• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் - 25

நம்மிடம் எப்படி அலட்டிக்கொள்ளாமல் ஆற அமரப் பேசினாளோ அதே போல் அப்பாவிடமும் பேசி காரியத்தைச் சாதிக்கப் பார்க்கிறாள் என்பதை ஜோதா புரிந்து கொண்டாள்.

தன்னால் அக்பருக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்கிற எண்ணத்தில் இருந்தாளே தவிர, அவர் இல்லாத வாழ்க்கையை அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. என்னதான் குடும்பத்தின் மீது பாசம் இருந்தாலும் அதற்காக அவரை அவள் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.

வீட்டிற்குள் இதைப்பற்றி பேசி கரைச்சல் ஏற்பட்டுவிட்டால், விஷயம் வெளியே தெரிந்துவிடும் என்று இதைக் கண்டு கொள்ளாமல் விட்டதைப் போல வீட்டில் சத்தமில்லாமல் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டுதான் இருந்திருக்கிறது. இதைப்பற்றி தெரியாத ஜோதா, குடும்ப பாசத்திற்கும் காதலுக்கும் இடையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள்.

இங்கு நடப்பதை மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு தன் காதலனுடன் பேசாமல் இருந்தால், அம்மாவின் திட்டம்தான் நிறைவேறும். ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ முடியாமல் பொட்டிலில் கட்டிய பொதி மாடு போல ஒரு மட்டமான வாழ்க்கையை வாழும்படி ஆகிவிடும். அவருக்குத் தாங்கிக் கொள்ள முடியாத வலியைக் கொடுத்துவிட்டு நாமும் வலியில் வாழ்ந்தாள் உருகி உருகி காதலித்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்று தெளிவாக ஒரு திட்டம் தீட்டினாள்.

அம்மாவிற்கு விஷயம் தெரிந்ததில் இருந்து வீட்டில் என்னென்ன நடந்ததோ அதை எல்லாம் அக்பருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்து விட்டு மீண்டும் அவருடைய எண்ணை அழித்தாள்.

அவளைக் கூட்டிச் செல்ல அவர் எப்படியானாலும் வந்துவிடுவார் என்கிற நம்பிக்கை அவள் மீது அவளுடை அம்மா வைத்திருந்த நம்பிக்கையை விட திடமாக இருந்தது.

அம்மாவிடம் இருந்து நாம் எல்லோரும் எத்தனையோ விஷயங்களைக் கற்றிருப்போம். ஜோதாவும் அப்படித்தான். அவள் அம்மாவிடம் இருந்து எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை எப்படிப் பதறாமல் சுமூகமாக கையாலுவது என்கிற வித்தையைச் சமீபத்தில் கற்றுக்கொண்டாள். கற்றுக் கொண்டதை காலம் நேரம் பார்க்காமல் உடனே செயல்படுத்தவும் செய்தாள்.

கட்டில் மீது கிடந்த புடவையை எடுத்து உடுத்திக் கொண்டு அப்பாவி போல் மாப்பிள்ளை வீட்டார் முன் சென்று நின்றாள். அவள் வீட்டாரிடம் இரண்டு வருடங்களுக்கு முன்பாக இருந்தே அவளைப் பெண் கேட்டு நச்சரித்த அவர்களுக்கு கொண்டாட்டமாய் இருந்தது.

அவளைப் பிடித்திருப்பதாக பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவளைத் தவிர அங்கு இருந்தவர்களில் பற்கள் எல்லாம் வெளிச்சமாக இருந்த வீட்டை இன்னும் பிரகாசமாக்கிக் கொண்டிருந்தது. அவர்கள் முன்னாள் இல்லாத விருப்பத்தைப் போராடி வரவைத்து சிரிப்பது போல் நடிப்பது சுடு கனலில் நிற்பது போல அவளை வாட்டி எடுத்தது.

நேரத்தைத் தாழ்த்திக் கொண்டே சொல்லாமல் சட்டு புட்டென கையோடு கையாக இப்போதே நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று மாப்பிள்ளை வீட்டு பெரிய தலை ஒன்று குரலை உசத்திச் சொல்ல, அவள் வீட்டில் இருந்த பெரியவர்களும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அதுதான் சரி என்று பேச்சை முடித்தார்கள்.

பெண் பார்க்க வந்த வீட்டில் நிச்சயதார்த்தமும் நடந்தது. இவ்வளவு நடந்த போதும்கூட ஜோதாவிற்கு ஒரு துளி பயம்கூட இல்லை. அதற்கு பதிலாக கோபமும் வெறுப்பும்தான் அதிகமாக இருந்தது. காரணம் எது நடந்தாலும் கூத்து இந்த ஒரு நாளைக்கு மட்டும்தான் என்று ஜோதாவிற்கு தெளிவாகத் தெரியும்.

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு மாப்பிள்ளை வீட்டார் பந்தியில் அமர்ந்தார்கள். அவர்களுக்காகவே தயாரான உணவை அம்மா பறிமாறிக் கொண்டிருந்தாள். அப்போது “பொண்ணையும் மாப்பிள்ளை பக்கத்துலயே உக்காந்து சாப்பிடச் சொல்ல வேண்டியதுதானே” என்று ஒரு குரல் மட்டும் கேட்டது, ஆள் சரியாகத் தெரியவில்லை.

