- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
13
“ஹாய் அண்ணி” என்று சிந்துவை அணைத்து விடுத்து அருகில் அமர்ந்தாள் பாகீரதி.
“ஹேய்! பாகீ வா வா. எப்படியிருக்க? வீட்ல எல்லாரும் எப்படியிருக்காங்க?”
“ஆல் பைன் அண்ணி. அட சூப்பராயிருக்கீங்க கல்யாணப் பொண்ணே!” என்றாள் பாராட்டுதலாய்.
“எல்லாம் ப்யூட்டி பார்லர் உபயம்தான்மா. என்ன இருந்தாலும் உன்னோட நேச்சுரல் ப்யூட்டி எனக்கெல்லாம் வராதுப்பா” என்று கேலி போல் புகழ்ந்து, “உனக்கு ஒண்ணு தெரியுமா? ஒரு டைம் ஷாப்பிங் மால்ல உன்னைப் பார்த்து சைட்டடிச்சிட்டிருந்தேன். அண்ணா கூட கேலி பண்ணினாங்க. ஒரு பெண்ணே பெண்ணை சைட்டடிக்கிறேன்றாளேன்னு.”
“அண்ணி போதும் ஓவர் தன்னடக்கம் வேண்டாம். நீங்க இயற்கையாவே அழகுதான். அதுக்காக எனக்கு ஓவரா ஐஸ் வைக்காதீங்க.”
“அப்படின்ற!”
“அப்படியே தான்!” என தற்செயலாக தன்னை முறைத்து நின்றிருந்த தாரிணியைப் பார்த்து, ‘அச்சோ முறைக்கிறாளே. இவளை மறந்துட்டோமே’ என்று, “அண்ணி இவதான் எங்க அண்ணி தர்ணி” என்றாள்.
“என்னது தண்ணியா?” சிந்து ஆச்சர்யமாய் தாரணியைப் பார்த்தாள்..
“ஹையோ! இவ வேற” என தலையிலடித்து, “ஹாய் அக்கா! நான் தாரிணி” என்றபடி கைநீட்ட, “என்னது அக்காவா!” என்றாலும் பதிலுக்கு கைகொடுத்து, “உட்காருங்க” என்று இருக்கையைக் காட்டினாள்.
“பாக்கி அண்ணின்னு சொன்னா. சோ, எனக்கு அக்கா. சிம்பிள் லாஜிக்.”
“ஓகே ஓகே ஐம் சரண்டர். சரி என்ன சாப்பிடறீங்க?”
“ஏன் அண்ணி சாப்பிட எதாவது கேட்டா, நீங்க போயி எடுத்துட்டு வரப்போறீங்களா என்ன?”
“ஏன் என் செல்ல அத்தை பொண்ணுக்கு, எடுத்துட்டு வரமாட்டேனா என்ன?” அவள் கன்னம் தொட்டு முத்தமிட்டபடி கூறினாள்.
அதைப் பார்த்த தாரிணிக்கு, இரண்டு வருடங்களுக்கு முன் சிந்துவைப் பற்றி பாகீ சொன்னது நினைவு வந்தது. “டூ இயர்ஸ் முன்னாடி இருந்தே உங்களைப் பார்க்கணும்னு நினைச்சிட்டிருந்தேன். இந்த பாக்கி உங்ககிட்ட இவ்வளவு இழைஞ்சிட்டிருக்கா. என்கிட்ட சொல்லவேயில்ல பாருங்க அக்கா” என முறையிட,
“இல்லமா. பாகீ மேல எந்த தப்புமில்லை. நான்தான் என் பேரைச் சொல்லி டிஸ்டர்ப் பண்ணவேண்டாம் சொன்னேன். நீயும் என்னை மாதிரின்னு சொன்னாள்தான், இருந்தாலும் படிக்கிற பொண்ணு” என இழுத்தாள்.
