• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
4


முதல் வருடம் ஆயுத பூஜையன்று ரதி கார்மெண்ட்ஸ் அல்லோலகப்பட, அன்று விடுமுறை நாள் அதனுடன் தன்னுடைய பிறந்தநாள் என்பதால் ஸ்ரீனிவாசன் மகேந்திரன் வீடு வந்திருந்தான். அவரோ வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தை சொல்ல, தானும் வருவதாகக் கிளம்ப, பழகிய அனைத்து முகங்களும் அவனை புன்னகையுடன் வரவேற்றனர்.

அன்றுதான் முதன்முறையாக ரதி கார்மெண்ட்ஸ் உரிமையாளரைச் சந்தித்தான் ஸ்ரீனிவாசன். அவரை மட்டுமல்ல, அவரின் செல்லப் பெண் பாகீரதியையும் தான். காரிலிருந்து இறங்கி உள்ளே வந்தவரைப் பார்த்தவன் கண்கள் விரிய, ‘ஷப்பா! செம ஹாண்ட்சம் பெர்சனாலிட்டி. இந்த வயசிலும் இவ்வளவு யங்கா இருக்கார்’ என்றவன் யோசனைகளின் நடுவே,

“சாரி. ஃபர்ஸ்ட் யூனிட்ல பூஜை முடிச்சிட்டு வந்ததுல கொஞ்சம் லேட்டாயிருச்சி” என்று தாமதத்திற்காக பொதுவாக மன்னிப்பு கேட்க, அனைவரின் சந்தோஷம் முகத்தில் தெரிந்தது. காரணம் அவ்வளவு பெரிய பணக்காரன் தன் தவறை ஒத்துக் கொள்கிறானே என்று.

மெல்ல மகேந்திரனிடம் குனிந்தவன், “சித்தப்பா அவினாசி ரோட்ல இருக்கிற அவங்க மெய்ன் யூனிட்ல எத்தனை பேர் வேலை செய்யுறாங்க?” என்றான் சந்தேகமாய்.

“இங்க நூறு பேர்னா, அங்க ஐநூறு பேர். ஏன் கேட்கிற?”

“எல்லாம் ஜெனரல் நாலேஜை வளர்த்துக்கதான். நானும் இப்படி செகண்ட் தேர்டுன்னு ஆரம்பிக்க வேண்டாமா.”

“கண்டிப்பா ஆரம்பிப்பீங்க தம்பி நீங்க” என்றார் மகேந்திரன்.

பூஜை முடித்து தனியாக அனைவருக்கும் சாக்லேட்டும் கேக்கும் கொடுக்க, ‘பார்றா! என் பிறந்தநாளுக்கு இவர் சாக்லேட் தர்றார்” என ஸ்ரீனிவாசன் மனதினுள் நினைத்தான்.

“இவன் என்னோட பையன் ப்ரவீண். இவ என்னோட பொண்ணு பாகீரதி. இவளுக்கு இன்னைக்குப் பிறந்தநாள். அதனாலதான் இந்த எக்ஸ்ட்ரா சாக்லேட்ஸ்” என்றபொழுதுதான் கவனித்தான், தன்னை விட ஒன்றிரெண்டு வயது மூத்த ஒரு பையனும், பதிமூன்று வயதுச் சிறுமியும் நின்றிருந்ததை. அந்தப் பெயரின் வித்தியாசமும், தன் பிறந்தநாளில் அவளும் பிறந்திருந்ததாலேயே அவளைப் பார்த்தான். அதன்பின் அதை மறந்தே போனான் என்பதுதான் உண்மை.

பி.எஸ்ஸி முடித்து அதே கல்லூரியிலேயே, MBA (Apparel Business (UnderII) Apparel Merchanting) படிப்பு முடிந்ததும் திரும்பவும் அவர்களிடமே பணம் கடனாக வாங்கி A.S.Garments & Fashion Wear ஆரம்பித்தவன், அடுத்த ஒரு வருடத்திற்குள் சென்னையில் ஜவுளிக்கடை கொஞ்சம் பெரிய அளவில் ஆரம்பிக்க இடம் பார்க்கையில், திருப்பூரில் தன்னுடன் படித்து தற்பொழுது சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்க்கும் நண்பன் சுதர்ஷனின் வீட்டிற்கு வந்திருந்தான்.

அப்பொழுது தங்களின் கல்லூரி கல்ச்சுரல் ப்ரோகிராமிற்கு மதன் தன் அண்ணன் சுதர்ஷனை அழைத்திருக்க, அவன் தன் நண்பனையும் இழுத்து வந்திருந்தான்.

