• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 28

Member
Joined
Dec 1, 2024
Messages
32
சுந்தரி - 28


“வணக்கம் ஐயா” என்று அனைவரும் வணக்கம் வைக்க, சுந்தரியும், சுந்தரனும் மட்டும் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

பேத்தியை முறைத்துக் கொண்டு வந்தவர் ஈஸ்வரை காண, அவனோ அவரை முழுதாக அளவிட்டுக் கொண்டிருந்தான். மரியாதைக்கு கூட அவன் தன் தோரணையை மாற்றிக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்தவருக்கு அவனின் கர்வம் பிடித்தாலும், ‘தன் எதிரே அப்படி ஒருவன் திமிராக நிற்பதா’ என்ற வஞ்சமும் வராமல் இல்லை.

அங்கு இருந்த திண்ணையில் அமர்ந்து, “என்ன புகார்? புகார் குடுத்தது யாரு? யாரு மேல குடுத்தீக?” எனக் கேட்டார்.

“ஏனுங்க நாட்டாமை சார். இங்க நடந்த எதுவும் உங்களுக்கு தெரியாதுங்களாக்கும். இதை நாங்க நம்போனுமாக்கும்? எல்லாம் தெரிஞ்சிட்டு வந்து, தெரியாத மாதிரி கேள்வி கேக்குறதே, நாட்டாமைகளுக்கு வழக்கமா போச்சி. நாட்டாம மாத்தி யோசி” என்றான் ஈஸ்வரன்.

“நான் அதை ஆமோதிக்குரேனுங் ஐயா” என்று வந்து நின்றான் ஹரிஹரன்.

செல்வ சுந்தரி தொடர்ந்து, அனைவரும் அவர்களை வித்தியாசமாய் பார்க்க, “இது யாரு புது பீசு” என்பதாய் பார்த்திருந்தாள் சித்ரா.

“ஏம்பா நீ ரஞ்சிதா தம்பி தான? என்ன அண்ணன் தம்பி ரெண்டு பேரும் கோயமுத்தூர் பாஷை பேசுதிய. ஏம்மா ரஞ்சிதா நீங்க உடன்குடி பக்கம்னு தான சொன்னாவ. என்ன இந்தப் பயலுவ இப்படி பேசுறானுவ” எனக் கேட்டார் ஒருவர்.

“அ...அதுங்க ஐயா. அண்ணன் சின்ன வயசுல சண்டை போட்டு, அங்க இருந்த பெரியப்பா வீட்டுக்குப் போயிட்டார். தம்பி படிக்க அங்க போனதுல அந்த ஊர் பாஷை ஒட்டிகிடுச்சி” என்று சமாளித்தாள் ரஞ்சிதா.

“மாமா” என்ற சுரண்டலில் சித்ராவை ஈஸ்வர் திரும்பிப் பார்க்க, “இந்த புது பீசு நிஜமாவே உங்க தம்பியா?” எனக் கேட்டாள்.

“ஆமா சித்துமா. இந்த பீஸ் ரொம்ப காலமா என்னோட தான் இருக்கு.” என்றான் அவனும்.

“அப்ப எனக்கு அவர் மாமாவா?” என்றதில் ஹரிஹரன் அவள் புறம் திரும்ப, “சொல்லுங்க மாமா?” என்றாள் ஈஸ்வரின் கையை உலுக்கி.

“ஆமா தாயே! எனக்கு தம்பினா, உனக்கு மாமா தான். என்ன இப்ப? கை பிஞ்சிடப் போகுது விடு” என்று கையை இழுத்துக் கொண்டான்.

“ஹாய் புது மாமா” எனவும் ஹரிஹரன் ‘பே’ என விழிக்க, “தமிழ்ல தான கேட்டேன். எதுக்கு இந்த மாமா இப்படி முழிக்கிறார்” என்று முனகி பஞ்சாயத்தைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

“சார் நான் எப்படி இந்த பொண்ணுக்கு மாமா முறை வரேன்” என்று அவன் ஈஸ்வரை பிய்க்க ஆரம்பிக்க,

“டேய்! நாட்டாம நாம பண்ணுற அலப்பறையில் காண்டாகி, காண்டாமிருகம் ரேஞ்சிக்கு கத்துற தோரணையில் இருக்கார். எதுவா இருந்தாலும் அப்புறமா கேட்டுக்க” என்று ஹரிஹரன் வாயை அடைத்தான்.

