- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
7
பாகீரதி ரிப்பன் வெட்டி, உள்ளே நுழையப்போக, மகள் முன்னே செல்ல வேண்டுமென்று தாய் தந்தை நின்று விட்டனர். அவர்களுக்கு இடம் காண்பிக்கவென்று, வேகமாக சந்திராவின் மறுபுறம் வந்த ஸ்ரீனிவாசன் அதேநேரம் உள்ளே நுழைய, சந்திரா பின்னே வர இருவரும் ஒருசேர காலடி எடுத்துவைத்து ஜோடியாக உள்ளே நுழைகையில், புகைப்படமும், ஒளிப்படமும் அவர்களை பதிவேற்றிக் கொண்டது.
உள்ளே சென்றதும்தான் இருவரும் கவனித்தார்கள் தாங்கள் மட்டும் வந்ததை. அதை உணர்ந்ததும் ஒன்றாகத் திரும்ப, அந்த ஜோடிப்பொருத்தம் பல மனங்களில் ஆழப்பதிந்தது.
“என்னமா அங்கேயே நின்னுட்டீங்க? நீங்க வர்றீங்கன்னு நானும் முன்னாடியே நுழைஞ்சிட்டேன்” என்று வேகமாக தாயினருகில் வந்தாள்.
“ஏய் அம்மு! நில்லு நில்லு வெளியில வராத” என அவளை உள்ளேயே நிறுத்தி, “வயசுப்பொண்ணு நீ முதல்ல காலடி எடுத்து வைக்கணும்னுதான் விட்டுட்டேன்” என்றவருக்குள், ‘அதுதான் என் எல்லை’ என மனம் வாதிட்டது.
“உள்ள வாங்க அத்தை” என தன் தாயை உள்ளே அழைத்தவனை, 'அத்தையா?' என்று பார்த்தவள், ‘இந்த வார்த்தையை ஏதோ காலம் காலமாக சொல்லிட்டிருந்த மாதிரி உருகுறான்’ என நினைக்க, அதற்குள் “இதோ வர்றோம் சீனு” என்று அவர்கள் உள்ளே வந்தனர்.
“சீனுவா?” என அவன் பார்த்தான். தன் வீட்டிலுள்ளவர்கள் மட்டும் அழைக்கும் பெயராகிற்றே. ‘அக்கா கூப்பிடுறதைப் பார்த்து கூப்பிடுறாங்களோ?’ என சந்திராவை அவன் பார்த்திருக்க,
“என்னப்பா அப்படிப் பார்க்கிற? உன் பெயர் சீனுதான? என்னமா சுகந்தி உன் தம்பி பெயர் சீனிவாசன்தான?” என்றதும் அவள் ‘ஆம்’ என்று சொன்னாள். “அதுக்கு ஏன் உன் தம்பி இப்படி முழிக்கிறான்?” அவன் முதுகில் உரிமையாய் தட்டி, “வந்து சுற்றிக் காண்பி” என்றார்.
அனைவருக்கும் சுற்றிக் காண்பித்த பின், அங்கிருந்த நாற்காலியை எடுத்துப்போட்டு அமரவைத்து, அவனுக்குத் தெரிந்த சிலர் வர, அவர்களை வரவேற்று அந்த பொறுப்பை சுதர்ஷனிடம் ஒப்படைத்து வந்தான்.
சிந்து இனிப்பு எடுத்து வர, அவளது தாய் ராதா அங்கிருந்தவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார்.
“நீங்க ஏன் சித்தி இந்த வேலை செய்றீங்க? இதுக்காக பசங்க அரேஞ்ச் பண்ணியிருந்தேனே? எங்க அவங்க?” என்று தேடினான்.
“இது நம்ம கடை. நாமதான் செய்யணுமுங்க” என்று மகேந்திரன் இடைப்புக,
‘இவர்கள் யார்?’ என்பதுபோல் பார்த்திருந்த சந்திராவிடம், “இவங்க மகேந்திரன் சித்தப்பா. இது அவங்க ஒய்ஃப் ராதா. இவ அவங்க பொண்ணு சிந்து” என்று அறிமுகப்படுத்தினான்.