“என்ன தர்ஷா இதெல்லாம்? எனக்கு இஷ்டமில்லைன்னு தெரிஞ்சும் அதை இதை சொல்லி இழுத்துட்டு வந்துட்ட?” என்றான் சலிப்பாய்.

“ஸ்ரீ உனக்கே ஓவரா தெரியலயா. உன்னை என்ன பப்புக்கும், பாருக்குமா கூப்பிட்டு வந்திருக்கேன். காலேஜ்கு தானடா என்ஜாய்.”

“பொண்ணுங்க இருக்கிற இடத்துல என்னடா என்ஜாய் வேண்டிக்கிடக்கு. இரு வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட வத்தி வைக்கிறேன்.”

“வத்தி மீன் நண்பா?” என்றான் கேள்வியாய்.

“ம்... மீனிங்கு...” என கேலியாய் கேட்டு, “பத்த வைக்கிறேன்னு இல்லல்ல.. அப்புறம் பத்த மீன்னு கேட்ப நானே சொல்லிருறேன். திட்டு வாங்கித் தர்றதுன்னு அர்த்தம்.”

“ஓ... செய் செய். அப்பத்தான் வயசுக்கு வந்த பையன் ஒருத்தன் வளர்ந்து வீட்ல இருக்கான்னு நினைப்பாங்க” என்றான் அசால்ட்டாக.

அவனுக்கு இரண்டு அடிகள் போட்டு, “இருபத்தி நாலு வயசாகப்போகுது இன்னும் வளராமலா இருக்கப்போற. ஆனா, இந்த வளர்ச்சி வேண்டாம்டா தர்ஷா” என்று பெண்களை நோக்கி கைநீட்டும் பொழுது, மதன் முகம் கொள்ளா சிரிப்புடன் வர, “அப்பா அம்மாவால வர முடியலடா” என்றதும், “பரவாயில்லண்ணா. நீங்க ரெண்டு பேர் வந்திருக்கீங்களே அதுவே போதும்” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.

உள்ளே அவர்களுக்கு அமர இடம் தேடுவதற்குள் ஆரம்ப நிகழ்ச்சியாக பரதநாட்டியம் முடிந்து, அடுத்து இரண்டாம் ஆண்டு மாணவிகளின் இயற்கையா, செயற்கையா என்ற நாடகம் ஆரம்பித்தது. அதற்கு மேல் பொறுமையில்லாமல், “டேய் தர்ஷா! இதுக்குமேல என்னால முடியாது. நான் கிளம்பறேன்” என்று எழப்போனான்.

“BFT (Bachelor of Fashion Technology) Firsy Year Student பாகீரதியின் கவிதைக் கிறுக்கல்கள்” என்றதும் கைதட்டலால் அவளை வரவேற்க, வெளியேற எழுந்தவன், “பாகீரதி” என்ற பெயரில் அமர்ந்து மேடைக்கு வந்தவளை கண்ணிமைக்காமல் பார்த்தான். ‘அவளா இது! அவளேதானா!’ இத்தனை ஆண்டுகள் கழித்தும் மாறாதிருந்த அந்த முகம். இன்னொரு முறை கண்டால் தனக்கு நினைவிருக்குமோ என எண்ணிய முகம் கண்முன்னே. இமை மூடாமல் அவளையே பார்த்திருந்தான்.

மேடைக்கு வந்தவள், “அனைவருக்கும் என் மாலை வணக்கங்கள். நான் பாகீரதி பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட். ஆண்கள் கொஞ்சமே கொஞ்சம் என்னை மன்னிக்கணும். இப்ப நான் பேசப்போறது தனியார் சேனல்ல சமீபத்துல ஒரு ப்ரோக்ராம் பார்த்தேன். அதுல பாதிச்ச ஒரு விஷயம்தான் இப்படி எழுதத் தூண்டியது. என்னடா போரடிக்கப் போறாளேன்னு புலம்பாதீங்க.”

