• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
128
பாகம்-4

அன்றைய நாள் முழுவதும் கதிர் எதிரில் வந்தால், அவனை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் முல்லையின் தந்தை கணேஷன் அவர் வேலைகளை செய்து கொண்டிருக்க, நேரம் சரியாக காலை பதினோரு மணி அளவில் கதிர், சவிதாவின் பெயரில் குலதெய்வ கோவிலில் பூசை செய்து பொங்கல் வைக்க ஏற்பாடு நடக்க இருந்தது.
ஏனோ கதிரின் அப்பா, அவரின் மச்சான்கள் இருவரிடமும் கோவமாக பேசிக்கொண்டு இருந்ததை கவனித்த கதிர் அவர்கள் அருகில் சென்று, “அப்பா என்ன பிரச்சனை?” என்றான்.
“ஒன்னும் இல்லப்பா நீ போய்க் கோவிலுக்கு கிளம்பு.”
“இல்லப்பா. காலையில இருந்து ஏதோ சத்தமா பேசிகிட்டு இருக்கீங்க. என்ன ஆச்சு?
“கதிர் இந்த அநியாயத்தை நீயே கேளு. நேத்து இரவு இதோ என் தம்பி தனசேகரன் வீட்டில் இருந்து அம்மனுக்கு சாத்த வைர நகைகள் எல்லாம் எடுத்துட்டு வந்தோம். இப்போ அதுல வைர ஒட்டியாணத்தைக் காணோம்” என்றார் ராஜசேகரன்.
தனசேகரனோ, “இல்ல தம்பி. அத காணோம்னு சொல்வதை விட யாரோ திருடிட்டாங்கன்னு தான் சொல்லணும்” என்ற தகவலைக் கொடுத்தார்.
“என்ன சின்ன மாமா சொல்றீங்க? திருட்டா?”
“ஆமாடா. என் வீட்டில் நகை பத்திரமா தான் இருந்துச்சு. இங்க வந்துதான் அந்த நகை திருட்டு போய் இருக்கும்.”
“வாய மூடு மச்சான். இங்கே யாரு திருட போறாங்க” என்றார் சேரன்.
“வேற யாரு. இங்க வீட்ல வேல செய்றவங்களா தான் இருக்கும்.” தனசேகரன் சொல்ல,
“என்ன விளையாடுறீங்களா. இந்த வீட்ல வேலை செய்ற எல்லாருமே என் விசுவாசிகள். எனக்காக உயிரையும் கொடுப்பாங்க” என்று சத்தம் போட்டார் சேரன்.
“சும்மா இருங்க மாமா. பணம் பத்தும் செய்யும். பணத்துக்கு மயங்காதவர்கள் யாருமே இல்ல. கண்டிப்பா உங்க வீட்ல வேலை செய்யுற யாரோ ஒரு ஆள் தான், அம்மனுக்கு சாத்த வேண்டிய வைர ஒட்டியாணத்தை திருடி இருப்பாங்க” என்று அடித்துப் பேசினார் தனசேகரன்.
“மாமா அப்பா சொல்றதுதான் சரி. இந்த வீட்ல வேலை செய்றவங்க எல்லாரையுமே எனக்கு பிறந்ததிலிருந்தே தெரியும். யாரும் பணத்துக்கு ஆசைப்பட்டவங்க இல்ல. அதுவும் அம்மன் நகையை எடுக்க சான்சேயில்லை.”
“அப்போ அந்த நகை எங்க போச்சு தம்பி?”
“அப்பா நீங்க மாமா வீட்ல இருந்து நகை பெட்டியை எடுத்துட்டு வரும்போது அந்த நகை இருந்துச்சா?”
அ...அது. இல்ல கதிர். நாங்க எந்த நகையையும் தனியா பார்க்கல. அப்படியே அந்த பெட்டியை இங்கே எடுத்துட்டு வந்து விட்டோம்.”
“அப்போ ஒருவேளை நீங்க வரும்போது அந்த பெட்டியில் அந்த நகை இல்லாமல் இருந்திருக்கலாம் இல்ல” என்றான் கதிர்.
“அப்ப அந்த நகையை திருடியது நான்னு சொல்றியா?” கோவமாகக் கேட்டார் தனசேகரன்.
