• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
29

காலை எழுந்தது முதல் நாத்தனாரின் கண்ணில் படாமல் சுற்றிய நட்சத்திரா, சாப்பிடும் வேளையில் மாட்டிக்கொண்டாள். தோழியின் கண் பாராது அங்குமிங்கும் அலைபாய்ந்த கண்கள் சொன்ன செய்தியை மின்னல் உணர்ந்தாளோ!

காலை உணவு முடித்ததும் கன்னத்தில் முத்தமிட்டு, “வெட்கம்! நாணம்! எனக்குப் புரியுதுடா. ஃப்ரீயா இரு” என்று நகர்ந்தவள் திரும்பி, “நட்டுமா அண்ணன் சொன்னானா தெரியாது. நான் சொல்றேன் ஐ லவ் யூ” என்றாள்.

“சீ... போ” என்று வெட்கம்கொள்ள,

“என்ன ரெண்டு பேரும் கொஞ்சிட்டிருக்கீங்க? ஏய் வாயாடி நீ ஆஃபீஸ் போகலையா?” வழக்கம்போல் தங்கையின் தலையில் தட்டினான்.

“அம்மா பாருங்கம்மா தலையில் அடிக்கிறான்” என்று புகார் ஆரம்பிக்க,

“அடடடடா... கொஞ்ச நாளா உங்க சண்டை ஓய்ஞ்சிருந்தது. திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்களா? எதுக்குடா அடிச்ச?”

“வேலைக்குப் போகலையா கேட்டேன்மா. லைட்டா தொட்டதைப் பெருசு பண்றா.”

“அம்மா சும்மா சொல்றான்மா. பாருங்க தலையில கட்டி வந்திருச்சி” என்று இல்லாததை இருப்பதாகக் காட்டினாள் மின்னல் பெண்.

“ஏய் போடி சும்மா சின்னதை பெருசாக்கிட்டு. உங்களுக்கு நேரம் போகலைன்னா நாங்கதான் கிடைச்சோமா” என்று சகுந்தலா நகர,

சத்தம் கேட்டு வந்த ரவிச்சந்திரனைக் கண்டதும் “அப்பா” என்று அழுதபடி சென்றாள்.

“என்னடா பாப்பு?” என்றார் உருகலாக.

“ஆமா. பெரிய பாப்பு. அவ சீன் போடுறான்னு தெரிஞ்சே அப்பா உருகுறாங்க. உலகமகா பாசம்டா சாமிகளா.” அரிச்சந்திரன் மௌனமாக முணுமுணுத்தான்.

அதைப் பார்த்திருந்த நட்சத்திராவிற்கோ சிரிப்பு பொத்துக்கொண்டு வர, அதை அடக்கியபடி வேடிக்கை பார்த்தாள்.

அவளருகில் வந்தமர்ந்த பாக்கியவதி “இதுங்க ரெண்டுக்கும் வேற வேலையே இல்லமா. உன் புருஷன் செய்றதெல்லாம் செஞ்சிட்டு கமுக்கமா அம்மா பின்னால ஒழிஞ்சிப்பான். இந்தச் சின்னவளுக்கு எப்பப்பாரு அப்பா அப்பாதான்.”

“வீடு எப்பவும் ஜாலியா இருக்கும் பாட்டி. தனியா பிறந்து வளர்ற எங்களை மாதிரி ஆளுங்களுக்கு, இந்த உரிமைச் சண்டை அதில் இருக்கிற பாசம்லாம் பார்க்கிறது உலக அதிசயம் மாதிரி. கொடி விட்ல நடக்கிறதைச் சொல்லும்போது இப்படி கூடவே இருந்து பார்க்கணும் தோணும். இடையில் நிறைய மனசுக்குப் பிடிக்காதது நடந்தப்ப, இதெல்லாம் இனிமேல் எனக்குக் கிடையாது நினைச்சேன். காட்ஸ் க்ரேட்ல பாட்டி.”

அவளின் தலையை வருடியபடி “நிஜம்தான்மா. உனக்குக் கடவுள்னா அது உன் மாமாதான். அவன்தான் உன்னை எப்படியாவது நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும்னு ஆசைப்பட்டது” என்றார்.

