• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் - 13

“நான் உன் மேல வச்ச பாசத்துக்கு ரெண்டு சொட்டு கண்ணீர்தான் விலையா? “

“உனக்கெல்லாம் அதுவே ஜாத்திடா”

“சொல்லுவடா சொல்லுவ. ஏன் சொல்ல மாட்ட? உன்னையெல்லாம் அப்பவே ரிட்டன் போட்டு விட்டிருக்கனும் என் தப்புதான்”

“ரிட்டனா? என்னடா லூசு மாதிரி பேசுற? ஹாஸ்டல் சோத்த திண்ணு மூள மழுங்கிப் போச்சா உனக்கு? “

“ஆமா ஆமா எனக்கு மூள மழுங்கிருச்சு. ஐயாவுக்கு மூள காது வழியா ஊத்தி ஓழுகுது. சொல்றத மொத கேளுடா பப்பாளி மூஞ்சா “

“சரி சொல்லித் தொலடா “

“உன்ன நாங்க அமேசான்ல இருந்து ஆர்டர் பண்ணிதான் வாங்குனோம். அப்பவே சொன்னேன் பாக்க நல்லாவே இல்ல. குவாலிட்டி சரியா இருக்காது திரும்ப அனுப்புங்கனு. ஆனா அப்பவும்கூட நீ அப்படியே அம்மாவ பாத்து அழுது ஆக்சன போட்டுட்ட, அம்மாவும் உன் மேல இறக்கப்பட்டு விடுடா ஆதி இருந்துட்டு போகட்டும்னு என்னைய சமாதானப்படுத்துனாங்க “

மூக்கைச் சுழித்து, வாயைப் பிதுக்கி அலற ஆரம்பித்தான் சிபி. கண்ணீர் காட்டாறு போல் ஊற்றியது. “ஐயோ நான் இல்லப்பா “ என்று சொல்லியபடியே ஜோதி சமையலறைக்குத் திரும்ப, சிபியின் அழுகையை வேடிக்கை பார்த்து சிரித்தபடியே ஆதி தோசையை உள்ளே இறக்கினான்.

சிபி அழுகையில் தூக்கம் களைந்து எழுந்த யாமினி அறையில் இருந்து ஹாலுக்கு வந்தாள். அதுவரை அவன் முகத்தில் இருந்த சிரிப்பு சுருங்கி சோகமாய் மாறியது. ஆனால், அவளுக்கு அப்படி இல்லை. பல மாதங்கள் கழித்து அன்றுதான் சிரிக்கவே செய்தாள் யாமினி.

தன் கண்ணில் தேங்கியிறுக்கும் கண்ணீரின் வழியே மங்களாகத் தெரியும் யாமினியின் முகத்தைக் கண்டவுடன், தன் கௌரவத்திற்கு பாதகம் வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் கண்ணைத் துடைத்துக் கொண்டே “இருடா உன்னைய அப்புறம் வச்சுக்குறேன் “ என்று சொன்னபடியே வெளியேறினான் சிபி. “சரிதான் போடா… ஆமா இவன் ஸ்கூலுக்கு போகலையா? “ என்று யாமினியைப் பார்த்து கேட்க “இல்ல நாளைக்கு போறேனு சொல்லிட்டான் “ என்று அவளும் பதிலளித்தாள்.

“ம்மா… இங்க வா ஒரு நிமிஷம். ஸ்கூலுக்கு போகம இவனுக்கு இங்க என்ன வேல?. என்னைய ஒரு நாளாச்சும் இந்த மாதிரி லீவ் போட விட்றுக்கியா நீ? “

“டேய் துள்ளாதடா. அவங்க ஸ்கூல்ல எல்லாரும் கொடைக்கானல் டூர் போயிருக்காங்கடா. இவனுக்குதான் குளிர் ஒத்துக்காதுல அதான் அனுப்பல “

அம்மா கொடைக்கானல்னு சொன்னதும் ஆதியின் இதயம் ஜோதாவையும் அக்பரையும் தேடியது, ம்ம்ம் அவர்களும் கொடைக்கானல் பேருந்தில்தானே அருகே அமர்ந்து காதல் சொட்டச் சொட்ட கரைந்து பயணிக்கிறார்கள். இன்று வீட்டிற்கு வந்ததால் வீடியோ போட வாய்ப்பே இல்லை. வரும் அவசரத்தில் நோட்டை வேறு எடுக்காமல் வந்துட்டேன். எடுத்து வந்திருந்தால் கதையில் அடுத்து என்ன? என்பதையாவது படித்திருப்பேன் என்று சிந்தனையை அதன் மீது ஓடவிட்டுக் கொண்டிருந்தான். “எப்படா வந்த? “ என்று யாமினி கேட்டு அவனை நிறுத்த மீண்டும் நினைவு திரும்பினான்.

