- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
29
அறைக்குள் சென்றவளுக்கு அவரின் வெறுமையான பார்வை எதையோ உணர்த்த, ‘தான் பேசியதில்தான் அப்படி இருக்கிறாரோ?’ என நினைத்தவள் தான் பேசியதைத் திரும்ப ஓடவிட, ‘புருஷன்’ என்று தான் உரைத்த வார்த்தை மூளையில் பதிய, தன்னுடைய உளறுவாய் தனத்திற்கு தன்னைத்தானே கடிந்தபடி மாமனிடம் சென்று, “சாரி மாமா” என்று தலைகவிழ்ந்தாள்.
“இது எப்போ?” என்றவர் குரலில் அடிபட்ட வலி.
அவரின் அந்த நலுங்கிய தோற்றமே, தாங்கள் தவறு செய்துவிட்டதை உணர்த்த, “சாரி மாமா. என்னால அப்பாக்கு சீரியஸாகிருச்சி” என்று தான் தந்தையை தவறாக எண்ணியதில் இருந்து அனைத்தையும் சொன்னாள்.
“அப்ப உங்க அத்தைக்கும் தெரியுமா?”
“ம்... சிந்து அண்ணி கல்யாணத்துக்கு வந்தப்பதான்.”
‘நேற்று கூட பையனைப்பற்றி பேசினேனே. அப்ப என்கிட்ட சொல்லணும்னு தோணலை பாரு’ மனதினுள் மனைவியை வைது, மூச்சை இழுத்துவிட்டு தன்னை நிதானப்படுத்தி, “ராமுக்கு இப்ப எப்படியிருக்கு? நான் அவனைப் பார்க்கணும்?” என்றார்.
“அப்பா அங்க வெளியில கார்ல இருக்காங்க.”
“அம்மா வந்திருக்காளா பாப்பா?” என்றார் எதிர்பார்ப்புடன். தங்கைக்கே தெரியாமல் எத்தனையோ முறை பார்த்திருக்கிறார் தான். ஆனால், நேருக்குநேர் பார்த்து பத்தொன்பது வருடங்களாகின்றனவே! மருமகளின் சம்மதமான தலையாட்டலில், “நீ என்ன பண்ணுவியோ தெரியாது, அவங்களை உள்ளே கூப்பிட்டு வர்ற. என் மனசறிஞ்சி தப்பு பண்ணலன்னாலும், உங்கம்மாகிட்ட மன்னிப்பு கேட்கிறேன். அதை என்னால ரோட்டுல வச்சி கேட்க முடியாது. இங்க கூட்டிட்டு வா” என்று அனுப்பினார்.
ஏதேதோ பேசி தாயின் மறுப்பே பதிலாகக் கிடைக்க, “எங்களுக்கெல்லாம் ஒன்றுமில்லை. வருகிறோம்” என்ற பதிலே ராம், பாரதியிடம் இருந்து வந்தது. தங்கை வரவில்லை என்றதும் கடைப் பணியாளர்கள் ஒவ்வொருவராக அனுப்ப, வந்த அனைவருக்குமே “முடியாது” என்ற பதிலையே சந்திரா கொடுத்தார்.
அண்ணாமலையும், ‘என் தங்கைக்கே இவ்வளவு பிடிவாதமென்றால், அவளின் அண்ணன் நானெப்படி இருப்பேன்?’ என்பதை நிரூபிக்கும் வகையில், அசராமல் ஆட்கள் அனுப்ப, ஒரு கட்டத்திற்கு மேல் கோவம் வந்து தன் அண்ணனைத் திட்டுவதற்காக, காரிலிருந்து இறங்கி சாலையைக் கடந்து கடை வாசலில் வந்து நின்றார்.
தங்கையைப் பார்த்து சந்தோஷத்தில், “கலா வாலே” என்றழைத்தார் அண்ணாமலை.
கடை ஊழியர்களும் அருகிலேயே நின்று, “வாங்க மேடம்” என வருந்தி அழைக்க, மற்றவர் முன் அண்ணனை அசிங்கப்படுத்த விரும்பாமல் அவரின் தனியறைக்குச் சென்றார்.
அறைக்குள் வந்த பாரதியிடம், “என்னை மன்னிச்சிரும்மா. என்னைவிட சின்னவளா போயிட்ட இல்லன்னா, கால்ல விழுந்திருப்பேன்ம்மா” என்றார் கையெடுத்து கும்பிட்டபடி.
