• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
103
பகுதி - 24

அன்றைய தினம் அவர்கள் பேசியதை அரைகுறையாகக் கேட்ட ரகு மனதிற்குள் குழப்பியெடுத்து, இரவு யுவனியிடம் கோபமாகப் பொங்கி பொங்கல் வைத்தாயிற்று. பதிலுக்கு அவளும் முறுக்கிக் கொண்டாயிற்று.

ஆனால் உண்மை என்னவென்று தற்போது தெரிய வந்தபிறகு தனது அவசரப் புத்தியை எண்ணி தலையை கைகளில் தாங்கி அமர்ந்த ரகுவை, புரியாமல் பார்த்த யுவாவின் மனதில் 'யுவனியுடன் வாழ்வதற்கு ரகுவிற்கு பிடிக்கவில்லையோ?' என்ற சந்தேகம் எழுந்தது.

"என்னாச்சு மச்சான்!? இன்னமும் யுவனி மேல கோபமாத் தான் இருக்கீங்களா? உங்களுக்கு யுவனியை பிடிக்கலையா?" சற்று தயக்கத்துடன் அவனிடமே வினவினான் யுவா.

அதைக்கேட்ட ரகு தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்து, "என்னோட லைஃப்ல யுவியை தவிர வேற யாருமில்ல. அவ மேல இருந்த கோபமெல்லாம் எப்பவோ போயிடுச்சு யுவா. இது வேற விசயம்." அழுத்தமான குரலில் சொன்னவன் தன்னை மீட்டுக் கொண்டான்.

யுவா புரியாமல் பார்க்க அவனை திசைதிருப்ப வேண்டி உடனே பணியைப் பற்றி ரகு பேச, யுவா அந்த விசயத்தை விட்டாலும் ரகுவின் உறுதியான பதிலில் இனிமேல் யுவனியின் வாழ்வில் குழப்பம் தீர்ந்து மகிழ்வுடன் வாழ்வாளென்ற நம்பிக்கையை விதைத்தது.

" சரி நான் கிளம்பறேன். நீங்க கேட்ட டீடெய்ல் எல்லாம் கொண்டு வர்றேன். வேற எதுவும் தேவைப்பட்டா எனக்கு கால் பண்ணி சொல்லுங்க." என்றபடி யுவா கிளம்ப எத்தனிக்க, ரகு எதையோ கேட்கத் தயங்கினான்.

அதை புரிந்து கொண்டவன் என்னவென்று விசாரிக்க, "ஒன்னுமில்ல. அது, எப்படி கேட்கறது தெரியல. அதான்," ரகு இழுக்க, எதுவானாயினும் தயங்காமல் கேட்குமாறு ஊக்கினான் யுவா.

சில நொடிகள் யோசித்த ரகு,"இல்ல, உனக்கும் யுவிக்கும் சண்டை எல்லாம் வருமா? அவள் கோபப்பட்டால் என்ன செய்வா? சும்மா தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன். மத்தபடி ஒன்னுமில்ல." இயல்பாகக் கேட்கிறாராம்.

அவனது கேள்வியில் இதழில் உதித்த புன்னகையை மறைத்த யுவா,"யுவனி இதுவரை எங்கிட்ட சண்டைனு பெருசா எதுவும் போட்டதில்ல. ஆனா ஸ்கூல், காலேஜ்ல என்னை யாராவது எதாவது சொல்லிட்டா, அவங்கள அடி வெளுத்துடுவா."

"அவமேல நிறைய கம்ப்ளைன்ட் வரவும், அப்பா அவளை திட்டி'உனக்கு பிடிக்கலைனா அவங்ககிட்ட இருந்து ஒதுங்கி நில்லு. அடிக்கற வேலை வேண்டாம்'னு அடக்கி வைச்சாரு." என்றவன் பதில் ரகுவிற்கு அத்தனை உவப்பானதாக இல்லை.

"அது சரிதான், மத்தவங்கள்ட்ட அவள் அப்படி விலகி இருக்கலாம். ஆனா இப்ப நீயே எதாவது தப்பு செய்தேனா? அதாவது அவளை கோபப்படுத்தற மாதிரி எதுவும் செய்தேனா, அவ என்ன செய்வாள்?" தற்போது கேள்வியை மாற்றிப் போட்டான்.