“வந்து ஒரு மணி நேரம் ஆச்சு “

“என்னடா ஹேர் ஸ்டெய்ல் இது? “ என்று யாமினி அவன் தலையை கைகாட்டி சிரிக்க சிபிக்கு அவனை வம்பிழுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

“அவனே ஒரு மாங்கா மண்டையன். அந்த மண்டைக்கு ஹேர் ஒரு கேடு. அதுக்கு ஸ்டெய்ல் வேற க்கும்ம் “

“ஸ்கூலுக்கு கட் அடிக்குற நீயெல்லாம் என்னைய பத்தி பேசவே கூடாது”

“நீயும்தா காலேஜ்கு கட்டைய போட்டுட்டு வந்திருக்க. நான் அதப்பத்தி எதாவது பேசுனனா? “

“அப்பாதான் வர சொன்னாரு “

“என்னையும் அப்பாதான் போக வேணானு சொன்னாரு “

“சரி சரி நிறுத்துங்க “ என்று சொல்லியபடியே ஜோதி வந்து யாமினியை அழைத்து அவளது அலமாரியிடம் சென்று நின்று “உனக்கு எது வேணுமோ எடுத்துக்கோமா… முகமெல்லாம் வாடிக்கெடக்கு முதல்ல போய் குளி “ என்றாள். ஜோதியின் முகத்தை கனிவோடு பார்த்த யாமினியை அவள் தவறாக புரிந்துகொண்டாள்.

“என்னமா யோசன? எல்லாம் பழசா இருக்கேனு நெனைக்கிறியா?. இதெல்லாம் போட்டே பல வருஷம் ஆகிருச்சு. சிபி பொறந்ததுல இருந்து சுடிதார் போடுறதவே நிறுத்திட்டேன்.

அதுனால வேற எடுக்கல. இப்போதைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ சரியா. நம்ம வேற வாங்கிக்கலாம். இல்ல நான் சேரி கட்றேனு சொன்னா கூட நான் எடுத்து தரேன் கவர் பிரிக்காமையே ரெண்டு மூனு இருக்கு”

“ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல. எனக்கு இதுவே ஓகேதான். சொல்லப்போனா இது எனக்கு சரியா இருக்கும் “

“ஆமா ஆமா சைசும் கலரும். உனக்கு எடுப்பாதான் இருக்கும். நான்கூட சின்ன வயசுல உன்ன மாதிரியேதா இருப்பேன் “

திடீரென “டுர்ர்ர்ர்” என்று சத்தம் எழுப்பியபடியே இரண்டு ராசாக்களும் அம்மாவை நகைத்தபடியே உள்ளே நுழைய,

“உண்மைய சொன்னா சிலருக்குப் பொறுக்காது… நீ போய் குளிமா நான் உனக்கு சாம்பிராணி போட ரெடி பண்றேன்
“ என்று சொல்லியபடியே இருவரின் தோளைப் பிடித்து தள்ளியவாரே வெளியேறினாள் ஜோதி.

தனக்கு கண்ணில் பட்ட மெரூன் நிற சுடிதாரைக் கையில் எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள் யாமினி. பெரிய ராசாவும் சின்ன ராசாவும் வீடியோ கேம் விளையாட ஆரம்பித்தார்கள்.

ஆட்டத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஆதி அம்மாவிடம் அடைக்கலமானான்.

“ம்மா “

“வந்துட்டியா? நிம்மதியா ஒரு வேல பாக்க விடுறீங்களாடா ரெண்டு பேரும். நீ வேற அவன அமேசான்ல இருந்து வாங்குனே, ஆட்டுக்குட்டில இருந்து வாங்குனேனு சொல்ற புள்ள மூஞ்சே மாறிப்போச்சு “

“ அவன் மூஞ்சே அப்படித்தான். அதெல்லாம் மறந்திருப்பான் நீ ஃபீல் பண்ணாத “

“மறக்க மாட்டான்டா. நீ இருக்க வரைக்கும் கேக்க மாட்டான். நீ போன பிறகு கேட்டுக் கேட்டு அழுவான்டா. நான் எப்படி சமாளிப்பேன்? “

“எதாவது சொல்லி சமாளி “

“போடா என் கஷ்டம் எனக்கு… ஆமா நீ என்ன சின்ன வயசுல உன்ன மாதிரிதா இருப்பேனு அந்த புள்ள கிட்ட சொல்ல கேளி பண்ற என்னைய “

“ அது விளையாட்டுக்குமா. ஐயோ செல்லம்மா உன்ன மாதிரி அழகு யாருமே இல்லமா “

“ம்ம் நடி நடி. நல்லா ஆளுக்கு ஏத்த மாதிரி பேசி பழகிருக்கடா உங்க அப்பா மாதிரியே”

“நீல கலர் துண்டு எங்கமா “ என்று அப்பாவின் குரல் கேட்டதும் சமையலறைக்குள் புகுந்த எலி போல தடபுடலென உருட்டிச் சிரித்து பின் வெளியேறினார்கள். துண்டைத் தேடி எடுத்துக் கொடுத்ததும் அவர் குளிக்கச் சென்றார்.

