக்கு அவளைப் பார்க்கும் போது குற்றவுணர்வு மனதை அரித்தது.

ஆட்டோவில் பஸ் தரிப்பிடத்திற்கு சென்று அதில் விமான நிலையம் செல்வதாக முடிவெடுத்திருந்தான். அவன் செல்லும் நேரம் வந்த போது வீட்டினர் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு விடைபெற்றான்.

"பத்துரமா போயிட்டு வா கதிரு" அவனது அன்னை அணைத்துக் கொள்ள, "என் அம்முவ பாத்துக்கங்கமா" என்றவனது பார்வை மனையாளின் மீது படிந்தது.

அவனைத் தான் விழி மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் முகத்தை இது போல் நேரில் காண இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ என்று எண்ணியவளாக அவனது உருவத்தை விழி வழியே உள்ளிழுத்து உள்ளத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளலானாள்.

"அம்மு கவனம். நான் போயிட்டு வர்றேன்" என்று அவன் சொல்ல, "நீங்களும் கவனமா இருங்க" என்று புன்னகைத்தாள்.

அவளின் புன்னகை அவனுக்கும் சற்று ஆறுதலைக் கொடுத்தது. அவள் முகத்தையே சில நொடிகள் ஆழ்ந்து பார்த்தான்.

தலையசைப்புடன் சென்றவன் வாயில் வரை சென்று திரும்பிப் பார்க்க, அவனருகில் ஓடிச் சென்றாள், அனு.

"மிஸ் யூ டி" என்றவாறு அவள் நெற்றியில் இதழ் பதித்து விலகினான்.

"நானும் மிஸ் யூ. உங்கள ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்" புன்னகை மாறாமல் மொழிந்தாள், மாது.

நேற்று வரை கவலையே வடிவாக இருந்தவள் இவள் தானா என்று அவனுக்கு சந்தேகமே வந்தது. அப்போதெல்லாம் அழுது கொண்டிருந்தவள் தற்போது சிரிப்போடு நின்றால் அவனுக்கும் குழப்பம் வராதா என்ன?

எது எப்படி இருப்பினும் அவள் இவ்வாறு அழாமல் இருப்பது அவனையும் சாந்தப்படுத்தியது. அவனுக்காக தான் அவள் அழுகையை அடக்கி பெரும் போராட்டத்துக்கு மத்தியில் சிரிக்கிறாள் என்பதை கதிர் அறியவில்லை.

"அப்போ நான் கிளம்புறேன்" பயணப் பொதியைக் கையில் தூக்கிக் கொள்ள, "சரிங்க. போய் சேர்ந்ததும் கால் பண்ணுங்க. நான் வெயிட் பண்ணிட்டே இருப்பேன்" என்று அவள் சொல்ல,

"சரி. டேக் கேர் அம்மு" அவளை அணைத்து விடுவித்து அவன் திரும்பி நடக்க, அவள் விழிகளில் சலேரென வழிந்தது, துளி கண்ணீர். சட்டென அதைத் துடைத்துக் கொண்டாள்.

அவன் ஆட்டோவில் ஏறி அமர்ந்து அவளுக்கு கையசைத்துக் காட்டியவாறு விடைபெற்றான். அது பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கு உதடுகள் அழுகையில் துடித்தன.

அறையினுள் ஓடிச் சென்று கட்டிலில் விழுந்தவள் இத்தனை நேரம் அடக்கி வைத்த கண்ணீரை மடை திறந்த வெள்ளமாக வெளியிட்டாள். ஒரு மூச்சு அழுது தீர்த்தவளுக்கு வேதனை மட்டும் அடங்கவேயில்லை.

ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த கதிருக்கும் மனைவியின் முகம் மனதை விட்டு மறையவில்லை. அவளிடமே ஓடிச் சென்று விட வேண்டும் போலிருக்க, கலங்கிய மனதோடு கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான்.

அன்றைய தினத்தை நினைக்க இப்போதும் இருதயம் கனத்தது. அவனோடு ஒன்றாக வந்து போன இந்தக் கடற்கரை அவளுக்கு வெறுமையை உணர்த்தியது.

"அக்கா! வர்றீங்களா? தண்ணில தூரமா நனஞ்சிட்டு வரலாம்" என்று அகல்யா அழைக்க, "இல்ல நீ போ" என்றவள் கரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள்.

அன்றொரு நாள் மணலில் இருவரது பெயரையும் எழுதி, இதய வடிவம் வரைந்து அம்பு விட்டு அவனுக்குக் காட்டி ரசித்தது நினைவுக்கு வந்தது.

"ஹேய் அம்மு! சின்னப் புள்ளயா நீ?" என்று அவன் சிரிப்போடு வினவ, "பின்ன இல்லயா?" முறைப்போடு அவள் கேட்ட போது,

"இல்லாமலா? நீ என் கொழந்த டி" என அவள் கன்னங்கள் இரண்டையும் பிடித்துக் கொஞ்சினானே.

அவ்வாறான ஸ்பரிசங்கள் மீண்டும் எப்போது கிடைக்கும்? அவன் தோளில் தலை சாய்த்துக் கதை பேசும் நாள் எப்போது வருமோ என ஏங்கிப் போனாள்.

"ஐ மிஸ் யூ தங்கம்" மணலில் எழுதி விட்டு நி
மிர்ந்த அனுபமாவின் இதழ்களும் அவ்வார்த்தைகளை உச்சரித்தன.

தூரம் தொடரும்.......!!


ஷம்லா பஸ்லி
2025-05-23
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top