“மாமா நான் எங்க அப்படி சொன்னேன். ஒருவேள உங்க வீட்டுல தவறுதலாக அது இருக்கலாம். இல்ல போன் பண்ணி அத்தைகிட்ட அலமாரியில் தேட சொல்லுங்க.”
“அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நகையை அலமாரியில் வைக்கிறதும் நான் தான். எடுக்குறதும் நான் தான். மாமா எப்படிக் கொடுத்தாறோ அப்படியே உள்ள வச்சு, அப்படியே எடுத்துட்டு வந்து இருக்கிறேன். அதனால் அந்த நகையை கண்டிப்பா இந்த பங்களாவில் வேலை செய்யுற வேலைக்காரங்க தான் திருடி இருப்பாங்க” என்றார் திரும்பவும்.
“மறுபடியும் என் விசுவாசிகளை திருடன்னுங்கன்னு சொன்னீங்கன்னா, அப்புறம் நம்ப உறவுமுறையே தூண்டிச்சுடும் சொல்லிட்டேன்.” கொஞ்சம் கண்டிப்புடனே சொன்னார் சேரன்.
“இப்போ கொஞ்ச நேரத்துல பதினெட்டு பட்டி கிராமமும் ஒன்று சேரும். அவங்க எதிரில் அம்மனுக்கு அந்த நகையை சாத்தியே தீரனும். இப்ப வைர ஒட்டியாணம் காணும்னு சொன்னா, நம்பல கிராமத்து தலைவருங்க காரி துப்புவாங்க” என்றார் ராஜசேகர்.
“இப்ப என்ன பண்ண சொல்றீங்க மாமா?”
தனசேகரோ, “இங்க வேலை செய்ற எல்லாருடைய வீட்டிலும் சோதனை போடுங்க” என்றார்.
“இங்க பாருங்க நான் மறுபடியும் சொல்றேன் எங்களுடைய விசுவாசிகள் அவங்க. அவங்க இதை பண்ணியிருக்கமாட்டாங்க.”
“என்ன மாமா நீங்க? அப்போ அந்த நகை எங்க?”
“இல்ல எனக்கு என்னமோ அந்த நகையை இந்த வீட்ல வேலை செய்றவங்க தான் திருடி இருப்பாங்கன்னு தோணுது.” திரும்பத் திரும்ப அவர்களையே சொன்னார் ராஜசேகர்.
“சும்மா அதையே சொல்லாதீங்க. நேத்து நம்ப நகை எடுத்துட்டு வரும்போது இந்த வீட்ல யாருமே இல்ல. நானு நீனு இதோ தனசேகரன் அப்புறம் கணேசன்னு நம்ம நாலு பேர்தான் இருந்தோம்.”
“அப்ப சரி கணேசன் தான் எடுத்து இருப்பான்” என்றார் தனசேகரன்.
“மரியாதை கெட்டுவிடும் சொல்லிட்டேன். என்ன பேச்சு இது? கணேசன் யாரு தெரியுமா? அவன் என் விசுவாசி. எனக்காக உயிரை குடுக்குறவன் மட்டும் இல்ல. யாரு உயிரை வேணாலும் எடுக்கிறவன்” என்று கொதித்தார் சேரன்.
“மாமா போதும் நிறுத்துங்க. எனக்கு என்னமோ அவன் மேல தான் சந்தேகமா இருக்கு. நேத்து நைட்டு கூட அவன் இங்க தங்கலை. இதோ இப்ப அவன் பொண்ணு கூட இங்கே இல்லையே” என்று தனசேகரன் சொல்ல,
ராஜசேகர், “ஆமா அவன் பொண்ணு நேத்து கூட இருந்தா. ஆனா இன்னைக்கு இங்க இல்ல” எனவும்,
“சரியா போச்சு. அப்ப நான் சந்தேகப்பட்டது தான் சரி. அவன் தான் அந்த நகையை எடுத்து இருக்கணும்” என்று அண்ணனுக்கு ஒத்து ஊதினார்.
“என்ன பேச்சு பேசுறீங்க? கணேசன் அப்படியெல்லாம் செய்யக் கூடிய ஆள் இல்ல. அதுவும் இல்லாம நீங்க தொலைச்சது வைர ஒட்டியாணமா இருக்கலாம். ஆனா முல்லை அந்த வைரத்தை காட்டிலும் புனிதமானவ.” என்றான் கதிர்.
