- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
ஓம் சரவண பவ
தேவை எந்தன் தேவதையே
1
ஸ்ரீபத்மநாப புருஷோத்தம வாஸுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ரபாணே,
ஸ்ரீவத்ஸசிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீவேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்!”
திருப்பதி ஏழுமலையானின் சந்நிதியை சுற்றியுள்ள பகுதிகளில் காலை வேளையில், வேங்கடவனின் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது. சென்னையிலிருந்து 150 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும், ஆந்திரமாநிலம் திருப்பதிக்கு மேலுள்ள திருமலையில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதியைக் காண, லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிய, தன்னை நாடி வரும் அனைவரையும் சிரிப்புடனும், சிரத்தையுடனும் ஆசீர்வதித்து அருள்பாலித்துக் கொண்டிருந்தார் அந்த ஏழுமலையான் வெங்கடாசலபதி.
காலை ஆறு மணியளவில் மேல்திருப்பதியில் வாடகைக் கார் நின்றதும் முதலில் இறங்கியவன், அடுத்ததாக இறங்குபவளை நோக்கி கைநீட்டி, “பார்த்து இறங்கு பாகீரதி” என்றான்.
“இல்ல நானே இறங்கிருவேன்” என அவனுக்குப் பதிலளித்து கீழே இறங்கியவளுக்கு குளிர் முகத்திலடிக்க, “என்ன நிதிஷ் டைம் சிக்ஸ் ஆகுது. இன்னும் இருட்டு குறையல? ரொம்ப குளிருது” என்று கைளிரண்டையும் சேர்த்து இறுக்கிக்கட்டியபடி கேட்டாள்.
“மலை மேல இருக்கிறோம்ல அப்படித்தான் இருக்கும் பாகீரதி. கோடையில் கூட மழை பெய்யும்னா பாரேன்” என்று மதன் சொல்ல, அதற்கு ஒத்து ஊதினார்கள் தாரிணியும் உஸ்மானும், ராஜேஷும்.
தாரிணி! பாகீரதியின் நெருங்கிய தோழி. இன்னும் தோழிகள் இருந்தாலும் அனைத்திற்கும் முதலாமவள் இவளே. தவறென்றால் கண்டிக்கவும் தயங்காதவள்.
“உஸ்மான் உனக்கெப்படித் தெரியும்? நீதான் முஸ்லிமாச்சே?” என பாகீரதி ஆச்சர்யமாய் கேட்டாள்.
“எல்லாம் கேள்வியறிவுதான். நெட்ல பார்த்தா எல்லாமே தெரியப்போகுது. இங்க வரணும்ன உடனே பார்த்துட்டேன். சரி இன்னும் ஏன்பா டல்லாயிருக்க? வர வேண்டிய இடத்துக்கு வந்தாச்சி. கொஞ்சமாவது சிரிச்சிட்டே வாயேன். இன்னும் கொஞ்ச நேரத்துல நீயும், நிதிஷும் புருஷன், பொண்டாட்டி” என்றதும் நிதிஷ் முகத்தில் வெட்கம் பரவ, பாகீரதிக்கோ மனதினுள் பகீர் என்றது.
“இதுக்காக, வீட்ல என்னல்லாம் பொய் சொல்ல வேண்டியிருந்தது தெரியுமா? சீக்கிரம் முடிச்சிட்டுக் கிளம்பணும். மதன் உன்கிட்டத்தான நாம வாங்கின தாலிக்கயிறு இருக்கு? பத்திரமா வச்சிருக்கியா? இல்ல...” என முடிக்காமல் உஸ்மான் நிறுத்த,
“டேய்! என்னை என்ன பொறுப்பில்லாதவன்னு நினைச்சியா. இதோ வச்சிருக்கேன் நல்லா பார்த்துக்கோ” என்று பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து காண்பித்தான்.
