• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
7


காலை உணவு முடிந்ததும் வந்திருந்த உறவினர்களுக்கு மருமகளை அறிமுகப்படுத்த, “உனக்குப் பெரிய மனசுதான் ஆனந்தி. கஷ்டப்படுற குடும்பத்திலிருந்து பெண் எடுக்கவே மனசு வேணும். அதுவும் நகைபோட்டு கூட்டிட்டு வரணும்னா, ரொம்பவே பெரிய மனசு உனக்கு” என்றார் ஒரு பெண்மணி.

“நமக்கு மனசுக்குப் பிடித்தப் பொண்ணுதான அண்ணி தேவை. நகை நம்மகிட்ட இல்லாததா. தற்செயலா வந்த வரன்தான். இவங்க இரண்டுபேர் ஜாதகம் மட்டும்தான் பொருந்திச்சி. அதான் எதையும் யோசிக்காம முடிச்சிட்டேன்” என்றார்.

“பொண்ணு எப்படி?”

“தங்கமான பொண்ணு அண்ணி. நம்ம வீட்டுக்கு வந்த பிறகு இனி அவள் நம்ம பொண்ணு” என்றார் மற்றவர்களை வாய் திறக்கவிடாது.

அன்றும், மறுநாளும் மிக சாதாரணமாகப் போக, மறுவீடு அழைக்காதிருக்கும் அப்பா மேல் சொல்லமுடியா கோவம் வந்தது. 'திருமணம் முடித்துக் கொடுத்ததும் கடமை முடிந்துவிட்டதென தலைமுழுகி விட்டனரோ' என்ற பயம் வேறு. அவர்களின் அன்பின் அளவை அறிந்தவளாயிற்றே!

மாமியார் இவளின் சோகம் உணர்ந்து கேட்டதும் தன் வருத்தத்தைச் சொல்ல, மகனைப் பற்றிய உண்மை உணர்ந்தவரோ, “கொஞ்சம் நாளாகட்டும் பூரணிமா. வசீக்கு உங்க வீடு செட்டாகும்னு தோணலை. இடம் மாறினா அவனுக்கு உடம்புக்கு முடியாமல் போயிரும். பார்க்கதான் வாட்டசாட்டமா இருக்கான். தண்ணி மாறினாலே உடம்புக்கு ஒத்துக்காது” என்றார்.

“அப்படின்னா வேண்டாம் அத்தை. இன்னொரு நாள் பகல்ல போயிட்டு இருட்டுறதுக்குள்ள வந்திருறோம்.”

“அப்படியே செய்யலாம் பூரணி. ஆமா வேலைக்குப் போயிட்டுருந்தியாமே? என்ன வேலை பார்த்த?”

“டி.பார்ம் முடிச்சிருக்கேன் அத்தை. இங்க இருக்கிற ஜெயம் மெடிக்கல்ல நானும், என் ஃப்ரண்டும் வேலை பார்த்தோம். கல்யாணத்துக்காக வேலையை விட்டாச்சி.”

“விட்டது நமக்கெதுக்கு. நாம புதுசா ஒரு மெடிக்கல் வச்சிக்கலாம். மெடிக்கல் வைக்க என்னென்ன வேணும்?” மருமகள் வேலை பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் விசாரணையில் இறங்கினார்.

“சொந்தமா கொஞ்சம் வசதியா பெரிய இடம் வேணும். சொந்தமா இல்லைனாலும் வாடகை இடமாயிருந்தாலும் சரிதான். மருந்து மாத்திரைகள் வாங்கி வைக்க ஒரு தொகை வேணும். நம்ம அக்கௌண்ட்ல பேங்க்ல அமௌண்ட் இருக்கணும். ஃப்ரிட்ஜ் எப்பவும் அவைலபிளா இருக்கணும். அங்க வேலை செய்யுறவங்க எல்லாரும் டி.பார்ம் கண்டிப்பா முடிச்சி, அந்த சர்டிபிகேட் வச்சிருக்கணும். ட்ரக்கிங் இன்ஸ்பெக்ஷன் அப்பப்ப வருவாங்க. நாம வாங்கின மருந்து, விற்ற மருந்துன்னு செக் பண்ணுவாங்க. அவங்க வரும்போது பில்லுல சைன் பண்றவங்களோட சர்டிபிகேட் காண்பித்தே ஆகணும். எக்ஸ்பைரியான மருந்துகளை அப்பப்ப அழிச்சிரணும். இன்ஸ்பெக்ஷன் வந்தவங்க கண்ணுல அது மாட்டிச்சிதுன்னா, அவ்வளவுதான் கடையை மூடி சீல் வச்சிட்டுப் போயிருவாங்க.”