ரகுவின் கேள்வியில் யோசனையான யுவாவிற்கு ஏதோ புரிவது போலிருக்க, "நோ அதர் ஆப்ஷன். ஒன்லி ஆக்ஷன் தான். இடம் பொருள் ஏவல்னு எதைப்பற்றியும் யோசிக்காம பொளேர்னு ஒன்னு வைப்பா." சிறு சிரிப்புடன் சொன்னவன்,

" இன்ஃபேக்ட் மதுவோட மேரேஜ் விசயம் தெரிஞ்சு நான் பண்ணுன கிறுக்குதனத்துல ஹாஸ்பிடல்ல ட்ரிப்ஸ் போட்டு முடியாம கிடந்தப்ப கூட வந்தவுடனே என்னைப் பார்த்த அடுத்த செகண்ட் அதான் செய்தா. "

"அவளோட எக்ஸ்ட்ரீம் லெவல் அது. அவ மனசுக்கு நெருக்கமானவங்க பண்ற தப்பை அவளால டாலரேட் பண்ண முடியாது. அவளுக்கு பிடிக்காதவங்கள்ட்ட தான் டிஸ்டன்ட் மெய்ன்டெய்ன் பண்ணுவா."

"மத்தபடி பாரபட்சம் பார்க்காம அடிதான். அதுவும் ஒருவகையில பாசத்தோட வெளிப்பாடு தானே! அம்மாப்பா மட்டுந்தான் இதுக்கு விதிவிலக்கு." அன்றைய தினத்தை நினைவு கூர்ந்தவன் அவளது இயல்பைக் கூறினான் யுவ்ராஜ்.

யுவா சொன்னதைக் கேட்டு ரகு யோசனையில் ஆழ்ந்திருக்க, அன்றைய நினைவிலிருந்து மீண்ட யுவா," ரொம்ப எல்லாம் யோசிச்சுட்டே இருக்காதீங்க. சட்டுனு ஸாரி கேட்டு சரணடைஞ்சுடுங்க மச்சான்." சிறு புன்னகையுடன் சொல்லவும்,

சட்டென நிகழுக்கு வந்த ரகு, "அதெல்லாம் ஒன்னுமில்ல." என்றபடி சமாளிக்கப் பார்க்க, முடிவிலி போல தலையை ஆட்டி புன்னகைத்த யுவா,

"சரித்தான், ரொம்ப நாள் ஆறப் போடாதீங்க மச்சான் . அப்றம் அவ அதுலேயே கம்ஃபர்ட் ஆகிடுவா. அதுக்கப்புறம் உங்க இஷ்டம்." கிளம்பிச் சென்று விட்டான்.

யுவா சென்றபிறகு வேலையில் ஆழ்ந்த ரகுவிற்கு கவனம் சிதற பணியை சரியாக செய்ய முடியாமல் திணறினான். தற்போது நடந்த உரையாடலிலேயே சிந்தனை உழன்று கொண்டிருக்க அவனது மனம் ஒருநிலையில் இல்லை.

'அன்று யுவனி இல்லையென்றால் மதுவின் நிலை என்னவாகி இருக்கும்?! தனக்குமே அந்த திருமணத்தில் பெரிதாக ஈடுபாடு இல்லாத போது அவள் சொன்ன அந்த பொய்யால் திருமணம் நின்றதில் நிம்மதியாகத் தானே உணர்ந்தோம்.'

'அப்படி இருந்தும் அவளிடம் எதற்காக அன்று கோபம் கொண்டு ஏதேதோ வார்த்தைகளை விட்டு அவளை காயப்படுத்தி, இப்படி சூழ்நிலையை சிக்கலாக்கிக் கொண்டோம் என்று வருந்தினான்.

ஏற்கனவே கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவளது அருகாமை இல்லாமல் எதையோ இழந்ததுபோலிருப்பவன், தற்போது யுவா சொன்னதில் 'அவள் என்னை வெறுத்து விட்டாளா?!' என்று கிலியடைந்து போனான்.

அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ ஒருவித குழப்பமும் பயமும் மனதை ஆட்டிப்படைக்க, சிறிது நேரம் போராடிப் பார்த்தவன் பிறகு கணிணியை அணைத்து விட்டு சீக்கிரமே வீட்டிற்கு கிளம்பி விட்டான்.

யுவனி இன்னமும் கம்பெனியில் இருந்து வீடு திரும்பாமல் இருக்க, தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு திறந்து உள்ளே வந்தவன் எதுவும் செய்யத் தோன்றாமல் அப்படியே அமர்ந்து விட்டான்.

