• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
27

அறைக்குள் வந்தவளை ஆசையாகத் தழுவிய கண்கள் கையில் பால் செம்பைத் தேட, இல்லை என்றதும் “ஆமா பால் எங்க?” என்றான்.

“பாலா? ஏன் பசிக்குதா? போய் எடுத்துட்டு வரவா?” என கேட்டபடி அவனை நெருங்கினாள்.

“ஏய் அதெல்லாம் வேண்டாம். இல்...ல ஃபர்ஸ்ட் நைட்னா தந்து விடுவாங்களேன்னு கேட்டேன்” என நிறுத்தி நிதானமாகச் சொல்ல,

“அவங்க தந்தாங்க. நான்தான் ஒரு மாதிரி இருக்குன்னு வேண்டாம் சொல்லிட்டேன். இது வீடு கிடையாதுன்றது ஞாபகம் இருக்கட்டும்” என்றாள்.

“புரியுது. ஆமா என்னைப் பார்த்தா பயமாயில்லையா?”

“ஏன் பயப்படணும்? பகல்ல மனுஷனாவும், இரவில் டிராகுலாவாகவும் மாறுகிற மனிதனா என்ன? எங்க உங்க பல்லைக் காட்டுங்க?” என சிரிக்காமல் கேட்டாள்.

“நீ நல்லா வருவமா. ஒரு பேச்சுக்குச் சொன்னா என்னை டிராகுலாவாவே மாத்திட்ட. உட்காரலாம் நதி. ரிசப்ஷன்ல நின்னு நின்னு கால் ரொம்ப வலிக்குது” என்றான் முகம் சுருக்கி.

“ஹான்! இதெல்லாம் நான் சொல்ல வேண்டிய டயலாக்.”

“ஏன் ஆண்களுக்குக் கால் வலிக்காதா?”

“வலிக்கும். ஆனா, வலிக்காது” என பாவனையாகச் சொல்ல, அவள் தலையில் வலிக்காது கொட்டி “என்கிட்ட எதாவது கேட்கணுமா?” என்றான்.

“ம்... இப்போதைக்கு எதுவும் இல்லை. நாளைப்பின்ன தோணினா கேட்கிறேன். ஏன் உங்களுக்கு எதாவது கேட்கணுமா?”

“என்னென்னவோ...” என ஆரம்பித்தவன், அவளின் பார்வையில், “எதுவுமே கிடையாது” என்று அவள் இடது கை விரல்களைத் தன் வலது கை விரல்களோடு கோர்க்க, விரல்களின் பின்னலினால் ஏற்பட்ட ஜில்லிப்பு உடல் முழுவதும் பரவ, கண்மூடி கணவனின் தோள்சாய்ந்த நிமிடம், மனசெல்லாம் நிர்மலமான ஒரு அமைதி. தங்களை விட்டுப்போன வாழ்க்கை கைகளுக்குள் வந்த பரவசம் இருவருக்குள்ளும்.

அதை மௌனமாக அனுபவிக்க, சில நிமிட அமைதிக்குப் பின், “தூங்கலாமா?” என்றாள்.

“அதுக்குள்ளயா?”

“அப்ப எதாவது பேசுங்க?” என்றவள் குரல் இறங்கியே வந்தது.

“பேசணுமா? நதி...” என கிறக்கமாக வந்தது அவன் குரல்.

“தூங்கவும் வேண்டாம். பேசவும் வேண்டாம்னா என்ன செய்யச்...” சட்டென்று வார்த்தைகள் நிற்க, ஆச்சர்யமாய் கணவன்புறம் பார்வை போகவும், அவளின் கையை விலக்கி எழுந்தவன் புருவம் உயர்த்திக் கண்ணடிக்க, வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தாள் அந்நட்சத்திரப் பெண்ணவள்.

நாணம் வந்து தலை தாழ்த்த வெட்கம் அவளைப் பாடாய்ப்படுத்த, அவளின் முகம் நிமிர்த்தி தன்னைப் பார்க்க வைத்து நெற்றியில் இதழ் பதித்தான்.