“மாமாவா? எனக்குப் புரியல பாட்டி?” ‘தங்களுக்கு நடந்தது திடீர் கல்யாணம்தானே’ என்ற எண்ணத்தில் கேட்டாள்.

“என்ன புரியல? உனக்கும் அ...”

“க்ரேன்மா ஊர்ல இருந்து போன் வந்திருக்கு. எதோ கோவில் வரி விஷயமா பேசணுமாம்” என்று இடையிட்டான் அரிச்சந்திரன்.

“இதோ பேசிட்டு வர்றேன்மா” என்று பாட்டி எழுந்து சென்றதும் தன்னருகில் வந்தமர்ந்த கணவனிடம், “ஏன் பாட்டியை அனுப்பிட்டீங்க? பேசிட்டிருந்தேன் தெரியுமா?”

“எதுமா? ஏழாவது தலைமுறையைப் பற்றியா? அதுக்கான வேலையில இறங்கியாச்சின்னு சொல்லிட்டியா?” என்று சிரிக்க,

“அச்சோ இப்படிலாம் பேசாதீங்க” என்று சிணுங்கினாள்.

“அப்ப என்ன பேசலாம்? ஏழ்...” அடுத்த எழுத்தை உச்சரிக்கவிடாமல் அவன் வாய்மூட, தொலைபேசியை எடுத்து ஹலோ சொல்லி ஏமாந்து வந்து, பேரனை முறைத்த பாட்டியை நட்சத்திரா அறியவில்லை.

பேரனை முறைத்தாலும் நட்சத்திராவின் வெட்கமும், உரிமையான தொடுகையும், பேரனின் குறும்புப் புன்னகையுடன் கூடிய முகமலர்தலும் அழகாகவே இருந்தது அப்பெரியவர் கண்களுக்கு.

“அப்பா கேளுங்கப்பா.”

மகளின் குரலில் அறையில் இருந்து வெளியே வந்த சகுந்தலா, “இன்னுமா உங்க பஞ்சாயத்து போகுது. போங்க போய் வேலைக்குக் கிளம்புங்க” என்று விரட்டினார்.

“உன் ஃப்ரண்ட் கல்யாணமானதும் அப்பா கூட டெல்லி வர்றேன்னு சொன்னியேடா. எப்பக் கிளம்புற?”

“கொஞ்ச நாள் போகட்டும்பா. சித்தார்த், வெண்மதி டைவர்ஸ் கேஸ் முடிஞ்சதும் உங்களோட வர்றேன்.”

“நிக்காத கேஸ்கு நீ ஏன் இப்ப முட்டு கொடுக்கிற? அதான் அண்ணன் தங்கச்சி ப்ளான் பண்ணிட்டீங்கள்ல? நீங்கள்லாம் தனி கேஸ் ஏன் எடுக்கிறீங்க? இப்படியே ஒவ்வொரு கேஸா வீட்லயே முடிச்சிருங்க. சிறப்பாயிருக்கும்” என்றார் நக்கலாக.

“அப்பா” என்று சிணுங்க,

“மாப்பிள்ளை பார்க்கவாடா?” என்றார்.

“கொஞ்சம் நாள் போகட்டும்பா.”

“கொஞ்சம் நாள்னா, நீ கிழவியான பிறகா?” என்று பாக்கியவதி கேலியாகக் கேட்டார்.

“இந்த வயசிலும் நீங்க அழகுதான் க்ரேன்மா. உங்க பேத்தி நானும் உங்க வயதில் அழகாய்த்தான் இருப்பேன். அப்பவே கல்யாணம் பண்ணிக்கிறேன்.”

“வாய்ல போடு. என்னைக் கிழவின்னு சொல்றியா?”

“கிழவியைக் கிழவின்னு சொல்லாம குமரின்னா சொல்வாங்க. போங்க க்ரான்மா. உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை” என்று கொஞ்சலாகப் பேச,

“ஏய் மின்னல் பெரியவங்களை எப்படிப் பேசணும்னு ஒரு வரைமுறை இல்லையா? பாட்டிகிட்ட மன்னிப்புக் கேளு” என்றார் சகுந்தலா.

