New member
- Joined
- Dec 1, 2024
- Messages
- 9
- Thread Author
- #1
ஹீரா நிலவனின்
சுந்தரியின் சுந்தரன்
அத்தியாயம் – 1
சில நாட்களாய், தினமும் இரவானால் அவளின் தொல்லைகள் எல்லை மீறுகின்றன. ஏதேதோ செல்லப் பெயர் சொல்லி அழைக்கிறாள். அதிலும் அவளின் “சுந்தரா! சுந்தர புருசா!” என்ற அழைப்புகள் நிறைய கதைகள் சொல்லுகிறது. அவள் மீதான தேடலையும் அதிகரிக்க வைக்கிறது.
இது போதாது என்று மேலே ஏறி அமர்ந்து, இளமையைச் சோதிக்கும் வேலையை செவ்வனே செய்கிறாள். கட்டி அணைத்தால் காற்றாய் கரைகிறாள். முன்னே பின்னே பார்த்ததில்லை பெண்ணவளை. அவளோ நீ தான் என் மாமா என்கிறாள். நீ தான் என் உயிர் என்கிறாள். தலை வலிப்பது தான் மிச்சம். தான் கோபம் கொண்டு பேசுகையில் தன்னை விட்டு அவள் போனாலும் மனம் வலிக்கிறது. புரியாத பல கேள்விகள் எழுகின்றன.
‘யார் அவள்? எதற்காக தன் மீது அதிக உரிமை எடுக்கிறாள். ஒரு வேளை பூர்வ ஜென்ம பந்தமோ?!’ நினைத்த நிமிடம் அவனே சிரித்துக் கொள்கிறான்.
இருவருக்கும் இருப்பது ஜென்ம பந்தமா? அல்லது உறவின் சொந்தமா? கனவுப் பெண்ணை சந்திப்பானா அவன்? அல்லது அது கனவாகவே போய்விடுமா? அப்படியே சந்தித்தால் அவளின் நிலை கண்டு, நிலை தடுமாறுவானா? இல்லை அவளில் மொத்தமும் நிலை(னை)த்திருப்பானா?
“ஈஸ்வர் சார்! ஈஸ்வர் சார்!” என்று அந்த மாவட்ட கண்காணிப்பாளர் அறைக்கு வேகமாக வந்தான் ஹரிஹரன்.
“வாடா. ஊருக்குப் போயிட்டு வந்தாச்சா? என்னடா எதோ பேயைப் பார்த்துட்டு வந்தது போல முகத்துல அத்தனை பதட்டம்?” எனக் கேட்க,
“சார் நான் சொன்னா நம்ப மாட்டீங்க. இதை கொஞ்சம் பாருங்க. பார்த்ததும் அப்படியே ஷாக் ஆகிடுவீங்க. நேரில் பார்த்தப்ப என்னோட அதிர்ச்சிக்கு அளவே இல்லை. இதை ஒரு டாக்குமெண்டரியா ரெடி பண்ணி எடுத்துட்டு வந்திருக்கேன்.” என்று தன் கையில் வைத்திருந்த மடிக்கணிணியை காண்பித்தான் அவன்.
“ஊருக்கு தானடா போயிட்டு வந்த. எதோ கிராமத்து கோடாங்கி மாதிரி பேசிட்டிருக்க? அந்த அதிசயத்தை அப்புறமா பார்க்கலாம். எனக்கு வேலை இருக்கு. நீயும் போய் வேலையைப் பாரு. சும்மா ஏதாவது சொல்லிட்டே இருக்காத.” என்று தன்னை விட்டு அவனை நகர்த்தினான்.
“யார் மாதிரி பேசினா என்ன சார்? நான் என்ன சொல்லுறேன் என்பது தான் முக்கியம். இதுல உங்களுக்கான ஒரு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு. சர்ப்ரைஸ்னு சொல்லுவதை விட பெரிய அதிசயமே இருக்கு. ப்ளீஸ் கொஞ்சம் பாருங்க சார். பார்த்தா நிஜமாவே அசந்துடுவீங்க. எனக்காக பாருங்க சார்” என்றான் கெஞ்சலாக. எப்படியாவது தான் கண்ட உண்மையை அவனிடம் சொல்லும் வேகம்.
