• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
973
5



பத்து ஆண்டுகளுக்கு முன்:

“என் வீட்டுல சாவு விழுந்தா வரமாட்டியா?” என்று சாந்தி சொன்னதும், “அக்கா” என அதிர்ந்தான் ஹரி.

“ஆமா அக்காதான். அப்படி ஒரு நினைப்பிருந்தா சீக்கிரம் வந்து சேர் அவ்வளவுதான்.” என்ன ஏதென்று கேள்வி எழுமுன் போனை வைத்த தாயையே வெறித்துக் கொண்டிருந்தாள் மகள்.

மகளின் பார்வைக்கு அர்த்தம் புரியாவிடிலும் அவளின் மனம் புரிந்ததால் ஒருசில முடிவுகள் உடனே எடுக்க முடிவு செய்தாள் தாய்.

“அம்மா மாமாவை எதுக்கு கூப்பிடுறீங்கன்னு தெரியும். ஒரு அளவுக்கு மேல அவங்களை கட்டாயப்படுத்த வேண்டாம்.”

“அதை நான் பார்த்துக்கறேன்” என அமைதியாக சொல்லி கணவனைத் தேடி தோட்டத்திற்குச் சென்றாள்.

இரண்டு மணி நேரத்தில் வந்து நின்ற தம்பியைப் பார்த்த சாந்திக்கு அழுகை தன்னை மீறிவர அவனைக் கட்டிக் கொண்டு, “நாம மோசம் போயிட்டோம்டா” என்றதும் சில கணங்கள் பேச்சற்றுப் போனான் ஹரி.

“அக்கா என்ன சொல்றீங்க?” என்றவனுக்குள், ‘கிளம்புவதற்கு முன்தானே அவளிடம் பேசினோம்’ என்ற எண்ணம் வந்தது. ‘இல்லை அதுக்குள்ள ஒண்ணும் ஆகியிருக்காது. அப்படி ஆகியிருந்தா என்னாலன்ற குற்றவுணர்வே என்னைக் கொன்னுரும்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அவனின் குழப்ப முகம் பார்த்து, “ப்..ப்ரியா இன்னும் மூணு மாசத்துல நம்மளையெல்லாம் விட்டுப் போயிருவாளாம்டா” என்றதும்... ‘எங்க?’ என்பதுபோல் புரியாமல் விழித்தவனிடம், “ஜாதகம் பார்க்கப் போனா, அவளோட ஆயுள் இன்னும் மூணு மாசம் தான்னு நம்ம ஜோசியர் சொல்லிட்டார்” என்றாள்.

“அக்கா என்ன சொல்றீங்க? அ...அவர் சொன்னா பழிக்கும்னு சொல்வாங்களே?” என்றவன் குரல் நடுங்கியது.

“ஆமாடா தம்பி. ரெண்டு நாளா இதை வெளியில சொல்ல முடியாம உள்ளுர செத்திட்டிருக்கோம்” என்றதும், தலையைப் பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்தான். அவனால் யோசிக்கக்கூட முடியவில்லை, என்னவென்று, எதற்காக, யாருக்காக யோசிப்பான். உடம்பில் எதாவது நோய் என்றால் மருத்துவமனை அழைத்துச் சென்று பணம் முழுவதும் போனாலும் பரவாயில்லையென்று காட்டிக் காப்பாற்ற முயற்சிக்கலாம். ஆனால், இது யூகிக்க முடியாத ஒன்று. என்ன செய்வதென்று தெரியாத சுழல். பின் தன்னைத் தேற்றி, “என்ன செய்யலாம்கா? எதாவது பிராயசித்தம் இருக்கான்னு கேட்டீங்களா?”

அவளோ அழுதபடி, “கேட்காம இருப்பேனா... கேட்டேன். அவள் மனசுக்குப் பிடிச்சதைக் கேட்டு நிறைவேற்றுவது தவிர வேறு வழியில்லையாம்.”

“இந்த விஷயம் அவளுக்குத் தெரியுமா?”

“இல்ல எனக்கும் அத்தானுக்கும் தவிர யாருக்கும் தெரியாது.”