“மன்னிப்பா? க்ரேன்மா கேட்டே ஆகணுமா?”

“அஹான் ஜி” என்ற பாட்டியின் கேலிக்குரலில் பல்லைக்கடித்து, “அஹான்கு வந்த சோதனையா இது? ஹ்ம்...” என அலுத்து சலித்து, “சார்ரி” என்றாள்.

“மின்னல் வா போகலாம்” என்று தங்கையை அழைக்கையில், நட்சத்திராவிற்கு சஞ்சயிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்துப் பேச அவளின் அத்தை அவர்களை விருந்துக்கு அழைத்தார்.

“அத்தை லைன்ல இருங்க. நான் பாட்டிகிட்டக் கொடுக்கிறேன். நீங்க அவங்ககிட்ட பேசுங்க” என்று பாட்டியிடம் நீட்டினாள்.

“பாருங்கப்பா மெய்ன் பாய்ண்டை ஃப்ரண்ட் பிடிக்கிறா.”

மகளின் கேலியை தலைதட்டி அடக்கிய ரவிச்சந்திரன், “என்னன்னு கேளுங்கம்மா” என்று தாயை பேசச்சொல்ல, பேசி முடித்து கைபேசியை வைத்ததும் “விருந்துக்கு அனுப்பச் சொல்றாங்க ரவி. நானும் சரின்னு சொல்லிட்டேன்” என்றார்.

“சரிதான்மா. அவங்க போயிட்டு வரட்டும்” என்றார் ரவிச்சந்திரன்.

கைபேசியை வைத்ததில் இருந்து கணவனின் யோசனை முகம் பார்த்தவள் ஏனென்று கேட்பதற்கு முன், “என்னண்ணா யோசனைலாம் பலமாயிருக்கு?” என்றாள் மின்னல்.

“இல்லமா. கேஸ் விஷயமா சென்னை அவுட்டோர் ஏரியா வரை போக வேண்டியிருக்கு. போயிட்டு வர டைமாச்சினா, விருந்துக்கு எப்படின்னு யோசிக்கிறேன்.”

“நாளைக்கு வர்றோம்னு சொல்லிரலாம்ங்க.”

“சேச்சே... வர்றேன்னு சொல்லிட்டு போகலன்னா, அதெல்லாம் தப்பு நதி. நீ கிளம்பு உன்னை அங்க விட்டுட்டுப் போறேன். மதியம் ஒன்றிலிருந்து இரண்டுக்குள்ள வர்றமாதிரி பார்க்கிறேன்.” என்றான்.

“அவன் சொல்றதும் சரிதான்மா. வேலைக்கு வேலையுமாச்சி. விருந்துக்கு விருந்துமாச்சிது” என்றார் ரவிச்சந்திரன்.

“அவங்க தப்பா எடுத்துக்க மாட்டாங்களாப்பா?”

“இல்ல தப்பா எடுத்துக்கமாட்டாங்க. அத்தையும், மாமாவும் ரொம்ப நல்லவங்க. என்னோட ஆசைக்காக கடைசி நேரத்துல கல்யாணத்தை நிறத்தணும்னா, அதுக்கு பெரிய மனசு வேணும். அதுலயே தெரியுதே அவங்க குணம்.”

“நதி! எப்படி?” என்றான் அதிர்வாய். ‘எல்லாவற்றையும் தெரிந்து கொண்டாளா?’ மனம் படபடத்தது.

“சஞ்சித் அத்தான், என்னோட மனசு தெரிஞ்சி, கல்யாணத்தை நிறுத்தினதா அப்பா சொன்னாங்க. சஞ்சித் சொன்னதால அத்தையும், மாமாவும் சரின்னு சொல்லிருக்காங்க. அப்படிப்பட்டவங்க சூழ்நிலை புரிஞ்சிக்கமாட்டாங்களா? சொந்த ஊருக்குப் போக முடியாம அப்பா திண்டாடினப்ப, முழு ஆதரவும் கொடுத்து எல்லா பொறுப்பையும் தன்னோடதா எடுத்துக்கிட்டது அத்தையும் மாமாவும்தான். ஊர்ல எதாவது ஸ்கூல் இல்ல சொத்துப் பிரச்சனைன்னா, அப்பா சார்புல அடிக்கடி ஊருக்குப் போயி சரி பண்ணிட்டும் வருவாங்க. எனக்குதான் தப்புப் பண்ணிட்டேனோ ஃபீல் இருக்கு” என்றாள் வருத்தமாய்.