“அந்த ப்ரோக்ராம்ல, பையன்கள் எப்பப்பாரு பின்னாடியே சுத்தினா அவங்க மேல எப்படி லவ் வரும்னு பொண்ணுங்களும், நாங்க பின்னாடி சுத்தலன்னா எங்களை எப்படி அவங்களுக்கு பிடிக்க வைக்கிறதுன்னு பையன்களும் பேசினாங்க. ஒரு பையன் நாற்பது தடவை காரித்துப்பினாலும் துடைச்சிப் போட்டுட்டு பின்னாடியே சுத்துவேன்னு சொல்றான். இதைக் கேட்ட அவன் பேரண்ட்ஸ் மனசளவுல எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு அவன் கவலைப்படல. இந்த மாதிரி பையன்கள்தான் கல்யாணத்துக்குப் பின்னாடி சின்னதா ஒரு சண்டை வந்தாலே போய் சூஸைட் பண்ணவோ, இல்ல டைவர்ஸ் பண்ணவோ செய்வாங்கன்னு சைன்ஸ் சொல்லுது.”

“அதுலயும், ஒன்றிரெண்டு பொண்ணுங்க, அவங்களைக் கவர்ற மாதிரி செய்தா நாங்க லவ் பண்ண ரெடின்னு சொன்னாங்க. ஆனா, ஒரு பொண்ணு மட்டும் தொந்தரவு செய்யுற பையனை எப்படிங்க லவ் பண்ணத்தோணும். எரிச்சல்ல ஆரம்பிச்சி அவன் மேல வெறுப்புத்தான் வரும். நான் அவாய்ட் பண்ணத்தான் செய்வேன்னு கடைசிவரை தன்னோட நிலையில தெளிவா இருந்தாங்க. கடைசிவரை அவங்க பாய்ண்டை யாரும் கண்டுக்கவே இல்லைன்றது தான் உண்மை.”

“ஒரு சாங் பாடி பாக்ஸுக்குள்ள பலூன், டெடிபியர் பொம்மையை வைச்சி சர்ப்ரைஸ் கொடுத்ததும், ஒரு பொண்ணு இப்படி வித்தியாசமா லவ் ப்ரொபோஸ் பண்ண கத்துக்கோங்களேன்டான்னு பசங்களைப் பார்த்து சொல்றா. அந்தப் பொண்ணுக்கு பரிசு கொடுத்து என்கரேஜ் பண்றாங்க அந்த சேனல்காரங்க. ஏன்னா பப்ளிக்கா பொண்ணுங்களுக்கு இப்படி பண்ணினா பிடிக்கும்னு ஓபனா உண்மையை ஒத்துக்கிட்டாளாமாம்! எல்லா பொண்ணுங்களும் அவளைப்போல இருப்பாங்களா என்ன? அப்ப கடைசிவரை ஒரே நிலையில இருந்த அந்த பொண்ணுக்கு பெயர் அவங்க அகராதியில என்ன? ஒரு பொண்ணு நல்லவளா இருக்கிறது தப்பா என்ன?”

“இல்லவே இல்லை. ஷி இஸ் குட் கேர்ள். அன்ட் குட் கேரக்டர்” என்ற குரல்கள் மாணவிகளிடமிருந்து பாய்ந்து வந்தது.

“ம்... நானும் அதைத்தான் ஃபீல் பண்ணினேன். ஆண்கள் சார்பா பேச வந்திருந்த அந்த இளம் பாடலாசிரியர் கொடுத்த கமண்ட் எனக்கு இன்னும் கடுப்பாயிருக்கு. பசங்க நம்ம பின்னாடி சுத்தினா நாம மயங்கிருவோமாம். அது இயற்கையாம். அதென்ன பொண்ணுங்க லவ் பண்ணமாட்டோம்னா, ஏகப்பட்ட இல்லைகள். போன் பில் கட்டத்தேவையில்லை. ஈ.பி பில் கட்டத் தேவையில்லைன்னு கவி வடித்தேன்னு சீன் போடுறாரு. ஏங்க பொண்ணுங்க அவ்வளவு மோசமா இருக்கோம்னு இவங்களே கணிச்சிருவாங்களா? அவருக்கும் அக்கா, தங்கைன்னு இருந்திருந்தா பொண்ணுங்களைப் பற்றிய தவறான கமெண்ட் கொடுத்திருக்க மாட்டாரோ! அதுக்கான மறுப்புக் கவிதைதான் இது. உடனே பெர்சனலா லவ் பெயிலியரா கேட்டுராதீங்க. இது அப்படி இல்லை ஒரு ஆதங்கம்தான். இதுக்கே எங்க மேம்கிட்ட கெஞ்சிக்கேட்டு பெர்மிஷன் வாங்கியிருக்கேன். இந்த கவிதை லவ் பெயிலியரானவங்களுக்கும் பொருந்தும். ஆண்கள் அமைதிகாக்கவும்” என்று நிதானமாக ஆரம்பித்தாள்.