அடப்பைத்தியமே! தெரியக் கூடாதவளுக்குத் தான் தெரிந்தாயிற்றே! என காலம் கேட்டது.

“நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் தம்பி.” என்ன என்பது போல் பார்த்தவனிடம், “ப்ரியாவுக்கு கல்யாணம் செய்யப்போறேன்.”

சட்டென்று எழுந்து, “அக்கா” என்றான் அதிர்ச்சியாக.

“ஆமா. இந்த மூணு மாசத்துல கன்னிப் பெண்ணா சாகுறதுக்கு, சுமங்கலியா போய் சேரட்டும்.”

“இதுக்கு அவள் சம்மதிக்கணுமேக்கா” என்றான் அவளின் மனம் புரிந்தவனாய். அவர்கள் மாப்பிள்ளையாக அவனை பார்த்திருப்பது தெரியாமல்.

“ஏன் சம்மதிக்க மாட்டா? சம்மதிப்பா. நீ சம்மதம்னு ஒரு வார்த்தை சொன்னா?” என்று அவன் தலையில் இடியை இறக்க,

“அக்காஆஆஆ..” என தீயைத் தொட்டாற்போல் அதிர்ந்தவன், “தப்பு பண்றீங்க? நான் எப்படி அவளை.. உங்க பொண்ணு என் பொண்ணில்லையாக்கா?” என்றான் ஹரி கண்களில் வலியுடன்.

“தம்பி!” என்று அதிர்வது இப்பொழுது சாந்தி முறையாயிற்று. இருந்தாலும் மகளின் ஆசைக்காக தன் அதிர்வை மறைத்து, “இல்லடா மருமகள் தான். அக்கா மகளை தம்பி முடிக்கிறது காலம் காலமா இருக்கிற ஒண்ணுதான்” என்றாள் ஸ்திரமாக.

“நோ. என்னால முடியாதுக்கா. என்னால அவளை மனைவி ஸ்தானத்துல வச்சிப் பார்க்க முடியாதுக்கா. என்னை விட்டுரு. எனக்கு இது அசிங்கமாயிருக்கு.”

“தம்பி! நிலைமை புரியாம பேசாதடா. நான் ஜாதகம் பார்க்க போனப்ப கூட உன்னை அவளோட சேர்த்துப் பார்க்கத் தோணலை. ஆனா, இன்னைக்கு போன்ல நீ பேசினப்பதான் என் பொண்ணோட மனசே புரிஞ்சிது. இந்த நேரத்துல உன்னை விட்டா வேற யார்டா கல்யாணம் பண்ணிப்பாங்க. இதை ஒரு உதவியா நினைச்சி செய்டா.”

“அக்கா ஏன்கா என்னைக் கொல்ற? அவளைப் போய் எப்படிக்கா? மனசாட்சின்னு ஒண்ணு எனக்கு இருக்குக்கா.”

“மனசாட்சியை விட மனிதாபிமானம் ரொம்ப முக்கியம்டா தம்பி. அவளுக்கப்புறம் உன்னோட வாழ்க்கையை நீ தீர்மானிக்கிறதுல எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.”

“அச்சோ! இது தப்புக்கா” என்றவன் கொஞ்சம் இளகினாற்போல் தெரிய...

“தப்பு, சரி அவங்கவங்க மனசைப் பொருத்துத்தான்பா. நீயே கொஞ்சம் யோசி. வேற பையனுக்கு இப்படி டைம் சொல்லி கட்டிவைக்க முடியுமா? முடியாதில்லை இல்லையா. உன்னோட மனசைக் கொஞ்சம் மாத்தி தாய்மாமாவா இல்லாம ஒரு ஆணா யோசி” என்றார்.

“அப்படியே பார்த்தாலும் எனக்கு இன்னும் கல்யாண வயசே ஆகலைக்கா?”

‘ஹ்ம்.. இதுவே ஒரு ஒப்பந்த கல்யாணம் மாதிரி. இதுல வயசெங்க வந்தது?’ மனதினில் எண்ணினாலும், “புரியுதுடா. ஆனா, வேற வழியில்லையே” என கண்ணீரில் அவன் மனதைக் கரைத்தாள்.