“ஏனுங்க தம்பி சொந்த சித்தப்பனாட்டம் சொல்லிட்டிருக்கீங்க?” என சங்கோஜப்பட்டவரை,
“நீங்க எனக்கு சொந்தத்துக்கும் மேல சித்தப்பா. யாருமே என்னை நம்பாதப்ப, கையில எதுவுமே இல்லாம வந்த என்னை நம்பி வேலை வாங்கிக்கொடுத்து, வீட்ல ஒரு இடமும் கொடுத்து, சொந்தப் பிள்ளையா பார்த்துக்கிட்டீங்களே. யாருக்கு வரும் இந்த மனசு? இதை எந்த சூழ்நிலையிலும் மறக்கமாட்டேன். உன்னோட லட்சியம் என்னன்னு கேள்வி கேட்டு, என் மனசுல முதல் எதிர்காலத்தைப் பற்றிய விதையை விதைச்சவர் நீங்க. இதோ நீங்க போட்ட விதை மரமா நிற்குது. நான் ஆரம்பிக்கிற எல்லா கம்பெனியிலயும் உங்களுக்குன்னு ஒரு ஷேர் இருக்கும். இதை நீங்க ஏத்துக்க மாட்டீங்கன்னு தெரியும். ஆனா, கொடுக்க வேண்டியது என்னோட கடமை. இதை நீங்க ஏத்துக்கத்தான் வேணும். உங்ககிட்ட வராமல் போயிருந்தா, நான் ஒரு ரௌடியாகவோ, ஏன் பசியில கொலைகாரனாகவோ கூட மாறியிருக்கலாம். யார் கண்டா!” என்றவன் யதார்த்தத்தை உணர்ந்து கலங்கிய குரலில் சொன்னான்.
‘ஒரு ஏழை வாட்ச்மேனாக இருந்த தன்னை உயரத்தில் வைத்தவனுக்கு தான் என்ன செய்தோம். இரண்டு வார்த்தைகள் அறிவுரை சொல்லி வயிற்றுக்கு சாப்பாடு போட்டதைத் தவிர’ என மனதில் நினைத்தாலும், “நீங்க நல்ல புள்ளங்க தம்பி. அதான் நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக, எங்களை உயர்த்தி வச்சிட்டீங்க. என் பொண்ணையும் படிக்க வச்சி உயர்ந்த இடத்துல வச்சிருக்கீங்க. இதுக்கே காலத்துக்கும் நாங்க நன்றிக்கடன் பட்டிருக்கோம்” என்றார் உணர்ச்சிவசப்பட்டு.
“ஹையோ! சித்தப்பா உங்களைத் திருத்தவே முடியாது. நன்றிக்கடன் பட்டது நான். நான் சொல்ல வேண்டிய டயலாக்கை அப்படியே நீங்க பேசுறீங்க.”
“அண்ணா இதையெல்லாம் சொன்னீங்கள்ல. அதையும் சொல்லிருங்க” என்றாள் சிந்து.
“எது?” என்பதுபோல் அவன் விழிக்க,
சந்திராவைக் காண்பித்து, “இவங்க சொன்னாங்கள்ல முறை வைத்து கூப்பிடுறதைப் பற்றி. அதையே தான் அண்ணாவும் சொன்னாங்க. அப்பா மாமான்னு கூப்பிடச் சொன்னதுக்கு, இல்ல உங்க வீட்டுல பொண்ணிருக்கு. அதனால, நான் சித்தப்பான்னு கூப்பிடறேன்னு சொன்னீங்கள்ல. அந்த கதையை.”
அவள் தலையில் மெல்ல தட்டி, “ஏய் வாலு அதான் பப்ளிக்கா போட்டு உடைச்சிட்டியே. அப்புறம் நான் சொல்றதுக்கென்ன இருக்கு?” என்றான்.