“முதல்ல கையை இறக்குங்ணா. அதான் சின்னப்பொண்ணு சொல்லிட்டீங்ல. இப்ப மன்னிப்பு கேட்கிற அளவுக்கு நான் எதுவும் பண்ணலீங்ளே?”
“ரொம்ப தன்னடக்கமா பேசுறம்மா. பாப்பா சொன்னா நீ எதுவுமே செய்யலன்ற அனைத்தையும். எங்க சொந்தக்காரங்க எல்லாம் சம்பந்தமே இல்லாத ஒன்னைய அன்னைக்கு திட்டிட்டாவ. அவியளை அப்ப எதுத்து கேக்க முடியல. கலாவை உங்க பொறுப்புல விட்டுட்டு வரணும்ன்றது மட்டும்தான் மனசுல ஓடிச்சி.”
“ஹா... அப்புறம்? இதென்ன புதுக்கதை சொல்ற?” அண்ணனிடம் கேலியாக கேட்டார் சந்திரா.
“ம்... ஒன்ன பொருத்தவர எல்லாம் புதுசு. ஆனா, இதான் நிஜம். ராமு ஒனக்கு மட்டும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நன்றி என்ற ஒரு வார்த்தையை உனக்கு சொல்றதவிட, என் கடைசிகாலம் வரை நீ செஞ்ச உதவிக்கு ஈடா எதையும் என்னால செஞ்சிர முடியாது. அதையும் தாண்டி உன் பொண்ணை என் பையனுக்கு கொடுத்த பாரு. நீ பெரிய மனுஷன்னு நிரூபிச்சிட்டலே” என்றார்.
“என்ன மச்சான் நீங்க? அதோட என்னைக்கு சீனுவ பார்த்தேனோ அன்னைக்கு தோணினது, ரதிக்கு ஏற்ற பையன் இவன்தான்னு. உங்க பையன் கல்யாணம், உங்க அனுமதியோட நடக்க வேண்டியது. உங்களுக்கேத் தெரியாம, என்னால நடந்திருச்சேன்னு ஃபீல் பண்றேன். இப்பக்கூட என் பையன் கல்யாணத்தைப் பார்க்கவிடாமல் பண்ணிட்டியேலேன்னு கோவப்படல. இதான் மச்சான் நீங்க. அன்னைக்கு நீங்க பேசினது நடிப்புத்தான் நான் ஒத்துக்கறேன். சந்திராவும் ஒத்துக்குவா. அப்படித்தான சந்திரா?” என்று கேட்டார்.
‘தம்பி ஒருவகையில் தனக்கு நல்லது செய்தேன் என்கிறான். இந்த அண்ணனோ, அதையே தான் நானும் செய்தேன் என்கிறான். இதில் யாரைக் குறை சொல்வது? என் விதியையா! இல்லை கடவுளையா!’ இருப்பினும் மனதின் பாரம் குறைந்தது போலிருந்தது சந்திராவிற்கு.
“கலா என்னைய மன்னிக்கமாட்டியாலே?” என்ற அண்ணனின் வருத்தக்குரலில் நினைவு வந்து, “இ...இல்ல நான்... மன்னிச்சிருண்ணா” என்று அண்ணனின் கைபிடிக்க, அந்தி கையை ஆதரவாய் நெஞ்சோடு அணைத்தவருக்கு ஆனந்தக்கண்ணீர்.
“மச்சான் ஐயப்பன்கிட்ட சொன்னதுதான் உங்ககிட்டயும் சொல்றேன். சென்னையில ஒரு ரிசப்ஷன் வச்சிரலாம்.”
“கண்டிப்பா மாப்ள பண்ணிரலாம். நாகு வேற ரெண்டுபேருக்கும் கல்யாணத்தை முடிக்கச்சொல்லி நேத்து கேட்டா. போட்ட முடிச்ச ஸ்ட்ராங்கா போட்டுற வேண்டியதுதான்” என்றார் சந்தோஷமாகவே.
எவ்வளவு முயன்றும் இரண்டு நாள் கழித்தே ஸ்ரீனிவாசனால் ஆலங்குளம் வரமுடிந்தது. மனைவியைப் பார்க்கும் ஆசையில் வேகமாய் வீட்டினுள் நுழைந்தவன், அங்கிருந்த அண்ணாமலையைப் பார்த்து கவத்தில் மாடியேறினான்.