மெச்சுதலாகப் பார்த்தாலும், “அவ்வளவுதானா? இன்னும் இருக்கா?” என்றார் ஆனந்தி.

“இருக்கே அத்தை. நாங்கள்லாம் டாக்டருக்கு ஈக்வல் தெரியுமா?”

“ஏய்! இதான வேணாம்ன்றது. எனக்கு அதைப்பற்றித் தெரியாதுன்னு ரொம்ப சீன் காட்டாத” என்று மருமகளைக் கிண்டலடித்தார்.

“அட நிஜம் அத்தை. நாங்களும் முக்கால்வாசி டாக்டர் அளவு படிக்கணும். வேல்யூ கம்மிதான். படிக்க ரொம்பவே கஷ்டமாயிருக்கும். டாக்டர்னா அனாடமிக் மட்டும் படிக்கணும். எந்த லைன் எடுக்கிறாங்களோ அதைப்பற்றி மட்டும் படிக்கிறதால, அது சம்பந்தப்பட்ட மருந்தை மட்டும் படிப்பாங்க. டி.பார்ம் படிக்கிறவங்க அனாடமிக் படிக்கணும். என்ன மருந்து? அதை எப்படித் தயாரிக்கணும்? அதில் என்னலாம் சேர்க்கணும்? எந்தச் செடியிலிருந்து வருது, அதிலும் எந்தப் பகுதியிலிருந்து வருதுன்னு பார்த்து எடுத்துப் பதப்படுத்தின்னு நிறையவே படிக்கணும்.”

“அது மட்டுமா? டி.பார்ம் இரண்டு வருஷம் படிச்சிட்டு மூணு மாசம் கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல ப்ராக்டீஸ் பண்ணி, அதுக்கான சர்டிபிகேட் வாங்கி, நாங்க டி.பார்ம் படித்த இடத்துல கொடுத்தால்தான் நாங்க படித்து முடித்ததற்கான உடனடி சர்டிபிகேட் கிடைக்கும். இல்லைனா ரொம்ப லேட்டாகும்.”

“ஓ... இவ்வளவு இருக்கா? எந்தப் படிப்பும் ஒன்றைவிட ஒன்று குறைஞ்சது இல்லைன்னு புரியுதுமா. நேரம் கிடைக்குறப்ப மெடிக்கல் வைக்குறதுக்கு மாமாகிட்டப் பேசிட்டு சொல்றேன்.”

“உங்க பையன்கிட்ட...” முழுதாக முடிக்க முடியாமல் நிறுத்த, அதை உணர்ந்தாரோ ஆனந்தி, “அவனை நான் சமாளிச்சிக்குறேன்” என்றிருந்தார் வேகமாக.

எதுவும் புரியவில்லை என்றாலும் சம்மதமாகத் தலையை அசைத்திருந்தாள்.

சமீபமாக பூரணிக்குள் ஏதோ ஒரு நெருடல் அவ்வப்போது. எப்பொழுதும் சாதாரணமாக இருப்பவளுக்கு சில சமயம் முள்ளின்மேல் நிற்கும் அவஸ்தை. ஏனிந்த உணர்வு என்று புரியவில்லை அவளுக்கு.

குலசேகரனின் பார்வை வித்தியாசத்தை, அவளின் அகக்கண் அறிகிறதோ!

மூன்றாம் நாள் குலதெய்வம் கோவிலுக்கு குலசேகரன், தனசேகரன் இருவரும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். பரிபூரணி பொங்கல் வைக்க அவளுக்கு உதவிக்கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா.

தனசேகரனின் மூத்த மருமகள் ஸ்வாதியோ, “அந்த பூரணிக்கு சமமா நானா? முடியவே முடியாது” என்று கோவிலைச் சுற்ற, துணைக்கு கணவன் மனோகரனை இழுத்துக்கொண்டாள்.

“ஹாய் அண்ணிகளே! எதாவது உதவி வேணுமா?” தங்கள் அருகில் கேட்ட ஆண் குரலில் திரும்பிய பூரணி, மொட்டையடித்து மீசை தாடி ஏதுமில்லாமல் நின்றிருந்தவனை கேள்வியாய் பார்த்தாள்.

“வாடா கொழுந்தா. உனக்காகக் கூடுற கூட்டத்தை விலக்கி விட்டுட்டு வர இப்பதான் நேரம் கிடைச்சதா?” கிண்டலாகக் கேட்டாள் ஐஸ்வர்யா.