‘ப்பா... என்னா பெர்சனாலிட்டிடா சாமி! சும்மா அசத்துறான். நாம பார்த்த பசங்கள்லாம் இப்படி இல்லையே. ம்... நல்லவனாதான் இருக்கான்’ என்று திரும்பவும் ஒரு சான்றிதழ் கொடுத்தாள். ‘அம்மா மட்டும் அத்தை சொல்லச் சொல்லாம இருந்திருந்தா, நம்மளையும் தங்கை லிஸ்ட்ல சேர்த்திருப்பானோ! இவங்களுக்கு நான் தங்கையா? சே...சே தங்கை போஸ்டிங் நல்லாயிருக்காது’ என்றது மனம்.
‘ஹேய் பாக்ஸ்! அப்ப என்ன போஸ்டிங் வேணும்?’ மனசாட்சி கேள்வி கேட்டது.
‘அதான் அத்தைன்னு சொல்லிட்டாங்கள்ல. அப்புறமென்ன? அத்தைப் பொண்ணு போஸ்டிங்தான்.’
‘ஹா...ஹா.. ஸ்ட்ரெய்ட்டா முறைப்பொண்ணுன்னு சொல்லேன். அதுக்கு ஏன் அத்தைப் பொண்ணுன்னு இழுக்கிற?’ என மனசாட்சி உள்ளுக்குள் குதித்துக் குதித்து சிரிக்க... அதில் கடுப்பானவள், ‘உனக்கு வேற வேலையே இல்லையா மனசாட்சி? மனுஷன கடுப்பேத்தாம ஒழுங்கு மரியாதையா ஓடிப்போயிரு’ என்று அதன் தலையைத் தட்டி அடக்கினாள்.
மகேந்திரனிடம் “உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்” என்று கணபதி கேட்டார்.
“சார்! நான் உங்க ரதி கார்மெண்ட்ஸ் செகண்ட் யூனிட்ல, பதினைஞ்சி வருஷமா வேலை பார்த்தனுங்க. தம்பி கம்பெனி ஆரம்பிச்சதும்தான், செக்யூரிட்டி வேலையெல்லாம் வேண்டாம்னு கம்பெனியை பார்த்துக்கச் சொல்லிட்டாங்க. பொண்ணும் படிச்சி முடிச்சிட்டு தம்பிக்குத் துணையா இருக்குதுங்க.”
‘ஓ...’ என்றவர் ஏதோ கணக்கு போட்டு, “உங்க பொண்ணை என் பையனுக்கு கல்யாணம் பண்ணித் தர்றீங்களா?” என்றார் பட்டென்று அனைவரின் முன்னிலையிலும்.
யாரும் எதிர்பார்த்திருக்காத கேள்வியில் அனைவரும் அவரை ஆச்சர்யமாய், கேள்வியாய் பார்க்க,
“என்ன? எதோ கேட்கக்கூடாததைக் கேட்டுட்ட மாதிரி இப்படிப் பார்க்கறீங்க. பொண்ணு படிச்சி ஒரு கம்பெனியை எடுத்து நடத்துற அளவுக்கு பொறுப்பாயிருக்கா. இது போதாதா?”
“சார்! நா..நான்…” என தடுமாறிபடி, “நான் சாதாரண செக்யூரிட்டி. எங்க வசதிக்கு ஏணி வச்சாலும் எட்டாத உயரம் நீங்க.”
“அதனாலென்ன?” என கணபதி ஆரம்பிக்கையில்,
“அப்பா என்ன பேசுறீங்க?” என்று மகேந்திரனை அதட்டிய சிந்து, “நம்மளை நாமே மத்தவங்களோட கம்பேர் பண்ணி மட்டமா பேசக்கூடாது சொல்லியிருக்கேனுங்களே. எல்லாரும் மனுஷங்கதான்ப்பா யாரோடவும் யாரும் உசத்தியும் இல்ல. மட்டமும் இல்ல. இதை எப்பவும் நியாபகம் வச்சிட்டு இன்னொரு முறை இது மாதிரி பேசாதீங்க சொல்லிட்டேன்.” சற்று கறாராகவே சொன்னாள்.