மனதைக் கல்லாக்கி, “ப்ச்... என்னவோ பண்ணுங்க. இந்தக் கல்யாணம் அவளை சந்தோஷமா வச்சிருக்கும்னா நான் செஞ்சுக்கறேன். இப்ப ஊருக்கு கிளம்புறேன் நீங்க எப்ப பலி குடுக்கணுமோ அப்ப கூப்பிடுங்க” என்று வார்த்தைகளை எறிந்து சென்றான்.

“டேய் ஏன்டா இப்படிப் பேசுற? நில்லுடா” என தடுக்க முயற்சித்தும் முடியவில்லை அதற்குள் சென்றிருந்தான். சாந்தி உடனே கணவனை அழைத்து அந்த ஜோசியரிடம் செல்ல...

“நீங்க வருவீங்கன்னு தெரியும். அதுவும் அவளோட கல்யாண விஷயமா வருவீங்கன்னு தெரியும்” என்றவரை இருவரும் வியப்புடன் நோக்க... “இதிலென்ன ஆச்சர்யம் ஜாதகம் கணிச்சவன் நானாச்சே.” அவரின் உள் மனதிற்கு தானே தெரியும் இன்னும் ஒருமாதம் கூட அவளின் ஆயுள் கிடையாதென்பது. இருப்பினும் முழுதாக அவர்களிடம் சொல்லி உயிரோடு கொல்ல மனமில்லை அவருக்கு.

“எண்ணி பதினைந்தாவது நாளில் நம்மூரு அம்மன் கோவில்ல தாலிகட்டு வச்சிக்கோங்க” என்று நேரம் குறித்து அனுப்பி, “சஞ்சலத்தோடு போகாம அந்த பெண்ணிற்கு ஆன்ம திருப்தியை கொடு முருகா” என வேண்டினார்.

‘இன்னும் பதினைந்து நாளிலா?” என யோசித்தாலும் விஷயத்தை போன் செய்து தம்பிக்குச் சொல்லி வீட்டில் மகளுக்குச் சொன்னாள்.“

‘மாமா சம்மதிச்சிட்டாங்க’ என்ற நினைப்பே பெருமகிழ்ச்சியை அவளுள் ஏற்படுத்தியது. அதை கன்பார்ம் செய்ய “அம்மா நிஜமாவா?” என்றாள்.

“நிஜம் தான்மா.”

“மாமாவை ரொம்ப கட்டாயப் படுத்துனீங்களாம்மா?”

“ரொம்பல்லாம் இல்லமா. ஒரேடியா மாட்டேன்னு சொன்னா நான் கால்ல கூட விழுந்திருப்பேன். அது தெரிஞ்சிதானோ என்னவோ சரின்னு சொல்லிட்டான்.”

உண்மைதான். அவன் மனம் நினைத்தது இதைத்தான் தாய்க்கு சமானமான அக்கா மகளுக்காக தன் காலில் விழுவாள் போல் தோன்றியதால் தான் என்னவோ பண்ணுங்க என்றிருந்தான்.

“இருந்தாலும் மாமா பாவம்மா” என்றாள் ஹரிக்காக.

“பாவம்லாம் ஒண்ணுமில்ல கல்யாணப் பொண்ணா லட்சணமா ரெடியாயிரு போதும்.”

பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த லட்சுமிக்கும் விஷயம் சொல்லப்பட, “ப்ரியா வாழ்த்துகள். மாமாவையே மேரேஜ் பண்ணிக்கப் போறியா? உங்க ஜோடிப் பொருத்தம் சூப்பராயிருக்கும்” என்றாள்.

