• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 5

New member
Joined
Dec 1, 2024
Messages
9
சுந்தரி - 5


சில நிமிடம் யோசித்த சுகுமார், ஒரு முடிவுக்கு வந்தவனாக, “உங்களைப் பாத்தா அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க தெரியல. வேற மாதிரி மாறிடக்கூடாது. என்னை விட இன்னொருத்தருக்கு அவங்களைத் தெரியும். அவங்கள அறிமுகப்படுத்துறேன். பார்த்துப் பக்குவமா பேசுங்க” என்றான் அவன்.

“சுகுமார் எ... எனக்கு... அ... அது அவரோட.. அவங்கள நேர்ல பார்க்கனுமே. அப்படியே அவங்க வீட்டுக்கு போயும் பார்க்கனும்.” என்று திக்கித் திணறி கேட்டுவிட்டான்.

“ஆங்... அ.. அது எதுக்கு சார்?” என்று பயந்து போய் கேட்டான் சுகுமார்.

“உங்க நண்பர்னா அவர் மட்டும் இல்லையே? அவரோட காதலியும் தான? அவங்களை பார்க்கணும் சுகுமார்.” என்றான் தயக்கத்தை உதறி.

“அவனோட குடும்பம் மட்டும் போதாதா சார்? அந்தப் பொண்ணு எதுக்கு? வேண்டாமே சார்.”

“நான் கேட்டவங்களும் அவங்க குடும்பம் தான சுகுமார்” என்றான் பதிலுக்கு.

“புரியுது. உங்களை அவங்க நேர்ல பார்த்தா, ரிஸ்க் ஆச்சே சார். எதுக்கு அவங்கள தொந்தரவு செய்யணும்?”

“நேர்ல பார்க்க வேண்டாம் சுகுமார். நான் மட்டும் பார்க்கிறேன். அவங்கள டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். எனக்குன்னு இருக்கிற கண்ணியத்தில் இருந்து தவற மாட்டேன். என்னை நீங்க நம்பலாம்.” என்று உறுதி கூறினான்.

“ஐயோ ஏன் சார்?” என்றான் பதறி.

“இல்ல சுகுமார். நீங்க ரொம்ப தயங்குறீங்க தெரியுது.”

“பொண்ணு விசயம் இல்ல சார். அதான் யோசிக்க வேண்டி இருக்கு. ஹரி தப்பானவங்கள அடையாளம் காட்ட மாட்டான்னு தெரிஞ்சாலும், அவுகளுக்காக பாக்கணுமே. அதான் கொஞ்சம் தயக்கம். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.”

“நம்புங்க சுகுமார். நான் இங்கேயே இருக்கப் போறதில்ல. ஒரு ஆர்வத்துல வந்தேனே தவிர என் மனசுல இப்ப வரை வேற எதுவும் இல்ல. அப்படி இருந்தா போலீஸ்காரன் எனக்கு வேற வழியா இல்ல. என் அப்பா அம்மா என்னை அப்படி தப்பா வளர்க்கல” என்றான் ஈஸ்வர்.

“அச்சோ அப்படி சொல்ல வரல சார். இல்ல நேர்ல உங்கள பார்த்துட்டா என்ன செய்யுறது என்ற பயம் தான் எனக்கு. வேற எதுவும் இல்ல சார்?”

“பார்க்க வாய்ப்பில்ல. அப்படி அமைஞ்சிட்டா அந்த நேரத்துக்கு ஏத்த மாதிரி முடிவு செய்துக்கலாம்” என்றவன் மனதிலோ வேறு சில திட்டமிடல்கள் இருக்க, “அவங்கள எப்ப பார்க்கலாம்?” எனக் கேட்டான்.

“இப்ப மணி என்ன?” என்று வெளியே இருந்த வெளிச்சத்தைப் பார்த்து, அப்படியே சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தவன், “மணி ஆறரை ஆகுது. இன்னும் இருட்ட ஆரம்பிக்கல. அப்ப இந்நேரம் வீட்டுக்கு போயிருக்க வாய்ப்பில்லை” என்றான்.

