• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் – 9

“உன்னை மாதிரி அறிவாளியா காதல் மன்னனா இருந்தா அவசியம் இல்லை. அப்படி இல்லாதவங்களுக்கு அவசியம்தானே?“

ஒரு துளி வெட்கத்தோடு “நமக்கு இந்தக் காதல் கத்தரிக்காயப் பற்றியெல்லாம் சுத்தமா தெரியாது மேடம். அம்மாவா பாத்து தாலி கட்ட சொன்னாங்க கட்டுனேன் அவ்வளவுதான்” என்றான் பிரேம்.

பிரேமைப் போலவே பல மனிதர்களைச் சந்திருந்ததால் மேடத்திற்கு அவன் பேச்சில் எந்த அதிர்ச்சியும் ஆச்சர்யமும் இல்லை. வீட்டை எதிர்த்துக் காதல் திருமணம் செய்து கொள்ளும் அதே இளைஞர்கள் இருக்கும் இதே நாட்டில், வீட்டில் சொல்கிறார்கள் என்கிற ஒரே காரணத்தினால் எந்தப் புரிதலும் இல்லாமல், வெறுப்பு விருப்பம்பற்றிய தெளிவு இல்லாமல் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை ஓட்டும் இளைஞர்களும் இருக்கிறார்கள். பிரேமும் அதில் ஒருவன்தான்.

ஒரு சில நிமிடங்கள் இருவரின் வாதமும் மென்மையான பாதையில் பயணித்தது. பேச்சு வார்த்தைக்கிடையில், “பிரேம் இன்னைக்கு நான் உங்கிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன். நீ அதை எனக்கு மறுக்காம செய்யனும். உன்னால் மட்டும்தான் இதை எனக்குச் செய்து கொடுக்க முடியும்” என்று மேடம் கூறினார்.

“இதைச் சொல்ல உங்களுக்கேன் தயக்கம்? நானும் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் உறவாகிவிட்டேன். அந்த உறவிற்கு எந்தப் பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை என்னிடம் கேளுங்கள். நான் செய்துதருகிறேன்.”

“இவ்வளவு குறைந்த நாட்களில் எனக்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்கிற அன்பு கிடைத்ததில் மகிழ்சி எனக்கு. ஆனால் இது எப்படி சாத்தியமானது என்று எனக்குத் தெரிந்துகொள்ள வேண்டுமே.”

“இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமே இல்லை மேடம். நீங்கள் யாரிடமும் இவ்வளவு விளக்கமாகப் பேசியதேயில்லை. சொல்லப்போனால் குறைந்தபட்சமாகக்கூட எப்போதாவதுதான் ஓரிரு வார்த்தைகள் பேசுவீர்கள். இப்பொழுது என்னைத் தேடிவந்து என்னுடன் சரிசமமாக அமர்ந்து உங்களுடைய வாழ்கை பற்றியெல்லாம் பகிர்வதில் இருக்கும் அதே பாசம்தான், உங்களுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற எண்ணத்தை உண்டாக்கியாது” என்றான் பிரேம். பிரேமின் வார்த்தைகள் மேடத்தின் விளித்திரையை பல முறை திறந்து மூடிப் பூரிப்படையச் செய்தது.

வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பிரேம், “என்ன செய்யனும்னு சொல்லுங்க செஞ்சர்லாம்“ என்றான்.

“பெருசா ஒன்னும் இல்லைப்பா. நீ என் கூட டின்னர் வரியா பிரேம்? தனியொரு ஆளாவே உக்காந்து சாப்பிட்டு சாப்பிட்டு சலிச்சுப் போச்சு. நேரத்தையும் உணவையும் யார் கூடையாவது பகிர்ந்துக்கனும்னு தோனுது. உனக்கு வேலை எதாவது இருந்தால் வேண்டாம். இல்லாத பட்சத்தில் நீ எனக்காக வரனும். அவ்வளவுதான்.”

“ச்சே இவ்வளவுதானா விஷயம்? நான்கூட என்னவோ பெரிய உதவியா இருக்குமோனு நெனச்சேன். நீங்க என்னடானா சாப்பிடக் கூப்பிடுறீங்க. வராம இருப்பேனா?”