“ம்க்கும் அந்த பொண்ணு கேட்டப்ப பதில் சொன்னார். நான் கேட்டா முறைக்கிறார். ஹ்ம்ம் எங்கயும் பொண்ணுக்கு தான் முதலிடம். நீ வேடிக்கை பாருடா ஹரி” என்று தனக்கே சொல்லிக்கொண்டான்.

“சரி தம்பி. நீங்க சொன்ன வார்த்தைக்கே வரேன். வயசுப்புள்ள தனியா இருக்கிற வீட்டுக்கு ஏன் போனீங்க? எத்தனை நாளா இது நடக்குது?”

“நானா ஒன்னும் போகலீங் நாட்டாம. இவங்களோட மாமா... என்ன பெயர்? ஹ்ம்ம் சுகுமார் உங்க நண்பன் பெயர் என்ன?” என்று அவனையும் அங்கே இழுத்துவிட, விட்டால் அழுதுவிடுவான் போலாகிவிட்டான் சுகுமார்.

“சு...சு..சுந்தர்ராஜன் சார்”.

“எஸ் எஸ். அந்த சு...சு...சுந்தர்ராஜன் தான். என் அக்கா பொண்ணுக்கு ஆபத்து. வந்து காப்பாத்து சொன்னான். சமூக சேவை செய்தா எனக்கு வரப்போற பொண்டாட்டி, பிள்ளைகளுக்கு புண்ணியம் நினைச்சி அங்க போனேன். அங்க போனா, ஒரு பேய் இவங்களை அமுக்கப் பார்த்திச்சி. ஓடிப்போய் கபார்னு அதை இழுத்துப் பிடித்து வெளியே தள்ளிட்டு, இனி பிரச்சனை இல்லைன்னு இவங்களிடம் சொல்ல வரேன், இந்த பொண்ணு என்னை மாமா கூப்பிடுது. நான் அப்படியே ஷாக்காகிட்டேன்” என்றான் வடிவேலு பாணியில்.

அவளோ பல்லைக் கடித்து அவனை வெட்டவா ரீதியில் பார்க்க, அதை சட்டை செய்யாது, “அந்த பேயை நான் விரட்டினது பொய்யா? நிஜமா கேளுங்க” என்று அவளிடம் கேள்வியை திருப்பினான்.

“என்னமா? அந்தப் பையன் என்னன்னவோ சொல்லுறான்? உன் மாமா உன்னோட இருக்கிறதா சொன்ன. இப்ப உன் மாமா அனுப்பியதா இவன் சொல்லுறான். அந்த பேயை இவன் விரட்டினது நிஜமா?” என்றார் இரத்தினசாமி.

‘பேய்’ என்று அவன் குறிப்பிட்டது மதன் என்பதை உணர்ந்ததால் அமைதியாக தலையசைத்தாள்.

“தேங்க்ஸ்ங்க மேடம். எங்க நீங்க நான் பொய் சொல்லுறேன் சொல்லிடுவீங்களோ நினைச்சேன். இப்ப சொல்லுங்க நாட்டாம நான் செய்தது தப்பா?” எனக் கேட்க,

“தப்பே இல்லை சார்” என்ற கோரஸ் குரல்கள் வந்தது அவன் இளைஞர் படையில் இருந்து.

“ஹ்ம்ம் கேளுங்க. வருங்கால இந்தியாவின் தூண்களே ஒத்துக்கிடுச்சி” என்றான் ஈஸ்வர்.

“ஐயா இவங்க பொய் சொல்லுறாங்க. அங்க நாங்க போன பிறகும் கொஞ்சமும் எங்களை சட்டை செய்யாது குசுகுசுனு பேசி லவ் பண்ணிட்டு இருந்தாங்க. உங்க மகன் வந்து தான் அதை நிறுத்தினது. உண்டா இல்லையா கேளுங்க” என்றான் மதனின் தோழன் ஒருவன்.