“அந்த நகை தொலைந்து போச்சுன்னா அதுக்கு இந்த வீட்டில இருந்து நாலு பேரு தான் காரணம். ஒன்று நான் இன்னொன்னு என் தம்பி. அப்புறம் உங்க அப்பா. நாங்க மூணு பேருமே எடுக்கலைன்னா அப்போ யார் எடுத்திருப்பாங்க கண்டிப்பா அந்த கணேசன்தான் எடுத்திருப்பான். ஊரைக் கூட்டி பஞ்சாயத்து முன்னாடி அவனை நிப்பாட்டி சவுக்கால நாலு போடு போட்டா உண்மை தானா வரும்.”
“அதுக்கெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்.”
“கதிர் நீ சும்மா இருப்பா. இங்க பாருங்க கணேசன் அப்படிப்பட்ட ஆள் இல்ல. நீங்களா ஏதாவது பேசக்கூடாது.”
“மாமா நீங்க சும்மா இருங்க. டேய் யாரு அங்க. கணேசனை கூப்பிடுங்க” என்றார் தனசேகர்.
“ஐயோ மாமா கொஞ்சம் சும்மா இருங்க” என்றான் கதிர்.
“நீ சும்மா இரு கதிர்” என்று ராஜசேகரன் கதிரை மிரட்ட,
கணேசன் இவர்கள் அழைக்கும் குரலைக் கேட்டு ஓடி வந்தவர், “ஐயா கூப்பிட்டீங்களா?” எனக் கேட்க.
“டேய் அந்த வைர ஒட்டியாணம் எங்கடா? சொல்லு எங்க திருடி வச்சிருக்க?”
“ஐயா என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலையே” கணேசன் கேட்க,
சேரன், “ஒன்னும் இல்ல கணேஷா. நீ போ” என்றார்.
“டேய் நில்லுடா. நேத்து நான், என் அண்ணன், அப்புறம் மாமா மூணு பேரும் வரும்போது நீ மட்டும்தான் வீட்டில் இருந்த. நகை பெட்டியை நாங்க உள்ளே வைச்சுட்டு அதுக்கப்புறம் நாங்க தோட்டத்துக்கு போய் விட்டோம். அப்போ தான் நீ அந்த நகையை திருடி இருக்கணும்” என தனசேகரன் சொல்ல,
“என்ன நானா? ஐயா என்ன வார்த்தை பேசிட்டிங்க. நான் இந்த வீட்டு உப்பு தின்னு வளர்ந்தவன். நான் சத்தியமா அதெல்லாம் பண்ணமாட்டேன்.”
“கணேசன் நான் சொல்றேன் நீ போ” என்றார் சேரன்.
“மாமா கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா. இன்னும் ஒரு மணி நேரத்துல ஊர் கூடி அம்மனுக்கு அந்த நகையை சாத்தியே தீரணும் .இந்த நேரத்தில ஒட்டியானம் காணம்ன்னு சொன்னா என்ன ஆகறது. கண்டிப்பா கணேசன் தான் திருடி இருப்பான்.” உறுதியாக நிற்க,
“டேய் உன் பொண்ணு எங்க? உன் பொண்ணை வர சொல்லு?” என்றார் ராஜசேகர்.
“இல்ல ஐயா என் பொண்ணு நேத்து நைட்டு அவங்க பாட்டி வீட்டுக்கு போய்ட்டா.”
“இதோ வெட்ட வெளிச்சமாகிடுது. நேத்து நைட்டு நீ தான் நகையை திருடி உன் பொண்ணுகிட்ட கொடுத்து, அவள அவ பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்ட?”
“ஐயோ சத்தியமா இல்ல ஐயா” என்று பதறினார் கணேசன்.
“அப்போ திடுதிப்புன்னு உன் பொண்ணு அவ பாட்டி வீட்டுக்கு போக காரணம் என்ன?”
“அது வந்து... அது வந்து...” திணறி நிற்க,
“இங்க பாருங்க முல்லைப்பூக்கு உடம்பு சரி இல்ல. இங்க இருந்தா அவள பார்த்துக்க ஆள் இல்லைன்னு தான் கணேஷன் அவங்க பாட்டி வீட்டுக்கு அனுப்பி வச்சாரு.”
“உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” சின்ன மாமன் கேட்க,
“நான் கணேஷன்கிட்ட காலையில முல்லை எங்க என்று கேட்டதற்கு அவர் சொன்ன விளக்கம் இதுதான்.”