சின்ன சிரிப்பையே பதிலாகக் கொடுத்து, “இப்பக்கூட அக்கா சொல்லிராத போ” என்று அறைக்குள் நுழைந்து கதவை சாத்தி சட்டையை எடுத்து போட்டுக் கொண்டவள் கண்ணாடி முன் நின்று, “மாமா நீங்க நிஜமாவே சம்மதிச்சிட்டீங்களா? நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை. என்னதான் அம்மா கெஞ்சினாலும் என்மேல உங்களுக்குள்ள பாசம்தான் மாமா உங்களை சம்மதிக்க வச்சது. அது நேசமா மாறணும் மாமா. கண்டிப்பா நேசம் வேணும் மாமா. எத்தனை வருடமானாலும் உங்க நேசமான வார்த்தைக்காக காத்திருப்பேன் மாமான்னு சொல்ல ஆசைதான். ஆனா, முடியாதே. இந்த ப்ரியாவுக்காக இவளை மிஸ் பண்ணியதுக்காக மனைவியா ஒரு சொட்டு கண்ணீர் வடிச்சா போதும் மாமா. என்னுடைய ஆன்மா சாந்தியடைஞ்சிரும்” என்றாள் சந்தோசக் கண்ணீருடன்.

ஹரியோ ஹாஸ்டலில் பித்துப் பிடித்தது போலிருந்தான். நடக்கப்போகும் திருமணத்தை அவன் மனதால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மகளாய் பார்த்தவளை மனைவியாய் பார்க்க உடம்பே கூசியது. தன்னுடைய பிடிவாதத்திற்காக சாகப்போறவளின் நிம்மதியைப் பறிக்கவும் மனமில்லை. தன்னுடனேயே வளர்ந்தவளுக்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்ததென்று நினைத்து நினைத்து மாய்ந்து போனான்.

திருமணம் என்று சொல்லாமல், உடம்பு சரியில்லையென்று லீவ் எடுத்து திருமணத்திற்கு முந்தின நாள் வந்தான். யார் முகத்திலும் விழிக்க மனமில்லை. வீட்டில் நுழைந்ததும் ஹரிப்ரியா மட்டுமே இருந்ததால் அவளுக்கு உண்மை தெரியாதென எண்ணி பொதுப்படையாக பேசி, “நான் தோட்டத்துக்குப் போயிட்டு வர்றேன்” என்று கிளம்பியவனை கைபிடித்து நிறுத்தி, “ஏன் மாமா என்னைக் கண்டு ஓடுறீங்க? அம்மாவுக்காக சம்மதிச்சீங்கன்னா வேண்டாம் மாமா. உங்க மனமாற்றத்துக்காகக் காத்திருக்கேன்” என்றாள் அவனின் அந்த நிலை பிடிக்காது.

‘அடப்போமா! அப்படி ஒண்ணு வரவே வரப்போறதில்லை. அதுவுமில்லாமல் உன்னோட ஆயுள் குறிக்கப்பட்டிருச்சின்னு தெரியுமா உனக்கு?’ என உள்ளுர மறுகியவன், ‘ஹ்ம்..’ என மூச்சை இழுத்துவிட்டு, “எதையும் யோசிக்காம கல்யாணத்திற்கு ரெடியாகுமா” என்றான்.

மறுநாள் திருமணம் அம்மன் சந்நிதியில் மிக எளிமையாக உள்ளுர்காரர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்களின் முன்னிலையில் இனிதே நடந்தேறியது. தாலியை கையிலெடுக்கும் போதே அவன் கைகள் நடுங்குவதை உணர்ந்தான். கழுத்திற்கு கொண்டு போவதற்குள் தன்னைத் தானே ஆயிரம் முறை சமாதானப்படுத்தி கண்மூடி கட்டியும் விட்டான். ஆகிற்று ஹரி-ஹரிப்ரியா திருமணம்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
973
அன்றிரவே சம்பிரதாயப்படி முதலிரவு சடங்கு செய்யப்பட... ஹரியின் எரிக்கும் பார்வை அங்குள்ள யாரையும் பாதிக்கவில்லை.

‘என் பொண்ணே எரியப்போறா இவன் பார்வை எங்களை என்ன செய்யும்’ என்ற எண்ணம்தான்.

“மாட்டேன்” என மறுத்தவன் ப்ரியாவிற்காக என்றதும் சம்மதித்து அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். சிக்கலான உறவுகளை சேர்த்து வைத்து வேடிக்கை பார்ப்பதுதான் கடவுளின் சித்து வேலையோ!