“எங்க அண்ணி? எல்லாருக்கும் நான்தான் வேணுமாம். அடமா அடம்பிடிக்கிறாங்க. குடும்பத்துக்கும் நேரம் கொடுக்க விடுங்கடான்னு அவகாசம் கேட்டு வந்திருக்கேன்.”

“மொட்டையில கொழுக்கட்டை மாதிரி இருக்கடா” என்று அவன் கால்வாரினாள் ஐஸ்வர்யா.

“சத்தமா சொல்லிராதீங்க அண்ணி. பிச்சித் தின்னுரப் போறாங்க” என்றவன் பூரணியிடம் திரும்பி, “ஹாய் சின்னண்ணி! நான் தினகரன். தாத்தா பொன்சேகரன்! அப்பா தனசேகரன்! சித்தப்பா குலசேகரன்! உடன்பிறப்பு மனோகரன்! சுவீகரன்! அப்புறம் உங்காளு வசீகரன்! கடைக்குட்டி சுவீ அண்ணா பையன் கிருஷ்கரன்! எப்படி எங்க கரன் ஃபேமிலி?” என்றான் சத்தமாகச் சிரித்தபடி.

“கேட்கவே மூச்சடைக்குது. இவ்வளவுதானா? இல்லை இன்னும் யாராவது கரன் இருக்காங்களா?” என்று புன்னகைத்தாள்.

“இப்போதைக்கு இவ்வளவுதான். அடுத்து உங்கள்ல யாராவது வெளியிட்டால்தான் உண்டு” எனவும் பூரணிக்குள் சிறிது வெட்கம் இழையோட, அதைக்கண்ட ஐஸ்வர்யா, “டேய்! கலாட்டா பண்ணினது போதும். போய் ஓரமா உட்காரு.” அவனை அனுப்பி, “அந்தப்பக்கம் தீ அணையுற மாதிரியிருக்கு பார் பூரணி” என்று அவளின் கவனத்தைத் திசை திருப்பினாள்.

பொங்கல் வைத்து முடித்து சாமிக்கு பூஜையிட்டு முடிய, அனைவருக்கும் பொங்கல் வைத்து, மதிய உணவுக்குக் கொண்டு வந்த உணவுகளைப் பந்தி வைக்க, பூரணியின் கையால் உண்ண மறுத்தனர் தனசேகரன் குடும்பத்தினர். மனோகரனையும் தடுத்துவிட்டாள் ஸ்வாதி. அக்குடும்பத்தில் விதிவிலக்காய் தினகரன்.

முதலில் சற்று வருத்தம் ஏற்பட்டாலும், அவர்களது குணத்தை எண்ணி விலகி நின்றாள் பூரணி.

மதிய உணவு முடிந்ததும் சற்று ஓய்வெடுக்கையில், “அவங்களுக்கு ஏழை பணக்காரன்னு வேறுபாடு பார்க்கத் தெரியும். ஆனா, சபை நாகரீகம் தெரியாது பூரணி. இனி அவங்க எதாவது கேட்டால் நான் பார்த்துக்குறேன்” என்ற ஐஸ்வர்யா பூரணிக்கு ஆறுதலாகப் பேசினாள்.

“அவங்க உடம்புல ஓடுற இரத்தம், இரத்தமா இல்லாமல் பணமா ஓடுதோ அக்கா?” பூரணி யோசிப்பதுபோல் முகத்தை வைக்க,

“யாருக்குத் தெரியும். அதிலும் அது பேப்பரா ஓடுதா, இல்லை சில்லரையா சிலிர்த்துக்குட்டு ஓடுதான்னு, உடல் முழுவதும் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் தெரியும்.” ஐஸ்வர்யா சிரிக்காமல் சொல்ல, பரிபூரணி சத்தமாகச் சிரித்துவிட்டாள்.

“ஏய்! உஸ்ஸ்...” என்று அதட்டவும் பரிபூரணி வாயை மூடிச்சிரிக்க, “கூட்டிட்டுப் போயி செக் பண்ணிப் பார்த்துரலாமா?” என்று கண்ணடித்துக் கேட்டாள்.

“பார்க்கலாம் அக்கா. எனக்கும் வேற கலர்ல இரத்தம் பார்க்க ஆசையாயிருக்கு” என்று இவளும் கண்சிமிட்ட, தனசேகரன் மனைவி சுகந்திக்கும், மருமகளுக்கும் உள்ளுக்குள் எரிந்தது.