“சரிப்பா குளிச்சிட்டு கிளம்ப லாட்ஜ் பிடிங்க” என நிதிஷ் சொல்லவும், “ஹேய்! என்னடா விளையாடுறீங்களா? கையில பணம் கம்மியாதான் இருக்கு. லாட்ஜ்லாம் போனா சரிவராது” என்று அவர்களின் நிதியமைச்சர் ராஜேஷ் சத்தம் போட்டான்.
“என்னடா நினைச்சிட்டிருக்கீங்க மனசுல? பாக்கி எவ்வளவு வசதியானவள்னு தெரியும்ல. அவளை பத்தோட பதினொண்ணா, அதுவும் இந்த குளிர்ல குளிக்கச் சொல்றீங்களா? ஒன் ஹவர் மட்டுமாவது பிடிங்க” என்று தாரிணி கத்த, எதற்கும் வாயைத் திறக்கவில்லை பாகீரதி.
“தாரிணி சொல்றதும் சரிதான். ஒன் ஹவர் ஓகே. இல்ல முடியாது ஒன் டே பே பண்ணியாகனும்னு சொன்னா என்ன பண்றது?” என நிதிஷ் யோசிக்க,
“சின்னப்பசங்கன்ற நினைப்புல தான் வீட்ல அதிகம் பாக்கெட் மணி தரமாட்டேன்றாங்க. எப்படியும் இன்னும் ஐந்தாயிரம் இருக்குல்ல. பார்த்து அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் வாங்கடா” என உஸ்மான் சொன்னதும், அனைவரும் சம்மதித்து லாட்ஜ் பிடித்து முதலில் பெண்கள் குளித்து ஆடை மாற்றி வர, பின் ஆண்கள் குளித்து வந்தார்கள்.
அனைவரும் குளித்து முடிய, திருமணத்திற்கென்று பாகீரதி புடவை அணிந்திருக்க, அவளின் நீண்ட கூந்தலுக்கு சடைபின்னி தலை நிறைய பூ வைக்கப்போன தோழியைத் தடுத்து கொஞ்சமாக வைக்கச் சொல்ல, சின்னதாக அழகுபடுத்தி முடித்ததும், காலை நேரத்து தாமரையாய் வீற்றிருந்த தோழியை கையால் திருஷ்டி கழித்து, “அழகு பாக்கி நீ. அதான் இந்த நிதிஷ் உன்னழகுல மயங்கி பின்னாடியே சுத்துறான் போல” எனும்போது, சுருக்கென்று எதுவோ மனதில் தைத்தது பாகீரதிக்கு.
வீட்டிலிருந்து கிளம்பியது முதல் இப்பொழுது வரை மனதிற்குள் பலவித போராட்டம், தவிப்பு, எரிச்சல் என எதிலும் நிலைகொள்ளாமல் மனம் தவித்துக் கொண்டிருந்தது. ‘இந்தக் காதல், கல்யாணம் அனைத்தும் சரியா? நான் தப்பு பண்றேனா? யாரையோ பழிவாங்க நினைச்சி என்னையே பழி குடுக்கிறேனா?’ கண்களில் கலக்கத்துடன் தோழியைக் கண்டாள்.
“என்ன பாக்கி அப்படிப் பார்க்கிற?” என்றாள் தோழியின் கலக்கமறிந்து.
“பயமாயிருக்கு தர்ணி. இது சரிவருமா? தப்பு பண்றேனோன்னு தோணுது. இப்பத்தான் நாம செகண்ட் இயர் படிக்கிறோம். பத்தொன்பது வயசுதான். படிப்பே இன்னும் முடியல. அதுக்குள்ள...”
“இதைத்தான் நான் அன்னைக்கே சொன்னேன் அவசரப்படாதேன்னு. நீதான் அப்பா, காதல், கத்திரிக்கா, பீட்ரூட்டுன்னு பினாத்தி இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க. நிதிஷ்கு உன்னைப் பிடிச்சிருக்கு. நல்ல பையன்தான். கொஞ்சம் தைரியம் கம்மி. நான் சொன்னப்பல்லாம் யோசிக்காம முடிவெடுத்துட்டு. இப்ப பேக்கடிச்சி என்னாகப்போகுது. இந்த ஏழுமலையான் என்ன ஆசைப்படுறாரோ, அது கண்டிப்பா நடந்தே தீரும். உன் வாழ்க்கை இவனோடதான்னு முடிச்சிப் போட்டிருந்தா யாரால மாத்த முடியும்” என்று தோழியை ஆறுதல்படுத்தினாள்.