அறைக்குள் நுழைந்த ஹரிப்ரியாவிற்கும் மாமனின் நிலை பரிதாபத்தைக் கொடுத்தாலும், அவனை சமாதானப்படுத்தும் நோக்குடன் “மாமா” என்றழைத்தாள்.

கோபத்தில் திரும்பியவன் அவள் கண்களில் கண்ட கலக்கத்தைப் பார்த்து மனதை மாற்றி, “வா பாப்பா. ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்றான்.

“மாமா பாப்பா சொல்லாதீங்க. இப்ப நான் உங்க பொண்டாட்டி. ப்ரியான்னு கூப்பிடுங்க மாமா” என்றவள் கண்கள் இன்னும் தன்னை ஏற்கவில்லையோ என்றெண்ணி கண்ணீரைப் பொழிந்தது.

“ஸ்ஸ்.. எதுக்கு அழற? தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்னு கேள்விப்பட்டதில்லையா? என்னாலயும் சட்டுன்னு மாற முடியல. இனிமேல் முயற்சிக்கிறேன்” என்றான் மனதைக் கல்லாக்கி.

“இந்த வார்த்தையே போதும் மாமா எனக்கு. நீங்க படுங்க மாமா” என்றதும் தரையில் படுக்கப் போனவனைத் தடுத்து, “எனக்கு உங்ககிட்ட தப்பா நடக்கிறதா எந்த ஐடியாவும் இல்ல. என்னை நம்பி தாராளமா கட்டில்ல படுங்க மாமா” என்றாள் சிரித்தபடி.

அவளை வித்தியாசமாக பார்த்தவனின் பார்வையில் முகம் சிவந்தவள் “என்ன மாமா இப்படில்லாம் பேசுவியா நீன்னு பார்க்கறீங்களா? இதுக்கு மேலயும் பேசுவேன். ஜாக்கிரதையா இருங்க” என்று கண்சிமிட்டினாள்.

ஒரு நிமிடம் அசந்தே போனான் ஹரி. ‘எப்படி அமைதியாயிருந்த பொண்ணு லிமிட் தாண்டி என்கிட்ட பேசாதவ, இப்ப எப்படி? இந்த உரிமையை குடுத்தது எது? நான் கட்டிய தாலியா? இதை எப்படி சமாளிக்கப் போகிறேன் தெரியலையே?’ என விழித்தபடி நிற்க...

அவனின் நிலை உணர்ந்தவளோ “படுங்க மாமா” என்ற கனிவான வார்த்தையில் அவன் கட்டிலில் அமர, அவனருகே அமர்ந்தவள் “உங்ககிட்ட சும்மா விளையாண்டேன் மாமா. நீங்க பயப்படத் தேவையில்லை. ஆறுதலா சாஞ்சிக்க தோழனா உங்க தோள் குடுங்க மாமா. எனக்கு அதுபோதும்” என்றவளுக்கு அவளையும் மீறிய கண்ணீர் துளிகள். அவன் சம்மதமாக தலையசைத்ததும் அவன் தோள் சாய்ந்தவள் கைகள் அவனை இறுக்க அவனோ எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் இருந்தான். ‘நீங்க எப்படி வேணும்னாலும் இருங்க. இந்த அணைப்பே இத்தனை வருட நேசத்திற்கு கிடைத்த பரிசுதானே’ என்றது அவளது மனம்.

ஆம். தன்னுடைய பெண்ணாக மட்டும் பார்க்கிறேன் என்றவன் திருமணம் செய்வான் என்று சுத்தமாக எண்ணவில்லை. அது நிறைவேறியதே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.

அவளின் அணைப்பு காதலால் இறுக்க, அவனோ சாகப் போகிறவளின் கடைசி ஆசை என்கிற ரீதியில் இருந்தவன், பாசத்தால் இல்லாமல் காதலால் அவள் தன்னை அணைப்பதை தாங்க முடியாமல், சில விநாடிகளிலேயே விலக்கி தரையில் படுத்துக் கொண்டான்.

மறுநாள் காலை அக்காவிடம் வந்தவன், “நான் காலேஜ் போறேன்கா” என்றான்.