“இப்ப நேரம் இல்லடா ஹரி. ஆந்திரா பார்டர்ல தொடர்ந்து நாலு மர்டர் நடந்திருக்கு. அது கொஞ்சம் சிக்கல் போல. ஒரு வாரமா டிஎஸ்பி, டிஜிபி முதற்கொண்டு என்னனு புரியாம திணறிட்டு இருக்காங்க. கமிசனர் வேற சீக்கிரம் முடிக்க சொல்லி பிரஷர் கொடுக்கிறார். நான் போயி என்ன ஏதுனு பார்த்து பைனல் பண்ணிட்டு வரேன். இன்னைக்கே முடிஞ்சா நல்லது” என்று தன் கடமையை பார்க்க எழுந்தான்.
‘க்கும் இந்த போட்டோவ இவர் பார்த்த மாதிரி தான்’ என்று நொடித்தவன், “அதுக்கு நீங்க ஏன் சார் போகனும்? அவங்கள வேலையை பார்க்க வையுங்க சார். இப்படி ஒன்னு ஒன்னுக்கும் நீங்க போக முடியுமா. முதல்ல நான் சொன்னதை பாருங்க சார்” என்றான் அந்த போட்டோவை காட்டி விடும் வேகத்துடன்.
“அதெல்லாம் பார்க்கலாம். இப்ப டியூட்டி பர்ஸ்ட். போட்டோ நெக்ஸ்ட். நீ உன் வேலையை பார்க்க போ. இல்லன்னா கோர்ட் கவுன்சில்ல இருந்து தூக்கிடப் போறாங்க. சும்மாவே கேஸ் கிடைக்காம அலையுற” என்றான் கிண்டலாக.
“எனக்கு கேஸ் கிடைக்கலையா? கிடைச்ச கேஸ் எல்லாம் இத்துப் போனதா வந்தா, நான் என்ன செய்ய? கேஸ் எடுத்தா அப்படியே பயரா இருக்கனும் சார். அப்ப தான் வாழ்க்கையில் ஒரு சுவாரசியம் இருக்கும்.” என்றான் இளமை வேகம் துடிக்க.
“ஓ... அப்படியா சொல்லுற? அப்படின்னா இப்ப நான் பார்க்க போற கேஸ எடுத்து நடத்து. யார் மர்டரர்னு கண்டுபிடி. நீ கேட்ட பயரும் இருக்கும். சுவாரசியமும் கிடைக்கும். அதில் ஜெயிச்சிட்டா அப்ப ஒத்துக்கறேன் நீ திறமையான வக்கீல்னு.” கேலி என்ற பெயரில் தூண்டி விட்டான் அவனை.
“அவ்வளவு பெரிய ஆளுங்களுக்கு தெரியாததா எனக்கு தெரியப் போகுது. இருந்தாலும் நீங்க சொல்லிட்டீங்க. இந்தக் கேஸை நான் எடுக்கிறேன். வெற்றியை உங்களுக்குக் காணிக்கையா குடுக்குறேன்” என்று வீர வசனம் பேசினான் ஹரிஹரன்.
“சரி தான்டா. அப்ப என்னோட வா” என்று அந்த இடத்துக்கு அழைத்து சென்றான்.
எஸ்பி வந்ததை கேள்விப்பட்ட அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் வந்து விட, கேஸ் பற்றிய விவாதங்கள் நடந்தது அங்கே.
“இன்ஸ்பெக்டர் சுத்தி உள்ள இடம் முழுக்க சர்ச் பண்ணுங்க. சின்னதா க்ளூ கிடைச்சாலும் நமக்கு யூஸ் ஆகும்.” என்றார் எஸ்பி.
“ஏற்கனவே இடத்தை முழுக்க சல்லடை போட்டாச்சி சார். எந்த எவிடென்ஸும் கிடைக்கலை.” என்றார் இன்ஸ்பெக்டர்.
“இப்ப ஒரு முறை நிதானமா சர்ச் பண்ணிப் பாருங்க.” என்று சொல்ல, கொலைகள் நடந்த இடத்தில் தடயங்கள் தேடி என நேரம் ஓடியது.