“அந்த வசீகரனைக் கல்யாணம் பண்ணிட்டு எப்படி இவ்வளவு சந்தோஷமா சிரிக்க முடியுது? பணம்னதும் குறை கண்ணுக்குத் தெரியலையோ?” என்றார் சுகந்தி.

“நானும் அதுதான் அத்தை யோசிக்கிறேன். முகத்துல பெயருக்குக்கூட ஏமாற்றப்பட்ட வருத்தம், வேதனை, கோவம்னு எதுவுமேயில்லை. அவனுக்கு சரியாகிருச்சா என்ன?” மாமியாருக்குக் குறையாத மருமகளாய் ஸ்வாதி கேட்டாள்.

“இருக்காது. அப்படின்னா என் தங்கச்சி கஷ்டப்பட்ட குடும்பத்துல பொண்ணு எடுத்திருக்கமாட்டா. என்னைவிட அதிகம் கௌரவம் பார்க்கிற ஆள் அவள். இன்னும் இந்தப்பொண்ணுக்கு நிஜம் தெரிஞ்சிருக்காது. தெரிஞ்சிருந்தா இவ்வளவு சிரிப்பு எப்படியிருக்கும்?”

“தெரிய வச்சிரலாமா அத்தை?” என்றாள் மருமகள் வில்லங்கமாக.

“நாமதான் செய்தோம்னு தெரிஞ்சது, என் தங்கச்சி உடன்பிறப்புன்னு பார்க்காம கண்டந்துண்டமா வெட்டிருவா. எதையும் கண்டுக்காத. இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்கவங்க வீட்டைப்பார்த்துப் போயிருவோம். நமக்கெதுக்கு இந்த தேவையில்லாத வேலை” என்று அமைதியாகிவிட்டார்.

மாமியார் விடச்சொன்னதை மருமகளுக்கு விட மனதில்லையோ!

“ஏங்க உங்க சித்தப்பா பையன் வசீகரனுக்கு, பைத்தியம் தெளிஞ்சிருச்சா என்ன?” என்று முதல் திரியைக் கொளுத்திப் போட்டாள் ஸ்வாதி.

“ஏய் ஸ்வா! இங்க வச்சி ஏன் கேட்கிற? யாராவது கேட்டுரப்போறாங்க” என்றான் பதற்றத்துடன்.

“யாரும் கேட்க வாய்ப்பில்லை. எல்லாரும் கோவில் மண்டபத்துல இருக்காங்க. நாம கோவில் உள்ள இருக்கோம்.”

“அதுக்கு இப்படிக் கேட்பியா?” என்று கடிந்தான் மனோகரன்.

“என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க? கல்யாணமானா பைத்தியம் தெளிஞ்சிரும்னு ஜாதகத்துல இருந்ததாலதான், ஏழைப் பொண்ணைக் கல்யாணம் செய்து வச்சாங்க. இப்ப அந்தப்பொண்ணு சந்தோஷமா இருக்கிறதைப் பார்த்தா, வசீகரனுக்குப் பைத்தியம் தெளிஞ்சிருச்சா? நாலு நாளைக்கு முன்ன இந்தப் பைத்தியம் தெளிஞ்சிருந்தா, அத்தை இந்தக் கல்யாணத்தை நடத்தியிருக்க மாட்டாங்கள்ல? அந்த பூரணி பொண்ணுக்கு ஏதோவொரு குருட்டு அதிர்ஷ்டம்தான்ங்க” என்றாள்.

“சரியாகியிருந்தா நமக்குத் தெரிவிச்சிருப்பாங்க ஸ்வா. அப்பா சித்தப்பா அதைப் பெருசா கொண்டாடியிருப்பாங்க. வசீ நல்லாகிட்டாலே போதும். சீக்கிரம் குணமாகணும்னு சாமியைக் கும்பிடு” என்று மனைவியை அடக்கினான்.

“ம்.. சரிங்க” என்றவள் கோணல் புன்னகை ஒன்றை வெளிப்படுத்தி, பத்தடி தள்ளி தூணிற்குப் பின்னிருந்த பூரணியைப் பார்த்து வந்த வேலை முடிந்த திருப்தியில் அங்கிருந்து சென்றாள்.