கணவன் காட்டிய காதல் நிஜமா? என பார்த்திருக்க அவனின் கண்களில் கண்ட காதலையும் தாண்டிய ஏதோ ஒன்றால் பார்வையைத் தழைத்தாள். என்ன சொன்னாலும் அவனின் ஒரே நாளின் மாற்றம் லேசாக உறுத்தவும் செய்ய, “தூ...தூங்கலாமா?” என்றாள் வராத குரலை வரவழைத்து.

அக்குரலின் ஓசை கேளாதவனோ, “என்ன சொன்ன?” எனக் கேட்க.

“தூங்கலாம் சொன்னேன்” என்றாள் தெளிவாகவே.

“அவ்வளவுதானா?”

அந்த ஏக்கம் நிறைந்த குரலில் உருகத் தோன்றாமல், “இங்க எதுவும் வேண்டாம்” என்றாள்.

“ஏன்?” வேகமாக வந்தது அவனின் குரல்.

“எதாவது கேமரா வச்சிருந்தா?”

“கேமராவா? ஏன் நதி அந்தளவு யோசிக்கிற? எல்லாம் செக்கிங் பண்ணின இடம்தான்மா.”

“ம்கூம்... நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை.”

“நதி நிஜமாவே இதான் காரணமா? இல்ல வேற எதாவது...”

“சேச்சே... இதான்ங்க காரணம். நா...நாம நம்ம வீட்ல போயி, சா..சாரி” என்றாள்.

“உன்னை நம்புறேன். மத்தபடி எதையாவது குழப்பிட்டு இருந்தேனா, அது நம்ம வாழ்க்கைக்கு நல்லதில்லை” என்றான் அரிச்சந்திரன்.

சட்டென்று நிமிர்ந்து கணவன் முகம் பார்த்ததும், அவள் அருகில் அமர்ந்து தோள் சாய்த்தபடி, “இதுக்காக பிரிஞ்சிருவோம்னு அர்த்தத்துல சொல்ல வரல. நம்ம வாழ்க்கையை ஏன் கண்டதையும் நினைச்சி வாழாம போகணும்னுதான். நாம கணவன் மனைவியா சேர்ந்து வாழலாம். காலப்போக்கில் எதுவும் நம்ம நினைவில் இருக்காது. நமக்குன்னு குழந்தைங்க. அவங்க படிப்பு. நம்மளோட ரொமான்ஸ்னு, வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்வோம். நான் சொல்றது சரிதான? ஏற்கனவே சொன்னது தான். அன்புதான் காதல்னா நான் உன்னைக் காதலிக்கிறேன் நதி.” மென்மையான குரலில் சொல்லி அவள் முகம் காண, அமர்ந்த நிலையிலேயே உறங்கிப் போயிருந்தாள்.

“டேய் அர்ஸ்! அந்தளவுக்கா ப்ளேடு போட்டுட்ட? ஹ்ம்... இந்தப்புள்ள என்னைக்கு மனசு மாறி...” என்று புலம்பி அவளை சரியாகப் படுக்கவைத்து, தன்னிரு கன்னத்தையும் கைகளால் தாங்கியபடி உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். “ஹ்ம்... உண்மையை சொல்லியிருக்கலாமோ! டூ லேட்டுடா அர்ஸ் பையா” என்று மனைவி அருகில் படுத்து இடுப்பில் கைபோட, போட்ட வேகத்தில் அவன் கையைத் தள்ளிவிட்டு அவள் நகர்ந்து தாராளமாகப் படுத்துக்கொண்டாள்.

‘தூங்கலையோ!’ என்று பார்க்க கண்விழிகள் அசையவேயில்லை. “இவ்வளவு தூக்கத்திலும் உஷாராதான்டி இருக்க.”

நல்ல தூக்கத்தில் இருந்தாள், கணவனின் தூக்கம் கெடுத்த நட்சத்திரப் பெண்ணவள்!

மறுநாள் காலை மண்டபத்திலிருந்து சீக்கிரமே மாப்பிள்ளை வீடு செல்ல, தன்னை ஆராய்ச்சியாய் பார்த்த நாத்தனாரிடம், என்னவென்று பார்வையால் வினவினாள் நட்சத்திரா.