கூட்டத்தில் யாராவது எதாவது சொல்லிவிட்டால் போதும் மீதி இருக்கும் அனைவரும் அதையே பிடித்துத் தொங்குவார்கள். அவள் அண்ணி அவளை போய் உட்காரச் சொல்லி கண் ஜாடை காட்ட வேறு வழி இல்லாமல் அவளும் போய் உட்கார்ந்தாள். அப்படி உட்காரும் போது இருந்த மனநிலைக்கு இதுவரைக்கும் முறையான பெயரே வைக்கவில்லை. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், அங்கு இலை விரித்துப் போடப்பட்ட பந்தியை இலையைக் கிழித்தெரிந்து, குழம்பு குண்டாவில் பாதி மூழ்கியிருந்த கரண்டியை எடுத்து அங்கிருந்த அனைவரையும் ஓட ஓட அடித்து விரட்ட வேண்டுமென்று பேராசையாக இருந்தது அவளுக்கு. சூழல் ஏற்றதாக இல்லாததால் பல்லைக் கடித்துக் கொண்டு பேசாமல் இருந்தாள்.

எப்படியோ அந்த நாள் கோணல் மாணலாக இருந்து முடிந்துவிட்டது. மறுநாள் இவளுடைய செல்ஃபோனிற்கு ஒரு புதிய எண்ணில் இருந்து “ஹாய் “ மெசேஜ் வந்திருந்தது. தன்னைப் பெண் பார்க்க வந்த கோமாளியாகத்தான் இருக்கும் என்று அதைக் கண்டு கொள்ளாமல் கிடப்பில் தள்ளிவிட்டு போர்வையை மூடி கனவிற்குள் மூழ்கினாள்.

நேற்று நடந்த அதே காட்சியில் அக்பர் இருந்திருந்தால் அவளுடைய அந்த நாள் எப்படி இருந்திருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தாள்.

பெண் பார்க்க வருகிறார்கள் தயாராகு என்று அம்மா சொல்லுவதற்கு முன்பாகவே அவள் பாதி தயாராகி இருந்திருப்பாள். தன் ஆசை காதலன் அவளைப் பார்த்துப் பார்த்து ரசிக்க வேண்டும் என்கிற ஆசையில் அன்றைக்கு அணிய வேண்டிய அத்தனையையும் தரமானதாகத் தேர்ந்தெடுத்திருப்பாள். கண்மையைக் கொண்டு இன்னுமொரு அடுக்கு கண் வரைந்திருப்பாள். ஒற்றை வளையளோடு நிறுத்தாமல் அவளையும் அவனையும் போல முட்டி மோதி விளையாடிச் சிரிக்க கூடவே ஐந்து வளையல்களை இரு கைகளிலும் அணிந்திருப்பாள். கண்ணாடி முன் நின்று அவளுக்கு அவளே முத்தம் கொடுத்துப் பூசிய உதட்டுச் சாயத்தினால் அவனுடைய வெள்ளைச் சட்டையில் அந்த அழகான நாளைப் பதிவு செய்திருப்பாள்.
கூடியிருந்த பெரியவர்கள் எல்லாம் சாங்கியம் சம்பர்தாயம் பேசிக் கொண்டிருக்கும் போது இவர்கள் இவரும் பார்வையாலே பக்கத்தில் அமர்ந்து கொஞ்சித் தீர்த்திருப்பார்கள். சிறு சந்தர்ப்பம் கிடைத்திருந்தாள் கூட கையைப் பிடித்து, கண்ணம் கிள்ளி அந்த நாளை இன்னும் இனிப்பாக மாற்றியிருப்பார்கள். நிச்சயதார்த்த மோதிரத்தை அவள் கையில் அவன் போடும் போது கையில் வரைந்திருந்த மருதாணி கோலம் எப்படி இருக்கிறதா? என்று கண்ணாலே கேட்டிருப்பாள். பதிலுக்கு அவனும் மோதிரத்தை ஆள் காட்டி விரலால் இரண்டு முறை தட்டி அருமையாக இருக்கிறது என்று சொல்லியிருப்பான். அந்த நிகழ்வில் கலந்திருந்த ஒவ்வொரு நொடிகளும் அவளது டைரியில் புதுப்புது கதைகளாகப் படிந்திருந்திருக்கும்.

அவனுக்காக பிறப்பெடுத்துவிட்டு இப்படியெல்லாம் சோதனையை அனுபவிக்க வேண்டும் என்று விதி இருக்கிறது போல என்று சடைத்தபடியே பெருமூச்சு விட்டாள். அவள் கண்ட கனவில் அவன் முகம் மங்களாகத்தான் தெரிந்தது. அதனால் அவள் செல்ஃபோனில் மறைத்து வைத்திருந்த அவனுடைய புகைப்படத்தைப் பார்க்க செல்ஃபோனைக் கையில் எடுத்து உள்ளே நுழைந்தாள். அப்போது அவள் கவனத்தைத் திசை திருப்பும்படி முன்பு பார்த்த அதே எண்ணில் இருந்து பதினைந்து குறுஞ்செய்தி வந்திருப்பதாகக் காட்டியது. என்ன இது என்று அதன் உள்ளே நுழைந்தாள் ஜோதா.

