- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
27
அறைக்குள் வந்தவளை ஆசையாகத் தழுவிய கண்கள் கையில் பால் செம்பைத் தேட, இல்லை என்றதும் “ஆமா பால் எங்க?” என்றான்.
“பாலா? ஏன் பசிக்குதா? போய் எடுத்துட்டு வரவா?” என கேட்டபடி அவனை நெருங்கினாள்.
“ஏய் அதெல்லாம் வேண்டாம். இல்...ல ஃபர்ஸ்ட் நைட்னா தந்து விடுவாங்களேன்னு கேட்டேன்” என நிறுத்தி நிதானமாகச் சொல்ல,
“அவங்க தந்தாங்க. நான்தான் ஒரு மாதிரி இருக்குன்னு வேண்டாம் சொல்லிட்டேன். இது வீடு கிடையாதுன்றது ஞாபகம் இருக்கட்டும்” என்றாள்.
“புரியுது. ஆமா என்னைப் பார்த்தா பயமாயில்லையா?”
“ஏன் பயப்படணும்? பகல்ல மனுஷனாவும், இரவில் டிராகுலாவாகவும் மாறுகிற மனிதனா என்ன? எங்க உங்க பல்லைக் காட்டுங்க?” என சிரிக்காமல் கேட்டாள்.
“நீ நல்லா வருவமா. ஒரு பேச்சுக்குச் சொன்னா என்னை டிராகுலாவாவே மாத்திட்ட. உட்காரலாம் நதி. ரிசப்ஷன்ல நின்னு நின்னு கால் ரொம்ப வலிக்குது” என்றான் முகம் சுருக்கி.
“ஹான்! இதெல்லாம் நான் சொல்ல வேண்டிய டயலாக்.”
“ஏன் ஆண்களுக்குக் கால் வலிக்காதா?”
“வலிக்கும். ஆனா, வலிக்காது” என பாவனையாகச் சொல்ல, அவள் தலையில் வலிக்காது கொட்டி “என்கிட்ட எதாவது கேட்கணுமா?” என்றான்.
“ம்... இப்போதைக்கு எதுவும் இல்லை. நாளைப்பின்ன தோணினா கேட்கிறேன். ஏன் உங்களுக்கு எதாவது கேட்கணுமா?”
“என்னென்னவோ...” என ஆரம்பித்தவன், அவளின் பார்வையில், “எதுவுமே கிடையாது” என்று அவள் இடது கை விரல்களைத் தன் வலது கை விரல்களோடு கோர்க்க, விரல்களின் பின்னலினால் ஏற்பட்ட ஜில்லிப்பு உடல் முழுவதும் பரவ, கண்மூடி கணவனின் தோள்சாய்ந்த நிமிடம், மனசெல்லாம் நிர்மலமான ஒரு அமைதி. தங்களை விட்டுப்போன வாழ்க்கை கைகளுக்குள் வந்த பரவசம் இருவருக்குள்ளும்.
அதை மௌனமாக அனுபவிக்க, சில நிமிட அமைதிக்குப் பின், “தூங்கலாமா?” என்றாள்.
“அதுக்குள்ளயா?”
“அப்ப எதாவது பேசுங்க?” என்றவள் குரல் இறங்கியே வந்தது.
“பேசணுமா? நதி...” என கிறக்கமாக வந்தது அவன் குரல்.
“தூங்கவும் வேண்டாம். பேசவும் வேண்டாம்னா என்ன செய்யச்...” சட்டென்று வார்த்தைகள் நிற்க, ஆச்சர்யமாய் கணவன்புறம் பார்வை போகவும், அவளின் கையை விலக்கி எழுந்தவன் புருவம் உயர்த்திக் கண்ணடிக்க, வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தாள் அந்நட்சத்திரப் பெண்ணவள்.
நாணம் வந்து தலை தாழ்த்த வெட்கம் அவளைப் பாடாய்ப்படுத்த, அவளின் முகம் நிமிர்த்தி தன்னைப் பார்க்க வைத்து நெற்றியில் இதழ் பதித்தான்.
கணவன் காட்டிய காதல் நிஜமா? என பார்த்திருக்க அவனின் கண்களில் கண்ட காதலையும் தாண்டிய ஏதோ ஒன்றால் பார்வையைத் தழைத்தாள். என்ன சொன்னாலும் அவனின் ஒரே நாளின் மாற்றம் லேசாக உறுத்தவும் செய்ய, “தூ...தூங்கலாமா?” என்றாள் வராத குரலை வரவழைத்து.
அக்குரலின் ஓசை கேளாதவனோ, “என்ன சொன்ன?” எனக் கேட்க.