“இல்ல இந்த வெட்கம், நாணம் புதுப்பெண்களுக்கு உள்ளதுன்னு சொல்வாங்களே. உன்கிட்ட அப்படி எந்த அறிகுறியும் தெரியலையே? ஒய் நட்டுமா?”

“ஆ சீன் இக்கட லேது அம்மாயி. போடி போய் வேற வேலையிருந்தா பாரு” என்று விரட்டினாள்.

“நதி நிஜமாவே இல்லையா? ஏன்? நான்தான் உன் லைஃப்ல மத்தவங்களை யோசிக்காத சொன்னேன்ல” என வருத்தத்துடன் சொல்ல,

“முதல் நாள் மட்டும்தான் நைட் இருக்கா? ஏன் இன்னைக்கு இல்ல. எனக்கு அங்க பிடிக்கல மயிலு. நம்ம வீடு இருக்கும்போது அங்கெல்லாம் சரிவராது. ஒரு மாதிரி அன்ஈஸி ஃபீலிங் கொடி.” புரிந்துகொள் என்பதாய் சொன்னாள்.

“முன்னாடி சொல்லியிருக்கலாமே நதி? வேற ஏற்பாடு பண்ணிருப்பாங்களே?” என்றாள்.

“இதென்ன ப்ளான் பண்ணி, ரெண்டு குடும்பமும் பேசி முடிச்ச கல்யாணமா? நான் இன்ஸ்டண்ட் பொண்ணுதானடா. தெரிஞ்சிருந்தா வேண்டாம்னு சொல்லியிருக்க மாட்டேனா? என் வாழ்க்கையை நான் பார்த்துக்குறேன். இப்ப உடனடியா உனக்கு மாப்பிள்ளை பார்க்கணும்” எனவும்,

“ஆத்தாடி! வச்சியே ஆத்தா ஆப்பு. இதுக்கு நான் சரிப்படமாட்டேன். இனி உன்கிட்ட எதாவது கேட்டா என்னன்னு கேளு” என்று நகர்ந்தவள், சில நிமிடங்களில் தோழியிடமே தஞ்சமடைந்து, “நட்டுமா! நேத்து மண்டபத்திலிருந்து உன் தங்கையைக் கடத்தினாங்க சரி. நீ எங்க போன? உன்னை எவ்வளவு நேரம் தேடினோம் தெரியுமா?” என கேட்டாள்.

“அதைச் சொன்னா நீ சிரிப்ப.”

“சிரிக்கல சொல்ல” என்று சிரித்தாள்.

“பார்த்தியா சிரிக்கிற” என்று சிணுங்கி, “நேத்து உன் அண்ணன்கிட்ட இருந்து போன் வந்ததும் ரூம் விட்டு வெளியே வந்து பேசிட்டு, திரும்பவும் ரூமிற்கு போறப்ப, அந்த இரண்டு லேடீஸ் என்னைப் பார்த்ததும் அதிர்ச்சியாகிட்டாங்க. நாங்க கொஞ்சம் ஒரே மாதிரி தெரிவோம்ல. அதனால வந்த அதிர்ச்சி நினைக்கிறேன். எங்க ரூம்ல இருந்து ஃபாத்திமான்னு சொல்லி, என்னை சமாளிச்சி பாப்புவைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. அவங்க போனதும் அங்க ஒரு குட்டி அறை இருக்கே, அங்க இன்ஸ்கர்ட் ரொம்ப டைட்டா இருந்ததால அட்ஜஸ்ட் பண்றதுக்காகப் போனேன்.”

“அப்ப அவங்க உன்னை எதுவும் செய்யலையா? அப்ப எங்க போன?” என்றாள் புரியாது.