அக்கவிதையை அவனுள்ளும் விதைத்து!

உன் நினைவுகள் - எனை

நெருங்கத் தேவையில்லை!
உண்ணாமல் உறங்காமல்
உனக்காக உருகத் தேவையில்லை!
உனக்காக ஏங்கி வாசலில்
வாசமிருக்கத் தேவையில்லை!
உன்னுறவுகளை என்னுறவாக
எண்ணத் தேவையில்லை!
உனைக்காண - என் தாயிடத்தில்
பொய்யுரைக்கத் தேவையில்லை!
மறைந்து மறைத்து
உனை சந்திக்கத் தேவையில்லை!
தோழிகளின் சீண்டல் பேச்சுக்களை
கேட்கத் தேவையில்லை!
வாட்சப்பில் வம்படியாகப்
பேசத் தேவையில்லை!
கைபேசியை கையிலேயே
வைத்திருக்கத் தேவையில்லை!
கடன்காரி போல் கால்கடுக்க
காத்திருக்கத் தேவையில்லை!
உன் வரவு இல்லையெனில்
மனம் மரண வலியை
உணரத் தேவையில்லை!
எனைப் பொய்யாக வர்ணிக்கும்
உன் பசப்பு வார்த்தைகளை
ரசிக்கத் தேவையில்லை!
நான் காணும் காட்சிகளை
உன்னிடம் பகிரத் தேவையில்லை!
ஒரு தோல்வியில்
துவழ்ந்து விடுவேனென்று
நீ எண்ணத் தேவையில்லை!
நீ மறுத்ததால்
இத்தனை தேவையில்லைகள்
என் வாழ்வில்!
ஆனால்,
தேவை! எனக்கேயே எனக்கான
எனைப் புரிந்துணர்ந்து,
என் வாழ்வை மலர வைக்க
ஒரு அன்பான கணவன்!
காத்திருக்கிறேன்
என் கணவனை காதலனாக்க!

தேவை எந்தன் தே(கண)வனே!

பேசி முடித்ததும் ஆண்களை விட பெண்கள் கரகோஷம் காதைப் பிளக்க, அனைவருக்கும் நன்றி சொல்லி கீழே இறங்கி வரவும் அவளுக்கு கைகொடுத்து வாழ்த்துச் சொல்லி அவளை ஒரு விஐபி ஆக்கினார்கள்.

ஸ்ரீனிவாசன் தூர நின்று அவளையே பார்த்திருக்க, மதன் தன் நண்பர்களுடன் அவளை நெருங்குவதைப் பார்த்தவன், என்ன என்ற ஆர்வத்தில் நண்பனிடம் இதோ வருகிறேனென்று அவர்களை நோக்கிச் செல்ல, அங்கே ஒருவன் அவளிடம் “ஐ லவ் யூ” சொல்லி பூ கொடுத்துக் கொண்டிருந்தான். மனதில் எழுந்த அதிர்வை மறைத்து அவளின் பதில் என்னவாக இருக்குமென்று பதற்றத்துடன் பார்த்திருந்தான்.

அவளோ சட்டென்று சிரித்து, “என்ன கூட்டத்தோட வந்து ஜோக்கடிக்கிறீங்களா? லவ் பண்ற வயசா இது. போங்க போயி படிக்கிற வேலையைப் பாருங்க” என்று அவர்களை விரட்ட, அவர்களின் முகம் சுருங்கியது. அதைப் பார்த்தவள், “நல்லா பாரு. உனக்கு இன்னும் மீசை கூட சரியா முளைக்கலை. அதுக்குள்ள பொண்ணு தேட ஆரம்பிச்சிட்ட. இதெல்லாம் தப்புப்பா” என்றாள் பெரிய மனுஷியாக.

“அப்ப எனக்கு மீசை பெருசா முளைச்சதும், சொன்னா லவ் பண்ணுவியா?” என்றான் அப்பாவியாக.

வந்த சிரிப்பை அடக்கி “சான்ஸ் இல்லதான். இருந்தாலும் உனக்கு மீசை முளைக்கட்டும் பார்க்கலாம். பட், என் பின்னாடி சுத்தின மவனே கொன்னுருவேன் உன்னை. இப்ப நான் பேசினதே பொண்ணுங்க பின்னாடி பசங்க சுத்துறது பிடிக்காதுன்னுதான். அதைக் கேட்டும் வந்திருக்கன்னா உனக்கு தைரியம் ஜாஸ்திதான். மீசை தானாவே வளரும். படிப்பு அப்படியில்லை. அதனால முதல்ல அதைக் கவனி” என்று அவனை மிரட்டி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

அவள் பேசியதில் நிம்மதியடைந்த ஸ்ரீனிவாசன், ‘அவள் அனைத்தையும் சமாளிப்பாள்’ என்ற எண்ணத்தில் அவளைத் தேடிய மனதைக் கட்டுப்படுத்தி நண்பனுடன் கிளம்பினான்.