“அதெல்லாம் நம்பாத மாப்பிள்ளை. இவன் நேற்று இரவு வைர ஒட்டியாணத்தை திருடி இவன் பொண்ணு கையில கொடுத்து. இந்த ஊரை விட்டே அனுப்பி வச்சிருக்கான். டேய் இப்ப உன் பொண்ணு எந்த ஊர்ல இருக்கா?” என்றார் விடாது.
“ஐயா பக்கத்து கிராமத்துல தான் இருக்காள்.”
“டேய் யார் அங்க” என்று அங்கிருந்த ஒருவனை அழைக்க, “ஐயா சொல்லுங்க” என்று வந்தான் ஒருவன்.
“கணேசனுடைய பொண்ணு எங்க இருந்தாலும், அவளை இன்னும் ரெண்டு மணி நேரத்துல ஊர் பஞ்சாயத்தில் கொண்டு வந்து நிறுத்துங்க” என்றார் தனசேகர்.
 
Joined
Feb 6, 2025
Messages
128
“மாமா என்ன... என்ன சொல்றீங்க? ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க? அப்பா இங்க என்ன நடக்குது?” பதறினான் கதிர்.
“எனக்கும் ஒன்னும் புரியலடா. சாமிக்கு சாத்த வேண்டிய நகைப் பெட்டியை எப்பொழுதும் தனசேகரன் வீட்டில்தான் கொடுத்து வைப்போம். நேற்று இரவு நான் தனசேகரன் வீட்டில் இருந்த நகை பெட்டியை எடுத்து வந்து நம்ம வீட்ல தான் வச்சேன். இப்ப திடீர்னு அதுல இருக்கிற வைர ஒட்டியாணம் காணோம் சொல்றாங்க. இப்ப என்னால் என்ன பண்ண முடியும்?”
“வேற என்ன பண்ண முடியும். இதோ இவன் தான் திருடன். இவன் திருடி அத அவன் பொண்ணுகிட்ட கொடுத்து பக்கத்து ஊருக்கு அனுப்பி வச்சுட்டான். இன்னும் ஒரு மணி நேரத்தில் எல்லாம் வெட்ட வெளிச்சமாகிடும். ஊர் பஞ்சாயத்தை கூட்டுங்க” என்று சேரனின் பெரிய மச்சான் ராஜசேகரன் சொல்ல,
எண்ணி ஒரு மணி நேரத்தில் ஊர் பஞ்சாயத்து கூடி, அதில் குற்றம் சாட்டப்பட்டு, இல்லை குற்றம் சுமத்தப்பட்டு, இல்லை குற்றத்தைக் திணிக்கப்பட்ட நிலையில் கணேசன் கூனிக்குறுகி நின்றிருக்க, 18 பட்டி ஊர் பஞ்சாயத்து தலைவர்களான 18 பேரும் ஒன்று கூடி சபையில் அமர்ந்து இருந்தனர்.
‘கதிர் இங்கே என்ன நடக்கிறது?’ என்று முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்த சமயத்தில் முல்லையை ஒருவன் அழைத்து வந்தான்.
முல்லை தன் அப்பாவை பார்த்ததும் அங்கிருந்து ஓடி வந்தவள் அவரை கட்டிப்பிடித்து “அப்பா இங்கே என்ன நடக்குது? இந்த அண்ணன் என்னென்னமோ சொல்றாரே. யாரு என்ன திருடனாங்க” என கேட்க,
“ஏய் என்னடி உன் அப்பன் கொடுத்த வைர ஒட்டியாணம் எங்க?” என்று கேட்டப்படி தனசேகரன் முல்லையின் தலை முடியை பிடிக்க,
“ஆ... வலிக்குது ஐயா விடுங்க. என்ன ஒட்டியானம்? எனக்கு எதுவும் தெரியாது” என்றாள்.
“மாமா முல்லை மேல இருந்து கையை எடுங்க. பெண்கள் கிட்ட இப்படியா நடந்துப்பிங்க?”
“அப்பா இங்க என்ன நடக்குது? என்னை விட சொல்லுங்க.”
“நடிக்காதடி. உன் அப்பா நேத்து நைட்டு எங்க வீட்ல இருந்து, அம்மனுக்கு சாத்த வேண்டிய வைர ஒட்டியாணத்தை திருடி உன்கிட்ட தந்து, நைட்டோட நைட்டா உன்னை வேற ஊருக்கு அனுப்பி வச்சிருக்கான் இல்ல” என்றார் தனசேகரன்.