“அதுக்குள்ளயா? ஒருவாரம் கழிச்சி போகலாமேடா. பிடிக்கலைன்னாலும் முகத்தை அப்படியே காட்டாதடா பாப்பா பயந்திடப் போறா?”

“ஆமா. அவ பயந்திட கியந்திடப் போறா. என்ன பேச்சி பேசுறா” என முனகியபடி, “சரி நான் போகல” என்று கடுப்புடன் கூறிச்சென்றான்.

நினைத்த நேரத்தில் கணவனின் தோள் சாய்தலே அருமருந்தாகிப் போக, அவன் தூங்கிய நேரமெல்லாம் அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள், ‘இனிமேல் இவனை காண முடியாதே’ என்ற எண்ணத்தினால். முத்தமிடத் துடித்த மனதை அடக்கி தலைகோத, அதற்கே அவன் விழிப்பதுபோல் உருளவும் விலகிச் சென்றுவிடுவாள்.

திருமணம் முடிந்த ஒன்பதாவது நாள், இடையில் இரண்டு நாள் கல்லூரி விடுமுறை வந்ததால் மறுநாள் கல்லூரி செல்வதற்கு இன்றிரவே கிளம்புவதாக அறிவித்தான்.

“தம்பி இரண்டு மாசம் எங்களோடவே இருக்க முடியாதா. ப்ரியாவை நினைச்சா உடம்பெல்லாம் உதறலெடுக்குது. செமஸ்டர் எக்ஸாம் நீ அடுத்த முறை எழுதலாமே?”

“அக்கா ப்ளீஸ் இப்படியெல்லாம் பேச வேண்டாம். ஏற்கனவே நான்... ப்ச் வேண்டாம் விடுங்க. இப்போ வரைக்கும் அவளுக்கு எதுவும் தெரியாதுல்ல. அதையே மெய்ண்டெய்ன் பண்ணுங்க. நான் வாரத்துல ரெண்டு நாள் கண்டிப்பா வர்றேன். எதுவும் ஆகாதுன்னு நினைப்போம்” என்றான்.

ஹரி இருப்பது மதுரை அருகிலுள்ள மேலூரில் என்பதால் மதுரைதான் பக்கம். அவனுக்கோ கொஞ்சம் தள்ளியிருந்த திருச்சியில் ஆடிட்டிங் படிக்க ஆசை. ஆதலால் மறுத்த அக்கா அத்தானிடம் மல்லுக்கட்டி சேர்ந்திருந்தான். இரவில் அறைக்குள் வந்தவன், “நான் காலேஜ் கிளம்பறேன் பாப்பா” என்றான்.

“மாமா பாப்பா சொல்லாதீங்க சொல்லியிருக்கேன்” என்றாள் கோவமாக.

“என்னால மாத்த முடியலையேம்மா” என கவலையாகக் கேட்டவனைக் கட்டிக்கொள்ளத் தோன்றியது. “மாமா நான் சாகுறதுக்குள்ளயாவது என்னை உங்க மனைவியா ஏத்துப்பீங்களா? எங்க உங்க அன்பு இல்லாமலே செத்திருவேனோன்னு பயமாயிருக்கு மாமா. நீங்க ப்ரியான்னு கூப்பிடப்போற ஒரு வார்த்தைக்குத்தான் தவமிருக்கேன். ஐ லவ் யூ மாமா” என அவனை இறுகக் கட்டிக் கொண்டவள் இறுக்கம் அதிகமாகியதே தவிர குறைந்தபாடில்லை.

அவள் சொன்ன ‘ஐ லவ் யூ’வில் செய்வதறியாமல் நின்றவனுக்கு சில வினாடிகள் எதுவும் புரியவில்லை. பின் சுதாரித்து வலுக்கட்டாயமாக அவளை விலக்கி நிறுத்தியவன், “நீ எனக்கு அக்கா பொண்ணு மட்டும்தான். வேற எந்த உறவு முறையையும் எதிர்பார்க்காதே” என குரலை உயர்த்தி எச்சரித்தான்.

“நான் உங்க பொண்டாட்டி மாமா. ஏன் பழசையே நினைச்சிக் குழம்புறீங்க?”

“ப்ளீஸ்மா சொன்னா கேளு” என்றான் கெஞ்சலாக.