கைதட்டியபடி “வெல்டன்மா! சூப்பர்!” என்று அவளை பாராட்டி “இவ்வளவு தெளிவா புரிஞ்சி பேசுற பெண்ணை வச்சிக்கிட்டு, கண்டதையும் நினைக்கிறீங்க மகேந்திரன். இவதான் என் மருமகள்னு நான் முடிவு பண்ணிட்டேன். என்ன சந்திரா ஓகேதான?” என்றார்.
“எனக்கு ஓகே. ஆனா...” என இழுக்க, அதன் காரணம் புரிந்தவர் கண்மூடி, ‘அதை நான் பார்த்துக்கறேன்’ என்று தைரியமளிக்க, “எனக்குச் சம்மதம்” என்றார் சந்திரா.
“நீ என்னப்பா நினைக்கிற?” என்று ஸ்ரீனிவாசனிடம் கேட்க,
“எனக்கு ஓகேதான். சிந்துவுக்குப் பிடிக்கணும்.”
“அதுக்கென்ன நீ சொல்லுமா?” என்று கேள்வியை அவளிடம் திருப்பினார்.
“எனக்குன்னு தனியா எந்த ஐடியாவும் இல்ல. அப்பாவும், அண்ணனும் டிசைட் பண்ணினா போதும். எனக்கு சம்மதம்தான்.”
அப்பொழுதுதான் வந்த சுதர்ஷன் புரியாமல் விழிக்க, “தங்கச்சிக்கு அலையன்ஸ் முடிஞ்சிருக்குடா” என்று ஸ்ரீனிவாசன் சொல்ல, அவன் வேகமாக சிந்துவைதான் பார்த்தான். அவள் முகத்தில் மறுப்பில்லை என்றதும் தன்னையே சமாதானப்படுத்தி சமாளித்து, அவளுக்கும் வாழ்த்துச் சொல்லி கணபதியிடம் திரும்பியவன், “சார் இவன் உங்களோட பிக் ஃபேன்” என்றான்.
“ஹா..ஹா அன்னைக்கு வந்தப்பவே சொன்னாப்ல. ஆனா, நான் நடிகன் இல்லையே. ஃபேன் இருக்கிறதுக்கு” என்றார் சிரித்த முகமாகவே.
அதைக் கேட்டதும், ‘நீங்க நடிகன் இல்லன்னு சொல்லாதீங்கப்பா. ஒரே நேரத்துல இரண்டு குடும்பத்துல நல்லவனா நடிக்கிறீங்களே. இது போதாதா.’ பாகீரதி மனதினுள் பொங்கினாள். இதே மற்ற நேரமாக இருந்திருந்தால் அவரின் தோள்சாய்ந்து, ‘எங்கப்பாதான் டாப்பர் ஹீரோ’ என்றிருப்பாள்.
“நடிகருக்கு ஏன் சார் போறீங்க? அவனோட ரோல் மாடல் நீங்கதான். நாங்க ஃப்ரண்ட்ஸான நாளிலிருந்து, உங்களை மாதிரி சும்மா மத்தவங்க நெருங்க முடியாத உயரத்துக்கு போற அளவு உழைக்கணும்டான்னுவான்.”
தன் அண்ணனுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தவனிடம், “சு..தர்ஷன் சார் போதும். எங்கண்ணனுக்கு ஏற்கனவே ஜலதோஷம் பிடிச்சிருக்கு. இப்ப நீங்க வைக்கிற ஐஸ்ல ஜன்னி வந்திரப்போகுது.”