எதையும் அறியவில்லை என்ற மன நிம்மதி கொண்டாலும் “எதைத் தப்புன்னு சொல்ற நதி? நம்ம கல்யாணத்தையா?” என்றான் அவள் முகத்தைப் பார்த்தபடி.

“ப்ச்... இல்லங்க. நம்ம கல்யாணத்தை எப்படிச் சொல்வேன். நீங்க வேண்டாம் சொன்னதும் அம்மா சஞ்சித் அத்தானை பேசினாங்கள்ல? அப்ப நான் சம்மதிச்சிருக்கக்கூடாது. அத்தான் என்னைப் புரிஞ்சி வேண்டாம் சொல்லியிருக்காங்கன்னா, நானே என்னை ஏன் உணரலைன்னு ஒரு கில்டி ஃபீல்” என்றாள்.

“நம்மை மீறி நடக்கிறதுக்கு நாம பொறுப்பாக முடியாது. அம்மாவுக்காக சம்மதிச்சதை எப்படி தப்பு சொல்ல முடியும். அன்று எழுதின கடவுள் அழிச்சா எழுதப்போறான். அரிக்கு நீதான்றது கடவுள் போட்ட முடிச்சு. பழசு எதையும் நினைச்சிக் கலங்காதே” என்று மருமகளின் தோள்தட்டினார் சகுந்தலா.

ஏதோ ஒரு வகையில் சஞ்சித் அவர்கள் நினைவில் அழியாது இடம் பிடித்திருந்தான்.

நட்சத்திராவை சஞ்சித்தின் வீட்டில் விட்டுவிட்டு வெளியே செல்ல வேண்டிய காரணம் சொல்லிக் கிளம்பியவன், மதியம் இரண்டு மணிக்கெல்லாம் திரும்பி வந்தான். மதியம் விருந்து முடிந்து சஞ்சய், ஆர்த்தியுடன் நேரம் செலவழித்து, இரவு உணவையும் அங்கேயே முடித்து வீட்டிற்குக் கிளம்ப வண்டியை நோக்கிப் போகையில், ஆர்த்தியின் அழைப்பு நட்சத்திராவைத் தேக்கி, யோசிக்க வைத்தது.

“நதி... நதி... ஏய் நதீ... ரா அத்தை கூப்பிடுறாங்க” என்று ஆர்த்தி அழைக்க,

“ப்ச்... இவங்களுக்கு வேற வேலையில்லை. பெயரை ஒழுங்கா கூப்பிடத் தெரியலை. இதனால பட்டது நான்தான” என்று அரிச்சந்திரன் முனக,

கணவனின் முனகலைக் கேள்வியாய் ஏறிட்டவளுக்குத் திரும்பவும் ஆர்த்தி, “நதி... நதீ... ராவே” என்று இன்னும் சத்தமாகவே அழைத்ததை உணர்ந்த நிமிடம், மின்னலாய் எழுந்தது அவ்வெண்ணம். ‘அப்படியும் இருக்குமோ! சந்துருவின் முனகலுக்கான அர்த்தம் என்ன? அடிக்கடி என்னைப் பார்க்கும் பார்வையின் அர்த்தம் என்ன?’ கேள்விகள் பிறந்தது அவளுள்.