பார்ப்பவரின் கவனத்தை சுண்டி இழுக்கும் அழகுடன் நின்றிருந்தவளை தோளணைத்து ஆறுதல் சொல்லி வெளியே வர, ஆண்கள்...’ இல்லையில்லை ‘பையன்கள்’ நால்வரும் உள்ளே சென்றார்கள்.
அவர்களுக்காக வெளியே காத்திருக்கையில், ஒரு நடுத்தர வயது தம்பதியர் பேசியது காதில் விழுந்தது. பல மொழிகளிலும் தெலுங்கே அதிகம் இருந்த இடத்தில் அவர்களின் தமிழ் பேச்சு தோழியரின் கவனத்தைத் திருப்பியது.
“என்னங்க இப்படிச் சொல்லிட்டாங்க? கல்யாணத்துக்கு மூணு மாசம் முன்னாடியே ஆதாரத்தோட புக் பண்ணனுமாம். நான் வேற பையன் கல்யாணத்தை இங்க வச்சு நடத்தணும்னு வேண்டிக்கிட்டேன். ஏதோ ஒரு மாசம் டைம்னா பரவாயில்ல. வேற வழியில்ல பொண்ணு வீட்லயும் பேசிப்பார்த்து நாள் தள்ளி வச்சிருந்திருக்கலாம்” என்றபடி அவர்கள் வெளியே செல்ல, பெண்கள் இருவரும் ஒருவரையொருவர் கேள்வியாய் பார்த்தார்கள்.
வெளியே வந்த நிதிஷிடம், “என்னடா மேரேஜ்னா த்ரீ மன்த் முன்னாடியே பதியணுமாம்? அதுக்கு ப்ரூஃப்லாம் வேற காண்பிக்கணுமாம்? நீ நேத்து பேசி இன்னைக்கு கூட்டிட்டு வந்திட்ட? எதுவும் எங்ககிட்ட கேட்கல?” தாரிணி கேள்விமேல் கேள்வி கேட்டாள்.
திருதிருவென விழித்தவன், “அ..அது அப்படில்லாம் இல்ல தாரிணி. பாகீரதி சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கணும் சொன்னாளா, அதான்” என இழுக்க,
திரும்பி தோழியை முறைத்த தாரிணி நிதிஷிடம், “அப்புறம் எப்படி கல்யாணம் பண்ணிக்கப்போற?” என்றாள் காட்டமாக.
“அது மதனும், ராஜேஷும் தான் நாங்க பார்த்துக்கறோம் சொன்னாங்க.” வார்த்தைகளை மென்று விழுங்கினான் நிதிஷ்.
“ஆக, நீயா எதையும் செய்யமாட்ட? இதுக்கு நீ அந்த மதனையோ, ராஜேஷையோ கல்யாணம் பண்ண கேட்டிருக்கலாம் பாக்கி.” எரிச்சலில் தோழியிடம் கோபமாய் சொல்ல, அந்த வார்த்தையின் கணம் தாளாமல் சட்டென்று உதடுகடித்து தலைகவிழ்ந்தாள் பாகீரதி.
“தாரிணி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாத. இந்த லவ்வெல்லாம் எனக்கு செட்டாகாது. கஷ்டப்பட்டு என்னை படிக்க வைக்கிறாங்க. எனக்கும் பொறுப்பு இருக்கு. தங்கை, தம்பி இருக்காங்க. அவங்களுக்கு...” என மேலே பேச வந்தவன் சூழ்நிலை கருதி வாய் மூடி, “நீதான் கொஞ்சம் தைரியமா பேசேன்டா நிதிஷ். லவ் பண்ண மட்டும் தெரியுதுல்ல. அதே மாதிரி எல்லாத்துலயும் தைரியமா இருக்கணும்” என்று அறிவுரை கூறினான்.