“இல்லங்க. வீட்டுக்கு என்ட்ரி ஆயாச்சி” என்றதும் வேகமாக சுகுமார் வெளியே வர, அவனைத் தொடர்ந்து வந்த ஈஸ்வர் அவன் பார்வை சென்ற இடம் பார்த்தான்.

“அட ஆமா. இனிமேல் நாளைக்கு தான் சார் பார்க்க முடியும்” என்று திரும்பி வீட்டினுள் செல்ல, ஈஸ்வரின் பார்வையோ அவ்விடத்திலேயே மையம் கொண்டது.

எதோ ஒரு தொந்தரவு, அசெளகரியம் தன்னைத் தொடர்வதை உணர்ந்த வினாடி சுற்றிலும் பார்வையிட்டாள் பெண். சிறு சத்தம் கூட இல்லாமல் அமைதியாக இருந்தது வீதி. லேசாக தோள்குலுக்கி வீட்டினுள் சென்று விட்டாள்.

நெஞ்சில் கைவைத்து சத்தம் இல்லாமல் நின்றுவிட்டான் ஈஸ்வர். காவியங்களில் காட்டும் பேரழகி இல்லை அவள். கதைகளில் வர்ணிக்கும் தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்த இந்திராணியோ, ரம்பையோ, ஊர்வசியோ இல்லை. ஆனாலும், அழகானவள். தனக்கென்ற கொள்கையில் சிறிதும் பிறழாது இருக்கும் தனித்துவமானவள்.

“என்னண்ணே அப்படி நிக்கறீங்க? பார்த்தாச்சா?” என்று சத்தமாக கேட்டவள் பின் கணவன் இருப்பதை எண்ணி, “பார்த்தாச்சா?” என்றாள் அமைதியாக. ஏனனில் அவள் கணவனுக்கு இவர்கள் கொடுத்த தகவல் பாதி தான். மீதியும் சொன்னால் என்ன சொல்வானோ என்ற எண்ணம் அவளுக்கு. அதனால் சிலவற்றை மறைத்துவிட்டாள்.

‘ம்ம்ம்...’ என தலையசைத்தவன், “தேங்க்ஸ்” என்றான்.

“நான் தான் அண்ணா சொல்லனும்.”

மெல்ல சிரித்தவன், “ஆமா பிள்ளைகள எங்க?” எனக் கேட்டான்.

“அரையாண்டு லீவுக்கு அம்மா வீட்டுக்கு போயிருக்காங்க. நாளை மறுநாள் ஸ்கூல் ஆரம்பிக்கிறதால நாளைக்கு வந்திடுவாங்க அண்ணே.”

இரவு வரை ஈஸ்வர், சுகுமார் இருவரும் அரசியல் முதல் ஆலமரத்துப் பஞ்சாயத்து வரை அலசி ஆராய்ந்து, உண்டு முடித்ததும் படுக்க சென்றனர்.

கனவில் ராஜனும், கனவுப் பெண்ணும் மாறி மாறி வந்து அவனின் தூக்கத்தைக் கெடுத்தது தான் மிச்சம்.

வேலையில் பலவிதமான சுவாரசியங்களையும், சங்கடங்களையும் பார்த்தவன், இனிமேல் சொந்த விசயத்தில் சுவாரசியத்தை கொண்டு வருவானா? அல்லது அவளால் சோகங்களை சுமப்பானா?

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல தேதி

என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக

வாய் மொழிந்த வார்த்தை யாவும்

காற்றில் போனால் நியாயமா

பாய் விரித்து பாவை பார்த்த

காதல் இன்பம் மாயமா!

“ஓய்! என்னடி பேச மாட்டியா? ஓய் சுண்டெலி. அடியேய்.! பேசாம இருந்தா விட்டுடுவோமா? பேசப் போறியா இல்லையா?” என்று அவளை வம்பிழுத்துக் கொண்டிருந்தான் அவன்.

தன்னைச் சீண்டுபவனை முறைத்து கண்டு கொள்ளாது தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

தேன்நிலவு நான் வாழ

ஏன் இந்த சோதனை!