“ஆ.. வலிக்குது முடியை விடுங்க” என்று அழ,
“மாமா சொல்றேன் இல்ல. கையை எடுங்க” என்றான் கதிர்.
“மாப்பிள்ள திருடங்களை இப்படி தான் விசாரிக்கணும். நீ வீட்டுக்கு போ.”
“யாரு திருடங்க?” எகிறி வந்தான் கதிர்.
“இதோ இவளும் இவனும் தான். ஏய் சொல்லுடி அந்த வைர ஒட்டியாணம் எங்க?”
“நீங்க என்ன சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியல. நான் அதெல்லாம் பார்த்தது கூட இல்ல.”
“டேய் கணேஷா, இப்ப நீ உண்மையை சொல்றியா? இல்ல உன் மகளை நிர்வாணமாக்கி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல ஊர்வலமா அனுப்பி விடவா.” அகங்காரத்தில் தனசேகரன் காத்த,
“ ஐயா கடவுள் பொதுவாச் சொல்றேன் நான் எந்த நகையையும் என் கண்ணால் பார்த்தது கூட இல்லை. என்னை நம்புங்க. என் மகளுக்கு ஒன்றும் தெரியாது. அவளை விட்டுடுங்க” என்று கெஞ்சினார் கணேசன்.
”சரி அப்போ திடீர்னு நேற்றைய இரவு உன் மகளை பக்கத்து ஊருக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?” கதிரின் பெரிய மாமன் கேட்க,
“ஐயா என் மக தான் பாட்டி வீட்டுக்கு போகனும் என்று ஆசைப்பட்டாள். அதனாலதான் போக சொன்னேன்.”
“அதுக்கு நீ அவளை காலையில் அனுப்பி இருக்கலாமே. நடு சாமத்துல எதுக்கு அனுப்புன? இதுல இருந்தே தெரியுது நீ தான் அதை திருடி இருப்பேன்னு.”
“சேரன் அய்யா சொல்லுங்க. நான் அந்த மாதிரி இல்லன்னு சொல்லுங்க. சத்தியமா நான் திருடல.”
“நீ தான் திருடி இருக்க. எனக்கு அது நல்லாவே தெரியுது. உன் மேலே சந்தேகம் இருக்கறதால தான், என் மாமா சேரனும் வாயைத் திறக்காமல் இருக்காரு” என்றார் ராஜசேகர்.
“இல்ல நான் திருடன் இல்ல. என்னை நம்புங்க.”
“அப்பா அழாதீங்க” என்றாள் முல்லை.
“கணேசன் கடைசியா கேட்கிறேன். அந்த நகையை திருப்பி தந்துடு. இல்ல உன் பொண்ணு இந்த ஊர் எதிர்ல நிர்வாணமா ஊர்வலம்...”
“வாயை மூடுங்க மாமா. என்ன பேச்சு பேசுறீங்க? கணேசன் தான் அந்த நகையை திருடினார்ன்னு உங்கள் கிட்ட சாட்சி இருக்கா?” என்று அவரை பேசவிடாது தடுத்தான்.
“இவன் பொண்ணு வேற ஊருக்கு போய் இருக்காளே. அது போதாதா?”
“முல்லை ஊருக்கு போனதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். அதுக்காக இவுங்க தான் நகையை திருடுனாங்கன்னு நீங்கள் எப்படிச் சொல்லலாம்?”
“என்ன மாப்பிள்ள நீ. பிராது தந்தது நம்ம. நியாயமா நீ நம்ம வீட்டு பக்கம் தான் பேசணும்.”
“வாயை மூடுங்க மாமா. நியாயம் எதுவோ அந்த பக்கம் தான் நான் பேசுறேன். கணேசன் அந்த நகையை திருடினார்ன்னு, நீங்க கண்ணால பாத்தீங்களா? சொல்லுஙக மாமா?”
இருவரும் இல்லை என்றனர்.
“அப்பா நீங்க பாத்தீங்களா?”
“இல்லப்பா நான் பார்க்கல.”
“அப்புறம் எப்படி நீங்க அவரு மேல திருட்டு பழி போடுவிங்க?”
“அப்போ நகை எங்க?” என்றார் ராஜசேகர்.