“உனக்கு இப்போ நிறையா வேலை இருக்கும். நீ வியாபாரத்தப் பாரு. நைட் இங்க பக்கத்துல இருக்க ரெஸ்டரண்ட்டுக்கு சாப்பிட வந்துரு. சரியா?”

“கண்டிப்பா வரேன் மேடம்.”

“நான் இப்போ வீட்டுக்குப் போய்க் கொஞ்சம் ஓய்வெடுக்கிறேன்“ என்று சொல்லிவிட்டு எழுந்து நடந்து செல்லும் மேடத்தை பிரேம் ஒரு சிறு பிள்ளையின் துள்ளல் சந்தோஷத்தைப் பார்ப்பது போல நிம்மதியான புன்னகையோடு பார்த்தான்.

எப்போதும் இரவு எட்டு மணிவரை வியாபாரம் பார்ப்பவன் அன்று ஆறு மணிக்கே அனைத்தையும் எடுத்து ஒதுக்கி வைத்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றான். அன்று அவன் மனதிலிருந்த அன்பு இன்னும் அவனை அழகாக்கியது.

மேடம் சொன்ன உணவு விடுதி மிகவும் வசதியான உயர்தர இடம் என்பதால் அதற்கேற்ப உடையணிந்து வீட்டை விட்டுப் புறப்பட்டான். என்றும் இல்லாத கூத்தாய் பிரேமின் ஆடை அலங்காரம் எல்லாம் சற்றுத் தூக்கலாக இருப்பதைக் கவனித்த மனைவியும் அவனுடைய அம்மாவும் கேள்விக்குறியோடு பார்த்தார்கள்.

அவர்களுடைய பார்வையின் அர்த்தம் தெரிந்த பிரேம், “நான் நைட் வீட்டுக்கு வரக் கொஞ்சம் லேட் ஆகும். அப்புறம் எனக்குச் சாப்பாடு வைக்க வேண்டாம். நீங்கச் சாப்பிட்டு தூங்குங்க“ என்றான்.

சமையலறைப் புகையிலிருந்து பூவாய் நடந்து வந்த அம்மா, “அப்படி என்ன முக்கியமான வேலை? எங்க போற நீ?” என்று கேட்டாள்.

“மேடம் இன்னைக்கு நைட் சாப்பிட என்னைய கூப்பிட்டிருக்காங்க. நான் அங்க போறேன்.”

“யாரு அந்த டாக்டர் மேடமா?”

“ம்ம் அவங்களேதான்.”

அருகாமையில் நின்று பேசிக் கொண்டிருந்த அம்மா, பிரேமை நெருங்கி வந்து “உன்கிட்ட எத்தனை தடவ சொல்லியிருக்கேன் ரூபாவ எங்கையாவது வெளிய கூட்டிட்டுப் போன்னு? அப்போ எல்லாம் சொல்ப்பேச்சு கேக்காம இப்போ நீ மட்டும் தனியா போற? இன்னைக்குதான் நீயும் கொஞ்சம் வேலை அழுத்தம் இல்லாம உசுக்குன்னு இருக்க. அவளையும் கூடக் கூட்டிட்டுப் போயேன்?” என்று காதருகே கிசுகிசுத்தாள்.

“நானாம்மா அவங்கள எங்கையும் கூட்டிட்டுப் போக மாட்டேனு சொன்னேன்? அவங்கதான் எங்க கூப்பிட்டாலும் வர மாட்டேன்றாங்க. நீயும் பாத்துட்டுத்தான இருக்க அவங்க முன்ன மாதிரி இல்லாம இப்போதான் கொஞ்சம் தேறி வர்றாங்க. அவங்கள அவங்க போக்குலயே விட்டர்லாம்மா அதுதான் நல்லது.”

“வீட்டிலேயே இருந்தால் அவளுக்கு மனசு மாற வாய்ப்பு இல்லை. கொஞ்சமாவது அங்க இங்கனு போய்ட்டு வந்தாதான் நல்லா இருக்கும். அப்போதான் அவளும் கொஞ்சம் சந்தோஷமா இருப்பாள்.”