கணவனின் வரவை அறிந்து மாடிக்குச் சென்றவளால், என்ன முயன்றும் அவன் கோவத்தை அடக்க முடியவில்லை. அவனை குளித்து வரச்சொல்லி, காஃபி கொடுத்து அருகில் அமர்ந்து கணவனின் விரல்களை தன் விரல்களுள் நுழைத்து, சற்று அழுத்தம் கொடுத்து நடந்ததை சொல்லி, “மாமா மேல் தவறில்லை” என்றாள்.
குளித்து வந்து காஃபி குடித்ததில் கொஞ்சம் அமைதியானவன், திரும்பவும் மலையேறி, “அப்ப அவர் பண்ணினது சரின்றியா? யாரோ எதோ சொன்னா கூடப்பிறந்த தங்கையை கைவிட்டுருவாரா? ராம் மாமா நல்லவர் பிரச்சனையில்ல. இதே வெளியில நல்லவனா, உள்ளுக்குள்ள கெட்டவனா இருக்குறவனா இருந்தா, என்ன பண்ணியிருப்பாராம் உன் மாமா?” என சூடாக கேட்டான்.
“அந்த மாதிரி ஆளை ஆரம்பத்துலயே இனம் கண்டு, அம்மாகிட்ட இருந்து விலக்கியிருப்பாங்க. சொந்த தம்பி பொண்டாட்டி எதையோ மனசுல வச்சிக்கிட்டு பழி தீர்க்கிறாள்னு ஐந்து நிமிஷத்துல தெரிஞ்சவருக்கு, அத்தனை வருஷமா ஓரளவு நல்லாவே பழக்கமான ஒருத்தரை அடையாளம் கண்டுபிடிக்கிறதா முடியாது” என்று அவளுமே பதிலுக்கு சூடான பதில் தந்தாள்.
“ரெண்டே நாள் பழகின உன் மாமாவை உலகளவுல புகழ்ற. அதுக்கு அவர் தகுதியானவரான்னு பாரு?” என்றான் கேலியாய்.
“நான் உங்களை என்னவோன்னு நினைச்சேன். எல்லாத்தையும் அலசி ஆராய்ந்து முடிவெடுப்பீங்கன்னு. ஆனா, சராசரி மனுஷனா யோசிக்கிறீங்க. எதுக்கும் ரெண்டு பக்கம்னு ஒண்ணு இருக்கு. தெரியும்தான? நல்லவன்கிட்டயும் நியாயம் இருக்குன்னா, கெட்டவனும் ஏதோ ஒரு நியாயத்தை கையில வச்சிருப்பான். ஏன் என்னோட மாமா தகுதிக்கு என்ன? நிலம் அது இதுன்னு இருந்தாலும், அப்பா ஆரம்பிச்ச பத்துக்குப் பத்து துணிக்கடையைத் தன்னோட திறமையால பெருசாக்கி, அதையும் வேற வேற இடத்துல விஸ்தரிச்சிக்கலையா? உங்களுக்கு துணிமேல் உள்ள காதலுக்கு வித்திட்டவர் உங்கப்பாதான். இல்லன்னா ஓடிப்போற எல்லாரும் சென்னை ஒதுங்குறப்ப நீங்க ஏன் திருப்பூர் வரணும்? ஏன் அது சம்பந்தப்பட்ட படிப்பு படிக்கணும்?”
“அதுக்கு காரணம் ராம் மாமா. உங்க மாமா இல்லை” என்றான்.
“அப்பாவா உங்களை ஓடி வரச்சொன்னாங்க? அப்படியே இருந்தாலும் அப்பா உங்களைத் தூண்டிவிட்ட விளக்கா வேணும்னா இருக்கலாம். ஆனா, சாதிச்சதுக்குக் காரணம் உங்க உடம்புல ஓடுற ரத்தம்தான். ஊர்ல மத்தவங்க மதிக்கிற பெரிய மனுஷன் உங்கப்பா. தப்பு பண்ணியிருப்பாங்களா?”
அவளின் முகம் திருப்பி, “அப்புறம் ஏன்டி பெத்த புள்ளைய மதிக்கல?”
“நீங்க மதிச்சீங்களா? ம்... சொல்லுங்க உங்கப்பாவ நீங்க மதிச்சீங்களா?” என்றாள் பதில் கேள்வியாய்.
“நானா? நான் என்ன மதிக்கலைன்ற?” என்றான் புரியாமல்.
“நமக்கு குழந்தை பிறந்து, நல்ல குடும்பச் சூழல்ல வளர்ந்து, யாரோ எதையோ சொன்னாங்க என்பதற்காக தவிர்க்க முடியாம தப்பு செய்றான். அதுவும் உங்க கண்முன்னாடி நடக்குது. நீங்க என்ன பண்ணுவீங்க?”