சிறிது நேரத்தில் இரவு உணவு சமைக்க தேவிகா வந்துவிடவும், எழுந்து அறைக்குள் சென்றவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து யுவனியிடம் பேசிவிட எண்ணி அவள் வரவிற்காகக் காத்திருந்தான்.

தேவிகா சமையலை முடித்துவிட்டு கிளம்பும் வரையிலும் யுவனி வரவில்லை. ஆதலால் அவளது அலைபேசிக்கு அழைக்கலாமா என்ற யோசனையில் இருந்தான் ரகு.

சிறிது நேர குழப்பத்திற்கு பிறகு அவளுக்கு அழைத்து விடுவது என்ற முடிவிற்கு வந்தவன் அவளது எண்ணை அழுத்திக் காத்திருக்க, அழைப்பு ஏற்கப்பட்டது.

"ஹலோ!" என்றவள் அடுத்து அவன் பதில்பேச வருவதற்குள், "வாட் டூ யூ வான்ட்? உங்களுக்கு வேற வேலையே இல்லையா? சும்மா நைநை னுட்டு," கடைசி சொற்களை முனகலாகக் கூறி அவள் எரிந்து விழ, அதிர்ந்தவன் பட்டென்று அழைப்பை வைத்து விட்டான்.

அழைப்பை வைத்தவன் அவள் பேசியதை நம்ப முடியாத திகைப்புடன் சில நிமிடங்கள் அலைபேசியையே வெறித்துப் பார்த்திருந்தான்.

'அப்படியென்றால் அவள் இத்தனை நாளும் விளையாட்டாக முறுக்கிக் கொண்டு இருக்கவில்லையா?!அவன் மீது உண்மையான வெறுப்போடு தான் இருந்திருக்கிறாளா?!' என்றெண்ணியவனுக்கு,

அவள் தன்னை வெறுத்து விட்டாள் என்பதை ஜீரணிக்க முடியாமல் மனம் கலங்க, 'விடுடா. இவ உன் லைஃப்ல வர்றதுக்கு முன்னே எப்படி இருந்த. அதேப்போல உன்னால இருக்க முடியாதா?' தன்னைத்தானே தேற்ற முயன்றான்.

எத்தனையோ சமாதானங்களை தனக்குதானே அவன் சொல்லிக் கொண்டாலும், 'அது வலி..வேற டிபார்ட்மெண்ட்!' என்பதைப் போல இதயம் ஒருபுறம் கனக்கத்தான் செய்தது.

எந்தவித முகாந்திரமுமின்றி தன்னை உயிராய் நேசிக்க தனக்கென ஒருத்தி வருவாள். மனம் முழுவதும் காதல் நிறைந்து நிரம்பி வழிய அழகான வாழ்க்கை ஒன்றை எதிர்பார்க்கும் சராசரி ஆண்மகன்தானே அவனும்.

யுவனியின் அன்பான அக்கறையில் ஈர்க்கப்பட்டு, தனக்கானவள் என்று அவளை மனதில் பதித்து, அவளிடம் தனது மனதை வெளிப்படுத்தி, இருவரும் மகிழ்வாக வாழக் கனவு கண்டிருந்தவனுக்கு ஏதோ போதாத வேளை, அன்று அவர்கள் பேசியதைக் கேட்க நேர்ந்தது.

அவன் கேட்ட விசயத்தை அவளிடம் பொறுமையாகவேனும் விசாரித்து இருக்கலாம். ஆனால் கோபத்தின் கொதிப்பில் அவன் கொப்பளிக்க, அவளும் பதிலுக்கு கொடுத்துவிட்டு போய் விட்டாள்.

தற்போது அவளது அலட்சியமான பேச்சில் அவனுள் புசுபுசுவென கோபம் எழும்ப, 'வரட்டும். நான் இதைத்தானே அன்னிக்கு அவகிட்ட சொன்னேன்.'

'இவங்க எல்லாம் மத்தவங்க மனசை மதிக்க மாட்டாங்கன்னு, என்னமோ பெரிய இவளாட்டம் தாம்தூம்னு குதிச்சாள். இப்ப பேசற லட்சணத்தை பாரு. அவளுக்கு இன்னிக்கு இருக்கு.' மனதிற்குள் கறுவிக் கொண்டான்.

ஆனால் அடுத்து வந்த நாட்களில் அவளிடம் வாக்குவாதம் செய்வதற்கு அப்படி ஒரு சந்தர்ப்பமே அவனுக்கு அமையாமல் போனது.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top