வான் நிலவை நீ கேளு

கூறும் என் வேதனை!

எனைதான் அன்பே மறந்தாயோ

மறப்பேன் என்றே நினைத்தாயோ!

பாடி முடித்து, “ஓய் சுண்டெலி! என்ன ஒரு பூரிக்கட்டை கூட பறக்கல. உனக்கு ட்ரைனிங் பத்தல. பேசாம என் அக்காகிட்ட ட்ரைனிங் எடுத்துக்கோ. எங்க மச்சான என்ன விரட்டு விரட்டுவாங்க தெரியுமா?” என்று வேண்டும் என்றே வம்புக்கு இழுத்தான்.

“என்னோட அம்மா அவரை விரட்டுறாங்களா? கண்முன்ன அவங்க வாழ்க்கையை பார்த்தும் எதுக்கு இந்த உளறல். கனவுல இருக்கீங்களா என்ன. என்ன பிரச்சனை உங்களுக்கு? சமையல் முடியப் போகுது. கம்முனு இருக்க மாட்டீங்களா? ரெண்டு பேருக்கும் செய்ய எவ்வளவு நேரமா அடுப்படியில நிக்கிறேன் தெரியுமா? ஹெல்ப் பண்ணலனாலும் பரவாயில்ல. தொந்தரவு பண்ணாதீங்க” என்று கடுப்பாகி கத்தினாள் அவள்.

“நான் உனக்குத் தொந்தரவா? சொல்லு? நான் உனக்குத் தொந்தரவா தெரியுறேனா? பொண்டாட்டினு ஆசையா பேச வந்தா ரொம்ப தான் பண்ணுற. நான் போறேன் போ” என்று வெளியேறப் போக,

வேலை முடிந்து விட்டதால் வேகமாக அடுப்பை அணைத்தவள் அவன் முன் வந்து, “சாரிங்க. என் செல்ல மாமால்ல. தனியா செய்யுறதால கொஞ்சம் எரிச்சல். அதை உங்களிடம் காண்பிச்சிட்டேன். உங்க பொண்டாட்டியை மன்னிக்க மாட்டீங்களா?” என்று கணவனை அணைத்துக் கொண்டாள்.

“ஆங்.. இப்படி கட்டிபிடிச்சா எப்படி கோபத்தை தொடருவது? இன்னும் இறுக்கிக்கத் தான் தோணும். சண்டையும் போட்டுட்டு சமாதானத்தையும் நீயே பண்ணிடுற. இதுக்காகவே ரொம்ப கோவிக்கனும் போல” என்றான் அவன்.

“ஆங்.. கோபிப்பீங்க கோபிப்பீங்க. நீங்கதான் என்னை சமாதானம் செய்யனும். நான் உங்கள கெஞ்சுறேன். கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல உங்களுக்கு. உங்களுக்காக தானே எல்லாம்.” என்றாள் சிணுங்கலாக.

“எனக்காகனு ரொம்ப மெனக்கெடாத சுந்தரி. நீ நீயா இரு சொன்னா கேக்குறதது இல்ல.” என்றவன் குரலில் வருத்தம் இருந்தது.

“நான் நானா தான் மாமா இருக்கேன். அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்?” என்றாள் புரியாது.

“நீ நீயா இல்லனு என் உள்மனசு சொல்லுது. எனக்காகன்னு எல்லாமே செய்யுற உனக்காக நான் ஒன்னுமே செய்யலையே. என் மேல் ஏன் இத்தனை அன்பு? இதுக்காகவே எதாவது செய்யணும் உனக்கு” என்றான் அவள் கண் பார்த்து.

“அன்பு இல்ல காதல். எங்க சொல்லுங்க? காதல்!” என்று திருத்திச் சொன்னாள்.

“ரெண்டும் ஒன்னு தான்டி என் சுண்டெலி. அதிகபட்ச அன்பை காதல்னு சொல்லுறாங்களோ என்னவோ? வாழ்க்கையை காதல்னு ஒன்னுல அடைச்சிட கூடாது. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குடா. அதை வாழு.”