தற்பொழுது, ‘அது தப்போ! அவளை அவ்வப்பொழுது கண்காணித்திருக்க வேண்டுமோ! அவளுக்கு தனியாக எதாவது பிரச்சனையா? என்ன பண்ணிட்டிருக்கா அவ?’ ஒரு நொடியில் அவளை தவறவிடப் பார்த்த தன்னையே நொந்து தலையைப் பிடித்தபடி அமர்ந்தான். ‘என்ன செய்யலாம்?’ என யோசித்தவன் நினைவில் மதன் வர, தற்சமயத்திற்கு அவனை உபயோகப்படுத்திக்கலாம் என்று மதனை கைபேசியில் அழைத்து, மாலையில் கல்லூரியில் அவனைப் பார்க்க வருவதாகச் சொல்லி வைத்தான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
மாலையில் மதனுக்காக காத்திருக்க, கண்களோ பாகீரதியைத் தேடியலைந்தது. அவனின் அலைப்புறுதலை குறைப்பதற்காகவே தாரிணியுடன் வந்தவள், தாரிணி விடுதி மாணவி என்பதால் அவளுக்கு விடைகொடுத்து, வெளியே வந்து கொண்டிருந்தவள் முகம் ஏனோ ஒரு சோகத்தை பிரதிபலித்தது.

அவளையே பார்த்திருந்தவன் அவள் பின் வந்த மதனை கவனிக்கவில்லை. ஸ்ரீனிவாசன் தன்னைத்தான் பார்க்கிறான் என்று கையசைக்க, அவனின் பார்வை தன்னிடமில்லை என்பதை உணர்ந்தான். தன்னைக் கடந்து சென்றவளையே ஸ்ரீனிவாசன் பார்த்திருக்க, தான் அருகில் வந்தும் அவன் பார்வையில் மாற்றமில்லை எனவும், அண்ணன் நண்பனின் பார்வை போன வழி கண்டு அதிர்ந்தான் மதன். ‘இல்லை இருக்காது’ என மதன் நினைக்க,

அதற்கு வழியல்லாமல் அவள் புறம் கைநீட்டி, “மதன் இனிமேல் ரதியை யாரும் லவ் பண்றேன்னு டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. அதே டைம் அவளுக்கு மத்தவங்களால எந்த பிரச்சனையும் வரக்கூடாது. அன்னைக்கு திருப்பதியில மாலையோட நின்னுட்டிருந்தானே. அவன் பெயரென்ன?” என கேட்டான்.

“அண்ணாஆஆ!” என அதிர்ந்தவன், ‘இவங்களுக்கு எப்படி தெரியும்?’ என்று பயந்துபோய் பார்த்தான்.

“முதல்ல எனக்கு பதில் சொல்லிட்டு திருதிருன்னு முழி” என்றான் குரலை உயர்த்தி.

“அ..அவன் நிதிஷ்.”

“ஆங்! அவன்தான். அவன்கிட்டேயும் சொல்லி வை” என்றான் அழுத்தமாய்.

சரியென தலையாட்டியவன், “அண்ணா ஒரு சின்ன சந்தேகம்? பாகீரதியை நீங்க லவ் பண்றீங்களா?” ஸ்ரீயின் பார்வையில் இருந்த வித்தியாசத்தையும், பேச்சில் இருந்த அக்கறையையும் கொண்டே அப்படிக் கேட்டான்.

அவனை முறைத்து, “அவ என்னோட அத்தைப் பொண்ணு. அதாவது முறைப்பொண்ணு. புரியுதா? ஒழுங்கா நான் சொல்றதை மட்டும் செய். இல்ல இவன் என்ன சொல்லி நான் என்ன கேட்கிறதுன்னு நினைச்சேன்னு வையி, நீ திருப்பதி போனது மட்டும்தான் உங்க வீட்டுக்குத் தெரியும். ஏன் என்னன்ற விஷயம் இப்பவரை தெரியாது. தெரிஞ்சது உன்னோட நிலைமையை யோசிச்சிக்கோ” என்றான் சற்று கறாராகவே.