“போகலாம் ஹரி. எதாவது தெரிஞ்சிக்க வேனும்னா இன்ஸ்பெக்டர் நம்பர் வாங்கிக்கோ” என்றதும் அவனும் நம்பர் வாங்கிக் கொள்ள, இருவரும் சென்னை நோக்கிப் பயணம் செய்தனர்.
“சார் இப்பவாவது இதைப் பாருங்க. சென்னை போக ஒரு மணிநேரம் மேல ஆகும். அதுக்குள்ள பார்த்திடலாம்” என்றான் ஹரிஹரன்.
“இருடா. கேஸ்ல ஒரு க்ளு கிடைச்சிருக்கு. இதோ பார்” எனவும் ஹரியின் கவனமும் திசை மாறியது.
இருவரும் சென்னை வருவதற்குள் ஒருவாறு கேஸ் பற்றிய முடிவிற்கு வந்து விட்டனர்.
“நான் நினைச்சது சரி தான் சார். இன்னைக்கு நைட்குள்ள அவன கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்று சொன்னான் ஹரிஹரன்.
“அப்படினா நான் கமிஷனர் ஆபீஸ்கு போயி ரிப்போர்ட் கொடுத்துட்டு வரேன். நாளைக்கு இந்த கேசை முடிச்சிடலாம்.”
“சரிங்க சார். இப்பவாவது நான் சொல்ல வந்ததை கேட்கலாமே.” என்று மீண்டும் மீண்டும் கேட்டான்.
“கேட்டுக்கலாம் தான். என்ன ஒன்னு சென்னை ரீச் ஆகிட்டோம். ஹெவி டிராபிக். அதனால நான் என்ன சொல்ல வரேன்னா...” என்று இழுத்தான்.
“எப்படியும் பார்க்க போறது இல்லனு தெரிஞ்சிடுச்சி. ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல. உங்களுக்கு அவங்களை பார்க்க குடுப்பினை இல்லனு நினைக்கிறேன். சரிங்க சார் என்னை புழல்ல இறக்கி விட்டுடுங்க. கொஞ்சம் வேலை இருக்கு” என்றான் அவன்.
“இருடா ஹரி பயலே ஒரு நாள், அந்த அவங்க எவங்கனு பார்த்து தெரிஞ்சிக்கறேன். ஓவரா பில்டப் கொடுக்கிற. இதுக்காகாவே ப்ரீ பண்ணிக்குறேன். ஓகேடா. புழல் வந்திடுச்சி. பார்த்து ஜாக்கிரதையா இரு” என்று அவனை இறக்கிவிட்டு ஓட்டுனருக்கு கண் காண்பிக்க கமிஷனர் இருக்கும் இடம் நோக்கி சென்றது கார்.
பத்து மணிபோல் வீடு வந்தவன், சூ சாக்ஸை அதன் இடத்தில் வைத்து காலிங் பெல் அழுத்த, சில நொடிகளில் கதவைத் திறந்த தாய் தேவகியை பார்த்து புன்னகைத்து, “இன்னும் தூங்கலையா அம்மா? அப்பா தூங்கியாச்சா?” என்று விசாரித்தான்.
“நீ வராம அவர் என்னைக்கு தூங்கினார். பாத்ரூம் போயிருக்கார். நீ உள்ள வந்து பிரெஷ்ஷாகிட்டு வா. அம்மா டிபன் எடுத்து வைக்கிறேன்.” என்று மகனை அனுப்பினார் தேவகி.
“சரிம்மா. இதோ வரேன்” என்று மாடியில் இருக்கும் தன் அறைக்குள் சென்றவன், குளித்து ஆடை மாற்றி கீழே வர, சாப்பிடும் மேஜையில் உணவு எடுத்து வைக்கபட்டிருந்தது.
“அம்மா உனக்கும், அப்பாவுக்கும் சின்ன வயசு நினைப்பா? சீக்கிரம் சாப்பிடச் சொல்லி நான் தினமும் சொல்லுறேன். கேட்பதாவே ஐடியா இல்லையா?” என்று தாயைக் கடிந்தான்.