வீட்டிற்கு வந்து ஆடை மாற்றியதும் சந்தேகத்தைக் கேட்க வாய்திறந்த மனைவியைப் பேசவிடாமல் வாயடைத்து, இரவு நேரத்தை தனதாக்கிக் கொண்டான் அரிச்சந்திரன்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
இரவில் மறந்தது கணவன் அலுவலகம் சென்றதும் நினைவு வர, இன்று எப்படியும் கேட்டுவிட வேண்டுமென்ற முடிவில் இருந்தாள். பத்துமணி போல் வந்தது அந்த கல்யாண ஆல்பமும் சிடியும். மாமியார் மற்றும் பாட்டியுடன் ஆல்பம் பார்க்க, இல்லாத இயற்கைக் காட்சிகள உருவாக்கப்பட்டு ஒவ்வொரு புகைப்படமும் நேர்த்தியாக அழகாக எடுக்கப்பட்டிருந்தது.

புகைப்படம் முடிந்து காணொளியைப் போடுகையில், “போனடிக்குது போல நதி. நீ பார்த்துட்டு இரு. நான் யார்னு கேட்டுட்டு வர்றேன்” என்று சகுந்தலா நகர,

“சரிங்கத்தை” என்று பாட்டியுடன் உட்கார தொலைக்காட்சியின் திரை ஒளிர்ந்தது. அரிச்சந்திரன் வெட்ஸ் நட்சத்திரா பெயர்கள் அனிமேஷனில் விதவிதமாக வலம் வர ‘வாழ்த்துகளுடன் வரவேற்கிறோம்’ என்று தயாரித்தவர்களின் பெயர் வந்து காட்சியானது மண்டபம். ஆர்வத்தில் அமர்ந்திருந்தவளை சகுந்தலா அழைக்க, திரும்பிய சமயம் இரவு எடுத்த வெளியில் இருந்த ப்ளக்ஸ் போர்ட் ஒளிபரப்பானது.

“என்னங்கத்தை?”

“அரி போன் பண்ணினான்மா. உன் செல் ரூம்லயா இருக்கு?”

“ஆமாங்க அத்தை. இப்ப யாரும் போன் பண்ணமாட்டாங்கன்னு வெளிய எடுத்துட்டு வரல. என்ன சொன்னாங்க?”

“சித்தார்த் வெண்மதியைப் பார்க்கப் போகணுமாம். உன்னையும் கூட்டிட்டுப் போகணும் சொல்றான்.”

“கூப்பிட வர்றாங்களா அத்தை?”

“இல்லமா. நீதான் போகப்போற. இப்ப கார் வரும். வந்ததும் நேரே ஆஃபீஸ் போ. அங்க இருந்து கூட்டிட்டுப் போறானாம்.”

“இதோ போய் ரெடியாகுறேன் அத்தை” என்று எழுந்தவளுக்கு ஆல்பத்தில் கண்ணில்பட்ட சில உறவுகளை ஊன்றிக் கவனிக்காதது நினைவில் வந்தது.

‘எப்படி அத்தனை பேர் வந்திருந்தாங்க? ஸ்கூல் பிரின்சிபலில் இருந்து உறவினர்கள் வரை, சந்துரு கல்யாணத்தில் எப்படி? நைட் சொல்லி இருந்தாலுமே இத்தனை பேர் வர வாய்ப்பிருக்கா? ஏன் நதீரா குடும்பம் சம்பந்தப்பட்ட யாரும் வரலை.? கல்யாணம் நின்றது தெரியாதவங்க வந்திருப்பாங்களே. ஏன் அப்படிக்கூட யாரும் வரல?’

யோசனையடன் வெளியே வருகையில் டிவியில் ஓடிய கல்யாண சிடியில் ஏதோ காட்சிகள் ஓட, அவள் பார்வையில் ஒரு காட்சி பட்டு நன்றாகப் பார்ப்பதற்குள் மறைந்திருந்தது. மாலை வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்றெண்ணி அலுவலகம் வந்த நட்சத்திரா, அங்கு அமர்ந்திருந்தவளைக் கண்டு அதிர்ந்துதான் போனாளோ!

“ஃபாத்திமா மேடம்! அர்ஸ் சாரைப் பார்க்க அவர் ஒய்ஃப் வந்திருக்காங்க” என்ற செக்யூரிட்டியின் குரலில் சட்டென்று அதிர்ந்து நிமிர்ந்த ஃபாத்திமா நட்சத்திராவைக் கண்ட நேரம், “நதி வந்துட்டியா?” என்றவாறு ஃபாத்திமாவைக் கண்டவன், “ஹேய் ஃபாத்தி! நீ எப்ப வந்...” அவளின் அதிர்ந்த முகம் கண்ட பின்னே தன் தவறு புரிய வார்த்தைகள் அந்தரத்தில் நின்றது.