அமர்ந்திருந்த பரிபூரணியோ அதிர்ச்சியில் ஊமையாகிப் போனாள். ‘வசீகரனுக்குப் பைத்தியமா? எப்படி? இல்ல இவங்க பொய் சொல்றாங்க. நான் இங்க இருக்கிறதைப் பார்த்துட்டு என்னைக் கஷ்டப்படுத்த இப்படிப் பேசுறாங்க. அவங்களுக்கு நான் மருமகளா வந்தது பிடிக்கலை. என்னை வீட்டைவிட்டு அனுப்ப இப்படிப் பண்றாங்களாயிருக்கும். சட்டுன்னு யார்கிட்டேயும் கேட்டுராம நிதானமா இருக்கணும் பரி’ என தனக்குள்ளே கேள்வியும் பதிலுமாகிப்போக, அப்பொழுது தன்னை நோக்கி வரும் கணவனைக் கண்சிமிட்டாது பார்த்தாள் பரிபூரணி.

மனைவியின் பார்வைக்குப் பதில் புன்னகை அளித்தபடி அருகில் வந்தவன், “பரி அம்மா வீட்டுக்குக் கிளம்பலாம் சொல்லி கூட்டிட்டு வரச்சொன்னாங்க. இங்க என்ன பண்ற? வா” என கைபிடித்து எழுப்பிவிட்டான். விழிகளால் அவனை முழுவதும் அளந்தும் ஸ்வாதி சொன்னதுபோல் எந்த அறிகுறியும் தெரியவில்லை. குரல் ஓங்கி ஒலிக்கவில்லை என்றாலும், சற்றே மென்மையான குரல் வசீகரனுடையது. அந்த மென்மையிலும் தன்னைத் தொலைத்திருந்தாளோ!


‘பைத்தியமென்றால் குரலிலும் நடத்தையிலும் வித்தியாசம் தெரிந்திருக்குமே? என் வசீகரனைப் பைத்தியமென்று எப்படி சொல்லலாம்? கேட்டாலும் ஒழுங்கான பதில் சொல்லப் போறாங்களா என்ன?’ என்று நேரடியாகக் கேட்கத் தூண்டிய நாவையடக்கி அமைதியானாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
காரில் செல்கையில், தன் தோள்சாய்ந்து உறங்கிய கணவனின் தலைக் கேசத்தை விரல்கள் கோதிவிட, மனமோ கோவத்தில் துடித்துக் கொண்டிருந்தது. ‘இப்படி ஒரு பழியைப்போட எப்படி மனசு வந்தது அவர்களுக்கு? எனக்கு மனசு ஆறவேயில்லை வசீகரா. உங்ககிட்டயிருந்து என்னைப் பிரிக்கணும்னு நினைச்சா, அதை அவங்க கனவிலும் நடக்க விடமாட்டேன்’ என்றவள் கண்கள் முன்னிருந்த சீட்டை வெறித்தபடியிருந்தது.

தன் கை சுரண்டப்பட்டதில் சற்றே நிகழ்வுக்கு வந்தவள், பக்கத்திலிருந்த ஐஸ்வர்யாவைக் கேள்வியாய்ப் பார்க்க, ‘ஏன் ஒருமாதிரி இருக்க?’ என்பதை அவள் சைகையில் கேட்டாள்.

‘ஸ்வாதி பேசியதை இவளிடம் கேட்கலாமா?’ என்ற எண்ணத்தை விடுத்து, ‘எதுவுமில்லை’ என்பதாய் தலையசைத்துப் புன்னகைத்தாள். ஏனோ பூரணியின் அந்தப் புன்னகைக்குள் ஏதோ இருப்பதுபோல் தோன்றியது. அதேநேரம் ஐஸ்வர்யாவிற்கு வசீகரன் மீதான பரிபூரணியின் கவனம் கொஞ்சம் அதீதமாகத் தோன்றியதோ!

வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் பூரணியைத் தனியே பிடித்து, போர்டிகோ தாண்டி அங்கிருந்த கல் திண்டில் உட்காரவைத்து, “எதாவது பிரச்சனையா? ரொம்ப அப்செட்டா தெரியுற?” என கேட்டாள்.

“பிரச்சனையா? சேச்சே அப்படிலாம் எதுவுமில்லை.”

“இல்ல நீ பொய் சொல்ற பூரணி. கோவில்ல இருந்து கிளம்பியதிலிருந்து உன்னோட நடவடிக்கையில் நிறைய வித்தியாசம் தெரியுது. என்ன விஷயம்? தனசேகரன் மாமா குடும்பத்தாளுங்க எதாவது சொன்னாங்களா? அப்படியே அவங்க எதாவது சொன்னாலும் அதை கண்டுக்காத சொல்லியிருக்கேன்ல?” என அக்கறையுடன் கேட்க,

“என் புருஷனைப் பைத்தியம்னு சொன்னால் கூட கண்டுக்காம வரணுமாக்கா?” என்றாள் கோவமாக.