“தூங்கலாம் சொன்னேன்” என்றாள் தெளிவாகவே.
“அவ்வளவுதானா?”
அந்த ஏக்கம் நிறைந்த குரலில் உருகத் தோன்றாமல், “இங்க எதுவும் வேண்டாம்” என்றாள்.
“ஏன்?” வேகமாக வந்தது அவனின் குரல்.
“எதாவது கேமரா வச்சிருந்தா?”
“கேமராவா? ஏன் நதி அந்தளவு யோசிக்கிற? எல்லாம் செக்கிங் பண்ணின இடம்தான்மா.”
“ம்கூம்... நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை.”
“நதி நிஜமாவே இதான் காரணமா? இல்ல வேற எதாவது...”
“சேச்சே... இதான்ங்க காரணம். நா...நாம நம்ம வீட்ல போயி, சா..சாரி” என்றாள்.
“உன்னை நம்புறேன். மத்தபடி எதையாவது குழப்பிட்டு இருந்தேனா, அது நம்ம வாழ்க்கைக்கு நல்லதில்லை” என்றான் அரிச்சந்திரன்.
சட்டென்று நிமிர்ந்து கணவன் முகம் பார்த்ததும், அவள் அருகில் அமர்ந்து தோள் சாய்த்தபடி, “இதுக்காக பிரிஞ்சிருவோம்னு அர்த்தத்துல சொல்ல வரல. நம்ம வாழ்க்கையை ஏன் கண்டதையும் நினைச்சி வாழாம போகணும்னுதான். நாம கணவன் மனைவியா சேர்ந்து வாழலாம். காலப்போக்கில் எதுவும் நம்ம நினைவில் இருக்காது. நமக்குன்னு குழந்தைங்க. அவங்க படிப்பு. நம்மளோட ரொமான்ஸ்னு, வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்வோம். நான் சொல்றது சரிதான? ஏற்கனவே சொன்னது தான். அன்புதான் காதல்னா நான் உன்னைக் காதலிக்கிறேன் நதி.” மென்மையான குரலில் சொல்லி அவள் முகம் காண, அமர்ந்த நிலையிலேயே உறங்கிப் போயிருந்தாள்.
“டேய் அர்ஸ்! அந்தளவுக்கா ப்ளேடு போட்டுட்ட? ஹ்ம்... இந்தப்புள்ள என்னைக்கு மனசு மாறி...” என்று புலம்பி அவளை சரியாகப் படுக்கவைத்து, தன்னிரு கன்னத்தையும் கைகளால் தாங்கியபடி உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். “ஹ்ம்... உண்மையை சொல்லியிருக்கலாமோ! டூ லேட்டுடா அர்ஸ் பையா” என்று மனைவி அருகில் படுத்து இடுப்பில் கைபோட, போட்ட வேகத்தில் அவன் கையைத் தள்ளிவிட்டு அவள் நகர்ந்து தாராளமாகப் படுத்துக்கொண்டாள்.
‘தூங்கலையோ!’ என்று பார்க்க கண்விழிகள் அசையவேயில்லை. “இவ்வளவு தூக்கத்திலும் உஷாராதான்டி இருக்க.”
நல்ல தூக்கத்தில் இருந்தாள், கணவனின் தூக்கம் கெடுத்த நட்சத்திரப் பெண்ணவள்!
மறுநாள் காலை மண்டபத்திலிருந்து சீக்கிரமே மாப்பிள்ளை வீடு செல்ல, தன்னை ஆராய்ச்சியாய் பார்த்த நாத்தனாரிடம், என்னவென்று பார்வையால் வினவினாள் நட்சத்திரா.
“இல்ல இந்த வெட்கம், நாணம் புதுப்பெண்களுக்கு உள்ளதுன்னு சொல்வாங்களே. உன்கிட்ட அப்படி எந்த அறிகுறியும் தெரியலையே? ஒய் நட்டுமா?”
“ஆ சீன் இக்கட லேது அம்மாயி. போடி போய் வேற வேலையிருந்தா பாரு” என்று விரட்டினாள்.
“நதி நிஜமாவே இல்லையா? ஏன்? நான்தான் உன் லைஃப்ல மத்தவங்களை யோசிக்காத சொன்னேன்ல” என வருத்தத்துடன் சொல்ல,
“முதல் நாள் மட்டும்தான் நைட் இருக்கா? ஏன் இன்னைக்கு இல்ல. எனக்கு அங்க பிடிக்கல மயிலு. நம்ம வீடு இருக்கும்போது அங்கெல்லாம் சரிவராது. ஒரு மாதிரி அன்ஈஸி ஃபீலிங் கொடி.” புரிந்துகொள் என்பதாய் சொன்னாள்.