“என்னது நான் ஐஸ் வைக்கிறேனா? டேய் தர்ஷா உனக்கு இந்த அசிங்கம் தேவையா. நண்பனை தூக்கிப் பேசுறேன்னு நீ உடைஞ்சிட்டியேடா” என்றான் தன் மூக்கிற்கு நேராக விரல் நீட்டி.
அதில் அனைவரும் சிரிக்க, “சீனு நல்ல தங்கச்சிதான் பிடிச்சிருக்க போ. நம்மளை மாதிரியே” என்ற சுகந்தி, சிந்துவை வாஞ்சையாக பார்த்து தலையைத் தடவி, “நீ நல்லாயிருக்கணும்மா” என்று சந்திராவிடம் திரும்பி, “ஏன் மேடம்?” சந்திராவின் முறைப்பில்... “ஸ்ஸ்.. சாரி அத்தை. உங்க பொண்ணு பேசமாட்டாளா?” என கேட்டாள்.
“அவளா சரியான வாலு. கொஞ்ச நாளா அந்த வாலைக் காணோம். தேடிப்பார்த்து வாலை இவகிட்ட ஒப்படைக்கணும்” என்றார் சிறிது நாட்களாக மகள் சரியில்லை என்பதை வெளியில் சொல்லாமல்.
“இதுவா அந்த வாலுன்னு பாருங்கத்தை” என்று அவனருகில் நாடகங்களுக்கு வாடகைக்கு கொடுக்கும் ஆடைகள் உள்ள பெட்டி திறந்திருந்ததில் மேலோட்டமாக இருந்த வாலை எடுத்துக் காண்பித்தான் ஸ்ரீனிவாசன்.
அதைக் கண்டதும் அனைவரும் சிரிக்க, பாகீரதிக்குமே சிரிப்பு வரத்தான் செய்தது. அதை அடக்கி, “என்னோட வாலு இவ்ளோ பெருசில்ல. அந்த வாலோட ஹைட் பாருங்க சார். உங்க உயரத்துக்குத்தான் மேட்சாகுது. நானும் வால் வச்சிருக்கேன்னு நேரடியாகச் சொல்லாம சிம்பாளிக்கா சொல்லிக் காட்டுறீங்களா சா..ர்ர்” என இழுத்தாள்.
“மாமா உங்க ஃப்ரண்ட் செஞ்சதை இப்ப நீங்க செஞ்சிக்கோங்க. அவங்களை விட உங்களுக்குத்தான் நிறைய டேமேஜ் ஆகியிருக்கு” என்ற அக்கா மகளின் வார்த்தையில் அனைவரும் சிரிக்க ஸ்ரீனிவாசன் அசடுவழிய பாகீரதியைப் பார்த்தான்.
அவளோ, ‘எப்புடி!’ என புருவம் உயர்த்தி பார்வையால் கேட்க, அதில் தோன்றிய மயக்கத்தை மறைத்து, “இதெல்லாம் சீனுவோட வாழ்க்கையில சாதாரணமப்பா!” என்றான் அவளுக்கான பதிலாய்.
அவளோ, ‘வெவ்வவவ்வ..’ என அழகு காட்டி அவன் அக்காவிடம் சென்று நின்றாள்.
சில நொடிகள் அசந்துபோய் அப்படியே நின்றவன், ‘டேய் இது சரியில்ல. கிளம்பு’ என்று மனம் அடித்து விரட்ட, அருகில் முன்பதிவு செய்திருந்த ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்று, அனைவருக்கும் உணவளித்து மற்றவர்கள் கிளம்ப, கணபதி குடும்பம் கிளம்பாமல் இருந்தது.
மகேந்திரனிடம் வந்த கணபதி, “இன்னும் இரண்டு மாதத்தில் திருமண தேதி குறித்து, நிச்சயம் பண்ணிக்கலாம்” என்றார் மகனிடம் கேட்காமல் மகன் மேலுள்ள நம்பிக்கையில்.
மகன் தந்தையின் நம்பிக்கையை காப்பாற்றுவானா?