“ஓகே. ஏதோ சொல்றீங்க பச்சைப்புள்ள நானும் நம்புறேன்” என்று சமாதானமாகி தங்களின் அரட்டையை ஆரம்பிக்க, அதற்குள் நிச்சயத்திற்கு நேரமானதால் பெண்ணை மேடைக்கு அழைக்க, பாகீரதி, தாரிணி இருவருமே அழைத்து வந்தார்கள்.
“என்னடா தர்ஷா, சிந்துநதிப் பூவை உனக்குத் தர்றேன்னு சொன்னேன். இப்ப செஞ்சிட்டேன் உனக்கு திருப்திதான?” ஸ்ரீனிவாசன் ஆரம்பிக்க,
“டெபனட்லிடா” என்றான் சந்தோஷமாய், தன் மனைவியாகப் போகிற சிந்துவைப் பார்வையால் விழுங்கியபடி.
“ஆனாலும், திருப்பூர்ல சிந்துநதி எங்க ஓடுதுன்னு கூகுள்ல தேடுன பாரு. சான்ஸே இல்லடா” என்று சிரிக்காமல் கேலி செய்தான் ஸ்ரீனிவாசன். என்னவென்று தாரிணி கேட்க, “உங்க கல்யாணத்துல நடந்த கூத்தைத்தான்மா சொல்றேன்.” தாரிணியின் திருமணத்தில் தர்ஷன் நடந்து கொண்டதைச் சொன்னான்.
அனைவரும் சிரிக்க, தர்ஷனோ அசடுவழிந்தான்.
ஸ்ரீனிவாசனைப் பார்த்து, “நீங்களும், உங்களைச் சுற்றி இருக்கிறவங்களும் ரொம்ப நல்லவங்க அண்ணா. யாரோ ஒருத்தர்னு போகாம, பாவம் பார்த்து அந்த நேரம் அந்த முடிவெடுத்தாங்களே. ஹி இஸ் க்ரேட். சிந்து அக்கா கிடைக்க இவங்களுக்கு லக்கினா, இவங்க கிடைக்க சிந்து அக்காவும் லக்கிதான்.” என்றாள் மனதார.
“ஆமா இந்த நல்லவர்தான் முதன்முதல்ல பார்த்தப்பவே பிடிச்சிருந்தும், எனக்கு வேறொரு இடத்துல பேசினதும், எல்லாத்தையும் மனசுல பூட்டிக்கிட்டாங்க. அப்புறமாவது சொன்னாங்களா? இல்லையே, அண்ணா போய் கேட்டதும் சொல்லியிருக்காங்க. இல்லையா சு...தர்ஷன் சா...ர்” என சிந்து தன் பங்கிற்கு தர்ஷனின் கால்வாரினாள்.
‘ஏன்மா? ஏன் இந்த கொலைவெறி?’ என்பதுபோல் தர்ஷன் சிந்துவை அப்பாவியாய் பார்த்தான்.
“ஹா...ஹா... இந்த அப்பாவி லுக் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு புருஷா. அதுக்காக ஓவர் அப்பாவியா இருக்காதீங்க. என்னால தாங்க முடியல” என தர்ஷனின் காதில் சிந்து கிசுகிசுக்க,
“இதையெல்லாம் இத்தனை பேர் நடுவுல வச்சி சொல்லக்கூடாதுமா. பிரைவேட்டா சொல்லியிருந்தா என்னால தாங்க முடியும்னு காட்டியிருப்பேன்ல” என்றான் மென்மையாக மற்றவர்கள் அறியாமல்.
“அப்ப என்னையும் நல்லவன்னு சொல்ற இல்லையா தாரிணி?” என்று மதன் உள்நுழைய,
“உன்னை எப்ப நல்லவன்னு சொன்னேன். எனக்கு நியாபகமில்லையே.”
“இப்பதான தாரிணி, ஸ்ரீ அண்ணாவை சுத்தியிருக்கிறவங்க எல்லாரும் நல்லவங்கனு புகழ்ந்த?”