“பூரணி!” என்றாள் அதிர்வாய்.

“சொல்லுங்கக்கா. இதை எப்படிக் கண்டுக்காம வர்றது? ஆனா, நான் வந்தேன். கண்டுக்கவும் முடியாம, கண்டிக்கவும் முடியாம வந்தேன்” என தட்டிக்கேட்க முடியா தன் நிலையை எண்ணி உதட்டைக்கடித்துத் தன் கோபத்தை அடக்கியவள், “அவங்களைப் பார்த்து எப்படிக்கா? ஷை டைப்பா இருக்காங்க. அடுத்தவங்ககிட்ட அனாவசியப் பேச்சு கிடையாது. தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்காங்க. அதுக்கு பைத்தியம்னு சொல்வாங்களா. அப்படிப் பார்த்தா அடுத்தவங்க வாழ்க்கையில் விளையாடுற அவங்கதானக்கா பைத்தியம். எனக்கே இப்படியிருக்கே அத்தை இதைக் கேட்டிருந்தா எப்படித் துடிச்சிருப்பாங்க. மனசாட்சியில்லாத மனிதம் செத்த மனுஷங்க” என்று திட்டித்தீர்த்தாள் அவர்களை.

“பூ..ரணி அ..அது” என்று உண்மையைச் சொல்ல முடியாது தயங்க,

அவள் தயக்கத்தைக் கவனியாது, “இன்னொரு முறை இப்படிச் சொன்னா வேடிக்கை பார்த்துட்டிருக்க மாட்டேன்கா” என்றவள் கண்ணில் அளவுகடந்த கோவம்.

“பூரணி ரிலாக்ஸ். டைமாகுது பாரு. எதையும் யோசிக்காம போய் வசீயும், நீயும் சாப்பிட்டுப் படுங்க.”

“அக்கா” என ஆதரவில்லா குழந்தையாய் அவளைக்காண,

“தூங்கி எழுந்ததும் காலையில் மனசு லேசாகிரும். மனசைப்போட்டுக் குழப்பிக்காம போ” என்று அவளை அனுப்பி செல்பவளைப் பார்த்தபடி அங்கேயே அமர, அப்பொழுதுதான் அந்த வித்தியாசத்தை கவனித்தாள். பார்த்து அறிந்து புரிந்த விஷயம் குலைநடுங்க வைத்தது. ‘கணவனிடம் சொல்லலாமா? வேண்டாமா?’ தனக்குள் பட்டிமன்றம் நடக்க, செய்வதறியாது திணறினாள் ஐஸ்வர்யா.

“ஐஸ்மா! இங்க தனியா என்ன பண்ற? மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழின்னு பாடுறதுக்குக்கூட யாருமில்லை. ஒருவேளை தனிமையில் இனிமை காணுறியா? அது தப்பாச்சே. நான் இருக்கையில் என் செல்லத்துக்குத் தனிமையா? கூடவே கூடாது. அப்படியே ஒரு ரொமாண்டிக் சாங் பாடு ஐஸ்” என்றான் குழைந்த குரலில்.

மனைவியிடம் பதிலில்லை என்றதும் “ஹேய் மை ஒய்ஃப்! என்ன பதிலைக் காணோம்” என நின்றவாக்கிலேயே அவள் முகம் நிமிர்த்த கண்கள் கலங்கியிருப்பதைக் கண்டவன் பதறிப்போய் அருகில் அமர்ந்து, “ஐஸ்மா என்னடா? ஏன் கண்ணு கலங்கியிருக்கு? பையனை எங்க? அவன் எங்கயாவது கீழ விழுந்து அடிபட்டுருச்சா என்ன?” என்றவன் குரலும் மனைவியின் கண்ணீர் கண்டு கலங்கியது.

“கிருஷ்கு ஒண்ணுமில்லை” என்றதும் சுவீகரன் மனம் நிம்மதியாக, “எனக்கு இங்க எதுவுமே பிடிக்கலைங்க. வாங்க நாம தனியா போகலாம்” என்று கணவனின் பதற்றத்தைத் திரும்பவும் அதிகப்படுத்தினாள்.

“என்னாச்சி என் ஐஸ் பேபிக்கு? இந்தளவு யோசிக்கிற அளவு என்ன நடந்தது?” உட்கார்ந்தபடியே ஆறுதலாக மார்போடு சேர்த்தணைத்தான்.