“அச்சோ! வேண்டாம்ணா. நான் பார்த்துக்கறேன் எல்லாத்தையும். தப்பா எதாவதுன்னா என்னால முடியாத பட்சத்துக்கு, உங்களைக் கூப்பிடுறேன். ப்ளீஸ்ணா வீட்டுல மட்டும் சொல்லிராதீங்க” என்றான் கெஞ்சாத குறையாக.

“இது. இதை மனசுல வச்சிட்டு நடந்துக்கோ. இன்னொரு டைம் லவ்கு ஹெல்ப் பண்ணினேன் அப்படியிப்படி கேள்விப்பட்டேன் தொலைச்சிருவேன்” என மிரட்டி காரில் ஏறப்போக,

அதே நேரம் சற்று தள்ளி பின்னாலிருந்த தன் காரில் ஏறப்போன பாகீரதி தற்செயலாக திரும்பிப் பார்த்தாள். பக்கவாட்டாக நின்றிருந்த ஸ்ரீயின் உருவம் கண்ணில்பட்டது. ஏனென்று தெரியாமலேயே அவனின் முகத்தைக் காண எண்ணி அவனையே பார்த்திருந்தாள்.

தன் கார் கண்ணாடியில் அதைக் கண்டவன், ‘ஏன் இப்படிப் பார்க்கிறா? ஆண்களை இப்படி பார்க்கும் ரகமில்லையே?’ என யோசிக்க, முகத்தில் பல்ப் எறிந்தது ஸ்ரீனிவாசனுக்கு. ‘ஓஹ்ஹோ! என்னை அன்னைக்கு முழுசா பார்க்கலைல்ல. அதான் நானாயிருக்குமோன்னு ஒரு சந்தேகத்துல பார்க்கிறா போல” என்று சிரித்தபடியே காரை எடுத்துக்கிளம்பினான்.

அவளின் ‘ப்ச்... முகம் பார்க்கலையே’ என்ற பாவனை கண்ணில் பட்டது. போகும் வழியில், ‘மதனிடம் ஏன் அத்தை பெண் அதிலும் முறைப்பெண்ணென்று சொன்னேன்?’ என யோசித்ததற்கு விடையில்லை அவனிடம். ‘இது காதலா?’ என்றால் இல்லை என்பான். அதையும் தாண்டி ஒரு உரிமையுணர்வு அவளிடம் அவனறியாமல் வந்தது.

அவன் காரில் ஏறியும் சில வினாடிகள் அவ்வழியே பார்த்திருந்தவள், ‘ப்ச்..’ என தோள்குலுக்கி ஓட்டுனரிடம் காரை எடுக்கச் சொல்லி வீடு வந்து சேர, வரவேற்பறையில் அமர்ந்திருந்த தந்தையை பார்த்தும், பார்க்காததுபோல் உள்ளே செல்லபோனாள்.

“அம்மு இங்க வா. எவ்வளவு நாளாச்சி உன்கிட்ட பேசி” என்றழைத்தார்.

“இ...இல்ல நான் ரெப்ரெஷாகிட்டு வர்றேன்” என்று முகம் பாராமல் பதிலளித்து மாடி ஏறியவளையே வித்தியாசமாக பார்த்தவர், “சந்திரா! ஏன் அம்மு ஒருமாதிரியா இருக்கா? ஒரு நாள் கழிச்சி வந்தாலே சந்தோஷமா கழுத்தைக்கட்டி கொஞ்சிறவ, ஒருவாரம் கழிச்சி வந்திருக்கேன், எந்தவொரு ரியாக்ஷனும் இல்லாம போறா? எதாவது திட்டினியா?” என்றவர் சற்று யோசித்து, “எதாவது லவ் அஃபேர்” என இழுத்து, “அப்படி எதுவுமில்லையே?” என்றார் இருக்கக்கூடாது என்ற மனதுடன்.

“என்ன நீங்க அப்படில்லாம் எதுவுமில்லை. நார்மலாதான் இருக்கிறா.”

“சரி நான் போய்ப் பார்க்கிறேன்” என்றவரைத் தடுத்து, “வேண்டாம் கொஞ்சம் அப்செட்டா இருக்கா. நான் காஃபி கொடுத்துட்டு கீழ வரச்சொல்றேன்” என்று கிச்சன் சென்று மகளிற்கு பிடித்தாற்போல் காஃபி போட்டு மேலே செல்ல, முகம் கூட கழுவாமல் குப்புற விழுந்து கிடந்த மகளை ஆச்சர்யமாகப் பார்த்து, “அம்மு என்ன பழக்கம் இது? எழுந்திருச்சி ஃபேஷ்வாஷ் பண்ணிட்டு வந்து காஃபி எடுத்துக்கோ” என்றபடி அருகில் வந்தார்.