“முன்னாடி சொல்லியிருக்கலாமே நதி? வேற ஏற்பாடு பண்ணிருப்பாங்களே?” என்றாள்.
“இதென்ன ப்ளான் பண்ணி, ரெண்டு குடும்பமும் பேசி முடிச்ச கல்யாணமா? நான் இன்ஸ்டண்ட் பொண்ணுதானடா. தெரிஞ்சிருந்தா வேண்டாம்னு சொல்லியிருக்க மாட்டேனா? என் வாழ்க்கையை நான் பார்த்துக்குறேன். இப்ப உடனடியா உனக்கு மாப்பிள்ளை பார்க்கணும்” எனவும்,
“ஆத்தாடி! வச்சியே ஆத்தா ஆப்பு. இதுக்கு நான் சரிப்படமாட்டேன். இனி உன்கிட்ட எதாவது கேட்டா என்னன்னு கேளு” என்று நகர்ந்தவள், சில நிமிடங்களில் தோழியிடமே தஞ்சமடைந்து, “நட்டுமா! நேத்து மண்டபத்திலிருந்து உன் தங்கையைக் கடத்தினாங்க சரி. நீ எங்க போன? உன்னை எவ்வளவு நேரம் தேடினோம் தெரியுமா?” என கேட்டாள்.
“அதைச் சொன்னா நீ சிரிப்ப.”
“சிரிக்கல சொல்ல” என்று சிரித்தாள்.
“பார்த்தியா சிரிக்கிற” என்று சிணுங்கி, “நேத்து உன் அண்ணன்கிட்ட இருந்து போன் வந்ததும் ரூம் விட்டு வெளியே வந்து பேசிட்டு, திரும்பவும் ரூமிற்கு போறப்ப, அந்த இரண்டு லேடீஸ் என்னைப் பார்த்ததும் அதிர்ச்சியாகிட்டாங்க. நாங்க கொஞ்சம் ஒரே மாதிரி தெரிவோம்ல. அதனால வந்த அதிர்ச்சி நினைக்கிறேன். எங்க ரூம்ல இருந்து ஃபாத்திமான்னு சொல்லி, என்னை சமாளிச்சி பாப்புவைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. அவங்க போனதும் அங்க ஒரு குட்டி அறை இருக்கே, அங்க இன்ஸ்கர்ட் ரொம்ப டைட்டா இருந்ததால அட்ஜஸ்ட் பண்றதுக்காகப் போனேன்.”
“அப்ப அவங்க உன்னை எதுவும் செய்யலையா? அப்ப எங்க போன?” என்றாள் புரியாது.
“அ...அந்த ரூம் வாசல்ல பார்க்க லுக்கா ஒரு கர்சீப் இருந்தது. யாரோடதுன்னு தெரியாததால ஓரம் போட்டுரலாம்னு எடுத்து கதவைப்பூட்டி, செல்ஃப்ல தூக்கிப்போடும் போது முகத்துல விழுந்திருச்சி. அதை எடுத்து கீழ போடுறதுக்குள்ள நான் கீழ விழுந்துட்டேன்டி. கல்யாணப் பொண்ணைக் காணோம்னு நீங்க கூப்பிட்டது எல்லாம் எனக்குக் கேட்டுச்சி. ஆனா, எழுந்துக்க முடியல” என்றாள் பாவமாக.
“ஹா...ஹா... நட்டுமா நட்டுமா. என்ன சொல்லு, உன் கல்யாணம் செம ட்விஸ்டோட நடந்திருக்கு. நாங்க தேடி நீ கிடைக்காம, நீயா தெளிஞ்சி வெளில வந்த பாரு சான்ஸ்லெஸ்” என்றாள் சிரிப்பை விடாது.
“சிரிக்காதடி பிசாசு. அதுல க்ளோரோபார்ம் இருக்கும்னு நான் கனவா கண்டேன்.”
“ஆனாலும், செம்ம என்ஜாய்மெண்ட் நதிமா. சந்திரனும், நட்சத்திரமுமா நீங்க சேர்ந்ததால, உன் வாழ்க்கை எப்பவும் ப்ரைட்டா இருக்கும்” என்று மனதார வாழ்த்தினாள்.
மதியம் மூன்று மணியளவில் அந்தக் குடும்ப நல நிதிமன்றத்தில், சித்தார்த் குடும்பமும், வெண்மதி குடும்பமும் இருக்க, அவர்களுடன் அரிச்சந்திரன், மின்னலுடன், நந்தகுமாரும் நின்றிருந்தார்.