நாட்டாமை தம்பி மகனை பார்க்க, ‘ஆம்’ என்று சம்மதமாய் தலையசைத்தார்.

“மாமா என்ன சொல்லுறீயன்னு யோசிச்சி சொல்லுங்க. நான் போயி இவனை? என் மாமா இருக்கிற இதயத்தில் இன்னொருத்தனா? அதுக்கு இந்த ஜென்மத்தில் வாய்ப்பே இல்லை” எனும்போது சுருக்கென்று சுந்தரேஸ்வர் இதயத்தில் சொல்ல முடியாத வலி.

“அப்ப இதுக்கு என்ன அர்த்தம்” என்று மதன் வந்து காண்பித்த புகைப்படங்கள் யாவும் சுந்தரனும், சுந்தரியுமே. அவ்வளவும் நெருக்கமானவை. அனைத்தும் பொய் என்று மறுக்க முடியாத உண்மை புகைப்படங்கள். அதில் தினமும் ஈஸ்வர் சுந்தரி வீட்டுக்குள் நுழைவதும், விடியும் நேரம் வெளியே வருவதும் இருந்தது.

“இதுக்கு உன்னிடம் என்ன பதில் இருக்கு?” என்று புகைப்படங்கள் அவளிடம் காண்பிக்கப்பட, செல்வ சுந்தரி உச்சபட்ச அதிர்ச்சியில் இருந்தாள். ‘இல்ல இது பொய்’ என்று சொல்ல வந்த வார்த்தைகள் வெளி வரவில்லை அவளுக்கு.

“என்ன பதில் வரலை?” என்று கோபத்தில் கொந்தளித்தார் இரத்தினசாமி.

தன்னை ஆசுவாசப்படுத்தி, “இப்பவும் சொல்லுறேன். எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதெல்லாம் நான் மாமாவோட இருந்த நேரங்கள். ரஞ்சிதா அக்கா அண்ணன் முகத்தை இதுவரை பார்த்தது கூட கிடையாது, ஏன் நம்ம ஊர் ஆளுகளே பாத்திருக்க மாட்டாங்க” என்றாள்.

அவள் சொல்லுவதை நிறைய பேர் ஆமோதித்தாலும், “நான் மாமா முகத்தைப் பார்த்திருக்கேன்” என்றாள் சித்ரா.

“சித்ரா கம்முன்னு இரு. கண்டவனையும் மாமா சொல்லுறது என்ன பழக்கம்? நீ வீட்டுக்குக் கிளம்பு” என்று பல்லைக் கடித்தாள் சுந்தரி.

“மாமாவ மாமா சொல்லாம என்ன சொல்லுறது? உன்மேல எந்த அளவு நம்பிக்கை இருக்கோ, அதே அளவு மாமாவ நம்புறேன்.” என்று ஈஸ்வரை விட்டுக்கொடுக்காது பேசினாள் சித்ரா.

“அப்ப நான் தப்பு சொல்லுறியா?” கோபத்தில் செல்வ சுந்தரி கொந்தளிக்க,

“மாமா சரின்னு சொல்லுறேன். அதுக்காக நீ தப்புன்னு இல்லை” என்றாள் சித்ரா.

“ரெண்டு பேரும் அமைதியா இருங்க. இந்த போட்டோகான பதிலை நீ சொல்லுப்பா” என்றார் இரத்தினசாமி.

“இந்த போட்டோவில் இருக்கிறது நான் தான். ஆனா, எனக்கும் இந்த பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங் நாட்டாம. வேணும்னா என்ர தம்பிய கேட்டுப் பாருங்க. அவன் சொல்லுவாங்க எது சரி எது தப்புன்னு. ஏன்னா இவன் வக்கீலுங் நாட்டு ஆம. மன்னிக்கனும் நாக்கு பிறழ்வு நாட்டாம” என்றான் தன்னடக்கமாக.

அனைவரும் சத்தம் இல்லாமல் சிரிக்க, “ஊர் குசும்ப அங்கனயே வச்சிக்கோ. இந்த எகத்தாள பேச்சி இங்க கூடாது. நேர விரயம் பண்ணாம காரணம் சொல்லு?” என்றார் கடுப்பாகி போன குரலில்.