“அதுவும் சரிதான். எப்படி அவங்கள கூப்பிடுறதுனு ஒரு மாதிரி தயக்கமா இருக்கு.”

“சரி நீ இரு. நானே கூப்பிடுறேன்“ என்று அம்மா ரூபாவைக் கூப்பிடுவதற்கு முன்பாகவே, “அத்தை நான் எங்கையும் போகலை. எனக்கு இப்போவே ரொம்ப பசிக்குது. சாப்பிட்டுட்டுத் தூங்குறேன்“ என்று அவளிடமிருந்து பதில் வந்தது.

தாயும் மகனும் தலையைக் குனிந்தபடியே அவ்விடத்தைவிட்டு வெவ்வேறு பாதையில் நகர்ந்தனர். பிரேமிற்கு வீட்டிற்குப் போனாலே மனது கணமாகிவிடுகிறது. அதிலிருந்து தப்பிக்கத்தான் தன்னுடைய சிறு கிராமத்தில் தோட்டம் இருந்தாலும் அதையெல்லாம் விட்டு விட்டு இருபது கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ரயில் நிலையத்தில் சமோசா விற்கிறான். ஒரு சம்சாரி சமோசா விற்பதா? என்று ஊர் கேளிக்கைக்கு ஆளானாலும் தன் மனைவியின் நிம்மதியும் விருப்பமும்தான் பெரிதாகத் தெரிந்தது.

பிரேமிற்காவது அந்தச் சூழலிலிருந்து விடுபட வேலை என்கிற காரணம் இருந்தது. ஆனால் அவனுடைய அம்மாவிற்கு எந்தக் காரணமும் இல்லை. எப்பொழுதும் அடிவயிற்றில் நெருப்பைச் சுமப்பது போலவே வெந்து நொந்து போய்க்கொண்டிருக்கிறாள். பிரேமின் அம்மா மருமகளை மகளாய் நினைத்துக் கவனித்துக் கொள்வதையே தன் கடைசி காலத்தின் கடமையாக நினைக்கிறாள்.

பிரேமின் மனைவி தன் மாமியாரை தெய்வமாக நினைக்கிறாள். அவள் உயிரோடு நடமாடுவதற்கு காரணமாக இருக்கும் தன் மாமியாரை ஒருபோதும் காயப்படுத்திவிடக் கூடாது என்கிற ஒரே ஒரு நினைவைத் தவிர ரூபாவின் வாழ்க்கை முழுக்க வெறும் மாயையாகவே இருக்கிறது.
ஆக மொத்தம் மூன்றும் பேரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரேமின் அம்மா அந்த வீட்டிற்கு ஆணி வேராகவும் அவனுக்கும் அவன் மனைவிக்கும் பாலமாகவும் இருக்கிறாள்.

தான் வீட்டில் இல்லாத நேரம் தன் மனைவி அம்மாவிடமாவது பேசி இளைபாருவாள் என்று வீட்டை விட்டு வெளியேறினான். பெரும்பாலான நேரங்களில் வீட்டிலிருந்து வெளியேறுவது அவனுக்கும் அவன் மனைவிக்கும் நல்ல நிம்மதியான சூழலை ஏற்படுத்துகிறது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் சந்தோஷமாக வெளியேறினான்.

பல நாட்களாகவே பல நெருக்கடிகளில் மாட்டிக்கொண்டு சின்னாபின்னமான பிரேம் சற்று ஓய்வெடுக்க அந்த இரவு நேர உணவு வேளை அமைந்தது. அவனும் ஆனந்தமான பிரேமாய் மேடத்தைப் பார்க்கச் சென்றுகொண்டிருந்தான்.அவன் வருகைக்காகக் காத்திருந்த மேடம் அவனைக் கண்டதும், “வாப்பா பிரேம். அடையாளமே தெரியலை. ரொம்ப அழகா இருக்க“ என்று சொல்லி வரவேற்றார்.

இம்மாதிரியான அன்பையும் உபசரிப்பையும் இதுவரை அடையாளம் கண்டிராத பிரேமிற்கு அந்தப் புதுமை மிகப் பிடித்திருந்தது. அமைதியான அந்த முகத்தில் சிறு கோடு புன்னகை வரைந்தது.