ஃபாத்திமா லீவ் என்றதால்தான் மனைவியை தைரியமாக வரச்சொன்னான். இப்போதோ கையும் களவுமாகப் பிடிபட்டதும் சூழ்நிலை மாற்ற எண்ணி, “நதி வா போகலாம். வெண்மதிகிட்ட நாம வர்றதா இன்பார்ம் பண்ணிட்டேன்” என்று மனைவியவளின் கைபிடித்தான்.

“அப்ப இவங்க நதீரா கிடையாது. ஃபாத்திமா! அப்ப நதீரா யாரு?” வெடித்து வந்தன வார்த்தைகள். குரலில் இருந்த அழுத்தம் இடம் கருதி சத்தத்தில் இல்லை. “ஏன் அந்த நாடகம்? இதில் என் கதாப்பாத்திரம் என்ன?” என்று கேட்டாள்.

“சா...சாரி ஃபாத்தி. நதி நீ வா. எதுவாயிருந்தாலும் வீட்ல போயி பேசிக்கலாம். சித்தார்த் நமக்காகக் காத்திருப்பார்.”

“என்னை ஏன் ஏமாத்துனீங்க? எதுக்கு இந்தத் திடீர்க் கல்யாணம்? இதுல மத்தவங்களுக்கு என்ன பங்கு?” என்று அவ்விடம் விட்டு நகராமல் நின்றாள்.

“நதி இது ஆபீஸ். என்னோட கௌரவம் உனக்கு முக்கியமில்லையா? நான் சொன்னதைத்தான் ஃபாத்தி செய்தாங்க. இதுல அவங்கமேல எந்தத் தப்பும் இல்லை” என்றான் நிதானமாக.

கணவனின் கௌரவம் அவளுக்கும் முக்கியமாகிற்றே! அவனின் கையை உதறி வேகமாக வெளியில் வந்து காரில் அமர, “சரியான நேரத்திற்குதான் வந்திருக்கேன் போல” என்று மின்னல் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

“ஹேய் நட்டுமா! ஒய் ஆர் யூ சோகம் பேபி? என் அண்ணன் உன்னைச் சித்ரவதை செய்றானா? சொல்லு ப்ளுக்ராஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணிடுவோம்.”

அதுவரை அழுகை முகத்துடன் முகம் இறுக இருந்தவள் “என்னது ப்ளுக்ராஸா! நான் அனிமலாடி? லூசு. நீயெல்லாம் என்ன வக்கீல்?”

“இப்போதைக்கு பட்டிங் அட்வகேட்.” அண்ணியவளின் முறைப்பை உணர்ந்து “என்ன லுக்கு? வளரப்போகும் வக்கீல். முதல் கேஸ்மா. இதனோட வெற்றியில்தான் மற்றதெல்லாம். சரி ஏன் ஒருமாதிரி இருக்க?”

“நான் இங்க நதீராவைப் பார்க்க வந்தேன்” என்றாள் கணவனை முறைத்து.

“வாவ்! இன்ட்ரெஸ்டிங். பார்த்துப் பேசுனியா? அவங்களுக்கு கல்யாணமாகிருச்சா? என்ன செய்யறாங்க?” என படபடவென பேசும் தங்கையைக் கொல்லும் பார்வை பார்த்தான் அரிச்சந்திரன்.

“ம்... அவங்க நதீரா இல்லையாம் ஃபாத்திமாவாம்” என்றாள் தொண்டை அடைக்க.

“இரண்டு பெயர் இருக்கலாமே நட்டுமா.”

“ஆமாமா கண்டிப்பா இருக்கணுமே. அதுல பாரு கொடி, அவங்க இன்னொரு பெயர் செய்யது அலி ஃபாத்திமாவாம்” என்றாள் கணவனை இன்னுமே முறைத்து.