அவனோ, “சரிடா நீ சொல்றபடியே செய்றேன்” என்றான் நல்லவனாய்.
தலையிலடித்தபடி, “உன்னையும் ஒருத்தி நம்பி லவ் பண்றேன்னு சொல்லி, அதுக்கு நாங்க ஜால்ரா போட்டு, கல்யாணம் வரை வந்திருக்கோம் பாரு எங்களைச் சொல்லணும்.”
“ஏன்டா இப்படிச் சொல்ற?” என அப்பாவியாய் கேட்டவனிடம், நிதிஷின் தோள்மேல் கைபோட்டு, “அதெப்படிடா முகம் பச்சைப்புள்ள மாதிரியிருக்கு? என்றபடி நகர்ந்தான்.
பாகீரதிக்குக் குழப்பங்கள் கூடி கும்மியடித்தது. மனமோ, ‘ஹேய் பாக்ஸ் மாட்டினியா’ என கேலி செய்தது. ‘திருப்பதி வந்தா திருப்பம் வரும்னு சொல்வாங்க. இந்த திருப்பம் நல்லதுக்கா கெட்டதுக்கா தெரியலை நாராயணா. உன்னை நம்பி வந்திருக்கேன். எல்லாத்தையும் நல்லபடியா நடத்திக்குடு ஸ்ரீனிவாசா’ என்று மனதினுள் வேகமாக வேண்டுதல் வைத்தாள்.
அந்த ஸ்ரீனிவாசனின் புன்னகையோ பலநூறு அர்த்தங்களை தன்னுள் அடக்கியது.
அனைவரும் கிளம்பி ஏழுமணிக்கெல்லாம் சன்னிதானம் இருக்குமிடம் நோக்கி வரும்பொழுது, “டேய் மதன்! எல்லாரும் வரிசையில நின்னு மணிநேரக்கணக்குல வெய்ட் பண்ணி சாமி பார்க்கப்போவாங்க கண்டிருக்கேன். ஆனா, நீ எங்களை எங்க கூட்டிட்டுப் போறன்னு சொல்லவே இல்லையே?” என்றான் நிதிஷ்.
“அப்பப்ப கொஞ்சம் புத்திசாலியாவும் யோசிக்கிறடா நீ. உள்ள போய் வரிசையில நின்னு வரணும்னா சாயங்காலமாகிடும். இது வேற இடம். என் கூடவே வாங்க தெரியும்.”
“ஏதோ பண்றன்னு தெரியுது. ஆனா, என்னன்னு புரியலை. எதுலயாவது ஏழரையை இழுத்து விட்டுறாதடா” ராஜேஷ் புலம்பினான்.
“கண்டிப்பாடா. இந்த மதனை நம்பினோர் கைவிடப்படார்” எனும்போது படாரென்று அவன்மேல் எதுவோ விழுந்தது.
“என்னடா நண்பா! உங்க சாமி பொய் சொன்னதுக்கு உடனே தண்டனை குடுத்திருச்சி போல” என்றான் உஸ்மான் சிரித்தபடி.
“போடா லூசு” என அவனைத் திட்டி, “ச்சீ வா” என்று முன்னே செல்ல மற்றவர்களும் அவனைத் தொடர, பெண்கள் இருவரும் பின் தங்கினர்.
“என்ன பாக்கி யோசனை? இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல. பிடிக்கலன்னா சொல்லு. இப்படியே கிளம்பிரலாம்” என்றாள் தோழியின் யோசனை முகம் பார்த்து.
“அப்படில்லாம் எதுவுமில்ல தர்ணி. வா போகலாம்” என முன்னே நடக்க, அப்பொழுது ஒரு இளைஞன் பேசியதைக் கேட்டவள் ஆணியடித்தாற்போல் நின்று அனைத்தையும் கேட்டாள். ‘தனக்காகவே அவனை கடவுள் அனுப்பியிருப்பாரோ!’ என்ற எண்ணம் எழாமலில்லை பாகீரதிக்கு.