“அப்புறம் ஏன் மாமா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?”

“நானெங்கே...” என ஆரம்பித்தவன் சட்டென்று நிறுத்தினான்.

“நானெங்கே ஒத்துக்கிட்டேன். ஒத்துக்க வச்சாங்க. அதுவும் நான் செத்துப் போயிருவேன்னு சொல்லி. இல்லையா மாமா” என்றாள் தலையை சரித்து.

மின்சாரம் பாய்ந்த அதிர்வை உணர்ந்தவன், “உ..உனக்கு எ..எப்படி தெரியும்?” என திக்கித் திணறி முடிக்க...

“எனக்கு முதல் நாளே தெரியும் மாமா” என்றதும்... “அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்து, “உனக்கு ஒண்ணும் ஆகாது பாப்பா” என்றான். அந்த அணைப்பில் காதல் இல்லை வெறும் அன்பு மட்டுமே.

அவனை விலக்கி “எங்க அம்மாவோட தம்பியா இல்லாம என்னோட புருஷனாகிறதுக்கு நான் என்ன மாமா செய்யணும்? கடைசிவரை உங்க அக்காவுக்கு தம்பியாவே இருக்காம, ஒரு நிமிஷம் உங்க மனசுல உங்கள்ல பாதியா நினைங்க மாமா. உங்களையறியாமலே நான் உங்களுக்குள்ள இருப்பேன்.”

“அது சாத்தியமில்லம்மா” என்றான் தீவிரமாக.

“நீங்க உங்க மனசை மூடிக்கிட்டீங்க மாமா. அதைத் திறந்து எனக்கே எனக்கா ஒரு பார்வை பாருங்க. நான் உங்க கண்ணுக்கு ப்ரியாவா தெரிவேன்.”

“அதான் சாத்தியமில்ல.. உன்னை என் ஒய்ஃபா நினைக்க முடியாது சொல்றேன்ல. என்னைக் கொஞ்சம் நிம்மதியா விடேன். நீ என்னைக்கு என்கிட்ட சொன்னியோ அன்னையிலிருந்து நான் மெண்டலி அப்செட். என்னால எந்த விஷயத்திலும் எந்த முடிவும் எடுக்க முடியாம நரக வேதனை அனுபவிக்கிறேன் தெரியுமா?” என்று கத்தியவனை...

“மாமா” என்று அதிர்ச்சியோடு கண்களில் வலியுடன் பார்த்தாள்.

“பார்க்காத. இப்படிப் பார்க்காத உன் கண்ணுல உள்ள ஏதோ ஒண்ணு என்னை டிஸ்டர்ப் பண்ணுது. அக்கா பொண்ணுன்ற உறவைத் தாண்டி என்னால யோசிக்கக் கூட முடியல. போயிரு. முதல்ல என்னை விட்டுட்டுப் போயிரு” என்று திரும்பவும் கோபத்தில் கத்தி தலைகவிழ்ந்து அமர்ந்தான்.

“உன் கண்ணு என்னை டிஸ்டர்ப் பண்ணுது” என்ற வார்த்தையின் உள்ளர்த்தத்தை அவளுக்கு சாதகமாக எடுத்தவளுக்கு மெல்லிய புன்னகை வர, “எங்கேயோ ஒரு மூலையில் உங்களையறியாமல் நான் இருக்கேன் மாமா. அதை நீங்களும் உணருவீங்க. அந்த காலமும் வந்தே தீரும். எப்படியும் உங்களை விட்டுட்டு போகப் போறவள் தான் மாமா நான்” என்றாள் மனது வலித்த அவனின் வார்த்தைகள் கண்களில் பிரதிபலிக்க.

தான் பேசிய வார்த்தையை வேறுவிதமாக அக்கா பெண் புரிந்து கொண்டதை எண்ணி கசப்புடன் புன்னகைத்தவன், “பார்த்துப் பார்த்து வளர்த்த எனக்கு, உன்னை இந்த மாதிரி பரிதாபமா ஏங்குற பார்வை பார்க்க சக்தியில்லன்ற அர்த்தத்துல தான் சொன்னேன்மா. அதையும் நீ தப்பா எடுத்துக்கிட்டு, ப்ச்.. என்ன வார்த்தையெல்லாம் பேசிட்ட பாப்பா. உனக்கென்ன நான் மாறணும் அவ்வளவுதான? நான் முயற்சிக்கிறேன். இனிமேல் சாவுகீவுன்னு பேசாத சொல்லிட்டேன்.”