“அதை கண்டுபிடிக்க வேண்டியது நீங்கதான். நாங்க உங்க தம்பி தனசேகர்கிட்ட கொடுத்த நகை காணாம போச்சுன்னா, அந்த வழக்குக்கு தனசேகரன் தான் பொறுப்பே தவிர, அத கணேசன் மேலே திருப்பி விடக் கூடாது.”
“என்ன மாப்பிள்ள, வழக்கு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசற. அப்ப அந்த நகைகளை நான் திருடி இருக்கன்னு சொல்றியா?”
“அப்படின்னு நான் சொல்லல. ஆனா நீங்க பண்றதை பாத்தா ஒருவேளை ஏன் நீங்க பண்ணி இருக்க கூடாதுன்னு தோணுது சின்ன மாமா” என்றான் நேரடியாக.
“என்ன பேச்சு பேசுற மாப்பிள்ள நீ. நாங்க உன் தாய் மாமாங்க.”
“யாரா இருக்கட்டும். நியாயம்னா நியாமா பேசனும். இப்ப என்ன அந்த நகை எங்கன்னு தெரியனும் அவ்வளவு தானே? இருங்க நானே போலீஸ்க்கு தகவல் சொல்லி அனுப்புறேன்” என்றான் கதிர்.
“போலீசா? என்னப்பா இந்த ஊருகுள்ள காக்கி சட்டை எல்லாம் வரக்கூடாதுன்னு உனக்கு தெரியாதா?” சின்னவர் கேட்க,
“போதும். இன்னும் எத்தனை காலத்துக்கு இதயே சொல்லுவீங்க. உங்களுக்குன்னு ஒரு தீர்ப்பு. உங்களுக்குன்னு ஒரு நியாயமா? நீங்க எல்லாம் மேல் ஜாதிகாரங்க என்பதால, நீங்க பண்ணுற எல்லா கெட்டதுக்கும் இவுங்க தண்டனை அனுபவிக்கனுமா? அதெல்லாம் இல்ல இந்த வழக்கை நான் காவல்துறை அதிகாரிகிட்ட விசாரிக்க சொல்ல தான் போறேன்” என்றான்.
“எங்க பேர்ல வழக்கெல்லாம் வந்தால் நம்ம சொந்தமே விட்டுப் போயிடும் சொல்லிட்டேன்” என்றார் பெரிய மாமன்.
என்ன நடந்தாலும் சரி. இந்த வழக்கை கண்டிப்பா காவல்துறை அதிகாரிகள் தான் விசாரிக்கணும். அப்பா உங்களுக்கு அப்புறம் இந்த ஊர் தலைவர் நான் தானே” எனக் கேட்டான்.
“இதுல என்ன உனக்கு சந்தேகம்? என்றார் அவரும்.
“அப்போ நான் சொல்றேன், இந்த வழக்கை காவல் துறையினர் விசாரிக்கட்டும். கணேசன் நீங்க வீட்டுக்கு போங்க. முல்லை நீயும் போ. ஊர் மக்கள் எல்லாரும் போய்ட்டு வாங்க” என்று பஞ்சாயத்தைக் கலைத்தான்.
“கதிர் என்ன நடக்குது இங்கே?”
“இனிமேல் தான் நடக்கப்போகுது மாமா. அந்த நகை எங்க போச்சுன்னு நாளைக்கு இந்த நேரதுக்குள்ள தெரியவரும் பாருங்கள்” என்று சொன்னபடி கதிர் அவன் காரில் ஏற, சேரன் எதுவும் சொல்லாமல் கதிரை பின்தொடர்ந்தார்.
அன்றைய இரவு முல்லையின் வீட்டுக்கு கதிரும், அவனின் நண்பன் மணியும் செல்ல, முல்லை மட்டும் அங்கே தனியே வீட்டில் அழுது கொண்டு அமர்ந்து இருந்தாள்.
“முல்லை!” கதிர் அழைக்க,
“கதிர்... கதிர் நாங்க எதையும் திருடல. ஏன் எங்கள பஞ்சாயத்துல நிக்க வச்சு திருடங்கன்னு சொன்னாங்க?” என்று அழுதாள்.
“ஏய் இப்ப நீ ஏன் அழுவுற? அழாத முல்லை ப்ளீஸ். நான் இருக்கேன் உங்களுக்கு. என்னை மீறி உங்களுக்கு எதுவும் ஆகாது.”