பிரமாண்டமான கட்டமைப்பில் இருந்த அந்த இடத்தில் இவன் தன்னையே வேறொரு ஆளாக நினைத்து அப்போது தனக்குள்ளே தன்னை யாரெனக் கேட்டுப் பதிலும் சொல்லிக் கொண்டான். அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த மேடம், “உனக்குச் சாப்பிட என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

“என்ன வேண்டுமானாலும் கொண்டுவரச் சொல்லுங்கள். அது உங்களுடைய விருப்பம். எனக்கு இங்கு எதை எப்படிச் சாப்பிடுவதென்றே யோசிக்க முடியவில்லை.”

“சாப்பிடுவதென்ன யானைக் கொம்பா? என்ன வேண்டுமோ கொண்டுவரச் சொல்லி வசதியாக எப்படி முடியுமோ அப்படிச் சாப்பிட வேண்டியதுதான்.”

“இம்மாதிரியான இடங்களுக்கெல்லாம் வந்து அமர்ந்து சாப்பிட எனக்குத் தகுதி இருக்கிறதா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. இது முதல் தடவை என்பதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை.”

அவனுடைய பதற்றத்தைப் புரிந்துகொண்ட மேடம் அவனைத் தேற்றி இயல்பாக இருக்கச் செய்தார். “ஒன்றும் பிரச்சினை இல்லை பிரேம். நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் இந்த இடத்தையும் மறந்து விடு. உனக்குப் பிடித்தமான இடம் ஒன்றில் நீயும் நானும் இருப்பது போல நினைத்துக்கொள்.”

“சரிங்க மேடம்.”

“இங்குப் பெரும்பாலோனோர் நாமும் ஒரு முறை போய்ப் பார்க்கலாம் என்று நினைத்து வருபவர்கள்தான். எல்லாரும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள்தான். இங்கு அமர்ந்து சாப்பிட தகுதியெல்லாம் தேவையில்லை. பணம் இருந்தால் போதும்.”

“ம்ம் புரியுது மேடம்.”

அந்த அறையின் மேல் தரையில் வடிவமைக்கப்பட்ட வண்ண வண்ண விளக்குகளையும் வரைபடங்களையும் வியந்து ரசித்துக் கொண்டிருந்த பிரேம் மேசையில் டக் என்று சத்தம் கேட்டு அதிர்வை உணர்ந்ததும் நினைவு திரும்பினான்.

அவர்களுக்கான இரவு உணவைப் பணியாளர் கொண்டுவந்து வைத்ததும் இருவரும் சாப்பிடத் தயாரானார்கள்.
ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்துகொண்டு நட்பை உறுதி செய்யத்தான் நேரம் செலவிடுகிறோம் எதாவது பேசினால் நன்றாக இருக்குமே என்று மேடம் ஆரம்பித்தார்.

“பிரேம் உன்னைப் பற்றிச் சொல்லேன்?”

“என்னைப் பற்றிச் சொல்லச் பெரிதாக ஒன்றுமில்லை மேடம். என்னுடைய ஊர் இங்கிருந்து இருபது கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு சிறு கிராமம். அங்கு ஒரு குறைந்தபட்ச வசதியுடன் நிம்மதியை அள்ளிக் கொடுக்கும் சிறு வீடு இருக்கிறது. வீட்டில் அம்மாவும் மனைவியும் இருக்கிறார்கள்.”

“அப்பா?”

“அப்பா நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே இறந்துவிட்டார். சிறு வயதிலிருந்தே அம்மாவின் துணை மட்டும்தான்.”

“மனைவி?”

“திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.”

“ஆஹான் நலம் நலம். குழந்தைகள்?”

அப்போது பார்த்து மேடத்தின் செல்ஃபோன் அலரியது. பிரேமின் கொதிக்கும் நெஞ்சு அடங்கியது.
அழைப்பை ஏற்று, “ஹலோ” என்ற மேடத்தின் எதிர் பக்கம் மலர்.


...தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top