அதற்குள் சுதாரித்தவள் கண்ணீரைத் தலையணையில் துடைத்து, தாயைப் பார்க்காமலேயே, “இதோ வர்றேன்மா” என குளியலறைக்குள் நுழைந்தாள். ஏனோ தன் அப்பாவைப் பார்க்க எரிச்சல், ஆத்திரம், அருவருப்பென அனைத்தும் போட்டிபோட, அவர் சட்டையைப் பிடித்து கேட்க முடியாத கோபம் அழுகையாய் வெடித்தது.

“சீக்கிரம் இந்த அவஸ்தைக்கு முடிவு கட்டணும்” என்று முடிவெடுத்தவள் தாயிடம் பேச தருணம் பார்த்துக் கொண்டிருந்தாள். முகம் கழுவி வெளியே வந்தவளிடம் காஃபி கப்பை நீட்ட, மறுக்காமல் வாங்கியவள் அதை குடிக்காமல் அருகிலுள்ள டேபிளில் வைத்து தாயின் கைபிடித்திழுத்து, கட்டிலில் உட்காரவைத்து மடியில் படுத்தாள்.

“என்னாச்சிமா? இன்னும் அந்த டென்சன்லயிருந்து வெளில வரலையா?”

தாய் எதைச் சொல்கிறார் என்று புரிந்தவள், “ப்ச்.. அதெல்லாம் இல்லம்மா. அந்த பிரச்சனையை கோவிலோட முடிச்சிட்டேன்ம்மா. இது வேற” என்று கூறியவள் வேகமாக, “தப்பால்லாம் இல்லம்மா” என்றாள் எங்கே திரும்பவும் மகள் காதல் பிரச்சனையில் மாட்டிக்கொண்டதாக எண்ணி விடுவாரோ என்று.

“அந்த நம்பிக்கை எனக்கு உன்மேல எப்பவும் உண்டுமா. நாம சொல்றதை நம்பாமல் போனால், எந்தளவு மனக்கஷ்டம் அனுபவிக்கணும்னு அனுபவத்துல உணர்ந்திருக்கேன்டா” என்றார் தன் போக்கில்.

“ஹ்ம்... ம்மா” என இழுக்க,

“என்னமா? எதுவாயிருந்தாலும் கேளு?”

“அது வானதி இருக்காள்லமா, அவ லீவ்கு பெங்களுர்ல இருக்கிற அவ தாத்தா வீட்டுக்கு போறாளாம். மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா, அவங்க பிள்ளைங்கன்னு ரொம்ப ஜாலியா இருக்கும்னு சொல்றா. எனக்கு மட்டும் ஏன்மா யாரும் இல்லை? இருந்திருந்தா எனக்கு தேவையான அட்வைஸ் பண்ணியிருப்பாங்கள்ல. நானும் நல்ல பொண்ணா இருந்திருப்பேன்ல” என்று வருத்தத்துடன் சொன்னவள் மனதினுள், ‘அப்பாவும் நல்லவங்களாகவே இருந்திருப்பாங்கள்ல’ என நினைத்தாள்.

அவளுக்குத் தெரியுமா? தவறு செய்பவனுக்கு குடும்பம் தடைக்கல் அல்ல என்று.

அதைக் கேட்டதும் சற்று உடல் அதிர்ந்ததோ, சந்திராவின் கண்கள் கண்ணீரைக் கொட்ட தயாராகும் முன் அதை அடக்கி, வந்த அழுகையை மகள் உணருமுன் தொண்டையோடு நிறுத்தி, “அப்படில்லாம் எதுவுமில்லமா. நீ எப்பவும் நல்ல பொண்ணுதான். உன்னை நீயே எப்பவும் தாழ்த்திக்கக் கூடாது” என்றவர், ‘உனக்குன்னு தாத்தா, பாட்டி. தாய்மாமா ரெண்டு பேர். அத்தை ஒருத்தங்க. அவங்க பிள்ளைகள்னு ஒரு பெரிய குடும்பமே இருக்குமா. ஆனா, அதை உன்கிட்ட சொல்ல முடியாத துர்பாக்கிய நிலையில் இருக்கேன்டா அம்மு. என்மேல் நம்பிக்கை இல்லாதவங்க நமக்கு வேண்டாம்டா’ என்றவர் மனமும் இறுகியது.