“அ...அந்த ரூம் வாசல்ல பார்க்க லுக்கா ஒரு கர்சீப் இருந்தது. யாரோடதுன்னு தெரியாததால ஓரம் போட்டுரலாம்னு எடுத்து கதவைப்பூட்டி, செல்ஃப்ல தூக்கிப்போடும் போது முகத்துல விழுந்திருச்சி. அதை எடுத்து கீழ போடுறதுக்குள்ள நான் கீழ விழுந்துட்டேன்டி. கல்யாணப் பொண்ணைக் காணோம்னு நீங்க கூப்பிட்டது எல்லாம் எனக்குக் கேட்டுச்சி. ஆனா, எழுந்துக்க முடியல” என்றாள் பாவமாக.

“ஹா...ஹா... நட்டுமா நட்டுமா. என்ன சொல்லு, உன் கல்யாணம் செம ட்விஸ்டோட நடந்திருக்கு. நாங்க தேடி நீ கிடைக்காம, நீயா தெளிஞ்சி வெளில வந்த பாரு சான்ஸ்லெஸ்” என்றாள் சிரிப்பை விடாது.

“சிரிக்காதடி பிசாசு. அதுல க்ளோரோபார்ம் இருக்கும்னு நான் கனவா கண்டேன்.”

“ஆனாலும், செம்ம என்ஜாய்மெண்ட் நதிமா. சந்திரனும், நட்சத்திரமுமா நீங்க சேர்ந்ததால, உன் வாழ்க்கை எப்பவும் ப்ரைட்டா இருக்கும்” என்று மனதார வாழ்த்தினாள்.

மதியம் மூன்று மணியளவில் அந்தக் குடும்ப நல நிதிமன்றத்தில், சித்தார்த் குடும்பமும், வெண்மதி குடும்பமும் இருக்க, அவர்களுடன் அரிச்சந்திரன், மின்னலுடன், நந்தகுமாரும் நின்றிருந்தார்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
காலையில் சொத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அரிச்சந்திரன் சித்தார்த் சார்பாக தாக்கல் செய்த பத்திரங்கள் அனைத்தும் நீதிபதி பார்வைக்கு வைத்தான்.

ஊர்ப்பெரியவர்கள் பஞ்சாயத்தின் முடிவை, கோர்ட் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளுதல் தவறென்று வெண்மதி சார்பில் வாதாடிய சுஜய், “சொத்துக்கு இரு வாரிசுகள் இருக்கும் பொழுது கொள்ளி வைத்த ஒரே காரணத்திற்காக பாதி சொத்தைக் கொடுப்பதென்பது என்ன மாதிரியான தீர்ப்பு? அப்படியானால் உழைத்து சம்பாதிப்பது ஒருவர். அதை நோகாமல் உட்கார்ந்து சாப்பிடுபவர் இன்னொருவரா? என் கட்சிக்காரர் தனக்காக நியாயம் கேட்டு கோர்ட் படி ஏறியிருக்கிறார். அவருக்கு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் நீதிபதி அவர்களே!” என்று வாதத்தை முடித்து தன் இருக்கையில் போய் அமர்ந்தான்.

அடுத்து எழுந்த அரிச்சந்திரனோ, “நல்ல வாதம் சுஜய் சார். எதிர்க்கட்சி வக்கீல் சொன்ன எல்லாமே சரிதான். கொள்ளி வச்சதுக்காக பாதி சொத்து கொடுக்குறது எல்லாம் கொஞ்சம் அதிகம்தான். இருந்தாலும் தர்றேன்னு ஒத்துக்கிட்டதால, பெரியவங்களை சாட்சியா வச்சிதான ப்ராபர்டி சேல் பண்ணும்போது பாதி அமௌண்ட் தந்திருக்காங்க.”

“நல்லா கேளுங்க நீதிபதி அவர்களே! என் கட்சிக்காரர் போய் சொத்து தந்தால்தான் கொள்ளி வைப்பேன்னு யார்கிட்டேயும் சொல்லலை. பெரியவங்க சொன்னதை சரின்னு ஆமோதிச்சிருக்கார். கோர்ட்டுக்கு சாட்சி தேவைன்னா, இதோ அந்த கூட்டத்தில் சம்பவம் நடந்தப்ப உள்ள பெரியவங்க சிலர் வந்திருக்காங்க” என்றதும் நீதிபதி உத்தரவு கொடுக்க சித்தார்த் சார்பாக மூவர் வந்து சாட்சி சொன்னார்கள்.