“ஆன் த ஸ்பாட்ல பனிஷ் பண்ணியிருப்பேன். அவனோட தப்பை எடுத்துச் சொல்லியிருப்பேன். மீறி சொல் பேச்சி கேட்கலன்னா நாலு அடிபோட்டு வழிக்கு கொண்டு வந்திருப்பேன்” என்றான்.
“முதல்ல என்ன சொன்னீங்க? ஆன் த ஸ்பாட் தண்டனையா? அப்ப பையன் தப்பு பண்ணினா முதல்ல தண்டிக்கனும்னு ஆத்திரம் வருதில்லையா? அப்புறம்தான நின்னு பேசத்தோணுது. ஆனா, மாமா பையன் தப்பு பண்றப்ப வேடிக்கை பார்த்துட்டு இருந்து, நிதானமா வந்து வீட்ல விசாரிச்சப்பவே அவரோட தகுதி என்னன்னு புரிஞ்சிருக்கணுமே” என்றாள் கணவனுக்கு புரியும் விதத்தில் நிதானமாக.
“ரதீ... அப்ப அப்பா ரிஜிஸ்டர் ஆஃபீஸ் வந்திருந்தாங்களா?” என்றான் அதிர்வாய்.
“ம்... வந்துருக்காங்க. அந்த செகண்ட் உங்கமேல உள்ள நம்பிக்கை உடையுறதை நேர்ல பார்த்த நிமிஷம். அவங்க மனநிலை எப்படி இருந்திருக்கும். நல்லவனா, பொறுப்பானவனா வளரணும்னு நினைச்ச பையன் இப்படி வந்து நின்னா, அதை அக்செப்ட் பண்ணிக்கிறது எவ்ளோ கஷ்டம். அப்பக் கூட மாமா ஸ்பாட்ல உங்களைத் தண்டிக்காம வீட்டுக்கு வந்து கண்டிச்சிருக்காங்க. வீட்டைவிட்டு வெளியில போ சொல்லியிருக்காங்க. நல்லா கேளுங்க இதுல உங்க சித்தி வரவே இல்லை. ஏன்னா அடுத்தவங்க சொல்றதைக் கேட்டு மாமா எதையும் செய்யலை.”
“பையன்மேல நம்பிக்கை வச்சிருந்த எல்லா தகப்பனுக்கும் வர்ற நியாயமான கோகம். நீங்க வெளியே போனதும் நீங்க கையெழுத்து போட்ட ஜோடியைத் தேடிப்போக, உங்கமேல தப்பு இல்லைன்னதும் அவங்களையும் வீட்டோட சேர்த்து வச்சி, தன் வளர்ப்பு தப்பு பண்ணலன்னு சந்தோஷப்பட்ட நிமிஷம், நீங்க காணாம போயிட்டீங்க. உங்களை தேடி அலையாத இடம் கிடையாது. போற இடமெல்லாம் உங்களைத் தேடித்தான் கண் அலைபாய்ஞ்சிருக்கு. நீங்க ஒருமுறையாவது உங்க அப்பாவைப் பத்தி யோசிச்சிருக்கீங்களா? இல்லைல்ல? அவரோட இத்தனை வருஷத்து இழப்பு என்னன்னு தெரியுமா? இதுல உங்கப்பாவைப் பத்தி பேசுற தகுதி உங்களுக்கு இருக்கான்னு சொல்லுங்க?”
“அம்மாவும், பையனும் பேசாமல் இருந்து இத்தனை வருஷமா தண்டனை கொடுத்திருக்கீங்க மாமாவுக்கு. எங்கம்மாவால மனசு உடைஞ்சவர், உங்களால சுத்தமா நொறுங்கிட்டார். இதுல எந்த தகுதி மாமாவுக்கு இல்லன்னு ஃபீல் பண்றீங்க? நான் கஷ்டப்பட்டேன்னு சொல்லாதீங்க. அது அந்த வயசுக்கேயான உத்வேகம். உங்க வளர்ப்புதான் உங்களை தப்பு பண்ணவோ, தப்பா யோசிக்கவோ விடல. ஒரு வேகம் வெறியில சின்ன வயசுலயே சாதிச்சிட்டீங்க. அதை இல்லன்னு சொல்ல முடியாது. இப்ப சொல்லுங்க தப்பு யார் பெயர்ல இருக்கு?” என்றாள் பதிலை எதிர்பார்த்து.