“அப்ப நான் நல்ல பொண்ணுதானம்மா?” என கேட்டாள்.

அவளின் கேள்வியில் சந்திரா நினைவிலிருந்து மீள, அதை அறியாதவளோ, “நம்ம சொந்தக்காரங்க எங்கம்மா இருக்காங்க? எனக்கு அவங்களைப் பார்க்கணும். அவங்களோட பழகணும்னு ஆசையா இருக்கும்மா?” என்றாள் தன் ஏக்கத்தைக் குரலில் காட்டி.

“உனக்கு அதுக்கு அதிர்ஷ்டம் இல்ல அம்மு. இருக்கிறதை வச்சி சந்தோஷப்படு. இப்ப நீ கேட்கிறது பேராசை” என்றார்.

“அப்ப எனக்கும் எல்லாரும் இருக்கிறாங்களாம்மா?” என்றாள் சந்தோஷத்தில் எழுந்தமர்ந்து.

“நான் எப்ப அப்படி சொன்னேன்?”

“நான் கேட்டதுக்கு நீங்க மறுப்பு சொல்லலைல. அதுவும் இல்லாம அதுக்கு அதிர்ஷ்டம் இல்லன்னுதான் சொன்னீங்களே தவிர, நமக்கு யாருமே இல்லைன்னு சொல்லவே இல்லையேம்மா?”

“ப்ச்... அம்மு இந்த பேச்சை விடு.”

“எதையோ மறைக்கிறீங்கன்னு தெரியுது. என்னன்னு தெரியலை. இருந்தாலும் இப்ப விட்டுருறேன். ஆனா, இன்னொண்ணு கேட்பேன் அதுக்கு நீங்க சம்மதிச்சே ஆகணும். அது மாதிரி இதையும் விட்டுரமாட்டேன்ம்மா” என்றாள் குரலில் உறுதியைக் கொண்டு வந்து.

“என்ன கேட்கப் போற?”

“ம்மா... இன்னும் டூ வீக்ஸ்ல எக்ஸாம் முடிஞ்சிரும். நெக்ஸ்ட் இயர்ல நான் ஹாஸ்டல்ல தங்கி படிக்கலாம்னு இருக்கேன்.”

“அம்மு!” என அதிர்ந்தவர், “ஹாஸ்டெல்லாம் எதுக்கு? உனக்குத்தான் காருக்கு டிரைவர் போட்டு அனுப்புறோமே. அப்புறம் என்ன? நான் உனக்காகத்தான் நைட் எந்த ப்ரோக்ராமும் போகாம, ஈவ்னிங் சீக்கிரமே வீட்டுக்கு வர்றேன். நீயும் இல்லன்னா எப்படிமா? அது சரி என்னை விடு உங்கப்பாவை விட்டுட்டு இருந்திருவியா?”

‘அப்பாவாலதான்மா ஹாஸ்டல்கே போகப்போறேன்’ என்றெண்ணி, “அதென்ன நீங்க இல்லைன்னா நான் இருந்திருவேன்ற மாதிரி பேசுறீங்க. எனக்கு நீங்கதான்ம்மா முக்கியம்.”

“பார்றா! என் பொண்ணு பெரிய மனுஷி மாதிரிலாம் பேசுறா” என கிண்டலாக சொல்லி, “ஹாஸ்டல் வேண்டாம்மா” என்றார்.

“ம்மா.. ப்ளீஸ் எனக்கு ப்ராஜெக்ட் ஒர்க் நிறைய இருக்கு. அங்க தாரிணி இருக்கா. என்னை அவ பத்திரமா பார்த்துப்பா. அவளோட சேர்ந்து கம்பைன் ஸ்டடி பண்ணினா நிறைய ஐடியாஸ் கிடைக்கும்.”

“யோசிக்கிறேன். அதுக்கு இன்னும் ஒன் மன்த் மேல இருக்குல்ல பார்த்துக்கலாம். அப்புறம் அப்பா உன்னைப் பார்க்கணும் சொன்னாங்க .சீக்கிரம் கீழ வா” என்று மகளை எழுப்பி வெளியே செல்ல,

“ம்மா நான் அப்புறமா பார்க்கிறேன் சொல்லுங்க.”

“ஏன்மா?”

“ப்ளீஸ்மா. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன்.”

“என்னவோ சொல்ற. சரி நான் அப்பாகிட்ட சொல்றேன்” என்று வெளியேறினார்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top