குறுஞ்செய்திகள் முழுவதையும் பொறுமையாக வாசித்த பிறகுதான் தெரிய வந்தது அந்த எண்ணிற்கு சொந்தக்காரர் அக்பர்தான் என்று. வீட்டில் என்ன நடந்தாலும் எனக்குக் கவலை இல்லை. நீ எதை நினைத்தும் குழம்ப வேண்டாம். நான் இப்போது அங்குதான் வந்து கொண்டிருக்கிறேன். நாளை காலை உன் வீட்டிற்கு வந்து எப்படியாவது சம்மதிக்க வைத்துவிடுகிறேன் என்று அவர் சொல்லியிருந்தார்.

வீட்டிற்கு வந்து நீங்கள் பேசியதும் பிள்ளைகளின் ஆசைப்படியே இருக்கட்டும் என்று நினைக்கிறார்கள் இவர்கள் வித்தியாசமானவர்கள் இல்லை. இவர்களும் மற்ற எல்லா பெற்றோர்களைப் போலவே காதலையும் காதல் திருமணத்தையும் தரம் குறைவான செயலாகவே பார்க்கிறார்கள். அதுவும் நம் இருவருக்கும் காதல் என்பதைத் தவிர வேறு எதிலுமே ஒற்றுமை கிடையாது. இப்படி பல சிக்கல்களுக்கு நடுவில் நீங்கள் வந்து பேசி சமாதானம் செய்த பிறகு நாம் ஒன்று சேர்வது என்பது நடக்காத காரியம். நாளை காலை வானம் நன்றாக விடுவதற்கு முன்பாகவே என் வீட்டிற்கு முன் தயாராக இருங்கள். நான் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் எப்படியாவது அங்கிருந்து என்னைக் கேரளாவிற்கே அழைத்துச் சென்று விடுங்கள் என்று செல்ஃபோன் திரையில் கண்ணீர் வழிய அழுதபடியே எழுத்துக்களைத் தட்டி செய்தியாக்கிக் கொண்டிருந்தாள்.

ஜோதாவின் யோசனைக்கு சம்மதித்த அக்பர் அதற்கான காரணங்களைத் தீவிரப்படுத்தினார். மறுநாள் சொன்னபடியே வீட்டை விட்டுக் கிளம்பிய ஜோதாவைக் காரில் ஏற்றித் தன் சொந்த ஊருக்கு அழைத்து வந்த அக்பர் அடுத்த நாளே அவளைத் திருமணமும் செய்து கொண்டார்.

ஜோதாவைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு கலங்கிப் போய் இருந்த ஜோதாவின் அப்பாவிற்கு அழைத்து நடந்ததை எடுத்துச் சென்றார். சொன்னார் அக்பர். இருவருக்கும் வாய் சண்டை பல மணி நேரம் தொடர்ந்தது. ஆரம்பத்தில் வாய்க்கு வந்ததைப் பேசிக் காயப்படுத்திய ஜோதாவின் அப்பா கடைசியில், நன்றாக இருங்கள் என்று சொல்லி முடித்தார்.

அவருடைய அழைப்பைத் துண்டித்த பிறகு அக்பர் ஜோதாவிடம், நாம் கூடிய சீக்கிரமே உன் வீட்டிற்கு போய் அப்பா அம்மாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆயிரம்தான் இருந்தாலும் அவர்களுடைய பார்வையில் நாம் செய்தது மிகப் பெரிய தவறு. அவர்கள் மனதும் குளிர்ந்தால்தான் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றார்.

காதலித்தவனையே கரம் பிடித்த திருப்தியில் இருந்த ஜோதாவிற்கு அக்பரைத் தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. அவர் என்ன முடிவு செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று எதுவும் பேசாமல் தலையாட்டினாள்.

அவர்களுடைய திருமணம் திருச்சூரில் அக்பரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் வைத்து மிக எளிமையாக இஸ்லாமிய முறைப்படி நடந்தது. அங்கு கடைப்பிடிக்கப்பட்ட பழக்க வழக்கங்கள் எல்லாம் ஜோதாவிற்கு புதிதாக இருந்தது. அக்பரின் வீட்டுச் சொந்தங்கள் ஜோதாவை முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்கள். எல்லாமே ஜோதாவின் விருப்பப்படியும் சந்தோஷத்தை கருத்தில் கொண்டுதான் அந்த திருமணத்தில் நடந்தது. ஆனால் ஒரு விஷயம் மற்றும் ஜோதாவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், அக்பரின் மீது இருக்கும் ஆதித காதல் அவருக்காக அதை மட்டும் விட்டுக் கொடுக்கச் சொன்னது. ஜோதா அக்பரை திருமணம் செய்வதற்கு முன்பு இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் என்கிற முறை அங்கிருந்த பெரியவர்களால் முடிவெடுக்கப்பட்டது.

தொடரும்...♡
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top