“உங்க மாமா ஏன் என் முடியை எல்லாம் பிடிச்சு இழுத்தாரு? நீ என்ன சொன்ன? நீ இருக்கும் போது யாரும் என்னை எதும் பண்ண முடியாதுன்னு தானே சொன்ன” என்று அழுகையைத் தொடர,
“முல்லை அழாத சொல்றேன் இல்ல. இங்க பாரு முகமெல்லாம் எப்படி வீங்கி இருக்குன்னு. சரி நீ சாப்பிட்டியா?”
“நேத்துல இருந்து நான் எதுவும் சாப்பிடல.”
“ம்... தெரியும். அதான் உனக்கு நான் பதார்த்தம் எடுத்துட்டு வந்தேன். டேய் மணி அத தா” என்றான் நண்பனிடம்.
“இந்தா மச்சான். நான் வெளிய இருக்கேன். நீ சிஸ்டர்க்கு சாப்பிட கொடு.”
“முல்லை இந்தா சாப்பிடு.”
“இல்ல வேணாம்.”
“ஏன்மா?”
“ஏன்னு தெரியல. ஆனா வேணாம்.”
“சரி ஆ காட்டு நான் ஊட்டி விடுறேன்.”
“என் அப்பா தான் எனக்கு ஊட்டி விடும். நீ என்ன எனக்கு ஊட்டி விடுறேன்னு சொல்ற?” என்றாள் புரியாது.
“அப்பா மகளுக்கு ஊட்டி விடலாம். அதே போல ஒரு காதலிக்கு அவள் காதலனும் ஊட்டி விடலாம்.”
“அப்ப நான் உன் காதலியா?”
“அப்பன்னு இல்ல, இப்பன்னு இல்ல, எப்போவுமே நீ ஒருத்தி மட்டும் தான் என் காதலி. என்ன அப்படி பாக்குற?”
“அப்போ நீ என்னை கட்டிப்பியா?”
“நான் கட்டுற தாலி தான் உன் கழுத்துல கடைசி வரைக்கும் இருக்கும்.”
“உங்க அப்பா, உங்க மாமா எல்லாம் உன்னை அடிக்க மாட்டாங்களா?”
“ம்ஹூம் மாட்டாங்க” என்றான் குழந்தைக்குச் சொல்லுவது போல.
“அப்போ என்னை?”
“உன் மேல யாராவது கை வச்சா நான் அவுங்கள கொன்னுடுவேன்.”
“இல்ல வேணாம் வேணாம்” என்றாள்.
“சரி ஆ காட்டு.”
“ம்.... நீ சாப்பிடல?”
“நீ எனக்கு ஊட்டி விடுறியா?”
“நானா?”
“ஆமா நீ தானே என் காதலி. அப்ப நீதான் ஊட்டனும்.”
“நா...” என திணற,
“சரி சரி அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். ஆமா உங்க அப்பா கணேஷன் எங்க?
“சேரன் ஐயா வர சொன்னாருன்னு தானே ரெண்டு பேர் வந்து என் அப்பாவை அழைச்சிட்டு போனாங்க.”
“என்ன எங்க அப்பாவா?”
“அக்கா... அக்கா” என்று சிறுவன் ஒருவன் வந்தான்.
“என்னப்பா?”
“உங்க அப்பா... உங்க அப்பா...”
“என்னடா சொல்ல வர்ற?
“டேய் என்னாச்சு” என்றான் மணியும்.
“முல்லை அக்காவோட அப்பா இந்த ஊர் எல்லையில தூக்குல தொங்கிட்டாரு.” என்றதும் அனைவரும் அதிர, “அப்பா...” என்று அலறி அடித்து முல்லை ஊரின் எல்லை பகுதிக்கு ஓட, கதிரும், மணியும் முல்லையை பின் தொடர்ந்தனர்.
அங்கே கணேஷனின் உடல் கயிற்றில் தொங்குவதை பார்த்த முல்லை கண்கள் கிறங்கி தலை சுற்றி மயங்கியபடி கீழே சரிந்தாள்.
‘இருக்கப்பட்டவன் நினைத்தால், கெட்டவனும் கொடி கட்டி பறப்பான். நல்லவனையும் நடு தெருவில் தூக்கிட்டு தொங்க விடுவான்.’
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top