“அதைத் தான மாமா உன்னோட வாழுறேன். இனியும் வாழுவேன். எவன் என்னை கேக்குறது?” என்றவள் கண்களில் அத்தனை காதல்.

“இருந்தாலும் உன் காதல் இருக்கே. சான்சே இல்லடி. ஆனாலும், உன் காதல் என்னை மூச்சு முட்ட வைக்குதுனா பாரேன். இவ்வளவு காதல் எப்படி? சில நேரம் மலைச்சிப் போயி நிற்கிறேன் நான்” என்று சிரித்தான்.

அவன் முகத்தை தன் இரு கைகளால் ஏந்தி, “உன் காதல் முன்ன நானும் என் காதலும் தூசு மாமா. இந்த உன் சிரிப்புக்கே என் உயிரை கேட்டாலும் குடுப்பேன்” என்றாள் அகம் நிறைய.

“நீ தருவ. அதை வச்சி நான் என்ன செய்ய? எனக்கு வேணாம் தாயே. நீயே வச்சிக்க. நேரமாகுது நான் போகவா?”

“போறேன் சொல்லகூடாது சொல்லி இருக்கேன் மாமா. போயிட்டு வரேன் சொல்லுங்க. உங்களுக்காக தான் பார்த்து பார்த்து செய்யுறேன். நீங்களே சாப்பிடாம ஓடினா எப்படி. உட்காருங்க” என்று உணவை வைக்க, அவள் உண்டு முடித்ததும் அவன் தட்டைப் பார்த்து, “நீங்க சரியா சாப்பிடுறதே இல்ல. முன்னலாம் எவ்வளவு சாப்பிடுவீங்க? உணவை வேஸ்ட் பண்ணுறது உங்களுக்குப் பிடிக்காத ஒன்னு. இப்ப என்ன மாமா வச்ச உணவு அப்படியே இருக்கு. ப்ச்..” என்று சலித்து மீந்ததை நாய்க்கு வைத்தாள்.

“இனி சரியா சாப்பிடுறேன். நான் தோட்டத்துல தண்ணி பாச்சிட்டு இருக்கேன். நீ தயாராகி வந்திடு” என்றதும் அவனை முறைத்து உள்ளே சென்றாள்.

‘என்ன முறைக்கிறா? நாம எதாவது தப்பு செய்துட்டோமா? என்ன தப்பு’ என்றெண்ணிய நேரம், ‘ஸ்ஸ்...’ என நாக்கைக் கடித்தவன், அவள் பின்னே சென்று பின்னால் இருந்து அணைக்க, அவள் உதற என சில நிமிட தள்ளு முள்ளுக்கு பின் சின்ன சிரிப்புடன், “என் சுந்தரி கோபத்துல இருக்கீங்களா? மன்னிச்சிக்கடி. உன் கோபத்துல தினசரி தருவதை மறந்துட்டேன்” என்று கெஞ்சலில் இறங்கினான்.

“என்னை மறக்குறது உங்களுக்கு புதுசா என்ன? இங்க இருக்கிற வரை என்னை சுத்தியே வரது. வெளில போயிட்டா நானா தேடி வரணும். தோட்டத்துக்கு போற உங்களை வரும்போது வலுக்கட்டாயமா கூட்டிட்டு வரவேண்டி இருக்கு. தோட்டத்துல அப்படி என்ன தான் இருக்கோ. அங்க இருந்து வரமாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க. போங்க மாமா?” என்றாள் சலிப்பாக.

“நம்ம காதல் இருக்குடி.” என்று இறுக்கி அணைத்து காதில் முத்தமிட, கூசிச் சிலிர்த்து தலையைச் சரித்து, அவன் முத்தமிட்ட காதை கழுத்தோடு அவள் தேய்க்க, மறுபுறம் கழுத்தில் அவனின் முத்தம் அழுத்தமாகப் பதிந்து அவளின் உணர்வைத் தூண்டியது.

வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top