“வெறும் வாய்ப்பேச்சு கோர்ட்டுக்கு செல்லாது யுவர் ஹானர். எழத்துப்பூர்வமான உடன்படிக்கை அல்லது காணொளி எதாவது இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்” என்று சுஜய் தன் வாதத்தை வைக்க,

“அப்பொழுது வாக்கு மட்டுமே சாட்சியாக உள்ளது. அப்படி இருக்கையில் எழுத்து ஏனென்று விட்டுருக்கலாம். இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் என் கட்சிக்காரர் எழுதி வாங்கியிருப்பார்” என்று தன் வாதமாக வைத்தான் அரிச்சந்திரன்.

“வாக்கு மட்டுமே சாட்சியாக எடுக்க, அது ஒன்றும் பழங்காலம் அல்ல. செல்போன்கள் கைகளில் புழங்க ஆரம்பித்த காலம். அந்நேரத்தில் இதெல்லாம் ரொம்ப சாதாரணமான ஒன்று” என்று சுஜய் வாதிட,

“எந்தக் காலமாக இருப்பினும் நம்பிக்கை என்றும் மாறாதது. அதற்காகத்தான் பெரியவர்கள் நேரடியாக சாட்சி சொல்ல வந்திருக்கிறார்கள்” என்று அரிச்சந்திரன் பேசினான்.

இருவரும் மாறி மாறி வாதிட்டதில் வழக்காடல்கள் நிற்காமல் செல்ல, மூளை சூடான நீதிபதியோ, வழக்கை மறுவாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

மதியம் இதோ குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குக்காக காத்திருக்கிறார்கள். அடுத்த வழக்கு இவர்களுடையது.

“என்ன மருமகளே இதெல்லாம் தேவையா? பொம்பளைப் புள்ள கோர்ட் படி மிதிக்கிறது நல்லாவா இருக்கு? பேசாம எல்லாத்தையும் வாபஸ் வாங்கிட்டு, ஊருக்குப் போகலாம் வா” என்று வெண்மதியை செல்லம்மா அழைத்தார்.

“ஹையோ மாமியாரே! என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. அரம்பிச்ச எதையும் பாதியில விட்டுட்டுப் போனா நம்ம பரம்பரை கௌரவம் என்னாவது?” சற்று நக்கலாகவே பதிலளித்தாள் வெண்மதி.

“அதைத்தான் மருமகளே சொல்றேன். நம்ம பரம்பரை கௌரவத்தை இந்த கோர்ட்ல வந்து கூறு போடணுமா என்ன? சொத்து முழுக்க அனுபவிக்கப் போறது நீயும் உன் புருஷனும்தான? பின்ன இதெல்லாம் எதுக்கு?”

“அடப் போங்க மாமியாரே! மாமனார் பெயர்ல உள்ளது எப்படி எங்களோடதாகும்? என் பெயர்ல இருந்தா அது என் உரிமைப்பட்டது.”

“நீ லேசுப்பட்ட ஆள் கிடையாது மருமகளே!” என்றார் செல்லம்மா.

“அதேதான் மாமியாரே சொல்றேன். நீங்களே எங்க பணத்தைக் கொடுத்துட்டா, இந்த கோர்ட் படி ஏற வேண்டிய அவசியம் இருக்காது. கௌரவமும் பாதிக்காது. நீங்க என்ன சொல்றீங்க?” என்றாள் புருவம் உயர்த்தி.

“மருமகளே நீ ரொம்பக் குழம்பிப் போயிருக்கன்னு தெரியுது. இது குடும்ப நல நீதிமன்றம். இங்க டைவர்ஸ் கேட்கலாம். இல்ல புருஷனோட சேர்த்து வைக்கக் கேட்கலாம். சொத்தெல்லாம் கேட்க முடியாதுமா” என நக்கலாகவே பதிலளித்தார்.

“அப்ப விடுங்க மாமியாரே! நான் டைவர்ஸே கேட்டுக்குறேன். இப்போதைக்கு இதுதான் முக்கியம்” என்றாள்.