அப்படியென்றால் யாமினி குளித்து முடித்து வெளியேறியிருப்பாளே என்று அம்மாவின் கண்கள் அவளைத் தேட, அதைப் புரிந்துகொண்ட அப்பா “புள்ள மாடில இருக்கு “ என்றார்.

இரும்புக் கரண்டியில் நெறுப்போடு சுடு கரியை இடது கையிலும், சாம்பிராணியை வலது கையிலும் எடுத்துக்கொண்டு அம்மா மாடி நோக்கி விரைந்தாள். கூடவே ஆதியும்.

மொட்டை மாடியில் சூரிய ஒளியில் கூந்தலை விரித்து நின்றவளை அமரவைத்து கரண்டியில் சாம்பிராணியைத் தூவி அதில் எழும் புகையை அவள் தலைமுடியை விரித்து உள்ளே நுழையச் செய்தாள். ஆதிக்கு ஆச்சர்யம், இதுவரை அந்த இரும்புக் கரண்டியை வீட்டில் அவன் பார்த்ததே இல்லை. அம்மா அதைப் பயன்படுத்தியதாகவும் தெரியவில்லை. அவ்வளவு ஏன் எனக்கும் சிபிக்கும் கூட அம்மா இவ்வாறு செய்ததே இல்லை என்று திகைத்தான்.

“என்னடா பார்வ? “

“இல்ல இல்ல எனக்குலாம் நீ இப்படி பண்ணதே இல்லையே அதான். இந்த சிரிப்பும் சந்தோஷமு உங்கிட்ட இருந்து அறிமுகம் ஆகாததா இருக்கு. புதுசா தெரியுதுமா”

“எனக்கே அப்படித்தான் இருக்கு. நீங்களும் பொம்பள புள்ளையா பொறந்திருந்தா நல்லா நீளமா முடி வளத்தி இப்படி எல்லாம் பண்ணி அழகு பாத்திருப்பேன்”

“அதான் நடக்கலையே. அது சரி உனக்கும் முடி நீளமாதான இருக்கு. உனக்கு நீ பண்ணி நான் பாத்ததே இல்லை”

“இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நமக்கு நாமே பண்ணிக்குறதுல என்னடா சந்தோஷம்?. விடுறது, கையில கறுய் கட்டி விடுறது இதெல்லாம் நமக்காக மத்தவங்க பண்ணி விடுறதுதா சந்தோஷம். அதெல்லாம் உனக்குப் புரியாதுடா “

“என்னமோ போங்க. வேலைய முடிச்சிட்டு சீக்கிரம் கீழ வாங்க”

அம்மாவின் முகத்தில் இருக்கும் அதே சந்தோஷம் யாமினியின் முகத்திலும் எதிரொலிப்பதை ஆதி பார்த்தான். இனம் புரியாத இன்பம் அவனுக்குள் தோன்றியது. அந்த உணர்வு “இதை விட என்ன வேண்டும்?” என்பது போல இருந்தது.

கீழே வந்ததும் அப்பா சாப்பிட்ட பிறகு ஆதியும் அப்பாவும் அவர் சொன்னபடி பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்கள். ஜோதி, யாமினியை பசியாற வைத்து பொழுது போக்கிற்காக இரண்டு ராசாக்களின் சிறு வயது போட்டோ ஆல்பத்தைக் காட்டிக் கொண்டிருந்தாள்.

அம்மாவின் கைதவறி கீழே சிந்திய சீனிக் கட்டிகளை தூக்கி கொண்டு வரிசையாக செல்லும் சிட்டெறும்புகளை தன் ஃபோனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தான் சிபி.

பல மாதம் கழித்து அப்பாவின் முதுகுப்புறம் அமர்ந்துகொண்டு அப்பாவோடு பைக்கில் பயணிப்பது அலாதியான சுகத்தைக் கொடுத்தது.

லெதர் சீட்டு வாசனையும் அப்பாவின் லைஃப் பாய் சோப்பு வாசனையும் எதிர்காற்றில் கரைய, அவரின் அரவணைப்பின் வாசனை மட்டுமே இருவரையும் இணைப்பிலே வைத்திருந்தது.

சந்தோஷத்தில் “எங்க போறோம்?” என்கிற கேள்வியைக் கூட அப்பாவிடம் அவன் கேட்கவில்லை. விடுமுறை நாட்களில் நாங்கள் வந்து ஊஞ்சலாடி, மதிய உணவிற்கு மீன் குழம்பு சாப்பிட்டு, வெயில் சாய்ந்ததும் போக மனமில்லாமல் வீடு திரும்பும் அதே மாந்தோப்பிற்குதான் அப்பா ஆதியை அழைத்துச் சென்றார்.

அந்த மாந்தோப்பிற்கு பல கதைகள் உள்ளன. ஆனால் அவை எல்லாம் கட்டுக்கதைகள். உண்மைக் கதை என்னவென்றால் அது அவன் அப்பா வியர்வையில் முளைத்து, பூத்துக் காய்த்த மாந்தோப்பு. பல சிக்கல்களைத் தாண்டி தனியொரு ஆளாக அதை வாங்கினார் அப்பா.

தொடரும்...♡
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top