“நீ நம்ம ஃபாத்தியை சொல்றியா? அவங்களா நதீரான்னு உன்கிட்ட சொன்னாங்க?” ஏதுமறியாதவளாய் கேட்கும் தங்கையை முறைக்க, ‘சீ... பே...’ என்பதாய் அதைத் தட்டிவிட்டு நட்சத்திராவைப் பார்த்தாள்.

“ஆமா அவங்கதான் தன்னை நதீரான்னு சொன்னாங்க. அவங்கதான் எங்க ரெண்டு பேரையும் தப்பா புரிஞ்சிக்கிட்டு திட்டிட்டுப் போனாங்க. நதீரா இவங்க இல்லன்னா, ஏன் என்கிட்ட அப்படிப் பேசணும்?” அதேநேரம் ஆர்த்தியின் அழைப்பு வேறு மனதை அலைக்கழித்தது.

“நதி நைட் பேசிக்கலாம்” என்றான் கெஞ்சலாக.

“நைட்டா? நேத்து நைட் கூட பேசணும்னு நினைச்சேன். நீங்க என்னை எங்க பேசவிட்டீங்க?” சொல்லி முடித்த பின்னே அதன் அர்த்தம் உணர்ந்து செய்வதறியாது விழிக்க, அண்ணன் தங்கை இருவரும் வந்த சிரிப்பை அடக்கினர்.

“நான் எதையும் கேட்கலப்பா” என்று காதை மூடிக்கொண்டாள் மின்னல். நட்சத்திராவின் பேச்சு அத்துடன் அடங்க, ஒருவரையொருவர் சீண்டியபடியே சித்தார்த் வீடு வந்தார்கள்.

அவர்கள் தளத்தின் அழைப்பு மணியை அழுத்தப்போகும் பொழுது கேட்டது அவ்வாசகம். “இருவத்து நாலு மணிநேரமும் இதுதான் ஓடுது போல. மனுஷன் ஒரு புள்ளைக்கு ஐ லவ் யூ சொல்லியே கொடுமைப்படுத்துறாரு. இதுக்கே அவர்மேல ஒரு தனி கேஸ் போடணும்” என்றாள் மின்னல்கொடி.

“ஏய்! சும்மா இரு கொடி. முதல்ல ஹாலிங் பெல்லை அடி. அதுல எவ்வளவு நேரம் கையை வச்சிட்டிருப்ப?” எனும்போது “அடிச்ச கையை உடைச்சிருவேன்” என்ற வெண்மதியின் குரலில், “ஆத்தாடி நான் இல்ல” என்று வேகமாக அதிலிருந்து கையை எடுக்க, அரிச்சந்திரன், நட்சத்திரா அதைக்கண்டு சிரித்தார்கள்.

“ஒண்ணு ஐ லவ் யூ சொல்ற. இல்ல கண்ணடிக்கிற. அந்த அடிக்கிற கண்ணை நோண்டிக் கையில் கொடுத்திருவேன்.”

அதற்கும் “ஐ லவ் யூ” என்றுரைத்த சித்தார்த்தின் குரல் கேட்டது.

“இதோ பார், அடிக்கடி சொல்லி என் மனசுல பதிய வைக்கலாம்னு பார்க்குறியா? நான் எப்பவும் ஐ லவ் யூ சொல்லமாட்டேன்” என்றாள் கோவத்தில்.

“தேங்க்ஸ்” என்று பொறுமையாக வந்தது சித்தார்த்தின் வார்த்தைகள்.

“தேங்க்ஸா?”

“ஆமா தேங்க்ஸ்தான். ஐ லவ் யூ சொல்லமாட்டேன்னு சொல்லி, இப்ப சொல்லிட்டியே. இப்போதைக்கு இந்த ஐ லவ் யூ போதும்” என்றான் புன்னகையுடன்.

“என்னை டார்ச்சர் பண்ற நீ.”

“லவ் டார்ச்சர்னு சேர்த்துச் சொல்லு புள்ள.”

“என்னது புள்ளயா? சே... நீ திருந்தவே மாட்ட போ.”