இருவரும் வழக்காடிக் கொண்டிருக்க மற்றவர்கள் வேடிக்கை பார்க்கலானார்கள்.

திருமணம் முடிந்ததிலிருந்து ஓடுகிறது மாமியார் மருமகளின் மரண கலாய்! திருமணத்தையே ஒத்துக்கொள்ளாதவள் அத்தை உறவு முறை இருந்தும் ‘மாமியாரே’ என்றழைத்துப் பேசுவதும், செல்லம்மாவும் அவளுக்குக் குறையா நக்கலுடன் ‘மருமகளே’ என்றழைத்துப் பேசுவதும் அவர்களுக்கு எப்படியோ, பார்ப்பவர்களுக்கு படுசுவாரசியமாகிப் போனது.

ஏன் அதுவரை, அப்படி ஒரு மருமகள் இருப்பதை கண்டு கொள்ளாதிருந்த செல்லம்மாவிற்குமே, தன்னைப் போலிருக்கும் அவள் மேல் தனிப்பாசம் வந்ததென்றும் சொல்லலாம்.

நட்சத்திரா, வெண்மதி இருவரையும் முதல்முறையாகப் பார்க்கும் யாருமே சற்று குழம்பிதான் போவார்கள். அப்படிதான் சாத்தூரில் வெண்மதியைப் பார்த்த அரிச்சந்திரன் அசந்து நின்றான். அதன் பின்னேயும் உடனே கேட்க வழியில்லாது, டீ பிரேக்கிற்காக எடுத்த பத்து நிமிடத்தில் அவர்கள் குடும்ப விஷயமும் கேட்டு, நட்சத்திரா பற்றிச் சொல்லியதில், நட்சத்திராவிற்கு திலகவதி குடும்பம் இரத்த உறவென்று தெரிந்தது தன் தனிப்பட்ட கைபேசி எண்ணைக் கொடுத்ததோடு மட்டுமல்லாது, நட்சத்திராவைத் திருமணம் செய்யப்போவதாக கூடுதல் தகவலையும் கொடுத்தான்.

தங்கள் வீட்டிற்கு வந்ததால்தான் அவளின் வாழ்க்கைப் பாதை மாறியது என்பதால், நட்சத்திராவின் திருமணச் செய்தி அவர்களைப் பொருத்தவரை சந்தோஷத்தின் உச்சக்கட்டம்.

வெண்மதியிடம் பேசப்பேச ‘சித்தார்த்திற்கு அவள்தான் சரியான பொருத்தம்’ என்ற எண்ணம் அரிச்சந்திரனுக்கு எழுந்தது. ஏற்கனவே நந்தகுமார், யசோதா, சித்தார்த் குடும்பம் அறியாமல், தங்கள் பள்ளியின் பொறுப்பாளர் மூலம் திலகவதியுடன் தொடர்பி இருப்பது இருவர் பிள்ளைகளுக்குமே தெரியாது. அரிச்சந்திரனுக்கு அதிலும் சந்தேகம் வர, அதையும் ஆள் வைத்து விசாரித்தும்விட்டான்.

தம்பிக்குப் பின் சொத்துகளைப் பாதுகாக்க, தன் தங்கை கணவன் மூலமாக பள்ளிக்கு தெரிந்த பொறுப்பாளர் ஒருவரை நியமித்து, அவர் மூலமே அனைத்தையும் சரிவர பார்த்துக் கொண்டார்கள். நந்தகுமார் நேரில் வந்தேயாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் யாரும் அறியாமல் வந்து செல்வார் என்ற தகவல் கிடைத்தது அரிச்சந்திரனுக்கு.

திலகவதியை திருமணத்திற்கு அழைத்தது நந்தகுமார் என்றால், முகிலை அழைத்தது அரிச்சந்திரன். தனக்கான டீ பிரேக்கில் முகிலிடமும் பேசியிருந்தான்.