அவன்மேல் கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய்விடும் போல் தோன்றியது ஹரிப்ரியாவிற்கு. இருந்தாலும், “நீங்க கூட இருந்தா போதும் மாமா. இந்த மாதிரி பேசமாட்டேன்” என்றாள்.

அவளருகில் வந்து கட்டிலுக்கு அழைத்துச் சென்றபடி, “நான் உன்கூடவே இருப்பேன் பாப்பா” என்றதும் சட்டென்று நகராமல் நின்று அவனை முறைக்க.. முதலில் குழம்பியவன் புரிந்ததும் “சாரிமா. அதுவா வந்திருது. இனி சொல்லாமலிருக்க ட்ரை பண்றேன்” என்று பேக்கை எடுத்துச் சென்றான்.

சற்று நேரத்தில் திரும்பியவன் தன்னுடைய சட்டையை அவள் போட்டிருந்ததைப் பார்த்து கோவம் வந்து, “என்ன பண்ற நீ?” என்று உலுக்க... புரியாமல் விழித்தவளிடம் “இது காணாமல் போன என் சட்டைதான? எத்தனை நாளா நடக்குது?”

“அது விவரம் தெரிஞ்ச நாள்லயிருந்து மாமா. உங்க சட்டையில்லன்னா என்னால தூங்கவே முடியாது மாமா” என்றாள் தலைகவிழ்ந்து.

“உன்னை...” என பல்லைக் கடித்தபடி, “வந்து கவனிச்சிக்கறேன்” என்று வெளியே சென்றவன் இரண்டு நாட்கள் தாண்டியும் எந்த தொடர்பும் இல்லை என்றதும் பயத்தில் விசாரிக்க, விடுதிக்கும் அவன் வரவில்லையென்று சொல்ல.. அனைத்து இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

“என்னாயிற்று என் மாமாவுக்கு?” என அரற்றிய வேளையில் அங்கிருந்த கோவிலின் பின்புறம் புதரில் ஒருவன் செத்துக்கிடப்பதாக தகவல் வர, மனதில் படபடப்புடன் சென்று பார்த்தவளுக்கு அது தன் மாமா என்றதும் அலறிய அலறலில் அனைவரும் எழுந்து அவளறைக்கு வந்து ப்ரியாவை உலுக்க, சட்டென்று கனவு கலைந்தவளுக்கு அது நிஜமாகவே கண்முன் நடந்தது போல் தோன்றியது.

“அம்மா மாமா எங்க? இப்பவே பார்க்கணும்? மாமாவுக்கு ஏதோ ஆகிருச்சி?” என புலம்பியபடி பித்து பிடித்தாற்போல் இருந்தவளிடம்...

“ப்ச்.. ஒண்ணுமில்லமா கனவுதான். தண்ணீர் குடிச்சிட்டுத் தூங்கு” என சின்ன மகளிடம் தண்ணீர் எடுத்துத் தரச்சொல்லி அப்படியே துணைக்கும் படுக்கவைக்கும் பொழுது மணி ஒன்பதாகியிருந்தது.

“மாமா கொஞ்ச நேரம் முன்னாடிதான கிளம்பினாங்க. அதுக்குள்ள கனவா?” என்றவள் போன் செய்து பார்க்க, அதில் நாட் ரீச்சபிள் என்ற கம்ப்யூட்டர் வாய்ஸ் வர பயந்தவள் யாரிடமும் சொல்லாமல் கையில் சிறிது பணம் எடுத்துக்கொண்டு திருச்சி கிளம்பினாள்.

அவள் சென்ற மூன்று மணி நேரத்தில், அவள் வீட்டிற்கு வந்த போன் அசராமல் அவர்கள் மேல் இடியை இறக்கியது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top