“அது வந்துங் நாட்டு ஆம... சாரி சாரி... டங்க் ஸ்லிப் நாட்டாம. அதாவது போன மாதம் இருந்து இவருக்கு தொடர்ந்து கனவு. கனவில் செல்வி அக்காவும், அவங்க மாமாவும் வந்து இந்த ஊருக்கு வரச்சொல்லி ஒரே டார்ச்சர். ஒரு நாள் இரண்டு நாள்னா பரவாயில்ல. இவங்க தொடர்ந்து கனவில போயிருக்காங்க. அவர் என்ன செய்வார் சொல்லுங்க. என் டாக்குமென்ட்ரி பார்த்து இவுகள அடையாளம் தெரிஞ்சி, இங்கன வந்துட்டார்” என்றான் ஹரிஹரன்.

“நான் இவன் கனவுல வந்தேனா? எனக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இல்லாத யாரோ ஒருத்தர் கனவில் நான் ஏன் வரணும்? கொஞ்சமாவது நம்புற மாதிரி சொல்லு. உன் மேல மரியாதை வச்சிருக்கேன் தம்பி. இப்படி பைத்தியம் மாதிரி உலறாத. அப்புறம் நடக்கிறதே வேற” என்ற செல்வ சுந்தரியின் கோபத்திற்கு அசராது,

“நீங்க என்னை அடிச்சே கொன்னாலும், அதுதான் உண்மைங்க அக்கா. எதோ ஒரு வகையில் சம்பந்தம் இருக்கிறதால தான் இவர் கனவில் வந்திருக்கீங்க. உங்க தொல்லை தாங்காம தான் தேடல்ல இறங்கினார். அதே சமயம் என் டாக்குமென்ட்ரி கிடைக்கவும் கப்புன்னு பிடிச்சிக்கிட்டார்.” சுந்தரேஸ்வரன் சார்பில் எடுத்துச் சொன்னான் ஹரிஹரன்.

“அவன் செத்துப்போய் பத்து வருஷம் ஆவுது. அவன் சாவுறப்ப நான் தான் கூட இருந்தேன். எங்க யார் கனவுலயும் வராம உன் அண்ணன் கனவுல வரானா? நம்புற மாதிரி சொல்லு தம்பி. அவனை கூட விடு. எங்க வீட்டுப் பொண்ணு உன் அண்ணன் கனவுல வரது நம்புற மாதிரியா இருக்கு” என கனகவேல் கேட்டார்.

“ஆமாங்க சார். உனக்காக காத்திருக்கேன். என் உயிர் நீ தான். வா கல்யாணம் செய்து குடும்பமா வாழலாம்னு சொல்லி அழைச்சிருக்காங்க. இவங்க மாமா அவர் பங்குக்கு, நீ வா. வந்தால் நிறைய புதிருக்கு விடை கிடைக்கும். ரொம்ப காலத்துக்கு முன்ன நடந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்கும். அதைப் பற்றித் தெரிஞ்சிக்க, அந்த ரகசியத்தை தேடி என் ஊருக்கு வானு சொல்லி இருக்கார். எல்லாத்துக்கும் விடை தேடித்தான் எங்க சார் இங்க வந்திருக்கார்” என்று அடித்துப் பேசிய ஹரிஹரன் பேச்சில்,

“டேய் பையா! எப்படிடா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே. இது தான் நடந்ததுன்னு அள்ளி விடுற” என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு கேட்டான் ஈஸ்வர்.

“இந்த ஊர்ல எதோ ஒரு ரகசியம் இருக்குனு கூப்பிட்டது உண்மைனா, நாமளும் எக்ஸ்ட்ரா பிட்டு சேர்க்கணும் சாரே. அப்ப தான் கொஞ்சமாவது நம்புவானுங்க. என் பேச்சில் தலையிடாம அமைதியா நில்லுங்க. அப்ப தான் போட்டு வாங்க முடியும்” என்று சொல்ல,

“அப்ப நடத்து” என்று அவன் நிமிர, அவனை கண்களால் எரித்துக் கொண்டிருந்தாள் அவனின் சுந்தரி.

“ஈஈஈ...” என்று அவளைக் கண்டு சிரித்தான் சுந்தரேஸ்வரன்.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top