டீ பிரேக்! என்பது அரிச்சந்திரன் தனது கட்சிக்காரனுக்காக அல்லாது, தனியாக அவர்களிடம் பேசும் நேரம். அந்த நேரம் மட்டும் தன் கட்சிக்காரனுக்கு சொந்தமில்லை.

சித்தார்த் மூலம் திருமண நேரம் பிரச்சனை வருமென்று தெரியும். ஏற்கனவே அவனின் நடவடிக்கையைக் கவனிக்க, தன் ஜுனியர் குரூப்பைப் பயன்படுத்த, அதில் சித்தார்த்தின் பதிவுத் திருமணம் என்ற செய்தி வந்தது. அதில் தொடங்கிய தேடல்தான் தன்னுடைய திருமணத்தை அறிந்தது. மண்டபத்தில் பெண் மாறியது வரை, தனக்குத் தெரியும் என்பது அவனறிந்த உண்மை.

மண்டபத்தில் சித்தார்த்தின் வரவை அறிந்து, நட்சத்திராவிற்கு அழைத்து வெளியே வரவழைத்து, சில நிமிடங்களில் அவளை அனுப்பும் போதுதான் அப்பெண்கள் வெண்மதியைக் கடத்தியது. சித்தார்த்.. நட்சத்திராவை சின்ன வயதில் அருகில் பார்த்திருந்தாலும், தற்போது அவளை நெருக்கமாகப் பார்த்திராததால் மணப்பெண்ணை சுலபமாக மாற்றிவிட்டான் அரிச்சந்திரன்.

பதிவாளர் அலுவலகத்திலும் ஆள் வைத்து மணமகள் பெயரை வெண்மதியாக மாற்றச் சொல்லி அதற்கான ஏற்பாடுகளும் செய்து முடித்துவிட, வெண்மதியை சித்தார்த் அடையாளம் தெரிந்துவிடக் கூடாதென்பது மட்டுமே அவனின் பிரார்த்தனை.

தவறு செய்யும் குற்றவுணர்வு இருந்தாலும், தன் கொள்கையாம் நல்லது நடப்பதற்கு சில தவறுகள் செய்வது தவறில்லை என்று அதை மறைத்து மறந்தும்விட்டான்.

அவர்களின் திருமணத்தைத் தொடர்ந்து பிரச்சனைகள் வருமென்று தெரிந்தே, தான் இல்லாமல் தான் நடத்தி வைத்த திருமணம் தோற்றுப்போக விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான்.

திருமணத்திற்கு மறுநாள் நதி தலைக்கு ஊற்றிவிட, ஒரு வகையில் அவளுக்கு நிம்மதியே!

(அந்த மூன்று நாள்கள். நதிக்கு ஐந்து நாள்கள். சிலருக்கு ஆறு, ஏழு நாள்கள் வரை நீடிக்கும்.)

மின்னலின், “யாரோ இன்னைக்கு இரவு வரும்னு சொன்னாங்க? அது என்னாச்சி?” என்ற கேலிக்கு நதியின் அசட்டுச் சிரிப்பே பதிலாய்க் கிடைத்தது வேறு கதை. அதைக் காரணம் காண்பித்தே கணவன் கண்களில் சிக்காமல் சுற்றியதும் தனிக்கதை.

வீட்டிற்கு வந்த ரங்கசாமி, செல்லம்மா இருவரையும் பழையவற்றை மறந்து நந்தகுமார் வரவேற்க, முகம் சுளித்தபடி தான் உபயோகிக்கும் அறையில் சென்று மறைந்து கொண்டாள் வெண்மதி.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த செல்லம்மா, தானே மருமகளைத் தேடி வந்து அவள் சொல்லாமலே அருகில் அமர்ந்து, “அப்புறம் மருமகளே! என்ன இங்க வந்த உட்கார்ந்துட்ட? ஹாலுக்கு வருவன்னு பார்த்தா வர்ற மாதிரியில்ல. அதான் ஈகோவை தூக்கிப் போட்டுட்டு உன்னைத்தேடி வந்துட்டேன்” என்று பேச்சுக்கொடுத்தார்.