“நீ திருத்தினா திருந்த நான் ரெடி புள்ள” என்றான் விடாமல்.

போதும் என்று நினைத்தார்களோ! மின்னல் அழைப்பு மணியை அழுத்திவிட்டாள்..

அங்குதான் நின்றிருந்ததால் சித்தார்த் கதவைத் திறக்க, வந்தவர்களைக் கண்டு முகம் மலர வரவேற்று, “சாரி. நீங்க வர்றேன்னு சொன்னதை மறந்துட்டோம்” என்று வெண்மதியைப் பார்க்க, தானும் தன் பங்கிற்கு அவர்களை வரவேற்று குடிக்க ஜுஸ் கொடுத்து, மதிய உணவிற்கு அவர்களைத் தங்கள் வீட்டிலேயே சாப்பிட வற்புறுத்திய வெண்மதி, அவர்கள் சம்மதித்ததும் வீட்டில் இல்லாத சில பொருட்களை சித்தார்த்திடம் எப்படி வாங்கிவரச் சொல்வதென்று தெரியாமல் நின்றாள்.

“எதாவது வேணுமா?” தானாகவே அவளின் தவிப்பைக் கண்டு அடுப்படி வந்தான்.

சில நொடித் தயக்கத்தை உதறி தேவையானதைச் சொல்லி அனுப்பினாள். வந்திருந்தவர்களிடம் வெளியே சென்று வருவதாகச் சொல்லி, சிறிது நேரத்தில் வேகமாக வீடு வந்த சித்தார்த், மனைவியிடம் வாங்கியவைகளைக் கொடுக்க, அவள் சமையலை ஆரம்பிக்கவும் அங்கு இருந்தபடி சின்னச்சின்ன உதவிகளைச் செய்தான்.

“அரி அண்ணா, இவ்வளவு நேரம் பண்ணின வாக்குவாதம் என்ன? இப்பப்பாரு... இதுக்காகவே நாம அடிக்கடி வரணும் போலிருக்கே” என்றாள் மின்னல் பெண்.

“ஜட்ஜ் இவங்க மனசு புரிஞ்சிதான் தீர்ப்பு சொல்லியிருக்காங்க கொடி.”

“அவங்க டெய்லி எத்தனை கேஸ் பார்க்கிறாங்க. தேறும் தேறாதுன்னு பேசின கொஞ்ச நேரத்துல கணிச்சிருவாங்க. இப்படி ஒரு ட்ரிக் இருக்குன்னு தெரிஞ்சிதான் நம்மளை அப்பப்ப பார்த்துட்டு வரச் சொல்லியிருப்பாங்க போல. ஹ்ம்... அனுபவசாலிங்க சொல்றது எவ்வளவு உண்மை” என்றான் அரிச்சந்திரன்.

சற்று நேரத்திற்கெல்லாம் உணவு தயாராக, கதைகள் பேசியபடி ஐவரும் உண்டு முடித்த சில நிமிடங்களுக்கெல்லாம் கேரம் போர்டு அவர்களிடம் படாதபாடு பட்டது.

மூன்று மணியளவில் வீட்டிற்குக் கிளம்புகையில், “சித்தார்த் உங்கமேல ஒரு கொலை முயற்சி கேஸ் இருக்கே. எப்ப அதை பைனல் பண்ணலாம்?” என்று அரிச்சந்திரன் சித்தார்த்திடம் நேரடியாகக் கேட்க, மற்றவர்கள் அதிர்ந்து விழித்தார்கள்.

“எ...என்ன சொல்றீங்க? யாரை?” என்றாள் நட்சத்திரா.

“உன்னோட சஞ்சித் அத்தானைத்தான்” என்றதும் சித்தார்த்தினுள் வியர்க்க ஆரம்பிக்க, அனைவரின் சந்தேகப் பார்வையையும் எச்சில் விழுங்கப் பார்த்தான் சித்தார்த்.

“சொல்லுங்க சித்தார்த்? ஏன் சஞ்சித்தைக் கொன்னீங்க?” என்று நேராகப் பார்த்துக் கேட்டான் அரிச்சந்திரன்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top