“ஓஹ்... நீ அப்படி வர்றியா” என்றவள் கண்கள் மட்டும் சுற்றிலும் கணவனைத் தேடியது. ‘அனைவரும் இங்கிருக்க இவங்களை மட்டும் எங்கே?’
“உனக்கு ஒண்ணு தெரியுமா தாரிணி?” என்றதும் அவன்புறம் கவனத்தைத் திருப்ப, “நீ நல்லவர் வல்லவர்னு புகழ்ந்த எங்க ஸ்ரீ அண்ணா, அவரோட முறைப்பெண்ணைப் பார்க்க நம்ம காலேஜ் வாசல்ல தவமாய் தவமிருப்பாங்க. அண்ணியைப் பார்த்ததும் அவங்க கண்லபடாமலே கிளம்பிருவாங்க” என ஸ்ரீயை போட்டுக் கொடுத்து, ‘இப்ப என்ன பண்ணுவ?’ என்பதுபோல் ஒரு நக்கல் பார்வையை அவனிடம் செலுத்தினான்.
“ஆஹா! தப்பான நேரத்துல சரியா போட்டுக் கொடுத்துட்டானே. இவனை!’ என்று பல்லைக்கடித்து, “டேய் வேண்டாம். ஒழுங்கா ஓடிப்போயிரு” என விரட்டி வேகமாக பாகீரதியைப் பார்த்தான் எங்கே தன்னைக் கண்டுகொண்டாளோ என்று.
அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள். எப்பொழுதாவது சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் முறைப்பெண் என்று தன்னை கேலி செய்பவனாயிற்றே. மதனும் மற்ற நண்பர்களும், ஏன் நிதிஷுமே அவளை ‘அண்ணி’ என்று அழைப்பதின் அர்த்தம் புரிகிறார் போலிருந்தது. என்ன சண்டையிட்ட போதும் கடைசிவரை தன்னை அண்ணி என்றழைப்பதை மட்டும் மாற்றிக் கொள்ளவேயில்லை அவர்கள்.
‘அப்ப இவன் என்னைப் பார்க்கத்தான் வந்தானா? நான்தான் அந்த முறைப்பெண்ணா?’ யோசிக்கும் பொழுதே அவனின் அந்தப் பார்வை உண்மையைச் சொல்ல, ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு தன்னைத் தாக்கினாலும், ‘இல்ல இது தவறு’ என்று அவனை முறைத்தபடியே அமைதியாக இருந்தாள்.
“எனக்குத் தெரியும்” என்று சிந்து சொல்ல...
பாகீரதியின் முறைப்பிலேயே மருகி நின்றிருந்தவன், ‘சிந்துமா ப்ளீஸ்’ என்றான் கண்களால்.
“நம்ம காலேஜா? எந்தப் பொண்ணு மதன் எனக்குத் தெரியாம? உனக்குத் தெரியுமா பாக்கி?” என தோழியை துணைக்கு அழைத்தாள் தாரிணி.
“ஆமா ஆமா. கண்டிப்பா கேட்க வேண்டிய ஆள்தான்” என கிண்டலாகச் சொல்லி, “எல்லாம் நமக்கு நெருக்கமானவங்கதான் தாரிணி” என்றவன் பார்வை போன திக்கைப் பார்த்தவள், இனிமையாக அதிர்ந்தாள் பாகீரதியைப் பார்த்து. சிந்துவிடமும் ஜாடையாகக் கேட்க, அவளின் சம்மதமான கண்மூடல் உண்மை உணர்த்தியது. ஆனாலும், அசராமல் “அண்ணா உங்க முறைப்பொண்ணை எங்களுக்கு காட்டமாட்டீங்களா?” ஸ்ரீயிடம் கேட்டாள்.