“பூரணி பாவம்ங்க.”

மனைவியின் இளகிய மனம் தெரிந்ததுதானே. பூரணிக்காக நிதமும் ஏதோ ஒருவகையில் தன்னிடம் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கிறாள். அவளை சமாதானப்படுத்தும் பொருட்டு, “சீக்கிரமே தம்பிக்கு குணமாகி நல்லா வாழ்வாங்கடா” என்றான்.

“இல்லங்க பூரணி பாவம். அவளை அவள் வீட்டுக்கு அனுப்பிருவோம். அவள் இங்க இருக்க வேண்டாம்” என்றாள் அடமாக.

“ஐஸ் என்ன உளர்ற? அவளைப் பாவம்னு சொல்லிட்டு, வீட்டைவிட்டு அனுப்பனும்னா, எனக்குப் புரியலை. யாராவது எதாவது சொன்னாங்களா?”

“சொன்னாங்கன்றதை விட என் கண்ணால ஒண்ணைப் பார்த்தேன். சொன்னா நீங்க நம்பமாட்டீங்க. எனக்கே அது உண்மையா இருக்கக்கூடாதான்னு இருக்குதுங்க” என்றவள் குரலில் ஒருவித நடுக்கம் இருந்தது.

“பார்த்ததைச் சொல்லு. நம்பலாமான்னு நீ சொல்றதை வச்சி முடிவெடுக்கலாம்.”

“இல்ல நீங்க நம்பமாட்டீங்க” என்றாள் மறுபடியும்.

அவளை தனக்கு நேராக உட்காரவைத்து, “ஐஸ் டென்சனைக் கிளப்பாம என்னன்னு சொல்லு? நீ எதுவும் தப்பா சொல்லமாட்டேன்ற நம்பிக்கை எனக்கிருக்கு” என்றான் கோவமாக.

“அ..அது பூரணி...”

“பூரணிக்கு என்ன?”

“பூரணி என்கிட்ட பேசிட்டு உள்ள போனப்ப, வெளில வந்த உங்கப்பா அவளை இடிச்சிட்டு, சாரின்னு சொல்லிட்டுப் போனார்” என்றாள்.

“ஏய்! லூசா உனக்கு. தெரியாமல் இடிச்சதால சாரி சொல்லிருக்கார். அதை தப்பு சொல்வியா? அதுவும் சொந்த மரு... ம்ம்ம்... உன் கற்பனையைக் குறைச்சிட்டு வீட்டுக்குள்ள வா” என்று அதட்டியபடி எழுந்தான்.

“பார்த்தீங்களா! நீங்க நம்பமாட்டீங்கன்னு நான் சொன்னேன்ல. எனக்குத் தெரியும் இதை யாரும் நம்பமாட்டாங்க.” உண்மையைப் புரியவைக்க முடியாமல் திணறியபடி புலம்பினாள் ஐஸ்வர்யா.

“ஐஸ்.. ஐஸ்.. ஏய்.. என்னமா?” என்றபடி திரும்பவும் அவளருகில் அமர்ந்து, “சரி என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லு?” என்றான்.

கணவன் தன்னை நம்புவான் என்ற நம்பிக்கை வந்ததோ! “ஸ்வாதி கோவில்ல பூரணிகிட்ட மறைமுகமா வசீ பைத்தியம்னு சொல்லியிருக்காங்க. ரொம்ப டிஸ்டர்பா இருந்தான்னு ஆறுதலா பேசி உள்ள அனுப்பினேன். அப்ப வாசல்ல நின்னு போன் பேசிட்டிருந்த மாமா வேகமா வந்து அவளை இடிச்சிட்டு, சாரி சொல்லி அவள் தோளைத்தட்டி உள்ளே போகச் சொன்னார்.”

“இதுல என்னடா இருக்கு?” என்றான் சலிப்பாக.

இவ்வளவு சொல்லியும் சலிப்பாகப் பேசியவன் மேல் கோவம் எழ, “உங்களுக்குப் புரியலையாங்க? அதுவரை வாசல்ல நின்னுட்டிருந்தார். அவளைக் கண்டதும் போனை கட் பண்ணிட்டு வேகமா வந்து... அ..அவள் உள்ளே போன பிறகும் அவளையே... எப்படி சொல்றது தெரியலை. அந்தப் பார்வை தப்பா இருந்ததுங்க. இதை அவள் உணர்ந்தாளா? இல்ல தெரியாமல் இடிச்சதா நினைத்து சாதாரணமா எடுத்துக்கிட்டாளா தெரியலை. எனக்கு வித்தியாசம் தெரிஞ்சதுங்க. மகன் பைத்தியம்ன்றதுக்காக மருமகளை... சே...” என்றவள் கோவம் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை.