“அப்படியா மாமியாரே!” என்று மருமகள் ஆரம்பித்த வார்த்தையில் ஸ்தம்பித்து அமர்ந்திருக்க, அப்பொழுதே முடிவு செய்தார் தனக்கேத்த தன் வீட்டு மருமகள் வெண்மதிதான். நட்சத்திரா அல்ல என்று.

“வெளியில் வந்தா பூச்சாண்டி பிடிச்சிட்டுப் போயிருவான்னு, கனவுல சித்தர் வந்து சொல்லிட்டுப் போனார் மாமியாரே! அதான் நமக்கெதுக்குடா வம்புன்னு உள்ளயே உட்கார்ந்துட்டேன்” என்றாள் வெண்மதி.

சத்தமாகச் சிரித்த செல்லம்மா, “அதே சித்தர்தான் மருமகளே என்கிட்டேயும் வந்து, உன் மருமகளைப் பூச்சாண்டி பிடிச்சிட்டுப் போறதுக்குள்ள, நீ உன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போன்னு சொன்னார்” என்றதும் வெண்மதி வாயடைத்துப் போய் அவரைப் பார்க்க, “என்னோட அனுபவம் உன்னோட வயசு மருமகளே. இந்த கோவத்தையெல்லாம் ஓரம் கட்டிட்டு வீடு வரப்பாரு” என்றார்.

“முடியாது சொன்னா என்ன செய்வீங்க மாமியாரே?”

“முடியாதுன்றது உன் மாமியார் வாழ்க்கையில் கிடையாது மருமகளே. அதென்னவோ நினைச்சதைச் சாதிச்சே பழகிட்டேன். அதனாலதான் பையன் நினைச்சதும் நடந்தே ஆகணும்னு பிடிவாதம். இப்ப நீ என் பையனோட வாழ்ந்தாகணும்னும் பிடிவாதம்.”

“அதுக்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன் மாமியாரே.”

“நீ சரிப்படலன்னா யார் சரிப்படுவா மருமகளே” என்று அவளையே மடக்கினார் செல்லம்மா.

மறுவீட்டுச் சடங்குகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, நட்சத்திரா தனக்குத் தேவையென்று எதையோ கேட்க, அதை எடுத்துப்போக வந்திருந்த மின்னல்கோடி இவர்கள் சம்பாஷணையைக் கண்ணிமைக்காமல் பார்க்க,

“என்ன கொடி இங்க நின்னுட்டிருக்க?” தன் முதுகைத் தட்டியவரைத் திரும்பிப் பார்த்து, “யசோம்மா இந்தப் பொண்ணு டைவர்ஸ் கேட்டுட்டு, இத்தனை மாமியார் போடுறா?” என்றாள் ஆச்சர்யமாக.

“அவள் பதிலுக்குப் பதில் பேசணும்னு வாயாடுறதால உணர்ந்து சொல்லியிருக்கமாட்டா. நாம உணர வச்சிரலாமா?” என்று கண்சிமிட்டினார்.

“அப்ப என்னோட முதல் கேஸ் சக்சஸ்னு சொல்லுங்க?”

“ஹா...ஹா என் மருமகன்தான் பாவம். தெரிஞ்சே கேஸை எடுத்திருக்கார்.”

“அண்ணா சமாளிச்சிப்பான் யசோம்மா. தீர்ப்புக்கு முன்ன கேஸை வாபஸ் வாங்கிட்டா, வெற்றி தோல்வின்னு இல்லாமலே போயிரும். முதல் கேஸ் தோத்ததுன்னும் இருக்காது.”

ஏனோ மாமியார் மருமகளின் வாக்குவாதங்கள், வீட்டினரால் வித்தியாசமாகவும், ஆச்சர்யமாகவும் பார்க்கப்பட்டு பேசப்பட்டது.

வெண்மதி சித்தார்த்தைக் கண்டால் முறைத்துச் சென்றாளே தவிர, அவள் கண்களில் வெறுப்பென்று எதுவுமில்லை. ‘வெறுப்பில்லா கோவம் தண்ணீர் ஊற்றாத தனல்போல். தண்ணீர் ஊற்றினால் முழுவதும் அணைந்துவிடும்.’
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top