“கண்டிப்பாமா. உனக்குத் தெரியாம போகாது. சரி சரி வேலை நடக்கட்டும் யங்ஸ் எல்லாம் கீழே வாங்க. ஓல்ட்ஸ் எல்லாம் நிச்சயத்துக்காக வெய்ட்டிங்.” அனைவரையும் மடைமாற்றம் செய்தான்.
நிச்சயம் முடிந்து சிறியவர்கள் விருப்பத்திற்காக மோதிரம் மாற்றி அனைவரையும் சாப்பிட சொல்லி, மேடைக்கு வந்து மணமக்களிடம் அரட்டையடித்துக் கொண்டிருந்தவன், தற்செயலாகவோ, இல்லை ஏதோ ஒரு உந்துதலிலோ திரும்பிப் பார்க்க, அப்படியே அசையாது நின்றான் வந்திருந்தவர்களைப் பார்த்து.
அவன் குடும்பத்தில் பாதி உறுப்பினர்கள் அங்கே நின்றிருந்தார்கள். அவனால் நம்பத்தான் முடியவில்லை. தன் கண்களையே நம்பாமல் நின்றிருந்தவனுக்கு, அவர்களிடம் போய் பேசும் எண்ணம் சுத்தமாக மறந்து, ஏதோ ஒரு மாய உலகில் இருந்தான். எத்தனை ஆண்டுகள் தான் காணத்துடித்த சொந்தங்கள்.
தாரிணி கணவனைத் தேடிப்போக, நண்பர்கள் பந்தியை பார்க்கச் செல்ல, பாகீரதி மட்டும் மணமேடையில் நின்றிருந்தாள். அதுவரை பேசிக் கொண்டிருந்தவன் முகம் அதிர்ந்தாற்போல் தோன்ற, அவன் பார்வை சென்ற திக்கைப் பார்த்தவளுக்கு, சுகந்தி சங்கரை அடையாளம் தெரிய, மற்றவர்கள் ‘இவனின் உறவுகளோ’ என நினைத்தாள்.
அந்த நிலையிலும், ‘ப்ச்... எல்லாருக்கும் ரிலேடிவ்ஸ் இருக்காங்க. எனக்கு மட்டும் ஏன் இல்லாமல் போயிட்டாங்க?’ என்ற வருத்தம் சுயபச்சாதாபமாக மாறியது, அவளின் உறவுகளும் இவர்கள்தான் என்பதையறியாமல்.
தம்பியின் அருகில் வந்த சுகந்தி, “நிச்சயம் முடிஞ்சிருச்சா சீனு?” என்று கேட்டாள்.
‘ஹான்...’ என வியப்பிலிருந்து வெளி வந்தவனுக்கு இது மாயமில்லை நிஜம்தானென்று தெரிந்ததும், “இப்பத்தான் பத்து நிமிஷம் முன்னாடி” என்றான் வராத குரலில்.
“சரி நான் சிந்துவைப் பார்த்துட்டு வர்றேன்” என மேடையேறி மணமக்களை வாழ்த்த, அந்த நேரம் பாகீரதியிடம் உஸ்மான் ஏதோ கேட்க, அவனிடம் பேசிக்கொண்டிருந்ததால் சுகந்தி அவளைக் கவனிக்கவில்லை. பின் தன் குடும்பத்தினரை மணமக்களுக்கு அறிமுகப்படுத்தினாள். அங்கு வந்த மகேந்திரன், ராதாவையும் அறிமுகப்படுத்தவும், பெரியவர்கள் அவர்களிடம் தங்களின் நன்றியையும், பாராட்டையும் வழங்கிக் கொண்டிருந்தனர்.
உஸ்மான் சென்றதும், தன் குடும்பத்தினரை ஒருவித ஏக்கத்துடன் பார்த்திருந்தவனைக் கவனித்திருந்தவளுக்கு, ஏனென்று தெரியாமலேயே அந்த ஏக்கம் தன்னுள்ளும் வர, மெல்ல கீழிறங்கினாள் பாகீரதி.