“நீ என்ன சொன்னாலும் நாங்க கேட்க போறதில்ல. இருந்தும் நீ ஏன்டா எனர்ஜிய வேஸ்ட் பண்ணுற? நாங்க சாப்பிடாததால தான் நீ பத்து மணிக்காவது வர. இல்ல நீ பார்க்கிற வேலைக்கு நடு ஜாமம் வந்து நிப்ப. சாப்பிட்டும் சாப்பிடாமலும் தூங்கினா உடம்பு என்னத்துக்கு ஆகும்? அதுக்கு இதுதான் ஒரே வழி” என்றார் அவர்.
“அதுக்காக காத்திருப்பியா நீ? உன் உடம்பு கெட்டு போகும்மா.”
அக்கறையாக கவலைப்பட்ட மகனிடம், “நாங்க அந்தளவு சொதக்கடா ஆளுங்க கிடையாதுடா மகனே. செம ஸ்ட்ராங் அண்ட் பிட். யூ க்நொவ் மார்னிங், ஈவ்னிங் வாக்கிங், ஜாக்கிங் போறோம். எல்லாம் உனக்காக தான். எங்களை பத்தி கவலைபடாத. இந்தா உனக்காக சூடா இட்லி. பீர்கங்காய் தோலுல செய்த சட்னி. கொத்தமல்லி சட்னி” என்று அவர் வைக்க, அன்பாய் பரிமாறும் தாய், தந்தையின் பாசத்தில் சூடான இட்டலிகள் ஏழு, எட்டு என தாராளமாய் சென்றது அவன் வயிற்றுக்குள்.
உண்டு முடித்து தாய் கொடுத்த காப்பியை நிதானமாக ரசித்துக் குடித்தபடி தொலைக்காட்சியில் செய்தி சானல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இவனுங்க போடுற செய்தியை பார்க்கிறதுக்கு சும்மாவே இருக்கலாம். ஊடகங்கள் சரியில்ல ஈஸ்வர்” என்று மகன் அருகில் வந்து அமர்ந்தார் ரவீந்திரன்.
“ஆளுங்கட்சிக்கு சப்போர்ட் செய்தா, எதிர்க் கட்சிக்காரன் வச்சி செய்வான். எதிர் கட்சிக்கு சப்போர்ட் பண்ணினா ஆளுங்கட்சிகாரன் மொத்தமா வசமா செய்வான். அதான் கண்ணையும், காதையும், வாயையும் மூடிட்டு, சம்பாதிக்க என்ன வழின்னு பார்க்கிறாங்க. பேங்க் பாலன்சாவது மிஞ்சுதே. அதுவரை நிம்மதின்னு இருக்காங்க.”
“அதுக்காக கண்டதையும் போடலாமா? விசாரிக்கப்படாம இவங்க குடுக்குற செய்தியால எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இருக்கு. இவன் டிஆர்பிகாக ஒன்னுமே இல்லாததை ஓஹோன்னு சொல்லி அதை மக்களிடையே பரப்பி விடுறான். தப்பை சரின்னு சொல்லி வாதிட்டு, அதை நடைமுறைக்கு கொண்டு வரான். உண்மையை பொய்னு அடிச்சிப் பேசி நம்ப வைக்கிறான். ப்ச்.. இதெல்லாம் நீங்க கேட்க முடியாதா? சட்டத்தை கடுமையாக்கலாமே? அப்படி செய்தா இந்த மாதிரி ஊடகங்கள் ஒழுங்கா தன்னோட கடமையைச் செய்யும் தானே.” என்று ஆதங்கத்தில் மகனிடம் சொன்னார்.
“சட்டம் அரசியல்வாதி சட்டைப் பையில் என்று தெரியாதாப்பா? நானே துணிந்து சில முடிவுகள் எடுக்க முடியாம திணற வேண்டி இருக்கு. எல்லாத்திலும் அரசியல் தலையீடு. நான் மட்டும் நேர்மையா இருந்தா பத்தாது. சுத்தி உள்ள எல்லாரும் நல்லவனுகளா இருக்கணும். இதை விடுப்பா. வா டிவி பார்க்கலாம்” என்றான் மகன்.
“அப்ப நியூஸ் இல்லாம வேற எதாவது வை” என்றார் அவர்.
“சரிங்க தல. இதோ மாத்துறேன்.” என்று எண்பது, தொண்ணூறுகளில் வந்த பாடலை வைத்தான்.
வருவார்கள்...