இடிந்துபோய் அமர்ந்திருந்தான் சுவீகரன். மொத்த அதிர்வும் உள்ளுக்குள் ஒரு வழி செய்தது. கலங்கிய கண்களைத் துடைத்து, “ஐஸ் அப்..அப்பா எப்படி இவ்வளவு சீப்பா? நீ நினைக்கிற மாதிரி இருக்காதுடா. ஆனா, சொல்றது நீன்றப்ப நம்பாமலும் இருக்க முடியலை. எதுக்கும் அவர் நடவடிக்கை பார்த்து என்ன செய்யலாம்னு பார்க்கலாம். சரியா?”

கணவன் இந்தளவு நம்பியதே பெரிதென்று தோன்ற, “ம்.. பூரணி பாவ...”

“நாம இருக்கோம்லடா பார்த்துக்கலாம்” என்றான் மென்மையான வார்த்தை கொண்டு.

“ஏற்கனவே உங்க தம்பி அப்படி. அதுவே அந்தப் பொண்ணுக்கு முழுசா தெரியலை. அதுக்குள்ள இப்படி ஒண்ணு. அப்ப என்னையும் உங்கப்பா...”

“ஐஸ்மா!” என அதிர்ந்து எழுந்தவன் மனைவியின் முகத்தைத் தன் வயிற்றுடன் சேர்த்தணைத்து, “ரொம்பக் குழம்பிப்போய் இருக்க. முதல்ல உள்ள வா” என்று அறைக்குள் அழைத்துச் சென்றவன் மனைவியுடன் மகனையும் படுக்கவைத்து யோசனையிலாழ்ந்தான்.

பரிபூரணிக்குள்ளும் யோசனைகள்தான். மாமனாரின் பார்வை வித்தியாசத்தை இன்றுதான் முழுதாக உணர்ந்தாள். ஏனோ தனக்கே தெரியாத ஒன்றை ஐஸ்வர்யாவிடம் பகிர பயம். அவள் தன்னைத் தவறாக எண்ணிவிட்டால் என்ன செய்வதென்ற தயக்கம். இதோ சற்று நேரத்திற்கு முன் வேண்டுமென்றே இடித்தது போல்தான் இருந்தது. உடனே மன்னிப்பு கேட்டு தோளைத் தொட்டு உள்ளே போகச் சொல்கையில், அத்தொடுதலில் வித்தியாசம் இருந்ததோ! அந்நேரம் புலப்படாதது இப்பொழுது புரிகிறது. புரிந்த விஷயம் அருவருப்பைக் கொடுக்க, அதை ஜீரணிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள்.

சட்டென்று குளியலறை சென்று தண்ணீரைத் திறந்துவிட்டு, தண்ணீரில் கண்ணீரைக் கழுவினாள். ஆடை மாற்றி கணவனருகில் வந்து படுத்தவள், அவன் முகம் காண, நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். எங்கே கணவனைப் பிரிந்துவிடுவோமோ, பிரித்துவிடுவார்களோ என்ற பயம் எழுவதைத் தடுக்க இயலவில்லை. பாதுகாப்பில்லாத உணர்வு எழ, கணவன் தோளில் தலைவைத்து வயிற்றை இறுகக் கட்டிக்கொண்டு அவனே சரணென்று கண்மூடினாள்.

அரைமணி நேரம் கடந்திருக்கையில் தலைவலி ஆரம்பித்து அதிகரித்துக்கொண்டே சென்றது. பின் எழுந்து தலையை நன்றாகத் துவட்டி தலைவலித் தைலம் தேட அவளிடம் இல்லாததால், ஐஸ்வர்யாவிடம் கேட்க வெளியே வந்தாள். வீடே அமைதியாயிருக்க, கீழே வரவேற்பறையில் மட்டும் மின்விளக்கு எறிய கூடவே பேச்சுக்குரல்கள் கேட்டது.


சத்தம் வராத சின்ன கொலுசு அணிந்திருந்ததால் சத்தமில்லாமல் கீழே வந்த பூரணி, மாமனார் மாமியார் பேசியதைக் கேட்டு அதிர்ந்து பிரமை பிடித்தாற்போல் அப்படியே நின்றிருந்தாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top